நினைவுக்குள் நாடும் காடும்

உயிர்மை இதழில் வந்திருந்த இந்தக் கவிதையை (தீபச்செல்வன்/ உயிர்மை/நவம்பர்/2025) வாசித்து முடித்தேன். ஒருமுறைக்குப் பதிலாக இன்னும் சில தடவை வாசித்துப் பார்த்தேன். முதல்வாசிப்பில் அந்தக் கவிதை தரும் ஈர்ப்பு தான் திரும்பவும் வாசிக்கச் செய்யும். ஒரு கவிதையில் கிடைக்கும் ஈர்ப்பு என்பதில் அதன் செய்நேர்த்தி, அதன் வழியாக எழுப்பும் உணர்வுத் திரட்சி, அதற்குக் காரணமான கவிதை நுட்பங்கள் எனப் பலவற்றில் ஏதாவதொன்றாக இருக்கலாம். கவிதை நுட்பங்கள் என நான் நினைப்பதில் கவி எழுப்பும் ஓசையொழுங்கும் அதற்கான சொற்களும், படிமங்களை உருவாக்கி அடுக்கிக் காட்டுதல், கேட்கும் இடத்தில் நிறுத்தப்படும் பாத்திரங்களை நோக்கிய விளிப்புமுறை, குறிப்பான ஒன்றைச் சுட்டுவதற்காகப் பயன்படுத்தும் சொல்லாட்சி போன்றன அடங்கும். இவையல்லாமலும் இன்னும் சில நுட்பங்கள் இருக்கலாம். இவற்றையெல்லாம் தாண்டித்தான் கவிதைக்குள் உலவும் பாத்திரத்தையும், அந்தப் பாத்திரத்தை உருவாக்கும் கவித்தன்னிலையையும் கவனிப்பேன். அதன் பின்னர் கவிதையை எழுதிய கவி கொடுத்த தலைப்போடு சேர்த்துத் திரும்பவும் வாசிப்பேன். இது என்னுடைய கவிதை வாசிப்பு முறைகளில் ஒன்று. இதே முறையில் தான் எல்லாக் கவிதையையும் வாசிக்க வேண்டும் என்பதில்லை. இப்படித்தான் நீங்களும் வாசிக்க வேண்டும் என்பதில்லை. உங்களுடைய வாசிப்பு முறையில் நீங்கள் வாசிக்கலாம். ஒரே தடவை வாசித்தால் போதும் என்று நினைத்தால் நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் என்னைப் போலவே இரண்டு மூன்று தடவை வாசித்துப் பாருங்கள்.

01
களமுனைகளில் பீரங்கியைச் சுமந்து

நேற்றுக் களமாடியவன்

இன்று உறங்கவும் ஓரிடமற்று

ஒரு பேருந்துத் தரிப்பு நிலையத்தில் இருக்கிறான்



வானத்தில் விமானங்கள்

நுழையாதபடி ஏவுகணையை ஏந்திப் பார்த்திருந்தவனை

இன்று ஏறெடுத்துப் பார்ப்பவர்கள் எவருமில்லை



பாதைகள் மூடப்பட்ட நாட்களில்

கடலில் படகெடுத்து

தானியங்களைச் சுமந்துவந்து பசியாற்றியவன்

இன்று காயம் நிரம்பிய

வயிறோடு இருக்கிறான்



நேற்று நாட்டைத் தவிர

வேறெந்த நினைவும்

அவனிடத்தில் இருக்கவில்லை

இன்று அவனைப் பற்றிய நினைவும்

அவளிடம் இல்லாமல் போயிற்று



02

அவன் கழுத்தில்

இன்னமும் சயனைட் தொங்குவதைப் போலவே

நினைத்துக்கொண்டிருந்தான்.

அவன் கைகளில்

இன்னமும் துப்பாக்கி இருப்பதைப் போலவே

நினைத்துக்கொண்டிருந்தான்.

அவன் தேகத்தில்

இன்னமும் சீருடை அணிந்திருப்பதைப் போலவே

நினைத்துக்கொண்டிருந்தான்.

அவன் வோக்கிடோக்கியில்

இன்னமும் பேசிக்கொள்வதைப் போலவே

நினைத்துக்கொண்டிருந்தான்.



நினைவில் மட்டுமே வாழ்ந்திருந்தான்

அவன் நினைவில் நாடு மட்டுமே இருந்தது.



