சில குறிப்புகள் : சினிமா -பயணக்குறிப்பு - விருது- விவாதம் - ஒரு எதிர்பார்ப்பு.


இந்தக்குறிப்புகள் எல்லாம் விரிவாக எழுதப்பட்டிருக்க வேண்டியவை. மனச்சோம்பலும் நிலைகொள்ளாத இருப்புமாக நாட்கள் நகரும்போது எழுதுவது இயலாமல் போகின்றது.
ரோந்து- காவல்பணியின் அகமும் புறமும்

அரசுத்துறைகளில் பணியாற்றும் தனிமனிதர்களின் புறவாழ்க்கையை மட்டுமே இந்திய சினிமா அதிகம் காட்சிகளாக்கியிருக்கின்றன. அதிலும் காவல்துறைப் பணியாளர்களின் குடும்பவாழ்க்கையை அதிகம் காட்டுவதில்லை. ஆனால் ரோந்த் என்ற மலையாள சினிமா இரண்டு காவல்துறைப் பணியாளர்களின் அகவாழ்க்கையையும் புறவாழ்க்கையும் கூடுதல் குறைவில்லாமல் காட்சிப்படுத்திக் காட்டியிருக்கிறது.

இந்திய சினிமாவில் காட்டப்படும் 'காவல்துறை' மாதிரிகள் சில உண்டு. நேர்மையும் கடமையும் தவறாத உயரதிகாரிகள். இல்லையென்றால் அதிகார வர்க்கத்திற்கும் பணக்காரர்களுக்கும் மறைமுகமாக உதவித் தனது விசுவாசத்தைக் காட்டிச் சொந்த வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்பவர்கள். இதேபோல் சாதாரணக்காவலர்களிலும் நேர்மையானவர்கள் இருக்கிறார்கள் எனக்காட்டுவார்கள். இல்லையென்றால் உப்புக்குச் சப்பாணியாக காவல் நிலையத்தில் ஓடிக்கொண்டிருப்பவர்களாகக் காட்டுவார்கள். இவர்களெல்லாம் வீட்டில் இருக்கும் நேரம், குடும்பத்தினரிடன் பாடுகளுக்கு முகம் கொடுக்கும் விதம் எதுவும் இடம்பெறாது.

இயக்குநர் ஷாகிர் கபீரின் ஊர்சுற்றும் காவல் பணி ( ) முற்றிலும் விலகிப்போய் இரண்டு காவல் பணியாளர்களின் குடும்பவாழ்க்கையையும் காவல்பணி வாழ்க்கையையும் சம அளவில் கலந்து தந்துள்ளார். ஓர் இரவுக் காவலுக்குரிய நேரம் தான் மொத்தப்படமும். இருவரும் பணிக்காக வீட்டிலிருந்து கிளம்பும் சூழலை - குடும்ப உறுப்பினர்களோடு உள்ள சூழலைக் காட்டிவிட்டுப் பணியிடத்தில் தொடர்வது எனக் காட்சிகள் தொடங்கி, ஒரு ரோந்துக்காலத்தை முடித்த ஒரு மணிநேரத்தில் நடக்கும் திருப்பம் காவல் துறையில் கோரமுகத்தைக் காட்டுவதோடு முடிகிறது.

காவல் நிலையத்திலிருந்தும், அதற்கும் மேலுள்ள தகவல் தரும் மையத்திலிருந்தும் வரும் உத்தரவுகளுக்கும் தகவல்களுக்கும் ஏற்பச் சுற்றிச்சுற்றிப் பணியாற்றும் ரோந்துப் பணிக்குச் செல்லும் வாகனத்தில் செல்லும் இருவரில் ஒருவர் புதியவர்; காரோடும் காவலர்(ரோஷன் மேத்யு. இன்னொருவர் நீண்ட அனுபவம் கொண்ட காவல் ஆய்வாளர்(திலீஷ் போத்தன்) . இந்த முரணிலை உருவாக்கும் சின்னச்சின்ன அதிகாரத்துவ உறவுக்குள் இருக்கும் பிணக்குகளும் உதவிக்கொள்ளும் குணங்களும் மிகையின்றிக் காட்டப்பட்டுள்ளன. இருவருக்குமே குடும்பத்து உறுப்பினர்களின் அருகிருக்க வேண்டிய நிலை.ஆனால் வேலையில் கடமை தவறாமல் ஈடுபடும் நெருக்கடி. தாங்களே மேற்பார்வை செய்யும் சட்டம் ஒழுங்குப் பாதுகாப்போடு, துறைசார்ந்த தொலைபேசிக் கருவியில் வரும் உத்தரவுகளுக்கேற்பச் செயல்படும் நடைமுறை. போக்குவரத்து ஒழங்கு, காணாமல் போன மனநோயாளியைக் கண்டுபிடித்துத் தருதல், தெருவோர விபச்சாரத்தைக் கண்டுகொள்ளாமல் ஒதுங்குதல், குடும்பவன்முறை எனப் பலவற்றைக் கடக்கிறார்கள்.

