தொல்.திருமாவளவன் - சில குறிப்புகள்
1992 // பார்வையாளராக இருந்தார் திருமா.
1968 இல் கீழவெண்மணியில் 42 பேர் உயிருடன் கொளுத்தப்பட்டார்கள்; ஆனால் கொளுத்தியவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை தருவதற்குப் பதிலாக விடுதலையை வழங்கியது. அதற்கு நீதிமன்றம் சொல்லிய வார்த்தை “ சந்தேகத்தின் பலனை” அளிப்பது என்ற அடிப்படை. இந்திய நீதி மன்றங்களும் சமூகமும் எல்லா நேரமும் சந்தேகத்தின் பலனை உடையவர்களுக்குச் சாதகமாக அளிக்கின்றன என்ற நிலையை மாற்றி “ சந்தேகத்தின் பலனை ஆதிக்க சாதியினருக்கே அளிக்கின்றார்கள்” என்ற நிலைபாட்டில் அந்த நாடகத்தை புதுச்சேரியில் நண்பர்களோடு சேர்ந்து தொடங்கிய கூட்டுக்குரல் என்ற நாடகக் குழுவின் சார்பில் கம்பன் கலையரங்கத்திற்கு வெளியே தரையில் நிகழ்த்திக் காட்டினோம். பாடலும் வசனமும் நடிகர்களின் வியர்வை வழியும் உடலுமாக விரிந்த அந்த நாடக நிகழ்வு இந்தியாவில் வெண்மணியோடு முடிந்து போகவில்லை. பல்வேறு மாநிலங்களில் இன்னும் நடந்துகொண்டே இருக்கிறது என்று காட்ட அந்த நேரத்தில் ஆந்திரத்தின் சுண்டூரில் நடந்த வன்கொலைகளை நினைவூட்டி வளர்த்தெடுத்தோம்.நடக்கும் மோதல்கள் எல்லாவற்றிலும் இருப்பது ஆதிக்கச் சாதியினரின் திமிரும் ஒடுக்கப் பட்ட மக்களுக்கான அணிகள் இல்லாமையும் தான் எனக் காட்டினோம். அந்த நிகழ்வுக்கு தொல். திருமாவளவன் ஒரு பார்வையாளராக வந்திருந்தார். அதுதான் எனது முதல் நேர்ச்சந்திப்பு.
1992 இல் தொடங்கிய நியாயங்கள் என்னும் நாடக மேடையேற்றம் தலித்திய அரங்கின் எல்லைகள் பலவற்றை உருவாக்கிக் காட்டி விட்டு 1997 இல் நான் திருநெல்வேலிக்குப் போனதோடு முடிந்து போனது. இந்து மதத்தில் “தண்ணீர்” எவ்வாறு சாதியிருப்பின் காரணியாக இருக்கிறது என்பதை ஒரு நாடகத்தில் சொன்னது போல பிரபஞ்சனின் அகலிகை என்ற பெண்ணிய நாடகத்தில் “ தாடகை” என்ற பாத்திரத்தை உருவாக்கியதின் மூலம் கறுப்பு வண்ணம் கொண்ட விளிம்பு மனிதர்களுக்கு எதிராக இந்து மதப் புனிதர்கள் நடத்திய யுத்தத்தையும் சொல்லாடல்களையும் முன் வைத்தோம். சமூக உணர்வு கொண்ட படைப்பாளிகளின் நியாயத்தை - குற்ற உணர்வைத் தூண்டும் விதமாக வடிவமைக்கப் பெற்ற வார்த்தை மிருகம் என்ற நாடகத்திற்குள் சிதம்பரம் அண்ணாமலை நகர் பத்மினியின் வாக்குமூலத்தை உள்ளடக்கிய பிரதியாக ரவிக்குமார் எழுதித் தர உடலரசியல், சாதி அரசியல், மொழி அரசியல் எனப் பல தளங்களில் சொல்லாடலை உருவாக்கிய மேடை நிகழ்வைத் தயாரித்தேன். இந்நாடகங்கள் எல்லாம் தலித் இயக்கம் எழுச்சி பெற்ற முதல் ஐந்தாண்டுகளில் பாண்டிச்சேரியில் மட்டுமல்லாமல் கடலூர், நெய்வேலி, பண்ருட்டி, தஞ்சாவூர், திருத்துறைப்பூண்டி எனப் பல இடங்களில் நிகழ்த்தப் பெற்றதோடு மதுரையில் நடந்த எல்லா தலித் கலைஇரவுகளிலும் நிகழ்த்திக் காட்டப்பட்டது. தலித்திய அரங்கின் வரையறைகளை - எல்லைகளை விரிவாக்கிக் காட்டிய மேடை நிகழ்வுகள் அவை.
