நெல்லை: வீடு தேடிய படலம்

 

பல்கலைக்கழகப் பணியில் சேர்ந்தது 1997 பிப்ரவரி 14. உடனடியாக க்குடும்பத்தை அழைத்துவர இயலாது; தேவையுமில்லை. பிள்ளைகள் இருவரும் படித்துக் கொண்டிருந்தார்கள். ஏப்ரலில் தேர்வுகள் முடிந்ததும் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு பிள்ளைகளோடு திருநெல்வேலிக்கு   மே மாதம் குடிவந்துவிட வேண்டும் என்பது திட்டம். பல்கலைக்கழகமும் மே முதல் தேதியிலிருந்து விடுமுறையாகி விடும். அதற்கு முன்பு வீடு பார்த்துவிட வேண்டும் என்ற திட்டத்தில் வீடுதேடும் படலம் ஆரம்பித்தது.

பல்கலைக்கழக வளாகம் திருநெல்வேலி – தென்காசி சாலையில் 12 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. நெல்லை டவுன் என அழைக்கப்படும் பழைய ஊர்ப்பகுதியிலோ, அதனைத் தாண்டி இருக்கும் பேட்டையிலோ, காந்திநகரிலோ வீடு பார்க்க நினைத்தேன். பல்கலைக்கழகத்திற்கு மிதிவண்டியில் போய்வரலாம் என்ற திட்டம் இருந்தது.  தினசரி பல்கலைக்கழகம் போய்வருவதற்கு ஆகும் நேரத்தை மிச்சம் பிடிக்க வேண்டும் என்பதால் பல்கலைக்கழகத்திற்கு அருகில் வீடு பார்க்க நினைத்தேன். அத்திட்டப்படி தேடலைத் தொடங்கலாம் என்றால் காந்திநகர், பேட்டை, நெல்லை டவுன் பகுதியில் தேடியிருக்க வேண்டும். காந்திநகரில் வீடுகள் மிகக்குறைந்த வாடகைக்கு இருந்தன. அரசு வழங்கிய நிலத்தில் தனித்தனி வளாகமாக முள்கம்பி வேலிக்குள் விசாலாமான வீடுகள் இருந்தன. கட்டியவர்கள் பலரும் பூட்டிவிட்டு வாடகைக்கு வீடுதேடிப் பாளையங்கோட்டையில் இருந்தார்கள். காரணம் தண்ணீர் பிரச்சினை. நிலத்தடி நீரும் இல்லை. குடிதண்ணீருக்காகத் தாமிரபரணித் தண்ணீர் வரத்துக்கான ஏற்பாடுகளும் இல்லை. இவையெல்லாம் வரும் என்ற நம்பிக்கையில் நிலம்வாங்கி வீடுகட்டிவிட்டுத் திரும்பவும் வாடகைக்குக் குடிபோனவர்கள் பலர். காந்தி நகரில் வேண்டாம் நெல்லை நகரின் மேற்குப் பக்கம் பேட்டைப் பகுதியில் தேடலாம் என்று நினைத்தபோது பள்ளிக்கூடங்கள் முன்வந்து நின்றன. 


நான் போவதற்கு முன்னால்   பல்கலைக்கழகத்தில் வேலைபார்த்தவர்களில்  நண்பர்களாகப் பழகியவர்கள் புள்ளியியல் துறையின் ஆசிரியர்களும் சமூகவியல் துறையின் ஆசிரியர்களும்தான். பல்கலைக்கழகத்திற்கு வருவதற்கு முன்பே அறிமுகம் என்றால் நாலைந்து பேரைச் சொல்லலாம். சமூகவியல் துறையில் கண்ணன், கண்ணப்பன்,   ராமகிருஷ்ணன் இவர்கள் எல்லாம் மதுரைப் பல்கலைக்கழகத்தில் எனக்கு முன்பின்னாகப் படித்தவர்கள். ஆங்கிலத்துறையில் கவி.பாலா இருந்தார். வரலாற்றுத் துறையில் ஆ.ரா. வேங்கடாசலபதி இருந்தார். நாகர்கோவில் கடல்சார் மையத்தில் பீட்டர் மரியான் இருந்தார்  இவர்கள் அனைவருமே பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடத்தை முடிவுசெய்துவிட்டு வீடு தேடுங்கள் என்றார்கள்.

