இந்து சமயத்தைப் புதுப்பித்தல்: ஈசா யோகியின் மகாசிவராத்திரிகள்


சிவராத்திரிக்கு விழித்திருக்கவில்லை-2023
------------------ ------------------------ ----------------------
வாசுதேவ்(ஜக்கி) கட்டியெழுப்பியிருக்கும் பேருருவான சிவனையும் வெள்ளியங்கிரியையும் போய்ப் பார்க்க வேண்டும் என்ற திட்டம் இன்னும் நிறைவேறவில்லை. கோவைக்கு வந்தவுடன் பார்க்க வேண்டிய இடங்கள் எனப் போட்ட பட்டியலில் அதுவும் உள்ளது. எட்டு மாதங்கள் ஆனபின்னும் எட்டாத இடமாகவே இருக்கிறது ஈஷா யோகமையமும் கானகப் பெருவெளியும்.
இந்த ஆண்டு ஈஷாவின் சிவராத்திரிக் கொண்டாட்டங்களையும் களியாட்டங்களையும் தொலைக்காட்சி நேரலைகளில் பார்க்கவில்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் தவறவிடாமல் பார்த்திருக்கிறேன். பள்ளிப்பருவக்காலங்களில் வைகுண்ட ஏகாதசிக்குப் “பாரதம் படிக்கும்” மாமாவின் வற்புறுத்தலில் இரவு முழுவதும் உட்கார்ந்து மகாபாரதம் கேட்ட நினைவோடு பார்த்திருக்கிறேன். வைகுண்ட ஏகாதசிக்கு விழித்திருந்ததற்குக் காரணம் இருந்ததுபோல மகாசிவராத்திரிக்கு ’ஒரே டிக்கெட்டில் விடியவிடிய சினிமா’ என்ற காரணம் இருந்தது. 

திருவிழாக்காலத்தில் கிராமத்தின்/ நகரத்தின் மொத்த வெளியும் பக்தியின் வெளியாகவும் கொண்டாட்டத்தின் மேடையாகவும் ஆக்கப்படுவது நீண்டகால நடைமுறை. அமெரிக்க அரங்கியல் செயல்பாட்டாளர் டெல்லிக்குப் பக்கமாக நிகழ்த்தப்பெற்ற ராம்லீலா நிகழ்வைப் பார்த்தபின்பே தனது அரங்கச் செயல்பாடுகளைச் சூழலியல் அரங்கு( ) என்ற வடிவத்திற்கு மாற்றினார். இந்துசமயத்தின் எல்லாவகை ஆன்மீகமும் சடங்குகளும் திருவிழாக்களைக் கொண்டாட்டங்களும் களியாட்டங்களும் இணைந்த பெருநிகழ்வுகளாகக் கட்டமைத்ததின் வழியாக நிலைபெற்றுள்ளன.

ஆன்மீகமும் அரசும் கொண்டும் கொடுத்தும் நிலை பெற்றிருக்கின்றன. பேரரசுகளின் வெற்றியிலும் அடக்குமுறையிலும் பெருஞ்சமயமும் பெருங்கடவுளர்களும் பங்குதாரர்கள். பெருந்தத்துவங்களின் உருவாக்கமும் அதனோடு இணைந்தவை. இந்திய வரலாறு முழுவதும் இதற்கான சாட்சியங்கள் இருக்கின்றன. எழுத்துகளாக மட்டுமல்லாமல் கோயில்களாகவும் கொண்டாட்டங்களாகவும் நிற்கின்றன; நடக்கின்றன. சமயச்சார்பில்லாத அரசுகள் அவற்றிற்கிணையான பெருவிழாக்களைத் தோற்றுவிக்க இயலாமல் திரும்பவும் சமயவிழாக்களில் அடையாளம் காண்கின்றன.

