துக்ளக் என்னும் அரசியல் மையம்

தமிழ்நாட்டின் வலதுசாரி அரசியலின் முகமாக இருக்கும் பல பத்திரிகைகளில் முதல் இடம் எப்போதும் துக்ளக் இதழுக்குத்தான். துக்ளக் இதழின் ஆசிரியர்களுக்குப் பத்திரிகையின் வணிகவெற்றியோ, வாசகப்பரப்பைக் கூட்டுவதோ முதன்மையான நோக்கங்களாக இருக்கவில்லை; அவற்றை விடவும், அரசியல் ஆளுமைகளாகத் தங்களை நிலைநிறுத்தும் நோக்கம் இருந்தது; இருக்கிறது என்பதைக் காரணமாகச் சொல்லலாம். வலதுசாரிச் சார்புக் கருத்தியல் ஆளுமையாகத் தன்னை நிலைநிறுத்த அதன் தொடக்க ஆசிரியரான சோ.ராமசாமியும் விரும்பினார்; இப்போது ஆசிரியராக உள்ள சுவாமிநாதன் குருமூர்த்தியும் விரும்புகிறார்.இந்துப் பெரும்பான்மையை உருவாக்குவது; அதன் வழியாக இந்துத்துவ நாடொன்றைக் கட்டமைப்பது என்ற நோக்கில் செயல்படும் கட்சி பாரதிய ஜனதா. அந்தக் கட்சிக்கு ஆலோசனை சொல்லும் இடத்தில் இருக்கும் திரு. குருமூர்த்திக்கு இசுலாமிய அரசன் பெயரில் நடந்த பத்திரிகைக்கு ஆசிரியராக ஆகும்போது கொஞ்சம் உறுத்தலாகக் கூட இருந்திருக்கலாம். ஆனாலும் மாற்றியே ஆகவேண்டும் என்னும் அளவுக்கு உறுத்தலாக இருக்காது. அங்கதச்சுவையூட்டும் நகைமுரணாகக் கருதி ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றுதான். “துக்ளக்” என்ற பெயர் தில்லியை ஆண்ட கில்ஜி வம்சத்தைச் சேர்ந்த   அரசனின் பெயர்.வரலாற்றுக் குறிப்புகளும், பின்னர் எழுதப்பெற்ற இலக்கியப்புனைவுகளும் துக்ளக், “தேவையான நிர்வாக முடிவுகளை எடுத்தவன்; ஆனால் பொருத்தமற்ற காலத்தில் எடுத்ததால் தோல்விகளைச் சந்தித்தவன்” என்ற சித்திரத்தைத் தருகின்றன. வாசிக்கக் கிடைத்த வரலாற்றுச் சான்றுகளைத் தாண்டிக் கிரிஷ் கர்னாட் எழுதிய துக்ளக்(1964) என்ற கன்னட நாடகம் தீவிரத்தன்மை கொண்ட அங்கத நாடகம். துக்ளக் இதழின் ஆசிரியர் சோ.ராமசாமி தமிழில் எழுதிய ‘முகமதுபின் துக்ளக் (1968)’ முழுமையான எள்ளல் நாடகம்.

துக்ளக் இதழைத் தொடங்கிய சோ.ராமசாமி, வலதுசாரி அரசியல் என்பதாக இல்லாமல், தேசியக்கட்சிகளின் அரசியலுக்கு ஆலோசனை சொல்லும் இடத்தில் தன்னை நிறுவிக் கொண்டவர். அப்படியான வாய்ப்பை அவருக்கு உருவாக்கித் தந்தது இந்திரா காந்தியின் நெருக்கடிநிலைப் பிரகடனம். அந்த அறிவிப்புகள், இந்தியாவின் மக்களாட்சி நடைமுறைகளுக்கு எதிராக இருப்பதாக அந்த நேரத்தில் வலதுசாரிகளும் சொன்னார்கள்; இடதுசாரிகளும் போராட்டங்களை முன்னெடுத்தார்கள். சோ. அந்த அலையில் இணைந்து கொண்டார்.   கறாரான வலதுசாரி ஆதரவாளர் என்பதைக் காட்டிக் கொள்ளாமல் மக்கள் குடிமையியல் உரிமைகள் பேசும் ஆளுமைகளோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு செயல்பட்டார் சோ. அந்த அடையாளமே மாணவப்பருவத்தில் இருந்த என்னைப் போன்றவர்களையெல்லாம்  துக்ளக் இதழின் வாசகர்களாக ஆக்கியது.

