ஊர் சுற்ற ஒரு பதவி: நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்

நமது கல்விமுறையில் வகுப்பறைக்கல்விக்கு வெளியே மாணாக்கர்கள் கூடுதலாகச் சிலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது கொள்கை வகுப்பாளர்களின் நோக்கம். அதற்காகச் சிலவற்றை விருப்பநிலைகளாகப் பரிந்துரை செய்துள்ளனர். சமூகப்பொறுப்பு, நாட்டுப்பற்று, கிராமியநலன், பெண்கள் நலன், பொதுச் சேவையில் நாட்டம், உடல் நலம் பேணுதல், தனித்திறன்களை உருவாக்குதல் போன்றன இவ்விருப்பநிலைக் கல்வித் திட்டங்களில் கவனப்படுத்தப்படுகின்றன. இவற்றிற்காகவே  நாட்டுநலப்பணித்திடம், தேசிய மாணவர் படை, சுற்றுச்சூழல் கழகம், குருதிக்கொடைக் கழகம், விளையாட்டுத்துறை போன்றனவற்றைக் கல்லூரிகளில் இடம்பெறச் செய்துள்ளனர். இவற்றுள் விளையாட்டுக்கு மட்டும் முழுநேர ஆசிரிய நியமனங்கள் உண்டு. மற்றவற்றிற்கெல்லாம் ஏதாவதொரு துறையின் ஆசிரியரைப் பகுதிநேரப் பொறுப்பாளராக ஆக்கிவிடுவர். அவையும் சுழற்சி முறையில் குறிப்பிட்ட கால அளவில் மாற்றப்படும். அந்தப் பதவியில் இருந்தகாலத்து நினைவுகளைச் சொல்லியே ஆகவேண்டும்.

கல்லூரிகளில் இயங்கும் நாட்டுநலப்பணித்திட்ட அணிகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் பணிக்காகப் பல்கலைக்கழக அளவில் ஒருங்கிணைப்பாளர் பதவி உண்டு. அதுவும் மூன்றாண்டுகாலப் பணிதான். அதற்கென விண்ணப்பம் கோரும்போது தேர்வு பெற்றால் அயல்பணிப் பொறுப்பு என்ற நிலையில் விடுப்பில் வருவார்கள் ஆசிரியர்கள். ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் விளையாட்டுக்கு மட்டுமே முழுநேர ஆசிரியர்கள் இருப்பார்கள். மற்றவற்றிற்கெல்லாம் விருப்ப அடிப்படையில் ஒரு ஆசிரியர் கூடுதல் பணியாக ஏற்றுச் செயல்படுவார். அதற்காகக் கூடுதல் மதிப்பூதியமும் படிகளும் கிடைக்கும். கல்லூரியில் இயங்கும் நாட்டுநலத்திட்ட அணி என்பது குறைந்தது 100 பேரைக் கொண்டதாக இருக்கும். கல்லூரிகளின் மாணவர் எண்ணிக்கைக்கேற்ப அணிகளின் எண்ணிக்கையைப் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் முடிவுசெய்வார். நான் ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது மொத்தம் 100 அணிகள் இருந்தன. ஒரே கல்லூரியில் மூன்று அணிகளைக் கொண்ட கல்லூரிகளும் இருந்தன. 


பட்டப்படிப்பு மாணவர்கள் விளையாட்டு, நாட்டுநலப் பணித் திட்டம், தேசிய மாணவர் படை ஆகியவற்றில் ஏதாவதொன்றில் கட்டாயம் இருக்கவேண்டும் என்பது நடைமுறை. இவற்றில் மாவட்ட அளவு, மாநில அளவு, தேசிய அளவு, உலக அளவுப் பங்கேற்புகளுக்கும் விருது பெறல்களுக்கும் வாய்ப்புகள் உண்டு. ஒரு மாணவர் இவற்றில் பங்கேற்றுச் சான்றிதழ் பெற்றிருந்தாலே அரசுத் துறைப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும்போதும் நேர்காணல்களின் போதும் கூடுதல் மதிப்புப் புள்ளிகள் பெற வாய்ப்புண்டு. இவற்றின் செயல்பாடுகளுக்கான நிதியுதவி மூன்று இடங்களிலிருந்து கிடைக்கும். மனிதவளத்துறைக்குக் கீழ் இயங்கும் இளைஞர் நல அமைச்சகத்திலிருந்து கிடைக்கும் நிதியுதவியோடு, மாநில அரசும் அதே அளவு நிதியை வழங்கும். அதனுடன், ஒவ்வொரு மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்குச் செலுத்தும் சிறப்புக் கட்டணத்தில் குறிப்பிட்ட தொகையைத் திரும்பவும் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணிக்குப் பல்கலைக்கழகம் திருப்பித்தரும். அந்நிதியைக் கொண்டே கல்லூரிகளின் நாட்டு நலப்பணித்திட்ட அணிகள் செயல்பாடுகளைத் திட்டமிடுகின்றன. 

