கனிமொழி:தனிமையின் இருமுனைகள்



தனிமை ஒருவிதத்தில் சுதந்திரத்தின் குறியீடு. இன்னொரு விதத்தில் ஏக்கத்தின் வெளிப்பாடு. தனித்திருத்தலும் சேர்ந்திருந்தலும் ஒருவிதக் கண்ணாமூச்சி ஆட்டம். தனித்திருப்பவர்கள் சேர்ந்து வாழ ஆசை கொள்வதும், சேர்ந்திருப்பவர்கள் தனித்துப் போய்விட ஏக்கம் கொள்வதும் தொடர் இயங்கியல். மனித வாழ்க்கையின் தொடக்கம் கூட்டத்தின் பகுதியாகவே தொடங்குகிறது. கூட்டம் ஏற்படுத்தும் சுமை தாங்காது தனித்துப் போவதை அவாவும் செய்கிறது. துறவை நாடிச் சென்ற முனிவர்களும், ஞானத்தைத் தேடிய ஞானிகளும் தனித்திருத்தலின் காதலர்கள். 

தனித்திருத்தலை அறிவின் வெளிப்பாடாகக் கருதும்போது சேர்ந்திருத்தலை உணர்வின் தூண்டலாக நினைக்கிறார்கள் மனிதர்கள். ஒருவிதத்தில் சேர்ந்திருத்தல் உடலின் தேவை. அடிப்படைத் தேவைகளாக உள்ள பசியின் பொருட்டுச் சேர்ந்து வாழ நேரும் மனிதக்கூட்டம் சேர்ந்திருத்தலைக் குற்றத்தின் காரணிகளாகக்கூட நினைக்கிறது. இயற்கையின் ஒரு பகுதியாக இருக்கும் மனிதர்கள், தங்களின் அறிவாலும் அதனை வெளிப்படுத்தும் மொழியாலும் செயற்கையின் பகுதிகளாக ஆக்கிக் கொள்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக இயற்கைப் பொருள்கள் எல்லாவற்றையும் செயற்கையாக மாற்றிப் பயன்படுத்தத் தொடங்கிவிடுகிறார்கள். இயற்கையின் மீதான ஆதிக்கத்திற்குக் காரணமாக இருப்பதே சேர்ந்து வாழ்தலின் வினைகள் தான். தனக்காகத் தேடும் வினைகளைக் கூட்டத்தின் வினைகளாக மாற்றி அமைப்புகளாகக் கட்டமைக்கிறது. வயிற்றுப் பசிக்கான உணவு தேடலில் இறங்கிய மனிதர்கள் குழுமங்களாக வாழத் தொடங்கினார்; அலைவு வாழ்க்கையைக் கைவிட்டுத் தங்கிவாழத்தொடங்கினார்கள். குடும்ப அமைப்பை உருவாக்கினார்கள்; தனிச்சொத்து உருவாக்கத்தின் நீட்சியாகவும் பரப்பாகவும் அரசுகள் உருவாகின என்பதை மானிடவியல் கற்றுத்தந்துள்ளது. 

வயிற்றுப்பசியைப் போக்கும் தேடலைப்போலவே உடல்பசியின் தேவைக்காகவும் எதிர்பால் உடல்களைத் தேடுகின்றன உயிரினங்கள். அத்தேடலுக்குரிய வெளிப்பாட்டை உணரும் பருவம் கொண்ட உடல்கள் தனிமையைத் துயரம் கொண்ட படிமங்களாக உருவகித்துக் கொள்கின்றன. சுற்றியிருக்கும் எல்லாம் தடைகளாகக் கருதப்பட்டு உடைத்துக் கொண்டு வெளியேறத் துடிக்கின்றன. அது இயலாத நிலையில் தடைகளின் மீது கோபமும் வெறுப்பும் உருவாகின்றன. தனித்திருத்தலைக் காத்திருத்தலின் பகுதியாக மாற்றிக் கட்டமைத்துக் கொள்கிறது மனம். தனித்திருத்தலையும் காத்திருத்தலையும் கவிதையின் பொருண்மைகளாக மாற்றிய கவிகள் கொண்டாடப்படும் கவிகளாக இருக்கின்றனர். ஆண்கவிகளைவிடவும் பெண் கவிகள் எழுதும்போது இப்பொருண்மை நுட்பமும் சிடுக்குகளும் சொல்ல முடியாத தவிப்புகளுமாக மாறிவிடும். இதற்குத் தமிழ்க் கவிதைப்பரப்பில் நீண்ட தொடர்ச்சி உண்டு. முல்லை இருத்தலை – ஆற்றியிருத்தலாகவும் ஆற்றாதிருத்தலாகவும் பாடிய ஆண்கவிகளைப் போல அல்லாமல் பெண்கவிகள் ஆற்றாதிருத்தலை மூர்க்கமாக எழுதி வைத்துள்ளனர். மூர்க்கமான வெளிப்பாட்டின் அசலான கவிதைக்கு எடுத்துக்காட்டாக ஔவையின் 

முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல் 

ஒரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு 

ஆஅ வொல்லெனக் கூவு வேன்கொல் 

அலமர லசைவளி யலைப்பவென் 

உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே. [குறுந்தொகை:28.] 

இக்கவிதைக்குள் தனித்திருக்கும் – காத்திருக்கும் பெண் தன்னிலைக்கு மாறாகவொரு தனித்திருக்கும் தன்னிலையை உருவாக்குகிறாள் அள்ளூர் நன்முல்லை 

காலையும் பகலுங் கையறு மாலையும் 

ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப் 

பொழுதிடை தெரியிற் பொய்யே காமம் 

மாவென மடலொடு மறுகிற் றோன்றித் 

தெற்றெனத் தூற்றலும் பழியே 

வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே [குறுந்.32.] 

காத்திருக்கக் காரணமானவன் யாரெனச் சுட்டிக்காட்டாமல் பொதுவாகப் பேசும் செவ்வியல் கவிதைக்கு மாறாகப் பக்திக் கவிதையில் – பாவைப்பாடல்களில் அவரவர் விரும்பும் இறையை- தலைவனாக்கிப் பாடியிருக்கிறார்கள் மாணிக்கவாசகரும் ஆண்டாளும். அவற்றைக் குறித்துத் தனியாகப் பேசலாம். செவ்வியல் காலத்துப் பெண்கவிகளைப்போலவே நவீனத்துவ காலப் பெண்கவிகளும் காத்திருத்தலையும் தனித்திருத்தலையும் எழுதியிருக்கிறார்கள். அக்காத்திருத்தலுக்குக் காரணமாக க்காதலையோ, காமத்தையோ நேரிடையாகச் சொல்லாமல் வாசிப்பவர்களின் அனுமானங்களுக்கு விட்டுவிடுவதையே தனிமைக் கவிதையின் அழகியலாக மாற்றுகின்றனர். கனிமொழியின் இந்தக் கவிதையில் அந்த அழகியல் முழுமையாக வெளிப்பட்டுள்ளதை வாசித்துப் பார்க்கலாம். தலைப்பு: இரவுச் சிறகுகள் 

         ******************** 

சுவர்களை அரைநிர்வாணமாக்கிக் 

கொண்டிருந்தது விளக்கு 

விளக்கை அணைத்துவிட்டால் 

சுவர்கள் கரைந்து போகும். 



நட்சத்திரங்கள் மினுக்கும் 

பிரபஞ்ச வெளி 

மயிர்க் கூச்செரியும் நிசப்தம் 

பெருகிக் கரைகிறது உயிர் 

சுவர்களைச் சாத்திவிடுகிறது விடியல் 

வெளிறிய பூதங்கள் 

கற்களை நெருக்கி 

ஜன்னல்களைப் 

பிதுக்கி எறிந்து விட்டன 

வெளியேயும் சுவர்கள் 

செங்குத்தாய் முடிவற்றதாய் 



முகம் நோக்கிக் குனிகிறது 

ஈரங்களை உறிஞ்சும் அமிலக்காற்று 

சுவாசப்பைகள் காய்ந்து நொறுங்கும் 

பூதக்கால் தலையில் 

பெருவிரல் கபாலத்தைத் தாண்டி 

நகக் கீறலில் பிதுங்கி வழியும் 

வெண் குழம்பு காரை உதிர்ந்து உடல் மூடும் 

இரவு வரை ஒரு மரணம். 

