கொரோனாவோடு வாழ்ந்தது -ஏப்ரல் வரை

 ஏப்ரல் 15 க்குப் பிறகு 

நாடு தழுவிய ஊரடங்கு விலக்கப்படவேண்டும். முதன்மையாக உணவு உற்பத்தி மற்றும் விநியோகம் சீராக நடக்கவேண்டும். வேளாண் உற்பத்தியை உறுதிசெய்யும் விதமாக ஊரடங்கு விதிகளில் தளர்வு நடைபெற்றால் மட்டும் போதாது. உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை உண்ணும் வகையிலான வடிவங்களில் மாற்றவேண்டும். அதனை நுகர்வோருக்குக் கொண்டு சேர்க்கவேண்டும். இவை நடக்கவில்லை என்றால் இந்தியா போன்ற நாடுகள் நோயைத் தாண்டிய பெரும்பிணியாகப் பசியை எதிர்கொள்ள நேரிடும். பசியின் வெளிப்பாடுகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. அதனைக் கவனித்துச் சொல்லும் திசையில் ஊடகங்கள் கவனம் செலுத்தவில்லைஅதனால் பொதுச்சமூகம் அறியாமல் இருக்கிறது


உற்பத்தித்துறையினர் மட்டுமல்ல; சேவைத்துறைப் பணியாளர்கள் அவர்களின் பணிக்குத் திரும்ப வேண்டும். அதற்கும் முன்பாகப் பணிக்குப் போக இருக்கும் நபர்களுக்குத் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பரிசோதனைகள் செய்யும் கருவிகளையும் கொண்டுவரவேண்டும். அவசியத்தேவைகள் போன்றவற்றோடு நேரடித் தொடர்பு கொண்டவர்கள் தக்க சோதனைகளுடன் பணிக்குச் சென்றாக வேண்டும். நோயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரம் காட்டும் அரசுத் துறைகள் இணையாகவே இதனையும் கணக்கில் கொண்டு திட்டமிட்டிருப்பார்கள் என நினைக்கிறேன். திட்டமிடவில்லை என்றால், தொடர்ந்து அரசுகள் திட்டமிடல் பிழைகளைச் செய்கின்றன என்றுதான் சொல்லவேண்டும்

ஊரடங்கு தளர்த்தியவுடன் செய்ய வேண்டிய முதல் பணிகளில் ஒன்று விழிப்புணர்வுப் பரப்புரையை ஆரம்பிப்பது என்றே சொல்வேன். உலகமயத்தோடு இந்தியாவுக்குள் நுழைந்த தொலைக்காட்சி ஊடகங்கள், இந்தியாவைத் தனது கட்டுக்குள் வைத்திருப்பதாக நினைக்கின்றன. அரசுகளும் கூட அப்படித்தான் நினைத்தன. அப்படி நினைக்கத் தொடங்கியதின் ஒருவெளிப்பாடு தான் இலவசத் தொலைக்காட்சிகளை வழங்கியது. அதன் வழியாகவே அனைத்துத் தரப்பு மக்களையும் சென்று சேர்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு. இலவசத் தொலைக் காட்சிகளை வழங்கிய அரசுகள் தான் அதன் பெரும்பகுதி நேரத்தைப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் மரபான போதனை நிகழ்ச்சிகளுக்கும் உரியதாக மாற்றும் வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளன. இவ்விரண்டின் பிடியில்தான் இந்தியத் தொலைக்காட்சியின் பார்வையாளர்கள் இருக்கிறார்கள் 