ஒருநாள் பயிற்சி முகாம், சிறப்புச் சொற்பொழிவு, திறன் வெளிப்பாட்டுப் போட்டிகள் போன்றவற்றை நடத்தும். அத்தோடு ஒவ்வொரு ஆண்டும் ஓர் அணி கல்லூரி வளாகத்திலிருந்து விலகிய ஓர் இட த்தில் தங்கவைத்துச் சிறப்பு முகாம் ஒன்றையும் நடத்த வேண்டும். அதற்கான பணத்தை முழுமையாக மைய மாநில அரசுகளே ஒதுக்கித் தருகின்றன. கல்லூரிகள் நட த்தும் சிறப்பு முகாம்களைப் போலத் தேசிய அளவில் சிறப்பு முகாம்களும் நடக்கும். அதற்குச் சிறப்பான மாணவத் தொண்டர்களையும் திட்டப்பணியாளரையும் தெரிவுசெய்து அனுப்பி வைப்பதும் ஒருங்கிணைப்பாளரின் வேலையே. பல்கலைக்கழக அளவில் சிறப்பான மாணவத்தொண்டர், சிறப்பான ஆசிரியத் திட்டப்பணியாளர்களைத் தெரிவு செய்து மாநில அளவு, தேசிய அளவு விருதுகளுக்குப் பரிந்துரை செய்து பெற்றுத்தருவதும் உண்டு. இப்படியான விருதுகளுக்கு உரிய நேரத்தில் மதிப்பு கிடைக்கும். 

மேலாண்மை சார்ந்த இந்தப் பணிகளை முன்னோடி ஒருங்கிணைப்பாளர்களிடமிருந்தும், கோப்புகளைப் பார்த்தும் கற்றுக் கொண்டிருந்தேன். அத்தோடு அமெரிக்கன் கல்லூரியில் எனது முன்மாதிரி ஆசிரியராக இருந்த பேரா.சாமுவேல் சுதானந்தா நாட்டுநலப்பணித்திட்டப் பணியில் செய்த வேலைகளில் உடனிருந்து உதவிசெய்திருக்கிறேன். அமெரிக்கன் கல்லூரியில் இரண்டாண்டு தற்காலிகப்பணியின் போதும் அதே வேலைகளைச் செய்த அனுபவமுண்டு. நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வகித்த காலத்தைப் பற்றிய நினைவுகளாக இருப்பன அதிகமும் சிறப்பு முகாம்கள் நடக்கும் கிராமங்களுக்குச் சென்று வந்த பயணங்கள் தான். பொறுப்பை ஏற்றுக்கொண்ட முதல் வாரத்தில் ஆரல்வாய்மொழிக்குப் பின்னால் இருக்கும் பொறியியல் கல்லூரியின் சிறப்பு முகாமிற்காகச் சென்றேன். அந்த முகாம் நாஞ்சில் நாட்டு மலையடிக்கிராமம் ஒன்றில் நட ந்தது. பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கே உரிய கொண்டாட்ட மனநிலையைக் கிராமத்தினருக்குக் கடத்தினார்கள். 

