உமாமகேஸ்வரியின் ஸீஸா:மனவோட்டத்தின் உருவகம்

பத்திரிகைகளின் தேவைக்கு எழுத மறுக்கும் மனநிலை கொண்ட எழுத்துக்காரர்கள் தங்கள் எழுத்தையே தொடர்ந்து தாண்ட நினைக்கும் விருப்பம் கொண்டவர்கள். தொடர்ச்சியாக ஒரு தீவிர எழுத்தாளரின் பனுவல்களை – கவிதை, புனைகதை, நாடகம் என எதுவாயினும் - வாசிக்கும்போது, ஒன்றுக்கொன்று பொதுத்தன்மைகள் இருப்பதுபோலத் தோன்றும். ஆனால் குறிப்பான வேறுபாடொன்றை வாசகர்களுக்குத் தராமல் போகாது. அப்படித்தருவதில் தான் தீவிர இலக்கியம் தன்னைப் பொதுவாசிப்பிலிருந்து வேறுபடுத்திக் காட்டிக்கொள்கிறது. 

பொதுத்தன்மை வழியாக உருவாகும் எழுத்தாளரின் அடையாளத்தைக் கைவிட்டுவிட்டுத் தனித்தன்மைகளை உருவாக்குவதில் வழியாகவே கவனிக்கப்படும் எழுத்தாளராகவும் வரலாற்றில் நிற்க க்கூடிய எழுத்துகளைத் தந்தவராகவும் ஆகமுடியும். தனது எழுத்துகளுக்குள்ளேயே வேறுபாடுகளை உருவாக்குவதின் வழியே தன்னைப்  புதுப்போக்கொன்றின் அடையாளமாக மாற்றும் முயற்சியில் ஈடுபடும் எழுத்தாளர்களைத் தேடித் தேடி வாசிக்க வாசகர்களும் திறனாய்வாளர்களும் தயாராக இருப்பார்கள். நிறைய எழுதிவிட வேண்டுமென நினைக்கும் ஒருவரால் தொடர்ந்து வேறுபாடுகளையும் சோதனைகளையும் தரமுடியாது. புதியன தேடலும் சோதனை முயற்சிகளும் இயலாத நிலையில் எழுத்தாளர்கள் தேங்கிப் போவதும் நடக்கிறது.

நீண்ட காலமாகப் புனைகதைப் பரப்பில் இயங்கிவரும் உமாமகேஸ்வரியின்  தொடக்கநிலைப் பொது அடையாளமாக வெளிப்பட்டது குடும்பவெளி. நகர  வாழ்க்கையில் இருக்கும் நடுத்தரவர்க்கக் குடும்பங்களை எழுதுபவர் என்றோ,   கிராமப்புறங்களில் இயங்கும் கூட்டுக்குடும்பத்தை எழுதுபவர் என்றோ பொத்தாம் பொதுவாக அடையாளப்படுத்த முடியாத வகையில் அவரால் முன்வைக்கப்பட்ட குடும்பவெளிகள் இருந்தன. தொடர்ந்து வாசிக்கும்போது அவரால் முன்வைக்கப்படும் பெண்கள், தமிழ்க் குடும்பவெளிக்குள் வித்தியாசமான விருப்பங்களோடும், மனவியல் ஓட்டங்களோடும் நெரிபடும் பெண்களாக இருப்பதை அடையாளப்படுத்த முடிந்தது. அந்த வேறுபட்ட தெரிவுகளுக்காகவும், தெரிவுசெய்த பெண்களின் மனவோட்டங்களையும் சின்னச் சின்னச் செயல்பாடுகளையும் விவரிக்கும் மொழிக்காகவும் அவரது கதைகளைத் தொடர்ந்து ஒருவரால் வாசிக்க முடியும்.  

