சாதியின் இருப்பு: சந்திக்கும் நெருக்கடிகள்

 

சாதி: வெளிப்பாடுகள்

1] திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் உருவாகியுள்ள கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சியின் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் சூரியமூர்த்தி மாற்றப்பட்டுள்ளார். அவர் மாற்றப்பட்டதற்குக் காரணம் சமூக ஊடகங்களும் கூட்டணிக்கட்சிகளும் தந்த நெருக்கடிகளே. உடனடியாகக் கூட்டணித் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. ஒருவர் சாதி ஆதிக்கப்பேச்சுகளோடும் செயல்பாடுகளுடனும்.சாதி ஆதிக்க மனநிலைக் கருத்துகளுடனும் பொதுத்தளத்தில் - தேர்தல் அரசியலில் இயங்கமுடியாது என்பதை இந்த மாற்றம் காட்டுகிறது.
2] . தங்கள் நிறுவனப்பணியாளர்களுக்குப் பச்சை வண்ண ஆடைகளை வழங்கிய சுமோட்டா நிறுவனம், சைவ உணவைக் கொண்டுவந்து தருபவர்களின் அடையாளம் பச்சை வண்ணம் என்று பிரித்துக் காட்டியது. சைவ உணவு உண்ணுதல் என்பது உணவுப்பழக்கம் மட்டுமல்ல; அவர்கள் சாதி அடுக்கில் மேல்நிலையில் உள்ளவர்கள் என்பதின் அடையாளமும் என்பது இந்தியச் சூழல் தரும் அர்த்தம். உயர்சாதி அடையாளத்தை/ மேலாதிக்க மனநிலையை உறுதிசெய்யும் நோக்கில் சுமோட்டோ நிறுவனம் உருவாக்கிய பச்சைவண்ண ஆடை கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. எதிர்ப்பின் திரட்சியையும் செயலிகள் நீக்கப்பட்ட வேகத்தையும் கண்டு தங்களின் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து சுமோட்டோ நிறுவனம் இருவேறு வண்ணங்கள் என்ற நிலையைக் கைவிட்டது.
3] பிராமணர்களின் கலை வெளிப்பாடாகக் கருதப்படும் கர்நாடக சங்கீதத்தின் இருப்பைத் தக்க வைக்க நினைக்கும் ‘மியூசிக் அகாடெமி’ ஒவ்வோராண்டும் சிலருக்கு,’சங்கீத கலாநிதி’ என்ற பட்டத்தை வழங்கும். இந்த ஆண்டு அந்தப் பட்டம் டி.எம்.கிருஷ்ணா என்ற கர்நாடக இசைப்பாடகருக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரது பாடல்களின் உள்ளடக்கமும், ஊடகங்களில் சொல்லும் கருத்துகளும் ‘ பிராமணிய ஆச்சாரங்களுக்கும் மேன்மைக்கும் நம்பிக்கைகளுக்கும்’ எதிராக இருப்பவை; எனவே அவருக்கு சங்கீத கலாநிதி பட்டம் வழங்கக்கூடாது; அவர் பங்கேற்கும் மேடையில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என்று எதிர்ப்புக் காட்டுகிறார்கள் சநாதனப் பிராமணர்கள். தொடர்ந்து எதிர்ப்பு வந்தாலும் எடுத்த முடிவில் பின்வாங்கப்போவதில்லை என அகாடெமி அறிவிக்கிறது. பின்வாங்கினால், பொது அமைப்பாகக் கருதப்படும் அந்த அமைப்பு, சாதிய மேலாண்மையை நடைமுறைப்படுத்தும் அமைப்பு என்பதாக அம்பலப்படும். எனவே பின்வாங்கவில்லை.
மூன்று நிகழ்வுகளும் ஒரு செய்தியை உரத்துச் சொல்கின்றன. பகுத்தறிவு வாதத்தோடு பழக்கப்பட்ட தமிழ்நாட்டில் மரபின் பெயரால் சாதிய மேலாதிக்க மனநிலையைத் திரும்பக் கொண்டுவரும் அரசியலையும் பண்பாட்டு நடவடிக்கைகளையும் முன்னெடுப்பது அவ்வளவு எளிதல்ல என்பதே அந்தச் செய்தி.
திரளான மனிதர்களின் கருத்துக்கும் குரலுக்கும் செவிசாய்ப்பது மக்களாட்சி முறை மீது நம்பிக்கையை உண்டாக்கும். செவிசாய்ப்பதின் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குப் பின்னால் இருப்பது நியாய உணர்வுகள் அல்ல; அச்ச உணர்வுகளே. என்றாலும் நடவடிக்கைகள் வரவேற்கப்படவேண்டியன.


