கொடியன் குளம்:முதல் பார்வை


புதுச்சேரியிலிருந்து திருநெல்வேலிக்கு மாறுவதற்காக விண்ணப்பம் செய்தபோது கிடைக்கும் என்று நினைத்து விண்ணப்பிக்கவில்லை கிடைத்த பின்னர் அமைதியான ஊரிலிருந்து கலவரமான ஓர் ஊருக்குப் போகிறேன் என்று நண்பர்கள் வருத்தம் அடைந்தார்கள். எனக்குள்ளும் அந்த வருத்தம் இருந்தது. அந்த வருத்தத்திற்குப் பின்னிருந்த பெரும் நிகழ்வு கொடியன் குளம் சாதிக்கலவரம்.
இந்தியாவில் சாதிகளும் சாதிகளுக்கிடையே வேறுபாடுகளும் அடக்குமுறைகளும் இருக்கும் நிலையில் திருநெல்வேலி மாவட்டக் கலவரம் போல இந்தியாவின் எல்லா இடங்களிலும் கலவரங்கள் வெடிக்கவே செய்யும்; ஆகவே கலவரத்திற்குள் வாழ்வதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்று சொல்லிச் சமாதானப்பட்டுக்கொண்டேன். நண்பர்களையும் சமாதானப் படுத்தினேன்.

1995 இன் மத்தியில் ஏற்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் கலவரங்களின் பின்னணியில் இருந்த ஊர் கொடியன் குளம். கயத்தாறு -தூத்துக்குடி குறுஞ்சாலையில் இருக்கும் அந்த ஊரைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் திருநெல்வேலி பல்கலைக்கழகத்தில் பணியேற்ற நாள் முதலே தோன்றிக் கொண்டிருந்தது. ஆனால் துறைசார்ந்த தேவை இப்போது இல்லையே என்பதையும் மனம் சொல்லியது. நான் போனதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த கலவர நிகழ்வுகள் (ஆகஸ்டு,1995) நான் போகும் வரை ஆங்காங்கே நடக்கும் சாதி மோதல்களுக்குக் காரணமாக இருந்தன. பணியேற்ற காலத்திலும் பல்கலைக்கழகத்தில் அந்தச் சொல்லும் அதன் தாக்கமும் இருந்தது. பெருங்கலவரங்களையும் கடும் பாதிப்புகளையும் காலம் அழித்து விடுவதில்லை. அழித்துவிடக்கூடும் என்ற அச்சத்தில் வரலாற்று ஆய்வாளர்களும் ஊடகவியல் பதிவாளர்களும் உடனடியாகக் களத்திற்குச் சென்று சான்றுகளைத் திரட்டி ஆதாரங்களை அடுக்கிக் காரண காரியங்களை முன்வைத்து விளக்கி எழுதுவார்கள். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தொடர்பியல் துறைக் கலவர காலத்தை அச்சு இதழ்கள் எவ்வாறு சித்திரிக்கின்றன என்ற ஆய்வுப்பதிவுகளைச் செய்யும்படி முதுகலை மாணவர்களுக்குக் குறுந்திட்டங்களை வழங்கியிருந்ததை நான் போனபின்பு அறிந்தேன். அதேபோல், வரலாற்றுத்துறையைச் சேர்ந்த பேராசிரியர் க. அ. மணிக்குமார், தனது துறை மாணவர்களைக் கொண்டு தகவல் திரட்டியும் அரசுத்துறை ஆவணங்களைப் பயன்படுத்தியும் விரிவாகக் கலவரம் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளை எழுதியிருப்பதும் வாசிக்க க்கிடைத்தது. அவருக்குக் கலவரங்களை வைத்து சமூகமுரண்பாடுகளைப் பேசும் கட்டுரைகள் எழுதுவதில் விருப்பமும் உண்டு. இமானுவேல் சேகரன் – முத்துராமலிங்கத் தேவர் என்ற இரண்டு ஆளுமைகளின் வரலாற்றுக்குப் பின்னிருக்கும் முதுகுளத்தூர் கலவரங்களைப் பற்றியும் அவர் விரிவாக ஆய்வுக்கட்டுரைகள் எழுதியவர்.