2016 தோல்வியடைந்தார்; ஆனால் வென்றார்
மதிப்பிற்குரிய தொல். திருமாவளவன் ஆளுமை அல்ல; அரசியல்வாதி. ஒற்றைப் பிரச்சினை முன்னெடுக்கும் நுண்ணரசியல்தளச் செயல்பாட்டாளரல்ல; தமிழகத்தின் பேரரசியலின் முக்கியமான முகம். தமிழனனென்றொரு இனமுண்டு; தனியே அதற்கொரு குணமுண்டு என்ற வாக்கினின் நம்பிக்கைகொண்டிருந்த இளம்பிராயக் கிளர்ச்சியிலிருந்து விடுபட்டுச் சூழலைக் கவனித்துப் பெரும்பரப்புக்குள் பயணம் செய்தவர். ஒடுக்கப்படுதலின் தந்திரங்களை உணர்ந்தநிலையில் திமிறியெழுதலின் வழிமுறைகளைத் தேடிய பயணத்தின் வழியாக, நடைபெற்ற தேர்தலின் முக்கியச் சொல்லாடலை உருவாக்கியவர். மூன்றாவது அணியெனத் தங்களையே கீழிறக்கிக் கொள்ளும் நிலைக்கு மாற்றாக மாற்றணியெனும் கருத்தியலை உருவாக்கத் தேவையான கூட்டணி அரசாங்கம் கருவை உருவாக்கியவர். இந்தக் கருவை உருவாக்கிய நிகழ்வுகள் ஓராண்டுக்கு முன்பே சூல்கொண்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி ஆட்சி என்னும் கருத்தை முன்வைக்கக் காரணமாக இருந்தது அதன் கூட்டணிக் கட்சியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் என்பதைத் திரும்பவும் சொல்லவேண்டியதில்லை. வடதமிழ்நாட்டில் தி.மு.க. வின் முக்கியமான ஆதரவுத்தளமாக இருப்பவை இடைநிலைச் சாதிகள். இடைநிலைச் சாதிகளிடமிருக்கும் சாதிய மனோபாவத்தைக் கணக்கில் கொண்டு விடுதலைச் சிறுத்தைகளைக் கூட்டணியிலிருந்து விலக்கி வைப்பது என்ற பேச்சை ஓராண்டுக்கு முன்பே தி.மு.க. தொடங்கியது. அவர்களை வெளியேற்றுவதில் வடமாவட்டங்களின் இரண்டாம் நிலைத்தலைவர்கள் குறியாயிருந்தார்கள். அவர்கள் வன்னியர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, தி.மு.க.வில் இருக்கும் தலித் தலைவர்களுமாகவும் இருந்தார்கள் என்பது கவனிக்கவேண்டிய ஒன்று. விடுதலைச் சிறுத்தைகளோடு கூட்டணி அமைத்தால் தனித்தொகுதிகள் முழுவதும் கூட்டணிக்கட்சி என்ற அடிப்படையில் விசிக.விற்குச் சென்று விடுகிறது; நமக்குத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பே ஏற்படுவதில்லை என்று கருதினார்கள். அவர்களும் தி.மு.க,வின் தலைமையிடம் அழுத்தம் தரவே செய்தார்கள். தொடர்ந்து தங்கள் கட்சியில் இருக்கும் நபர்களை இழக்கவிரும்பாத நிலையில் தான் திராவிட முன்னேற்றக் கழகம் விடுதலைச் சிறுத்தைகளைக் கைகழுவும் முடிவை எடுத்தது. அந்த முடிவை எடுக்கப்போகிறது என்ற நிலையில் எதிர்வினையாக விசிக. கூட்டணி ஆட்சி என்னும் கருத்துருவை முன்வைத்தது. ஒருவினையின் எதிர்வினையாகவே இன்னொருவினை உருவாகிறது என்பது இயல்பியல்விதி.
கூட்டணி ஆட்சி என்னும் கருத்தியலை முன்வைத்ததோடு ஓய்ந்துவிடவில்லை என்பதுதான் தொல்.திருமாவளவனின் சாதனை. இந்தக் கருத்தியல் இந்தத் தேர்தலில் பரவலாகச் சென்று சேர்ந்திருக்கிறது. அடுத்த தேர்தலிலும் நிச்சயம் விரிந்து பரவும் என்பதே இப்போதைய நிலை. அதைச் செய்யப்போகிறவராக இருக்கப்போகிறவரும் அவர்தான். தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என நினைப்பவர்களின் குரலாக - அடையாளமாக அவர் மாறப்போகிறார் என்பதின் வெளிப்பாடாகவே அவரது தோல்விக்காக வருத்தப்படும் குரல்களைக் கவனிக்கிறேன்.