கொரோனாவைப்பற்றி தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியும் இதைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன என்பது உண்மைதான். என்றாலும் இவையெல்லாம் அதன் சரியான அர்த்தத்தில் போய்ச்சேரவில்லை என்பதும் உண்மை. நகர எல்லைக்குள் நிற்கும் காவலர் பிடித்தால் தண்டம் கட்டவேண்டியதிருக்கும் என்பதால் வண்டியின் பின்புறம் கட்டித் தொங்கவிட்டிருக்கும் தலைக்கவசத்தை- ஹெல்மட்டை - எடுத்து மாட்டிக்கொள்ளும் மனப்பாங்கில் தான் கொரோனாவைத் தடுக்கும் ஒரு எச்சரிக்கையாகச் சொல்லப்பட்ட முகமூடிகளை நினைக்கிறார்கள். அங்காடிகளிலும் சந்தையிலும் சேரும் கூட்டம் தன்னைத் தனித்து வைத்துக் கொள்ள வேண்டும்; அது தனது உடல்நலத்தோடு தொடர்புடைய நடவடிக்கை என்று நினைப்பதே இல்லை. வரிசையில் சென்று நுகரும் பழக்கம் தேவைப்படும் வங்கிகள், ரயில் பயணச்சீட்டு பெறும் திட்டிவாசல்கள், திரையரங்குகள், கோயில்கள் போன்றவற்றில் வரிசையாக நிற்பதை இழுக்காக நினைக்கும் மனநிலைதான் இங்கேயும் தொடர்கின்றன

21 நாள் ஏன் ஊரடங்கில் இருந்தோம் என்பதை விளக்கிச் சொல்லும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இன்னும் தீவிரமாக நடத்தப்பட வேண்டும். இந்திய மக்களில் ஒருசாரார் எல்லாவற்றையும் கொண்டாட்டங்களாகவும் களியாட்டங்களாகவும் நினைத்துப் பொழுதுபோக்காகப் பார்க்கின்றனர். இன்னொருசாரார் எல்லாவற்றையும் சமய நடவடிக்கைகளாகவும் சடங்குகளாகவும் அவற்றிற்கான நேர்த்திக்கடன் நிறைவேற்றல்களாகவும் பார்க்கின்றனர். இரண்டு மனப்பாங்குகளும் மாற்றப்படவேண்டும். மாறாத நிலையில் பரப்புரைகளால் எந்தப் பயன்களும் ஏற்படாது. ஏனெனில் இவ்விரு மனப்பாங்குகளும் விருப்பமில்லாதவர்களை ஒதுங்கிக்கொள்ள அனுமதிக்கும் வாய்ப்புக் கொண்டவை. ஆனால் மருத்துவம், நோய்த்தடுப்பு போன்றவை விலகலை அனுமதிக்காதவை. அதிலும் கொரோனோ போன்ற தொற்றுநோய்க்கெதிரான பரப்புரைகளிலிருந்து ஒருவருக்கும் விலக்களிக்க முடியாது

இந்திய வெகுமக்களுக்கு அரசியல் நடவடிக்கை மற்றும் அரசின் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு ஒன்றுபோல இருக்கிறதாக நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. அப்படி எப்போதும் இருந்ததில்லை என்பதுதான் உண்மை. ஒரு நாடகக்காரனாகவும் பல்கலைக் கழகப் பணியாளராகவும் எனது அனுபவங்கள் வழி இதனை உணர்ந்திருக்கிறேன். கடந்த 40 ஆண்டுகளில் விழிப்புணர்வுப் பரப்புரைக்காகத் தெரு நாடகங்கள் தயாரித்து மக்களைச் சந்தித்திருக்கிறேன். பரப்புரை வழியாக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்லும் குழுக்களுக்காகப் பயிலரங்குகள் நடத்திச் சிறுநாடகங்கள், வில்லுப்பாட்டு, கதாகாலட்சேபங்கள், பாடல் நிகழ்வுகள், மனிதச் சிற்ப உருவாக்கம் போன்றவற்றைச் செய்து கொடுத்திருக்கிறேன்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, எச்..வி.பாதிப்பு, நிலத்தடி நீர்ச்சேகரிப்பு, சாதிய ஒடுக்குதலுக்கெதிரான மனநிலையைத் தகவமைத்தல், பெண்களுக்கான கல்வி மேம்பாடு போன்ற பொருண்மைகளில் தயாரிப்புகள் செய்துள்ளேன். பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப் பணித் திட்டத்தின் பல்கலைக்கழக அளவு ஒருங்கிணைப்பாளராக இருந்து மாணவர்களின் கிராமப்புறச் சேவைகளை அதிகப்படுத்திய அனுபவங்களும் உண்டு. பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் கிராமங்களிலும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இதற்காகப் பயணங்கள் செய்திருக்கிறேன்