இலக்கியத்துறைகளை விடவும் இலக்கியவாதிகள் தங்கள் எழுத்துகளில் சாதிக்கலவரம் போன்ற பெருநிகழ்வுகளை அவர்களது கோணத்தில் பதிவு செய்வார்கள். கணிசமான எண்ணிக்கையில் கிடைக்கும்போது அவற்றைத் தொகுத்துப் பகுப்பாய்வு செய்யும் வேலைகளை இலக்கியவியல் ஆய்வாளர்கள் செய்வார்கள். மக்களின் பேச்சு வழக்காக நினைவுகளில் தங்கியிருக்கும் படிமங்களைத் தொகுத்து நாட்டார் வழக்காற்றியல் துறை விளக்கங்களைத் தரும். அன்றாட நிகழ்வுகள், சமூகத்தைப் பாதிக்கும் பெரும் கலவரங்கள் போன்றவற்றைத் தனது பார்வையில் எழுதும் இலக்கியவாதிகள் உடனடியாகக் கவிதைகளாகப் பதிவுசெய்து வரலாற்றுக் கடமையை முடித்துக் கொள்வார்கள். அதிலும் தீவிர இலக்கியம் செய்பவர்களாகச் சொல்லிக் கொள்ளும் ஆட்கள் அவையெல்லாம் எழுதுவதற்கான பொருண்மையே கிடையாது என ஒதுங்கிப் போய்விடுவதுண்டு. ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் ஆற்றாமையையும் இழப்புகளையும் வாய்மொழிப் பாடல்களாகவும் கதைகளாகவும் நினைவுகளில் வைத்திருப்பார்கள். அவற்றைத் தொகுத்து ஆய்வு செய்யக் குறைந்தது பத்தாண்டுகளுக்குப் பின்னர் ஒருவர் முயற்சி செய்யலாம். அப்படித்தான் என் மனம் கொடியன்குளம் என்ற சொல்லையும் ஊரையும் மனதிற்குள் பதிந்து வைத்திருந்தது. ஆனால் அப்பதிவுக்கு மாறாகத் திருநெல்வேலிக்குப் போன ஆறு மாதத்திற்குள் கொடியன் குளம் கிராமத்தைப் பார்க்கும் வாய்ப்பு உண்டாகிவிட்டது. அந்த வாய்ப்பு எதிர்பாராமல் உண்டான வாய்ப்பு.

நண்பர் ரவிக்குமார் வழியாக அந்த வாய்ப்பு ஏற்பட்டது. டெல்லியிலிருந்து வந்த சஞ்சய் காக் (Sanjay Kak) என்ற ஆவணப்பட இயக்குநருக்காகவே அந்தப் பயணம். ரவிக்குமார் ஏற்பாடு செய்த இரட்டை வாக்குரிமை மாநாட்டுக்கான பிரச்சாரம் குறித்து ஒற்றை ஆயுதம் ( One weapon ) என்ற படத்தை எடுத்தார். அப்படத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்கும் தலைவர்களை மக்கள் அவர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்; ஏற்கிறார்கள் என்பதையும் நேரடியாகப் பார்த்துப் பதிவுசெய்தார். ரவிக்குமாரின் சொந்தக் கிராமத்திற்குப் போய்விட்டுத் தென்மாவட்டக்கலவரத்தின் அடையாளமான கொடியன் குளத்திற்கும் வந்தார். அப்போது அந்த ஊராட்சியின் தலைவியான யாகம்மாவையும் சந்தித்தார். அவரது நேர்காணல் ரவிக்குமார் நடத்திய தலித் இதழில் அச்சானது. அந்தப் பயணத்தின் போது நீங்களும் உடனிருக்கலாம் என்று ரவிக்குமார் அழைத்தபோது உடன் சென்றேன். அப்படித்தான் கொடியங்குளத்தைப் பார்க்கும் முதல்வாய்ப்பு உண்டானது.

கொடியங்குளம் கிராமத்திற்குப் போகும்போது புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர் க. கிருஷ்ணசாமி வந்துவிடுவார். அவரை அந்தக்கிராம மக்கள் எவ்வாறு ஏற்கிறார்கள் என்பதை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது கூடுதல் தகவலானதால் ஆர்வம் அதிகமானது. பிப்ரவரியில் நான் போகும்போது, 1997, ஜன.7 அன்று கயத்தாறு பஞ்சாயத்து யூனியன் ஊழியர்கள் மொத்த விடுப்பில் சென்றது பரபரப்புச் செய்தியாக இருந்தது. கயத்தாறு பஞ்சாயத்தை உள்ளடக்கிய ஒட்டப்பிடாரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் க. கிருஷ்ணசாமி. எல்லாச் சட்டமன்ற உறுப்பினர்களும் செய்வதுபோல ஒன்றியப் பஞ்சாயத்து வளாகத்தில் மக்களிடம் மனுவாங்க முடிவு செய்ததைத் தடுக்கும் முயற்சியாக ஒட்டுமொத்த ஊழியர்களும் விடுப்புக் கொடுத்துவிட்டு அலுவலகத்தை மூடிவிட்ட தால் வெளியே நின்று பாதிக்கப்பட்ட மக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டார். அதனால் சட்டம்- ஒழுங்குப் பிரச்சினை ஆகிவிட்டது என்று செய்திகள் வந்தன. இந்திய அரசின் நிர்வாகத்தில் தீண்டாமையும் ஒதுக்கலும் எவ்வாறு நடக்கின்றன என்பதைக் கண்கூடாகக் காட்டிய நிகழ்வு அது.