வழக்கமான ரோந்துப் பணிக்குள் ஒரு காதல் இணையின் தப்பி ஓட்டம் முதன்மை முடிச்சாகவும் சந்தேகத்துக்குரியதாகவும் மாறுகிறது. அவர்களுக்குப் பாதுகாப்பளித்துக் கடமையைச் செய்யும்போது எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்கின்றன. பெண் வீட்டாரால் ஏவிவிடப்பட்ட கும்பலால் விரட்டப்பட்ட இணையில் காதலன் மரணம் அல்லது கொலை இவர்களுக்கு எதிராகத் திருப்பப்படுகிறது. கடமையைச் செய்த காவல் பணியாளர்கள் குற்றவாளிகளாக மாற்றப்படுகிறார்கள். அந்தக் கொலை "சாதி ஆணவக்கொலை; காவல் துறையே கொலையாளிகளைத் தப்பிக்க உடந்தை" என்பதாகச் செய்தி பரவுவதால் ஏற்படும் முடிவற்ற துயரம் என்பதோடு படம் நிறைவடைகிறது.

சாதி ஆணவக்கொலைகளின் பின்னணியில் காவல் துறையின் மீது கரிசனம் உண்டாகும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்பதை மனம் ஏற்க மறுத்தாலும், படத்தை உருவாக்கியுள்ள விதத்தில் குறைகள் அதிகம் இல்லை.குறைவான பாத்திரங்களைக் கொண்டு காவல் பணிக்குள் இருக்கும் சில அடுக்குகளைக் காட்டியிருக்கும் ரோந்த் மிகையற்ற காட்சிகள், நடிப்பு, இரவுநேரக் காவல் என்பதால் ஓடிக்கொண்டே இருக்கும் காவல்துறை வாகனம் எனக் கச்சிதமாகச் செய்யப்பட்டுள்ளது . நம்பத்தகுந்த காட்சிகளால் ஆன நடப்பியல் சினிமா.
வாழும் நகரங்கள்


பெங்களூர் நகரத்தின் தட்பவெப்பம்(20-25 C) சாலையோர மரங்கள், அவ்வப்போது வந்துபோகும் மழையின் பார்வை, நவீனத்துவத்தை உள்வாங்கிய மனிதர்கள் என ஒவ்வொன்றாக அனுபவிக்கும்போது இந்த நகரத்தில் வாழ்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று தோன்றுகிறது. ஆனால் வாகனங்களளில் ஏறி அமர்ந்து பயணம் செய்யும்போது ஏற்படும் தாமதங்களையும் நெருக்கடியையும் நினைத்தால் மனிதர்கள் வாழ்வதற்கான நகரமாக இல்லாமல் ஆக்கிவைத்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. நேற்றிரவு 9 கி. மீ. தூரத்தைக் கடந்து ரயிலடிக்கு வந்து சேர 90 நிமிடங்கள் ஆகிவிட்டது. இத்தனைக்கும் ஓட்டுநர் முதன்மைச்சாலைகளைத் தவிர்த்து மாற்றுப்பாதைகளில் புகுந்து புகுந்து வந்தார். பெங்களூரு விட்டுவிட்டது

