ஒற்றை இலக்குகளின் சிக்கல்

குதிரைக்குக் கடிவாளம் போட்ட மாதிரி என்றொரு மரபுத்தொடர் உண்டு. கடிவாளம் குதிரைக்கு முக்கியமல்ல. கடிவாளம் போட்ட குதிரை மனிதர்களுக்கு முக்கியம். கடிவாளம் போட்டால்தான் ஓட்டப் பந்தயக்குதிரையாக பயன்படுத்த முடியும். அதன் மீதேறி அமர்ந்து. காற்றினும் கடிதான வேகத்தில் செல்லமுடியும். காட்டு விலங்கான குதிரையை வயக்கித்தான் நாட்டுவிலங்காக்கியிருப்பார்கள்.
வேகத்தின் அளவாக இருப்பது குதிரைச்சக்தி. குதிரையில் விரையும் வீரர்களாகவே அலெக்ஸாண்டரும், செங்கிஸ்கானும் படத்தில் இருக்கிறார்கள். கண்டம்விட்டுக் கண்டம் தாவிவந்து நாடுகளைப் பிடித்த வீரர்களின் வசம் இருந்தவை காற்றினும் கடிதுசெல்லும் குதிரைகள் என்கின்றன காவியங்கள். தேசிங்குராஜனின் புரவிபற்றிப் பாட்டிகளும் கதையாகச் சொல்லியிருக்கிறார்கள். கடிவாளம் போட்டுக் குதிரைகளை வயக்கிப் படைகளை உருவாக்கித் தேரோட்டி நாடுகளை வென்றார்கள். குதிரைவீரன் தனது இலக்கை அடைய வேண்டுமானால் அவன் ஏறியமரும் குதிரைக்குக் கடிவாளம் அவசியம்.

வீரத்தோடு அடையாளப்படுத்திய காலத்தில் குதிரைக்குப் போடப்பட்டது கடிவாளம். வேகம்கூடிய குதிரைகளை வண்டியில் பூட்டிப் பழக்கப்படுத்த நினைத்தபோது போட்டது பட்டை. கடிவாளத்தோடு குதிரையின் கண்களுக்குப் பட்டையையும் பூட்டி விட்ட மனிதர்களின் நோக்கம் என்னவாக இருக்கும்?

கண்களின் பார்வையைத் தடுக்கும் பட்டைக்குள் சிறைப்பிடிக்கப்பட்ட குதிரைக்கண்கள் முன்னே தெரியும் இடுக்கு வழியேதான் முன்னேற முடியும். மற்ற விலங்குகளைப் போல அல்லாமல் குதிரையின் இரண்டு கண்களும் இரண்டு பார்வைகளைக் கொண்டவை. முன்னோக்கிப் பார்ப்பதைவிடப் பக்கவாட்டில் பார்க்கக் கூடிய வகையில் அமைந்தவை. ஒற்றை இலக்கை நோக்கிப் பார்க்கும் விதமாக இல்லாமல் இரண்டு பக்கமும் பார்க்கும் தன்மையில் அமைந்தவை. இருபுறமும் பார்வையைச் செலுத்தித் தனக்கான இரையை – இலைதழைகளை- தேடித்தின்ன உதவுபவை அந்தக் கண்கள். விலங்கினங்களை மட்டுமல்ல; எந்தவொரு உயிரியின் அடிப்படைத் தேடலைத் திசை திருப்புவதின் வழியாகவே இன்னொரு உயிரி அதற்கான பலனை அடையமுடியும். எல்லாப் பலன்களும் எங்களுக்கே என நினைப்பதில் மனிதர்கள் எப்போதும் முதலில் இருக்கிறார்கள். அதையே தங்களின் திறனெனவும் அறிவு எனவும் நம்புகிறார்கள். அதனால் கிடைக்கும் நலன்களை, அறிவியல் வளர்ச்சி எனக் கொண்டாடிக்கொள்கிறார்கள்.

