ஊடகங்களைக் கண்காணித்தல்
ஊடகங்களைக் கண்காணித்தல் என்பது அண்மைக் காலத்தில் வெளிப்படையாகி இருக்கிறது. மக்களாட்சியில் எதிர்த்தரப்புக் குரல்களுக்கு இடமுண்டு என நம்பும் அரசியல் கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும் கண்காணிப்பு நடக்கவே செய்யும். கண்காணிப்பவர்களுக்கு இரண்டு நோக்கங்கள் உண்டு. கண்காணிப்பின் வழியாக எதிர்த்தரப்பை எதிர்கொள்ளும் மாற்றுக் கருத்தை உருவாக்கிக் கொள்ளும் விதமான கண்காணிப்பு முதல் வகை. இரண்டாம் வகைக் கண்காணிப்பு மாற்றுக்கருத்தே வரக்கூடாது; அப்படி எழுப்புபவர்களை மிரட்டித் தன்வசப்படுத்துவது அல்லது வாயடைக்கச் செய்து காணாமல் ஆக்குவது என்பது இரண்டாவது வகை.
முதல்வகைக் கண்காணிப்பு மக்களாட்சி அரசியலில் இருக்கவேண்டிய ஒன்று. ஆக்கபூர்வமான விவாதங்களை முன்னெடுக்க அத்தகைய கண்காணிப்புகள் அவசியமும்கூட. கண்காணித்துக் கொண்டு மாற்றுக்கருத்தாளர்களின் வினாக்களுக்கும் விமரிசனங்களுக்கும் விடைசொல்லித் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முயலும் போக்கு அது. இவ்வகைக் கண்காணிப்பை அரசு நிறுவனங்கள் ஒவ்வொன்றும் செய்கின்றன; தனியார் நிறுவனங்களும்கூட இவ்வகைக் கண்காணிப்புப் பொறிமுறைகளை வைத்திருக்கின்றன. ஆட்சியில்/அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராகச் சொல்லப்படும் கருத்துகளுக்குப் பதில் சொல்லும் விதமாக - மறுத்துரைத்து ஆளும் தரப்பை நியாயப்படுத்தும் விதமாக- வினையாற்ற வேண்டும் என்பதற்காக நடக்கும் இவ்வகைக்கண்காணிப்புகள் ஒருவிதத்தில் வரவேற்க வேண்டிய ஒன்று
ஒவ்வொரு அலுவலகங்களிலும் வைக்கப்படும் புகார்பெட்டிகள் கூட கண்காணிப்பின் ஓரம்சம்தான்.ஆங்கிலேயர்காலத்திலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பின்பற்றும் வாரச்சந்திப்பு (weekly meetings)கள் எல்லாம் கண்காணிப்பின் பகுதியாகவே நடத்தப்படுகின்றன. புகார்ப்பெட்டிகளில் போடப்படும் எல்லாப்புகார்களும் களையப்படுவதில்லை. எல்லாக் கோரிக்கை நிறைவேற்றப்படுவதில்லை. கண்காணிப்புப் பட்டியலில் இடம்பெறும் புகார்தாரர்கள் யார்யார்? என்பதும், திரும்பத்திரும்ப வரும் கோரிக்கைக் கூட்டம் எது என்பதும் அறியப்படும். அதற்கான பதில்களை நிர்வாகரீதியாகத் தராமல் வேறுவழிகளில் வழங்கும் நடைமுறைகளை நமது அமைப்புகள் பின்பற்றுகின்றன.