மீனாட்சி-சொக்கநாதன் கல்யாண நிகழ்ச்சிகள் மதுரை நகரத்துப் பெருவிழாவாக நடத்தப்பெற்றது. அதனோடு அழகர்மலையின் கள்ளழகரை இணைத்ததின் மூலம் மதுரை நாயக்கர்கள் காலத்துத் தேசப்பெருவிழாக மாற்றம் பெற்றது. அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுகள் இப்போதும் மதுரை மாவட்டப் பெருமாள் கோயில்கள் ஒவ்வொன்றிலும் நடக்கின்றன. கிராமத்து மாரியம்மன் திருவிழாவில் கூடப் பக்தியின் வெளிப்பாடாக அக்கினிச்சட்டி எடுக்கும் உடல் வருத்திக்கொள்ளும் நிகழ்வுகளும் உண்டு. அனைத்துத் தரப்பினரும் பங்கேற்றுக்கொண்டாட கரகாட்டமும் முளைப்பாரியும் புலியாட்டங்களும் உண்டு. முருகனின் கோயில்களுக்கு நடக்கும் பாதயாத்திரை என்னும் உடல் வருத்தமும், அலகு குத்தித் தேரிழுப்பதும் காவடி எடுப்பதும் உண்டு. அதற்கிணையாகக் கோயில் வளாகக் கொண்டாட்டங்களும் உண்டு.
*********
நிகழ்காலத்தில் சமயங்கள்- நிலவியல் எல்லைகளைக் கடந்த அமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் தோன்றியதாக நம்பப்படும் பௌத்தம் தென்னாசிய நாடுகளின் அரசமதமாக ஆகியிருக்கிறது. அன்பையும் அகிம்சையும், ஆசையை அறுப்பதையும் பேசிய பௌத்தம் அவற்றை மறுதலிக்கிற சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் மதமாக இருக்கிறது. அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டும் நோக்கம் கொண்ட சிங்களப்பேரினவாதிகளின் சமய நம்பிக்கையாகவும் பௌத்தம் இருந்து கொண்டிருக்கிறது. அரசுகளுக்குச் சமயங்களின் உதவி இன்றியமையாததாக இருக்கின்றது.

மனிதர்களைப் பிரிக்கும் பால், இன,வர்க்க, மொழி என்ற எல்லா அடையாளங்களையும் எளிதாகக் கடக்கும் வல்லமை சமயங்களின் நடவடிக்கைகளுக்கு இருக்கின்றன. அதற்கான முதன்மைக்காரணம், அதன் அடிப்படை நோக்கம் தனிமனிதர்களை விடுதலையடைந்தவர்களாக மாற்றும் என்பதுதான். தனிமனிதர்களைச் சுதந்திரமானவர்களாக ஆக்கும் என்ற நம்பிக்கையைச் சமயங்களின் போதனைகள் சொல்கின்றன. ஆனால் நடைமுறையில் அமைப்புகளின் அடிமைகளாக ஆக்குவதையே செய்கின்றன என்பது சுவையான முரண். இந்த முரணை மறைத்துக்கொண்டே புதியபுதிய விடுதலைப்பேருரைகளை நிகழ்த்துகிறார்கள் குருக்கள், புனிதர்கள், யோகிகள், மகான்கள் என்ற பெயரில் வலம் வரும் அதிபர்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நிலவியல் எல்லைகள் தாண்டிய சாம்ராஜ்ஜியங்கள் இருக்கின்றன. பொருளுற்பத்தியும் வியாபாரமும் நாட்டெல்லைகளைத் தாண்டிய உலகமயச் சூழலில் சமயங்களும் உலகமதங்களாக மாறுகின்றன. அதன் வழியாகச் சுற்றுலாப்பொருளாதாரத்திற்கு உதவுகின்றன. சில சமய நிறுவனங்களே பெருவணிக மையங்களாக மாறுகின்றன. அரசோடு இணைந்து வேலை செய்கின்றன.


கேள்விகளும் பதில்களும் /2021




தனிமனிதர்களின் அந்தரங்க வாழ்க்கையில் பதில்களற்ற கேள்விகள் பல இருந்து கொண்டே இருக்கும். அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாதபோது நம்பிக்கைகளும் சடங்குகளும் அவர்களுக்குக் கைகொடுக்கின்றன. அவற்றின் பக்கம் சாயும்போது சொற்கள் இடமாற்றம் அடைந்து ’பதில்களற்ற கேள்விகள் என்பன கேள்விகளற்ற பதில்கள்’ ஆகிவிடுகின்றன. இந்தத்தவிப்பின் விடுபடலில் தான் சமயம் தனது இருப்பைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. தனக்குள்ளும், வெளியிலும் கடவுளைத்தேடிய மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட பிரதிமைகள் குறியீடுகளாகவும் சிலைகளாகவும் கோயில்களாகவும் அவற்றிற்கான கொண்டாட்டங்களாகவும் மாறின.