குதிரையின் கண்களில் இரண்டு பட்டைகளையும் கட்டிவிட்ட பின்பே குதிரையை வண்டிக்காரர் வண்டியில் பூட்டுகிறார். கண்களில் போடப்பட்ட பட்டைகள் பக்க வாட்டுக் காட்சிகளைப் பார்க்க விடாமல் தடுப்பதின் வழியாக, கடிவாளத்தின் அசைப்பிற்கேற்ப முன்னேறிப் போகின்றன குதிரைகள். இந்தியக் கல்வி நிறுவனங்களில் ஒருவருக்கு வழங்கப்படும் கல்வி அறிவு குதிரையை வயக்கிப் வண்டியில் பூட்டுவதைப் போன்றது என்றே சொல்லவேண்டும். கடிவாளம் போட்டபின்பு, பட்டையையும் கட்டிவிட்டுப் பயணிக்கத் தொடங்கும் பயணமே நமது மாணவர்களின் கல்விப்பயணம்.

ஆங்கிலேயர்கள் காலத்தில் அறிமுகமான மெக்காலேயின் கல்வித் திட்டத்திற்கே அந்த நோக்கம்தான் இருந்தது. அதன்படிதான் கல்வித் திட்டத்தின் செயல்பாடுகளும் அமைந்தன. ஆங்கிலேய அரசுகளின் அமைச்சுப் பணிகளுக்கும் உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கும் உதவும் பணியாளர்களை உருவாக்கும் நோக்கம் முதன்மை நோக்கம். அத்தோடு ஆங்கிலமறியா இந்தியர்களோடு உறவாட – உத்தரவுகளைக் கொண்டு சேர்க்கத் தேவையான இருமொழி வல்லுநர்களை உருவாக்குதல் இரண்டாவது நோக்கம். இதைத் தாண்டி அவர்களின் கல்வி பெரிதான விரிப்புகளைச் செய்யவில்லை. அத்தகைய விரிப்புகளை விரும்பிய மேட்டுக்குடி மனிதர்களுக்கான உயர்கல்வியை இங்கிலாந்திற்குச் சென்று கற்கலாம் என்பதான வாய்ப்புகளையே வழங்கினார்கள்.

மெக்காலே கல்வித்திட்டத்தின் நோக்கங்கள் பெருமளவில் குடியரசு இந்தியாவில் மாற்றம் பெற்றது என்பதுதான் அதன் சிறப்பு. வயதுக்குவந்த அனைவருக்கும் வாக்குரிமை என்பதுபோல, இந்தியக் குடிமக்களின் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஆரம்பக் கல்வி வழங்க வேண்டும் என்ற திட்டத்தை முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலேயே இணைத்துக் கொண்டது பண்டித நேருவின் தலைமையிலான அரசு. முதல் ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் (1951-56) பல்வேறு திட்டங்களின் ஒரு பகுதியாகத் தொடங்கிய ஆரம்பக்கல்வி வழங்கல் – பொதுக்கல்வி வழங்கல் நோக்கம் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் (1961-66 ) முதன்மைக்குரிய நோக்கங்களில் ஒன்றாக மாற்றப்பட்டது. நகர்ப்பகுதிகளில் இருந்த பள்ளிகளைக் கிராமப் புறங்களை நோக்கி நகர்ந்தியது அந்தக் காலகட்டம்தான். பொதுக்கல்வியில் தனியார் அறக்கட்டளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன. சமூக அறக் கட்டளைகளாகவும் சமூக நலனை மையப்படுத்திய தனியார் அறக் கட்டளைகளாகவும் இருந்த வரையில் மிகைலாப நோக்கு இருந்ததில்லை. அறிவையும் தகவலையும் அனைவருக்கும் வழங்கும் நோக்கத்தோடு தாய்மொழிக் கல்வியே முதன்மையான கற்பித்தல் முறையாக இருந்தது. அதற்கு அரசும் பங்களிப்பு செய்தது.