கல்லூரிகளின் அணிகள் சிறப்பு முகாம்களுக்காகத் தேர்வுசெய்யும் இடங்கள் மதம், சாதி போன்ற முரண்பாடுகள் இல்லாத பகுதிகளாக இருக்கவேண்டும் என்பது முக்கியமாக வலியுறுத்தப்படும். மலையடிவாரம், கடலோரம், ஆற்றங்கரைக் கிராமம், அருவிக்கரைகள் கொண்ட சிறுகிராமங்கள் பலவற்றைப் பார்க்கும் வாய்ப்புகள் கிடைத்தன. சிறப்பு முகாம்களுக்குப் பின்னர் கிடைத்த ஆற்றுக்குளியல்களும் அருவிக்குளியல்களும் வாய்க்கால் குளியல்களும் இப்போதும் நினைவில் இருக்கின்றன. மகிழ்ச்சி அளித்த சிறப்பு முகாம்களைப் போல வருத்தமளித்த முகாம்களும் உண்டு. குறைந்தது 50 பேருக்கும் குறையாமல் சிறப்பு முகாம்களில் மாணாக்கர்கள் பங்கேற்க வேண்டும். ஆனால் அதில் பாதிக்கும் குறைவான எண்ணிக்கையில் இருந்த ஒன்றிரண்டு அணிகளைக் கண்டித்தும், வழங்கப்பட வேண்டிய நிதியைக் குறைத்தும் கடிதங்கள் அனுப்பியதால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளித்த விதமும் இப்போதும் வந்து போகின்றன. 

பேச்சிப்பாறை அணையில் அந்தக் கல்லூரியின் சிறப்புமுகாம். நிச்சயம் ஒருநாள் வருவேன் என்று தகவல் அனுப்பியிருந்தேன். ஆனால் எந்த நாள் என்று அனுப்பவில்லை. மனைவி, பிள்ளைகளோடு பேச்சிப்பாறைக்குச் சென்று முகாமைப் பார்த்துவிட்டு, அங்கு தங்கும் விடுதிகள் இருந்தால் இரவில் தங்கிவிட்டுக் காலையிலும் மாணவர்களோடு நேரத்தைக் கழிக்கலாம் எனத்திட்டமிட்டுப் போனேன் .மாலை 6 மணியளவில் சென்று பார்த்தபோது  முகாமில் 17 பேர்தான் இருந்தார்கள். இரண்டு அணிகள் கொண்ட அந்தக் கல்லூரியின் சிறப்பு முகாமில் 100 பேர் இருக்கவேண்டும். முகாமின் பொறுப்பாளரான திட்ட அலுவலர்கள் ஒருவரும் அங்கில்லை.   காரில் சென்ற நான் அங்கு தங்காமல் திரும்பிவிட்டேன். அடுத்தநாள் நடக்கும் இரண்டு முகாம்களையும் சிறப்பு முகாம்களாக ஏற்க இயலாது என்று கடிதம் அனுப்பினேன். அந்தக் கடிதத்தின் மேல் கல்லூரி நடவடிக்கை எடுத்த து. அந்தப் பிரச்சினை அடுத்த ஆட்சிப்பேரவையில் எழுப்பி என்னைப் பதவி நீக்கம் செய்ய நினைத்த து ஆசிரியர் சங்கம். குடும்பத்தோடு சுற்றுலா வந்தேன் என்பதாகத் திருப்பினார்கள். ஒரே பயணத்தில் இரண்டையும் இணைக்கக் கூடாது என்று விதிகள் இல்லை. நான் எனது செலவில் வாடகைக்காரில் சென்றேன். முகாமைப் பார்த்துவிட்டுச் சுற்றுலாவாகப் பயணம் செய்வேன்; ஏனென்றால் அடுத்த நாட்கள் வாரவிடுமுறை நாட்கள். அத்தோடு எனது குடும்பச் சுற்றுலாவிற்கு தங்குமிடமோ உணவோ அவர்களை ஏற்பாடு செய்யச் சொல்லவில்லை. அதனைக் கேள்விகேட்க முடியாது என்று பதில் சொல்ல வேண்டியிருந்தது.

