ரவிக்குமார்: எழுத்தாளுமையும் அரசியல் ஆளுமையும்


மக்களாட்சி செயல்படும் நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களிடம் மக்களின் எதிர்பார்ப்புகள் ஒன்றுபோல இருப்பதில்லை. மேற்கு நாடுகளில் தங்கள் சார்பாக அரசமைப்பு அவைகளுக்குச் செல்லும் உறுப்பினர்களின் அறிவார்ந்த செயல்பாடுகளே முதன்மையாக எடை போடப்படும். அச்செயல்பாடுகளின் அடிப்படையில் அடுத்தடுத்த தேர்தல்களில் அவர்கள் உறுப்பினர்களாக இருக்கும் கட்சிகள் வாய்ப்பு வழங்கும். மக்களும் தேர்ந்தெடுப்படுவார்கள். இந்தியா போன்ற கீழைத்தேய நாடுகளில் இந்தத் திறன்மட்டும் -அறிவார்ந்த அவைப்பங்கேற்பு மட்டும் போதாது.

இங்கே தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற / நாடாளு மன்ற உறுப்பினர்கள் அவைச் செயல்பாடுகளை விடவும் தொகுதிக்குள் எவ்வாறு செயல்பாடுகிறார் என்பதுதான் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. தொகுதிக்குள் நடக்கும் கட்சிக்காரர்களின் நல்லது/ கெட்டது போன்றவற்றில் பங்கேற்பது; திருவிழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் போன்ற பொது நிகழ்வுகளில் பங்கேற்பதும் அவசியம் என நினைக்கிறார்கள். அதேபோல் தொகுதிக்குள் இயங்கும் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றில் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளைக் கிடைக்கச்செய்வதில் பங்களிப்பு செய்வது போன்றனவும் கூடுதல் எதிர்பார்ப்புகளாக இருக்கின்றன. அதேபோல். அவருக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தி தொகுதிக்குள் மக்களின் கண்ணில்படும் விதமாக என்னென்ன செய்துள்ளார் என்பதும் வாக்களிக்கும்போது கவனம் பெறுகிறது.

இப்போது விழுப்பும் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ரவிக்குமார் ஒருமுறை காட்டுமன்னார் கோவில் ( 2006-2011) தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அந்தக் காலகட்டத்தில் அவரது சட்டமன்றப்பங்கேற்பு ஆகச்சிறந்த பங்கேற்பு. தனியொரு சட்டமன்ற உறுப்பினராக அவரது முன்மொழிவுகளும் தனிநபர் தீர்மானங்களும் தமிழக அளவில் கவனம் பெற்றவை.சட்டமன்றத்தின் கவனத்திற்கு வராத -நுண்ணரசியல் தளங்களில் விவாதிக்கப்படும் மூன்றாம் பாலினத்தவர், புதரை வண்ணார்கள், வீட்டுவேலை செய்யும் பெண்கள், பள்ளிக் கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள், தமிழக அகதிமுகாம்களில் அல்லல்படும் அகதிகள் -போன்றவற்றைச் சட்டமன்றத்தின் பேசுபொருளாக மாற்றினார். அதன் மூலம் அவரது இருப்பு ஓர் அறிவார்ந்த உறுப்பினரின் இருப்பாகப் பார்க்கப்பட்டது. 

இப்போது விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினாராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முந்திய காலகட்டத்துச் செயல்பாடுகளின் நேர்மறை -எதிர்மறைக்கூறுகளை எடைபோட்டுப் பார்த்துத் தன்னைத் தொகுதியின் - உறுப்பினராக முன்னிறுத்துவதையும் இணைத்துக் கொண்டு செயல்படத் தொடங்கியிருக்கிறார். சட்டமன்றக்காலத்து அறிவார்ந்த செயல்பாடுகளைப் போலவே நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்படுகிறார். இந்திய அளவுச் சிக்கல்களையும் தமிழகத்துப் பொதுப்பிரச்சினைகளையும் பேசும் உறுப்பினராக இருப்பதோடு, தன்னைத் தேர்வுசெய்த விழுப்புரம் தொகுதி மக்களோடும் நிற்கவேண்டும் என நினைத்துச் செயல்படுகிறார். அவர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கவேண்டியதைப் பாதிநேரவேலையாக மேற்கொண்டுவருகிறார்.