புக்பிரம்மா அமைப்பாளர்களின் பொறுப்புணர்வு பாராட்டத்தக்க ஒன்று. நமது வாழிடத்திலிருந்து நிகழ்விடம் வரை போவதற்கும் திரும்புவதற்கும் போக்குவரத்தை முழுமையாகச் செய்தார்கள். நிகழ்வு நடந்த புனித ஜான் கலை அரங்கம், பெங்களூரு -கோரமங்களாவில் இருக்கும் புகழ்பெற்ற மருத்துவக்கல்லூரியின் அரங்கம் அங்கு தங்குவதற்கு நல்லதொரு தனியறையைத் தந்தார்கள்.விழா நடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக இன்னொரு நாள் தங்கவேண்டும் என்று கேட்டபோது, ‘தங்கலாம்; ஆனால் உணவு ஏற்பாடு செய்ய இயலாது’ என்றார் போக்குவரத்தையும் தங்குமிடங்களையும் கவனித்துக்கொண்ட சுவாதி. அத்துடன் ஒருநாள் கழித்துக் கிளம்பும் என்னை ரயிலடிக்கு அழைத்துச் செல்ல வாடகைக்காரையும் ஏற்பாடு செய்துவிட்டிருந்தார். பயண நேரத்திற்கு முன்னால் 3 மணி நேரத்திற்கு முன்னால்- அவர் ஏற்பாடு செய்த காரின் ஓட்டுநர் அழைத்துச் சொன்னபோதுதான் எனக்கே தெரியும். அதனால் நல்ல ஓய்வுக்குப் பின் கிளம்பி வந்தேன்.

மதுரையிலிருந்து பெங்களூரு – பெங்களூரிலிருந்து மதுரை எனப் போகவும் வரவும் ஒரே ரயிலில் தான் முன்பதிவு. மூன்றாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டியில் முன்பதிவு செய்து அனுப்பினார்கள். அந்த ரயில் தூத்துக்குடியிலிருந்து மைசூரு போகும் ரயில். இடையில் இருக்கும் முதன்மை நகரத்தில் மட்டுமல்லாது நகராட்சிகள் என்று சொல்லத்தக்க சிறுநகரங்களில் கூட நின்று போகின்றது. நானிருக்கும் திருமங்கலத்திலும் நின்றுபோகும் என்பது முதலில் தெரியாததால் பயணச்சீட்டை மதுரையிலிருந்து போடச் சொல்லிவிட்டேன். பின்னர் திருமங்கலத்திலிருந்து ஒரு முன்பதிவில்லாத சீட்டு வாங்கிக் கொண்டு திருமங்கலத்திலேயே மாலை -7.36 க்கு ஏறினேன்; திரும்பவரும்போதும் மதுரையில் ஒரு முன்பதிவில்லாச் சீட்டை வாங்கித்திரும்பவும் ஏறித் திருமங்கலத்தில் காலை 8.00 மணிக்கு வந்து இறங்கிக்கொண்டேன். மொத்தமாக 11 மணி நேரப்பயணம். போகும்போதும் வரும்போதும் எனக்கான இருக்கை 72 பேர்கொண்ட ரயில் பெட்டியில் 1முதல் 8 வரை உள்ள பகுதியில். அந்தப் பகுதியிலும் 65 -72 பகுதியிலும் இருக்கை கிடைப்பது பெரிய தண்டனை. குளிரூட்டப்பட்ட பெட்டிகளுக்குள் நுழைபவர்களும் வெளியேறுபவர்களும் திறந்து மூடும்போது ஒளியும் சத்தமும் தூக்கத்தைக் கெடுத்துவிடும். புக்பிரம்மா பயணம் தூக்கம் தொலைந்த பயணமாக ஆகிவிட்டது.


வெ.வேதாசலத்துக்குத் தூரன் விருது

இன்று தமிழ் விக்கி - தூரன் விருது பெறும் தொல்லியல் ஆய்வாளர் வெ.வேதாசலம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்த்தைத் தெரிவிக்கும்போது நாற்பது ஆண்டுகளுக்கு முந்திய நினைவலைகளுக்குள் செல்கிறது என் மனம்.வெ.வேதாசலத்துடனான எனது சந்திப்பு, எனது வாழ்வில் நடந்த பெருந்திருப்பம் ஒன்றோடு தொடர்புடையது.

