மதுரையை எழுதும் எழுத்து

 

முப்பது ஆண்டுகளுக்கு முன் மதுரையைவிட்டு வெளியேறி புதுச்சேரி, நெல்லை, வார்சா, பாளையங்கோட்டையென்ச் சுற்றிவிட்டுத் திரும்பவும் மதுரைக்கருகில் இருக்கும் திருமங்கலத்திற்குக் குடிவந்துவிடலாம் முடிவுசெய்தேன். அதனால்  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையின் இலக்கிய நிகழ்வுகள் பற்றிய தேடல்கள் தொடங்கின. அத்தேடலில் புதிதாக எழுத வந்திருக்கும் மதுரைக்காரர்களின் இலக்கியப்பனுவல்களைப் பத்திரிகைகளிலும் இணையப் பக்கங்களிலும் வாசிக்கத் தொடங்கினேன்.

அப்படி வாசிக்கக் கிடைத்த பனுவல்களில் அம்பிகாவர்ஷினியின் கவிதைகள் இருந்தன.  முகநூலில் வாசிக்கக் கிடைத்த கவிதைகளைத் தாண்டிக் கணையாழியிலும் அந்தப் பெயரும் அவர் எழுதிய ஆறாத காயம் கதையும் வாசிக்கக் கிடைத்தது. அதன் பிறகு மிக அண்மையில் நகர்வு இணைய இதழில் அவரது உள்ளங்கை அல்லி கதையை வாசித்துவிட்டு குறிப்பொன்றை அடுத்த இதழில் எழுதியிருக்கிறேன்.

தனித்தனியாக வாசித்த இரண்டு கதைகளோடு சேர்த்து ஒன்பது கதைகளையும் மொத்தமாக வாசிக்கும்போது அம்பிகா வர்ஷினியின் கதைசொல்லும் முறையும் கதைக்கான பொருண்மைகளை அவர் தெரிவுசெய்யும் நுட்பமும், கதாபாத்திரங்கள் இருக்கும் – நகரும் இடங்களையும் அதன் சூழலையும் விவரிக்கும் மொழிநடையும் குறிப்பிடத் தக்கனவாக இருப்பதை உணர்கிறேன். எப்போதும்  ‘நான்’ எனத் தன்மைக் கூற்றில் கதைசொல்லும் அம்பிகாவர்ஷினியின் கதைகள் அவரது சொந்தக் கதைகளோ என்ற தோற்றத்தை உருவாக்கக் கூடியன. தனியாக ஒரு கதையை வாசிக்கும்போது தோன்றும் அந்த உணர்வை மொத்தமாக வாசிக்கும்போது அவை தகர்த்துவிட்டன. ஒவ்வொரு கதையில் கதை சொல்லும் நான் வேறொரு நபராக இருக்கிறார். அந்த வேறொரு நபர் பெரும்பாலும் பெண்ணாக இருக்கிறாள் என்பது குறிப்பிடப்பட வேண்டியது.

பெண்ணே கதைசொல்லியாக இருக்கும் நிலையில் குடும்ப வெளியிலும் நட்பு வட்டத்திலும் பயணங்கள் உட்பட்ட பொதுவெளியிலும்  பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களே கதைகளின் பேசுபொருள்களாக -பொருண்மைகளாக இருக்கின்றன. பெரும்பாலும் நினைவோட்டமாகக் கதைசொல்லும் தன்மை இருக்கிறது. கதைக்குள் உருவாக்கப்படும் கதாபாத்திரங்களோடு பெரிய அளவு முரண்பாடுகள் இருப்பதாக எழுதிக்காட்டாமல், முரண்பாடுகள் தோன்றும் கணங்களைத் தொட்டுவிட்டு விலகிப் போய்விடுகின்றன கதை சொல்லிகளாக வரும் நான்கள்.

இக்கதைகள் அனைத்தையும் வாசிக்கும்போது மதுரை நகரமும் அதன் சுற்றுப்புறப் பரப்பும் கதைகளுக்குள் வந்து இக்கதைகளுக்குரிய இடப்பின்னணியை உருவாக்கியிருக்கின்றன. அதன் வழியாக அம்பிகாவர்ஷினி நிகழ்காலத்து மதுரையையும் அதன் மனிதர்களையும் அவர்களின் உணர்வுகளையும் எழுத நினைக்கும் எழுத்தாளராக காட்டுகின்றன.  மதுரையை எழுதுபவர் என்ற அடையாளத்தோடு, தமிழ்நிலப்பரப்பின் மனிதர்களை அதன் வழியாக உணரவும் வைப்பவர் என நகரவேண்டும். அந்நகர்வு தன்னியல்பாகவே இந்தியப்பரப்புக்கும் உலகப் புனைவு வெளிக்குள்ளும் இட்டுச்செல்லும். அதற்கான எத்தணிப்புகள் கொண்ட எழுத்தாளராக வளர வேண்டும் என வேண்டுதலோடு அம்பிகாவர்ஷினிக்கு வாழ்த்துகள் எனச் சொல்கிறேன்.

=======================================================

அம்பிகாவர்ஷினியின் சிறுகதைகள் நூலுக்கு ஒரு வாழ்த்துரை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அயல் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள்

மொழிபெயர்ப்பும் புதுச்சந்தையும்

இலக்கியவியலும் தொல்காப்பியப் பொருள் கூறலும்