சாதியும் தேர்தலும்:இமையத்தின் தாலிமேல சத்தியம்

தேர்தல் அரசியலில் வெற்றியைத் தருவதில் முதல் இடம் பணத்திற்கா? சாதிக்கா? என்ற கேள்வி எப்போதும் இருக்கிறது.பொதுத்தேர்தல்களில் சாதியும் இடைத்தேர்தல்களில் பணமும் முதலிடம் பெற்று வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கின்றன என்பது தமிழகத் தேர்தல் வரலாற்றை அறிந்தவர்களுக்குத் தெரியும். கொள்கையையும் கோட்பாட்டையும் முன்வைத்து அரசியல் கட்சிகள் தொடங்கப்படுகின்றன.ஆனால் அவற்றைச் சொல்லி மட்டுமே தேர்தல் வெற்றியைப் பெற்றுவிட முடியும் என நம்பும் கட்சிகள் இந்தியாவில் மிகக்குறைவு. 70 ஆண்டு காலத் தேர்தல் அரசியலில் இடதுசாரிகள் மட்டுமே கொள்கைப்பற்றோடு, அதனை மட்டுமே பேசிக்
கொண்டிருக்கிறார்கள். அதிகமும் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தல் போன்ற பரப்பு கூடிய வெளிகளில் மக்களைச் சந்திக்க வேண்டிய வேட்பாளர்கள் நபர் ஒன்றுக்கு இவ்வளவு பணம் என்று தருவதைவிடக் குறிப்பிட்ட ஊருக்கு இவ்வளவு.. ஊரில் குறிப்பிட்ட சாதியினரின் பொது வேலைகளுக்காக இவ்வளவு என்று ஊரில் இருக்கும் கட்சிக்காரர்கள்/ பெரியவர்களுக்குப் பணம் கொடுத்துவிட்டுப் போய்விடுவார்கள். சட்டமன்றத் தேர்தல்களில் கூடுதல் கவனம் செலுத்திடும் வேட்பாளர்கள் ஒவ்வொரு நாளும் கட்சிப்பணி ஆற்றும் நபர்கள் என்ற கணக்கில் சில நூறுபேருக்கு மூன்று வேலை சாப்பாடு போட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொரு பகுதியிலும் யார்யார் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பார்கள் எனக் கணித்துச் சொல்லும் அடிப்படையில் வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான கவனிப்புகள் நடைபெறும். கவனிப்புகள் முன்பெல்லாம் பொருட்களாக இருந்தன. இப்போது பணமாக மாறிவிட்டது. தலைக்கு இவ்வளவு என்ற நிலை. நூறு ரூபாய்க்கும் குறைவாகப் பட்டுவாடா செய்யப்பட்ட தேர்தல்கள் முடிந்து ஆயிரங்களுக்கு வந்துவிட்டது.

பொதுத்தேர்தல் சூத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை இடைத்தேர்தல்கள். தமிழகத்தில் திரும்பத்திரும்பச் சொல்லப்படும் சாத்தாங்குளம், திருமங்கலம், ஆர்.கே. நகர். சூத்திரங்களை அண்மையில் பாராளுமன்றத்தேர்தல்களோடு நடத்தப் பெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல்கள் மாற்றிவிட்டன. பாராளுமன்றத்திற்கு உதய சூரியனுக்குப் போட்டவர்களைக் கூட இரட்டை இலைக்குப் போடும்படி செய்தத்தில் பணத்திற்குப் பெரும்பங்கு இருந்தது. அதன் வழியாக இப்போது நடக்கும் ஆட்சி தக்கவைக்கப்பட்டது என்பதை அரசியல் விமரிசகர்கள் முன்வைத்தார்கள்.

பணத்தை முன்வைத்துப் பேசும் அரசியல் விமரிசகர்களை விடச் சாதியையும் சாதிப் பிரிவுகளையும் புள்ளிவிவரங்களோடு பேசும் ரவீந்திரன் துரைசாமி போன்ற அரசியல் விமரிசகர்களின் பேச்சு எரிச்சல் ஊட்டும் - மக்களாட்சி விரோதக் கருத்தாகத் தோன்றினாலும் அதுதான் தமிழகத்தின் யதார்த்தம் என்பதை ஆனந்த விகடனில் வந்துள்ள இமையத்தின் சிறுகதை உறுதிபடப் பேசுகிறது. “தாலி மேல சத்தியம்” [18.03.2020 ] என்ற தலைப்பில் - ஒரு பெண்ணின் ஆவேசக் குரலைத் தலைப்பாக்கிய கதை அது.



“நான் அவனுக்கா ஓட்டுப் போட்டன்? அவங்கிட்டப் போயி கேக்குறதுக்கு?” என்று கேட்ட அலமேலு சிறிது நேரம் பேசாமல் இருந்துவிட்டு “என்னோட ரெண்டு புள்ளமேல சத்தியமா சொல்றன். நாங்க ஆட்டோ சின்னத்திலதான் போட்டம்” என்று சொல்லி சத்தியம் செய்தாள்.

