சரவணகார்த்திகேயனின் கதையாக்கம் – பீத்தோவனின் சிம்ஃபொனியை முன்வைத்து

சரவண கார்த்திகேயனின் அண்மைக்காலச் சிறுகதைகளை அவ்வப்போது வாசித்த நிலையில் அவரது எழுத்துகள் பற்றிய சித்திரம் ஒன்று எனக்குள் உருவாகியிருக்கிறது. அச்சித்திரம் பத்தாண்டுகளுக்கு முன்பு வாசித்த, அவரது தொடக்கக்காலச் சிறுகதைகள் வழி உருவான சித்திரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் எழுதிய கதைகள் உடல், மனம் என்ற இணைவையும் விலகலையும் முதன்மையான சொல்லாடலாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன. உடல்கள் :உருவமும் அருவமும்

காமம், பாலியல் விழைச்சு, பெண் –ஆண் உடல்கள், ஒன்று இன்னொன்றின் மேல் கொள்ளும் மோகம், அதன் வழியாகக் கிடைக்கும் கிளர்ச்சி அல்லது திளைப்பு போன்றனவற்றை முதன்மைச் சொல்லாடல்களாக மாற்றியிருக்கிறார். மனிதர்களின் உடலுக்கு இவை எப்படியான தேவை?கிடைக்கும் நிலையிலும், கிடைக்காத நிலையிலும் மனித உடல்கள் எப்படி இயங்குகின்றன? என்று விசாரணை செய்கின்றன இந்தக்கதைகள்.

எழுத்தில் இத்தகைய விசாரணைகளை எப்படி நடத்துவது என்ற தயக்கத்தில் நடப்பியல் தளத்தைக் கைவிட்டுவிட்டு அறிவியல் புனைவு, கனவுலகச் சிக்கல்கள், மெய்ந்நிகர் வெளி, மீமெய்யியல் விசாரணை போன்ற தளங்களில் விவாதிப்படுத்தி எழுதியிருக்கிறார். அதன் காரணமாக அந்தக் கதைகள் எல்லாம் பல நேரங்களில் நடப்பியலிலிருந்து விலகி,செய்யப்பட்ட கதைகள்” என்பதான தோற்றத்தைத் தந்து கொண்டே இருக்கும். இப்படியான கதைகளை விவாதிப்பதற்கான விமரிசன மொழியைக் கண்டுபிடித்து எழுதும் முயற்சியும் அதனால் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.

*******

மனிதர்கள் ஒவ்வொருவரும், ‘நான் எதற்காக இங்கே இருக்கிறேன்?’ என்ற கேள்வியை அவரவர் எல்லைக்குள் நின்று கேட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள். அது இருத்தலியல் கேள்வி என்பதாகத் தத்துவம் சொல்கிறது. விடை தெரிந்தவர்கள் சொல்லிப் பார்க்கிறார்கள்; விடை தெரியாதவர்கள் வினாவை எழுப்பிக்கொண்டே இருக்கிறார். இப்படிக் கேள்விகேட்டு மனதைக் குழப்பிக் கொள்வது மற்ற வேலைகளைப் பாதிக்கும் என்று தீர்மானிப்பவர்கள் அவர்களுக்குக் கிடைத்த வாழ்க்கையை அல்லது எதிர்கொள்ளும் வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறார்கள். அவர்களை ஞானிகள், எழுத்தாளர்கள், சாதாரண மனிதர்கள் என்று வகைப்பிரித்து அடையாளப்படுத்திக்கொள்வது நடப்பு நிலை.