உறுதி எடுத்துக்கொண்டிருந்தான்

கட்டளை பிறப்பித்தான்

அவன் நினைவில் இன்னமும் களம் மூண்டது

தன்பாட்டில் புசத்தித் திரிபவனை

‘ஆரோ விசரன்’ என்றபடி

கடந்து சென்றனர் சனங்கள்



நீயும் நானும் அவனையும் மறந்தோம்

தாய்நாட்டையும் மறந்தோம்

அவனோ,

நினைவில் இருக்கும் நாட்டில்

இன்னமும் அலைகிறான்.


தனது கவிதைகளில், புனைகதைகளில் போர்க்காலத்து நிகழ்வுகளைத் தொடர்ந்து நினைவூட்டி எழுதும் தீபச்செல்வன் இந்தக் கவிதையில் குறிப்பிடத்தக்க நகர்வொன்றைச் செய்துள்ளார் என்று தோன்றியது. போர்க்காலத்தை நினைவூட்டுவதோடு, போராளிகளின் இப்போதைய மனநிலையையும், அவர்களைப் பொருட்படுத்தாத சமூகத்தின் மீதான கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் என்பதாகப் புரிந்துகொண்டு மறந்துவிட்டேன்.



எனது பயணத்தில் எடுத்து வந்த நாவல்களோடு நவம்பர் உயிர்மையும் பொதியில் இருந்தது. திரும்பவும் எடுத்துச் சிறுகதைகளை வாசித்துவிட்டுத் தீபச்செல்வனின் கவிதையையும் திரும்ப வாசித்தேன். இப்போது கவிதையின் தலைப்பு வேறொன்றை நினைவூட்டியது. கவிதைக்குத் தீபச்செல்வன் தந்துள்ள தலைப்பு: நினைவில் நாடுள்ளவன். இந்தத்தலைப்போடு மட்டுமல்லாமல் தன்னை உள்நிறுத்தும் தன்மையிலும் ஒப்புமை கொண்ட கவிதை அது. அந்தக் கவிதையை எழுதியவர் மலையாளத்தின் பெருங்கவி சச்சிதானந்தன். ஆனால் கவிதையின் அமைப்பாக்கத்திலும் கவிதைக்குள் உலவும் பாத்திரத்தை உருவாக்குவதிலும் இரண்டு கவிதைகளும் வேறுபட்டவை என்பதையும் கவனிக்க வேண்டும். சச்சிதானந்தனின் கவிதைத் தலைப்பு: நினைவில் காடுள்ள மிருகம். அந்தக் கவிதையைப் பின்னர் வாசிக்கலாம் முதலில் தீபச்செல்வன் கவிதையின் மீதான வாசிப்பு.

இரண்டு பகுதிகளாக எழுதப்பட்டுள்ள கவிதைக்குத் தீபச்செல்வன் வைத்துள்ள தலைப்பு: நினைவில் நாடுள்ளவன். கவிதையின் முதல் பகுதியில் நேற்று- இன்று என்ற எதிர்வுச் சொற்கள் வழியாக ஓசையொழுங்கும் நிகழ்வுப்படிமங்களும் உருவாக்கப்படுகின்றன. இந்த எதிர்வுச் சொற்களின் வழியே நிகழ்காலத்துக்கும் கடந்த காலத்திற்கும் இடையே நிலவுகின்ற முரண் நிலை விரிக்கப்பட்டுள்ளது. முரண்நிலையில் நேற்றிருந்த பலவும் இப்போது இல்லாமல் போய்விட்டது என்ற இழப்புநிலை அல்லது கையறுநிலைத்தன்மை உருவாக்கப்பட்டுள்ளது. அந்தப் பலவும் என்பதில் பீரங்கி, ஏவுகணைகள், படகுகள் என்ற மூன்று பருண்மையான பொருட்கள் சொல்லப்படுகின்றன. இந்தப் பருண்மையான பொருட்கள் வழியாக ஆயுதங்களைப் பாவிக்கின்ற போர்க்களமும் படிமமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இருந்த செயல்களும் பொருட்களும் இப்போது இல்லை. அத்தோடு பருண்மையான பொருளாக இல்லாத ஒன்று நினைவுக்குள் இருந்தது என்பதும் சுட்டப்படுகின்றது. அது அவன் விரும்பிய நாடு – அவனுக்கான நாடு. நாட்டைப் பற்றிய நினைவோடு போர்க்களத்தில் பீரங்கி கொண்டு களமாடியவன், பகைவிமானங்களைச் சுட்டு வீழ்த்தும் ஏவுகணைகளைக் கையாண்டவன், தரைப்பாதைகள் மூடப்பட்ட நிலையில் கடல்வழியாகப் படகுப்பயணம் செய்து தானியங்களைக் கொண்டு வந்து சேர்த்தவன் இப்போது எதுவும் இல்லாமல் ஆகிவிட்டான் என்கிற வரிகளோடு, நாட்டைப் பற்றிய நினைவுகளைச் சுமந்தவன், இப்போது தன்னைப் பற்றிய நினைவையும் இழந்தவனாகக் கையறுநிலையின் உச்சத்தில் இருக்கின்றான் என்பதோடு முடிகின்றது முதல் பகுதி.