நெல்லை நகர்ப் பகுதியில் இருப்பது பெரும்பாலும் அரசுப்பள்ளிகள். அவற்றில் ஆங்கிலவழி வகுப்புகள் இல்லை. தமிழ்வழிப் பள்ளிகள் இருந்திருந்தால் அங்கேயே சேர்த்திருப்பேன். கிடைத்தன எல்லாம் ஆங்கில வழிதான். பாண்டிச்சேரியில் பிள்ளைகள் இரண்டும் ஆங்கிலவழியில் படித்திருந்தார்கள். மகள் சிநேகலதா எட்டு முடித்து ஒன்பதாம் வகுப்பில் சேரவேண்டும். மகன் ராகுலன் ஐந்து முடித்து ஆறு சேரவேண்டும். பாண்டிச்சேரியிலேயே   மெட்ரிக் பாடமுறையைப் பின்பற்றும் கல்வி நிறுவனங்களைப் புறக்கணித்திருந்தேன். மாநிலக் கல்வி வாரியப் பாடத்திட்டமே எனது விருப்பமாக இருந்தது.  பாண்டிச்சேரிக்கென்று தனிக்கல்வி வாரியம் இல்லை. தமிழ்நாட்டரசின் கல்விவாரியப் பாடத்திட்டங்களையே பாண்டிச்சேரி அரசாங்கமும் பின்பற்றியது. ஆனால் நிறைய ஆங்கிலவழி வகுப்புகளை நடத்தும் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளித்திருந்தது. அவை பெரும்பாலும் கிறித்தவ நிறுவனங்களின் பள்ளிகள். இங்கும் அதே நிலைதான் என்றாலும் ஆங்கில வழி வகுப்புகள் பெரும்பாலும். மெட்ரிக்குலேசன் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளாக இருந்தன. மாநிலக் கல்வி வாரியத்தில் ஆங்கில வழி இரண்டே பள்ளிகளில் மட்டுமே இருந்தன.  ஆண்களுக்கு புனித ஜான் பள்ளி; பெண்களுக்கு சாராள் தக்கர் பள்ளி. இரண்டு பள்ளிகளில் சாராள் தக்கர் பற்றி அனைவரும் நல்ல கருத்தைச் சொன்னார்கள். மகளைச் சேர்த்துவிடுங்கள் என்றார்கள். பையனை மெட்ரிக்குலேசனுக்கு மாற்றிவிடுங்கள் என்பதே அவர்களின் ஆலோசனையாக இருந்தது. எனக்கு அதில் உடன்பாடு இல்லை. மெட்ரிக் பள்ளியின் கட்டணங்கள் கட்டுபடியாகாது என்பதும் காரணம். பாண்டிச்சேரியில் மையப்பல்கலைக்கழகம் கல்விச்செலவை ஏற்றுக் கொண்டு நூறுசதவீதம் திரும்பத் தரும். குடும்பத்தினருக்கான மருத்துவச் செலவின் 80 சதவீதத்தைத் திரும்பத்தரும். வீட்டை வாடகையும்கூட குறிப்பிட்ட அளவு கிடைக்கும்  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகமோ, மாநிலப் பல்கலைக்கழகம் இதையெல்லாம் தராது. குறிப்பிட்ட தொகையைச் சம்பளத்தில் சேர்த்துப்படிகளாகத் தருவார்கள். அவை மிகவும் குறைவு. ஓராள் சம்பளத்தில் நடுத்தரவர்க்க வாழ்க்கையை நட த்தும் ஒவ்வொருவரும் கவனம் கொள்ளவேண்டிய இடம் இது.

 