மனித அடையாளம் என்பது உடலா? மனமா? என்ற ஆன்மீக/ தத்துவக்கேள்வியை எழுப்பி விசாரணை செய்யும் ஒருவர் ‘நானொரு படைப்பாளி; உருவாக்கவும் படைத்தளிக்கவும் திறன் கொண்ட அமானுஷ்ய சக்திகொண்ட ஆள்’ என்றே நம்பும்போது தன்னைக் கலைஞனாக/ எழுத்தாளனாக நினைத்துக்கொள்கிறார். ஆனால் தனது படைப்பூக்கத்தை அறியாத மூடர் கூட்டத்திற்குள் வாழ நேர்ந்த அவலச்சூழலால் ஏதோவொரு வேலையைச் செய்துகொண்டிருக்க வேண்டியிருக்கிறது என்று சமாதானம் செய்துகொண்டு நகர்ந்துகொண்டிருக்கிறார். இது எழுத்து/ கலைஞர்களுக்குள் அலையும் மனம் மட்டுமல்ல. எல்லாவகை மனதிற்குள்ளும் இப்படியோர் ஊடாட்டம் இருக்கவே செய்யும். ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் சமைத்துப் போடவா? என்னை உருவாக்கி அனுப்பினார் கடவுள் என்ற கேள்வி இல்லாத பெண் எங்கே இருக்கப்போகிறாள்? அவள் தனது கேள்வியை எங்கும் பதிவுசெய்யும் விதமாகப் புலம்பாமல் இருக்கலாம். ஆனால் எழுத்துக்காரர்களுக்கு எழுதும் திறன் இருக்கிறதென்பதால் எழுத்தில் எழுதிக் கேட்டுக் கொள்கிறார்கள்.
 
ஒவ்வொருவருக்கும் அவர்கள் கேட்கும் சாராயக்கலவையை ஊற்றிக் கொடுத்து விட்டு அவர்கள் தரும் ‘சிறுபரிசில்தொகை’ (டிப்ஸ்) யைப் பெறுவதுதான் எனது வாழ்க்கை வட்டமா? என மதுக் கூடத் தொழிலாளி நினைக்காமலா இருப்பார்? நினைத்ததைச் சொல்லவில்லை என்பதால் நினைப்பே இல்லையென்றாகிவிடாது. அத்தகையதொரு நினைப்போடு, தனது இருப்பைத் தனித்துக்காட்டவொரு சொல்லுருவாக்கிப் படைப்புத்தொழிலில் இறங்கும் ஒருவனின் ஊடாட்டமே சரவண கார்த்திகேயனின் கதையின் நிகழ்வுகள். தானொரு மதுப்படைப்பான் என்ற சொல்லை உருவாக்கி அதன் உச்சத்தைத் தொட்ட படைப்பாளி என்ற மகிழ்ச்சியால் தன்னைத் தேற்றிக்கொள்ளும் –இளம் எழுத்தாளனின் இரட்டை நிலை எண்ண ஓட்டங்களின் வழிச் சொல்லப்படுகிறது பீத்தோவனின் சிம்ஃபொனி என்னும் கதை. அந்தக் குறிப்பே, அவனுக்குள் இருக்கும் இன்னொருவனைப் பற்றிய சித்திரத்தைத் தந்துவிடுகிறது:

                நான் பெங்களூரு மாநகரின் புகழ்மிக்க ஒரு குடிக்கூடக‌த்தில்                                   மதுப்படைப்பானாகப் பணியாற்றுகிறேன். அதாவது பப்பில்                                 பார்டென்டர். மதுப்படைப்பான் என்பது நானே உருவாக்கிய சொல்தான்.

முழுநேர எழுத்தாளனாகி, அத்துறையில் ஒப்பாரும் மிக்காருமாகத் திகழ விரும்பும் அவன், மதுக்கூடப் பணியாளன் ஆனது ஒரு தற்செயல் நிகழ்வு. மதுப்படைப்பான் வராத நிலையில் தற்காலிகமாகக் கிடைத்த வாய்ப்பில் ஆகச்சிறந்த மதுப்படைப்பாளனாகிப் பணி உயர்வும், கூடுதல் பரிசில்களும் கிடைக்கப்பெற்று வருமானம் பெருகிய நிலையில் பணியிட மாற்றங்களும் நடக்கின்றன. அதிலிருந்து வெளியேறும் அவனது விருப்பத்திற்கு அகத்தடைகளும் இருந்தன; புறத்தடைகளும் இருக்கின்றன எனத் தவித்துக்கொண்டிருந்த ஒருநாளில் அவன் கடத்தப்பட்டான் எனக் கதையைத் தொடங்குகிறார்.