இந்த அனுபவங்களிலிருந்து சிலவற்றைச் சொல்ல முடியும். எப்போதும் அரசியல் விழிப்புணர்வு என்பது கடைசிக்கட்டம் வரை சென்று சேர்வதில்லை. அவர்களின் இடத்திற்கே சென்று சொல்லப்படும் தகவல்களையும் செய்திகளையும் அவர்களுக்கும் உரியதாக நினைத்து உள்வாங்குவதில்லை. பொது நிகழ்வுகளிலிருந்து தங்களை விலக்கி வைத்துப் பார்க்கும் மனப்பாங்கை இந்தியச் சமூகவியல் அமைப்பு உருவாக்கியிருக்கிறது. பொதுவெளியில் நடக்கும் நிகழ்வுகளை எனக்குரியதல்ல என நினைத்து ஒதுக்கிக் கொள்கின்றனர். மரபான இந்தியக் கிராமங்களில் தன்னிறைவுப் பொருளாதார நடைமுறைகள் இருந்தன. அதனை ஐரோப்பியப் பொருளியல் வல்லுநர்கள் ஆசிய உற்பத்திமுறை என வகைப்படுத்திப் பேசியுள்ளனர்

கிராமக்கட்டமைப்பை மையமாகக் கொண்ட ஆசிய உற்பத்தி முறையில் தனித்தனிக் குழுக்களுக்கு தனித்தனியான வேலைகளும் பணிகளும் இருந்தனவே தவிர அனைவரும் சேர்ந்துசெய்ய வேண்டிய பணிகள் எப்போதும் இருந்ததில்லை. குடிமராமத்து, கண்மாய் சீரமைப்பு, கோயில் பணிகள், குளம்வெட்டுதல், கால்வாய் கட்டுதல் போன்றனவற்றில் கூட வெளிகளைப் பிரித்துக் குழுக்களுக்கு ஒதுக்கிவிட்டு மேலாண்மை செய்யும் பணிப்பிரிப்பு முறைகளையே நாம் பின்பற்றியிருக்கிறோம். ஒதுக்கித் தரும் பணியை முடித்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளும் மனநிலைதான் வெளிப்பட்டுள்ளது. குலத்தொழில், குலக்கல்வி போன்ற சொற்களை குறுகலான ஒன்றாகப் பார்க்காமல் விரிந்த தளத்தில் யோசித்து விளங்கிக் கொண்டு அதனை மாற்றும் பரப்புரையை இப்போது நேரடியாகச் செய்யவேண்டும். நீண்ட காலத் திட்டமாகக் கல்விப்பரப்பிற்குள் செய்முறை வகுப்புகளாக நடத்திட வேண்டும்

 

 

*********************** 

தகவமைப்புகள் தொடங்குகின்றன

 

பதினைந்து நாட்கள் அதிகம் 

 

மூன்று நாட்களில் முடங்கிவிடும்

புன்னகைப்புனைவு 

 

 

ஒரு கோடி இழப்பீடு 

 

கற்பனையின் உச்சம் 

கனவுகளின் நீட்சி


 

புனைவுகள் கற்பனைகள் 

 

எண்ணிக்கைகள் புள்ளிவிவரங்கள் 

நகைக்கலாம்; ரசிக்கலாம்

 

 

 

விபத்துகளால் மரணங்கள்

 

காப்பீடு செய்தவர்கள் நட்ட ஈடுபெறுவதில் சிக்கல் இல்லை

 

 

 

என் உயிர் என் கையில்

 

