அண்மைக் கதைகள் இரண்டு- 1.சரவணன் சந்திரன்

அவரது கதைககளுக்குள்  பெரும்பாலும் தன்னை ஒரு பாத்திரமாக்கி – கதைசொல்லும் இடத்தில் நிறுத்திக்கொண்டு சொல்கிறார். இந்தச் சொல்முறையில் கதைக்கு உண்மைத்தன்மையும் நம்பகத்தன்மையும் கிடைக்கும் என்றாலும் புனைவுத்தன்மை குறைவு. எழுதுபவரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கும்போது புனைவுத்தன்மை குறைந்து கட்டுரையை நெருங்கிவிடும். இதனை முன்பே சில   தடவைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன். என்றாலும் அந்த சொல்முறை அவருக்கு உவப்பானதாகவும் நெருக்கமானதாகவும் இருப்பதாக நினைத்திருக்கலாம்.

 தொடர்ச்சியாக அவர் எழுதும் கட்டுரைகளையும் புனைவுகளையும் வாசிக்கிறவன் என்ற நிலையிலேயே இதனைக் குறிப்பிட்டேன் என்றாலும், அவரது விருப்பமான சொல்முறையில் வாசிப்பவரோ, விமரிசனக்குறிப்பு எழுதுபவரோ தலையிட முடியாது. அண்மையில் சரவணன் சந்திரன் எழுதிய இரண்டு கதைகளை ஒருவார இடைவெளியில் படிக்க வாய்த்தது. இரண்டு கதைகளில் ஒன்று இணைய இதழ் ஒன்றிலும் (தமிழினி) இன்னொன்று அச்சிதழிலும் (உயிர்மை- பிப்ரவரி,23)  வாசித்தவை.தொடர்ந்து எழுதும் நிலையில் தமிழின் முதன்மையான புனைவெழுத்தாளராக விரைவில் அறியப்படுவார் சரவணன் சந்திரன்.

 யாதவப்பிரகாசர்: குருவை மிஞ்சுதல்

 இசைக்கலைஞர் எம்.டி. ராமனாதனைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை அவரது பேத்தி சௌதாமினி தயாரித்தார். 33 ஆண்டுகளுக்கு முன்னால் தயாரிக்கப்பட்ட ஆவணப் படத்தில் மதுரை நிஜநாடக இயக்கத்தின் நடிகர்களில் பெரும்பாலோர் பங்கேற்றோம். பெரும் மணல் திட்டுகளும் ஆழமான பள்ளங்களும் நிரம்பிய சென்னை சோழ மண்டலக்கரையோரம் படப்பிடிப்பு நடந்தது. நடிகர்களுக்கான அடிப்படைப் பயிற்சிகளைச் செய்வதுதான் பெரும்பாலும் எடுக்கப்பட்ட காட்சிகள்.

உடல், குரல், மன ஓர்மம் என விரியும் நடிப்புப்பயிற்சிகளை முன்னரே மதுரையில் ஒத்திகை பார்த்தபின்னர், அதே பயிற்சிகளைக் கடற்கரை மணற்பரப்பில் செய்தபோது தன்னியல்பான மாற்றங்களும் களைப்பும் ஏற்பட்டுக்கொண்டே இருந்தன. எல்லாவற்றையும் காமிரா படம் பிடித்துக் கொண்டே இருந்தது. இடையிடையே இயக்குநர் எம்.டி.ராமனாதனின் கற்பித்தல் முறையை விளக்கினார்.

எம்.டி.ராமனாதனின் கற்பித்தல் முறை என்பது பெரும்பாலும் போலச்செய்யத்தூண்டும் முறை. அவர் பங்கெடுக்கும் இசைக்கச்சேரிகளுக்கான தயாரிப்புகளின் போதும், கச்சேரி மேடை நிகழ்வுகளின் போதும் தனது சீடர்கள் கவனித்து உள்வாங்கிக் கொள்ளும் முறையையே கற்பித்தல் முறையாகக் கொண்டிருந்தார். அது ஒருவிதத்தில் நாடகப்பயிற்சிகளைப் பார்த்துக் கற்றுக்கொள்ளும் முறையைப் போன்றதுதான். ஆனால் கிடைக்கும் இடச் சூழல், கால நெருக்கடி போன்றவற்றின் வழியாக புத்தாக்கமும் கண்டுபிடிப்புகளும் நடக்கும் என்பது அதன் பின்னுள்ள தத்துவம்.

தமிழினி இணைய இதழில் வந்துள்ள சரவணன் சந்திரனின் யாதவப்பிரகாசர்  கதையை வாசித்து முடித்தவுடன் அந்தப் படப்பிடிப்பும் இயக்குநரின் விளக்கங்களும் நினைவுக்கு வந்தன.

போலச்செய்தல் - கற்றலில் அடிப்படை. போலச்செய்தலே போதுமென நினைக்கும் ஆசிரியன் புத்தாக்கத்தின் எதிரி. போலச்செய்தலிலிருந்து நகரும் நுட்பங்களைக் கண்டறிதல் கலை, இலக்கியப் பயிற்சிகளின் தேடல். தனது மாணாக்கரின் புத்தாக்கத்தைத் தனது பயிற்சியின் நீட்சியாக நினைக்கும் ஆசிரியனுக்கு உண்டாக்கும் மகிழ்ச்சியும் பெருமிதமும் சட்டென்று வெளிப்பட்டுவிடுவதில்லை. அதே நேரம் தடுத்து நிறுத்தும் எத்தணிப்பும் நடப்பதில்லை.