இருதளப்பயணங்கள்

2023 போகிப்பண்டிகையன்று அயல் கிரகமொன்றிலிருந்து வந்தவர்களால் கடத்திச் செல்லப்படும் மதுப்படைப்பானான எழுத்தாளன், கடத்தியவர்களைப் பற்றிய இப்படி வர்ணிக்கிறான்.

அவர்கள் என்றால் ஒரு வித வினோதர்கள். மூன்று பேர். என்னை விட உயரம் குறைவாக இருந்ததும், முகத்தில் ஒரே அகலக் கண் இருந்ததும், மூன்று சன்ன‌ வாய்கள் இருந்ததும், கைகள் மனிதர்கள் போல் ஒரு ஜோடி இருந்தாலும் அவற்றில் தலா ஒரே விரல் இருந்ததும் மட்டுமே அந்த இருளில் புலனானது. நிச்சயம் மானிடர் அல்லர். அயலார்கள். ஏதிலிகள்!

இந்த வர்ணிப்பின் வழியாகக் கதையின் ஒரு தளத்தை மந்திரநடப்பியல் தளத்திற்குள் நகர்த்திக் கொள்கிறார். அதே நேரம், எழுத்தாளனாக ஆக முயன்று பின்னோக்கிப் போய்க்கொண்டே இருப்பதை நடப்பியல் தளத்தில் சொல்கிறார்.

என் வயது? சென்ற ஆண்டு யுவபுரஸ்கார் விருது பெறும் காலம் கடந்தது. கல்யாணமாகி ஒரு பெண் குழந்தை. மனைவி மதுமிதா; மகள் சந்தியா. காதல் திருமணம். கல்லூரியில் மதுமிதா என்னைக் காதலித்த காலத்திலேயே நான் சில அசட்டுக் கவிதைகள் எழுத ஆரம்பித்திருந்தேன். அவளுக்கு அதில் ஆர்வம் இல்லை. புகாரும் ஏதுமில்லை என்பதால் அவ்வப்போது திரையரங்க ஓரங்களின் இருளில் வைத்து முத்தமிட அனுமதித்தாள்.

முதல் எழுத்து, பதிப்பகத்துப் பணம் கொடுத்து முதல் நூல் வெளியிட்டது, முன்னுரை, வெளியீடு, ராயல்ட்டி கிடைக்காத நிலை, வாசிக்காத தமிழ் மந்தைத்தனம், நூல்களைக் காசுகொடுத்து வாங்காத தமிழர் உளவியல், அவருக்குப் பிடித்த எழுத்தாளர் ஆசானை(ஜெயமோகனை)ப் புரிந்துகொள்ளாத இலக்கிய உலகம் என எழுத்துலகம் பற்றி அவர் சொல்ல நினைத்த விமரிசனங்களையும் சொந்த அனுபவங்களையும் நிலைப்பாடுகளையும் இளம் எழுத்தாளனின் கூற்றாகச் சொல்லிப்போகிறார். இவை மட்டுமல்லாமல் காதல், கல்யாணம், அதற்குப் பின்னால் இருந்த விட்டுக்கொடுத்தல், குடும்ப உறவுக்குள் உண்டாகும் உரசல்கள் என்பனவும் நடப்பியல் நகர்வுகளாகவே இருக்கின்றன. இவையெல்லாம் கதையை வேகமாக வாசித்துச் செல்லும் நகர்த்துதலைக் கொண்டிருக்கின்றன. இந்தக் கூறுகள் சரவண கார்த்திகேயனின் பல கதைகளில் இருக்கும் சிறப்பான கூறுகள். இக்குறிப்புகள் வழியாகக் அவரது கதைகளுக்கு நிகழ்காலத்தன்மையை உருவாக்குவதில் கவனமாக இருப்பதை வெளிப்படுத்துகிறார்.