இப்போது வீடுதேடும் படலம் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்கும் படலமாக மாறியது.   சாராள் தக்கர் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தின் அருகில். புனித ஜான் காவல்துறை அலுவலகங்களின் பக்கம். அதன் வலதுகைச் சாலையில் புனிதஜான் கல்லூரி. இடதுகைச்சாலையில் சென்றால் பள்ளிக்கூடம். புனிதசேவியர் பள்ளி, அதே பெயரில் இருக்கும் கல்லூரிக்கு முன்னால் இருக்கிறது. பாளையங்கோட்டையின் ஒவ்வொரு சாலையிலும் ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது. பள்ளிகளைத் தொடங்கிய கிறித்தவ அமைப்புகளில் வசதியான அமைப்புகள் கல்லூரியையும் தொடங்கியிருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் காலத்தில் அந்தப் பகுதி முழுவதும் பள்ளிக்கூடங்கள் தொடங்குவதற்காக இனாமாக வழங்கப்பட்ட நிலங்கள் தான். பள்ளிகளின் எண்ணிகையை வைத்துத் தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என்று சொல்லிக்கொண்டார்கள். ஆனால் கல்வி அறிவுக்காகச் சொன்னதாக இப்போதிருப்பவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். கல்வி அறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை சதவீதம் அதிகம் தான். ஆனால் அந்த அறிவினால் அடைந்திருக்கவேண்டிய மனமாற்றமும் சமூக மேம்பாடும் நடந்திருக்கிறதா? என்றால் கேள்விக்குறிதான். சாதிப் பெருமிதம், வகுப்பு மோதல்கள், வன்முறை விருப்பங்கள், பெண் வெறுப்பு, பெண் தாழ்ச்சி எனக்கல்வியால் மாற்றம் பெறாத பலவும் இன்னும் நீள்கின்றன. 


தமிழியல் துறை தொடங்கப்பட்டபோது பல்கலைக்கழகம் அதற்கான புதிய வளாகத்திற்கு நகர்ந்துவிட்டாலும் நிர்வாகத்துறைக்கான பெருங்கட்டடமும் கல்விப்புலத்திற்கான இரண்டு கட்டடங்களுமே முடிந்திருந்தன. அவற்றில் அறிவியல் புலத்தைச் சார்ந்த துறைகள் இயங்க அனுமதிக்கப்பட்டிருந்தன. வேதியியலும் இயல்பியலும் ஒரு கட்டடத்திலும் கணினி அறிவியல், புள்ளியியல், கணிதம் ஆகியன இன்னொரு கட்டடத்திலும் இருந்தன. சமூகவியல் புலத்தைச் சார்ந்த வரலாறு, சமூகவியல் போன்றன நிர்வாகப்பிரிவிலேயே இயங்கின. ஆங்கில மொழித்துறையும் அங்கேதான் இருந்த து. இவையெல்லாம் பெரும்பாலும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் விரிவாக்க மையத்தில் இருந்த முன்னோடித்துறைகள். புதிதாகத் தொடங்கிய துறைகளான தொடர்பியல் துறை, நூலகம், விளையாட்டுத்துறை போன்றன பாளையங்கோட்டையில் வாடகைக் கட்டடங்களில் இயங்கின.    தமிழ்த்துறைக்கெனப் பல்கலைக்கழகம் ஒதுக்கிய இடம்கூடப் புனித ஜான் கல்லூரியின் முன்னால் விடுதி ஒன்றில் தான். பீட்டர்ஸ் ஹால் அதன் பெயர். அந்த வளாகத்திற்குள் ஒரு மருந்தியல் தொடர்பான சான்றிதழ், பட்டய வகுப்புகளை நட த்தும் பாலிடெக்னிக் இருந்தது. அதனைத் தாண்டி உள்ளே போனால் இன்னொரு கட்டடம் அங்கேதான் தொடர்பியல் துறையும் இருந்தது. மனுஷ்யபுத்திரன், தளவாய் சுந்தரம், பீர்முகம்மது போன்றவர்கள்  எல்லாம் அப்போது அங்கு மாணவர்களாக இருந்தார்கள்.


வருகைதரு பேராசிரியராக இருந்த தி.சு.நடராசனுக்கு அந்த இடம் பிடிக்கவில்லை. கடைசிவரை அங்கே போகவில்லை. அவருக்குத் தூசியால் ஏற்படக்கூடிய மூச்சுத்திணறல் ஏற்படும் என்பது ஒரு காரணம். அதனால் அவருக்கான இருக்கையைப் புள்ளியியல் துறையிலேயே போட்டுக் கொண்டிருந்தார். நான் பணியில் சேர்ந்தவுடன் தமிழியல் துறைக்கென ஒதுக்கப்பட்ட பீட்டர்ஸ் ஹாலிலேயே உட்கார்வது என முடிவுசெய்தேன்.    


