இரண்டு எச்சரிக்கைகள்

நல்லனவற்றுக்காகவும் அல்லனவற்றுக்காகவும் சில நாட்களை நினைவில் நிறுத்திவைக்கிறோம். பெரும்பாலும் நினைவுநாட்கள்  மரணங்களோடு தொடர்புடையனவாக இருக்கின்றன. கொண்டாட்டங்களோடு தொடர்புடை நினைவுநாட்களும் இருக்கவே செய்கின்றன. துயரமோ, கொண்டாட்டமோ அந்த நாட்கள் மனிதர்களின் உணர்ச்சிகளைத் திரட்டி வெளிப்படுத்தும் ஒன்றாக இருப்பதைப் பார்க்கிறோம். 
தீபாவளி: இப்போதாவது பேசவேண்டும்

இந்த வருடத்தீபாவளிக் கொண்டாட்டங்களில் டெல்லி நகரம் மாற்றத்தைக் கண்டடைந்திருக்கிறது. வெடிப்பதைக் கைவிட்டுவிட்டு தீபங்களை ஏற்றிக் கொண்டாடியிருக்கிறார்கள். டெல்லி மாசடைவதின் பின்னனியில் சுற்றியிருக்கும் கிராமங்களில் எரிக்கப்படும் சோளத்தட்டை எரிப்பு, போக்குவரத்து நெரிசல், பெருகும் தொழில்கூடங்களின் எண்ணிக்கை, விதிகளைப் பின்பற்றாத அரசு நிர்வாகமும் மக்களும் எனப் பல காரணங்கள் உள்ளன. இந்தக் காரணங்கள் டெல்லிக்கு மட்டும் உரியன அல்ல. இந்தியாவின் பெருநகரங்களும் சிறுநகரங்களும் அப்படித்தான் இருக்கின்றன.
உலகமயத்தின் தொடர்ச்சியில் நகர்மயமாதலோடு தொடர்புடையதாக இருந்த தொழில் பெருக்கமும் மாசடையும் சூழலும் கிராமங்களை நோக்கி நகர்ந்துவிட்டன. இப்போதாவது நமது அரசுகள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்தும் மனிதர்களின் வாழ்விடங்களின் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் பேணுவது குறித்தும் கடுமை காட்டவேண்டும். முதன்மையாகப் போக்குவரத்துத் துறையில் விதிமீறலைத் தடுப்பதில் தொடங்கி அரசு நிர்வாகம் சீரான மாற்றங்களைத் தொடரவேண்டும்.
 
தீபாவளி அன்று   வெடித்த வெடிகளுக்கான காகிதக் குப்பைகளைச் சுமந்து செல்லும் நகரசபைத் தொழிலாளிகளின் முணுகல்கள் நமது நாகரிகத்தின் மீது உமிழப்படும் எச்சில்களாக இருக்கின்றன. வெடிகள், குப்பைகளாக மாறுவதற்கு முன்னால் எழுப்பிய ஓசைகளும் புகையும் இன்னும் காதுகளிலும் கண்களிலும் படிந்து நிற்கின்றன. நமது பள்ளிக்கல்வியில் கற்பிக்கப்படாத பகுதிகளாக அன்றாடக் குடிமை வாழ்க்கையின் நடைமுறைகள் உள்ளன.
சாலைகளில் நடப்பது தொடங்கி, நிலம், நீர், வளி, ஆகாயமென ஒவ்வொன்றினோடும் நம்து மெய்கொள்ளும் உறவுகள் பேசப்படவேண்டும். நமது தெருக்களைச் சுத்தமாக வைத்திருப்பதை உள்ளாட்சி அமைப்புகளின் பணியாகவே நாம் கருதுகிறோம். எல்லாவற்றிலும் மக்களுக்கு அறிவுரைகள் தேவைப்படுகின்றன. நாம் வாழும் இடங்களைக் கெடுப்பதின் வழியாகவே - அவ்விடங்களைத் துயரமான இடங்களாக மாற்றுவதன் மூலமே பண்பாடும் மரபும் காப்பாற்றப்படும் என்று நினைப்பது ஒருவிதத்தில் தற்கொலை மனோபாவம். நகர்மயமாதலை அனுமதித்ததின் தொடர்ச்சியில் ஐம்புலன்களையும் பாதிக்கும் சுற்றுச்சூழல் மாசுகளைக் குறித்துக் கவலைப்படாத அரசுகள் மக்கள் விரோத அரசுகளே. இதனை ஐரோப்பாவின் இலக்கியங்களும் கலைகளும் நகர்மயமாதலைக் குறித்த புரிதலை உருவாக்கும்போதே பேசத்தொடங்கிவிட்டன.

தொழில்மயமாதலின் பின்னணியில் மாசடையும் மனித வாழ்க்கைக்குப் பின்னால் அரசும் சமயநம்பிக்கைகளும் இருப்பதை விவாதித்த நாடகம் இப்சனின் மக்களின் பகைவன் (Enemy of the people ). அதனை இந்தியச் சூழலோடு பொருத்திப் படமாக்கினார் சத்யஜித்ரே. நாடகமாகவும் சினிமாவாகவும் எப்போதும் நினைவிலிருக்கும் பனுவல்கள். பள்ளிகளில் திரையிடப்படவேண்டிய சினிமாக்களின் பட்டியலில் அதனைச் சேர்க்கவேண்டும்; விவாதிக்கவேண்டும்.

