சுழற்சிமுறைத் தலைமைகள்


துறைத்தலைமை என்னுமதிகாரம் - பகுதி -1


2017 பிப்ரவரி இரண்டாம் தேதி சுழற்சி முறையில் திரும்பவும் என்னிடம் துறையின் தலைமைப் பதவி ஒப்படைக்கப்பட்டது; அந்தப் பதவியிலிருந்துதான் பணி ஓய்வும் பெற்றேன்( 2019 ஜூன் 30) ஆனால் அந்தப் பொறுப்பில் திரும்ப அமர்வதில் பெரிய ஆர்வம் இருக்கவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதல் காரணம், அது தற்காலிகமானது. அதனால் அடுத்தொரு பேராசிரியர் அமர்த்தப்பட்டவுடன் அவரிடம் ஒப்படைக்க வேண்டும். இரண்டாவது காரணம் புதிதாகத் துறையில் பதவியேற்றுள்ள உதவிப்பேராசிரியர்கள் வேலையில் காட்டும் ஈடுபாடு திறமை போன்றவற்றில் குறைந்த அளவுகூட எனக்கு திருப்தியில்லை. அவர்களைக் கொண்டு முழுமையாக அந்தப் பதவியில் ஈடுபாட்டுடன் வேலை செய்யமுடியாது என்று நினைத்தேன்.

துறைத்தலைவர் பதவியைப் பல்கலைக்கழக நடைமுறைப்படி எனக்கு அளிக்க நினைத்த துணைவேந்தர் க. பாஸ்கரிடம், இப்போது தலைவராக இருக்கும் முனைவர் ஞா.ஸ்டீபனையே தலைவராகத் தொடரச்செய்யுங்கள் என்றேன். துணைவேந்தர் பாஸ்கர் ஏற்கவில்லை. “அதெல்லாம் தேவையில்லை இன்னும் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் இருக்கப்போகிறீர்கள். அதனால் உங்கள் புலமையையும் திறமையையும் துறை வளர்ச்சியில் காட்டுங்கள்” என்று சொன்னார். அந்த நாளில் அவரது அறையில் நடந்த உரையாடல்:

“ அதுவந்து.. காலியாக இருக்கும் பேராசிரியர் பதவியை நிரப்புங்கள். புதிதாக வரும் பேராசிரியராகப் பதவியேற்பவரிடம் அப்பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நடைமுறைப்படி வழங்குங்கள்” என்று விளக்கிச் சொன்னேன். அவருக்கோ எனக்கு பதவி கொடுக்கவேண்டும் என்ற விருப்பம் இருந்தது.

”பேராசிரியர் பதவியை நிரப்பலாம். ஆனால் அவரிடம்தான் துறைத்தலைவர் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று கட்டாயமில்லை” – துணைவேந்தர்

“அப்படிச் செய்வது சரியில்லையே; ஏற்கெனவே ஒரு தடவை மூன்று ஆண்டுகள் தலைவராக இருந்தவருக்குத் திரும்பவும் முழுப்பொறுப்பை வழங்குவது விதிப்படி சரியாக இல்லை”- இது நான்.

“பாஸ்கர் துணைவேந்தராக இருக்கும்வரை நீங்கள் தான் தமிழ்த்துறைத் தலைவர்; அதில் மாற்றம் இல்லை”

“திரும்பவும் ஒருவருக்குத் துறைத்தலைவர் பதவியைக் கொடுக்கும்போது ‘அடுத்த ஆணை வரும்வரை இந்தப்பதவியில் தொடரலாம்’ என்றுதான் ஆணையை வழங்கவேண்டும். அதில் மாற்றம் செய்ய முடியாதே” என்றேன். அதனால், “நீங்கள் போனவுடன் அந்த மாற்றம் நடந்துவிடும்; அவ்வளவுதான்”

“நான் திரும்பவும் வரமாட்டேனென்று நினைக்கிறீர்களா? திரும்பவும் வருவேன். உங்களுக்கும் பதவி நீட்டிப்பு தருவேன். கவலைப்படாமல் பதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஓய்வு பெறும்போது நீங்கள் துறைத்தலைவராகவே ஓய்வு பெறுவீர்கள்.” என்று நம்பிக்கையோடு சொன்னார். திரும்பவும் இதே பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகத் தொடரவேண்டும் என்பதற்காகப் பல வேலைகளை அவர் செய்துகொண்டிருந்தார். அவருக்கிருந்த நம்பிக்கைமீது எனக்கு நம்பிக்கை இல்லை. துணைவேந்தர் பதவி முழுமையாக அரசியல் நியமனமாக மாறிவிட்ட நிலையில் இதுவெல்லாம் சாத்தியமில்லை என்பதே எனது புரிதல்.