எதிர்மறைத்தன்மை கொண்ட இரண்டாம் வகைக் கண்காணிப்பைச் செய்ய நினைக்கும் அதிகாரத்துவ அமைப்புகள் அதற்கான பொறிமுறையை உள்கட்டுமானத்திற்குள்ளேயே வைத்திருப்பதில்லை. நம்பகமான வெளியார்களின் வழியாக இவ்வகைக் கண்காணிப்புகள் நிகழ்கின்றன. அரசின் கண்காணிப்பு அமைப்பான புலனாய்வுக் காவல் துறையைத் தாண்டித் தனியார் நிறுவனங்களிடம் கண்காணிப்புப் பணிகளை வழங்காத அரசியலாளர்கள் குறைவு. தேர்தல் வெற்றிகளை நோக்கமாகக் கொண்ட கருத்துருவாக்கப் பணிகளைச் செய்வதுபோலவே ஆட்சியின் மீது வைக்கப்படும் நன்மதிப்புகளையும் எதிர்மதிப்புகளையும் கண்காணித்து அறிக்கைகளைத் தருகின்றன நிறுவனங்கள். அதற்காகப் பணத்தைப் பெற்றுக்கொள்கின்றன.
இந்நடைமுறைகளைத் தாண்டி தன்னார்வ நிலையில் கண்காணிப்புசெய்யும் நபர்களின் செயல்பாடுகளும் கண்காணிப்புகளே. அமைப்பின் -அதன் தலைமையின் மீது நல்லெண்ணம் கொண்டவராகத் தங்களைக் காட்டிக்கொண்டு கண்காணிப்பு வேலைகளைச் செய்வார்கள். பல நிறுவனங்களில் உறுதிசெய்யப்படாத புகார்களை -மொட்டை பெட்டிசன்களை- அனுப்பும் நபர்களாக இருப்பவர்கள் தொடங்கி, அவ்வப்போது தலைமையைச் சந்தித்து நல்லெண்ண அடிப்படையில் உரையாடுபவர்கள் வரை இவ்வகைக் கண்காணிப்புகளை மேற்கொள்பவர்களே. அவர்களை ஊக்குவிக்கும் அதிகார மையம் அவர்களிடம் ஒருவிதப் போலி அதிகாரத்தை வழங்குவது போலத்தோற்றம் காட்டும். ஆனால் எல்லா நேரமும் அவர்களை நம்புவதில்லை; எச்சரிக்கையுடனேயே கையாள்வார்கள்.
********
கடந்த பத்தாண்டுகளில் செய்தி அலைவரிசைகள் பொழுதுபோக்கு அலைவரிசைகளின் இடத்திற்கு இணையாக முக்கியத்துவம் பெற்றுள்ளன. தாராளமயத்தின் வழியாகத் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்ததின் விளைவு அது.வலுவான எதிர் மற்றும் மாற்றுக்கருத்துகளை அனுமதிக்கும் தாராளமயம் அவற்றை உள்வாங்கித் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கும். ஆனால் ஒற்றையதிகாரத்தை விரும்பும் பாசிச வடிவம் இவ்வகையான மாற்றுக் கருத்தையோ எதிர்நிலைப்பாடுகளையோ விரும்பாது.அவற்றைத் தொடக்க நிலையிலேயே தடுத்துவிட நினைக்கும்.
தமிழ்நாட்டில் நடுத்தரவர்க்க மனிதர்களின் கருத்துருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றும் செய்தித் தொலைக்காட்சிகளின் செய்திக்கட்டுரைகள், நேரடித் தொகுப்புகள், விவாதமேடைகள் ஆகியனவற்றைச் செய்பவர்கள் தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையை உள்வாங்கிக் கொண்டுதான் நிகழ்ச்சிகளை உருவாக்க முடியும். அவ்வகை நிகழ்ச்சிகளே அதிகப்படியான பார்வையாளர்களைச் சென்று சேரும். அதிகப்படியான பார்வையாளர்களைச் சென்றடையும் அலைவரிசைகளுக்கே விளம்பரங்களும் கிடைக்கும். இவையெல்லாம் ஊடக வியாபாரத்தின் கண்ணிகள். அதனைச் சரியாகச் செய்த முன்னோடி செய்தி அலைவரிசையாக இருந்தது புதியதலைமுறை. அதனோடு போட்டியிட்டு முந்தும் நிலையில் இருப்பது நியூஸ் 18. இவ்விரு அலைவரிசைகளின் முதலாளிகள் தங்கள் நிறுவனத்திற்கான செய்தியாளர்களின் அரசியல் பார்வை, முந்திய அனுபவம் ஆகியவற்றைப் பார்க்காமல் தேர்வுசெய்திருக்க மாட்டார்கள். புதிய தலைமுறையிலிருந்து வெளியேற்றப்பட்ட திரு. ஜென்ராம் போன்றவர்களின் அனுபவங்களும் அரசியல் புரிதலும் அவரது அச்சு ஊடகக் காலத்திலேயே உருவானது. திரு. குணசேகரன், திரு. செந்தில், திரு ஜீவசகாப்தன் போன்றவர்களும் அப்படித்தான். அவர்களின் செயல்பாடுகளும் சொற்களும் அவர்கள் யார் என்பதைச் சொல்லிக் கொண்டேதான் இருக்கின்றன. அவர்களைக் கண்காணித்துக் கண்டுபிடித்துச் சொல்ல எதுவுமில்லை.