சாதி: அடக்கமும் அதன் நிமித்தங்களும்

இந்திய அறிவு என்பது சாதி்யை விவாதிப்பதில் தங்கியிருக்கிறது. எல்லாவகைச் சிந்தனைகளும் வெளிப்பாடுகளும் ‘சாதி’யைச் சொல்லாடல்களாக மாற்றுவதை அகத்திலும் புறத்திலும் மேற்கொள்கின்றன. கொண்டாட்டமாயினும் பெருந்துயரமாயினும் அதன் உள்ளோட்டத்திற்குள் சாதியும் அதன் இயங்குநிலைகளும் இருக்கின்றன. இல்லையென்று நினைப்பது பாவனைகள் மட்டுமே.

சகமனிதனைச் சகித்துக் கொண்டு வேலைகள் செய்வதில் பாரதூரமான வேறுபாடுகள் இருப்பதாக இந்திய மனிதர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். ஜனநாயக அரசின் உறுப்பினர்களாக மாறி எழுபது ஆண்டுகள் ஆன பின்பும் இதுதான் நிலைமை. மக்களை மையப்படுத்தும் ஜனநாயகம் அதன் சாராம்ச குணமான சகிப்பு என்பதை ஏற்றுக் கொண்டவர்களாக ஆக்கவில்லை. அதனை நோக்கிய பயணத்தைக் கூடத் தொடங்கவில்லை. ஜனநாயக அரசின் கல்வி நிறுவனங்கள், கலை இலக்கியம் உள்ளிட்டவைகளை வடிவமைக்கிற பண்பாட்டு நிறுவனங்கள், சட்டம் ஒழுங்கைப் பேணும் காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், சட்டமன்றங்கள், இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கும் ஊடகங்கள் என அனைத்தும் சகிப்பின்மையைக் குற்றமாகக் கருதாமல் அடக்கத்தைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றன. சகிப்பின்மையின் வெளிப்பாடாக இருக்கும் இந்தியர்களிடம் அடக்கம் பற்றிப் பேசுவதில் நுண் அரசியல் செயல்படுகிறது என்பதை ஜனநாயகத்தின் மீது பற்றுக் கொண்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

பெரும்பான்மை இந்தியர்கள் சகிப்புக்குப் பதிலாக அடங்கிப் போகிறார்கள்; வாழ்தலுக்குத் தேவையான பொருளாதாரத் தேவை ஒரு மனிதனிடம் அடக்கத்தை உருவாக்குவதில்லை. அதற்குப் பதிலாக இயலாமையை உருவாக்கும். இயலாமை அமைதியின்மையை உருவாக்கும். அமைதியின்மை கலகத்தை அல்லது புரட்சியை உருவாக்கும். ஆனால் இந்தியர்களிடம் இருப்பது இயலாமை அல்ல; அடக்கம். இந்த அடக்கம் தானாக உருவாவதில்லை. நேர்மறையான குணமாக சித்திரிக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது. அடக்கத்தை உருவாக்குவதில் எல்லா மதங்களும் விருப்பம் உடையன என்றாலும் இந்து சமயத்தின் விருப்பம் அலாதியானது. சமய நடவடிக்கைகளைத் தனிமனித வெளிகளில் மட்டுமே நிகழ்த்திக் கொண்டிருக்காமல் பொது வெளிக்குள் நிகழ்த்திப் பார்க்கும் வடிவங்களைக் கொண்டது. நம்பிக்கைகள், சடங்குகள், பலியிடல், நிவர்த்திக்கடன், விழாக்கள், களியாட்டங்கள், என எல்லாவற்றையும் தனிமனிதனின் அந்தரங்கமாக வைக்காமல் குடும்பம், தெரு, கிராமம், பங்காளிகள், சுற்றம் சூழ எனக் கூட்டத்தினருடன் நிகழ்த்துவதையே வலிறுத்துவது அதன் குணம்.சமய நம்பிக்கை தனி மனிதனின் ஆன்மீகத் தேடல் எனச் சொல்லிக்கொண்டே பொதுநிகழ்வை வலியுறுத்துவதும், பங்கேற்கச் செய்வதும் அதன் வடிவமாக இருக்கிறது.

பக்தி இலக்கியங்களிலும் அறநூல்களிலும் தனிமனிதன் மற்றும் மனுஷியின் அடக்கங்கள் விதந்து ஓதப்பட்டுள்ளன. ‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்பது போன்ற புகழ் பெற்ற வாசகங்கள் தனிமனிதர்களின் அடக்கம் நோக்கிச் சொல்லப்பட்ட வாசகங்கள் என்று நம்புகிறோம். உண்மையில் இத்தகைய வாசகங்களும் அடக்கம் குறித்து மதநூல்கள் தரும் விளக்கவுரைகளும் தனிமனிதனை நோக்கி மட்டும் கூறியன அல்ல. குழுக்களின் அடக்கத்திற்காகவும் சொல்லப்பட்டவைதான். குழுக்களாக அடங்கிப் போகும் நிலையில் அடிமைகள் அல்லது தாசர்கள் பட்டம் கிடைக்கின்றன. தாசர்கள் பாராட்டப்படுகிறார்கள் பலவிதமாக. பாராட்டப்படும் குணமாக அடக்கம் எல்லா நிலையிலும் இருக்கிறது . அடங்கிப் போவதற்கும் சகிப்புக்கும் வேறுபாடு இருக்கிறது.