சிறப்பு முகாம்கள் நடக்கும் அந்தந்தப் பகுதி ஊர்களிலிருந்து எழுத்தாளர்கள், கலைஞர்களை அழைத்துப் பங்கேற்கச் செய்யவும் யோசனைகள் சொன்னதுண்டு. நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்புறக் கலைஞர்களும் எழுத்தாளர்களும் கலந்து கொண்டு உரையாற்றிச் சென்றார்கள். சங்கரன் கோவிலில் இருக்கும் பசும்பொன் தேவர் கல்லூரி அணியின் சிறப்பு முகாமிற்காக வடக்கெல்லையிலிருந்து கரிவலம் வந்த நல்லூருக்கும் மேற்கே செங்கோட்டையில் நடந்த சட்ட நாதக் கரையாளர் கல்லூரியின் முகாமிற்காகச் செங்கோட்டைக்கருகில் உள்ள பண்பொழி கிராமத்திற்கும், கன்யாகுமரி மாவட்டத்தின் கடலோரக் கிராமங்களான பதிகளுக்கும் விளைகளும், மலைக்குள் இருக்கும் அணைகளுக்கும் தூத்துக்குடி உப்பளப் பகுதிகளுக்கும் சென்ற பயணங்களும் சந்தித்த மனிதர்களும் மாணவ மாணவிகளும் பின்னரும் வந்து பார்த்துச் செல்வதுண்டு. சுற்றுச் சூழல், எயிட்ஸ் விழிப்புணர்வு போன்றவற்றிற்காகச் சிறப்பு நிகழ்வுகளும் சில கல்லூரிகளில் நட த்தியிருக்கிறார்கள். சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசியச் சிறப்பு நாட்களுக்காக மராத்தான் ஓட்டங்களும் மிதிவண்டிப் பேரணிகளும் நட த்தியிருக்கிறோம். 

பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பதவியைத் தற்காலிகமாகப் பொறுப்பேற்றுச் செயல்பட வேண்டும் எனத் துணைவேந்தர் பேரா. க.ப. அறவாணன் அவர்கள் ஒருநாள்  நேரில் அழைத்துச் சொல்லி விட்டார். முழுப்பொறுப்புடன் ஒருவர் நியமனம் செய்யப்படும் வரை தற்காலிக நிலையில் அமர்த்தப்பட்டிருந்த புள்ளியியல் துறையைச் சேர்ந்த நண்பர் முனைவர் க.செந்தாமரைக்கண்ணன் உடல் நலப்பிரச்சினையால் நீண்ட விடுப்பில் சென்றார். அவரது இடத்தில் தற்காலிகமாக அந்தப் பணியைக் கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன். அப்படிக் கேட்டுக்கொள்ளச் சில காரணங்கள் இருந்தன. 

முனைவர் க.செந்தாமரைக்கண்ணன் பொறுப்பில் இருந்தபோதே அவரது வேலைகள் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டேன் என்பதும், கல்லூரிகளின் நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாம்களுக்குச் சென்று மாணாக்கர்களுக்கு உற்சாகமூட்டும் உரைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கியிருக்கிறேன் என்பதையும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிந்திருந்தது. அத்தோடு புதுவைப்பல்கலைக்கழக நாடகப்பள்ளியில் பணியாற்றிவிட்டு வந்தவன் என்பதால் மாணவர்களுக்கு நாடகம், ஆடல், பாடல், ஓவியம் எனக் கலை நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்து உற்சாகமாகப் பங்கேற்கத்தூண்டிக் கொண்டிருந்தேன். அதே நேரத்தில் முழுநேரமும் அதே வேலையாக இருப்பதை விரும்பாத மனத்தோடு இருக்கிறேன் என்பதை எனது நேர்காணலின் போதே சொல்லியிருந்தேன். அந்நேர்காணலில் வல்லுநராகப் பங்கேற்று என்னைத் தெரிவு செய்தவர்களின் ஒருவரான பேரா. க.அறவாணன், “உங்கள் ஆர்வங்களும் விருப்பங்களும் எனக்குத் தெரியும்;உங்களது ஆய்வு மட்டும் எழுத்து வேலைகளைத் திசை திருப்பக் கூடாது என்றே நினைக்கிறேன். ஆனால் இப்போதைக்கு வேறு வழியில்லை” என்று கேட்டுக் கொண்டார். ‘பல்கலைக்கழகத் துறையொன்றிற்கு ஆசிரியராகத் தேர்வு செய்யப்படும் ஒருவர், துணைவேந்தரும் ஆட்சிமன்றக் குழுவும் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டுப் பிறபணிகளையும் செய்யவேண்டும்’ என்று ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட பின்பே ஆசிரியப்பணியில் இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். எனவே அவரது விருப்பத்தை நிறைவேற்றும்பொருட்டு அந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டேன். 