“திரும்பத்திரும்பத் தலைமைப்பதவியில் உட்கார்வது அலுப்பான ஒன்றாகத் தோன்றுகிறது” என்று சொன்னபோது அவரது முகம் சிவந்துவிட்ட து.

“விதிப்படி நான் ஆணை வழங்கப்போகிறேன். அதற்குக் கட்டுப்படுங்கள். அதற்குப் பின் உங்கள் உரிமையைப் பயன்படுத்துங்கள்; எனக்கு ஆலோசனையெல்லாம் சொல்ல உங்களுக்கு உரிமை கிடையாது” என்று அவர் சொன்னபோது நான் ஆணையிடுகிறேன்; நீங்கள் கேட்கவேண்டும் என்பதுபோல இருந்தது. இனியும் உரையாடலைத் தொடரமுடியாது என்ற நிலையில் நான்காவது தடவையாக தமிழியல் துறையின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்.

சுழற்சிமுறையின் கோட்பாடு


நிர்வாகத்தலைமைப்பதவி நிலையாக ஒருவரிடத்தில் நீண்டகாலம் இருக்கக் கூடாது; இருந்தால் அவரது அதிகாரம் செலுத்தும் நபராக ஆகிவிடுவார்; மாற்றங்களும் நடக்காது” என்பது அதன் பின்னுள்ள கோட்பாடு. அரசியல் தளத்தில் பாசிஸ்டுகள் உருவாகும் காரணங்கள் அதுதான் என்ற விமரிசனமும் உண்டு. அந்த அடிப்படையிலேயே சுழற்சிமுறைத்தலைமை (Rotation of Headship) முன்மொழியப்படுகிறது. மிக நீண்ட காலம் ஒருவரே தலைமைப் பொறுப்பில் இருப்பதில் நேர்மறைக்கூறுகளைவிட எதிர்மறைக்கூறுகளே அதிகம். அடுத்த தலைமுறைத் தலைமைப் பொறுப்பு உருவாகாமல் போகும் வாய்ப்புகள் கொண்ட அம்முறை மாற்றப்பட வேண்டும் என்ற கருத்து எல்லாத் துறைகளிலும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் பிறதுறைகள் இம்முறையைச் சோதித்துப் பார்ப்பதில்லை. அதன் உயர் பதவிகளில் இருப்பவர்களை அவ்வப்போது இடமாறுதல்கள், துறைமாறுதல்கள் செய்வதால் அதன் தேவை உணரப்படுவதில்லை. உயர்கல்வித்துறை ஆரம்பம் முதலே பலவிதமாகச் சோதித்துப் பார்க்கிறது. பிரிட்டானிய நடைமுறை அது. அதன்படி பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் துணைவேந்தர், பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி போன்ற நிர்வாகப் பதவிகள் மூன்று ஆண்டுகள் என்ற காலமுறைப் பதவிகள்.விண்ணப்பம் கோரி நேர்காணல் செய்து தேர்வு செய்யப்படும். இப்பதவிகள் மூன்று ஆண்டுகளோடு நிறைவடைந்துவிடும். திரும்பவும் விளம்பரம், விண்ணப்பம் என்ற நடைமுறை தொடரும். இதுவே ஒருவிதச் சுழற்சி முறை வடிவம்தான்.