அனைவருக்கும் கல்வி என்பதில் சாதி, மதம், மொழி போன்ற வேறுபாடுகள் இருக்கக்கூடாது என்பதாக மட்டும் திட்டமிடவில்லை. நாட்டின் சமவெளிப் பகுதிகளில் வாழ்பவர்களுக்கு வழங்கப்படும் கல்வி போலவே காட்டுப் பகுதிகளிலும் மலைப்பகுதிகளிலும் வாழும் பழங்குடிகளுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றே திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஒவ்வொரு ஊராட்சி மன்றத்திலும் ஒரு ஆரம்பக்கல்வி என்ற திட்டத்தோடு முன்னுரிமை கொடுத்தது அந்தத் திட்ட காலம். தொடர்ச்சியாக வந்த ஐந்தாண்டுத் திட்டங்களில் முன்னோக்கிய பொதுக் கல்விமுறை பின்னுக்குத் தள்ளப்பட்டு உயர்கல்வியும் சிறப்புக்கல்வி நிறுவனங்களும் முன்னுரிமை பெற்ற ஐந்தாண்டுத் திட்டமாக ஏழாவது ஐந்தாண்டுத் திட்டம் (1985-90) அமைந்தது. வளர்ச்சி, முன்னேற்றம், உலக வணிகத்தை நோக்கிய நகர்வு என்பன முதன்மை பெற்றன. இந்நகர்வு, இந்தியர்களுக்குப் பொதுக் கல்வி வழங்குவதைக் குறைத்துக் கொண்டு சிறப்புக் கல்வியை நோக்கி நகர்த்தும் திட்டமிடல்களை அறிமுகம் செய்தன. மருத்துவம், பொறியியல், தொழில் நுட்பம், மேலாண்மை போன்ற துறைகள் அறிமுகம் ஆயின.

சிறப்புத் துறைகள் வேண்டும் என்ற நிலைபாட்டோடு, அனைவருக்கும் அவை தேவையில்லை என்ற மனோபாவமும் அந்தக் காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. அதன் பின்னணியில்தான் கல்வியில் தனியார் மயம் தொடங்கியது. எந்தவொரு துறையிலும் தனியார் நுழையும்போது வியாபாரமும் லாபமும் நுழைந்துவிடும். அரசிடமிருந்து அனுமதிபெறும்போது சமூகப்பொறுப்புடன் செயல்படுவோம் என உத்தரவாதம் வழங்கிவிட்டு உடனே மறந்து விடுவார்கள் முதலாளிகள். சமூகப்பொறுப்பும் மனித மேம்பாடும் முக்கியம் என்பதை ஏற்றுக்கொண்டு கைவிடும் பின்னணியில் நியாயமான லாபத்திற்குப் பதிலாகக் கூடுதல் லாபம் அடையும் உத்திகள் வேலைசெய்யத் தொடங்கிவிடும்.

கல்வியை லாபகரமான தொழிலாகக் கருதிய நிலையில் உருவான ஆங்கில வழிக்கல்வி, அனைவருக்கும் கல்வி என்ற மனநிலையில் மாற்றத்தைக் கொண்டுவந்தது. ஆங்கிலமே அறிவு என்ற மனநிலையைப் பொதுப்புத்தியில் உருவாக்கிச் சாதாரண வருமானம் கொண்ட பெற்றோர்களையும் ஆங்கில வழிக்கல்வியை நோக்கித் திருப்பிவிட்ட து அந்த மோகம். ஆங்கில வழிக்கல்வியை அடைய முடியாதவர்கள் ஒதுக்கப்பட்ட மனநிலைக்குத் தள்ளப்பட்டவர்களாக ஆகியிருக்கிறார்கள். அவர்களின் கூட்டம் இப்போது அதிகமாகிக் கொண்டே வருகிறது. நமது அரசுகளும் ஒருபுறம் தாய்மொழிக் கல்விக்காக இருப்பதுபோல பாவனை செய்துகொண்டே ஆங்கில வழிக்கல்வியை வழங்கும் மெட்ரிக் பள்ளிகளுக்கு அனுமதியை அள்ளியள்ளி வழங்கியது.