காட்டுமன்னார்கோவில் தொகுதி பாரம்பரியமாக அரசியல் உணர்வுபெற்ற தொகுதி என்பதை நானறிவேன். காட்டுமன்னார் குடித்தொகுதியின் பெரும்பாலான கிராமங்கள் காவிரியின் பாசனப்படுகைப்பிரதேசம். விவசாயம் சார்ந்த கிராமங்கள் அவை. விவசாயம் சார்ந்தவை என்பதனாலேயே சாதிய இறுக்கமும் கூடுதலாக இருக்கக் கூடியன. கிராமங்கள் என்றும் சேரிகள் என்றும் பிரித்துப் பார்ப்பதற்குத் தோதான வேறுபாடுகளுடன் காணப்படும் அந்தத் தொகுதியைப் பற்றிக் குறிப்பிடப் பல தகவல்கள் உண்டு. விடுதலை அடைந்த அறுபது ஆண்டுகளில் பெருமளவு மாற்றங்கள் எதனையும் சந்திக்காத கிராமங்களே அதிகம் உள்ளன. அப்படி இருப்பதற்குக் கூட முக்கியக் காரணம் அத்தொகுதி தனித்தொகுதியாக இருப்பது தான் என்று தோன்றியது
2006 தேர்தலின்போது அந்தத்தொகுதியின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றிருக்கிறேன். அப்போது அ.இ.அ.தி.மு,க.வின் கூட்டணிக்கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டது. நண்பர் ரவிக்குமார் போட்டியிட்டார். அவரது வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்பே அவரது சின்னம் கோயில்மணி என்பது உறுதியானது. அதற்கு முன்பே பரப்புரையைத் தொடங்கியிருந்தாலும் எந்தச் சின்னத்தையும் சொல்லி வாக்குக் கேட்கவில்லை. சின்னம் கிடைத்தவுடன் பரப்புரையை மீண்டும் தொடங்கினார்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கும் நமது தேர்தல் முறை கண்கூடாகக் காட்டும் பாரபட்சம் சின்னம் ஒதுக்குதல். அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே தனது சின்னத்தைக் கூறி வாக்குக் கேட்கும் வாய்ப்பு அந்த வேட்பாளருக்கு உண்டு. ஆனால் அங்கீகாரம் பெறாத கட்சி வேட்பாளருக்குச் சின்னம் கிடைப்பதோ சரியாக இருபத்தியோரு நாட்களுக்கு முன்புதான். தள்ளுபடி செய்தல், வாபஸ் வாங்குதல் எல்லாம் முடிந்த பின்புதான் சுயேச்சைகளுக்கும் அங்கீகாரம் பெறாத கட்சியின் வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்படுகின்றன. பெயரைச் சொல்லி ஒரு முறையும் சின்னத்தை அறிமுகப்படுத்தி ஒரு முறையும் பிரசாரத்தை தொடர வேண்டியுள்ளது.
ரவிக்குமாருக்கு மணிச் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் கோயிலுக்குப் பக்கத்தில் இருந்த வெங்கலக் கடையில் ஒரு பெரிய மணியை வாங்கி திறந்த ஜீப்பில் கட்டிக் கொண்டு காட்டுமன்னார் குடியின் வீதிகளில் போனபோது கண்ட காட்சிகள் கலக்கத்தை ஏற்படுத்தின. பல தேர்தலைக் கண்ட கைச் சின்னம் வரையப்பட்ட சுவர்கள் பளிச்சென்று தெரிந்தன. ஆனால் மணிச்சின்னம் வரையப்பட்ட சுவர்கள் அதிகம் தென்படவில்லை. சுவர்களில் மணி வரையப்படாத நிலையில் சின்னம் அறிமுகமாவது சிரமம் என்று பேசிக் கொண்டோம். ஆனால் அடுத்த நாள் கிராமங்களுக்குப் போன போது இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஒவ்வொரு குடிசை வீட்டு முன்னாலும் வாசல் தெளித்துக் கோலம் போட்டு வேட்பாளரை வரவேற்கக் காத்திருந்தனர் பெண்கள். குலவைகள் , ஆரத்திகள், சூடம் காட்டுதல் என்று நகர்ந்த போது நான் தெருக்களின் கோலத்தைக் கவனித்துக் கொண்டே போனேன். ஒவ்வொரு கோலத்திற்குள்ளும் மணிச் சின்னம் தூக்கலாகத் தெரிந்தது. கோலம்போடும் கைகள் மணிச்சின்னத்தை லாவகமான ஓவியக் கலைஞர்களின் கைவண்ணம் போல விதம்விதமாகத் தீட்டியிருந்தன. அந்தக் கோலங்களும் ஆரவாரமும் அடுத்தடுத்த நாட்களும் தொடர்ந்தன.
தலைவர் தொல்.திருமாவளவனை அத்தொகுதியின் செல்லப்பிள்ளையாக இருந்த காங்கிரஸ் கட்சியின் இளையபெருமாளின் இடத்தில் வைத்துப் பார்த்தார்கள் என்பதை அப்போதே நான் உணர்ந்தேன். அவர்களோடு நான் பேசியபோது அவரது பெயரில் இருக்கும் -ன் - விகுதியை ஒருவர்கூட உச்சரித்துக் கேட்கவில்லை. வளவர் என்றே சொன்னார்கள். தேர்தல் அரசியலின் அனைத்துத் தந்திரங்களையும் பயன்படுத்தி மிகக் குறைந்த - 87 வாக்குகள் குறைவாக வாங்கியுள்ளார் என்று தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதி அறிவிப்புச் செய்திருக்கிறார். அந்த அறிவிப்பைத் தொல் .திருமாவளவனும், அவருக்காக வருத்தப்படும் நானும், வெளியில் இருக்கும் நடுத்தரவர்க்க மனிதாபிமானிகளும் ஒத்துக்கொள்ளக்கூடும்; ஒத்துக்கொண்டு மறந்தும் போகலாம். ஆனால் அவருக்காக வாக்களித்த 48363 பேரும் அவ்வளவு எளிதாக மறக்க மாட்டார்கள்.