அறிவியல் பார்வை முதலில் கடவுளைக் கேள்விகேட்கவில்லை. மனிதர்களையே கேள்விக்குள்ளாக்கியது. எல்லா மனிதர்களும் எப்போது தனிமனிதர்களாக இருக்கிறார்கள் என்ற அந்தக் கேள்வி விடைசொல்ல முடியாத கேள்வியாக அலையத்தொடங்கியது. அந்த நேரத்தில் சிலர் கடவுளைத் தேடும் புதிய பாதைகளைக் காட்டினார்கள். தனிமனிதர்களாகக் கடவுளைத் தேடுவது சலிப்பையே கொண்டுவரும்; ஏனென்றால் நமது காலம் தனிமனித த்தன்னிலைகள் தொலைந்த காலம்; ஆகவே கூட்டாக – கூட்டமாகக் கடவுளைத் தேடுவோம் என்று வழிகாட்டினார்கள். கூட்டமாகக் கூடுவதற்கு புதிய கோயில்கள் அமைக்கப்பட்டன. யாகசாலைகளுக்குப் பதிலாக யோகசாலைகள்; கருவறைகளுக்குப் பதில் தியான மண்டபங்கள்; முற்றும் துறப்பதற்குப் பதில் எல்லாவற்றையும் தேடச் சொல்லும் ஞானமார்க்கங்கள் முன்வைக்கப்பட்டன. பழைய தபோவனங்களின் சாயலில் நவீன வசதிகள் கொண்ட அறிவுத் திருக்கோயில்கள் மலையடிவாரங்களில் உருக்கொண்டன. இவை எல்லாம் உள்ளடக்க மாற்றங்களல்ல; வடிவமாற்றங்கள் தான். வடிவ மாற்றத்தின் உச்சமான நிகழ்வு ஈசாவின் சிவராத்திரிக் கொண்டாட்டங்கள்.தனிமனிதத் தேடலுக்குப் பதிலாகக் கும்பலாகத் தேடும் வடிவமாற்றத்தில் திரும்பவும் பதில்களற்ற கேள்விகளைத் தொலைத்துவிட முடியும் என்பது புதிய நம்பிக்கை.


தனிநபர்களின் அந்தரங்கத்தின் எல்லையைக் கொஞ்சம் விரிக்கும்போது அந்தப் பரப்பு குடும்பமாக இருக்கிறது. குடும்பவெளியிலும் அதே நம்பிக்கைகளையும் சடங்குகளையும் விட்டுவிடத்தயாரில்லை. ஆனால் குடும்ப வெளியைத் தாண்டிப் பொதுப்பரப்பிற்குள் வருகின்றபோது குடும்பத்தில் அந்தரங்கத்தில் பின்பற்றும் நம்பிக்கைகளும் நடைமுறைப்படுத்தப்படும் சடங்குகளும் அர்த்தமற்றவையாக இருக்கின்றன. இந்த முரண்நிலையை ஒவ்வொரு நவீனமனிதர்களும் சந்தித்துக்கொண்டே இருக்கிறார்கள். சந்திக்கும் இம்முரண்நிலைக்கான தீர்வை அரசுகளிடம் தரவேண்டும் என்கின்றது நவீனமனம். அப்படிச் செய்யும்போது இரண்டையும் தனித்தனியாகவே வைத்துக்கொண்டு வாழ்ந்து முடிக்கலாம் என நம்புகிறது மேற்கத்திய மனம். ஆனால் மரபிலிருந்து விடுபடாத மனமோ அரசையும் சமயத்தையும் ஒன்றாக்கிவிட முடியும் என முயல்கின்றது. இந்தியாவில் அதற்கான முயற்சி எப்போதும் நடந்துகொண்டே இருக்கிறது. பிரிட்டானிய ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட இடையீட்டைச் சரிசெய்து திரும்பவும் அரசையும் சமயத்தையும் ஒன்றாக்கிக் காட்டும் எத்தணிப்பில் இயங்கப் பார்க்கிறது இந்தியப் பெருங்கதையாடல். அதே நேரத்தில் ஒன்றாக்கும் போக்கைச் சிதைக்கும் வாழ்க்கைப்போக்கும் இந்தியாவிற்குள் இருந்துகொண்ட இருந்த து என்பதுதான் இந்தியாவின் குறுங்கதையாடல்களின் வரலாறு.