மத்திய அரசின் சார்பில் தங்களிடம் அதிகாரம் இருப்பதாக நம்பும் போலிக் குழுக்கள் புலனாய்வுசெய்து அம்பலப்படுத்துவதாகச் சொல்வது ஒருவித மிரட்டல். இங்கு நடக்கும் எல்லாவகைச் செயல்பாடுகளும் - குறிப்பாக ஊடகக் கருத்துருவாக்கம் அரசின் ஆதரவாக மட்டுமே இருக்கவேண்டும் என்ற நினைப்பின் காரணமான மிரட்டல். அம்மிரட்டலை ஏற்று நடவடிக்கை எடுத்தால் செய்தியாளர்களுக்கு வேலை இழப்பு என்ற ஆபத்து ஏற்படலாம். ஆனால் அதன் தொடர்ச்சியாக அவர்கள் பணியாற்றிய ஊடக நிறுவனங்களுக்கும் பெரிய இழப்பு ஏற்படும். அவை வெகுமக்களிடம் நம்பிக்கை இழப்பைச் சந்திக்கும்.
*************************
தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றுபவர்களை மிரட்டும் தொனியில் கண்காணிப்பு வேலைகள் நடப்பது உடனடியாக வெளியில் தெரிகின்றது. ஆனால் கலை, பண்பாடு, கல்வி போன்ற துறைகளில் இவ்வகைக் கண்காணிப்பு தொடர்ச்சியாக இருக்கவே செய்கிறது. கலைஞர்கள், எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் யாருக்குக் கிடைக்கவேண்டும் என்பதை விடவும் யாருக்குக் கிடைக்கக் கூடாது எனத் தீர்மானிக்கும் இடத்தில் கண்காணிப்புக் குழுக்கள் செயல்படுகின்றன. சில் ஆண்டுகளுக்கு முன்னால் பள்ளிக்கல்வியின் பாடத்திட்டங்களை மாற்றும்போது இவ்வகைக் கண்காணிப்புக் குழுக்கள் வெளிப்படையாகவும் ரகசியமாகவும் கண்காணிப்பு அறிக்கைகளை அனுப்பிக் கொண்டிருந்தன என்பதை பலரும் அறிவர். பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பணிநியமனங்கள் நடக்கும்போது பெறப்படும் ரகசிய அறிக்கைகளில் அங்கீகாரம் இல்லாத கண்காணிப்புக்குழுக்களின் யோசனைகள் கேட்கப்படுகின்றன. ஆட்சியிலிருக்கும் மாநிலக் கட்சியின் நபர்களுக்கு இணையாகவே மறைமுகக் குழுக்களின் பரிந்துரைகளும் ஏற்கப்படுகின்றன. பல நேரங்களில் மாநில அரசு அமைப்புகளுக்குத் தெரிந்தும், சில நேரங்களில் தெரியாமலும் நடக்கின்றன.
வண்ணங்களும் வடிவங்களும் மாறியிருக்கலாம். காட்சிகள் அப்படியேதான் தொடர்கின்றன.
கருத்துகள்