தமிழியல் துறைக்குத் தனிக்கட்டடம் இப்போதைக்கு வரப்போவதில்லை. வந்தாலும் பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்திற்குள் வராது என்று பரவலாகப் பேச்சிருந்தது.  அத்தோடு பல்கலைக்கழக நூலகமும் அந்தப் பகுதியில் தான் இருந்த து. எனவே எனக்காகவும் பிள்ளைகளுக்காகவும் பாளையங்கோட்டைப் பகுதியில் வீடு பார்ப்பது ஓரளவுக்கு நல்லது என்ற முடிவுக்கு வந்தேன். பார்க்கப்போகும் வீட்டில் வீட்டுச் சொந்தக்காரர் அருகிலேயே இல்லாமல் பார்க்கவேண்டும் என்ற ஒரேயொரு நிபந்தனை என்னிடம் இருந்தது. எனக்காக வீடுதேடிய நண்பர்களிடமும் அதைத்தான் சொல்லியிருந்தேன். அந்த முடிவு முந்தைய அனுபவங்கள் தந்ததின் பேரில் கிடைத்த முடிவு. நடுத்தரவர்க்க மனிதர்கள் தங்களுக்குத் தெரிந்த முதலீடாகவும் கூடுதல் வருமானமாகவும் வீட்டை நினைக்கிறார்கள். அரசு தரும் குடியிருப்பில் இருந்துகொண்டு, கடன் வாங்கி வீட்டைக் கட்டி வாடகைக்குவிட்டு அந்த வாடகையையும் மாதாந்திரத் தவணையோடு சேர்த்து வங்கிக்கொடுத்துவிட்டு, சொத்துச் சேர்க்கும் ஆசையை நிறைவேற்றும் ஆசைகொண்ட நடுத்தர வர்க்கம் ஒரு வகை என்றால், தான் குடியிருக்கும் வீட்டின் பகுதிகளையே வாடகைக்கு விடும் பகுதிகளாக (Portions) பிரித்துக் கட்டி வாடகைக்கு விடும் நடுத்தரவர்க்கம் இன்னொரு வகை. வாடகைக்கு வீடு பார்க்கும்போது வீட்டுச் சொந்தக்காரர்களின் இருப்பு எங்கே என்று பார்த்து வீடு பார்ப்பது நல்லது. சொளையாக வாடகைப்பணத்தைக் கொடுத்தாலும், அவர் பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டில் அவர் கண்முன்னே நாம் இருப்பதைச் சுமுகமாக ஏற்றுக்கொள்ள அவர்களின் மனம் தயாராக இருக்காது.   

 அப்படியான வீட்டைத்தேடிப் பாளையங்கோட்டையின் எல்லாப் பகுதிகளுக்குள் நுழைந்து வெளியேறினோம். அரசு ஊழியர் குடியிருப்பு ஆ, அ பிரிவுகள், பெருமாள் புரம், தியாகராயநகர், சாந்திநகர் எனப் பலபகுதிகளிலும் தேடினோம். மகாராஜா நகரில் இருக்கும் பங்களாக்கள் உள்ளே நுழைவதைத் தடுத்தன.  எனக்காக ஒரு பட்டாளமே வீடு தேடியது.  அவர்கள் அனைவரும் சேவியர் கல்லூரி ஆய்வாளர்கள். அப்போது சேவியர் கல்லூரியின் தமிழ்த்துறை ஆய்வாளர்களுக்கான அறை பாளையங்கோட்டையின் மைய நூலகத்திற்கு எதிரே இருந்தது. அவர்கள்தான் பெரிதாகப் படர்ந்துகிடந்த வாதுளை மரத்துக்கீழே இருந்த மரியா கேண்டினை அறிமுகப்படுத்தினார்கள். சிற்றுண்டிகளை வாங்கிக்கொண்டு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு சாப்பிடலாம்; அரட்டை அடிக்கலாம். சிகரெட் பிடிக்கலாம். ஆய்வாளர்களில் ஒருவர்- காசி.மாரியப்பன் - தலித்தியம் தொடர்பான ஆய்வொன்றைச் செய்தார். கணேஷ் நாவல்களும் திரைப்படமும் என்பதைத் தலைப்பாக எடுத்திருந்தார். மனோகரன் சு.சமுத்திரம் நாவல்களில் கிராமியச் சித்தரிப்பு என்ற தலைப்பில். அவர்களோடு உரையாட எனக்கு நிறைய இருந்தது. அவர்கள் தான் வீடுதேடும் படலத்திற்கு உதவியாக இருந்தார்கள்.  மனோகரன் படித்த காலத்திலேயே தனது வகுப்புத்தோழியைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு ஆய்வைத் தொடர்ந்தவர். அவரும் ஆய்வுசெய்தார். இடையில் இருவரும் கல்வியில் படிப்பையும் முடித்திருந்தார்கள். அவர்கள் வீடு அண்ணா நகரில் இருந்தது. அங்கு வீடுகள் வாடகைக்கு கிடைக்கும் என்று சொன்னார். 

நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இருந்த பகுதியில் இருந்த ஒமேகா வணிக வளாகத்தின் மாடி அறையொன்றில் மாதவாடகைக்கு அறையொன்றை எடுத்துத் தங்கிக் கொண்டு வீடு தேடினேன். அண்ணாநகரைச் சுற்றிவந்தோம். வாடகைக்கு வீடுகள் இருந்தன. குறைவான வாடகையில் இருந்தன. பாளையங்கோட்டை அண்ணாநகர் மதுரை அண்ணாநகர் போலவே சென்னை அண்ணாநகர் போலவே நகர அடையாளங்கள் கொண்ட வெளி அல்ல. நெருக்கடியான வீடுகளையும் குடிசைகளையும் கொண்ட ஒரு பகுதி. சேரிப்பகுதி என்றும் சொல்லிவிட முடியாது. அரசுப் பணியில் கடைநிலை ஊழியர்களாக இருப்பவர்களுக்கான வீடுகளே அதிகம் இருந்தன. நடுத்தரவர்க்க வாழ்க்கைக்குள் வந்துவிட்டுத் திரும்பவும் கடைநிலை ஊழியர்களுக்கான வீடொன்றில் நுழைய மனம் தயாராக இல்லை.


அங்கிருந்து வெளியேறியபோது பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறைப் பேராசிரியர் முனைவர் கோ.கருணாநிதியின் பெயர்தாங்கிய வீடொன்று இருந்தது. அவர் அப்போதுதான் பல்கலைக்கழகத்திலிருந்து வந்து கதவைத் திறந்து கொண்டிருந்தார். வணக்கம் சொல்லிவிட்டு வீடுதேடுவதைச் சொன்னபோது, அவரது வீட்டிற்குப் பின்னால் இருக்கும் வீடொன்று காலியாக இருப்பதைச் சொன்னார். அந்த இடத்திற்குப் பெயர் செயிண்ட் லூக் நகர். நான் எனது நிபந்தனையை – வீட்டுக்காரர் அங்கே இருக்கக்கூடாது – என்பதைச் சொன்னேன். உங்களுக்கு யோகம் இருந்தால் அந்த வீட்டிற்கு ஆட்கள் வராமல் இருக்கவேண்டும். ஏனென்றால் அந்த வீட்டின் சொந்தக்காரர் ஒரு கல்லூரிப் பேராசிரியர். மார்த்தாண்டத்தில் வேலை பார்க்கிறார். அதனால் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்திற்கருகில் இருக்க வேண்டும் என்பதற்காகப் பழைய வீட்டிலேயே இருக்கிறார். இங்கே மாடியையும் தரைப் பகுதியையும் வாடகைக்கு விட்டிருக்கிறார். காபி குடித்துவிட்டுப் போவோம் வாருங்கள் என்று உள்ளே அழைத்துப் போனார்.


பேரா. கருணாநிதியின் வீட்டில் காபி குடித்த ஒருமணி நேரத்தில் செயிண்ட் லூக் நகர் மாடி வீடு உறுதியானது. நெல்லை மருத்துவக்கல்லூரிக்குள் நுழைந்து ஒத்தையடிப்பாதையில் நடந்தாலும் செயிண்ட் லூக் நகர் வரும்.  அண்ணாநகர் பேருந்து நிலையத்தில் இறங்கி நடந்துபோய் வலது பக்கம் திரும்பினால் மொத்தம் இருந்த இருபது வீடுகள் தான் செயிண்ட் லூக் நகர். எல்லாவகையான கிறித்தவப் பிரிவுகளையும்  – சிஎஸ் ஐ, ரோமன் கத்தோலிக்கம், பெந்தெகொஸ்தே. சால்வேசன் ஆர்மி- என வேறுபாடுகள் கொண்ட கிறித்தவத்தை அந்த இருபது வீடுகளுக்குள் பார்த்தேன்.

 நெல்லை நினைவுகள்  - 3

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்