இயல்பண்புவாதத்திலிருந்து நடப்பியலுக்கு: சுப்ரபாரதி மணியன் கெடா கறி
இயல்பண்புவாத எழுத்து குறிப்பிட்ட இடத்தில் நிகழும் நிகழ்வுகளை ஒரு ஒளிப்பதிவுக்கருவி கொண்டு படம்பிடித்துக் காட்டுவதுபோல காட்டுவதாகும். அதிலும் கூடக் கருவியைக் கையாளும் நபரின் கோணங்களும் தூரமும் அண்மையுமான காட்சிகளின் வழி தனது கருத்தை உருவாக்கமுடியும். என்றாலும் 360 பாகையில் சுற்றிவரும் காமிராவின் கோணம் கூடுதல்- குறைவு என்பதைத் தவிர்க்க நினைக்கவே செய்யும். சுப்ரபாரதி மணியனின் கதைசொல்லல் முறையில் இந்தக் கோணமே பெரும்பாலும் இருக்கின்றன. அதன் மூலம் அவரது எழுத்தை இயல்பண்புவாத எழுத்து என வகைப்படுத்திவிடலாம் என்று நினைக்கும்போது, குறிப்பான ஒரு உத்தி மூலம் அதனைத் தகர்த்து நடப்பியல் எழுத்தாக மாற்றிவிடுகிறார். கதையைச் சொல்வதற்கு அவர் தேர்வு செய்யும் பாத்திரமே அந்த மாற்றத்தைச் செய்கிறது.
கதை நிகழ்வதற்குத் தேர்வு செய்யும் இடத்தையும் அங்கிருக்கும் மனிதர்களின் இருப்பையும் இயல்பண்புவாதத் தன்மையோடு விரிவாகப் பதிவு செய்யும் அவர், அந்தக் கூட்டத்திலிருந்து விலகிய ஒருவனின் எண்ண ஓட்டங்களையையே சொல்முறையாக ஆக்குகிறார். அதன் மூலம் இயல்பண்பு வாத எழுத்திலிருந்து விலகி நடப்பியல் எழுத்து என்பதற்குள் ஒவ்வொரு கதையையும் நகர்த்துவதை நான் உணர்ந்திருக்கிறேன். கதை சொல்வதற்கு அவர் உருவாக்கும் பாத்திரங்களுக்கு ஒரு பொதுத்தன்மை இருக்கின்றது. அவர்கள் நடுத்தர வர்க்க வாழ்க்கைக்குள் நுழைந்து விட்டவர்கள்; அதே நேரம் அதில் இருப்பதில் விருப்பம் இல்லாதவர்கள்.
தன்னை விலக்கிக் கொண்டு முன்னிலைப் பாத்திரங்களை விரிவாகச் சொல்லிச்செல்லும் அந்தச் சொல்முறையில் கதைசொல்லியாக வரும் பாத்திரங்களின் விலகல் மனநிலையே நவீனத்துவ அடையாளம். பெரும்போக்கிலிருந்து அந்நியமாகிவிட்டதாக நினைக்கும் இவ்வகை மனிதர்கள் இந்திய வாழ்வில்/ தமிழ் வாழ்வில் கடந்த நூற்றாண்டின் கடைசிக் கால்நூற்றாண்டுக்கால மனிதர்கள். தங்களின் இளமைக்கால எண்ணங்களால் சமூகம் வேகமாக மாறிவிடும்; சமூகத்தில் இருக்கும் சாதி, மதம், பொருளாதாரம் சார்ந்த வேறுபாடுகள் மறைந்துவிடும் என்ற நம்பிக்கையோடு இருந்தவர்கள். பகுத்தறிவும் மனிதநேயமும் கொண்ட அவர்களின் நம்பிக்கைகள் பொய்த்துப்போய்விட்ட நிலையில் தங்களால் பெரும்போக்குகளோடு ஒட்டமுடியாமல் தவிப்பவர்கள். இவர்களைத் திரும்பத் திரும்ப எழுதியவர்களாகத் தமிழில் பலரையும் சுட்டிக்காட்டமுடியும். அந்தப் பலரில் சுப்ரபாரதி மணியன் விலகாமல் நின்று கொண்டிருக்கிறார் என்பதே அவரது தனித்துவம்.