******************** 
இரவில் இறந்து பகலில் பிறக்கும் அந்தப் பெண் தன்னிலைக்குள் இருக்கும் பாடுகள் பலவிதமானவை. இருப்பதாகவும் இல்லாத தாகவும் நினைக்கும் அந்த மனம் இருளையும் வெளிச்சத்தையும் ஒன்றாகவே நினைத்துக்கொள்ளும். வெளிச்சத்திற்குப் பின் இருளும், இருளுக்குப் பின் வெளிச்சமும் மாறிமாறி வரும் இயற்கையின் நடப்பு என்ற நிலையில் அந்த எண்ணவோட்ட த்தைத் தவறெனச் சொல்ல இயலாது. வீடெனவும் அறையெனவும் நிலையான வடிவங்களால் – கட்டட அமைப்புகளால் வரையறுக்கப்படும் வெளிகளைப் போலவே எண்ணமென்னும் சுவர்களும் நம்பிக்கைகளும் பின்பற்றல்களும் சுவர்களாக – செங்குத்து உயரங்களாக நிற்பதைப் பேசும் அக்கவிதைக்குள் சொல்லப்படாத நம்பிக்கையின் துளிர்களைப் பேசும் கவியாகவும் இருந்தார் கனிமொழி. நம்பிக்கையின்மையை விதந்துரைக்கும் நவீனத்துவத்தின் இன்னொரு முனையாக நம்பிக்கையைப் பேசும் நவீனத்துவத்தையே சமூக நடப்பை எழுதிய நவீனத்துவர்கள் கலையியலாகக் கொண்டிருந்தார்கள் மேற்கில். அப்படியான நவீனத்துவக் கவிகள் தமிழில் குறைவு. பெண்களில் கனிமொழி நம்பிக்கையையும் வெளிப்பாடாக்கிய கவியாக இருந்தார். அப்படியான கவிதையையும் இங்கே வாசித்துப்பார்க்கலாம். அந்தக் கவிதைக்கு அவர் தலைப்பிடவில்லை. 

******************** 

மேசையின் விளிம்பில் 

வைக்கப்பட்டிருக்கும் 

மெல்லிய கண்ணாடி 

குவளையைப் போல் உள்ளது 

நம்பிக்கை. 

விபரீதமான ஒரு தருணத்தை 

எதிர்நோக்கிக் காத்திருக்கிறது 

திரவம் 



எங்கு வைத்தாலும் நகர்ந்து 

விளிம்பில் உட்கார்ந்திருக்கிறது 

குவளை 



அவசரத்தில் எறியப்படும் 

வார்த்தைகளையும் 

நழுவி விழும் உண்மைகளையும் 

அறியப்படாது போகும் ஸ்பரிசங்களையும் 

எதிர்நோக்கி 

சிதறிப் போதலை வேண்டியபடி 



ஆனால் 

என்றுமே 

காலியாய் இருப்பதில்லை மேசை 

மேசையை நிலைப்பொருளாகவும் அங்கு வைக்கப்படும் குவளையைத் தற்காலிகமாகவும் உருவகித்துப் பேசும் இந்தக் கவிதைக்குள் நவீனத்துவத்தின் நம்பிக்கையின்மையும் நம்பிக்கையின் தொடர்ச்சியையும் வாசித்துக் கொண்டாட முடிகிறது. அந்தக் கவிதைகளை எழுதிய காலத்தில் இளம்பிராயத்துக் கவியாக மட்டுமே இருந்தார் கனிமொழி. அந்தக் கனிமொழியைத் திரும்பக் கொண்டுவர நிகழ்கால அரசியல் வெளியின் இயங்குநிலைகள் அனுமதிக்குமா என்று தெரியவில்லை. அந்த வெளி உருவாக்கியுள்ள தடைகளை உடைத்துக் கொண்டு திரும்பவும் கவியாக மாறவேண்டும் என வேண்டுகிறது மனம். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்