நம் அக்கறைகள் வேறு மாதிரியானவை-கவிதைப்பட்டறை

நேற்று நடந்த கவிதைப்பட்டறையைப் பற்றிய போகன் சங்கர் குறிப்பு மீது அபிலாஷ் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். கவிதை எழுதுவது குறித்த சிந்தனைகளைத் தூண்டியதில் இந்தப் பயிலரங்கம் சில அடிகளை முன்வைத்துள்ளது என்ற வகையில் மகிழ்ச்சி.. அவருடைய கட்டுரையைப் படிக்கும் முன்பு இந்தக் குறிப்பையும் வாசித்துக்கொள்ளுங்கள்.
இருவரையும் அழைத்து- கவி சமயவேல், கவி போகன் சங்கர் - ஒரு கவிதைப்பட்டறை நடத்துவது என்று திட்டமிட்டபோது இரண்டு வேண்டுகோள்களைச் சொல்லியிருந்தேன். தங்களது வெளிப்பாடு அல்லது மொழி கவிதைக்குரியதாக மாறிக்கொண்டிருக்கிறது என்று உணர்ந்த கணத்தைச் சொல்லமுடிந்தால் நல்லது என்று கேட்டிருந்தேன். அப்படியொரு கணம் மாணவர்களுக்கு உண்டான தருணம் இருந்தால் அதனை நினைத்துக்கொள்ளலாம் அல்லது அப்படியொரு கணத்தை உணருவதெப்படி என்பது பிடிபடலாம் என்பது எனது நம்பிக்கை. அந்த நம்பிக்கை முழுமையாக நேற்று நடந்தது என்றுசொல்ல முடியாது. நவீன கவிகள் இப்படியான மொழி அல்லது கணம் வாசிப்பின் வழியாகவே கிடைக்கும் என நம்புகிறார்கள். அது ஓரளவு உண்மையாக இருக்கலாம். அதைத்தாண்டி வாசிப்பிற்கப்பால் ஒருவர் தனது மொழி அல்லது வெளிப்பாடு வேறுவிதமாக இருப்பதை உணரமுடியும்.
======
இதன் பிறகு அவர்களே தேர்வு செய்து தந்த இருவரின் 10 + 10 கவிதைகளையும் பங்கேற்றவர்களிடம் வாசிக்கக் கொடுத்திருந்தேன். அந்தக்கவிதைகள் பற்றி - எழுதிய அனுபவம் - எழுதத்தூண்டிய அனுபவம்பற்றி உரையாடலாம் என்றும் திட்டமிட்டிருந்தேன். இதெல்லாம் சரியாகவே நடந்தது. கவி போகன் சங்கரின் கவிதையொன்றில் ’முலை’ என்ற சொல் இரண்டுமூன்றுமுறை வந்த ஒருகவிதையை அந்தப் பெண் வாசித்து விவாதித்தாள். கவி சமயவேலின் முக்கியமான கவிதைகளைப் ’புரியவில்லை’ என்ற வழக்கமான குற்றச்சாட்டிலிருந்து பேசவில்லை. வாசித்துக்காட்டிவிட்டு இயல்பாக உள்ளே நுழைந்து உரையாடினார்கள். உரையாடல்கள் பெரும்பாலும் எழுத்துமுறை சார்ந்ததாகவே இருந்தன.
கவிதை எழுதுவதற்கான குவிமையத்தை நோக்கி நகர்த்துக் கொண்டுவந்தபின் கவிதை எழுதச் சொல்வார்கள் என்று நினைத்தேன். ஆனால் பங்கேற்பாளர்களின் விருப்பத்திற்கு விட்டுவிட்டு ஒதுங்கிக்கொண்டார்கள். அப்படி ஒதுங்கியதால் மாணாக்கர்கள் ஏற்கெனவே தாங்கள் எழுதிய கச்சாப்பொருட்களைத் தேடிப் போய்க் கவிதையாக எழுதிவிட்டார்கள். எழுதித்தந்த கவிதையை ஏற்பது, நிராகரிப்பது, என்ற இரட்டைக்குள் நிற்காமல் கவிதையாக மாற்றும் யோசனைகளை இருவரும் முன்வைத்தார்கள்.