ஒற்றையல்ல; பன்மைகள்/2020

நிகழ்காலத்தில் இந்துசமயமாக முன்வைக்கப்படும் பெருஞ்சமயத்தை ஒற்றைச் சமயமாக ஏற்க மறுக்கும் வாய்ப்புகளை அதன் கட்டமைப்புக் கூறுகளே கொண்டிருக்கின்றன. இயற்கை வழிபாடுகள், கருவி வழிபாடுகள், ஆயுத வழிபாடுகள், குலதெய்வ வழிபாடுகள், காவல் தெய்வ வழிபாடுகள், பூர்வநிலம் தேடும் வழிபாடுகள் போன்றவை எப்போதும் ஒன்றோடொன்று இணையாமல் அதனதன் வட்டாரங்களில் செல்வாக்கோடு இருக்கின்றன. இவற்றோடு முரண்படும் முத்தெய்வ வழிபாடுகளும் அம்முத்தெய்வங்களின் குடும்ப உறுப்பினர்களாகக் கட்டமைக்கப்பட்ட தெய்வங்களுக்கான பெருங்கோயில் வழிபாடுகளும் வட்டாரத் தன்மையோடும் அதே நேரத்தில் ஒருவித இந்தியத்தன்மையோடும் இருக்கின்றன.

தனித்தனி வகையான வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள், சடங்குகள் எனப் பிரிந்து கிடக்கும் அதன் வெளிப்பாடுகள் தொடர்ந்து ஒற்றைச் சமயமென்னும் கருத்திற்கு எதிராகவே இருக்கின்றன. அத்தோடு பிரபஞ்சம் - உயிர்கள் - அவற்றிற்கிடையேயான உறவுகள்- அவற்றின் இயக்கங்களுக்குக் காரணமான அதிசக்தியின்/ கடவுளின் இருப்பு பற்றிய கேள்விகளைத் தரிசனங்களாக்கிப் பேசும் சமயச் சொல்லாடல்களும் ஒன்றாக இருக்கவில்லை. அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம், சைவ சித்தாந்தம், வேதாந்தம் போன்றனவும் வேறுபாடுகளை அதிகமாக்கவே செய்கின்றன.


சமய வாழ்க்கைதான் குடும்ப அமைப்பையும் இயக்கங்களையும் தீர்மானிக்கும் நிலை இந்தியச் சூழலில் நிலவுகிறது. அச்சமய வாழ்க்கை பொதுத்தள வாழ்க்கை ஒன்றை - அனைவருக்குமான கூடுகை, கொண்டாட்டம், வெளிப்பாடு போன்றனவற்றை உருவாக்கித் தரவில்லை. மனிதர்களைப் பல்வேறு வர்ணங்களாகவும் அதற்குள்ளும் சாதிகளாகவும் பிரித்து அவர்களுக்கான கடமைகளையும் உரிமைகளையும் பேசிய மதநூல்களின் ஆதிக்கம் அவ்வுருவாக்கத்திற்குத் தடையாக இருக்கிறது என்பதை இந்துசமயத்தைப் புத்தாக்கம் செய்துவிட நினைக்கும் நபர்களும், அமைப்புகளும், அதிகார மையங்களும் உணர்ந்துகொண்டிருக்கின்றன. அதேபோல் ஆண்-பெண் எனப் பால் வேறுபாட்டைச் சரியாகப் புரிந்து கொள்ள நினைக்கவில்லை. உணர்ந்திருந்தாலும் அதனை மாற்ற விரும்புபவர்களாகவும் தெரியவில்லை. அதற்குப் பதிலாக மாற்றுகளின் வழிப் பழையனவற்றைத் தொடர நினைக்கின்றன.