இளங்கலை , முதுகலைப் படிப்புக் காலத்தில் நான் நவீனத்தமிழ் இலக்கியங்களை வாசிப்பவனாகவும், அங்கிருந்து கவிதை, புனைகதை எழுதும் எழுத்தாளனாகவும் ஆவேன் என்ற தீர்மானம் கொண்டவனாகவுமே நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எதிர்பாராத திருப்பங்களால் முனைவர் பட்ட ஆய்வாளனாக ஆனபோது எல்லாம் மாறிப்போனது. நவீனகாலத்து இலக்கியங்களை வாசித்தவன், பின்னிடைக்கால இலக்கியங்களை வாசிப்பவனாக மாறினேன். அந்த மாற்றத்தின்போது சந்தித்த சில ஆய்வாளர்களில் வெ.வேதாசலமும் ஒருவர்.

தமிழக வரலாற்றை எழுதுவதற்கு மரபான கல்வெட்டுகள், செப்பேடுகள், பயணிகள் குறிப்புகள் போன்றனவற்றைத் தாண்டி தமிழ் இலக்கியங்களின் பயன்பாடும் தேவை என்ற கருத்தோட்டம் வலுப்பெற்றிருந்த காலகட்டம் அது. அந்தக் கருத்தோட்டங்களை உள்வாங்கிய ஆய்வுகளைச் சிலர் செய்திருந்தனர். சங்க காலம் தொடங்கிப் பிற்காலப் பாண்டியர்கள் காலம் வரையிலான இலக்கியங்கள் வாசிக்கப்பட்டுச் சமூக வரலாற்றுத்தன்மை கொண்ட ஆய்வுகள் நூல்களாகவும் கட்டுரைகளாகவும் வந்திருந்தன. அந்த வரிசையில் பின்னிடைக்காலமான நாயக்கர்களின் காலத்துத் தமிழ் இலக்கியங்கள் வாசிக்கப்படவில்லை; தரவுகளாகக் கொள்ளப்படவில்லை என்ற நிலை இருந்தது. எனவே எனது முனைவர் பட்ட ஆய்வுத்தலைப்பாக "நாயக்கர்கால இலக்கியங்களும் சமூகவரலாறும்" என்பதுபோன்ற ஒரு தலைப்பை வைத்துக்கொண்டு ஆய்வைத் தொடங்கு எனத் திசைமாற்றிவிட்டார் எனது நெறியாளர் பேரா.தி.சு.நடராசன். அதே நேரம் முழுமையான வரலாற்றுத்துறை ஆய்வாகவும் இருக்கக்கூடாது; இலக்கியத்துறை ஆய்வாகவும் இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். ஏனென்றால் பிற்காலத்தில் ஆசிரியப்பணி வாய்ப்புகளை நோக்கும்போது வரலாற்றாய்வு எனக்கருதப்பட்டு விலக்கிவைக்கப்படும் சாத்தியங்கள் உண்டு என்ற எச்சரிக்கையின் பாற்பட்டது அந்த வலியுறுத்தல். அதனால் பின்னிடைகால / நாயக்கர்கால இலக்கியங்களைச் சமுதாயவியல் அணுகுமுறையில் வாசித்து விவாதிக்கும் ஆய்வாக எனது ஆய்வைச் செய்து முடித்தேன். அந்த ஆய்வுத்தலைப்பை முடிவு செய்தபோதும், பின்னர் ஆய்வுக்கான வரலாறு, தொல்லியல் நூல்களைத் தேடியபோதும் உதவியவர்களில் ஒருவர் வெ.வேதாசலம்.