வலதுசாரிப் பொருளியல் நடவடிக்கைகளே இந்தியாவிற்குத் தேவை என்பதைத் தொடர்ச்சியாகச் சொன்ன - நம்பிய பத்திரிகையாளர் சோ.ராமசாமி. அதை வெவ்வேறு நிலையில் வெளிப்படுத்துவதற்காகவும், அதற்கு எதிராக இருப்பவர்களை விமரிசனம் செய்வதற்குமே துக்ளக் இதழை ஆரம்பித்தார் என்று கூடச் சொல்லலாம். ராஜாஜின் சுதந்திராக் கட்சியை ஆதரித்த போதும், அவசர நிலையை அறிவித்த இந்திரா காந்தியை எதிர்த்து அவருக்கு எதிராக இருந்த சிண்டிகேட் தலைவர்களில் ஒருவரான மொரார்ஜி தேசாயை ஆதரித்து எழுதியபோதும் அவரிடம் செயல்பட்டது வலதுசாரிப் பொருளியல்வாதம். 

சோ.ராமசாமி இருந்தவரை துக்ளக் இதழுக்கு வலதுசாரிப் பண்பாட்டு விவாதங்கள், கலை, இலக்கியப் பார்வைகள் போன்றவற்றில் வெளிப்படையான ஈடுபாடும் நிலைப்பாடுகளும் இருக்கவில்லை. முழுமையாகத் தங்களை வலதுசாரிக் கலை, இலக்கியவாதிகள் என்று அறிவிக்கத் தயங்கிய எழுத்தாளர்களும் சினிமாக்காரர்களும் துக்ளக்கில் எழுதினார்கள். துக்ளக்கில் எழுதுவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட புனைபெயர்களில் வந்த பல கட்டுரைகள், அதே காலகட்டதில் வந்த இலக்கியச் சிற்றிதழ்களில் எழுதப்பெற்ற கட்டுரைகளின் கருத்தியலோடு ஒத்துப்போகும் தன்மையில் இருந்தன. அவற்றை வாசிப்பதற்காகவே நான் துக்ளக்கின் தொடர்வாசகனாக இருந்துள்ளேன். இந்திரா காந்தியின் எமர்ஜென்சியை எதிர்த்த துக்ளக் காலகட்டத்தில் தொடங்கிய வாசிப்பு கால்நூற்றாண்டு காலம் நீடித்தது. நண்பர் மணா என்ற லட்சுமணன் அதன் நிருபராக இருந்தபோது துக்ளக் அலுவலகத்திற்கு ஒருமுறை போயிருக்கிறேன். வண்ணநிலவனை நேரில் பார்த்தது அங்குதான். ஒவ்வோராண்டும் பொங்கலை ஒட்டி நடக்கும் துக்ளக் ஆண்டுவிழா நிகழ்ச்சியொன்றில் கூடப் பார்வையாளனாக இருந்துள்ளேன். அவசர நிலைக்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட தேர்தல் கூட்டங்களில் சோ.ராமசாமியின் பேச்சுக்களை மதுரையின் தெருக்களில் நின்று கேட்டிருக்கிறேன்.