நாடாளுமன்றக் கூட்டம் இல்லாத நாட்களில் விழுப்புரத்தில் உறுப்பினர் அலுவலகத்தில் தங்கி மக்களைச் சந்திப்பதோடு, தொகுதியின் பல பகுதிகளில் நடைபெறும் சிறுசிறு நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகிறார். அவர்களின் விருப்பங்கள், கோரிக்கைகளைப் பெற்று ஆவன செய்வதற்காக நவீனத் தொடர்புச் சாதனங்களைப் பயன்படுத்தும் ஒருமுயற்சியில் இறங்கியுள்ளார். அதற்கெனத் தனியாக ஒரு செயலி வடிவமைக்கப்பட்டு வரும் குடியரசு தினத்திலிருந்து செயல்பட உள்ளது. 

நாடாளுமன்ற அவைகளின் செயல்பாடுகளுக்குரிய மதிப்பையும் மரியாதையையும் திட்டமிட்டுக் குறைத்து கொண்டு வரும் நம் காலகட்டத்தில் இவரைப் போன்ற வகைமாதிரி (Typed) உறுப்பினர்கள் தேவைப்படுகிறார்கள். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் அறிவார்ந்த செயல்பாடுகள் எப்படி இருக்கவேண்டும் என்பதைச் சொல்லும் ஐந்து நூல்கள் அன்றைய விழாவில் வெளியிடப்பட உள்ளன. 
அதற்கான விழாவில் நானும் பங்கேற்று நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்ற உள்ளேன். 

பாதுகாப்பற்ற சொற்களை சொல்லிக் கொண்டிருந்தவர்

இந்தியத் தேர்தல் முறைக்கு உடன்பட்டுப் போட்டியிட்டுக் காட்டுமன்னார்கோவிலின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வுபெற்றவர் முனைவர் ரவிக்குமார். அந்த ஐந்தாண்டுக்காலத்தில் அவரது சட்டமன்றச் செயல்பாடுகள் முன்மாதிரியானவை. தான் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியின் தேவைக்காக மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பொதுப் பிரச்சினைகளிலும் அரசின் கவனத்தை ஈர்க்கும் சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டவர். அந்த நேரத்தில் முதல்வராக இருந்த கலைஞர் மு.கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய சட்டமன்ற உறுப்பினராக இருந்து பலவற்றை அவரது கவனத்திற்குக் கொண்டுசென்றவர். பல வாரியங்கள் உருவாக்க அவரது சட்டமன்றப் பேச்சுகள் காரணங்களாக இருந்தன.

ரவிக்குமாரின் பெயர் உள்ளிட்ட 36 பேர்களின் பெயர்களை இந்திய அளவில் இந்துத்துவ பயங்கரவாதம் பட்டியலிட்டுக் கையில் வைத்திருந்த தகவலை கர்நாடக அரசின் புலனாய்வு உளவுத்துறை கைப்பற்றியிருக்கிறது. அதில் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் 8 பேர். தமிழ்நாட்டிலிருந்து அவரது பெயர் மட்டுமே எனச் செய்தியாக்கியிருக்கிறது நியூஸ்மினிட் .

முனைவர் ரவிக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர்.அக்கட்சியின் கூட்டணி மற்றும் நீண்டகாலத்திட்டங்களை வடிவமைப்பதில் அதன் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவனோடு இணையாக நின்று செயல்படுபவர். இந்த அடையாளங்கள் 1996 -க்குப் பின்னான ரவிக்குமாரின் அடையாளங்கள், இவையெல்லாம் இந்துத்துவப் பயங்கரவாதிகளுக்கு அச்சமூட்டியிருக்க வாய்ப்பில்லை. இதுபோன்ற நடவடிக்கைகளில் இருக்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளைக் கொலைசெய்வது என்று திட்டமிடுவதையோ, பட்டியலிடுவதையோ அவர்கள் செய்யமாட்டார்கள். அப்படிச் செய்யத்தொடங்கினால் பட்டியலின் நீளம் பெரிதாகிவிடும். இந்தியாவின் ஒவ்வொரு பெருநகரங்களிலும் கிராமங்களிலும் ஒவ்வொருநாளும் துப்பாக்கிக்குண்டுகள் வெடித்துக்கொண்டே இருக்கவேண்டும். அதன் தொடர்ச்சியாகப் பெரும் கலவரங்கள் நடக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