இன்று அவருக்குத் தமிழ் விக்கி - தூரன் விருது வழங்கும் மேடையில் இருக்கப்போகும் பேரா.ஒய்.சுப்பராயலும் அப்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளம் விரிவுரையாளர். அவரைப் பார்க்க வேதாசலம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வருவார். அவரை மட்டும் இல்லாமல் கல்வெட்டு, மொழியியல் ஆய்வுகளில் விருப்பமும் ஆழமும் நிரம்பிய பேரா. விஜயவேணுகோபாலையும் சந்திப்பார். எனது நெறியாளரையும் சந்திப்பார். அவரது வருகையின்போதும் சந்திப்புகளின்போதும் நானும் உடனிருப்பேன். இளம் ஆய்வாளர்கள் நூல்களை வாசித்துத் தெரிந்துகொள்ளும் தரவுகளைத் தாண்டி அறிஞர்களைச் சந்தித்துப் பேசும்போது ஆய்வுமுறையியலும் ஆய்வுக்கான நோக்குநிலைகளும் உருவாகும். அப்படித்தான் அந்தச் சந்திப்புகள் இருந்தன. இந்தச் சந்திப்புகளின்போதும் விவாதங்களின்போதும் நான் வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்தேன். ஏனென்றால் அப்போதும் என்னை இலக்கியத்துறை ஆய்வாளன் என்றே நினைத்துக்கொண்டேன்.
எனது முனைவர் பட்ட ஆய்வின்போது பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த இந்தச் சந்திப்புகள் மதுரை நகரத்தின் தெருக்களிலும் விவாதமேடைகளின் போதும் நடக்கும். மதுரை திருமலைநாயக்கர் மகாலில் இருந்த தொல்லியல்துறை அலுவலகத்தில் பணியாற்றிய சத்தியமூர்த்தி போன்றவர்களும் அந்த உரையாடல்களில் இருப்பார்கள். மதுரை வரலாற்றுக் கழகம் போன்ற தன்னார்வக் கூட்டங்களின்போது சந்திப்போம். அதேபோல் மதுரையில் உள்ள மகாத்மா காந்தி அருங்காட்சியகமும் சந்திக்கின்ற இடங்களில் ஒன்றாக இருந்தது.

ஆய்வாளனாக 1983 இல் நுழைந்தபோது கிடைத்த அவரது அறிமுகம் 1989 இல் பாண்டிச்சேரிக்கு - நாடகத்துறையில் பணிக்குச் சேரும்பொருட்டுச் செல்லும்வரை தொடர்ந்தது. எனது பணி ஓய்வுக்குப்பின் மதுரைக்குத் திரும்பிய நான் ஒன்றிரண்டு தடவை அவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்திருக்கிறேன். சந்திக்கும்போதெல்லாம் எனது முனைவர் பட்ட ஆய்வுநூலின் தன்மையையும் அதன் தரவுகள் வரலாற்றுக்குப் பயன்படும் விதத்தையும் சொல்லிக்கொண்டிருப்பார். அப்போது எனக்கு ஒரு குற்றவுணர்வும் தோன்றும். முனைவர் பட்ட ஆய்வுப்புலத்திற்குள்ளேயே நிற்காமல் நாடகம், சினிமா, இலக்கியவாசிப்பு இலக்கியத் திறனாய்வு என வழிமாறிப் போய்விட்டேனே என்ற குற்றவுணர்வு அது.

வெ.வேதாசலம் தொல்லியல், வரலாறு என ஒற்றைப் புலத்தில் ஆழமாகத் தனது புலமையைத் தக்கவைத்தவர். அதுபோன்ற புலமையாளர்கள் அந்தத் துறையின் கண்டுபிடிப்புகளுக்குப் பொறுப்பானவர்கள். அவரைக் கண்டறிந்து தொல்லியல் துறை விருதை வழங்கியுள்ள விஷ்ணுபுரம் இலக்கியவட்டமும் தமிழ்விக்கி- தூரன் விருதுக்குழுவும் பாராட்டுக்குரியது. இன்று விருதளிப்பு நாள். ஈரோட்டில் நடக்கிறது. பக்கமாக இருந்தால் நேரில் சென்று பங்கேற்றிருக்கலாம்.

ஒரு மாதத்திற்கு முன்பு விருதை அறிவிப்புச் செய்தபின் அவர்கள் அவரை - அவரது வாழ்க்கைப் பின்னணியை-களப்பணிப்பங்களிப்புகளை - நூல்களை எல்லாம் அறிமுகப்படுத்தியும் தொகுத்தும் வெளியிட்டுக் கொண்டே இருந்தனர். இந்த முன்னெடுப்புக்காக எழுத்தாளர் ஜெயமோகனும் பாராட்டப்படவேண்டியவர்.

இந்தியத் தன்னிலைகளின் குரல்கள்

தனது கணவர் ரெங்கராஜனைப் பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்துள்ள சுஜாதாவின் நேர்காணலிலும் சரி, தன் தாய் பேரா. வே. வசந்தி தேவியைப் பற்றிய உண்மைகளைப் பேசுவதாகச் சொல்லியிருக்கும் மகன் நரேன் சுப்பிரமணியனும் சரி அவர்களைக் குடும்ப உறுப்பினர்களாக மட்டுமே அறிந்திருக்கிறார்கள் என்பது வெளிப்பட்டுள்ளது.