கலை, இலக்கியத்துறை சார்ந்த கற்றல் -கற்பித்தல்/ குரு- சீடன் உறவில் அரிதாகக் காணப்படும் அந்தக்கணம் விளையாட்டுப்பயிற்சியிலும் இருப்பதைக் கதையாக்கியிருக்கிறார் சரவணன் சந்திரன். இந்த வகையில் கவனிக்கத்தக்க கதை. அத்தோடு விளையாட்டில் செய்யும் பயிற்சியொன்றை மரக்கிளையில் அமர்ந்து கிளம்பும் பறவையொன்றின் படிமத்தோடு இணைக்கும் பகுதி இந்தக் கதையில் முக்கியமான இடம்.

இதை விளக்கிச் சொல்வதுபோல அமைந்துள்ள பின்குறிப்பு – யாதவப் பிரகாசர் , ராமானுஜர் உறவைச் சொல்லும் பின்குறிப்பு தேவையில்லை என்றே தோன்றுகிறது. அதே போல் கதைக்குள், கதைசொல்லியாக வரும் மாணவனுக்குப் புனைவான ஒரு பெயர் சூட்டலைத் தவிர்த்தது ஏனென்பது தெரியவில்லை. ஒரு புனைவுப்பெயர் கொண்ட பாத்திரம் கதைசொல்வதாக- படர்க்கை நிலைக் கூற்றாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், சரவணன் சந்திரனே ஒரு விளையாட்டு வீரர் என்ற தகவல் தெரிந்தவர்களுக்குக் கதையை வாசிக்கும்போது, கட்டுரையை வாசிக்கும் தொனி உருவாகும் வாய்ப்புகள் உண்டு .

 கூப்பு யானை : போதைகளின் சாயல்

கூப்புயானை - இம்மாத உயிர்மையில் வந்துள்ள சிறுகதை. ஏதாவதொரு நிகழ்வின் நினைவுகள் மனிதர்களுக்குள் தங்கிவிடும்போது அதைப்போன்ற இன்னொன்றைப் பார்க்கும்போது - பார்க்காமலேயே நினைவில் தோன்றும்போது அவர்களைத் தடுமாறச் செய்துவிடும். அத்தடுமாற்றம் உண்டாக்கும் பதற்றத்தைத் தவிர்க்க அல்லது தக்கவைக்க நினைக்கும் மனிதர்கள் ஏதோவொருவித போதைக்குள் நுழைகிறார்கள்.

உடலைப் போதைக்குள் தள்ளும் மதுபானங்கள், புகையிலை, கஞ்சா என அறியப்பட்ட போதைகளைத் தாண்டிப் பலருக்கும் பலவிதமான போதைகள் இருக்கின்றன. காதலித்தவர்களை நினைத்துக்கொள்வதும், அவர்களோடு தனித்திருப்பதாகக் கனவுகாண்பதும் ஒருவிதமான போதை என்றால், அதனைக் கவிதையாக்குவதும் ,கதையாக்குவதுமான போதைகள் உடலைத் தாண்டி மனதைக் கவிழ்த்துப்போட்டுவிடக்கூடும். எழுத்தைப்போலவே எல்லாக் கலைவடிவங்களிலும் போதையோடு ஈடுபடுபவர்களைப் பார்க்கமுடியும்.

தனிமையான பயணங்கள், கடுமையான உடல் உழைப்பு, தொடர் வாசிப்பு எனப் போதைக்கான வஸ்துக்கள் அரூபமாகவோ, ரூபமாகவோ இருக்கின்றன. அவ்வகையான போதைகள் உருவாக்கும் படிமங்களின் சாயலைக் காரணகாரியங்களால் விளக்கிவிடமுடிவதில்லை. காமத்தின் தத்தளிப்பை அள்ளித்தருவதில் தீராத ஆசை கொண்ட பெண்களின் உடல்கூடப் போதையின் படிமம்தான்.

கூப்புயானையின் சாயலில் தனது படிமத்தை உருவகித்துக்கொள்ளும் ஜெப்ரியின் வீழ்ச்சியின் தொடக்கம் போதையா? போதையால் தன்னைக் கூப்புயானையாக வரித்துக்கொண்டு தனித்து அலைய நினைக்கின்றானா? ஜெப்ரியைப் போலப் பலரை ஒவ்வொருவரும் தாண்டியிருக்கக்கூடும்; ஆணாக மட்டுமில்லை; ஜெப்ரியின் சாயல் கொண்ட பெண்களையும். அவ்வளவு எளிதாகக் கடக்க முடியாதுதான். போதையைக் கைவிட முடிந்த நிலையில் கடந்துவிட முடியும். இதுவரை நான் வாசித்த சரவணன் சந்திரனின் கதைகளில் ஆகச்சிறந்த கதையாக கூப்புயானையை நினைக்கிறேன்.

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்