அதே நேரத்தில் ஒற்றைப் பண்பாட்டை முன்வைக்கும் சமயமாக இந்துச்சமயத்தைக் காட்டி அரசியல் அதிகாரம் பெற நினைக்கும் அரசியல் போக்கோடு சமயவாதிகள் இணைகிறார்கள். அவர்களுடைய இணைவும் செயல்பாடுகளும் சமய எல்லைகளைத் தாண்டுவனவாகவும் இருக்கின்றன. அப்படித்தாண்டும் நவசாமியார்களின் வெளிப்பாடுகள் விதம்விதமானவை. தனிநபர் உடலைச் சுத்தம் செய்யும் யோகாவை முதலீடாக்கி விற்பனைப் பண்டத்தைத் தயாரித்தவர் அஞ்சறைப்பெட்டிச் சாமான்களுக்குச் சமய அடையாளத்தைத் தருகிறார். அதில் கிடைக்கும் லாபம், குளியலறைப் பொருட்களின் முதலீடாக மாறுகிறது. ஆன்மீகத் தன்னிலையைத் தொலைத்த வணிகமுகம் ,பெரும்வணிகக் குழும அடையாளத்தோடு பன்னாட்டு மூலதனத்தோடு கள்ள உறவுகொள்கிறது.


நாளை – மகாசிவாராத்திரி இரவில் - இன்னொரு சாமியாரைப் பார்க்கப் போகிறோம். நம்காலக் கொண்டாட்ட வெளிப்பாட்டின் வடிவங்களான சினிமாவையும் தொலைக்காட்சி ஊடகத்தையும் கையில் எடுத்துள்ளார் இந்த நவசாமியார். தனிமனிதர்களாகத் தேடிய கடவுளைக் கூட்டாகத் தேடும் மாற்றுவடிவத்தோடு கடந்த ஐந்தாண்டுகளாக வலம் வருகிறார். ஆடல், பாடல், உரசல் வழியாக மனித உடல்களை உச்சத்திற்குக் கொண்டுபோய்த் தளர்ச்சி அடையச் செய்து சமய நம்பிக்கைகளை அதற்குள் ஞானம், தியானம், அறிவு எனச் சொற்களாகச் செலுத்தும் நிகழ்வு முழு இரவு/ நள்ளிரவுக் கொண்டாட்டமாக நடத்துகிறார். திரை நட்சத்திரங்களின் - அவர்களின் உடல்களைத் தியானரூபமாகவும் ஆடிக்களைக்கும் மன ஓர்மை உடலாகவும் ஆக்கும் காட்சிகள் இடம்பெறும் என்பதை அதன் விளம்பரக் காட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் உறுதி செய்கின்றன.

மகாசிவராத்திரிக்கு இந்தியப் பண்பாட்டில் இரண்டு அடையாளங்கள் உண்டு. நாட்டார் வழக்காற்றியல் வழிபாட்டில் முன்னோர்களுக்குக் கடன் கழிக்கும் நாள். உயிரோடு இருந்தபோது அவர்களுக்குச் செய்ய மறந்த/ மறுத்த கொடுப்பினைப் பிதுரார்ஜிதமாகச் செய்து கழிக்கும் நாள். அவரவர் முன்னோர்களையே தெய்வமாக வணங்கிய இனக்குழுக்கள் அன்று குலதெய்வங்களின் கோயில்களுக்குச் சென்று கடனைச் செய்துவிட்டு நீர்நிலைகளில் - ஆற்றிலோ, கடலிலோ, குளத்திலோ குளித்துவிட்டு வருவார்கள். ஆனால் வைதீக இந்துசமயக் கதைகளில், சிவனை மும்மூர்த்திகளில் முதல்வனாக முன்வைக்கும் ஒரு புராணக் கதையின் வெளிப்பாடு மகாசிவராத்திரி. இரண்டையும் இணைக்கும் – அழித்துப் புதுவதாக்கும் வேலையைப் புதுவகைச் சாமியாரான ஜக்கிவாசுதேவ் முன்னெடுக்கிறார்.

புதுவகைசாமியார்களால் செய்யப்படும் - உருவாக்கப்படும் இந்த மாற்றங்கள் பெருஞ்சமயத்தைப் புதுப்பிக்கும் முயற்சி என்பதை மறுக்க முடியாது. ஆனால் இவை வடிவமாற்றம் மட்டுமே என்பதோடு நிரந்தரமானவை அல்ல என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும் . ஒன்றிரண்டு நாட்களுக்கான - திருவிழா நாட்களுக்கான மாற்றங்கள் மட்டுமே. அதிலும் அரசையும் சமயத்தையும் இணைக்கும் நுண்ணரசியல் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கிறது.
புதுச்சாமியார்களால் செய்யப்படும் - உருவாக்கப்படும் இந்த மாற்றங்கள் பெருஞ்சமயத்தைப் புதுப்பிக்கும் முயற்சி என்பதை மறுக்க முடியாது. ஆனால் இவை வடிவமாற்றம் மட்டுமே என்பதோடு நிரந்தரமானவை அல்ல என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும் . ஒன்றிரண்டு நாட்களுக்கான - திருவிழா நாட்களுக்கான மாற்றங்கள் மட்டுமே. அதிலும் அரசையும் சமயத்தையும் இணைக்கும் நுண்ணரசியல் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கிறது.