அந்தப் பத்திரிகையாளரின் பயணத்தில் நானும் நண்பர் ரவிக்குமாரோடு இணைந்து கொண்டேன். கொடியங்குளம் போய் விஷமருந்து ஊத்தப்பட்ட தண்ணீர் நிரம்பிய – மூடப்பட்ட கிணறு, சிதைக்கப்பட்ட வீடுகள், கடைகள் போன்றனவற்றைப் பார்த்துப் படங்கள் எடுத்து முடித்த நிலையில் மருத்துவர் வந்தார். அவரது வருகையை முன்னறிவிப்புச் செய்திருக்கவில்லை. அவரோடும் புகைப்படக்காரர் ஒருவர் வந்திருந்தார். தெருக்களிலும் வீடுகளின் திண்ணையிலும் அமர்ந்து மக்களோடு பேசினார். நடந்த கலவரத்தால் பாதிப்பு அதிகம் என்பதைச் சொன்னார். இந்தக் கொடியன் குளம் கிராமத்து இளைஞர்களில் பெரும்பாலோர் பர்முடாஸ் – டீசர்ட் அணியும் இளைஞர்கள். அவர்களது வீடுகளில் வண்ணத்தொலைக்காட்சிப்பெட்டிகள், கிரைண்டர், மிக்ஸி போன்ற நடுத்தரவர்க்கப் புழங்குபொருட்கள் இருக்கின்றன. இந்த வசதிகளும் வாய்ப்புகளும் உண்டாகக் காரணம் வளைகுடா நாடுகளுக்குப் போய்க் கடும் உழைப்பால் சம்பாதித்த பணம். குறைவான பள்ளிக் கல்வியை வைத்துக்கொண்டு வெளிநாடுகளுக்குப் போய்ப் பணம் சம்பாதித்துக் கொண்டு வந்து குடும்பத்தின் வறுமையைப் போக்கியிருக்கிறார்கள். வறுமை தொலையும்போது தங்கள் உரிமையும் அடிமைத்தனமும் உணரப் பட்டிருக்கிறது. இனியும் நிலம்சார்ந்த விவசாய அடிமைத்தன வேலைகளைச் செய்யவேண்டியதில்லை எனத் தங்களின் பெற்றோர்களிடம் சொல்கிறார்கள். தங்கள் நிலங்களில் விவசாயக் கூலிகளாகவும் வருடாந்திரக் குத்தகை உழைப்பாளர்களாகவும் இருந்தவர்கள் வேலைக்கு வரவில்லை; வசதியாக வாழ்கிறார்கள் என்ற நிலையில் ஆதிக்கசாதி மனம் கோபம் கொள்கிறது. அதன் வெளிப்பாடாகவே மோதல்கள் நிகழ்ந்துள்ளன என்பதை ஓரளவு நேரடியாக உணர முடிந்தது.

ஒதுக்குதலையும் ஒதுங்குதலையும் அடிப்படையாக க்கொண்ட சாதியம் சேரிக்குள் நுழையாது; சேரி மனிதர்களையும் தங்கள் ஊர்ப்பகுதிக்குள் நுழைய அனுமதிக்காது. அதே வெளிப்பாட்டைச் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகம் என்ற பெயர் தாங்கிய பொதுப்போக்குவரத்தின் மீதும் காட்டியது. 1997 இல் திரு மு.கருணாநிதி தலைமையிலான அரசாங்கம் விருதுநகரைத் தலைமைக்கோட்டமாக க்கொண்ட போக்குவரத்துக் கழகத்திற்கு அந்தப் பெயரைச் சூட்டியபோது அந்தப் போக்குவரத்துப் பேருந்துகளில் ஏற மாட்டோம் என்றும், எங்கள் ஊர் வழியாக அவை வரக்கூடாது எனவும் பரவலாக மறியல்கள் நடந்தன. அதன் தாக்கம் தமிழ்நாடு முழுவதும் இருந்ததால், தலைவர்கள் பெயர்கள் தாங்கிய போக்குவரத்துக் கழகங்களுக்கும், மாவட்டங்களுக்கும் வைக்கப்பெற்ற பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டன என்பது இரண்டாயிரத்திற்கு முந்திய கடைசி ஐந்தாண்டுகளின் முக்கியமான வரலாறு.