********

மதுப்படைப்பான், எழுத்தாளன் என்ற இரு அடையாளங்களின் கடந்தகாலத்தை அடுத்தடுத்துச் சொல்லும் விதமாக நகர்த்தப்பட்டுள்ள கதையில். மதுப்படைப்பான் என்னும் அடையாளமும் இருப்பும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால் அதற்கு இணையாக அவனது உள்ளக விருப்பமான எழுத்தாள அடையாளம் நகரவே இல்லை. ஆனால் அந்த அடையாளம் தான் இங்கே அழைத்து வரப்படக் காரணம் என அவன் நினைத்துக்கொண்டே உரையாடுகின்றான். அவரவர் துறையில் ஆகச் சிறந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டு கடத்திவரப்பட்டுத் தீவிரமாக அந்தத்துறையில் ஈடுபடச் செய்யும்படி பணிக்கப்படும்போது அவனுக்கு எழுத்துத்துறை கிடைக்கும் என ஆவலோடு காத்திருக்கிறான்.ஆனால்,

அகர வரிசையில் இந்தியா வந்து வெகு பின்பாக தமிழ் நாட்டு வரிசை ஆரம்பித்தது.
முதலில் இளையராஜா வந்தார். இசைத் துறை. அடுத்து கமல்ஹாசன் வந்தார். நடிப்புத் துறை. பிறகு ஜெயமோகன். எழுத்துத் துறை என்றார்கள். என்னைத் தவிர இவர் வேறு ஏன் இருக்கிறார்? ஒருவேளை மூத்தவர் ஒருவர், இளையவர் ஒருவரோ! அல்லது வலது சாரி, இடது சாரி பிரிவினையா! குழப்பமாக இருந்தது. அடுத்து ப்ரியங்கா மோகன் வந்தார். அழகுத் துறை. அடுத்து வந்தவரை அடையாளம் தெரியவில்லை. ஈரோடு மாமன் பிரியாணி உணவகச் சமையல்காரர் என அறிமுகம் செய்தார்கள். உணவுத் துறை. வீச்சு புரோட்டாவும், எண்ணெய் ரொட்டியும் பிரமாதமாகச் செய்வார் என்றனர்.

இந்த வரிசையில் அவனது இடம் வருகிறது.

“பீத்தோவன் எப்படி தன் காதுகளை இழந்த போதும் தன் நுண்ணுணர்வின் துணையுடன் சிம்ஃபொனி எழுதினாரோ அப்படி இவரது நா மதுவை ஒரு போதும் தொட்டதே இல்லை என்றாலும் உலகின் அதிசிறந்த‌ காக்டெய்ல்களை இவர் கைகள் கலக்கத் தவறவில்லை.”

என்பதாக அறிமுகம் செய்யப்படுகிறான். அவனது மதுக்கலவை நேர்த்திக்காகவும் திறமைக்காகவுமே கடத்திவரப்பட்டிருக்கிறான் என்றபோது. “நோஓஓஒ…!” என்றொரு பெரும் குரலால் மறுக்கிறானேயொழியப் பெரும் கலவரம் எதுவும் செய்யவில்லை. வணிகப்பத்திரிகையொன்றில் அவனைப் பற்றி எழுதிய குறிப்பையே இவர்களும் வாசிக்கிறார்களே என்ற கோபம் கொஞ்சமும் எழவில்லை. கதை அங்கே நிறைவடைகிறது.