2018/தலைவர் தொல். திருமா அவர்கள் முனைவர் ஆகிறார்.
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை ஒன்றியம் மீனாட்சிபுரம் மதமாற்றம் தமிழகத்தில் எண்பதுகளின் தொடக்கத்தில்-1981- நடந்த முக்கியமானதொரு சமூகநிகழ்வு. இந்துமதத்தின் அடிப்படைக்கோளாறான சாதிப்பிரிவினையின் வேதனையான பக்கங்களை அனுபவிக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் மொத்தமாக இசுலாமிய மதத்தை ஏற்றுக்கொண்டார்கள். அதற்கு முன்பு தென் மாவட்டங்களில் நடந்த மதமாற்றமெல்லாம் கிறித்தவத்தை நோக்கிய அமைப்புரீதியான - தூண்டுதலின் விளைவாக நடந்த மாற்றங்கள். ஆனால் மீனாட்சிபுரம் நிகழ்வு முற்றிலும் வேறானது. அந்நிகழ்வின் பாதிப்புகளைக் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு புள்ளிவிவர அடிப்படையிலும், நேரடிக் களப்பணி மூலமும், நடந்துள்ள மாற்றங்கள் பற்றிய பதிவுகள் வழியாகவும் ஆய்வுசெய்து எமது பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறையின் வழியாகத் தனது முனைவர் பட்டப்பேற்றிற்கான தகுதியை இன்று அடைந்தார் தமிழகத்தின் முக்கியமான அரசியல் தலைவர் தொல். திருமாவளவன். அவரது நெறியாளர் எமது முன்னாள் துணவேந்தர் கு.சொக்கலிங்கம். கறாரான பேராசிரியர்; நெறியாளர். இந்திய அளவிலும் உலக அளவிலும் அறியப்பட்ட குற்றவியல் அறிஞர். அவருக்குப் புறநிலைத்தேர்வாளராக வந்த முனைவர் பாஜ்பாயி டெல்லியின் சட்டப் பல்கலைக்கழகத்தில் இப்போது பதிவாளராக இருக்கும் குற்றவியல் துறைப் பேராசிரியர்.
இன்று நடந்த பொதுவாய்மொழி தேர்வைச் சந்தித்த தொல். திருமாவளவன் அறியப்பட்ட அரசியல் ஆளுமை என்றபோதிலும் பல்கலைக் கழக விதிகளும் நடைமுறைகளும் சிறிதும் விலகாமல் நடந்தது. புறநிலை வல்லுநர் எழுப்பிய முறையியல் சார்ந்த வினாக்களுக்கும் பின்விளைவுகள் குறித்த ஐயங்களுக்கும் அளித்த விடைகள் தேர்ந்த அறிஞரின் வாதத்திறமையோடு வெளிப்பட்டது. குற்றவியலின் ஒரு பகுதியான பாதிக்கப்பட்டோரியல் வழியிலான ஆய்வு இது. தமிழ் நாட்டுக்கு இவ்வகை ஆய்வுகள் இன்னும் இன்னும் தேவை.
வாய்மொழித்தேர்வுக்குப் பின் நல்லதொரு விருந்தை வழங்கிய இப்போதைய துணைவேந்தர் முனைவர் கிருஷ்ணன் பாஸ்கர் இன்று பல்கலைக் கழகம் பெருமைப்படும் நாள் எனச் சொன்னார். போன வாரம் வரை-B - கிரேடு பல்கலைக் கழகமாக இருந்த நிலை மாறி இன்று A -கிரேடு பல்கலைக்கழகத்தில் தமிழகத்தின் திரள் மக்களின் தலைவர் ஒருவருக்கு அறிவுத்திறன் வழியாகப் பெறும் முனைவர் பட்டத்தை வழங்கியிருக்கிறது.
எமது பல்கலைக்கழகம் அடுத்தடுத்து மகிழ்ச்சியான நாட்களைச் சந்தித்து கடக்கிறது என்று சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது.முன்னாள் மாணவர் ஒருவர் நாட்டை ஆளும் தலைவராக வருவாரென்றால் அவரை உருவாக்கிய பல்கலைக்கழகம் அடையும் பெருமைக்கு அளவிருக்காதல்லவா? பல்கலைக்கழகத்திற்கு அந்தப் பெருமையை வழங்குங்கள் முனைவர் தொல். திருமாவளவன் அவர்களே!