அடங்கிப்போவதைக் கொண்டாடும் பனுவல்கள் விதந்துரைக்கப்படுகின்றன; வி்ற்பனைச் சரக்காகின்றன; விலையாகின்றன. அதன் மறுதலையில் அடங்காமை ஒதுக்கப்படுதலை எதிர்கொள்ளும்

பெரும்பான்மை வாதம் என்னும் சொல்லாடல்கள்

இந்தியப் பெரும்பான்மை வாதம் என்பது அறியப்பட்ட சமய, மொழி, இன, பெரும்பான்மைவாதமாக மட்டும் இல்லை. மெல்லமெல்ல நகர்ந்து நடுத்தர வர்க்கம் என்னும் பெரும்பான்மை வாதமாக மாறிக்கொண்டிருக்கிறது. சரியாகச் சொல்வதானால் இந்தியாவில் நடுத்தரவர்க்கம் பெரும்பான்மை வர்க்கம் கூட இல்லை. இன்னும் கிராமங்களில் வாழும் இந்தியர்களே அதிகமானவர்கள். ஆனால் அவர்களையும் நடுத்தரவர்க்கமனப்பான்மைக்குள் கொண்டுவரும்வேலையை ஊடகங்கள் செய்துகொண்டிருக்கின்றன.அம்மனப்பான்மை கல்வி நிறுவனங்கள், மருத்துவ நிலையங்கள், போக்குவரத்துக்கழகங்கள், வங்கிகள் போன்றன அரசு நடத்தும்போது சேவை நிறுவனங்களாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. சமநிலைத் திறன் வளர்ச்சிகள் முன்வைக்கப் படுகின்றன. சமநிலைப்பார்வைகள் தேவை என்பதும் வலியுறுத்தப்படுகின்றன இந்த எதிர்பார்ப்புகளும் வலியுறுத்தல்களும் தனியார் நிறுவனங்கள் பற்றிய பார்வைகளாக இல்லை. தனியாரும் தனியார் அறக்கட்டளைகளும் நடத்தும்போது சேவைக்குப் பதிலாக லாபம் அடைவதற்கான உரிமை இருப்பதாக ஏற்றுக்கொள்கிறது பொதுமனம். வேலை வாய்ப்புகள், அனுமதிகள், ஒப்பந்தங்கள் வழங்கும்போதும் தனியார் நிறுவனங்கள் பற்றிக் கண்டுகொள்ளாத பொதுமனம் அரசு நிறுவனங்கள் மீது கவனம் செலுத்திப் புகார்ப் பட்டியலை வாசிக்கின்றது. இருவேறுபட்ட பொதுமனப் பார்வையின் சிக்கல்களின் பின்னணிகள் அறியாமையின் வெளிப்பாடுகளே.

இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் முழுமையும் தனியார் நிறுவனங்கள் அல்ல. அவை நிலமாக, மானியமாக, சம்பள உதவியாக, இலவசக் கருவிகள் வழங்கலாக என அரசிடமிருந்து பெறும் உதவிகள் பலவிதமானவை. இவைகளை வழங்கும் பொறுப்பில் உள்ள அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அமைச்சர்களை நேரடியாகக் கவனித்துக் கொடுக்கவேண்டியனவற்றைக் கொடுத்துப் பெற வேண்டியனவற்றைப் பெற்றுக்கொள்கின்றன. பார்க்க வேண்டியவர்களைப் பார்ப்பதற்கும் கவனிக்கவேண்டியவர்களைக் கவனிப்பதற்கும் கணக்கில் வராத -கணக்கில் காட்டாத செல்வத்தைப் பயன்படுத்துகின்றன. அதன் வழியாக உருவாகும் மதிப்பு மற்றும் செல்வாக்கு அவர்களின் கீழ் பணியாற்றுபவர்களிடம் ஒருவிதத்தில் மரியாதையையும் இன்னொரு விதத்தில் அச்சத்தையும் உருவாக்குகிறது. மரியாதைக்காக நிர்வாகியிடம் பணிவுகாட்டி வேலை செய்கிறார்கள். அச்சம் கொண்டு வேலை செய்பவர்களும் பணிந்து போகிறார்கள். விதிகளுக்குப் புறம்பான நடவடிக்கைகள் தனியார் நிர்வாகத்தின் திறமையாகப் பார்க்கப்படுகிறது. அவர்கள் நேரடியாகத் தலைமைப் பதவிகளில் அமர்த்தப்படும் வாய்ப்புகள் உண்டு. அவர்கள் தங்கள் விருப்பம்போல விருதுகள் வழங்கமுடியும்; பணமுடிப்புகள் தரலாம்; சிலரைக் கண்டறிந்து அவர்களுக்குக் கூடுதல் சம்பளமும் வழங்கமுடியும்.

