இந்த முறை டெல்லியில்..

மூட்டம் கவிழ்ந்த டெல்லி
இதுவரையிலான டெல்லிப் பயணங்களில் இல்லாத அச்சம் இந்த முறை. பார்க்கவேண்டிய பணிகள் பெரும்பாலும் மாலை 5 மணிக்கு முடிந்துவிடும். அதன் பின்பு ஏதாவது இடத்தைச் சுற்றிப் பார்ப்பது, மண்டி ஹவுஸ் பகுதியில் உள்ள கலை அமைப்புகளுக்குப் போவது; நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, நண்பர்களைச் சந்திப்பது, கூட்டம் கூட்டமாக மக்கள் குவிந்து பொருட்களை வாங்கும் பஜார்களுக்குள் (பாலிகா, திபெத்தியன், சரோஜினி, கரோல்பாக், கன்னோட் பிளேஸ் என்னும் ராஜிவ் சௌக்) நுழைந்து சுற்றுவது போன்றனவற்றில் சிலவற்றைச் செய்யாமல் திரும்புவதில்லை. இந்தமுறை ஒருவாரம் இருந்தும் அதிகம் ஊர் சுற்றவில்லை. காரணம் டெல்லியின் காற்றும் சூழலும் மாசுபட்டு நிற்கிறது என்ற எச்சரிக்கையின் அழுத்தம்.

தீபாவளிக்குக் கொளுத்திய வான வேடிக்கைகளும் பட்டாசுகளும் உண்டாக்கிய புகைமேகம் காற்றின் சீர்மையைக் கெடுத்துவிட்டது என்று நாளிதழ்களும் தொலைக்காட்சிகளும் நண்பர்களும் சொல்லிக் கொண்டே இருந்தார்கள், நாட்டின் தலைநகரம் டெல்லி ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேர் வந்து திரும்பும் பெருநகரம். உள்நாட்டு மனிதர்கள் மட்டுமல்லாமல் பல நாட்டு மனிதர்களும் வந்துபோகின்ற பரப்பு.
 
மேற்கத்தியப் பெருநகரங்கள் போல இடைவெளிகளோடு கட்டடங்களும் அமைப்புகளும் இல்லையென்றாலும் பசுமையான மரங்களும் பூங்காக்களும் குறைவில்லாமல் இருக்கின்றன. புதுடெல்லிப் பகுதியில் நல்ல சாலைகளும் போக்குவரத்தும் இருக்கின்றது. ஆனால் காற்றும் வானமும் புகைமூட்டம் கவிந்து அச்சமூட்டும்போது நகரத்திலேயே இருப்பவர்களுக்குப் பழக்கமாகி விட்டது. அவர்கள் எச்சரிக்கை அறிவிப்புகளைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவரவர் வேலைகளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் என்னைப் போல எப்போதாவது போய்த்திரும்பும் மனிதர்கள் அப்படி எடுத்துக்கொள்ள முடியாது. அதனால் போனவேலையை மட்டும் பார்த்துவிட்டு தங்கும் விடுதியின் அறைக்குள் முடங்கிவிட்டு வரவேண்டியதே சரியென முடிவு செய்ய வேண்டியதாகிவிட்டது. என்றாலும் எப்போதும் போல இந்த முறையும் தேசிய நாடகப்பள்ளிக்குச் சென்று ஒரு நாடகம் பார்ப்பதைக் கைவிடவில்லை. அது குறித்துத் தனியாக எழுதவேண்டும்.
******

THAT'S NOT PERFORMANCE; IT IS A PLAY READING
தேசிய நாடகப்பள்ளியில் பணியாற்றும் பூமிநாதனிடமிருந்து கடைசி நாளில் அந்த விளம்பர அட்டை வாட்ஸ் அப்பில் வந்தது. ஆனால் வாசித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை. NSD - என்பது மட்டும் ஆங்கிலத்தில் இருந்தது. தேசிய நாடகப் பள்ளியில் ஒரு நாடகம் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அது முழுமையான நாடக நிகழ்வல்ல; நிகழ்த்துநிலை வாசிப்பு என்று சொன்னார் பூமி. இந்தியில் இருக்கும் விவரத்தை ஆங்கிலப்படுத்தி அனுப்பச் சொன்னேன். அனுப்பினார். Flying feathers Arts Association, Organizing, Nsd passouts present,
Stories of Sooryabala, Mamatha kaliya, chitra mudral and maitreyi pushpa's NAATYA PAAT.

தியாகத்தாய், நல்ல மருமகள், படிதாண்டாப் பத்தினி அடிமை மனைவி, செல்லமான மகள் எனப் பல பாத்திரங்களை ஏற்று வாழ்க்கையை முடிக்கும் இந்தியப் பெண்களைப் பற்றி இந்திய இலக்கியங்களும் கலைகளும் புனைந்து வைத்திருக்கும் கதைகளைத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. நமது புராணங்களையும் காவியங்களையும் மறுவிளக்கம் செய்யும் நவீன நாடகங்களும் சினிமாக்களும் விட்டுவிடுதலையாகிப் பறந்துவிடத் துடிக்கும் பெண்கள் சந்திக்கும் தடைகளையும் சுமக்கும் பாரங்களையும் தாண்ட வேண்டிய எல்லைகளையும் நிகழ்த்திக் காட்டிக்கொண்டே இருக்கின்றன. அதே நேரம் அதனைத் தடுத்து நிறுத்திட நினைக்கும் சக்திகளோ திரும்பவும் பழைமைக்குள் திருப்பிப் பெண்களைக் குடும்ப எல்லைக்குள் நிறுத்திவிட விரும்புகின்றன. இந்த முரண்பாட்டைப் பேசும் காட்சிகளைக் கொண்ட இந்த நாடகத்தை முழு மேடையேற்றமாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது ஒரு வருத்தம் தான்.
 