இந்துத்துவம் குறிவைக்கும் ரவிக்குமாரின் அடையாளம் 1996 -க்கு முந்தியது. மாணவப் பருவம் தொடங்கி அவரது செயல்பாடுகளைத் தாண்டி எழுதிக் குவித்தவை ஏராளம். இந்து மதத்தின் சாதிப் பாகுபாட்டால் நசுக்கப்பட்ட மனிதர்களை நோக்கிய எழுத்துகள். அவர்களோடு வேலைசெய்யத் திட்டமிடும் மனிதர்களுக்கு வெளிச்சம் காட்டும் விளக்காக இருக்கும் எழுத்துகள். தலித் இலக்கியம், தலித் பண்பாடு, தலித் அரசியல் என்ற வகைப்பாடுகளை உருவாக்கி நிலைக்கச் செய்த எழுத்துகள். உலக நாடுகள் பலவற்றிலும் நடந்த போராட்டங்களின் குரலாக இருந்தவர்களின் குரல்களை மொழிபெயர்த்துத் தந்த எழுத்துகள். எழுத்துகளைத் தாண்டி மேடையில் பேசும் பேச்சுகளும் திரட்டப்பட்ட தகவல்களாக நின்று ஒட்டுமொத்த விளிம்புநிலை மனிதர்களுக்கும் உழைப்பவர்களுக்கும் எதிரிகள் யார்? எந்தெந்த அமைப்புகளின் பெயர்களில் அவர்கள் வருகிறார்கள் என்று அடையாளம் காட்டும் பேச்சுகளாக இருந்தவை; இருப்பவை.

மனித உரிமை அமைப்பின் மாநிலத் தலைவராக, மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக, புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கையை முன்வைத்த மாநாட்டின் காரணியாக, உண்மை அறியும் குழுக்களின் பங்கேற்பாளராக, சாதிய வன்கொடுமைகளின் தகவல்களைத் திரட்டித் துண்டறிக்கைகளை வெளியிட்டுக் கருத்துருவாக்கும் கருத்தியல் செயலாளியாக என அவர் செயல்பட்ட காலங்களில் அவர் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். அவரது சொற்கள் அனைத்தும் பாதிக்கப்படும் மக்களின் பாதுகாப்புக்காகச் சொல்லப்பட்டவை. இப்போது அவரது பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் நிலையைக் கொண்டுவந்திருக்கிறது.

அவர் படிக்கும் முறையையும் எழுதும் வேகத்தையும் செயல்படத்தூண்டும் விதமாக ஒருங்கிணைக்கும் விதத்தையும் கண்டு பொறாமைப் பட்டிருக்கிறேன். சொந்த எழுத்துகளாகவும் மொழிபெயர்ப்புகளாகவும் தொகுப்புகளாகவும் கொண்டுவந்த 50 -க்கும் மேற்பட்ட நூல்களும் இந்துத்துவத்திற்குக் கடுமையான எதிர்நிலைப்பாடு கொண்டவை. அதை அறிந்த நிலையில்தான் அவர்களின் பட்டியலில் அந்தப் பெயர் இடம்பெற்றிருக்கிறது. செயல்பாட்டுத் தளத்தைவிடவும் கருத்தியல் தளத்தையே ஆகப்பெரும் எதிரியாக நினைப்பவர்கள் அந்தக் கருத்துக்காரரை இல்லாமல் செய்துவிட நினைக்கிறார்கள். அவரும் அவரைப்போன்ற செயலையும் சொல்லையும் இணையாகக் கருதும் அறிவாளர்களும் இருந்தாக வேண்டியவர்கள். இதே காரணங்களுக்காகவே - ரவிக்குமாரின் எழுத்துகளுக்காகவும் கருத்துகளுக்காகவும் செயல்பாடுகளுக்காகவும் - காக்கப்படவேண்டியவர். அவருக்குப் பாதுகாப்பு அளிப்பது அரசமைப்புகளின் கடமை. அவர் நேசிக்கும் விளிம்புநிலை மக்களின் ஆகப்பெரும் பொறுப்பு.

