மதுரையின் வாசம்: யுவன் சந்திரசேகரின் கதைகள்
நீண்ட காலமாகச் சிறுகதைகளில் செயல்பட்டு வரும் யுவன் சந்திரசேகர் போன்ற எழுத்தாளர்களின் கதைகளை ஒற்றை அடையாளத்திற்குள் அடக்குவது எளிதன்று; தேவையானதுமல்ல. அவரது கதைகளை மொத்தமாகத் தொகுத்து வாசிக்கும் ஒருவருக்கு வெளிசார்ந்த அடையாளங்கள் கொண்ட கதைகள் எழுதியிருக்கிறார் எனச் சொல்வதும், அவை மதுரை மாவட்டப் பின்னணியில் எழுதப்பட்டிருக்கின்றன என்று சொல்வது எளிதாக சொல்லக்கூடிய ஒன்றுதான்.
எழுத்து வாழ்க்கையும் எழுதப்படும் வாழ்க்கையும்
யுவன் சந்திரசேகரின் பல கதைகளில் விவாதிக்கப்பட்ட எழுத்து வாழ்க்கையும் எழுதப்படும் வாழ்க்கையும் என்ற அடிக்கருத்து இக்கதையில் இன்னொரு கோணத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டும் இணையும் புள்ளிகளும் விலகும் புள்ளிகளும் குறித்த விவாதங்கள் பெரும்பாலும் இலக்கியத் திறனாய்வுக்கான சொல்லாடல்களாக இருப்பவை. இச்சொல்லாடலைப் புனைவாக்கி எழுதப்படும் கதைக்குள் அலையும் எழுத்தாளப் பாத்திரத்தை, அறியப்பட்ட எழுத்தாளர் ஒருவரின் வாழ்க்கையோடு நிரல்நிறுத்தி வாசித்துவிடத்தூண்டும் குறிப்புகள் கதைக்குள் எங்காவது கிடைத்துவிடும்.
எனது வாசிப்புக்குள் அதிகமான சிறுகதைகளில் உலவும் பாத்திரமாக இருந்தவர் ஜி.நாகராஜன். சுந்தரராமசாமி, திலீப்குமார், பிரபஞ்சன், மணா என்ற லக்ஷ்மா. சி.மோகன் எனப் பலரும் தங்களைக் கதைசொல்லியாக நிறுத்திக்கொண்டு ஜி.என்னின் சாயல் கொண்ட பாத்திரத்தைத் தங்களின் கதைக்குள் உலவ விட்டுள்ளனர். அந்தக் கதைகளை நினைவூட்டும் கதையொன்றை இம்மாதக் காலச்சுவடுவில் யுவன் சந்திரசேகர் எழுதியுள்ளார்.
சிங்கத்தின் குகையில் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அக்கதைக்குள் கதை சொல்லியாக யுவன் சந்திரசேகர் இருக்கிறார். ஒரு நாவலை எழுதிவிட்டு அடுத்த நாவல் முயற்சியை அப்படியே கைவிட்ட எழுத்தாளர் ம. கருத்திருமனைக் குறிப்பான ஓர் எழுத்தாளராக அடையாளப்படுத்துவதற்குப் போதிய ஆதாரங்கள் கதைக்குள் இல்லை. மதுரை நகரம், தங்கியுள்ள விடுதியின் வர்ணனை, எழுதப்பெற்ற நாவலின் வெளி தமிழ்நாடாக இல்லாமல் அந்நியமண்ணாக ( ஆப்பிரிக்கா) இருப்பது போன்றனவற்றைக் கொண்டு ப.சிங்காரத்தின் சாயலை நினைத்துக்கொள்ளத்தூண்டுகின்றன. ஆனால் அத்தகைய தூண்டுதல் இந்தக் கதைக்கு முக்கியமில்லை.