இதனையெல்லாம் தாண்டி ஊர் சுற்றுவதில் தீராத ஆர்வம் உண்டு என்பதை அவர் அறிந்திருந்தால் இப்படிச்சொல்லியிருக்க மாட்டார். பொறுப்பேற்று ஆறுமாத காலத்தில் முறையான நபர் ஒருவர் தேர்வுசெய்யப்படுவார் என்று அவர் சொன்னது நடக்கவில்லை. அப்பதவியை முறைப்படி விளம்பரம் செய்து தெரிவுசெய்யத் தடையாக வழக்கொன்று இருந்தது. அதனை முடித்துவைத்து அறிவிப்புச் செய்யவே ஒன்பது மாதம் ஓடிவிட்டது. அதன் பிறகு அறிவிப்புச் செய்து சேவியர் கல்லூரியைச் சேர்ந்த ஜான் டி பிரிட்டோ முழுப் பொறுப்புடன் 2000, ஜனவரி, 30 அன்று என்னிடமிருந்து பொறுப்பைப் பெற்றுக்கொண்டார். ஆக மொத்தம்,13 மாதங்கள் முழுமையாக அந்தப் பதவியில் இருந்தேன்.நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது முழுமையாக ஒருங்கிணைப்புப் பணியைச் செய்யவேண்டிய ஒன்று. அதன் வழியாக நான் கற்றுக்கொண்டதும் பெற்றுக் கொண்டதும் ஏராளம். அதேபோல் மாணவர்களுக்குச் சொன்னதும் செய்யத்தூண்டியதும் பலப்பல. 

நான் ஒருங்கிணைப்பாளராக இருந்த காலத்தில் மாநில அளவில் சிறந்த திட்டப்பணியாளர் விருதுபெற்றதால், அவர்கள் பணியாற்றிய கல்லூரிகளின் முதல்வராகத் தேர்வுபெற அந்த விருதுகள் உதவியாகத் தொலைபேசியில் அழைத்து கூறிய கல்லூரி முதல்வர்களும் உண்டு. சிறப்பான கலையீடுபாடு கொண்ட மாணவ, மாணவிகளை ஒன்றாகத் திரட்டி நாடகப் பயிற்சிகள் வழங்கியதை நினைவுபடுத்திப் பேசும் மாணவிகள் இப்போதும் இருக்கிறார்கள். இவையெல்லாம் வகுப்பறையில் கற்றுத்தரும் ஆசிரியர் என்ற நிலையைத் தாண்டிய மகிழ்ச்சியான நினைவுகள். நாகர்கோவில் நகரில் இருக்கும் கல்லூரி ஒன்று நடத்திய சிறப்பு முகாம் பற்றிய ஒரு கட்டுரையொன்றைத் தருவதோடு அந்த நினைவுகளை முடித்துக் கொள்ளலாம். 


அந்தக் கடலோரக் கிராமங்கள் எப்படி இருக்கின்றன 

இருபது ஆண்டுகளுக்கு முன்பு. பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பதவியைக் கூடுதல் பொறுப்பாக கவனித்த காலகட்டம்.கல்லூரிகளில் நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் போவதில்லை என்றாலும் வருட த்தில் ஒரு தடவை நடக்கும் பத்துநாள் பயிற்சி முகாமிற்குச் செல்வதுண்டு. கல்லூரியில் செயல்படும் திட்டப்பணியாளர் தொடக்கவிழா அல்லது நிறைவுவிழாவிற்கு வரும்படி அழைப்பார். நான் அப்படியெல்லாம் செல்வதில்லை. ஏதாவதொரு எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது வருகிறேன் என்று சொல்லிவிடுவேன். 

அப்படித்தான் மாணவிகள் மட்டும் படிக்கும் அந்தக் கல்லூரியின் முகாமிற்குச் சென்றேன். நான் சென்றது ஒன்பதாவது நாள். நாளை பத்தாவது நாள். அத்துடன் இந்த நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் முடிந்துவிடும். மாணவிகள் கல்லூரிக்குச் சென்று பெரும் தொகையான மாணவத்திரளுக்குள் கலந்துவிடுவார்கள்; அதே வகுப்பறையில்- அதேஆய்வுக்கூடங்களில்- அதே ஆசிரியர் – அவர்களை சந்திக்க வேண்டிய கட்டாயங்களிலிருந்து மாணவிகள் தப்பிவிட முடியாது. 