ஓராண்டுக்கு முன்பே முனைவர்
பெரும்பாலும் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவின்போது மாணவர்களுக்கு ஒத்திகைகள் நடத்துவது,சிறப்பு விருந்தினர்களுக்கு உடன் இருந்து உதவுவது, பத்திரிகையாளர்களைக் கவனித்துக் கொள்வது போன்ற முக்கியமான பொறுப்புகளில் ஒன்று தரப்படும். அதனால் சில நாட்களுக்கு முன்பிருந்தே வேலைகள் இருக்கும். பல்கலைக் கழகத்திலிருந்து ஓய்வுபெற்றபின் இந்தப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. பெரிய வருத்தம் இல்லை. என்றாலும் தலைவர் தொல். திருமாவளவன் முனைவர் பட்டம் பெற்ற பட்டமளிப்பு விழாவின்போது இல்லை என்பது கொஞ்சம் வருத்தமானதுதான்.
சரியாக ஓராண்டுக்கு முன்பு இதே தேதியில் - 24-08-18 -அன்று அவரது முனைவர் பட்ட ஆய்வேட்டின் மீது பொதுவாய்மொழித்தேர்வு பல்கலைக்கழக வளாகத்தில் சி.பா.ஆதித்தனார் அரங்கில் நடந்தது. நான் முன்வரிசையில் அமர்ந்திருந்தேன். அப்போதைய துணைவேந்தர் கிருஷ்ணன் பாஸ்கர் தனது சிறப்பு அதிகாரத்தின்கீழ் அன்றே கையொப்பமிட்டு முனைவர் பட்டத்திற்கான தற்காலிகச் சான்றிதழை வழங்கியதோடு தனது செலவில் பல்கலைக்கழக விருந்தில்லத்தில் பெருவிருந்தொன்றை அளித்தார். பொதுவாக முனைவர் பட்ட ஆய்வாளர்களே இதுபோன்ற விருந்துகளைத் தருவார்கள். தனியறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். துணைவேந்தரிடம் என்னோடு இருந்த பழக்கத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார். அதில்லாமல் அரசியலில் எடுக்கும் முடிவுகளைப் பற்றியும் துணைவேந்தரிடம் விளக்கிக் கொண்டிருந்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் என்னும் இயக்கம் தேர்தல் அரசியல் இயக்கமாக மாறியபின் நடந்த ஒரு நாள் விழாவில் நான் பொறுப்பேற்று நடத்திக் கொண்டிருந்த கூட்டுக்குரல் நாடகக் குழுவின் மூலம் தெருநாடகங்களை நடத்தினோம். அவற்றுள் வெண்மணி முதல் என்பதும் ஒன்று. அந்நாடகங்களை நின்றபடியே பார்த்தார். பின்னர் தனது ஒன்றரை மணி நேரப் பேச்சிலும் குறிப்பிட்டுப் பேசினார். புதுவைக் கம்பன் கலையரங்கில் நடந்த நிகழ்வு 1991 என்று நினைவு. அன்று முதல் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் ‘எப்படி இருக்கிறீர்கள்’ என்று தொடங்கிப் பலவற்றைப் பேசிச்செல்லும் நபராக இருக்கிறேன். அதனால் தான் அவர் பட்டம் வாங்கும்போது பல்கலைக் கழகத்தில் இல்லையே என்ற வருத்தம் இருந்தது. என்றாலும் மூன்று நாட்களுக்கு முன்னால் கோயம்பேட்டில் நடந்த பூவரசி அறக்கட்டளை விழாவில் இருவரும் கலந்து கொண்டபோது முனைவர் பட்டப்பேற்றுக்கும் முன் வாழ்த்தைச் சொல்லிவிட்டேன்.
2019/நாடாளுமன்றம் செல்லவேண்டியவர் முனைவர்
மதிப்பிற்குரிய தொல். திருமாவளவன் ஆளுமை அல்ல; அரசியல்வாதி. ஒற்றைப் பிரச்சினையை முன்னெடுக்கும் நுண்ணரசியல்தளச் செயல்பாட்டாளரல்ல; தமிழகத்தின் பேரரசியலின் முக்கியமான முகம். தமிழனனென்றொரு இனமுண்டு; தனியே அதற்கொரு குணமுண்டு என்ற வாக்கின் மீது நம்பிக்கைகொண்டிருந்த இளம்பிராயக் கிளர்ச்சியிலிருந்து விடுபட்டுச் சூழலைக் கவனித்துப் பெரும்பரப்புக்குள் பயணம் செய்துகொண்டிருக்கும் தலைவர். ஒடுக்கப்படுதலின் தந்திரங்களை உணர்ந்த நிலையில் திமிறி எழுதலின் வழிமுறைகளைத் தேடிய பயணத்தின் வழியாக முன்பு நடைபெற்ற தேர்தல்களில் முக்கியச் சொல்லாடல்களை உருவாக்கியவர். மூன்றாவது அணியெனத் தங்களையே கீழிறக்கிக் கொள்ளும் நிலைக்கு மாற்றாக மாற்றணியெனும் கருத்தியலை உருவாக்கியவர். அதற்காக கூட்டணி அரசாங்கம் என்னும் கருவை உருவாக்கியிருப்பவர். இந்தக் கருவை உருவாக்கிய நிகழ்வுகள் ஐந்தாண்டுக்கு முன்பே சூல்கொண்டது. தமிழகச் சட்டமன்றத்திற்காக முன்வைத்தக் கருத்தியலை இப்போது தேசிய அளவிற்கும் நகர்த்துகிறார்.