2000 - க்குப் பின்பு துக்ளக் வாசகர் என்ற நிலையிலிருந்து விலகினேன். தன்னை நாடிவரும் நபர்களுக்கு அரசியல் ஆலோசனைகள் சொல்லும் குருவின் இடத்தை உருவாக்கிக் கொண்டு தமிழ்நாட்டுத் தேர்தல் அரசியலில் ஒரு அதிகார மையமாகத் துக்ளக் ஆசிரியர் மாறியபோது அந்த விலகல் நிகழ்ந்தது. அதன் பிறகு எப்போதாவது வாசிக்கும் இதழாக மாறியது. நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் ஆசைகளை ஊட்டி வளர்ப்பவராக அறியப்பட்டபோது துக்ளக் வாசிப்பு மொத்தமாக நின்றுபோனது. ஏதாவது பயணங்களில் யாரிடமாவது இருந்தால் வாங்கிப் பார்க்கும் ஒன்றாகவும் நூலகங்களில் கண்ணில் தட்டுப்படும்போது புரட்டிப் பார்க்கும் இதழாகவும் ஆனது.
 
ஆடிட்டர் குருமூர்த்தியின் ஆசிரியத்துவத்தில் வரும் துக்ளக் இதழ் ஒன்றைக்கூடப் பணம் கொடுத்து வாங்கிப் படித்ததில்லை. இணையதளப் பக்கத்தில் சென்று பார்ப்பதுண்டு. சோ.ராமசாமியின் துக்ளக்கிலிருந்து இப்போது வரும் துக்ளக் சில தளங்களில் மாற்றம் அடைந்துள்ளது என்பதை அவ்வப்போது பார்ப்பதிலிருந்தே சொல்ல முடியும். இப்போது வரும் துக்ளக் இதழுக்கு முழுமையான வலதுசாரிப் பார்வை இருக்கிறது. பொருளாதாரவாதம் மட்டுமல்லாமல், கலை, இலக்கியம், சமூகவியல், வரலாறு என அனைத்துத்தளத்திலும் பின்னோக்கிய நகர்வை முன்வைக்கும் பார்வையைக் கொண்டிருக்கிறது. சோ.ராமசாமியைப் போலல்லாமல், தனது அரசியல் சார்பையும் அதிகாரமையமாக இருப்பதையும் மறைக்காதவராக இருக்கிறார் குருமூர்த்தி.
 
அ.இ.அ.தி.மு. க. வின் தலைமையாயிருந்த ஜெ.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அந்தக் கட்சியின் நடவடிக்கைகளை நகர்த்தியதில் இவரின் பங்கிருந்தது. யாரை முதல்வராக்குவது என்பதில் தொடங்கி, சில துறைகளில் யார் யாரை அமைச்சர்கள் ஆக்குவது, அதிகாரிகளாக்குவது வரை அவரது ஆலோசனைகள் இருந்தன எனப் பரவலாகப் பேசப்பட்டன. கல்வி, தமிழ் வளர்ச்சி போன்ற துறைகளில் அவரது ஆலோசனைகளுக்குச் செவி சாய்க்கும் அமைச்சர்களும் அதிகாரிகளும் இருந்தார்கள் என்பதை அறிய முடிந்தது. 2021 இல் திராவிட முன்னேற்றக்கழகம் வெற்றி பெற்ற பின் தமிழ்நாட்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் அவரை மையம் கொண்டதாக மாறியிருக்கிறது என்ற தோற்றம் உள்ளது. அந்தத்தோற்றத்தைத் தக்கவைக்கவும் அவரே பலவற்றைத் தீர்மானிக்கிறார் என்பதை உறுதிசெய்வதற்காகவும் வெளிப்படையாகவும் கருத்துகளைச் சொல்கிறார். சந்திப்புகளை நடத்துகிறார். 

அண்மையில் திண்டிவனம் அருகிலுள்ள தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் ச. ராமதாஸைச் சந்தித்த நிகழ்வும் அத்தகைய ஒன்றே. அவரை எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மட்டுமே சந்திக்கின்றார்கள் என்பதில்லை. வலதுசாரிக் கருத்தியலில் எழுதும் எழுத்தாளர்களும் வரலாறு, தொல்லியல் கருத்துகளைப் பரப்பும் நபர்களும் சந்திக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய விருதுகளுக்கான பரிந்துரைக் கடிதங்களைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தூக்கம் தொலைந்த இரவானது

திருக்குறளில் கடமைகளும் உரிமைகளும்

நவீனத்துவமும் பாரதியும்