நிகழ்த்துநிலை வாசிப்பைப் பார்க்கவே மண்டி ஹவுஸ் பகுதியின் பிரபலமான ஶ்ரீராம் செண்டரின் உள்ளரங்கில் நல்ல கூட்டம். நாடகப்பனுவலைக் கையில் வைத்துக்கொண்டு வாசிக்கப்படும் நிகழ்த்தப்படும் அந்த வாசிப்பே நடிப்புக் கலைஞர்களின் ஈடுபாட்டு நடிப்பையும் உணர்ச்சி வெளிப்பாடுகளையும் தரவே செய்தன. நாடக நிகழ்வுக்கான முழுத்தயாரிப்பு இல்லையென்ற போதிலும் சிறப்பு விருந்தினர்களும் வாழ்த்துரைகளும் இருந்தன. பாராட்டுக்களும் கொண்டாட்டங்களும் நிறைந்திருந்தன. 

பார்த்தது நாடகமேடையேற்றமல்ல; நிகழ்த்து வாசிப்பு. 

 
மண்டி அரண்மனை/ MANDI HOUSE

கொரோனாவுக்குப் பின்னர்  டெல்லிக்குப் போகும் ஒவ்வொரு முறையும் பூமிநாதனிடம் டெல்லியில் இருக்கும் நாட்களின் விவரங்களைச் சொல்லி விடுகிறேன். அப்படிச் சொல்லிவிட்டால் அவர் பணியாற்றும் தேசிய நாடகப் பள்ளியிலோ அது அமைந்திருக்கும் மண்டி ஹவுஸ் பகுதியில் உள்ள பிரபலமான அரங்குகள் ஏதாவதொன்றில் நடக்கும் நாடகங்களைப் பற்றித் தகவல் தருவார். போன வேலையை முடித்துக்கொண்டு மாலையில் போய் நாடகங்களைப் பார்த்துவிட்டுத் திரும்புவேன். இந்த முறை டெல்லியின் மாசடைந்த வானிலை அச்சமூட்டியது. 

நாடக நிகழ்வு எதுவும் இல்லையென்றும், தேசிய நாடகப்பள்ளியில் காட்சிக் கோர்வை வகுப்புகள் (Scene Blocking ) இருக்கின்றன. வாய்ப்பிருந்தால் வாருங்கள் என்றார். ஆனால் அவற்றைப் பார்க்கப் பகல் நேரத்தில் போகவேண்டும். அந்த வாய்ப்பு குறைவு என்பதால் போகவில்லை. ஆனால் கடைசி நாளில் ஶ்ரீராம் செண்டரில் இந்த நிகழ்த்து வாசிப்பு (PLAY READING) இருக்கின்றது என்ற தகவல் சொன்னவுடன் தவறவிடவில்லை.

கலை, இலக்கிய ஆர்வம் உள்ளவர்கள் டெல்லிக்குப் போனால் மண்டி ஹவுஸ் பகுதிக்குப் போவதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஹிமாசலப் பிரதேச மன்னர் ஒருவரின் அரண்மனையான மண்டி அமைந்திருந்த அந்தப் பகுதியில் தான் இந்தியக் கலை, இலக்கிய அமைப்புகளின் உயர் அலுவலகங்களும் ஆவணக்கூட்டங்களும் அருங்காட்சியகங்களும் இருக்கின்றன. தேசிய நாடகப்பள்ளி, சாகித்ய சங்கீத், லலித்கலா அகாடெமிகளும் காமானி ஆடிட்டோரியம், ஶ்ரீராம் செண்டர் போன்ற உலகப்புகழ்பெற்ற அரங்குகளும் கலைக்கூடங்களும் இருக்கின்றன. இந்தியா முழுமைக்கும் தொலைக்காட்சி சேவையை வழங்கிய தூரதர்ஷனும் பல்கலைக்கழக மானியக்குழுவும் என எல்லாம் இருக்கின்றன. இவையெல்லாம் இந்தியாவை நவீன இந்தியாவாக மாற்ற நினைத்த பண்டித ஜவஹர்லால் நேருவின் கனவுகளைச் சுமந்து நிற்கும் நவீன ஆலயங்கள். அங்கே வணங்க வேண்டிய கடவுள்கள் இல்லை. கொண்டாட வேண்டிய இந்தியக் கலைகளும் அறிவும் திரட்டி வைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தில்லையின் விடாய்: உடலரசியலின் வெளிப்பாடுகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

கவிதைகள் வாசிக்கும் தருணங்கள்