இந்தப் பத்து நாட்களை நினைத்துக் கொண்டு கண்கள் விரிய மற்ற மாணவியர்களிடம் சில மாணவிகளாவது கதைகள் பேசக்கூடும். இந்த பத்து நாள் அனுபவம் அவளுக்குள் விரித்திருக்கும் மதில்களற்ற வகுப்பறைகளும் சொற்பொழிவுகளற்ற பாடங்களும் சொல்லிச்சொல்லி மகிழத்தக்கன என்று உணரக்கூடும்; நினைக்க வைக்கும். 

வீடுகளை விட்டுவிட்டு முகாமில் தங்கியிருக்கும் அவர்களுக்கு உரையாற்றும்படி அழைத்துச் செல்லப்பட்டிருந்த நான் உரையாடலைத் தொடங்கினேன். உரைக்குப்பதில் உரையாடல். மாணவிகள் முதலில் தயங்கினர். புதிதான ஓர் ஆணுடன் பெண்கள் பேசுவது தடை செய்யப்பட்ட ஒன்றல்லவா. அவர் அவர்களைப் போல இரண்டு மடங்கு வயதுகொண்ட பெரியவராக இருந்தாலும் ஆண் என்பது அல்லவா? அவரோடு பேசுவதை நமது சமூகம் எப்போது அனுமதித்தது. 

எப்படியோ தொடங்கிவிட்டோம். தொடங்கிய பிறகு எங்கே நிறுத்துவது என்று எனக்கும் தெரியவில்லை. அவர்களுக்கும் தெரியவில்லை. பெண்களைப் பற்றி – ஆண்களைப் பற்றி, - இருவரும் இணைந்து உருவாக்கும் குடும்பம் பற்றி – அதற்கு முந்திய நட்பு பற்றி – காதல் பற்றி - இவை பற்றியெல்லாம் நமது சினிமாக்கள் உருவாக்கியிருக்கும் கற்பிதம் பற்றி- என நீண்ட உரையாடல்கள்.. இறுதியாக அந்த ஊரைப்பற்றி வந்தது 

கன்னியாகுமரியிலிருந்து அரபிக்கடலாக மாறிக்கொள்ளும் கடலின் கரையில் இருக்கும் பதிகள், விளைகளில் ஒன்று அந்தக்கிராமம். அறுநூறுக்குள் மக்கள்தொகை. முக்கிய தொழில் மீன் பிடிப்பது. பசு மாடுகள் வளர்ப்பது. அவை தரும் பாலை பக்கத்தில் உள்ளது புத்தளம் போன்ற சிறு நகரங்களுக்கும், நாகர்கோயில் போன்ற பெரு நகரத்திற்கு அனுப்பி தரப்படுவதின் அவர்களது வாழ்க்கைத் தேவை தீர்மானிக்கப்படுகின்றது அவற்றை எடுத்துச் செல்ல காலையில் ஒரு முறையும் மாலையில் ஒரு முறையும் பேருந்துகள் வருகின்றன. பிள்ளைகள் பள்ளிக்கூடம் போகும் குழந்தைகளுக்கு உதவாத நேரத்தில் வந்து போகின்றன 


அடர்ந்த தென்னந்தோப்புகளுக்கு இடையே இடம் விட்டு இடம் விட்டு தனித்தனியாக ஓட்டு வீடுகளும் கான்கிரீட் வீடுகளும் என அழகான அமைதியான ஊர். பாரதி பார்த்திருந்தால், கண்ணில் விரியும் கடலின் நீளமும் வானத்தின் நீலமும் சந்திக்கும் இந்த ஊரில்தான் காணி நிலம் வேண்டும் என்று பாடி இருக்கக்கூடும் 

உரையாடலின்போது ஒரு மாணவி எழுந்து, “இந்த ஊரில் உள்ள நாற்பதுகான்கிரீட் வீடுகளில் ஒன்று கூட இந்த ஊரைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமில்லை” என்று சொன்னபோது நான் மாணவன் ஆனேன். அவள் ஆசிரியை ஆனாள். 

