முன்னுரைத்துச் சென்றார் தோப்பில்.


இலங்கையில் வெடித்த குண்டுகளின் ஆணிவேர்கள் எங்கே இருக்கின்றன என்பதைச் சொல்ல இயலாதுதான். ஆனால் ஒரு ஊருக்குள் - ஒரு தெருவுக்குள் நுழையும் புதுவகை அரசியலுக்கும் மரபான மனிதர்களுக்குமான முரணைப் பேசிய தோப்பில் முகம்மது மீரானின் அஞ்சுவண்ணம் நாவல் முன்பே சொல்ல முயன்றது என்பது இப்போது நினைவுக்கு வருகிறது. இந்தியாவை முன்வைத்துச் சொல்லப்படும் பல செய்திகளும் விவாதங்களும் விளக்கங்களும் இலங்கைக்கும் பொருந்தும். ஏனென்றால் இலங்கையும் முரண்பட்ட இன, மத, சாதி வேறுபாடுகளால் அலைக்கழிக்கப்படும் பரப்புதான். அஞ்சு வண்ணம் தெரு நாவல் வெளியானது 2008 .வாசித்த பின் அப்போது எழுதிய குறிப்பு இது. திரும்பவும் படித்தால் இன்னும் விரிவாக எழுதலாம்.:
********* ****************
அந்நாவலை வாசித்து முடித்தவுடன் ‘இதுசமகால வாழ்வை விசாரிக்கும் நாவல்’ என்று வகைப்படுத்திப் புரிந்து கொள்ள வேண்டும் என நினைத்ததை விட ‘அஞ்சு வண்ணம் தெரு சமகால அரசியலை - அதன் நுட்பமான இயங்குநிலைகளை ஆழ்ந்த கரிசனத்தோடு விவரிக்கும் நாவல்’ எனச் சொல்வதே சரியாக இருக்கும் எனத் தோன்றியது. ஒவ்வொரு நாவலையும் சாதாரணமாக வாசித்து விட்டுப் போய்விடலாம். ஆனால் அது எழுப்பும் தொனியோடும், விவாதிக்க விரும்பும் அரசியல் சமூகப் பின்புலத்தோடும் வாசிக்கிற போதுதான் படைப்பாளியின் அக்கறைகள் மீது விமரிசனத்தை முன் வைக்க முடியும் என்பது எனது கருத்து.

அஞ்சு வண்ணம் தெருவில் வந்து போகும் பாத்திரங்கள் இரண்டு விதமானவர்களாக இருக்கின்றனர். தங்களின் முன்னால் நடக்கும் மாற்றங்கள் சரியில்லை; மோதல்களையும் முரண்பாடுகளையும் வலியத் தேடிச் செல்லும் நோக்கத்தோடு அடுத்த தலைமுறை வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது; அதனால் இதுவரை பிடிமானத்துடன் இருந்த பழைய வாழ்க்கை முறை ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது என்பதை இயலாமையுடன் பார்த்துக் காலம் கடத்திக் கொண்டிருப்பவர்கள் முதல் வகையினராக உள்ளனர். இரண்டாவது வகையினர் உருவாக்கப் படும் அச்ச உணர்வுக்குள் தங்களை இணைத்துக் கொண்டு, முன் வந்து நிற்கும் வழிகாட்டுதல்களால் ஈர்க்கப்பட்டு அதனை நோக்கிப் பயணம் செய்யும் நிலையினர். இவ்விரு வகையினரும் சந்திக்கும் பரப்பாக அஞ்சுவண்ணம் தெரு நகர்கிறது. அது நகர்கிறது என்பதை விடக் காலம் அப்படி நகர்த்துகிறது; மாற்றுகிறது என்பதை மீரான் தனது எளிய கதை சொல்லல் மூலம் எழுதிக் காட்டியுள்ளார்.

பழைமை வாதத்திலிருந்து இயல்பாக மாறிக் கொண்டிருந்த இந்தியப் பன்முக சமுதாயத்தின் சகல தளங்களிலும் இந்த முரண்பாடு தீவிரமாகி ஓரளவு ஏற்கத்தக்க அந்த மாற்றத்தைக் குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக உருவாக்கப்படும் மத அடிப்படை வாதம் இந்திய இசுலாமியர்களின் பிரச்சினை மட்டும் அல்ல. பெரும்பான்மையினர் எனத் தங்களைக் கருதிக் கொள்ளும் இந்துக்களின் பிரச்சினைகளும் தான். இந்து, இசுலாம், கிறித்தவம் என ஒவ்வொரு சமயங்களிலும் செயல்படும் சாமியார்களும் , போதகர்களும், ‘ஒவ்வொருவரும் தங்கள் அடையாளத்தைப் பேணுவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும்’ எனச் சொல்லி அடிப்படைவாதத்தை நோக்கி அடுத்த தலைமுறையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இவற்றை மறுப்பவர்கள் போலத் தோற்றம் தரும் அரசியல்வாதிகள் மத அடிப்படை வாதத்தை விடவும் ஆபத்தான சாதீய அடிப்படை வாதத்திற்குள் சமூகங்களை பிரித்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதே நேரத்தில் இந்திய தேசம் பொருளாதாரத் தளத்தில் நாலுகால் பாய்ச்சலில் முன்னோக்கிப் பாய்வதாகவும் சொல்லப்படுகிறது. அந்தப் பாய்ச்சலை முன் வைக்கும் அரசுகளும், அவற்றின் திட்டமிடும் வல்லுநர்களும் கவனித்து முன்னுரிமை தர வேண்டிய அடைப்படை வாதங்களின் பரிமாணங்களை உணர்ந்ததாகத் தெரியவில்லை. அது முதலில் உணரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வேலையைப் படைப்பாளி செய்ய முடியும் என்பதை மீரான் இந்த நாவல் வழியாகச் செய்துள்ளார். இந்தப் பின்னணியில் தான், மீரானின் அஞ்சு வண்ணம் தெரு சரியான அரசியல் நாவலாக வந்திருக்கிறது எனக் கருதுகிறேன் . மிகுந்த கரிசனத்தோடும், சமூக அக்கறையோடும் மீரான் இந்த நாவலை எழுதியுள்ளார் என்று நான் வாசித்துப் புரிந்து கொண்டிருக்கிறேன். வாசிக்கிற ஒவ்வொருவரும் அதை உணர வேண்டும்; உணர முடியும் என்றே தோன்றுகிறது.