இப்போது புதிதாக வந்துள்ள தமிழ்வெளி இதழில் அச்சாகியுள்ள ஸீஸா இதுவரையிலான உமா மகேஸ்வரியின் கதைகளிலிருந்து முற்றிலும் வேறான ஒன்றாக எழுதப்பட்டுள்ளது. மதங்கள், கடவுளை அல்லது கடவுளின் பிரதிநிதிகளான தேவ தூதர்களை ஆதியும் அந்தமுமில்லாத பிறப்பை உடையவர்கள் எனக் காட்ட முயன்றுள்ளன. ஆணின் துணையின்றி, நேரடியாக அவதரித்தார்கள் என்பதைக் காட்டுவதற்காகக் கன்னிப்பெண்களைக் கர்ப்பம் தரித்தவர்களாகக் காட்டியுள்ளன. பெருஞ்சமயப் புனைவுகளைப் போலவே நாட்டார் தெய்வ வழிபாட்டிலும் இத்தகைய தெய்வ உருவாக்கங்கள் உண்டு. தனது பிள்ளையின் நடவடிக்கைகளில் இருபாலினத்தின் சாயல்களும் கலந்திருக்கும் நிலையில் அதனைத் தெய்வக்குழந்தை எனவும் கடவுளுக்குத் தரவேண்டிய பிள்ளை எனவும் நினைக்கும் பெற்றோர்களைப் பார்த்திருக்கக் கூடும். பெற்றோர்களின் இந்த மன நிலை உருவாக்கும் ஒதுக்குதலே ஒரு இருபால் மனிதனை வீட்டைவிட்டு வெளியேறச் செய்கிறது. 

உமாமகேஸ்வரியின் கதைக்குள் சாமியாடும் அம்மாவும் அதனை ஏற்க மறுத்து அம்மாவை வெறுக்கும் மகளும் பாத்திரமாக்கப்பட்டுள்ளனர். அம்மாவின் நிலையை விவரிக்கும் அந்தக் கூற்றே மகளின் நிராகரிப்பைச் சொல்கின்றன:

அம்மாவின் மேல் சாமி வரும். அடிக்கடி. பௌர்ணமி இரவில் அம்மா வேறு வடிவுறுவாள். செக்கச் சிவந்த புடவை. விரி கூந்தல். நெற்றியில் நெருப்புக் கங்கான குங்குமம். பற்களை நறநறத்தபடி, மெல்லிய உறுமலோடு நடுக் கூடத்தில் ஒருகால் உயர்த்தி் உள்ளங்கையை அதில் நிறுத்தி மறுகால் பாதி மடிந்த நிலையில் உட்கார்ந்திருப்பாள். "பசி பசி"என்ற அவள் உறுமலுக்குப் படைக்கப் பல்வேறு பதார்த்தங்களை சமையல் அறையில் பணிப் பெண்கள் தயாரித்துக் கொண்டிருப்பார்கள்

பொரித்த மாமிசத் துண்டுகளும், மதுக் கிண்ணங்களும் அம்மாவின் முன் வைக்கப்படும். அவற்றை உண்டு அருந்திய பிறகு அவள் வேறு யாரோவாக மாறுவாள் .

அப்போது அவள் சொல்லும் வாக்கெல்லாம் பலித்ததாம் .

அம்மாவிற்குள் இயங்கும் புனித நிலையை ஏற்க மறுக்கும் மகளுக்குப் புனிதம் – சுத்தம் – கன்னிமை என எல்லாவற்றின் மீதும் வெறுப்பிருக்கிறது. ரகசியமாக்கப்படும் ஒவ்வொன்றோடும் புனிதங்களின் சாயைகள் படர்வதைத் தடுக்கமுடியாது. நமது சமூகமும் அதன் நிறுவனங்களும் காதலையும் காமத்தையும் ரகசியமாக்கி வளர்க்கின்றன. அதனால் புனிதங்களின் திரைகளோடு நகர்கின்றன. 