அந்தப்பாவனை நிலைபாட்டையே தேசியத் தரத்தேர்வு முறை(NEET)யிலும் காட்டுகிறது அரசு. தமிழ்நாட்ட்ன் முந்தைய அரசு. கொள்கைப்படி எதிர்க்கிறோம் எனக் காட்டிக்கொண்டே அதனை எதிர்கொள்வதற்கான பாடங்களையும் பயிற்சி மையங்களையும் தொடர்ந்து நடத்தியது. அதையே இந்த அரசும் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படும். அரசுகளின் நிலைபாட்டை நன்குணர்ந்த வியாபாரிகள் ஓரடி பின்னால் வைத்துவிட்டு மூன்றடி முன்னேறி அடித்து ஆடுவார்கள். பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்தால் தொழிற்கல்விக்கான போட்டிகளில் முன்னேறிவிடலாம் என்ற நிலை இருந்தபோது அதற்கான பள்ளிகளைத் தொடங்கியவர்கள் – கோழிப்பண்ணை வியாபாரிகள் - இப்போது தேசியத்தரத் தேர்வு ‘நீட் கோச்சிங்’ – மையங்களைத் தொடங்குகிறார்கள். அதற்கான விளம்பரங்களை முழுப்பக்கங்களில் பத்திரிகைகளில் வெளியிட்ட கல்வி நிறுவனங்கள் கல்விக்கட்டணத்தைத் தாண்டி பயிற்சிக்கட்டணங்களை வசூலிக்கின்றன. பணம் இருப்பவர்கள் அவற்றில் சேர்கிறார்கள் என்று இந்தப் போக்கைக் கவனிக்காமல் விலகிப்போய்விட முடியாது. இந்தப் போக்கு நீட் தேர்வு மட்டும்தான் ஒரே பாதை என்ற மனப்பாங்கை உருவாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். அந்தத் தேர்வில் நுழைந்து அதன் வழியாகச் சேரும் கல்வி மட்டுமே தரமானது என்ற நம்பிக்கை உருவாக்கப்படுகிறது. அனைவரும் மருத்துவராகி விடவேண்டும் என்ற போட்டியில் இறங்கும் போட்டியின் விளைவுகள் ஒட்டுமொத்த சமூகத்தின் – இளையோரின் மனப்பாங்கைக் குலைத்துவிடும். இந்த நம்பிக்கையும் மனப்பாங்கும் கல்வியின் பலதள அறிவையும் தேடுதல் முயற்சிகளையும் தடுத்துவிடும்.

இதன் விளைவுகளைக் கடந்த 20 ஆண்டுகளாகவே இந்தியக்கல்வி சந்தித்துக் கொண்டிருக்கிறது. அடிப்படை அறிவியலில் செலுத்தப்பட்ட கவனம் திசைமாறியிருக்கிறது. இந்தியப் பரப்புகளை அறிதலில் கவனமின்மை கூடிக்கொண்டே வந்துள்ளது. வரலாறு, பூகோளம் என்ற தனித்தனிப்பாடங்கள் பள்ளிப்பாடங்களில் காணாமல் போய்விட்டன. இரண்டையும் இணைத்து சமூக அறிவியலாக்கிவிட்டார்கள். மருத்துவராகவும் பொறியாளராகவும் ஆகவேண்டும் என்ற கனவை 10 வயதிற்குள் உருவாக்கித் தரும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மூடர்களாக்கி விடுவதில் முண்டியடிக்கிறார்கள்.

வறட்சிப் பரப்புக்கு இணையாக மழைபெய்யும் பரப்பைக் கொண்ட இந்தியப் பரப்பு உணரப்படவேண்டும். கடற்கரையின் நீளத்தை அறிய வேண்டும். கடல் தரும் மீன்வளப்பொருளாதாரத்தோடு, அங்கிருந்து கிளம்பிவரும் புயலும் உண்டாக்கிய கடல்சார் அவலம் போன்று அண்மைக்காலங்களில் விவாதங்களுக்குள்ளாகும் சிக்கல்கள் எல்லாம் பரப்பியல் படிப்புகள் (Area Studies) இந்தியாவில் ஏன் இன்னும் அறிமுகமாகவில்லை என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டிருக்கின்றன.. வளர்ச்சியடைந்த நாடுகளில் இப்படிப்புகள் அந்நாடுகளைப் பொருளாதாரரீதியாக நிலைநிறுத்திக்கொள்ளும் நோக்கத்தைக் கொண்டிருக்கின்றன. அதனால் அயல்நாடுகளின் படிப்பின் பகுதியாக இருக்கின்றன. பன்னாட்டு வணிகக் குழுமங்களின் நிதியுதவியோடு இயங்கும் பரப்பியல் படிப்புகள், . பொருளாதார வளர்ச்சி, வணிகமேலாண்மை, பண்பாட்டுக்கூறுகள் வழியாகப் பெருந்திரளின் உளவியலைப் படிப்பித்தல், விளிம்புநிலை மனிதர்களின் ஆதங்கம் போன்றவற்றைக் கவனப்படுத்துகின்றன. நிலவியல் பரப்பை அதன் அனைத்துப் பின்புலங்களோடும் கற்றுத்தரும் பரப்பியல் கல்வியை இந்தியா போன்ற நாடுகளில் மனித வளக்கல்வியின் பகுதியாக உருவாக்கவேண்டும். மனிதவளம் இந்தியாவில் ஒரேமாதிரியான திறன்களையோ வெளிப்பாட்டு முறைகளையோ கொண்டன அல்ல.