நாங்க ஒங்கிட்ட சத்தியம் கேக்க வல்ல” என்று சொல்லிவிட்டு செல்வராஜ் கேலியாகச் சிரித்ததைப் பார்த்ததும் அலமேலுக்கு நல்ல கோபம் வந்துவிட்டது. கோபத்தில் பற்களை நரநரவென்று கடித்தாள். தலைமுடியை ஒதுக்கினாள். மாராக்கை சரிசெய்தாள். ஆண்களின் முன் பேசிக்கொண்டிருப்பது அவளுக்கு சங்கடமாக இருந்தது.


“பணம் தரலன்னா வீட்ட பூட்டிப்புடுவம்” என்று ராஜன் சொல்லி முடிப்பதற்குள் வேகப்பட்ட அலமேலு “யார் வீட்ட வந்து யாரு பூட்டுறது? நல்ல கதயா இருக்கே” என்று அலட்சியமான குரலில் சொன்னாள்.


அலமேலுவின் பேச்சு ராஜனுக்குக் கோபத்தை உண்டாக்கியது. கடுப்புடன் செல்வராஜைப் பார்த்து “போயி பூட்டு” என்று அதிகாரத்துடன் சொன்னதும், இடது கையில் தொங்கவிட்டிருந்த பெரிய பையிலிருந்து ஒரு பூட்டையும், சாவியையும் எடுத்துகொண்டு வீட்டை பூட்டுவதற்காகப் போனதுதான் தாமதம் பேய்ப்பிடித்த பெண் மாதிரி வேகமாகப் போய் செல்வராஜை மறித்துக்கொண்டு நின்றாள். அவளை நகர்த்திவிட்டு வீட்டைப் பூட்டுவதற்காக செல்வராஜ் ஒரு அடிகூட எடுத்துவைத்திருக்க மாட்டான். ஆங்காரம் கொண்ட பெண் மாதிரி அவனை ஒரே நெட்டாக நெட்டித்தள்ளினாள். அவன் நிலைத்தடுமாறி மூன்று நான்கடி தூரம் தள்ளிப் பின்னால் போனான்.
இது கதையில் இடம்பெற்றுள்ள காட்சி. அண்மையில் நடந்து முடிந்த ஊராட்சித் தேர்தலில் பணத்தின் வேலை எடுபடவில்லை; சாதியே வாக்காளர்களிடம் எடுபடும் கருவியாக இருந்தது என்பதை வாசிப்பவர்களிடம் எந்தவித ஐயமும் தோன்றாத வண்ணம் எடுத்து வைக்கிறார். கொள்கை பேசி ஓட்டுக் கேட்ட காலம் முடிந்து, பணத்தால் வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கை வந்தது. இப்போது உருவாக்கப்பட்டுள்ள கூட்ட மனோபாவத்தால் - ( Mass pshycheque ) சாதிக் கணக்கையே முதன்மைப்படுத்திப் பேச வேண்டிய நெருக்கடி உருவாகிக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் போன்ற பெருவெளிப் பரப்பில் மதப்பெரும்பான்மை எடுபடலாம். ஆனால் ஊராட்சி மன்றத்தேர்தல் என்னும் சிறுவெளிப் பரப்பில் சாதியே முதன்மையான வாக்குவங்கித் திரட்டலுக்கான கருவி எனக் காட்டுகிறது கதை


“குடித்தெருவுல ஓட்டுக்கு அஞ்சாயிரம்னும், காலனியில ஓட்டுக்கு ஆறாயிரம்னும் கொடுத்தன். ஓட்டுக்குன்னு கொடுத்தது மட்டும் அறுவத்தியெட்டு லட்சம். நாமினேஷன் கொடுத்ததிலிருந்து முந்தா நாள் ஓட்டு எண்ணுறவர பிராந்திக்கின்னு, பிரியாணிக்கின்னு, சாப்பாட்டுக்கின்னு கொடுத்தது மட்டும் பன்னண்டு லட்சத்துக்கும் மேல செலவாச்சி. தெனம்தெனம் இட்லி, தோசன்னு தின்னப் பயலுவோ ஓட்டுப்போட்டிருந்தாலே ஜெயிச்சிருப்பன். தோத்ததுகூட எனக்கு அசிங்கமா இல்ல. ஏழுநூறு ஓட்டு வித்தியாசத்தில தோக்கடிச்சிட்டானுவ. அதத்தான் என்னால தாங்க முடியல. ஊருல மெஜாரிட்டி சாதிக்காரன் மட்டும்தான் உசுரோட இருக்கலாம்போல இருக்கு. நெலத்த, வீட்ட அடமானம் வச்சித்தான் செலவு செஞ்சன். ஒன்னோட சத்தியம் என்னோட காட்டயும், வீட்டயும் மீட்டுத் தருமா?” என்று கேட்ட வேகத்தில் ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்தான் ராஜன்.