காலவரையறையோடு தேர்வுசெய்யப்படும் தலைமைப்பதவிக்கு மாறாக மன ஒப்புதலோடு சுழற்சிமுறையை நடைமுறைப்படுத்தும் இடமாகப் பல்கலைக் கழகங்களின் துறைத்தலைவர் பதவிகள் இருக்கின்றன. இச்சுழற்சி முறை வருவதற்கு முன்பு ஒருவர் தலைவரானால் ஓய்வு பெறும்வரை அவரே துறைத்தலைவராகச் செயல்படுவார். புதிய நடைமுறைகளை ஏற்று மாறுதல்களைச் செய்ய தமிழ்நாட்டு மூத்த பல்கலைக்கழகங்கள் எல்லாம் தயங்கிய நிலையில் புதிதாக உருவான பல்கலைக்கழகங்கள் அவற்றுக்கு வழிகாட்டின. தெரிவுநிலைப் பாடமுறை (choice based credit system) என்னும் புதிய படிப்புமுறைக்கு முதலில் மாறிய திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சுழற்சிமுறைத் தலைவர் பொறுப்பு என்னும் மாற்றத்திற்கும் முன்னோடியாகவே இருந்தது. அதன்படி பழைய தலைவர்கள் இருக்கும்போதே புதிய தலைவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார்கள். தமிழியல் துறையில் 2007, ஆகஸ்டு முதல் தேதி எனக்குத் துறைத்தலைவராகும் வாய்ப்பு கிட்டியது. அன்றிலிருந்து 2010, ஜூலை 31 வரை முழு மூன்று ஆண்டுகள் பேராசிரியர்- தலைவர் எனத் தலைமைப்பொறுப்பில் இருந்தேன். திரும்பவும் இரண்டு தடவை அந்த கிடைத்தது. ஆனால் அவை முழுமையான காலம் அல்ல. இரண்டாவது தடவை 5 மாதங்கள்; மூன்றாவது தடவி 14 மாதங்களும் 12 நாட்களும்.

பேராசிரியர் – தலைவர் என்ற தகுதியாக இல்லாமல் இணைப்பேராசிரியர்- தலைவர் என எட்டு மாதங்கள் பொறுப்புத் தலைமையில் இருந்தேன். அந்தக் காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளும் முழுமையான துறைத்தலைவர்கள் செய்யக்கூடிய நிகழ்வுகளே. 1996 இல் பேரா.தி.சு.நடராசன் வருகைதரு பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் வந்து ஓராண்டிற்குப் பிறகு போனபோது (1997 செப்டம்பர் 22) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறையின் தலைமைப் பதவி – இணைப்பேராசிரியர்- துறைத்தலைவர்(பொறுப்பு) என்பதாக வழங்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்டபோது நானே தலைவர்; நானே தொண்டர் என்பதுபோல ஓராள் துறையாக இருந்தது. ஆய்வுத் துறையாக அமைய வேண்டும் என்ற பரிந்துரையை வழங்கியிருந்த வழிகாட்டுக்குழுவில் இருந்த பேரா. வ.அய். சுப்பிரமணியம், பேரா. க.ப. அறவாணன் ஆகியோர் துறையின் அமைப்பு, நோக்கம் போன்றனவற்றை எழுதித்தந்திருந்தனர். ஒரு பேராசிரியர், ஒரு இணைப்பேராசிரியர், இரண்டு விரிவுரையாளர் என்ற அமைப்புடன் இயங்கவேண்டும் என்பதும் பழைமைக்கும் புதுமைக்குமான இடமளிக்கும் துறையாக இருக்கவேண்டும் என்பதும் அவர்கள் காட்டிய வழி. தமிழில் ஆய்வுத்துறை என்றால் பழமையைத் தேடிப் போகும் நோக்கம் கொண்டது என்பதாகப் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதை உணர்ந்திருந்த துணைவேந்தர் வே. வசந்திதேவி அவர்களுக்கு அப்படியே தொடரும் எண்ணம் இல்லை. புதிய சிந்தனையோடு கூடிய துறையாக மாற்ற வேண்டும் என்ற விருப்பத்தால், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் திறனாய்வுத்தலைவராகவும் மார்க்சிய இலக்கியக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவராகவும் அறியப்பட்டிருந்த தி.சு.நடராசனை ஓராண்டு காலத்திற்கு அழைப்புப் பேராசிரியராக அழைத்திருந்தார். செப்டம்பர், 1996 இல் வந்தவுடன் முதல் கட்டமாக இணைப்பேராசிரியர் பதவியில் ஒருவரை அமர்த்த அறிவிக்கை அளிக்க ஏற்பாடு செய்தார். அந்த அறிவிக்கையில் விண்ணப்பித்த எனக்கு அந்த பதவி கிடைத்தது. அப்படிக் கிடைத்ததில் பேரா.தி.சு. நடராசன் எனது ஆய்வுக்கான வழிகாட்டி என்பதும் முக்கியப் பங்காக இருந்திருக்கும்.