கலை, அறிவியல், மொழி என்பதான மரபான பிரிவுகளின் அடிப்படையில் கல்விப் புலங்களை உருவாக்கும் முறையை இது முற்றிலும் நிராகரிக்கக் கூடிய படிப்பு. நிலத்துக்கடியிலும் நீருக்கடியிலும் பொதிந்துகிடக்கும் வளங்களோடு இணைந்தது இந்திய மனிதவளம். மலைசார்படிப்பு, கடல்சார் படிப்பு, சமவெளிப்படிப்பு, நகர்சார்படிப்பு போன்ற பரப்பியல் படிப்புகள் உருவாக்கப்பட வேண்டும். ஒருங்கிணைந்த அறிவையும் ஊடாடும் விவாதங்களையும் உருவாக்கும் நோக்கம் அவற்றிற்கு இருக்கவேண்டும். இதையெல்லாம் கவனத்தில்கொள்ளாமல் இந்திய அரசின் உயர்கல்விக்கு ஆலோசனை கூறும் பல்கலைக்கழக மானியக்குழு, ஆய்வு & வளர்ச்சி மையங்கள், தொழில்நுட்ப ஆய்வுக்கழகங்கள், அறிவியல் கல்வி ஆலோசனைக் குழுக்கள் போன்றன இன்னும் இன்னும் தனித்தியங்கும் துறைகளையும் படிப்புகளையுமே பரிந்துரைக்கின்றன. இந்தப் போக்கு கவலை அளிக்கும் போக்கு

மொழிக்கல்வி

மொழிக்கல்வியைச் சுமையாகக் கருதும் மனப்பாங்கை உருவாக்க நினைக்கிறது தமிழக அரசின் கல்வித்துறை. கல்வியை மதிப்பெண்களாகவும் மதிப்புமிக்க சம்பளம் பெறும் வாய்ப்புகள் கொண்ட தொழில் கல்விப் படிப்புகள், உயராய்வு நிறுவனங்களை நோக்கித் தங்கள் பிள்ளைகளை ஓடச் செய்யும் முயற்சியில் இருக்கும் பெற்றோர்களும் அதனை ஏற்கவே செய்வார்கள். போட்டித் தேர்வுகளுக்குப் பயன்படாத மொழிக்கல்வியைச் சுமையெனவே மாணாக்கர்களும் நினைப்பார்கள். ஆனால் ஒரு நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்த வேண்டுமெனத் திட்டமிடும் ஆட்சியாளர்கள் இந்த மனப்பாங்கை உருவாக்க நினைக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ஆபத்தான போக்கு எனச் சொல்லிக் கண்டிக்க விரும்புகிறேன்.

பள்ளிக்கல்விக்குப் பின்னான மேனிலைக் கல்வியில் மொழிக்கல்வி விருப்பப்பட்டியலில் இருக்கலாம் என்பது கற்கும் மொழியும் புழங்கும் மொழியும் அலுவல் மொழியும் ஒன்றாக இருக்கும் நாடுகள் பின்பற்றும் முறைமை. அவரவர் நாட்டின் முதன்மை மொழிகளிலேயே கற்பிக்கின்றனர்; கற்கின்றனர். அந்த மொழிகளில் குழந்தைமைக் கல்விமுதல் முனைவர் பட்ட ஆய்வுவரை கற்கும் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறார்கள். தொழிற் கல்விக்கான மொழியும் அதே மொழிதான். ஆனால் இந்தியாவில் அப்படியல்ல என்பதை விளக்க வேண்டியதில்லை.