அண்மையில் வாசித்த இந்தக் கதை ஒரு பயணியின் மனப்பதிவுகளாகவே சொல்லப்படும் சொல்முறையைக் கொண்டிருக்கிறது, கெடா கறி எனத் தலைப்பிடப்பட்ட அந்தக் கதையில் (உயிர்மை/அக்டோபர்/ 2025). கொங்குப் பகுதியிலிருந்து மதுரைக்கு வரும் பயணியின் பார்வையில் நிகழ்ச்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன. பெருந்தெய்வ வழிபாடுகளைக் கொண்ட மீனாட்சி அம்மன், அழகர்கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் போன்றனவற்றிற்குப் போகாமல் 'பாண்டி முனீஸ்வரன் கோவில்' போகவேண்டும் எனத் தோன்றியதற்குக் காரணம் நண்பர் ஒருவர் சொன்ன' கெடா கறி ' விருந்துகளைப் பற்றிய தகவல்கல் தான். நூற்றுக்கணக்கான ஆடுகளும் கோழிகளும் பலியிடப்படும் முனியாண்டி கோவிலில் போவோர் வருவோரெல்லாம் விருப்பம்போல கிடாய்க்கறி சாப்பிடுகிறார்கள் என்ற எண்ணத்தை உருவாக்கியிருந்தது அந்த விவரணை. அப்படிச் சாப்பிடப்படும் கெடா கறி விருந்து இலவசமாக – அன்னதானமாகக் கிடைக்கிறது என்பதாகவும் நினைத்துக்கொள்கின்றார்.
பணம் எதுவும் தராமல் - இலவசமாக அசைவ உணவு அன்னதானம் நடக்கும் அந்தக் கோயிலுக்குச் சென்று சாமியையும் வணங்கிவிட்டு, விருந்தையும் முடித்து விடலாம் என்ற எண்ணத்தில் வரும் அவனுக்கு பெருந்தெய்வ வழிபாட்டுக் கோவில்களில் இருக்கும் ஒழுங்குமுறைகள் எதுவும் இல்லாத அந்தச் சூழல் விலகலை ஏற்படுத்துகின்றது. தனது 699 ரூபாய் விலைகொண்ட செருப்பைப் பாதுகாப்பதில் தொடங்கும் விலகல் ஒவ்வொன்றிலும் தொடர்கின்றது, ஆன்மீக ஈடுபாடு, பக்த மனநிலை என்பதாக இல்லாமல் கும்பல் மனநிலையில் கூடும் கூட்டத்தின் ஒழுங்கின்மைக்குள் அவன் நுழையும் வழி எது எனப் புரியாமல் நகர்ந்து கொண்டே இருக்கிறான். ஆனால் அங்கே ஏதோ ஒருவிதத்தில் ஏற்புடையவர்களின் கூட்டங்கள் ஒன்றிணையும் தன்மை இருப்பதைப் புரிந்துகொள்கிறான். அதனை விவரிக்கின்றான் பயணி.
சாதியாகத் திரளுதல், உறவினர்களாகக் கூடுதல், விருந்து வைத்து மொய் வாங்குதல் போன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னால் தெய்வமும் பக்தியும் முழுமையான ஈடுபாட்டை உருவாக்காத ஒரு காரணமாக மட்டுமே இருக்கிறது. ஆனால் இலவசமாக விருந்து, அன்னதானம் என்ற கருத்து பரப்பப்பட்டு நம்ப வைக்கப்படுகிறது. கோயிலைச் சுற்றி இருக்கும் இடத்தை வாடகைக்குத் தந்தும், பாத்திரங்கள் வழங்கியும் பணம் பெற்றுக் கொள்ளும் வணிகத்திலும் கூடப் பொதுவான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. அவரது விருப்பம்போல விதிகளையும் வாடகையையும் குறிப்பிடுகின்றார். தான் தோன்றித்தனமான மனிதர்களால் நிரம்பி வழியும் கோயில் வளாகம் எதுவும் அவருக்கு உவப்பான – ஒழுங்குடையதாகத் தோன்றவில்லை. அதனால் ஒவ்வொன்றையும் விலகல் மனநிலையுடன் விவரித்துக் கொண்டே நகர்கிறான் கதை சொல்லி. அந்தக் கோயிலும் வழிபாட்டு முறையும் கடவுள், பக்தி போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு வரும் தனிமனிதர்களை உள்வாங்காமல் விலக்கித் தள்ளிவிடுகிறது என்பதை நுட்பமாகப் பதிவு செய்துள்ளார். அசைவ உணவு விருந்தில் எந்தவொரு அந்நியர்களுக்கும் இடமளிக்காத சாதிய மனநிலை நிலவுகிறது என்பதைச் சொல்வதோடு, வழங்கப்படும் அன்னதான உணவு அந்தக் கோயில் பொதுத் தன்மைக்கு மாறாக சைவ உணவு என்பதையும் பதிவு செய்கிறார்.