தமிழகத்தின் புதிய அரசியல் முகம்

சட்டசபைத் தேர்தல் 2016 -ன் முடிவுக்குப்பின் சிலரது தோல்விக்காகப் பலரது வருத்தங்களை முகநூலெங்கும் வாசிக்கக் கிடைத்தன அதிகமானவர்களின் வருத்தம் வி.சி.க.வின் தலைவர் தொல். திருமாவளவனின் தோல்வி பற்றியதாகவே இருந்தன. முனைவர் வே.வசந்திதேவி .சுப. உதய குமார் போன்றோரின் தோல்விகளுக்கும் வருத்தங்கள் இருந்தன என்றாலும் தொல். திருமா வளவனின் தோல்வியை நான் எதிர்பார்க்கவில்லை. முன்னாள் துணைவேந்தர் வே.வசந்திதேவியும் சுப. உதயகுமாரனும் ஒருதுறைசார் ஆளுமைகள். தேர்தல் அரசியலில் துறைசார் அரசியலில் வெற்றிபெறுவது நடக்காத ஒன்று. அதனால் இவ்விருவரின் தோல்விகள் வருத்தம் தரவில்லை.
அவரது பேச்சுத்திறமையை - சொற்பொழிவின் ஒழுங்கைப் பல மேடைகளில் முன் வரிசையில் அமர்ந்து கேட்டிருக்கிறேன். சட்டமன்ற நாடாளுமன்ற உரைகளைத் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறேன். அண்மைக் காலங்களில் அவரளவிற்குப் பொறுப்போடு ஊடக நேர்காணல்களைத் தந்தவர்கள் இந்திய அளவில் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அவரது முனைவர் பட்ட நேர்காணல் தேர்வின் போது ஆங்கிலத்திலும் தமிழிலுமாக விவாதங்களை முன்னெடுத்த பாங்கு கொண்டாட்டத்திற்குரிய ஒன்று.

மதிப்பிற்குரிய தொல். திருமாவளவன் ஆளுமை அல்ல; அரசியல்வாதி. ஒற்றைப் பிரச்சினையை முன்னெடுக்கும் நுண்ணரசியல்தளச் செயல்பாட்டாளரல்ல; தமிழகத்தின் பேரரசியலின் முக்கியமான முகம். தமிழனனென்றொரு இனமுண்டு; தனியே அதற்கொரு குணமுண்டு என்ற வாக்கின் மீது நம்பிக்கைகொண்டிருந்த இளம்பிராயக் கிளர்ச்சியிலிருந்து விடுபட்டுச் சூழலைக் கவனித்துப் பெரும்பரப்புக்குள் பயணம் செய்துகொண்டிருக்கும் தலைவர். ஒடுக்கப்படுதலின் தந்திரங்களை உணர்ந்த நிலையில் திமிறி எழுதலின் வழிமுறைகளைத் தேடிய பயணத்தின் வழியாக முன்பு நடைபெற்ற தேர்தல்களில் முக்கியச் சொல்லாடல்களை உருவாக்கியவர். மூன்றாவது அணியெனத் தங்களையே கீழிறக்கிக் கொள்ளும் நிலைக்கு மாற்றாக மாற்றணியெனும் கருத்தியலை உருவாக்கியவர். அதற்காக கூட்டணி அரசாங்கம் என்னும் கருவை உருவாக்கியிருப்பவர். இந்தக் கருவை உருவாக்கிய நிகழ்வுகள் ஐந்தாண்டுக்கு முன்பே சூல்கொண்டது. தமிழகச் சட்டமன்றத்திற்காக முன்வைத்தக் கருத்தியலை இப்போது தேசிய அளவிற்கும் நகர்த்துகிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி ஆட்சி என்னும் கருத்தை முன்வைக்கக் காரணமாக இருந்தது அதன் கூட்டணிக் கட்சியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் என்பதைத் திரும்பவும் சொல்லவேண்டியதில்லை. வடதமிழ்நாட்டில் தி.மு.க. வின் முக்கியமான ஆதரவுத்தளமாக இருப்பவை இடைநிலைச் சாதிகள். இடைநிலைச் சாதிகளிடமிருக்கும் சாதிய மனோபாவத்தைக் கணக்கில் கொண்டு விடுதலைச் சிறுத்தைகளைக் கூட்டணியிலிருந்து விலக்கி வைப்பது என்ற பேச்சை ஓராண்டுக்கு முன்பே தி.மு.க. தொடங்கியது. அவர்களை வெளியேற்றுவதில் வடமாவட்டங்களின் இரண்டாம் நிலைத்தலைவர்கள் குறியாயிருந்தார்கள். அவர்கள் வன்னியர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, தி.மு.க.வில் இருக்கும் தலித் தலைவர்களுமாகவும் இருந்தார்கள் என்பது கவனிக்கவேண்டிய ஒன்று. விடுதலைச் சிறுத்தைகளோடு கூட்டணி அமைத்தால் தனித்தொகுதிகள் முழுவதும் கூட்டணிக்கட்சி என்ற அடிப்படையில் விசிக.விற்குச் சென்று விடுகிறது; நமக்குத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பே ஏற்படுவதில்லை என்று கருதினார்கள். அவர்களும் தி.மு.க,வின் தலைமையிடம் அழுத்தம் தரவே செய்தார்கள். தொடர்ந்து தங்கள் கட்சியில் இருக்கும் நபர்களை இழக்கவிரும்பாத நிலையில் தான் திராவிட முன்னேற்றக் கழகம் விடுதலைச் சிறுத்தைகளைக் கைகழுவும் முடிவை எடுத்தது. அந்த முடிவை எடுக்கப்போகிறது என்ற நிலையில் எதிர்வினையாக விசிக. கூட்டணி ஆட்சி என்னும் கருத்துருவை முன்வைத்தது. ஒருவினையின் எதிர்வினையாகவே இன்னொருவினை உருவாகிறது என்பது இயல்பியல்விதி. 