பங்கேற்பாளர்கள் எழுதிய கவிதைகளைக் கவிகள் வாசித்துக்கொண்டிருந்தபோது, நான், நிகழ்காலத் தமிழ்க் கவிதைகள் தனக்குள்ளே பேசுவதை நோக்கி நகர்ந்ததைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். பங்கேற்ற மாணவர்களும் மாணவிகளும் கவனமாகவே கேட்டார்கள். அவர்கள் இனிமேல் எழுதப் போகும் கவிதைகளில் அவர்கள் தனக்குள்ளேயே பேசும்விதமாகக் கவிதைகள் எழுதக் கூடும்.
இதுவரை நடத்திய கவிதைப் பட்டறைகளிலிருந்து ஒரு பட்டறையை நடத்துவதற்கான பாடத்திட்டமும் பாடங்களும் உருவாக்கவேண்டும் என்பது புரிந்துள்ளது. அதற்குப் பிறகு அதற்கான ஆசிரியர்களையும் கவிகளையும் முடிவுசெய்யவேண்டும் என்பதும் புரிந்துள்ளது. அந்தப் பயிலரங்கைப் பல்கலைக் கழகத்திற்குள்ளே தான் செய்யவேண்டும் என்பதில்லை. ஆர்வமுள்ளவர்களோடு அப்படியொன்றை நடத்திப்பார்க்கவேண்டும்.
இளம் எழுத்தாளன் கண்டிப்பாய் வாசிக்க வேண்டுமா?

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை மாணவர்களிடம் கவிதை குறித்து சமயவேலுடன் சேர்ந்து உரையாடிய அனுபவத்தை போகன் சங்கர் பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். அம்மாணவர்கள் இன்றும் பாரதிதாசனை தாண்டி வாசித்திராதது, தாம் எழுதும் கவிதைகளில் பாரதிதாசனையே பிரதியெடுப்பது குறித்த வருத்தத்தை தெரிவித்திருந்தார். மனுஷ்யபுத்திரனை கூட இவர்களுக்கு தெரியவில்லை என சமயவேலுக்கு சோர்வாகி விடுகிறது. தம் கவிதைகள் உண்மையில் கவிதையே அல்ல என சொல்லப்பட அம்மாணவர்களும் வேதனையில் தவிக்கிறார்கள். இப்படி சிவாஜிகணேஷன் பட கிளைமேக்ஸ் போல் ஆகி விடுகிறது.
எனக்கு இந்த பதிவு ஒரு விசயத்தை நினைவூட்டியது. நான் கூட பதின்வயதில் இந்த மாணவர்களை போலத் தான் இருந்தேன். எனக்கு நவீன கவிதையை அறிய எந்த வழியும் இல்லை. தமிழ் பாட நூல்கள் வழி அறிமுகமான மரபு கவிதை மீது ஈர்ப்பு ஏற்பட, நான் சந்தம், தளை பின்பற்றி மரபு கவிதை எழுத ஆரம்பித்தேன். பள்ளியில் தமிழாசிரியரிடம் கொண்டு போய் காட்டுவேன். அவர் ”வடிவம் சரியாக இருக்கிறது, ஆனால் ஏன் இவ்வளவு காதல் உருக்கம், மருகுதல்? சமூக நோக்கோடு எழுதலாமே?” என்பார்.
இதன் பின்னர் எனக்கு ஊரில் கலை இலக்கிய பெருமன்றத்துடன் பரிச்சயம் ஏற்பட்டது. அங்கு நடந்த இலக்கிய கூட்டங்களில் நான் மரபு கவிதையாக பொழியத் துவங்கினேன். மன்றத்தினர் எனக்கு நவீன கவிதையை அறிமுகம் செய்தார்கள். அதாவது போதிக்கவில்லை. ஆனால் அவர்களின் உரையாடல்களை கவனித்த போது நவீன கவிதையின் பிதாமகர்களின் பிரபலமான கவிதைகள், பாணி, பார்வை பற்றி தெரிய வந்தது.
அடுத்து நான் நவீன கவிதையின் பாடுபொருளை மரபுக்கவிதை வடிவில் புனையத் துவங்கினேன். ஆனால் மன்றத்தினர் இதை வேடிக்கையாக பார்க்கவில்லை. என்னை திருத்த முயலவில்லை. ”நவீன கவிதைகளை போய் முதலில் படி, பிறகு எழுது” என சொல்லவில்லை. அவர்கள் என்னை வாசிக்கவே சொல்லவில்லை. இங்கே தான் முக்கியமான ஒரு நுணுக்கம் உள்ளது.