ம.கருத்திருமன் முழுவதும் முழுமையான புனைவுப்பாத்திரம் என்ற நினைப்போடு வாசிப்பதே சரியாக இருக்கும். அக்கதைக்குள் விவாதிக்கப்படும் எழுத்து சார்ந்த விவாதங்கள் தான் முக்கியமானவை. எழுதப்படும் புனைவுக்குள், எழுத்தாளரின் அனுபவத்தின் பங்கு, கதையெழுப்பும் விவாதங்கள், அதன் நிறைவுக் குறிப்பு போன்றனவற்றை ஒரு இலக்கியத்திறனாய்வாளரின் கோணத்தில் கதைக்குள் புனைவாக்கியிருக்கிறார் யுவன் சந்திரசேகர். குறிப்பாக ஆண் -பெண் உறவுகளை எழுதுவது, காமத்தைக் கதைப்பொருளாக்கும்போது எழும் எதிர்ப்புப் போக்குகள் போன்றன விவாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை எழுதும் எழுத்தாளர்களை ஒழுக்கவிதிகள் சார்ந்த அறிவுப்பரப்பும் பொதுமனமும் எப்படி எதிர்கொள்கின்றன என்பதைத் தடையாக உணரும் மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார்.
பல நேரங்களில் மதுரைப்பின்னணியில் தனது கதையை எழுதும் யுவனின் கதைக்குள் அந்தப் பின்னணியே அவரது அனுபவத்தின் சாரம் இருப்பதாகக் காட்டிவிடும். கதைசொல்லியாகத் தன்னை நிறுத்திக்கொண்டாலும் தன்னைப் பற்றிய குறிப்புகளில் காட்டும் வெளிப்படைத்தன்மையும் ஒவ்வொரு கதைக்குள்ளும் கதைசொல்லி என்ற இடத்தைத்தாண்டிப் பாத்திரம் என்பதாக அவரை முன்வைத்துவிடும். இந்தக் கதையிலும் அதனைக் கச்சிதமாகச் செய்துள்ளார். நிகழ்காலத்தின் முதன்மையான புனைவெழுத்தாளரான யுவனின் கதைதளை வாசிப்பது எப்போதும் புதிய அனுபவம். ஒருவிதத்தில் எழுத்தாளர்களுக்கு எழுத்து போதையென இக்கதைக்குள் வரும் குறிப்புபோல, வாசிப்பவர்களுக்கு அதுவே போதைதான். வாசித்துப் பாருங்கள்
****************************
மதுரை வாசம்: சங்கிலி
நாவல், சிறுகதை எனும் இருவகைப் புனைவு எழுத்துகளின் மொழிப் பயன்பாட்டைக் கொண்டு வட்டார அடையாளத்தைச் சுட்டிக்காட்டி விட முடியாது. ஆனால் எழுதும் உரிப்பொருளும் பாத்திர அடையாளங்களும் கொண்டு மதுரை வட்டாரத்தை - இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் வைகைப் பாசனக் கிராமங்களின் அடையாளங்கள் கொண்ட கதைகளை எழுதியவராகச் சுட்டிக்காட்ட முடியும். அப்படியான கதைகளில் ஒன்றை இந்தமாதக் காலச்சுவடில் (மார்ச்,2022) எழுதியிருக்கிறார்.
மனித வாழ்க்கையின் சில கணங்களை விவரித்துவிட்டு, அதற்குள் விளக்கமுடியாத சிக்கல்களும் கேள்விகளும் இருப்பதை அதிகமான புனைவுகளாக எழுதியிருக்கும் யுவன் சந்திரசேகர், தனது இளமைக்கால நினைவுகளை நினைத்துக் கொள்ளும் சிறுகதைகளில் அத்தகைய விசாரணைகளையோ, வாழ்க்கையின் புரியாத கணங்களையோ விவாதிப்பதில்லை. அதற்கு மாறாக கதையின் வெளியையையும் அங்கு உலாவிய மனிதர்களையும் நினைத்துக்கொள்ளும் ‘ நினைவு மீட்டல் ‘ கதைகளாகவே அக்கதைகளை எழுதித்தருகிறார்.
இம்மாதக் காலச்சுவடில் வந்துள்ள ‘சங்கிலி’ கதை அப்படியொரு நினைவு மீட்டல் கதைதான். கிராமங்களின் பெயர்களும், தெருக்களும், மனிதர்களும் முல்லை ஆற்றங்கரையாகச் சொல்லப்பட்டிருந்தாலும் அவையெல்லாம் வைகைக்கரை கிராமங்கள் தான். முல்லையாறு, வைகைப் பெருநதியில் வந்து கலக்கும் இன்னொரு கிளை ஆறு என்ற வகையில் முல்லையும் வைகையும் ஒன்றுதான்.