கூட்டணி ஆட்சி என்னும் கருத்தியலை முன்வைத்ததோடு ஓய்ந்துவிடவில்லை என்பதுதான் தொல்.திருமாவளவனின் சாதனை. அந்தக் கருத்தியல் கடந்த தேர்தலிலேயே பரவலாகச் சென்று சேர்ந்திருக்கிறது. இப்போது நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நிச்சயம் விரிந்து பரவும் அதைச் செய்யப்போகிறவராக இருக்கப்போகிறவரும் அவர்தான். அண்மையில் பிபிசிக்கு அவர் அளித்த நேர்காணல் தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என நினைப்பவர்களின் குரலாக - அடையாளமாக மாறப் போகிறார் என்பதின் வெளிப்பாடாகவே இருக்கிறது.
அவர் போட்டியிடும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி அவருக்குப் புதிய தொகுதி அல்ல. ஏற்கெனவே அவரைத் தனது பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த தொகுதி.பாரம்பரியமாக அரசியல் உணர்வுபெற்ற தொகுதி என்பதை நானறிவேன். 1990 களில் தலித் இயக்கங்கள் எழுச்சிபெற்றுத் தலித் பண்பாட்டுப் பேரவை, தலித் கலை இலக்கியவிழாக்கள், தலித் இலக்கிய முகாம்களென நடத்திய காலகட்டத்தில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளுக்குட்பட்ட சிறுநகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பயணம் செய்திருக்கிறேன். நாடகங்கள் போட்டிருக்கிறேன். அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டவர்களோடு தொடர்பில் இருந்திருக்கிறேன். நண்பர் ரவிக்குமார் காட்டுமன்னார் கோவில் சட்டமன்றத் தொகுதியில் கோயில்மணி சின்னத்தில் போட்டியிட்டு வென்ற போது அந்தத் தொகுதியின் பெரும்பாலான கிராமங்களுக்குச் சென்று மக்களோடு பேசியிருக்கிறேன்.
திருமாவின் பேச்சுத்திறமையை - சொற்பொழிவின் ஒழுங்கைப் பல மேடைகளில் முன் வரிசையில் அமர்ந்து கேட்டிருக்கிறேன். சட்டமன்ற நாடாளுமன்ற உரைகளைத் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறேன். அண்மைக் காலங்களில் அவரளவிற்குப் பொறுப்போடு ஊடக நேர்காணல்களைத் தந்தவர்கள் இந்திய அளவில் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அவரது முனைவர் பட்ட நேர்காணல் தேர்வின் போது ஆங்கிலத்திலும் தமிழிலுமாக விவாதங்களை முன்னெடுத்த பாங்கு கொண்டாட்டத்திற்குரிய ஒன்று.
முனைவர் தொல்.திருமாவளவனை அத்தொகுதியின் செல்லப்பிள்ளையாக இருந்த காங்கிரஸ் கட்சியின் இளையபெருமாளின் இடத்தில் வைத்துப் பார்த்தார்கள் என்பதை அப்போதே நான் உணர்ந்தேன். அவர்களோடு நான் பேசியபோது அவரது பெயரில் இருக்கும் -ன் - விகுதியை ஒருவர்கூட உச்சரித்துக் கேட்கவில்லை. வளவர் என்றே சொன்னார்கள். கோயில் மணிச் சின்னத்தையே தங்கள் சின்னமாக ஆக்கிக் கொண்ட கிராமத்து மக்கள் அன்றாடம் தங்கள் புழக்கத்தில் இருக்கும் பானைச் சின்னத்தை ஏற்றுக்கொள்ளாமல் போக வாய்ப்பே இல்லை. பானை தமிழ் நாட்டின் புழங்குபொருள். ஒவ்வொருவரின் வீட்டிலும் பானைகள் இருக்கின்றன. ஒவ்வொரு பெண்ணும் பானைகளைத் தூக்கியிருப்பார்கள். அவர் இந்திய நாடாளுமன்றத்திற்குச் செல்ல வேண்டும். சிதம்பரம் தொகுதியின் உறுப்பினராக மட்டுமல்ல. தமிழகத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் பேசக்கூடிய ஒருவராக.
2022// திருமா.60
முனைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு 60 ஆவது பிறந்தநாளுக்கு வாழ்த்துகள். உள்ளறை விவாதங்களுக்காகவும் பேரரங்குக் கூட்டங்களுக்காகவும் 1990 -களின் தொடக்க ஆண்டுகளில் தொல்.திருமாவளவன் அடிக்கடி புதுச்சேரிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது தொடங்கிய அறிமுகம் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது.