****** ****

தவறும் தர்க்கவியல்

மதுப் படைப்பான் என்ற அடையாளம் அவனுக்கு உடன்பாடானதல்ல; எழுத்தாளன் என்ற அடையாளமே அவனது இலட்சியம் என்பதை அவனே நம்பினானா? என்ற ஐயம் கதை சொல்லலிலேயே இருக்கிறது. தானொரு ஆகச் சிறந்த எழுத்தாளன் ஆக ஆசைப்பட்டுக் கொண்டிருப்பவன் என்ற எண்ணத்தைப் பெங்களூர் வாழ்க்கையில் தள்ளிவைத்துக்கொண்டே நகர்ந்ததைப் போலவே கடத்தி வைத்த இன்னொரு கிரகத்தில் தன்னைப் பார்த்துக்கொள்ளப் பணியமர்த்தியவர்களை நோக்கி அவர்களின் கவனத்தை ஈர்க்கும் குறிப்பைக் கூடத்தரவில்லை. அவனைக் கவனித்துக் கொள்ளப் பணிக்கப்பட்ட அத்யந்தாவிடமும் சொல்லவில்லை. அதே உடல் அத்யந்தனாக மாறியபோதும் சொல்லத் தோன்றவில்லை. எழுதுவதற்கான தனது பெரும்திட்டங்கள், உரிப்பொருட்கள், நோபல் விருதைப் பெற்ற எழுத்தாளர்களைத் தாண்டப்போகும் தனது எழுத்துமுறை போன்றன பற்றிய எண்ண ஓட்டங்களை அவன் விவாதிக்கவில்லை.விவாதித்திருக்க வேண்டும். விவாதித்திருந்தால், அவர்கள் தவறான ஆளைக் கொண்டுவந்துவிட்டோம் என்று நினைத்து மறுபரிசீலனை செய்திருக்கக்கூடும்.

தன் அருகில் இருந்த அவர்களின் உடல் உறுப்புகளின் வினோதத்தன்மையில் ஒரு கண், மூன்று வாய், மயிர்களற்ற மார்பு, அதில் ஒன்று யோனி, ஒற்றை விரல், அதுவே ஆண்குறி போன்றவற்றில் அதிசயப்பட்டு திகைத்து நிற்கிறான். காலத்தைத் தாண்டிய புத்திசாலித்தனம் கொண்டவர்கள் என்ற பெருமையான கூற்றைக் கேள்விகளற்று ஏற்றுக்கொள்கிறான். எல்லாவற்றையும் அதிவேகமாகப் புரிந்துகொண்டு செயல்படும் அந்தக் கிரகவாசிகளில் ஒருவர்கூட மதுப்படைப்பானின் உள்ளக விருப்பம் ‘ஆகச் சிறந்த எழுத்தாளன்’ ஆவது என்ற எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொள்ளவில்லையே என்பதின் மீது இயல்பாக எழவேண்டிய கோபம்கூட எழவில்லை. அதன் தொடர்ச்சியில் இவர்களும் எங்கள் ஊர் வணிகப்பத்திரிகைச் செய்தியாளர்களைப் போன்ற தட்டையான அறிவுடையவர்களே என்ற விமரிசனத்தையாவது வைத்திருக்க வேண்டும். அதனையும் சரவணகார்த்திகேயனின் கதை தவறவிட்டுள்ளது. நடப்பியலைத் தகர்க்க விரும்பிச் சரவணகார்த்திகேயன் தேர்ந்தெடுக்கும் கதைசொல்லும் உத்திகள், காலமீறல்கள், நிகழும் வெளிகளின் மீமெய்மைத்தன்மை போன்றவற்றால் அவர் தவறவிடும் தர்க்கங்கள் பெரிதாகப்படுவதில்லை. புதுச்சொல்லாக்கங்களோடு கூடிய சரளமான மொழிநடையை உறுதிசெய்யும் அவரால் வாசிப்புத் திளைப்புக்குரிய கதைகளை தந்துகொண்டே இருக்கமுடிகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

நாயக்கர் காலம். இயல்.2.பொருளாதார நிலைகளும் உறவுகளும்

மேல்நோக்கியும் கீழ்நோக்கியும்