பணி ஓய்வுக்குப் பின் இளமைக்காலத்தை நினைவுகளில் மட்டும் தேக்கிவைத்துக் கொள்ளாமல் நேரடியாகச் சென்று பார்த்துவிட நினைக்கும் ஒருவனின் நினைவுச் சங்கிலியில் ஒவ்வொரு கண்ணியும் ஒரு கதையாக விரிகின்றது. வகுப்புத்தோழன், ஆசிரியர்கள், இளம்பிராயத்துக் காதல், காமம், நட்பு, ஊர்ப் பெருந்தனக்காரர், அவரது குடும்பத்துப் பெண்கள் மீதும், மற்றவர்களின் அந்தரங்க வாழ்க்கைக்குள்ளும் நுழைந்து செலுத்திய அதிகாரம், கிராமத்திலிருந்து பக்கத்து நகரமான மதுரைக்குச் சென்று திரும்பகூடிய பயணங்கள் குறித்த நினைவுகள் என 1970 களின் கிராமத்தைக் குறுக்குவெட்டாகக் கண்முன் நிறுத்தும் கதையைப் படிக்கும்போது என்னைப் போன்றவர்களுக்கு சுலபமாக அந்தக் கதையின் காலத்திற்குள் சென்று தங்கிவிட்டு வெளியேற முடியாமல் தவிக்கும் சிக்கல் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாது. 50 ஆண்டுகளுக்குப் பின் தனது கிராமத்திற்குச் செல்லும் நகரவாசிகளால், பழைய கிராமங்களை மட்டுமே கவனிக்க முடியும். இப்போதைய இயக்கமும் மாற்றங்களும் பிடிபடுவது அவ்வளவு சுலபமல்ல.
தமிழில் எழுதும் புனைகதைக்காரர்களில் பலரும் கிராமங்களை விட்டுவிட்டு நகரங்களுக்கு இடம்பெயர்ந்த மனிதர்களாகவே இருக்கிறார்கள். விடுதலைக்குப் பின்னான இந்தியக் கிராமங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஊடுருவிப் பேச அவர்களுக்குச் சாத்தியமில்லை. தனது அருகிருக்கும் பிறமனிதர்களைத் தனது சக மனிதர்களாகப் பார்க்க விடாமல், எப்போதும் ‘பிறராகவே’ பார்க்கும்படியாகத் தூண்டும் சாதீய இறுக்கம் மாறாத தமிழ்நாட்டு/இந்தியக் கிராமங்களை- மனிதர்களை எழுத அங்கேயே வாழ்ந்து உணரும் புரிதல்கள் தேவை. அப்படியான எழுத்தாளர்கள் மிகவும் குறைவு. எப்போதாவது கிராமங்களுக்குச் சென்று திரும்பும் எழுத்தாளர்களே இங்கு அதிகம். நவீனத்துவ வாழ்க்கையின் மீது பலவிதமான விசாரணைகளை எழுப்பியுள்ள யுவன் சந்திரசேகர், அவ்வப்போது தனது சொந்தக் கிராமத்திற்கு வந்துபோகும் புனைகதைகள் வழியாக மதுரை மாவட்டக்கிராமங்களின் பழைய வாசத்தைத் தூவி விடுகிறார்.
கதை சொல்லலில் தேர்ச்சி
விராட பர்வத்தை உனக்கு யார் சொன்னது என்று கேட்டால் என் தாய்மாமா சொன்னார் என்று தான் சொல்வேன். அவரோ வேதவியாசனுக்கு ஜெனமே ஜெய மகாராசன் சொன்னது எனவும், ஜெனமேஜெய மகாராஜனுக்கு அவனது மூதாதையர்களின் ஒருவனான ... சொன்னது எனவும் சொல்லியிருக்கிறார். யுவன் சந்திரசேகரின் புளிப்புத்திராட்சை என்ற கதை மட்டுமல்ல; பல கதைகள் இதிகாசக் கதை சொல்லும் மரபைப் பின்பற்றி நிகழ்கால மனிதர்களின் கதையைச் சொல்லும் தன்மை கொண்டவை.