ஒரு தத்துவவாதியாக விரும்புகிறவன் நிச்சயம் தனக்கு முன் வந்த தத்துவங்களை படிக்க வேண்டும். வரலாற்று மாணவனுக்கும் அவ்வாறே. ஆனால் எழுத்தாளனுக்கு இது தேவையில்லை. சரியான வழிகாட்டுதல் இருந்தால் எந்த நவீன வாசிப்பும் இன்றி முக்கியமான நவீன படைப்புகளை ஒருவர் எழுத முடியும். தமிழில் இதற்கு சில நல்ல முன்னுதாரணங்கள் உண்டு. (அவர்களைப் பற்றி மற்றொரு சந்தர்பத்தில் எழுதுகிறேன்.)
இது எப்படி சாத்தியமாகிறது? நவீன இலக்கியம் தன்னிலையானது. மரபு இலக்கியமோ புறநிலையானது. இது தான் முக்கிய வித்தியாசம். கம்பன் தன்னைப் பற்றி எழுதுவதில்லை. அவர் ராமனைப் பற்றி எழுதினார். ஆனால் பிரமிளோ சுந்தர ராமசாமியோ கல்யாண்ஜியோ முகுந்த் நாகராஜனோ, அல்லது மேற்சொன்ன பதிவில் வரும் போகன், சமயவேல் ஆகியோரோ தம்மைப் பற்றி தம் தரப்பில் இருந்து தான் எழுதுகிறார்கள். ”ஏ சமூகமே”, “ஏ வானமே” என வெளியில் இருந்து கருத்து கூறுவதில்லை. தமக்கு உள்ளிருந்து சமூகத்தை, வானத்தை பார்த்து கருத்து எழுதுகிறார்கள்.
இந்த வித்தியாசத்தின் பின்னே முன்னூறு வருட மேற்கத்திய அறிவுலக மாற்றங்கள் உள்ளன. நாம் இவற்றை ஒரு இளம் கவிஞனுக்கு விளக்க தேவையில்லை. அவனிடம் தன் சொந்த வாழ்க்கையின் வித்தியாசமான அனுபவங்கள் பற்றி தன் தரப்பில் இருந்து (first person), ”நான்” என்று ஆரம்பித்து எழுத சொன்னால் போதும். அது நவீன கவிதையோ சிறுகதையோ ஆகி விடும்.
எல்லார் வாழ்க்கையிலும் ஒரு மிக அந்தரங்கமான, வித்தியாசமான அனுபவம் இருக்கும். ஒரு மரணம், தெருவில் பார்த்த வித்தியாசமான மனிதர், நண்பர்களுடன் சென்ற பயணம், யாரோ தந்த அவமானம் இப்படி. ராஜேந்திர சோழனில் ஒரு சிறுகதை உண்டு, ஒரு பதின்வயது பையனின் சுய இன்ப அனுபவம் பற்றியது. கொல்லையில் அவன் சுய இன்பம் செய்யும் போது அங்கே பாம்பு புற்றுகள் இருக்கும். இந்த சூழல் வர்ணனை மூலம் அவர் கதையை இன்னொரு தளத்துக்கு எடுத்து செல்வார். ஆனால் கதையின் மையம் அந்தரங்கமானது: சுய இன்பம்.
கலை இலக்கிய பெருமன்றத்தில் யார் மரபுக்கவிதை / வானம்பாடி கவிதை கொடியுடன் வருகிறார்களோ அவர்களை சுய அனுபவங்கள் பற்றி எழுத தூண்டுவார்கள். அவர்களாகவே கொடியை கீழே வைத்து விடுவார்கள். இவ்வாறு வைரமுத்துவின் கொடியுடன் கை நிறைய வார்த்தை ஜால கவிதைகளுடன் மன்றத்துக்கு வந்தவர் தான் லஷ்மி மணிவண்ணன். அவர் சில வருடங்களில் ஒரு முக்கிய நவீன இலக்கியவாதி ஆனார்.
சமகால இலக்கியத்தில் நாட்டார் வழக்கு, ஊடகங்கள், நம்பிக்கைகள், தொன்மங்கள் ஆகியவற்றுக்கு முக்கிய இடம் உண்டு. தன்னனுபவத்துடன் இவையும் சேர்ந்து கொண்டால் சமகால (பின்நவீனத்துவ) இலக்கியம் ரெடி.
மன்றத்தினர் இந்த வகை எழுத்து வாசிப்பின் வழியாக வெளிவர வேண்டியது அல்ல என்பார்கள். எழுத்து நம் வாழ்க்கையினுள் உறைந்து இருக்கிறது. அதை வெளிக்கொணர்ந்தால் போதும். மன்றத்தில் தீவிர இலக்கிய நூல்களை, விமர்சன, அரசியல், சமூக, தத்துவ நூல்களை படிப்பார்கள். விவாதிப்பார்கள். ஆனால் விமர்சகர்கள் தாம் இதை பெரும்பாலும் செய்வார்கள்.