ஜக்கிவாசுதேவ்:விலைபொருளாக்கும் வித்தை கூடியவர். 2017


நவீன தேசங்களின் பொருளாதாரத்தில் சுற்றுலாப் பொருளாதாரம் எப்போதும் முக்கியமான பங்கு வகிக்கின்றது. அதிலும் பன்னாட்டு மூலதனப் பெருக்கத்திற்குப் பின் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதனால் ஒவ்வொரு நாடும் சுற்றுலாத் தலங்களை உருவாக்கி விளம்பரப்படுத்தி விற்கின்றன. பல நாடுகளின் சுற்றுலாக் கையேடுகளைக் கண்டும் வாசித்தும் பார்த்தால், அந்நாடுகளில் விற்பனைக் கருத்தியல் என்ன என்பதை உணர முடியும்.

ஐரோப்பாவின் ஒவ்வொரு நாடும் அவற்றின் விற்பனைக் கருத்தியலை உருவாக்கி இடங்களோடு இணைத்துவிட்டுள்ளன. இரண்டாண்டுகள் வார்சாவில் இருந்தபோது போலந்தின் விற்பனைக் கருத்தாக அழிவும் அழிவிலிருந்தும் மீள்தலும் என உணர்ந்துகொண்டேன். இரண்டு உலகப்போர்களோடு சுற்றுலாத் தலங்களை இணைத்துச் சொல்லும் காணொளிகளையும் கேட்பொலிகளையும் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தேன். கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்குப் போரும் அழிவும் மீளலும் விற்பனைப்பண்டங்கள். எனது நேரடி அனுபவம் இது.

வேறுசில அனுபவங்களும் எனக்குண்டு. அமெரிக்காவின் விற்பனைக் கருத்தியல் சுதந்திரம். கனடாவின் விற்பனைக்கருத்தியல் இயற்கை. ஏரிகளும் ஆறுகளும் இடைப்பட்ட நிலப்பரப்பும் என்பது முன்வைக்கப்படும் காட்சிகள். 2016 இல் இவ்விரு நாடுகளிலும் மூன்று மாதங்கள் திரிந்தபோது உணர்ந்தது. சிங்கப்பூரின் விற்பனைக் கருத்தியல் செயற்கை உருவாக்கமும் அதன்வழிக் கிடைக்கும் கொண்டாட்டங்களும். மலேசியாவில் பரவிக்கிடக்கும் பெருந்தோட்டங்களே சுற்றுலாவில் விற்கக்கூடியவை.. சௌதி அரேபியாவில் இசுலாமியப் புனிதத் தலங்களான மெக்காவும் மதினாவும் சுற்றுலாவின் விற்பனைக் கருத்துகள் அல்லது பண்டங்கள். இலங்கையின் சுற்றுலாப் பண்டங்கள் சிதைந்து கிடக்கின்றன என்ற வருத்தத்தை இரண்டு பயணக்காலத்திலும் கேட்டுச் சலித்தன என் செவிகள்.

இப்போது இந்தியாவுக்கு வருவோம். இந்தியாவின் சுற்றுலாப் பொருளாதாரத்தில் எவையெல்லாம் விற்பனைப் பொருளாக ஆகமுடியும் என்று யோசித்துப் பாருங்கள். இந்தியாவைப் பல இனங்களும் மொழிகளும் பண்பாடுகளும் கொண்ட துணைக்கண்டம் என நினைப்பவர்கள் அவரவர் விருப்பப்படி அல்லது புரிதல்படி வெவ்வேறு கருத்துகளைச் சொல்லக்கூடும். மலையாளிகள் ஆறுகளையும் மலைகளையும் காட்டிக் கடவுளின் செல்லக் குழந்தையாக ஆகிவிட்டார்கள். அத்தோடு கதகளியென்னும் வண்ணக்கலவையை விற்பனைப் பண்டமாக்கி விற்க முடிகிறது அவர்களால். ஒவ்வொரு மாநிலத்திற்கும் இப்படி ஒன்றை முன்னிலைப்படுத்திய காலத்தை முடிவுக்குக் கொண்டுவர நினைக்கிறது இப்போதைய மைய அரசு. ஒட்டுமொத்த இந்தியாவின் ஒரே சுற்றுலாப் பொருளாக - கருத்தாக ஒன்றைக் கட்டமைக்க விரும்புகிறது. அதைப் புத்தம் புதிதாக உருவாக்காமல், இருப்பதிலிருந்தே உருவாக்குவதுதான் அதன் அடிப்படை இயங்கியல்.