கிராமப்புறத்தில் வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்தின் கதைதான் புளிப்புத் திராட்சை ஆனால் சொல்லப்பட்ட முறையால் தொடர்ச்சியற்ற எழுத்தின் சாத்தியங்களைப் முழுமையாக வாசகனுக்குத் தரும் கதையாக இருக்கிறது. மார்க்கேஸின் மரணத்தை அறியாத அவரது ரசிகன் வெயிலுமுத்துவைக் கதைக்குள் கொண்டுவந்ததன் வழியாக நவீனத்துவக் கதைகளின் வாசிப்பு முறையைக் கோரும் யுவன் சந்திரசேகர், “ ஒருவேளை காந்தாரியின் ஜாதகமும், தனது ஜாதகமும் ஒன்றாய் இருக்கும் பட்சத்தில் ரத்த முத்துக்கள் நூற்றுக் கணக்கில் குழந்தைகளாக மாறினால், அவர்களையும் சாபம் பிடித்துவிடுமே என்ற அக்கறையால்..” போன்ற குறிப்புகளைத் தருவதன் மூலம் பாரதக் கதையின் பாணியே அதுவும் என எனச் சொல்லவும் விரும்பியுள்ளார்.
கதை சொல்லும் முறைகளின் அடுக்குகளைத் தாண்டி மூவார்நத்தம் ராமசுப்பு வைத்தியரின் வார்த்தைகளாகக் கதைப்பரப்பு மாறும்போது ஒரு பழைய பிரபுத்துவக் குடும்பத்தின் ரகசிய அடுக்குகளாக விரிகிறது. ராமசுப்பு வைத்தியர் மட்டுமல்ல்; தாந்திரீக வேலைகளும் தெரிந்தவர் என்று அறிமுகப்படுத்திவிட்டு. அவரைக் கிண்டலும் கேலியுமாகக் கூப்பிடும் உரிமை கொண்ட லச்சம் என்னும் லக்ஷ்மம்மா,சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, ரேஞ்சர் பொன்னுச்சாமி ஆகியவர்களைப் பதவி அடையாளங்கள் நீக்கப்பட்ட மனிதர்களாகக் கதைக்குள் கொண்டுவந்துள்ள விதம் குறிப்பிடப்பட வேண்டியதாக இருக்கிறது.
நவீன வாழ்க்கைக்குள் இருக்கும் நகரமனிதனான கதையின் வாசகன் தனது கடந்தகால நினைவுப்படுகைகளின் வழியாகப் பயணம் செய்யும் வாய்ப்பை உருவாக்கும் எழுத்துமுறையால் யுவன் எப்போதும் தேர்ந்த கதைக்காரனாகவே வெளிப்படுகிறான். அதுமட்டுமல்லாமல், “ ...... என்றாலும், ஊரார் துணிகளில் அழுக்கு நீக்கும் உரிமை ஏகாலியிடமும், ஊரார் ரோமங்களை மழிக்கும் பொறுப்பு நாவிதனிடமும், ஊரார் கனவுகளைச் செப்பனிடும் வித்தை ஜோசியனிடமும், ஊரார் வருவாயைப் பிடுங்கும் சாமர்த்தியம் சர்க்காரிடமும் இருக்கிற மாதிரி, ஊரார் நோவுகளைச் சுமக்கும் பாக்கியம் வைத்தியனைச் சேரும் என்பதால் எங்களுக்கு மட்டும் விலக்கு உண்டு என்று வாசல்தேடி வந்து கிளிஜோசியன் அவளிடம் அடித்துச் சொன்னதன் அடிப்படையில், என்னிடம் வந்து சேர்ந்த கதைகளைத் தான் உங்களிடம் சொல்கிறேன்.” எனக் கதைக்குள் உருவாக்கும் சுவாரசியமான சொல்முறையாலும் யுவனின் கதைகள் ரசிக்கத் தக்க - நினைக்கத் தக்க கதைகளாக இருக்கின்றன. இந்தக் கதையும் அப்படி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய கதையே.

கருத்துகள்