வாழ்தலின் காரணங்கள் 

என்னிடம் இல்லை

 

 

*********************** 

 

 

 

மாதம் ஒன்று முடிந்துவிட்டது 

 

 

 

என்னை அடைத்துக்கொண்டு இன்றோடு ஒருமாதம் ஆகிறது. சென்னையிலிருந்து வருவதற்கு போட்டிருந்த ரயில்பயணத்திற்கான முன்பதிவை நீக்கிவிட்டுக் காரில் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போனார்கள் மகளும் மருமகனும். பேரனுக்கும் பள்ளிக்கூடம் இல்லை. எங்களோடு தங்கிவிட்டான்

 

 

அப்போது ஊரடங்கும் நாடடங்கும் அறிவிக்கப் படவில்லை. அறிவிக்கும் தயாரிப்புகளில் இருந்தன அரசுகள். அறுபதைத்தாண்டியவர்கள் மேல் கொரோனாவுக்குக் காதல் என்பதால் தள்ளி இருக்கவேண்டும் எனப் பிள்ளைகள் வலியுறுத்தல். அதிகமும் எங்களைவிட்டு விலகியே இருக்கும் மகனும் சொல்லிவிட்டான். ஊர்சுற்றவேண்டாம்; வெளியில் போகவேண்டாம். கொரோனா ஒன்றும் உடனடியாகக் கொல்லும் வியாதியில்லை என்று வாதாடிப்பார்த்தும் அடங்கிப்போவதைத் தவிர வேறு வழியில்லை

14 நாட்கள் தனித்திருக்கவேண்டும். பிரிந்திருக்க வேண்டும். தனித்திருப்பதும் பிரிந்திருப்பதும் எனக்குச் சிக்கல் இல்லை. அடங்கியிருக்கவேண்டும் என்பதுதான் பெரும்சிக்கல். மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு அவர்கள் தவித்திருக்கவேண்டும் என்பது அவர்களின் அச்சம். அச்சமும் பயமும் நோயின் எச்சரிக்கைகள். எல்லா எச்சரிக்கைகளும் இருத்தலுக்கான எத்தணங்கள். ஆம். நாம் இருக்கவேண்டும்.எப்படி இருக்கவேண்டும். நாட்டைவிட்டுக் காட்டுக்குள் உறைந்த தவசிகளைப் போல.. அப்படியெல்லாம் இல்லை. வீடு இருக்கிறது. உலகம் வீட்டுக்குள் வருகிறது. காட்சிகள் இருக்கின்றன; கனவுலகங்கள் விரிகின்றன. அதிகாரத்தின் ஆணைகள் அச்சமூட்டும்படி வருகின்றன. அக்கப்போர்களும் ஆவலாதிகளும் வந்துவிடுகின்றன 

மதுரைத் தெருக்களைக் கால்வழி கண்டவன். புதுவைத் தெருக்கள் சைக்கிளில் அறிந்தவை. இரண்டாம் ஆட்டம் பார்க்க மதுரைப் பல்கலைக்கழக விடுதியிலிருந்து கருமாத்தூர் போய்வருவோம். இலக்கியக்கூட்டத்திற்காக முத்தியால் பேட்டையிலிருந்து வில்லியனூருக்குப் போய்வந்ததுண்டு.நகரப்பேருந்துகளில் சின்னச்சின்னப் பயணங்கள். இப்போதிருக்கும் பெருஞ்சாலைகள் அப்போதில்லை. ஒற்றை வழிச்சாலைகள் தான். ஏறிக் கடைசி ஊரில் இறங்கிப் பருப்புவடையோடு இட்லியைப் பிச்சுப்போடுவிட்டுத் திரும்பிவந்ததுண்டு. கிராமங்கள் எப்படி விழிக்கின்றன எனப்பார்ப்பதற்காக அதிகாலைப் பேருந்துகளில் ஏறிச் சுரண்டைக்கும் வள்ளியூருக்கும் திசையன்விளைக்கும் களக்காட்டுக்கும் கயத்தாறுக்கும் போன நாட்கள் இனித் திரும்பப்போவதில்லை