இந்தியக்குடும்பங்களின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அக்குடும்பத்து மனிதர்களின் அக வாழ்க்கையில் அவர்களின் இருப்பை மட்டுமே கவனித்து கருத்தை உருவாக்கிக்கொள்கிறார்கள். மதிக்கிறார்கள்; வெறுக்கிறார்கள். நினைவுகளாகப் பதிவு செய்கிறார்கள். அவர்களின் புற வாழ்க்கையில் அவர்களின் இருப்பென்ன? இயல்பென்ன? சவால்கள் என்ன? சாதனைகள் என்ன? என்பதைக் கவனிப்பதே இல்லை. அதைப்பற்றி அறியும் ஆர்வமும் இருப்பதில்லை. பொது வாழ்க்கையில் சவால்களைச் சந்தித்துச் சாதித்தவர்களும் குடும்ப உறுப்பினர்களோடு உரையாடிச் சொல்லிக்கொள்வதும் குறைவு.

எழுத்தாளர் ரெங்கராஜனின் மனைவி 'சுஜாதா' இப்போதும் அப்போதும் ஒரு குடும்பத்துப் பெண்ணாக நின்றே தனக்குத் தன் கணவரைப் பற்றித் தெரிந்ததைச் சொல்கிறார். அதில் பெரிய வன்மமோ கோபமோ இருப்பதாகப் படவில்லை. ஆனால் தன்னை ஒரு நாடு கடந்த - பன்னாட்டு மனிதனாகச் சொல்லிக்கொண்ட நரேன் சுப்பிரமணியனின் குறிப்பில் வெளிப்படுவது அறியாமை.

கல்வி, பணியிடச்சவால்கள், பொதுத்தள ஈடுபாடு, அரசியல் கருத்துகளைப் பேசிய ஆளுமை, முடிவெடுத்து முன்னேறிச் செல்ல வேண்டியது பெண்களின் வாழ்வியலில் தேவையான ஒன்று என்பதற்கு முன்மாதிரியாக இருந்த தனது தாயைப் பற்றித் தெரிந்துகொள்ளாத ஆணாக அவர் வெளிப்பட்டுள்ளார். இருவரிடமும் வெளிப்படுவது இந்திய ஆண்மையக் குடும்பத்து உறுப்பினர் என்ற தன்னிலையில் மட்டுமே.

என்பதே இப்போதும் எனது கணிப்பு. ஆனால் அவ்வப்போது அவர் வெளிப்படுத்தும் செயல்பாடுகள், நடைமுறைகள், முறைமைகள் மீது நம்பிக்கை இழக்கவும் இல்லை. இன்றைய சூழலில் ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான ஒரு பிம்பம், பொருத்தமான சொற்களோடு பேசும் குரல் அவர் தான். ஆனால் அவர் பின்னணியில் செயல்படாத கட்சி ஒன்று இருக்கிறது. தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுக்காத மாநிலத்தலைமைகள் கொண்ட அந்தக் கட்சியை வைத்துக்கொண்டு ராஷ்டிரிய சுயம் சேவக்குகளால் இயக்கப்படும் பா.ஜ.க. வைத் தோற்கடிப்பதும் வெல்வதும் ஒருவிதக் கனவுதான். ஆனால் கனவு காணும் மனிதர்கள் தேவைப்படுகிறார்கள்.

பாரதிதாசனை முன்வைத்து நவீனத்துவம்

தமிழ்க்கவிதைக்குள் நவீனத்துவத்தைப் பேசியவர்களுக்கு அதன் வெளிப்பாட்டுத்தன்மை மட்டுமே முக்கியமானதாக இருந்தது. இருத்தலின் பிரச்சினைகளில் தனிமையும் நம்பிக்கையின்மையும் காரணங்கள் சொல்ல முடியாத வாழ்வின் திருப்பங்களும் முதன்மையான உரிப்பொருளாக - பாடுபொருளாக நினைக்கப்பட்டன. அவற்றை எழுதுவதே நவீனத்துவத்துவம் என்பது நிலை நிறுத்தப்பட்டது. இந்த நிலைநிறுத்தலில் சமூகமாக - கூட்டமாக வாழ்வதின் பாடுகளும் சிக்கல்களும் பேசப்படுவதை நவீனத்துவத்திற்கு வெளியே வைத்தார்கள் தமிழில் நவீனத்துவம் பேசியவர்கள். ஒரு சமூகத்தை முன் நகர்த்தும் லட்சியவாத எதிர்ப்பு அதற்குள் இருந்தது என்பதை மறைத்துவிடும் தந்திரங்கள் உண்டு என்பதை விரிவாக விளக்கிச் சொல்லும் திறனாய்வுப்பார்வைகள் முன்னெடுக்கப்படாததால் அந்த நிலை நிறுத்தல்கள் உறுதிப்பட்டுவிட்டன. இடதுசாரி இலக்கியத் திறனாய்வியலும் திராவிடக் கலைப்பார்வையும் தயங்கி நின்ற இடங்கள் இவை.