பெரும்போக்குக்குள் இருக்கும் நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கும் அவரின் கதைசொல்லிகள் மற்றவர்களை விவரிக்கும் போக்கில், தனது நிலைபாட்டை உணர்த்திக் கொண்டே இருப்பவர்கள். கெடாகறி விருந்துண்ண வந்தவர், அதிலிருந்து விலகி அரசு மதுபானக் கடை ஒன்றில் மதுவருந்திவிட்டு, பணம் தந்து அசைவம் சாப்பிட நேரும்போது, இன்னொரு நினைவலைகளுக்குள் நுழைகின்றார். அந்த நினைவலைகள், அறக்கட்டளை ஒன்றின் மூலம் இலவச மருத்துவம் வழங்குவதாக விளம்பரம் செய்துகொள்ளும் பெங்களூர் மருத்துவமனை குறித்தது. அந்த மருத்துவமனையில் வறுமையில் இருப்பவர்களுக்கு இலவசமாக மருத்துவ வாய்ப்புகள் தருவதாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. வாய் விளம்பரமாகப் பலரும் அந்த மருத்துவமனையின் இலவச முகாம்கள் குறித்தும் இரக்கத்துடன் நோயாளிகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்புடைமை குறித்தும் அறிந்திருக்கிறார். அந்த அறிதலை முழுமையாக நம்பித் தன்னோடு ஒரு பெரியவரை அழைத்துச் சென்று மருத்துவம் பார்க்காமல் திரும்பி வந்த அந்த நிகழ்வு இப்போது நினைவுக்கு வருகிறது.
கடவுள் சார்ந்து பக்தி வெளிப்பாடான பலியிடல், பக்தி, மனிதர்களின் பசி ஆற்றுதல் போன்றவற்றோடு கூடிய இலவச விருந்தும், காருண்யத்தை வெளிப்படுத்தும் இலவச மருத்துவமும் இணை வைக்கப்படுவதின் மூலம் கதைசொல்லி, இலவசங்கள் என்ற பெயரில் நடக்கும் அறமற்ற நிலைபாடுகளைக் கேள்விக்குள்ளாக்க நினைக்கிறார். அந்த நினைப்பு நடப்பியலின் இன்னொரு வகையான விமரிசன நடப்பியலுக்குள் நகர்த்திவிடுகின்றது.
இந்த விமரிசன நடப்பியல் பார்வை இங்கிருக்கும் அறிவுலகப் பெரும்போக்கோடும் முரண்படுகிறது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பெருந்தெய்வ வழிபாடுகளையும் நாட்டார் தெய்வ வழிபாடுகளையும் எதிரெதிராக நிறுத்தி நாட்டார் பண்பாட்டுக் கூறுகளை ஆதரிக்கும் போக்கு அறிவுத்தளத்தில் - கல்விப்புலம் உள்ளிட்ட அறிவுத்தளங்களில் உள்ளன. அந்த எதிர்வு நகரம் X கிராமம் என்ற எதிர்வாகவும் மாறி கிராமங்களைப் புனிதமாக - விரும்பத்தக்க வெளியாகக் காட்டும் போக்காகவும் இருக்கிறது. ஆனால் நவீனத்துவ மனம் அப்படிச் செல்வதை விரும்புவதில்லை. சுப்ரபாரதி மணியனின் கதைசொல்லிகள் எப்போதும் நவீனத்துவ விருப்பம் கொண்ட கதை சொல்லிகள். அவர்களுக்கு எல்லாத்தளத்திலும் இருக்கும் பெரும்போக்கு உடன்பாடானவை அல்ல. 
தனது கதைகளுக்குள் புறச்சூழலைக் கச்சிதமாக விவரிக்கும் சுப்ரபாரதி மணியன், கதைசொல்லியின் மனவோட்டங்களை எழுதும்போது அதே மொழியையே பின்பற்றுகின்றார். ஆனால் புதுமைப்பித்தன், கு.அழகர்சாமி, சுந்தரராமசாமி, கி.ராஜநாராயணன் போன்ற தேர்ந்த கதைசொல்லிகள் இவ்விரு நிலைக்கும் வெவ்வேறு விதமான மொழிப் பயன்பாட்டை உருவாக்குகின்றனர். உள்ளோட்டங்களுக்கு ஒருவித உருவகத்தன்மை கொண்ட மொழியைப் பயன்படுத்துவதன் மூலம் கதைசொல்லியின் மனப்பாங்கை ஆழமானதாக ஆக்கிவிடுகிறார்கள். ஆனால் சுப்ரபாரதி மணியன் அப்படிச் செய்வதில்லை.   அப்படிச் செய்யும்போது அவரது கதைகள் இன்னும் சிறப்பான கதையாக ஆகிவிடும்.

கருத்துகள்