நான் வருவதற்கு முன்பு பல்கலைக்கழக எல்லைக்குள் இருந்த தமிழ்த் துறைகளைப் பார்வையிட்டு அவர்களுக்குப் புதியபுதிய பார்வைகள் குறித்த விழிப்புணர்வு உரையாடல்களைச் செய்துகொண்டிருந்தார். மொத்தமாக 60 கல்லூரி ஆசிரியர்களுக்குத் தமிழ் இலக்கியத்தை நவீனத்துவப்பார்வையுடன் பாடம் சொல்வது குறித்துப் பயிலரங்கு ஒன்றை ஏற்பாடு செய்தார். அப்பயிலரங்கில் நாடகம் கற்பித்தலுக்கான பயிற்சிகள் அளிப்பதற்காக புதுவையிலிருந்து வந்திருந்தேன். அதன் பிறகு நேர்காணலுக்கு வருகை. பின்னர் பதவியேற்க பிப்ரவரி 13 இல் வந்து இணைந்துகொண்டேன். வந்தவுடன் இந்தக் கல்வியாண்டிலேயே ஒரு பெரிய கருத்தரங்கை நடத்தும்படி துணைவேந்தர் ஆலோசனை சொன்னார். அதற்கான பணத்தை அனுமதித்து வேலைகளைத் தொடங்கச் சொன்னார். உடனடியாக நடத்த நினைத்த கருத்தரங்கப் பொருண்மைகளாக இருந்தவை தலித்தியம், பெண்ணியம், நவீனத்துவம், பின் -நவீனத்துவம்.

வெளியிலிருந்து நுழைந்ததாக அறியப்படும் இக்கோட்பாட்டுப் பார்வைகள் தமிழ் இலக்கியச் சூழலை எவ்வாறு பாதித்துள்ளது; வளப்படுத்தியுள்ளது என்பதை மதிப்பிடும் வகையில் நாளொன்றுக்கு நான்கு கட்டுரைகளும் விவாதங்களும் என நடத்தி எல்லாவற்றையும் பதிவுசெய்து தொகுத்து நூலாக்க வேண்டும். இந்த நான்கு தலைப்பிலும் இரண்டு ஆண்டுகளில் நடத்திவிட வேண்டும் என்பது கருத்தரங்கச் செயல்திட்டமாக உருவாக்கினோம். உருவாக்கிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முனைந்தபோது தலைகீழாக மாறியது. பின் நவீனத்துவத்தில் தொடங்க நேரிட்டது. அந்த ஆண்டுகளில் தீவிரமாகப் பேசப்பட்ட பொருண்மை அது. நடப்பியல் எழுதிக் கொண்டிருந்த எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துகள் காலாவதியாகிப் போன எழுத்து என நம்பியதின் காரணமாக பின் நவீனத்துவத்தின் வரவால் தங்கள் செயல்பாடுகளில் பின் வாங்கிக் கொண்டிருந்தார்கள். புனைவுகள் எழுதிக்கொண்டிருந்த பலரும் உடனடியாக வெளியிடுவதைத் தள்ளிப் போட்டார்கள். நேர்கோடற்ற எழுத்துகளே பின் நவீனத்துவ வெளிப்பாடு என நம்பியதால் அதனை முயற்சித்தார்கள். தலித்தியம் தனது நிகழ்வுகளைப் பின் நவீனத்துவத்தோடு இணைத்துப் பேசியது.