குழப்பமும் தெளிவின்மையுமான தெய்வாம்சத்தை விவாதிக்கும் ஸீஸா கதையில் குறிசொல்லும் அம்மாவின் செயல்பாடுகளின் மீது வெறுப்புக் கொண்ட மகளின் மன உருவாக்கத்தை சீஸா பலகையின் அந்தரவெளிப்பயணமாக மாற்றி உருவகம் செய்து கதையைக் கட்டியெழுப்பியிருக்கிறார் உமா மகேஸ்வரி. கடவுளின் குழந்தையைச் சுமக்கிறேன் என்ற கூற்று உண்மையாகிவிடுமோ என்ற பதற்றமும் அச்சமும்  ஆட்டுவிக்கும்போது தன்னைச் சாய்த்துக்கொள்ள ஒருதுணை இருக்கிறது என்பதை உணர்கிறது அவளது மனம்.

 "ஒன்றுமில்லை. ஒன்றுமில்லை" என நினைவை ஒற்றும் குரல் அவனுடையது தான் ...பிள்ளைப் பிராயத்தின் உலகமாக  உடனிருந்தவன். ஸீஸா, என்னை உயர்த்துகிறேனென்று நீ கட்புலனாகாத பள்ளத்தாக்கில் கரைந்து மறைந்தாய். நானோ அந்தரத்தில் எந்தப் பிடிமானமுமின்றி அலைக்கழிகிறேன். நீ எங்கே இருக்கிறாய்," அவன் நினைவு மேகங்களூடே கசிந்தது. "என்ன எப்பப் பாரு என்னையே பாடுபடுத்திக்கிட்டு. நான் என்ன உன் விளையாட்டுப் பொருளா?"என்று திட்டிக் கொண்டே மரக் கிளையிலேறி பூவரம் பூப் பறித்துத் தருபவன். குருத்தோலையில் கோமாளி பொம்மைகள், சாட்டைகள், குட்டிப் பெட்டிகள் உருவாக்கித் தந்து அவள் முக வாட்டம் போக்கத் தன்னையே  சமயங்களில் கோமாளி ஆக்கிக் கொள்பவன். இங்கே தான். மிக அருகில் தான் அவன் சுவாசம் இழைகிறது. மிருதுத் தலையணை அவன் தோளாய் அணைக்கிறது.

 

சிறு பிராயத்தில் அவளுடைய ஊஞ்சலை ஆட்டி உயரப் பறக்க வைத்தவனை நினைத்தாள். எவ்வளவு சிரிப்பு. மிக உயரத்திற்கு ஊஞ்சலை அவன்  ஏற்றும் போது என்ன ஒரு கூச்சல். சீ...ஸா...ப் பலகையும் அவர்கள் இருவரும் விளையாடத்தான். வளர்ந்த பிறகு சிறுவர்களும் சிறுமியரும் இங்கு வருவதில்லை. சீஸா, அப்படித் தான் அவனை அப்போதிருந்து அழைத்தாள், இங்கேயே தான்  இருக்கிறான்., வீட்டையும், தோட்டத்தையும் பார்த்துக் கொண்டு. அவனை எல்லோருமே சீஸா என்றே அழைக்கிறார்கள்...தினந்தோறும் காலையில் தோட்டத்திலிருந்து அவன் எடுத்துச் சேர்த்த பூங்கொத்துகள் பணிப்பெண் மூலமாக வீட்டுக்குள் வரும், அவன் வர முடியாது. சற்றுத் தள்ளி இருந்த அந்த சீஸாப் பலகையைத் தீண்டிப் பார்த்தாள், அவனைப் போலவே  தானிருக்கிறது. சிறுவயதில் தொட்டுணர்ந்த அவனுடலின் திண்மையோடு அதே வாசத்தோடு., சமீபத்தில் அவனை ஒரு நாள். ஆலயத்திற்குப் போகும் போது பார்த்தாள். கரிய சிலை போல் உறுதியான தோற்றம். சலனமே அற்ற சற்றும் நிமிர்ந்து அவளை உற்றுப் பார்க்காத விழிகள்...சிற்ப விழிகள். பிள்ளைப் பிராயத்தின் சுவடுகள் இந்த மண்ணிலிருக்கின்றன  இன்னும். அவனுடைய, என்னுடைய, எங்களுடைய சுவடுகள்...புன்னகைக்கும், கலத்துச்சிரிக்கும், கண்ணாமூச்சியாடும், ஓடும் சுவடும், ஆம், அழிந்திருக்காது. அப்படியே தான் இருக்கும்.