இங்க இருக்கிற ஓட்டு வீடுகளும் குடிசைகளும் தான் இந்த ஊர்க்காரங்கது. கான்கிரீட் வீடுகளோட சொந்தக்காரங்க பலர் நாகர்கோவில், சென்னை, திருநெல்வேலி, திருவனந்தபுரம் என நகரங்களில் வாழ்கிறார்களாம். அவர்கள் வசதியானவர்கள். குடும்பத்தோட ஒரு வாரம் பத்து நாள் தங்கி விட்டுப் போய் விடுவார்களாம்; மற்ற நாட்களில் பெரிதாக பூட்டு தொங்கிக் கொண்டிருக்க, காவல் காக்க இந்த ஊரில் யாருக்காவது சம்பளம் தரப்படும் 

அதனைத் தொடர்ந்து இன்னொரு மாணவிவேறு விதமாகச் சொன்னாள். பல வீடுகளின் சாவிகள் நாகர்கோவிலில் உள்ள லாட்ஜுகளில் இருக்கின்றன. குடும்பத்தோட அமைதியாக வந்து தங்கிவிட்டுப் போகும் மனிதர்களுக்கு வாடகைக்கு விடப்படுகின்றன. குடும்பங்கள் மட்டுமே வருகின்றன. வருகின்ற அவர்களின் செயல்பாடுகள் முகச்சுளிப்பை அளிக்கின்றன. வருகின்றவர்கள் மீது ஊரில் உள்ளவர்கள் கோபமாக உள்ளனர் என்றும் அவர் கூறினார். ஊர்க்காரர்களின் கோபத்திற்கு வேறு ஒரு காரணத்தையும் சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. வந்து தங்கி விட்டுப் போகும் கூட்டத்தில் பெண்களில் சிலர் திரும்பத் திரும்ப வேறு ஆண்களோடு வந்து தங்கி விட்டுப் போகிறார்கள். குடும்பப்பாங்கான விபச்சார விடுதிகளாக அந்த நவீன மோஸ்தர் கான்கிரீட் வீடுகள் அந்தப் பதியில் வளர்ந்து விட்டன என்ற வருத்தம் அந்த ஊர்க்காரர்களுக்கு 

வசதியானவர்களுக்கும் வெளிநாட்டுப் பயணிகளுக்கும் கடற்கரை வீடுகள் கட்டித்தரும் உலகமயப் பொருளாதாரத்தில் மிக முக்கிய விளைவை நேரில் கண்ட மாணவிகளுக்கு அதிர்ச்சிகள் கிடைத்திருக்கலாம். மாலை வேளைகளில் மாணவிகள் கடற்கரையில் அனுமதிக்கப்படவில்லை 

இன்னும் சில வருடங்களில் அந்த கிராமம் உருவம் மாறக்கூடும். மீன் பிடித்தவர்களும் பசுமாடு வளர்ப்பவர்களும் வரும் பயணிகளுக்கு இடையூறு செய்கின்றனர் என்று சொல்லி இடம்பெயர்த்து விடலாம். பேருந்து வசதி இல்லாத அந்தப் பதிகளுக்கும் விளைகளுக்கும் கண்டெஸ்ஸா கார்களும் டாடா சுமோக்களும், அல்மர்டா வேன்களும் வந்துபோகின்றன. சாலைகள் போடப்படாமலேயே பன்னாட்டு வண்ணத் தொலைக்காட்சி அலைவரிசை களும் அந்த வீடுகளுக்குள் வந்து விட்டன. 

வளர்ந்துவந்த பொருளாதாரத்தில் இவை நாகரிகச் சின்னங்கள். இந்த இருபது ஆண்டுகளுக்குப் பின் எப்படி இருக்கின்றன என ஓரெட்டுப் போகவேண்டும். அதற்கு முதல் நிபந்தனையாக கரோனா முடிவுக்கு வரவேண்டும். சுற்றுலா ஊக்குவிக்கப்படவேண்டும். உரசிக்கொள்ளும் உடல்களால் நோய்த்தொற்று அபாயம் இல்லை என்று மருத்துவம் உறுதி அளிக்கவேண்டும். 

#நெல்லை நினைவுகள் இன்னுமிருக்கின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்