தயக்கத்தை உணர்ந்தோ, எதிர்நிலையினரின் தீவிரச்செயல்பாடுகளின் மீது ஏற்பட்ட அச்சத்தின் காரணமாகவோ அரசின் முன்னெடுப்புகள் கவனத்திற்குரியனவாக இருக்கின்றன. குறிப்பாகச் செம்மொழி நிறுவனம் சார்ந்து இயங்கும் தமிழியல் ஆய்வாளர்களும் வல்லுநர்களும் வேதமரபுதான் -சம்ஸ்கிருதத் தொடக்கம்தான் ஒட்டுமொத்த இந்தியமரபு என்பதைக் கவனமாக முன்வைக்கும் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறார்கள். அகத்தியமுனிவரைத் தமிழின் மூலத்திற்கான காரணமாக்ச் சொல்லுதல், வள்ளுவரின் குறட்பாக்களில் இந்துமத ஆதரவுக்கருத்துகளைத் தேடிக் காவிச்சாயம் பூசுதல் என்பதில் தொடங்கி, பாரதியையும் வள்ளலாரையும் அவற்றின் நீட்சியாக நிலைநிறுத்துதல் நடக்கிறது.

இந்தப் போக்கைத் தடுத்து நிறுத்தும் ஆளுமையாக நிறுத்தக்கூடிய -எதிர்நிலைச் சொல்லாடல்களைத் தரக்கூடியவர்களாக இருப்பவர்கள் தொல்காப்பியரும் பாரதிதாசனும் என்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். கண்டறிந்ததின் விளைவே பாரதிதாசனை முன்வைத்துத் தமிழ்வாரவிழாக் கொண்டாட்டங்கள். அடுத்து வரப்போகும் தொல்காப்பியச் சுழல் அரங்குகள். இந்தக் கவனத்தையும் நிதி ஒதுக்கீட்டையும் சரியாகப் புரிந்து கொண்டு கல்விப்புலத்தினர் வினையாற்றவேண்டும். நான் பணியாற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறை அதனை முன் கையெடுத்துத் தொடங்கிவிட்டது. நேற்றுத் தொடங்கிய இரண்டு நாள் உரையரங்குகள் அதனை நோக்கிப் பேச்சுகளை முன்வைத்தன என்பதைக் கவனித்தேன்.

எனது உரையில் பாரதிதாசனை லட்சியவாதத்தை உள்ளடக்கிய புனைவியலின் முதன்மையான ஆளுமையாக முன்வைத்ததோடு, சி.கனகசபாபதி முன்வைத்த புதுச்செவ்வியல் கவிஞ்ன் பாரதிதாசன் என்பதையும் முன்வைத்துப் பேசினேன். இதிலிருந்து பாரதி தொடங்கிய நவீனத்துவத்தின் இணையான இன்னொரு கிளை பாரதிதாசன் என்பதை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். பாரதிதாசனின் கவிதை நாடகங்களை மையமிட்ட எனது உரைக்குப் பெண்ணுலகு என்று தலைப்பிட்டிருந்தாலும் அந்தத்தலைப்பில் அவர் எழுதிய கவிதைகளுக்குள் நிற்கவில்லை. தொடர்ந்து எழுதியும் பேசியும் பாரதிதாசன் முன்வைத்த நவீனத்துவப்பார்வையின் சமூகப்பாத்திரத்தை விவாதிக்க வேண்டும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுஜாதா - நினைவுகளில் நிற்பார்

திறந்தநிலைப் பொருளாதாரம்: தேசிய,திராவிட இயக்கங்கள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்