பின்னை நவீனத்துவக்கருத்தரங்கு



பின் – நவீனத்துவத்தைப் பின்னை நவீனத்துவம் எனப் பெயரிட்டு அழைப்பதே சரியெனக் கருதிய தி.சு.நடராசனைக் கருத்தரங்கத் தலைப்பாக ‘ பின்னை நவீனத்துவம்: கோட்பாடுகளும் தமிழ்ச்சூழலும் எனப் பெயரிட்ட பின் யார்யாரை அழைப்பதில் தனது மார்க்சியப் பிடிவாதத்தைக் காட்டவில்லை. மூன்றடுக்குக் கருத்தரங்கம் அது. கட்டுரையாளர், கருத்துரையாளர், விவாதமேடை எனப் பிரிக்கப்பட்ட அமைப்பில் அழைப்பாளர்களுக்கு மட்டும் அனுமதி என்பது முடிவுசெய்யப்பட்டது. பங்கேற்பாளர்கள் மூன்று நாளும் தங்கவேண்டும். அவர்களுக்குப் பயணப்படி, தங்குமிடம், உணவு எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டது. 1997, மார்ச், கடைசியில் நடந்த கருத்தரங்கிற்கு புதுச்சேரியிலிருந்து ரவிக்குமார், கண்ணன்.எம்., ராஜ் கௌதமன் திருச்சியிலிருந்து நோயல் இருதயராஜ், க. பூர்ணச்சந்திரன், கிராமியன், தஞ்சையிலிருந்து அ.மார்க்ஸ், சென்னையிலிருந்து அழகரசன், மதுரையிலிருந்து ந.முத்துமோகன், சுந்தர்காளி, சாமுவேல் சுதானந்தா பெங்களூரிலிருந்து தமிழவன் உள்ளூரில் பேரா.பாலச்சந்திரன், செல்லப்பெருமாள் (கவி. பாலா) ஆகியோரை அழைத்தோம். ஒவ்வொரு கட்டுரையின் மீதும் கருத்துரைக்க என இருவரை அழைத்தோம். சிறுபத்திரிகளில் மட்டுமே எழுதப்பெற்றும் விவாதிக்கப்பட்டும் வந்த பின் நவீனத்துவம் கல்விப்புலத்திற்குள் உடனடியாக நுழைந்தது ஒரு வரலாற்று நிகழ்வு. அதற்கு முன்பு இதுபோன்றதொரு முன்மொழிவைத் தமிழகப் பல்கலைக்கழகங்கள் எதுவும் செய்ததில்லை எனப் பலரும் குறிப்பிட்ட கருத்தரங்கு அது. கட்டுரைகள் மீதான கருத்துரைகள், விவாதம் ஓரளவு நடந்தது. பின்னர் திருத்தங்களுடன் விடியல் பதிப்பகம் வழியாக ஓராண்டுக்குப் பின் நூலாக வெளியிடப்பட்டது.

அழைக்கப்பட்ட ஓராண்டுக்குக் காலம் முடிந்த நிலையில் பேரா.தி.சு.நடராசன் மதுரைக்காமராசர் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பினார். அவர் விரும்பினால் மேலும் தொடரலாம் என்றே துணைவேந்தர் வசந்திதேவி சொன்னார். ஆனால் அவர் கட்டாயம் தாய்ப்பல்கலைக்கழகம் திரும்பவேண்டும். ஓய்வுக்கு முன்பு ஓராண்டு அங்கு பணியாற்றவேண்டும் என்பது எழுதப்படாத விதி. அங்கிருந்தால் தான் ஓய்வுக்கால பணிக்கொடைகளைப் பெற ஏற்பாடுகள் செய்ய முடியும்.
திரும்பவும் அடுத்த கல்வியாண்டில் தனியொரு ஆசிரியர் துறையாகத் தமிழியல் துறை மாறியது. என்றாலும் பின்னை நவீனத்துவத்தைத் தொடர்ந்து பெண்ணியம்: கோட்பாடுகளும் தமிழ்ச்சூழலும் என்ற மூன்று நாள் கருத்தரங்கை நடத்தத் திட்டமிட்டேன். அந்தக் காலகட்டத்தில் அன்னை தெரேசா பல்கலைக்கழகத்தமிழ்த்துறை பெண்ணியம் சார்ந்த கவனங்களைச் செய்து வந்த து. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தி. கமலி, இரா.பிரேமா, ஓவியா, பராசக்தி கல்லூரியின் துறைத்தலைவர் அ.பிரேமா, எம்.எ. சுசிலா, போன்ற பெண்ணியச் சொல்லாடல்களை உருவாக்கியவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களோடு எஸ்.ராமகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன், சுந்தர்.காளி, இ.முத்தையா, புதுவைப்பல்கலைக்கழக ஆங்கிலத்துறைப் பேராசிரியர் நடராசன் ஆகியோரும் அழைக்கப்பட்டுக் கட்டுரைகள் வாசித்தனர். அதற்கும் முன்பாக அந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருதாளர் தோப்பில் முகம்மது மீரான் படைப்புகள் மீதான ஒருநாள் கருத்தரங்கையும் நடத்தியது துறை. நெல்லைப்பகுதி சாகித்திய அகாதெமி விருதாளர்களை அழைத்து, அவர்களோடு உரையாடும் அரங்குகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்துப் போட்ட விதை அது. அந்தக் கல்வியாண்டின் முடிவில் ஒரு பேராசிரியர், ஒரு விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு, முனைவர் வே.வசந்திதேவியின் பதவி முடிவதற்குள் மூவர் பணியாற்றும் துறையாக மாற்றிவிட்டுச் சென்றார்.

தொடரும்


#நெல்லைநினைவுகள்-3

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்