பின்புறமிருந்து பரபரப்பான, பதட்டமான, பரவசமளிக்கக் கூடிய காலடியோசை. ஆம், அவன்தான் அவளுக்குத் தெரியும் .

ஸீஸா என்றழைக்கப்படும் அந்த ஆடவனோடு அவள் கொண்டது நட்பா, காதலா என்பதற்குள் துல்லியமாக நுழையாமல், எப்போதும் அவனது அருகிருப்பு ஒரு புத்துணர்வைத் தருவதாக இருந்தது எனக் காட்டுகிறது கதையின் புனைவு. அவர்கள் வீட்டிலும் தோட்ட த்திலும் வேலை பார்க்கும் ஸீஸாவின் உடல் வனப்பையும் அதன் அருகிருப்பையும் ரசிக்கும் அவள் அவனிடம் தன்னைத் தரவும் தயாராக இருக்கக் கூடியவள் தான். தான் தெய்வாம்சம் கொண்ட சிசுவைச் சுமக்கப்போகும் புனிதளல்ல; சாதாரணமான ஒரு பெண் என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அவளுக்குள் உக்கிரமாக எழும்பி ஆர்ப்பரிக்கும்போது மனவோட்டம் அப்படித்தான் முடிவெடுக்கும். அந்தப் பகுதியை எழுதும் உமாமகேஸ்வரியின் எழுத்து நடை வாசிப்பவர்களை உள்ளிழுத்துக் கொள்ளும் அழகியலாக மாறியிருக்கிறது. அந்த நுட்பத்தோடு, ஸீஸாவில் அவளை வைத்து அந்தரத்தில் – உயரத்தில் பறக்க வைத்து ரசிக்கும் ஆணின் மனவோட்டங்களையும் எழுதிக்காட்டியிருக்கலாம் என்றும் தோன்றியது. ஒரு புனைவில் இன்னும் எழுதக் கூடிய பகுதிகள் இருக்கின்றன என்பது தேர்ந்த வாசகருக்குத் தோன்றும். என்னுடைய வாசிப்பின் நீட்சியாக அந்தப் பகுதியில் இன்னும் எழுதியிருக்க வேண்டும் என்று தோன்றியது. அப்படி எழுதியிருக்கும் நிலையில் அவர்களது உறவு நட்பையும் தாண்டிய உறவாகத் தோற்றமளிக்கும் வாய்ப்பைத் தந்திருக்கும்.



சீஸாப் பலகையை உருவகமாக மாற்றி எழுதப்பெற்றுள்ள கதை, மக்களின்  நம்பிக்கைக்குப் பின்னால் இருக்கும் ஒருவித மாயத்தன்மையை -மிஸ்டிக் மனோபாவத்தை எழுத நினைத்துள்ளது. இதுதான் எழுத்தாளரின் தேடலின் கண்டுபிடிப்பு. அதன் மூலம் இதுவரையிலான அவரது சிறுகதைகளிலிருந்து குறிப்பான விலகல் ஒன்றைச் செய்திருக்கிறார் உமா மகேஸ்வரி. அந்தக் கதைக்குள் வரும் இரண்டு தலைமுறைப் பெண்களின் விளக்கிக் காட்ட முடியாத மனவோட்டங்களையும் அறிந்து கொள்வதற்காகவும் வாசிக்கவேண்டிய கதையாக மாறியிருக்கிறது ஸீஸா. 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்