பாவைக்கூத்துகள் -விஜய் அரசியல் குறித்த குறிப்புகள்

வித்தியாசங்களற்ற பாதைகள்
தனக்கென - தனது நடிப்புக்கென ஒரு பாணியை - திரைக்கதை வடிவத்தை உருவாக்கிக் கொண்டு அதே வழியில் தொடர்ந்து படங்களைத் தரும் நாயக நடிகர்களின் சினிமாக்கள் வணிக வெற்றியை உறுதி செய்துள்ளன. அதே நேரம் தங்கள் பாணியிலிருந்து விலகிய சினிமா ஒன்றில் நடிக்கும் ஆசையுடன் முயற்சி செய்யும் நடிகரின் விருப்பத்தை அவரது ரசிகர்களே ஒத்துக்கொள்வதில்லை. தோல்விப்படமாக ஆக்கிவிடுவார்கள்.
அத்தகைய சூத்திரம் ஒன்றை அரசியலுக்காகக் கண்டுபிடித்து கட்சி நடத்தும்போது அரசியலிலும் நிலைத்து நிற்கின்றார்கள். ஏழைப்பங்காளன்; பெண்களின் காவலன்; தாய்மார்களின் அன்புக்குரியவன்; சினிமாவில் சம்பாதித்த பணம் என்னிடம் இருக்கிறது. எனவே ஊழல் செய்யவேண்டிய அவசியமில்லை; உங்களின் ரத்தத்தின் ரத்தமாக இருப்பேன் எனக்காட்டிக் கொண்ட அரசியல் சூத்திரம் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுடையது. அவர் உருவாக்கிய அதிமுகவிற்கு வேறுவிதமான அரசியல் பொருளாதாரக்கொள்கை எதுவும் கிடையாது. அதே சூத்திரத்தில் மாற்றமில்லாத ஒன்று விஜய்காந்தின் தேமுதிகவின் சூத்திரமாகவும் இருந்தது. தன்னைக் கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லி அவரது வாரிசாகக் காட்டினார். இப்போது தமிழ்நாடு வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாட்டில் சின்னக்குழந்தைகளை வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தானே தாய்மாமன் என்கிறார். விஜய்காந்த் எனது முன்னோடி என்கிறார். எம்.ஜி.ஆர்., விஜய்காந்த், விஜய் - மூவரும் நம்புவது மதுரை மண்ணை. கனவுகளை விதைத்து நினைவுகளைப் பறிக்க முடிகிறது தமிழக அரசியலில்.

அரசியலற்ற அரசியல் ஆய்வாளர்கள்
நடிகர் அரசியல் என்பது தமிழ்நாட்டில்/ இந்தியாவில் அரசியலற்ற வாக்காளத்திரளை ( apolitical )உருவாக்கும் ஒன்று. அரசியலற்ற நடிகர் அரசியலை நேரடியாக ஒளிபரப்பும் காட்சி ஊடகங்களுக்கு அரசியலற்ற அரசியல் ஆய்வாளர்கள் தேவைப்படுகிறார்கள். கட்சி அரசியலில் சாய்வுகளற்றவர்கள் போலக் காட்சிதரும் இவ்வகை அரசியல் ஆய்வாளர்கள் நடிகர் அரசியலைக் கொண்டாடுபவர்களாகவும் இருக்கிறார்கள். சாதி அரசியலையும் வரவேற்கின்றார்கள். அதே நேரம் கருத்தியல் அரசியலுக்கு எதிராக நிற்கின்றார்கள். மொத்தத்தில் ஆபத்தானவர்கள்.

பாவைக்கூத்துகள்

தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்துத் தனது நடிப்புத் திறனைக் காட்டிய நடிகர் பிரகாஷ்ராஜ் பேசுவது மாநில அரசியல் அல்ல; தேசிய அரசியல். இந்திய நாட்டிற்கே தேவையான மாற்று அரசியல். ஆனால், தமிழின் நாயக நடிகர்களும் நடிகைகளும் பேச விரும்புவது மாநில அளவைத் தாண்டாத அரசியல்.

அவர்களின் சிந்தனை, ஈடுபாடு, கருத்தியல் வெளிப்பாடு சார்ந்து உருவான அரசியலை அவர்கள் பேசியதில்லை. பந்தயத்திடலுக்குள் ஓடும்படி தள்ளி விடப்பட்டவர்களின் பதற்றத்தோடு அரசியலுக்குள் வருகிறார்கள். வரும்போதே தமிழ் மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை மட்டுமே குறிவைக்கிறார்கள். மாநிலக் கட்சிகளையே விமரிசிக்கிறார்கள். நீண்ட காலமாகத் தமிழக அரசியலைத் தீர்மானித்துக் கொண்டிருக்கும் திராவிட இயக்கக் கருத்தியலையும் அதன் வழியாக உருவான தேர்தல் அரசியலையுமே திசைமாற்றம் செய்ய நினைக்கிறார்கள். இதனால் தான் நடிகர்களின் அரசியலைத் தேசியகட்சிகள்/ ஒன்றிய ஆட்சியாளர்கள் பின்னின்று இயக்குகின்றார்கள் என்று சொல்லத் தோன்றுகிறது.திராவிட இயக்கத்தை/ அதன் கருத்தியல் தலைமையாக இருக்கும் பெரியாரை வெறுப்பவர்களால் இயக்கப்படுகிறார்கள் என்கிறோம். மறைந்து நிற்கும் கைவிரல்களில் சுண்டுதலுக்கேற்பப் பேசும்/ஆடும் பொம்மைகள் என்று சொல்ல நேரிடுகிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

காதல்: காமம் - பெண் கவிதைகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்