 ‘முன்பிருந்தவை இப்போதில்லை’ என்ற தொன்மப் படிமத்தின் உச்சக் கவிதையாகத் தமிழில் ஒரு கையறு நிலைக்கவிதை உண்டு. பாரிமகளிர் பாடிய புறநானூற்றுப்பாடல் அது. இதுவும் இந்த இடத்தில் நினைவுக்கு வரலாம்.

          “ அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்,

           எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;

          இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில்,

           வென்று எறி முரசின் வேந்தர்

           எம்குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே! (112).

நேற்று -இன்று என்ற எதிர்வை முதல் பகுதியின் ஒவ்வொரு பத்தியிலும் உருவாக்கிக் கவிதைக்கான வடிவ ஒழுங்கைக் கொண்டு வந்த தீபச்செல்வன் இரண்டாவது பத்தியில் நேரடிக் காட்சியைச் சித்திரமாக்குகின்றார். அந்தச் சித்திரமே கவிதைக்குள் உருவாக்கி அலையவிடப்பட்டுள்ள அல்லது நிலைப்படுத்தப்பட்டுள்ள அவன் என்னும் பாத்திரம்.

அந்த அவன் யார்?

அந்த அவன், ஏவுகணைகளைக் கையாண்டவன், பீரங்கிகளோடு களமாடியவன், படகுப்பயணம் செய்து பசியாற்றியவன். இவையெல்லாம் ஒரு இயக்கநிலைச் செயல்பாடுகள். இயக்கநிலையைச் சொன்ன முதல் பகுதிக் கவிதையைத் தாண்டி வரும் வாசகர்களுக்கு அந்த அவன் தன்னை மறந்தவன் என்ற தகவலைச் சொல்லிவிட்டு, பலவற்றை மறக்காமல் இருக்கின்றான் என்பதைச் சொல்கின்றது இரண்டாவது பகுதி. அவன் மறக்காமல் இருப்பவை கழுத்தில் தொங்கிய சயனைட், கைகளில் இருந்த துப்பாக்கிகள், உடலை மறைத்த ராணுவச் சீருடை, இடுப்பில் தொங்கிய வாக்கி டாக்கி இவை எதுவும் இப்போது அவனது உடலில் இல்லை, ஆனால் நினைவில் இருக்கின்றன. இவை பற்றிய நினைவுகளோடு அவனிடம் தங்கியிருப்பது நாடு பற்றிய நினைவுகளும். அந்த நாடு எது என்பதைக் கவி சொல்லவில்லை. கழுத்தில் தொங்கிய ‘சயனைடு’ என்ற குறிப்புச் சொல்லால் அந்த அவன் விடுதலைப்புலிகளின் ராணுவத்தில் இருந்த போராளி என்பதும், அவனது நினைவில் இருந்த நாடு ‘தனி ஈழம்’ என்பதும் உணர்த்தப்படுகின்றது.

தனியீழத்துக்கான தாகத்தோடு இப்போதும் இருக்கும் அவனை ‘ ஆரோ விசரன்’ எனக்கடக்கின்றன சனங்கள். காரணம் தனி ஈழத்துக்கான போர் 2009 இல் முடிந்த முள்ளிவாய்க்கால் பேரழிவோடு முடிந்துவிட்டது. ஆண்டுகள் 17 கடந்துவிட்டன. ஆனால் அவனுக்குள் – விசரன் எனச் சனங்களால் சொல்லப்படும் அந்தப் போராளியின் நினைவுக்குள் நாடு இருக்கின்றது. அதனால் தான் அவன் கட்டளை பிறப்பிக்கின்றான்;உறுதி எடுக்கின்றான்.

கடைசிப்பத்தியில் அவனை முன்னிறுத்தி யாழ்நிலத்துச் சனங்களை நோக்கி விளித்துப் பேசுகின்றது கவித்தன்னிலை. அவனுக்குள் இருக்கும் நாட்டை நாம் - நீங்களும் நானும் - மறந்துவிட்டோம். ஆனால் அவன் நினைவில் நாடு உள்ளது; அவனுக்குள் களம் இருக்கின்றது என்கின்றது.