இந்தியாவின் இயற்கை வளமும் உழைப்பும் ஐரோப்பியர்களின் கவனித்ததால் வியாபாரத்திற்காக வந்தபின், அதன் பழைமையும் தொன்மையும் இருண்மையும் சடங்குகளும் விற்பனைக்குரிய கருத்தாக இருக்கும் என நம்பினர். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் இந்தியவியல் என்ற கல்விப்புலத்தை உருவாக்கினார்கள் என்றுகூடச் சொல்லலாம். உலகமெங்கும் இருக்கும் இந்தியவியல் துறைகளின் கற்கைப்பொருளாக இருப்பது இந்திய ஆன்மீகம் என்பதையும் எனது அனுபவங்களின் வழியாகவே சொல்லமுடியும்.

கீழ்த்திசை நாடுகளின் ரகசியங்களுக்கும் சடங்குகளுக்குமான ஆன்மீகக்கருத்தியலின் தோற்ற நிலமாக இந்தியாவை முன்மொழிவதில் இந்தியவியல் துறைகள் முக்கியமான பங்காற்றியுள்ளன. இதனோடு சீனமும் ஜப்பானும் எப்போதும் போட்டியிடுகின்றன. இந்தப் போட்டியில் இந்தியாவை முதன்மைப்படுத்த ஆன்மீகமென்னும் கருத்தைக் கவன ஈர்ப்புக் கொண்டதாக ஆக்கவேண்டும். கருத்தியலை, கருத்தியலாக மட்டுமே வைத்துக் கொண்டிருப்பதைவிடக் காட்சிப் பொருளாக ஆக்குவது கூடுதல் கவன ஈர்ப்பை உருவாக்கும்.அத்தகைய கவன ஈர்ப்புதான் 122 அடி உயர ஆதியோகி. இரவு முழுவதும் ஆட்டங்கள்; பாலடையாளம் தொலையும் உரசல்கள்; செவ்வியல் கலைகளும் நாட்டார் வழக்காறுகளும் இணையும் சேர்மக்கலவைகள்

இயற்கைச் சூழலில் நடனமிட்டும் பேசியும் வாழ்க்கை முறையை மாற்றியும் இந்திய ஆன்மீகத்தை உற்பத்திசெய்யும் இடமாக அவரது ஜமீன்(இது அவரது சொல்) நீண்டகாலமாக இருக்கிறது. அதனை விளம்பரப்படுத்தும் முக்கிய நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் மகாசிவராத்திரி. ஆதியோகியைக் காட்சிப்பொருளாகவும் அதன் முன்னே இருக்கும் லிங்க உருவத்தை வழிபாட்டு மையமாகவும் ஆக்கி முன்னிறுத்துகிறது. இதை திரு. ஜக்கிவாசுதேவின் பல நேர்காணல்களும் உறுதிசெய்கின்றன. இந்தியச் சுற்றுலாப் பொருளாதாரத்தில் ஆதியோகி இபோது முக்கிய இடம்பெற்றுவிட்ட து. உலகச் சுற்றுலா வரைபட த்தில் அதன் இடம் உறுதியாகிக் கொண்டே இருக்கிறது. அதன்மூலம் இந்தியப் பொருளாதாரத்திற்குக் கொஞ்சம் அந்நியச் செலாவணி கிடைக்கும். உடன்விளைவாக இப்போதைய ஆட்சியாளர்களின் பிம்ப உருவாக்கத்திற்கும் பயன்படும்.

எல்லாம் அரசியல் வினைகளே.

எல்லாம் விற்பனைப்பண்டங்களே

எல்லாம் பேசுபொருள்களே

பேசிப்பேசிக் களிக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்