அரசுத்துறையின் உயர்பதவிக்கு வருபவர்கள் இவற்றிலிருந்து முற்றிலும் வேறானவர்கள். அவர்கள் பெரும்பாலும் பணி மூப்பு காரணமாக உயர்நிலைக்கு வரும் வாய்ப்புடையவர்கள். அவர்களுக்குப் பலவிதமான அதிகாரங்கள் இல்லை. குறிப்பாகச் சரியாக வேலை செய்யாத ஒருவரைத் தண்டிக்கும் அதிகாரம் கூட்டுத்தன்மை கொண்டது. தனியொருவராக நடவடிக்கைகளை எடுத்து விடமுடியாது. தனியார் நிறுவனங்களைப் போல கணக்கில் வராத செல்வம் - பணத் திரட்சியை உருவாக்குவது சாத்தியமில்லை. அதனால் கவனிக்க வேண்டியவர்களைக் கவனிக்கும் விதம் அறிந்திருந்தாலும் செய்ய இயலாதவராக இருப்பார். அதையும் தாண்டி ஒருவர் செய்தால் அது அவரது திறமையாகப் பார்க்கப்படாமல் அவரது ஊழலாகவும் விதிமீறலாகவும் கணிக்கப்படும். அப்படிப் பட்ட நிலையில் தனக்குக் கீழுள்ளவர்களைச் சிறந்த பணிகளைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கவும் முடியாது. தவறாக வேலை செய்பவர்களைத் தண்டிக்கவும் முடியாது.

இந்தச் சிக்கல்களைச் சரிசெய்வது பற்றிச் சிந்திக்காமல் அரசுத் துறைகளுக்குப் பதிலாகத் தனியார் துறை இங்கே பரிந்துரைக்கப்படுகிறது. இந்தப் பரிந்துரைகளுக்குப் பின்னே சமுக நலன் சார்ந்த அடிப்படைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அக்கறைகள் இல்லை. மிகச் சிறுபான்மையினரால் அமைப்புகள் நிர்வாகம் செய்யப்படவேண்டும்; அவர்களின் கீழ் அனைவரும் பணிசெய்ய வேண்டும் என்ற சிந்தனைப் போக்கு ஓடிக்கொண்டே இருக்கிறது. கடைசியாக அது வல்லரசுக்கனவு; பிராமணிய அறிவு போன்றவற்றைக் கேள்வி கேட்கக் கூடாது என்பதை வலியுருத்தும். இட ஒதுக்கீட்டை ஒழிப்பது, உரிமைகள் கேட்பது - குறிப்பாகப் பெண்கள் சமநிலைக்காகக் குரல் கொடுப்பது தவறு போன்ற நிலைபாடுகள் கொண்டதாகவும் இருக்கும். வேறுபாடுகள் இல்லாத சமூக அமைப்பே கிடையாது என்று வாதம் செய்வதின் வழியாக இந்தியச் சாதிய அமைப்பான வர்ணாச்சிரம நிலைப்பாடுகளை ஏற்கும். இவை அடிப்படைவாத நிலைப்பாடுகள் என்று சொன்னால் தேச வளர்ச்சியும் நாட்டுப்பற்றும் அளவுகோல்களாக ஆக்கப்படும். இதுதான் இந்தியப்பொதுமனம்

கடந்த கால் நூற்றாண்டாக உருவாக்கப்பட்டுள்ள இந்தியப் பொதுமனம், அடிப்படைவாதத்தின் அடையாளமான பெரும்பான்மைவாதத்தை முன்வைக்கும் கூட்டத்திரட்சியாகப் கட்டமைந்து விட்டது. இங்கே இந்தப் பொதுமனத்தைக் கேள்விக்குட்படுத்தும் வகையறியாது தவிக்கின்றன மாற்று அமைப்புகள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எழுத்தாளர்களின் உளவியலும் தன்னிலையும் : இமையம் - தி.ஜானகிராமன்- ஜெயகாந்தன்

பிக்பாஸ் -8. ஐம்பது நாட்களுக்குப் பின் ஒரு குறிப்பு

புதிய உரையாசிரியர்கள்