இப்போது மைய அரசில் ஆட்சியிலிருக்கும் கட்சிக்கும் திட்டமிடல் குழுவுக்கும் அப்படியொரு ஆசையும் விருப்பங்களும் இருக்கலாம். ஆனால் இதுவரையிலான இந்தியா அப்படி இருந்தில்லை. எப்போதும் இந்தியா ஒற்றைமொழியைக் கொண்ட நாடு அல்ல. இந்திய மாநிலங்களும் அத்தகைய மாநிலங்கள் அல்ல. பலமொழிகள் கொண்ட ஒன்றியமான இந்தியாவின் மாநிலங்கள் ஒவ்வொன்றும் கற்பிக்கும் மொழி ஒன்றாகவும் புழங்குமொழி வேறொன்றாகவும் அலுவல் மொழியை இன்னொன்றாகவும் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் இன்று பெரும்பாலும் கற்பிக்கும் மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. அதற்கு வாய்ப்பில்லாத அரசுக் கல்வி நிலையங்களில் தமிழ்வழியாகக் கற்பிக்கப்படுகிறது.

தமிழகத்தில் அலுவல் மொழியாக ஆங்கிலமும் தமிழும் இருக்கின்றன. புழங்குமொழியாகத் தமிழும் இருக்கின்றது. ஆங்கிலமும் இருக்கின்றது. குடும்ப வெளிக்குள் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி எனப் பல மாநிலங்களின் மொழிகளும் புழங்கும் மொழிகளாக இருக்கின்றன. ஆங்கிலம் மட்டுமே இருக்கும் குடும்பங்களும் இருக்கின்றன.

இப்போது முன்வைக்கப்படும் மொழிக்கல்வித் திட்டப்படி மாணாக்கர்களின் விருப்பம் ஆங்கிலம் என்று ஆனால் என்ன ஆகலாம்? இருவேறு இந்தியா உண்டாகும். பாரதூரமான வேறுபாடுகள் கொண்ட இந்தியாவாக அவை இருக்கும். ஆங்கிலம் மட்டும் அறிந்த மேட்டுக்குடிகளாக நகரங்களை உருவாக்கிச் சொகுசு வாழ்க்கையை நோக்கி ஓடும் இந்தியா, எவ்வளவுதான் முயன்றாலும் 10 சதத்தைத் தாண்டாதவர்களின் இந்தியாவாகவே இருக்கும். அதற்குள்ளும் பல்வேறு வர்க்கங்கங்களும் முரண்பாடுகளும் உண்டாகும். இந்த மனிதர்கள் உடல் உழைப்பை விரும்பாதவர்களின் கூட்டமாக இருப்பார்கள்.

அக்கூட்டத்திற்கெதிராக 90 சதவீதம் இந்தியா - தமிழ்,பஞ்சாபி, அஸ்ஸாமி, குஜராத்தி, போஜ்புரி போன்ற மாநில மொழிகளின் வழி கற்ற கூட்டமாக ஒரு இந்தியா இருக்கும். இரண்டையும் சமாளிக்கும் தந்திரங்களையும் அதிகாரத்தையும் கொண்டவர்களாக ஆங்கிலம் அறிந்தவர்கள் இருப்பார்கள். இப்போதும் அப்படித்தான் இருக்கிறோம் என்பது உணரப்பட வேண்டும். இந்த முடிவின்படி இந்த இருப்பின் கூர்முனைகள் தீட்டப்படுகின்றன.

இதுதான் திட்டமிடல் குழுக்களின் நோக்கம். குறைவானவர்கள் உயர் அறிவைப் பெற்றால் போதும் எனச் சிந்திக்கும் மனிதர்களால் ஆனவை அவை. பெரும்பான்மை மனிதர்களை நாட்டின் அறிவுத்தளப் பொதுப் போக்குகளிலிருந்து ஒதுக்கிவிட்டு நாங்கள் இருக்கிறோம் சிந்திக்க; நீங்கள் உங்கள் வேலைகளைப் பாருங்கள் எனச் சொல்லும் அறிவு இந்த அறிவு. இது ஆபத்தான அறிவு.

இப்படிச் சிந்திக்கும் அறிவை மக்கள் விரோத அறிவு என்று சொல்லாமல் வேறெப்படிச் சொல்வது?




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்