*****************

சென்னை நோக்கிப் போகும் இந்தப் பயணம் வருத்தம் கூடியதாகிவிட்டது. நெல்லையில் இருந்திருக்க வேண்டும்.

1991-92 ஆக இருக்கும். கி.ரா.வைப் பார்க்கப் புதுவை வந்திருந்தார். சந்தித்த அன்று முதல் எனக்கு மாமா தான். கி.ரா., பெரிய மாமா ஆனதால், நான் சின்ன மாமா ஆகிவிட்டேன். அப்படித் தான் அழைப்பார். அவர் மேடையில் பேசுவதைக் கேட்பதைவிட தொலைபேசியில் பேசுவதை விரும்பிக் கேட்பேன். நீண்ட நேரம் பேசுவோம். இந்த ஆண்டு சாகித்ய அகாதமியின் கடைசிக் கட்ட முடிவு எடுக்கப்பட்ட விதத்தை விரிவாகச் சொன்னார். எஸ்.ரா.வுக்குக் கிடைக்கக் காரணமான குழுவில் இருந்த மகிழ்ச்சி வெளிப்பட்டது. சிரிப்பு, பேச்சு என நீண்ட உரையாடல் அது.

கடலோரக் கிராமத்தின் கதை, சாய்வு நாற்காலி தவிர எல்லாமே வந்தவுடன் அழைத்து தந்து படித்துக் கருத்து கேட்பார். அவ்விரண்டையும் போலவே கூனன் தோப்பு, துறைமுகம், அஞ்சு வண்ணம் தெரு, குடியேற்றம் என எல்லா நாவல்களுமே தமிழக இசுலாமிய சமூகத்தின் உள்கட்டுமான நெருக்கடிகள் பற்றிய அலசல்களே. வியாபாரம் சார்ந்து திருநெல்வேலியில் வாழ நேர்ந்தாலும் எழுத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே தான் இருந்தார். சிறுகதைகளில் குறிப்பான வெளிகளைப் பார்க்க இயலாது.

சாய்வு நாற்காலிக்காக சாகித்ய அகாதமி விருது(1997) பெற்றவுடன் ஒருநாள் கருத்தரங்கம் ஒன்றை 1998 மார்ச்சில் நடத்தியபோது மகிழ்ச்சி அடைந்தார். அதற்கென உள்ளூர்ப் பெருந்தனக்காரர் ஒருவரை அணுகியபோது அவருக்குத் தோப்பில் எழுத்துகள் பற்றித் தெரிந்திருக்கவில்லை.இசுலாமிய எழுத்தாளராக அவரை நினைக்கவில்லை என்பதும் தெரிந்தது. படிப்பு உதவிக்கட்டணம் வழங்குவதற்கு விண்ணப்பம் தருவதுபோல விண்ணப்பம் ஒன்றை எழுதித்தரச் சொன்னார். எழுதித்தந்துவிட்டுக் கருத்தரங்கத்தை முடித்தபின் வருடக் கணக்கு முடிக்கும்போது இரண்டாயிரம் ரூபாய் அனுப்பி வைத்தார் அந்தப் பெருந்தனக்காரர். அக்கருத்தரங்கைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வசந்திதேவி தொடங்கிவைத்தார்.

பேராசிரியத் திறனாயவாளர்கள் தி.சு.நடராசன், துரை.சீனிச்சாமி, பா.ஆனந்தகுமார் ஆகியோர் பேசினார்கள். துறைக்கு அழைக்கும்போது மறுக்காமல் வருவார். வாகனம் ஏற்பாடு செய்தால் போதும். சில தடவை நானே போய் விடுவேன். பல்கலைக்கழகத்தில் ஆட்சிப்பேரவை, பாடத் திட்டக்குழு , விருதுத்தேர்வுக்குழு எனப் பலவற்றில் இருந்தார். கடைசியாக -பிப்ரவரியில் ஆங்கிலத் துறை மேடையில் ஒன்றாக அமர்ந்து பேசினோம்.
அதன்பிறகு இலங்கையிலிருந்து சிராஜ் என்ற நண்பர் வந்தபோது தொலைபேசியில் பேசினேன். தோப்பில் எடுக்கவில்லை.' பார்க்க வரலாம்; நீண்ட நேரம் இருந்து பேச முடியாது' என்று எடுத்த பெண் சொன்னார். அவரோடு போய் ஒரு எட்டுப்பார்த்துவிட்டு வந்திருக்கலாம். பார்க்க முடியாமலேயே போய்விட்டது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்