தங்கள் நோக்கத்தையும் கொள்கையையும் நிறைவேற்றுவதற்காகக் கட்சிகளை ஆரம்பித்துள்ளதாகச் சொல்லும் வலதுசாரி அரசியல் கட்சிகள், வாக்குகளை வாங்கும் அணிதிரட்டலில் (Polarization ) மதத்தையும் சாதியையும் முக்கியமான கருவிகளாகப் பயன்படுத்துவதைக் கைவிடப் போவதில்லை. ஆனால் அவைதான் வளர்ச்சி, சுத்தமான நல்லாட்சி, நேர்மையான தலைமை, ஊழலற்ற நபர்களைக் கொண்ட நிர்வாகம் என்றும் பேசுகின்றன. இந்த முரண்களையெல்லாம் ஒரு சிறுகதைக்குள் பேச முடியும் என்பதைக் காட்டியிருக்கிறார் இமையம்.

ஓட்டுப்போடுவதற்கு வாக்கு ஒன்றுக்கு 5000 ரூபாய் கொடுத்தவன் தோற்றுவிடுகிறான். 100 ரூபாய் கொடுத்தவன் வெற்றிபெறுகிறான். காரணம் தனது சாதிக்காரர்கள் குறைவு என நினைத்தவன் அதிகமாகப் பணம் கொடுக்கிறான். தன் சாதிக்காரர்கள் தான் இங்கே அதிகம் அதனால் அதிகம் பணம் தரவில்லை என்ற கணக்கில் நிகழ்ந்து முடிகிறது ஒரு தேர்தல். தோற்றவன் கொடுத்த பணத்தை - ஓட்டுக்கு ரூ 5000/ - திரும்பக் கேட்பதில் தொடங்கும் கதை, ஊராட்சித் தேர்தல்களில் - குறிப்பாகத் தனித் தொகுதிகளில் சாதி வேலை செய்யும் விதத்தை விரிவாகப் பதிவு செய்துள்ளது.

தேர்தலுக்கு மனு செய்த நாளிலிருந்து காலையிலயும் சாயங்காலமும் ஒவ்வொரு வீடாகப் போயி “ஊர்ல நாம்ம ஆயிரம் தலக்கட்டு. அவன் மூணு வீட்டுக்காரன், அவன் வீட்டுலப் போயி ஆயிரம் தலக்கட்டுக்காரன் கையக் கட்டிக்கிட்டு நிக்கணுமா?” என்று கேட்டதோடு ஒவ்வொரு வீட்டாரிடமும் விழுந்து கும்பிட்டான். ஆரம்பத்தில் முடியாது என்று சொன்னவர்கள்கூட “போக்கடா பயதான். பேச்சுக்குக் கட்டுப்படாதவன்தான். என்னா செய்யுறது? நம்ப ஆளுல வேற யாரும் நிக்கலியே. கால்ல விழுந்து கும்புடுறான். காசும் கொடுக்கிறன்னு சொல்றான். நம்பாளுல ஒருத்தன் இருக்கட்டுமே” என்று ஊருக்குள் நாளாக நாளாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

காட்டிலிருந்து குச்சிக் கட்டுடன் வந்த வாலாம்பாள் கிழவி அலமேலு வீட்டின் முன் நின்றுகொண்டிருந்த ராஜனைப் பார்த்து “என்னாங்க இங்க நிக்குறிங்க?” என்று கேட்டாள். அதற்கு வேண்டா வெறுப்புடன் “சும்மாதான்” என்று சொன்னான் ராஜன்.

“காட்டுல மேயப்போன ஆடு மாடுவுளயெல்லாம் ஆளு வச்சி ரெண்டு நாளா துரத்தியடிக்கிறிங்களாமே. இது நல்லதுக்கா?”

“வேலயப் பாத்துக்கிட்டு போ” என்று அசிங்கப்படுத்துவதுபோல் சொன்னான்.

“எலக்சன கொண்டாந்து ஊர ரெண்டாக்கிப்புட்டானுவ” என்று சொல்லிவிட்டுப் போனாள் வாலாம்பாள். அப்போது மேலத்தெருவின் கடைசி வீட்டு குப்புசாமி வந்தார்

 

சமகாலத்தேர்தல் அரசியலைப் பொருண்மையாக்கி எழுதப்பெற்ற இந்தக் கதைக்குள் அரசியல் அங்கதமும் தனிமனித உளவியலும் முரண்படும் இடங்களைத் தொட்டுள்ளார். இந்திய அரசியலில் வெற்றிபெற எழுச்சியும் புரட்சியும் வேண்டும் என்று சொன்னார் ரஜினிகாந்த். உண்மை நிலவரத்தை அவருக்கு யாரோ எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்; ஒதுங்கிக் கொண்டார். ஆனால் அவரது நண்பர் கமல்ஹாசன் தொடர்கிறார். கொள்கையும் கோட்பாடும் வேண்டும் என்கின்றன பாரம்பரியமான ஊடகங்கள். இவையெதுவும் கவைக்குதவாது. சாதிப் பெரும்பான்மை மட்டுமே தீர்மானகரமான சக்தி என அடித்துச் சொல்கிறது இமையத்தின் கதை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்