அழிக்கப்பட வேண்டிய னைவுகள்  

கொண்டாடப்படும் நினைவு நாட்கள் அந்தந்த நகரங்களுக்கு அச்சமூட்டும் நாட்களாக இருக்கின்றன. கடந்த கால் நூற்றாண்டுக்காலத்தில் நான் வாழ்ந்த மூன்று நகரங்களிலும் -நெல்லை, கோவை, மதுரை - இதனை உணர்ந்துள்ளேன். இப்போதும் அந்த ந்கரங்கள் அந்நினைவுகளின் பதற்றத்தால் தவிக்கவே செய்கின்றன. 

1999 ஜீலை 23
இல் நடந்த மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஊர்வலமும், தடுக்கப்பட்ட முறையும் அதனால் ஏற்பட்ட 17 பேரின் மரணங்களும் திருநெல்வேலிக்கு ஒரு நினைவு நாளைக் கொண்டு வந்து சேர்த்தது. அரசு ஏற்படுத்திய விசாரணை ஆணைய அறிக்கைக்குப் பின் அந்த நாளில் பாதிக்கப்பட்டவர்களுக்காகத் தாமிரபரணிக் கரையில் நடக்கும் அஞ்சலிக் கூட்டங்களுக்கான ஊர்வலங்கள் நெல்லையையும் பாளையங்கோட்டையையும் பிரித்துக்காட்டும். நெல்லையின் கிழக்குப்பகுதியான பாளையங்கோட்டையிலிருந்து மேற்கே இருக்கும் பல்கலைக்கழக வளாகத்திற்குச் செல்லும் வாகனங்களின் போக்குவரத்தில் மாற்றம் ஏற்படுத்துவது தவிர்க்க முடியாததாக மாறியது. பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் வீட்டுப்பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்களும் வணிக நிறுவனத்து ஆட்களும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆரம்ப ஆண்டுகளின் வேகமும் பதற்றமும் குறைந்திருக்கிறது என்றாலும் நின்றுபோகவில்லை. நினைவஞ்சலிகள் தொடரும் வரை பதற்றமும் தொடரவே செய்யும்.

கோவையில் 1997 நவம்பர் 29 இல் உருவாக்கப்பட்ட இந்து -முஸ்லீம் கலவரத்தின் வாசனையைக் கடந்த ஆண்டும் அதற்கு முந்திய ஆண்டும் கோவையில் இருந்தபோது நுகர்ந்திருக்கிறேன். அந்த நாட்களில் உக்கடம் போன்ற பகுதிகளில் இருக்கும் அமைதியின்மையால் போக்குவரத்து மாற்றங்களும் காவல்துறையினரின் குவிப்பும் உருவாக்கும் பதற்றம் குறைந்தபாடில்லை. முதல் ஆண்டு சந்தித்த வாகனத்தடைகளால் அடுத்த ஆண்டு போகும் எண்ணமே உண்டாகவில்லை.
 
அக்டோபர். 30 - இன்று மதுரை, கோரிப்பாளையம் வரை சென்று வர வேண்டிய வேலை இருந்தது. ஆனால் நேற்று தரப்பட்ட போக்குவரத்து மாற்றங்களும் எச்சரிக்கைகளும் சேர்ந்து அந்தத்திட்டத்தைக் கைவிடத் தூண்டிவிட்டன. என் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து மதுரை -திருநகர் பள்ளிக்குச் செல்லும் பள்ளி வாகனம் இன்று ஓட்டப்படவில்லை. பள்ளி மாணவர்கள் வீட்டில் தங்கும்போது அதன் காரணங்களைத் தேடுகிறார்கள்.

அவர்களுக்கு அக்டோபர் 30. தேவர் ஜெயந்தி விவரிக்கப்படுகிறது. ஒரு பிறந்த நாள் ஏன் அச்சமூட்டும் நாளாக இருக்கிறது என்ற காரணத்தை அவர்களுக்கு விளக்க முடியாது. அந்த நாளின் நினைவை மதுரை நகர் மட்டுமல்ல; மதுரையைச் சுற்றியும் அதற்குத் தெற்கே திருநெல்வேலி வரையிலும் இருக்கக்கூடிய பல கிராமங்களிலும் எழுப்பப்படும் ஓசைகளும் பாடல்களும் அலையலையாய் எழும்பி அச்சமூட்டுகின்றன.
 
கடந்த காலத்தின் சில நாட்கள் - துக்கநாட்களும் பிறந்த நாட்களும் நினைக்கப்பட வேண்டியனதான். ஆனால் அந்நாட்கள் நிகழ்காலத்தின் மீது அச்சத்தைப் பரவவிடும் தினங்களாக மாறிவிடுவதைத் தடுத்தாகவேண்டும். நினைவழியா நாட்களுக்காக நாம் காத்திருப்பதைக் கைவிடவேண்டும். அதற்கான முயற்சி எடுக்கவேண்டிய அரசு அமைப்புகளும் ஆளுங்கட்சிகளும் நினைவுகளைத் தூண்டும் வினைகளைச் செய்யக்கூடாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்தியாவும் கனடாவும் உரசிக்கொள்வது ஏன்?

தமிழில் பாரம்பரிய அரங்கும் நவீன அரங்கும்

எல்லாம் விலை குறித்தனவே ; ஆன்மாவும் கூட .