புதுச்சேரியில் கூட்டங்களை ஒருங்கிணைக்கும் இடத்தில் நண்பர் ரவிக்குமார் இருந்தார். அவருக்குப் பின்னால் செயல்பட்ட பலரோடு நானும் இருந்தேன். பல்கலைக்கழகப் பணியைத் தாண்டி, எளிய அரங்க வடிவத்தில் அரசியல் விவாத நாடகங்களை மேடையேற்றிக் கொண்டிருந்த கூட்டுக்குரல் நாடகக்குழுவை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தேன். 1991 இல் புதுச்சேரியிலும் அதனைச் சுற்றியிருக்கும் நகரங்களிலும் கிராமங்களிலும் ஒருங்கிணைக்கப்பட்ட தலித் கலை, இலக்கிய விழாக்களில் நாடகங்களை மேடையேற்றும் பொறுப்பையும் கூட்டுக்குரல் தனதாக்கிக் கொண்டது. புதுவை கம்பன் கலையரங்கின் வெளிவளாகத்தில் கீழ்வெண்மணி நிகழ்வை நினைவூட்டிய நியாயங்கள் நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த தலைவர் தொல். திருமா நடிகர்கள் ஒவ்வொருவரையும் பாராட்டிவிட்டு மேடையேறினார்.
புதுவையிலிருந்த (1989 -1997) காலத்திற்குப் பின் நெல்லை மனோன்மணியத்திற்குப் போனபோது திருமா. அங்கே ஆய்வு மாணவராக வந்தார். அவரது நெறியாளர் பேரா.கு.சொக்கலிங்கம் துணைவேந்தர் இருந்தபோது அந்த நிகழ்வு நடந்தது. அந்த நகர்வும் அவரோடான சந்திப்புகளைத் தொடரச்செய்தது. அவரது அரசியலைத் தொடர்ந்து கவனித்துப் பேசும் நபராகவே பயணம் செய்தேன். தேர்தல் அரசியலில் வெற்றிகளையும் தோல்விகளையும் ஒன்றெனக் கருதியது அவரது பயணம்.
2021//பொறுப்பான தலைவர் திருமாவளவன்
பொறுப்பான தலைமைகள் அணிதிரட்டலை மட்டுமே முக்கியமாகக் கருதுவதில்லை; வழி நடத்துதல் பற்றியும் சிந்தித்துச் செயல்படும். தன்னிடம் எதிர்பார்த்து நிற்கும் அணிகளுக்குச் சரியான ஆயுதங்களைத் தருவதில் காட்டும் பொறுப்புணர்வுகளில் தான் தலைமைகளின் வரலாற்றுப் பாத்திரம் தங்கி நிற்கிறது. காந்தி, தான் மட்டுமே பின்பற்றி, பரிசோதித்து, வெற்றிகண்ட அகிம்சையையும் சத்தியாக்கிரகத்தையும் ஆயுதங்களாகத் தனது அணிகளிடம் முன் மொழிந்தார். சரியாகச் சொல்வதானால் காந்திக்கு அணிதிரட்டலுக்கான ஆயுதங்களோ கருத்தியலோ தேவைப்படவில்லை. ஏனென்றால் அவர் முன் நின்ற அணிகள் தேசவிடுதலை என்னும் பெயரால் திரட்டப்பட்ட கூட்டங்கள். ஆனால் அம்பேத்கரின் பணிகளோ அவ்வளவு சுலபமான பணிகள் அல்ல. அணி திரட்டலும் வழிகாட்டுதலும் அவரது பொறுப்புக்களாகவே இருந்தன. அவர் வழியில் செல்பவர் முனைவர் தொல். திருமாவளவன்.
2024//திருமா-62
வயது அறுபத்தியிரண்டை நிறைவு செய்கிறார் தலைவர் தொல்.திருமாவளவன். வாழியவென வாழ்த்துகிறேன்
1990 களின் கலை, இலக்கியப்பண்பாட்டு நிகழ்வுகளில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகளாக இருந்தவை தலித் கலைவிழாக்கள். புதுவை கம்பன் கலையரங்கத்தின் மேடையில் நிகழ்த்தப்படாமல், அதன் வெளிப்புறத்தில் நிகழ்த்தப்பட்ட ' நியாயங்கள்' என்னும் வீதிநாடகத்தை நின்றபடியே பார்த்து முடித்துவிட்டு நடித்த ஒவ்வொருவரையும் கைகுலுக்கிப் பாராட்டியபின் என்னைக் கட்டி அணைத்துக்கொண்ட நாள் தான் அவரோடு உரையாடிய முதல் நாள். அதற்கு முன்பு அவரது உரைகளைக் கூட்டத்தில் ஒருவனாக இருந்து கேட்டிருந்தேன். திரளாக நிற்கும் ஆயிரக்கணக்கான மனிதர்களை அசையவிடாமல் நிறுத்திவைக்கும் உரைகள் அவை. நாடகம் பார்த்த அன்று மாலையிலும் கம்பன் கலையரங்கில் உரையொன்றை நிகழ்த்தினார். முன்வரிசையில் அமர்ந்து கேட்ட ஒன்றரை மணி நேர உரையது. அரங்கிலும் வெளியிலுமாகச் சில ஆயிரம் பேர் நின்று கேட்டார்கள்.