கூட்டணி ஆட்சி என்னும் கருத்தியலை முன்வைத்ததோடு ஓய்ந்துவிடவில்லை என்பதுதான் தொல்.திருமாவளவனின் சாதனை. அந்தக் கருத்தியல் கடந்த தேர்தலிலேயே பரவலாகச் சென்று சேர்ந்திருக்கிறது. இப்போது நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நிச்சயம் விரிந்து பரவும் அதைச் செய்யப்போகிறவராக இருக்கப்போகிறவரும் அவர்தான். அண்மையில் பிபிசிக்கு அவர் அளித்த நேர்காணல் தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என நினைப்பவர்களின் குரலாக - அடையாளமாக மாறப் போகிறார் என்பதின் வெளிப்பாடாகவே இருக்கிறது.

அவர் போட்டியிடும் சிதம்பரம் நாடாளுமன்றம் தொகுதி அவருக்குப் புதிய தொகுதி அல்ல. ஏற்கெனவே அவரைத் தனது பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த தொகுதி.பாரம்பரியமாக அரசியல் உணர்வுபெற்ற தொகுதி என்பதை நானறிவேன். 1990 களில் தலித் இயக்கங்கள் எழுச்சிபெற்றுப் தலித் பண்பாட்டுப் பேரவை, தலித் கலை இலக்கியவிழாக்கள், தலித் இலக்கிய முகாம்களென நடத்திய காலகட்டத்தில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளுக்குட்பட்ட சிறுநகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பயணம் செய்திருக்கிறேன். நாடகங்கள் போட்டிருக்கிறேன். அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டவர்களோடு தொடர்பில் இருந்திருக்கிறேன். நண்பர் ரவிக்குமார் காட்டுமன்னார் குடி சட்டமன்றத் தொகுதியில் கோயில்மணி சின்னத்தில் போட்டியிட்டு வென்ற போது அந்தத் தொகுதியின் பெரும்பாலான கிராமங்களுக்குச் சென்று மக்களோடு பேசியிருக்கிறேன். 

காவிரியின் பாசனப்படுகைப்பிரதேசம். விவசாயம் சார்ந்த கிராமங்கள் அவை. விவசாயம் சார்ந்தவை என்பதனாலேயே சாதிய இறுக்கமும் கூடுதலாக இருக்கக் கூடியன. கிராமங்கள் என்றும் சேரிகள் என்றும் பிரித்துப் பார்ப்பதற்குத் தோதான வேறுபாடுகளுடன் காணப்படும் அந்தத் தொகுதியைப் பற்றிக் குறிப்பிடப் பல தகவல்கள் உண்டு. விடுதலை அடைந்த அறுபது ஆண்டுகளில் பெருமளவு மாற்றங்கள் எதனையும் சந்திக்காத கிராமங்களே அதிகம் உள்ளன. அப்படி இருப்பதற்குக் கூட முக்கியக் காரணம் அத்தொகுதி தனித் தொகுதியாக இருப்பது தான் என்று தோன்றியது. அத்தொகுதி மக்களுக்குச் சின்னம் எல்லாம் முக்கியமல்ல; நபர்தான் முக்கியம்; நபர் நிற்கும் இயக்கம் தான் முக்கியம். 2016 தேர்தலிலேயே அதை உணர்த்தியவர்கள் அந்தத் தொகுதி மக்கள்