வாசிப்பு சில நேரம் எழுத்துக்கு தடையாகி விடும். சரளத்தை கெடுத்து விடும். யாரையோ போல செய்ய தூண்டும். அப்படி என்றால் இளம் எழுத்தாளன் வாசிக்கவே தேவையில்லையா? நான் இது பற்றி முன்பு ஜெயமோகனிடம் உரையாடியிருக்கிறேன். அவர் ஒருவர் வாசிப்பு இன்றியே தன் அனுபவம் மூலம் சிறந்த சில கதைகள், கவிதைகளை எழுத முடியும் என ஏற்றுக் கொண்டார். ஆனால் சீக்கிரமே சரக்கு தீர்ந்து போகும். எழுத்தாளன் கையளவு அனுபவத்தை கொண்டு அதன் பலவித பரிமாணங்களை, ஆழங்களை அகலங்களை வாசகனுக்கு காட்டிக் கொண்டே இருக்கிறான். கொஞ்சத்தை பெரிதாக காட்டுகிறவனே எழுத்தாளன்.
இதற்கு தான் அவனுக்கு வாசிப்பு அவசியம். இதற்கு சிறந்த உதாரணமாய் இமையத்தை காட்டலாம். அவர் நேரடி அனுபவங்களில் இருந்து தான் எழுதுகிறார். ஆனால் தன் மொழி நுணுக்கம் மூலம் ஒரு பாத்திரத்தின் உரையாடலில் மனம் எப்படியெல்லாம் ஜாலம் காட்டுகிறது என அவரால் பேச முடியும். இதற்கு அவரது நீண்ட கால வாசிப்பு, க்ரியா ராமகிருஷ்ணன் அளித்த பயிற்சி அவருக்கு பெரிதும் பயன்படுகிறது.

சரியான வழிகாட்டுதல் இருந்தால் இந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை மாணவர்கள் மத்தியில் இருந்து ஒரு நல்ல கவிஞனோ சிறுகதையாளனோ தோன்ற முடியும். அவர்கள் எதையும் புதிதாய் வாசிக்க வேண்டியதில்லை. யாரையும் பிரதியெடுக்காது சொந்த அனுபவத்தை, கூசச் செய்யும் ஒரு அனுபவத்தை, நேரடியான மொழியில் எழுதினால் போதும். அதை ஒருவர் எடிட் செய்து கொடுத்தால் போதும்.

நான் ஆரம்பத்தில் தன்னிலை, புறநிலை பார்வைகள் பற்றி சொன்னேன். இந்த மாணவர்களுக்கு பள்ளியில் இருந்து கல்லூரி முதுகலை வரை நவீன கவிதைகள் மிக மிக அரிதாகத் தான் அறிமுகம் ஆகின்றன. ஆனால் நவீன கவிதைக்கு வெகுநெருக்கமான சங்கக் கவிதைகளும் பெரிதாய் வகுப்பில் விவாதிக்கப்படுவதில்லை. சங்கக் கவிதைகளை அதிகமாய் அதன் நுணுக்கங்களை வெளிப்படுத்தும் வண்ணம் போதித்தாலே இம்மாணவர்கள் நவீன கவிதைக்கு வெகுநெருக்கமாய் வந்து விடுவார்கள். ஆனால் பாடத் திட்டம் வகுப்பவர்களுக்கு இந்த மாதிரி அக்கறைகள் எல்லாம் இல்லை.
நான் மன்றத்துக்கு சென்ற புதிதில் ஒரு கேள்வி கேட்டேன். ஏன் பள்ளியில் சங்கப் பாடல்கள் சொல்லித் தருவதில்லை? ஏன் நீதி இலக்கியம், சமய இலக்கியம் மட்டுமே பயிற்றுவிக்கிறார்கள்? பாடத்திட்ட குழுவை சேர்ந்த ஒருவர் சொன்னார்: “பெண் ஆசிரியர்கள் சங்கக் கவிதைகளை சொல்லித் தர கூச்சப்படுகிறார்கள். அதில் ரொம்ப செக்ஸ் இருக்கிறது என சிரமப்படுகிறார்கள்”.

நம் அக்கறைகள் வேறு மாதிரியானவை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்