அவரது வெற்றிகளைவிடவும் 2016 இல் அடைந்த அந்தத் தோல்வி மிகுந்த வருத்தம் அளித்தது.

2025// தி. மு. கழகமே இதனைச் செய்யமுடியும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்வைக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது ஒரு கோரிக்கை; கொள்கை நிலைப்பாடு. தேர்தல் அரசியலில் கிடைக்கும் எண்ணிக்கை சார்ந்த உரிமை அல்ல என்பது அதன் தலைவர் தொல்.திருமாவளவன் அறியாத ஒன்றல்ல.
எல்லாத்தரப்பினருக்கும் அதிகாரத்தில் பங்களிக்கும் மேன்மையான மனநிலைக்கு ஒவ்வொருவரையும்- ஒவ்வொரு அமைப்பையும்- நகர்த்திச் செல்லும் பக்குவம் கொண்டது நமது அரசியல் சட்டம். அதனை ஏற்றுச் செயல்படுவது சமூகநீதி அரசியல். அதனை உறுதி செய்வதற்காகவே இட ஒதுக்கீட்டு முறை நடைமுறையில் இருக்கிறது. அதனைக் கைவிடாமல் கூடுதல் வாய்ப்புகளை வழங்கும் நோக்குடன் நகர்ந்து கொண்டே இருப்பது இந்தியமக்களாட்சி முறையின் பக்குவப்பட்ட நிலை. அந்நகர்வின் கருத்தியல் வெளிப்பாடே விலக்கி வைப்பதைத் தவிர்த்துவிட்டு உள்வாங்கும் திட்டங்களை மேற்கொள்ளும் திட்டமிடல்கள். இதிலிருந்து பின்வாங்குவோம் என்று சொல்லும் அரசியல் இங்கு எடுபடாது என்பது நடைமுறை உண்மை.
நாட்டின் வளத்தில் - மனிதவளம், பொருளியல் வளம், இயற்கை வளம் என அனைத்து வகையான வளத்திலும் இந்திய மக்கள் அனைவருக்கும் பங்குண்டு என்பதை உறுதிசெய்யும் விதமாக மக்களாட்சி முறை தொடர வேண்டும் என ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். நாட்டின் வளத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் பங்களிப்பை உறுதி செய்வதுபோலவே ஆட்சி அதிகாரத்திலும் பங்களிப்பு இருக்கவேண்டும் என்று நினைப்பது தவறான ஒன்றல்ல. அந்த அடிப்படையில் தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது அரசியல் கருத்தியலாக முன்வைத்துக்கொண்டே இருக்கிறது.
கருத்தியல் முன்வைப்பைத் தேர்தல் கூட்டணிக்கான முன் தேவையாக - நெருக்கடியாக எப்போதும் விசிக முன்வைக்கவில்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. தொடர்ந்து சமூகநீதியின் பக்கம் நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமை ஏற்கும் ஒரு கூட்டணியில் இத்தகைய கருத்தியல் முன்வைப்பைச் சொல்லும்போது விவாதத்திற்குள்ளாக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதில் தவறு எதுவும் இல்லை. ஒட்டுமொத்த இந்தியாவில் மதம் சார்ந்த பிளவுவாத -பாசிச அரசியல் மேலெழும்பி வரும் சூழலில் அதனை எதிர்கொண்டு நிற்கும் சக்தி தனக்கு இருப்பதாக நினைக்கும் கட்சி திராவிட முன்னேற்றக்கழகம். அந்தச் சக்திக்குக் கூடுதல் மதிப்பைத் தருவன அதனோடு நிற்கும் கூட்டணிக் கட்சிகள் என்பதுவும் அதற்குத் தெரிந்த ஓர் உண்மை. இந்த உண்மைகளின் பின்னணியில் தான் அதிகாரத்தில் பங்கு என்ற கருத்தியல் முன்வைப்பைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தப்புரிதலோடு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலை முன்வைத்து நீண்டகாலமாக மக்கள் திரளை மக்களாட்சி அரசியலுக்குப் பக்குவப்படுத்தியிருப்பவர் விசிக.வின் தலைவர் தொல் .திருமாவளவன். அவரைப் போன்றவர்களுக்கு மக்களாட்சி முறையில் கிடைக்கவேண்டிய பங்கை - ஆட்சி அதிகாரத்தில் கிடைக்க வேண்டிய பங்கைத் தருவது என்பது தி,மு.க.வுக்கு இழப்பு அல்ல. அவரது அரசியலுக்கு அளிக்கப்படும் அங்கீகாரம். அந்த அங்கீகாரத்தைத் திராவிட முன்னேற்றக்கழகம் போன்ற ஓர் அரசியல் கட்சிதான் செய்யமுடியும். ஏனென்றால் அக்கட்சியின் கொள்கைகளும் இயக்கமும் வரலாறும் அனைத்துத் தரப்பினருக்கும் சமவாய்ப்பு என்ற சமூகநீதியோடு தொடர்புடையவை.

கருத்துகள்