ரவிக்குமாருக்கு மணிச் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் கோயிலுக்குப் பக்கத்தில் இருந்த வெங்கலக் கடையில் ஒரு பெரிய மணியை வாங்கி திறந்த ஜீப்பில் கட்டிக் கொண்டு காட்டுமன்னார் குடியின் வீதிகளில் போனபோது கண்ட காட்சிகள் கலக்கத்தை ஏற்படுத்தின. பல தேர்தலைக் கண்ட கைச் சின்னம் வரையப்பட்ட சுவர்கள் பளிச்சென்று தெரிந்தன. ஆனால் மணிச்சின்னம் வரையப்பட்ட சுவர்கள் அதிகம் தென்படவில்லை. சுவர்களில் மணி வரையப்படாத நிலையில் சின்னம் அறிமுகமாவது சிரமம் என்று பேசிக் கொண்டோம். ஆனால் அடுத்த நாள் கிராமங்களுக்குப் போன போது இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஒவ்வொரு குடிசை வீட்டு முன்னாலும் வாசல் தெளித்துக் கோலம் போட்டு வேட்பாளரை வரவேற்கக் காத்திருந்தனர் பெண்கள். குலவைகள் , ஆரத்திகள், சூடம் காட்டுதல் என்று நகர்ந்த போது நான் தெருக்களின் கோலத்தைக் கவனித்துக் கொண்டே போனேன். ஒவ்வொரு கோலத்திற்குள்ளும் மணிச் சின்னம் தூக்கலாகத் தெரிந்தது. கோலம்போடும் கைகள் மணிச் சின்னத்தை லாவகமான ஓவியக் கலைஞர்களின் கைவண்ணம் போல விதம்விதமாகத் தீட்டியிருந்தன. அந்தக் கோலங்களும் ஆரவாரமும் அடுத்தடுத்த நாட்களும் தொடர்ந்தன. 

முனைவர் தொல்.திருமாவளவனை அத்தொகுதியின் செல்லப்பிள்ளையாக இருந்த காங்கிரஸ் கட்சியின் இளையபெருமாளின் இடத்தில் வைத்துப் பார்த்தார்கள் என்பதை அப்போதே நான் உணர்ந்தேன். அவர்களோடு நான் பேசியபோது அவரது பெயரில் இருக்கும் -ன் - விகுதியை ஒருவர்கூட உச்சரித்துக் கேட்கவில்லை. வளவர் என்றே சொன்னார்கள். கோயில் மணிச் சின்னத்தையே தங்கள் சின்னமாக ஆக்கிக் கொண்ட கிராமத்து மக்கள் அன்றாடம் தங்கள் புழக்கத்தில் இருக்கும் பானைச் சின்னத்தை ஏற்றுக்கொள்ளாமல் போக வாய்ப்பே இல்லை. பானை தமிழ் நாட்டின் புழங்குபொருள். ஒவ்வொருவரின் வீட்டிலும் பானைகள் இருக்கின்றன. ஒவ்வொரு பெண்ணும் பானைகளைத் தூக்கியிருப்பார்கள். 

தேர்தல் அரசியலின் அனைத்துத் தந்திரங்களையும் பயன்படுத்தி மிகக் குறைந்த - 87 வாக்குகள் குறைவாக வாங்கியுள்ளார் என்று தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதி கடந்த சட்டமன்றத் தேர்தலில் அறிவிப்புச் செய்தார். இந்தத் தடவை அப்படிச் செய்து விட முடியாது. அவரை எதிர்த்துப் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களை விடப் பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் இருக்கும். பானைச் சின்னத்தில் வாக்களிக்கப்பட்டு முனைவர் தொல். திருமா அவர்கள் இந்திய நாடாளுமன்றத்திற்குச் செல்ல வேண்டும். சிதம்பரம் தொகுதியின் உறுப்பினராக மட்டுமல்ல. தமிழகத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் பேசக்கூடிய ஒருவராக


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

நாயக்கர் காலம். இயல்.2.பொருளாதார நிலைகளும் உறவுகளும்

மேல்நோக்கியும் கீழ்நோக்கியும்