நிகழ்காலத்தில் அவனது நடத்தைகளையும் இருப்பையும் பார்த்துப் பைத்தியம்/ விசரன் எனச் சொல்லலாம். ஆனால் அவன் வாழ்ந்து பார்த்த கடந்த காலத்தில் இருக்கின்றான். அந்த வாழ்க்கையை – போராளி வாழ்க்கையை மறத்தல் அவனுக்கு எளிதன்று என உணர்த்துகின்றார். இந்த உணர்த்துதல் வழியாகக் கவி தீபச் செல்வன் தனக்குள்ளும் தனியீழத்தாகம் இன்னும் நினைவாக இருக்கின்றது என முன்வைக்கின்றார் என்றும் வாசிக்கலாம்.

இப்போது மலையாளப்பெருங்கவி சச்சிதானந்தனின் கவிதையை வாசிக்கலாம்(தமிழில் நிர்மால்யா)

நினைவில் காடுள்ள மிருகம்

நினைவில் காடுள்ள மிருகம்

எளிதில் அடங்குவதில்லை

அவள் தோளில்

சதுப்பு நிலங்களின் குளிர்

அவள் முடிக்கற்றைகளில்

வனப்பூக்களின் கடும்நெடி

அவள் விழிமணியில்

பாறைகளில் தெறித்துவிழும்

காட்டுச் சூரியன்

அவள் வாயில் காட்டாறுகள்

சந்திக்கின்றன.

அவள் நாவில் காட்டுத்தேன்

ஊறுகிறது

அவள் செவிகளில்

இடிமேகங்கள் முழங்குகின்றன

அவள் ரத்தத்தில்

காட்டுயானைகள் பிளிறுகின்றன

அவள் இதயத்தில்

காட்டு நிலவுகள் பூக்கின்றன

அவளது சிந்தனைகள்

காட்டுப் பாதைகளினூடே

பாய்ந்து செல்கின்றன

நினைவில் காடுள்ள மிருகம்

எளிதில் அடங்குவதில்லை

என் நினைவில் காடுகளுண்டு.

தீபச்செல்வனின் கவிதைக்குள் உருவாக்கப்பட்ட இருமை எதிர்வுகளோ, கால முரண்களோ சச்சிதானந்தனின் கவிதையில் இல்லை. இக்கவிதை தனியொரு மனிசியின் தன்னிலைக்குள் இருக்கும் முரட்டுத்தனத்தையும் கட்டுக்குள் அடங்காத விடுதலை நோக்கையும் விவரித்துக் காட்டுகின்றது. ஒரு பெண்ணின் விடுதலை மனம் என்பதாக மொத்தக் கவிதையின் விரிந்தாலும், ஆணும் கூட அவனளவில் நினைவில் காடுள்ள மிருகத்தின் இயல்பைக் கொண்டிருப்பவனே என மனித இயல்பாக மாற்றிக் காட்டுகின்றது. அந்த மாற்றி கட்டமைப்பதின் வெளிப்பாடு ‘என் நினைவில் காடுகளுண்டு’ என்ற கடைசி வரி.

ஒரு நல்ல கவிதையை வாசிக்கும் இன்னொரு கவி, அந்தக் கவிதை உருவாக்கும் உணர்வுகளையும் படிமங்களையும் தனதாக்கிப் புதிய கவிதையொன்றை உருவாக்கக் கூடும். அப்படி எழுதப்படும் புதிய கவிதை தாக்கம் செலுத்திய கவிதைக்கு இணையாகச் சிறந்ததாக அமைந்துவிடும். சில நேரங்களில் தாக்கம் செலுத்திய கவிதையைவிடக் கூடுதல் சிறப்பையும் பெற்றுவிடக்கூடும். தீபச்செல்வனின் இந்தக் கவிதைக்குள் உருவாக்கப்பட்டுள்ள கால எதிர்வு அமைப்பாலும் கடந்த காலத்தையே எழுதுவதிலிருந்து நிகழ்காலத்தைக் காட்டும் நகர்வாலும் அந்தச் சிறப்பை அடைந்துள்ளது.

நன்றி: அகல் இணைய இதழ்




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து சமயத்தைப் புதுப்பித்தல்: ஈசா யோகியின் மகாசிவராத்திரிகள்

பட்டறை -நினைவுகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்