விடுமுறைக்காகப் பேரன் வந்திருக்கும் காலம் தான் எனக்கு நெல்லையைச் சுற்றும் நாட்கள். மீன்கடியோடு ஆற்றில் குளிப்பதைக் காட்டுவதற்காகக் குறுக்குத்துறை தொடங்கி முறப்பநாடு வரையில் பத்துக்கும் மேற்பட்ட படித்துறைகளையும் அல்லாத ஒற்றையடிப்பாதைகளையும் அறிமுகம் செய்திருந்தேன். ஒவ்வொருநாளும் வேறுவேறிடத்தில் குளித்துவிட்டு வருவோம். காலையில் என்றால் குளித்துவிட்டு வரும் வழியில் எங்காவது சாப்பிடுவோம். மாலையில் என்றால் எங்காவது சிற்றுண்டியை முடித்துக்கொண்டு ஆற்றுக்குப்போவோம். குளிக்கப்போகும் இடத்தைப் பொறுத்து அந்த இடங்கள் மாறும். இந்தமுறை 20 நாட்கள் இருந்தும் ஒரு ஆத்துக்குளியல் கூட இல்லை. அவனுக்குப் பிடித்த வெங்காய ஊத்தப்பமும் இல்லை; முட்டை சமோஜாவும் இல்லை. ஐபோக்கோவில் கிடைக்கும் இனிப்பில்லா ஐஸ்க்ரீமும் இல்லை. தாமிரபரணி ஓடிக்கொண்டிருக்கிறது. மீன்கள் கடிக்க அழுக்கேறிய மனிதக்கால்கள் இல்லை

வீடு.. வீடுகள்.. விசாலாமான வீடுகள். ஓரறைவீடுகள், ஒண்டுக்குடித்தனங்கள், குடிசை வீடுகள்,கூரை வீடுகள், ஓட்டுவீடுகள், காரைவீடுகள்,மாடிவீடுகள், மாளிகைகள், அரண்மனைகள்.. எவையும் பாதுகாப்பில்லை.ஒருமாதமாக வீட்டுச்சாப்பாடு; வீட்டில் தங்கல்;வீடு பாதுகாப்பானது. வீடடைதல் வேண்டிய மனிதர்களுக்கு வீடும் அச்சமூட்டுகின்றன

 

முகத்தை மூடிக்கொள்ள ஒரு துணி வேண்டும்; கைகழுவிக்கொள்ள சோப்புவேண்டும். கட்டிப்பிடித்துக்கொள்ளக் காதல் மனைவியும் வேண்டாம் .வேண்டும் என்றனவெல்லாம் வேண்டாமாகும் உலகம். எங்கிருக்கிறது உயிர். ஏழுகடல் தாண்டி, ஏழுமலை தாண்டி, ஏழு குகை தாண்டி அண்டரண்டாப் பட்சியின் காவலில் இருக்கும் கிளிக்கூண்டிற்குள் இருக்கும் கிளியின் வாலசைப்பில்.. 

 

****************** 

நிழலுக்கு அஞ்சிப் பகலை 

வெறுக்கிறது ஒரு பறவை 

அது 

இருட்டின் குழந்தை 

கறுப்பின் அழகு 

 

 

 

நெருங்கி உறவாடும் மலைத்தொடர்களை 

 

ஒற்றைப் பறப்பில் கடக்கும் 

வலிமை மிக்கது 

ஆனால் சுற்றம் இழந்தது 

கண்ணீரற்றது 

புயலிலும் உயரப்பறந்து திரிந்து 

அலையும் வாழ்க்கையில் 

உயிரை எழுதுகிறது

**************************** 

கவிதைக்குச் சேரன் இட்டுள்ள தலைப்பு: பறவை/.24/அஞர்/ டிசம்பர்,201

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்