கொடியங்குளம் போலவே சாதியத்தால் பாதிக்கப்பட்ட ஊர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பலவும் உள்ளன. தனிமையில் போகும் ஒருவரைத் தாக்கிக் கொலைசெய்து விட்டுத் தங்கள் சாதிப் பெருமையையும் வீரத்தையும் பதிவுசெய்துவிட்டதாக நினைத்துக் கொள்ளும் மக்கள் திரளைக் கொண்ட கிராமங்கள் அவை. அவற்றில் சிலவற்றை நேரில் பார்ப்பதற்காக ஆய்வாள நண்பர்களோடு சென்றிருக்கிறேன். இருபது ஆண்டுகளுக்குப் பின் என்னிடம் ஆய்வியல் நிறைஞர் என்னும் எம். பில் படிப்புக்கு வந்த கொடியங்குளத்து மாணவியிடம் அந்த ஊரைப் பற்றிய வரலாற்றைக் கேட்டேன். மோதல் காலத்தில் பிறந்த அந்தப் பெண்ணுக்கு அதன் ஒரு சுவடுகூடத் தெரிந்திருக்கவில்லை. வீட்டில் பெற்றோரிடம் கேட்டுவரச் சொன்னேன். அவரது பெற்றோர்கள் அந்தக் கலவரத்தால் வேறொரு ஊருக்குப் போய்விட்டுத் திரும்பவும் வந்தவர்கள் என்பதை மட்டும் சொன்னாள். கொடியங்குளம் சாதிய மோதல்கள் நடந்து இருபது (2016) ஆண்டுகளுக்குப் பின்னர் அந்தக் கலவரம் குறித்த நினைவுகள் ஊர் மக்களிடம் எப்படி இருக்கிறது? என்பதை அறியும் ஆய்வொன்றைச் செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால் அவளால் தொகுக்க முடியாத சூழல். இதுவே ஒரு மாணவனாக இருந்தால் நானே அங்குபோய்த் தங்கிப் பேச வேண்டியவர்களைக் கண்டுபிடித்துப் பேசித் தொகுத்திருக்க வாய்ப்புண்டு.

1968 -இல் பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்துக் கீழவெண்மணி நிகழ்வுகளைக் கவிதையாகவும் சிறுகதையாகவும் நாவலாகவும் நாடகமாகவும் சினிமாகவும் பதிவுசெய்த தமிழ்க் கலை இலக்கிய உலகம், கொடியன் குளத்தை எப்படிப் பதிவுசெய்து வைத்திருக்கிறது என்று தேடியபோது கிடைத்தவை ஏதும் இல்லை. 1995 இல் கொடியன் குளத்தை மையமிட்டுத் தொடங்கிய கலவரம்தான் 1999, ஜூலை,23 இல், 17 பேரைக் காவு வாங்கிய தாமிரபரணிப் படுகொலைகளாக நீண்டது. கொடியங்குளத்தின் வழியாகத் தனது அரசியலை வளர்த்தெடுத்த மருத்துவர் க.கிருஷ்ணசாமி, வெளி உலகத்திற்கே வராத மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குக் குறைந்த அளவுத் தினக்கூலியாக ரூபாய் 150/ வழங்க வேண்டும் என்ற போராட்ட த்தை முன்னெடுத்தபோது சில அரசியல் கட்சிகளின் ஆதரவும் இருந்தது. அதற்கான ஊர்வலம் நெல்லைச் சந்திப்பில் தொடங்கியபோது பல்கலைக்கழக வளாகம் இருக்கும் அபிசேகப்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் போய்க் கொண்டிருந்தேன். பிற்பகலில் திரும்பி வந்தபோது சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. 

வீடு திரும்பச் சில மணி நேரங்கள் ஆகிவிட்டன. நெல்லை நகரத்திலிருந்து திரும்பிச் சென்று ராமையன்பட்டிக் கண்மாய்க்கரைச் சாலை வழியாகத் தச்சநல்லூர் போய்ச் சின்னச் சின்னச் சாலைகள் வழியாகப் பாளையங்கோட்டை எம் எல் பிள்ளை நகர் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். தூக்கி வீசியெறியப்பட்ட பதினேழு பேரில் பலபேருடைய உடல்களைக் காவல் துறையினரும் பாதிக்கப்பட்ட மக்களும் வெவ்வேறு இடங்களில் தேடிக் கொண்டிருப்பதாகச் செய்திகள் பரவின. பதினேழு உயிர்களின் மரணத்தை நதியின் மரணம் என ஒரு ஆவணப்படம் சொன்னது. அதனை குறித்து நண்பர் ரவிக்குமாருக்கு எழுதிய கடிதம் இப்போதும் இருக்கிறது. அக்கடிதத்திற்கு வைத்த தலைப்பு:
**********


நதிக்கேது மரணம் மரித்தது மனிதா்கள்…….

நண்பா் ரவிக்குமாருக்கு,

வணக்கம், நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தக் கடிதம். “நதியின் மரணம்“ பார்த்து விட்டாச்சா? என்று நீங்கள் தொலைபேசியில் கேட்ட போது நான் பார்த்திருக்கவில்லை. நிகழ்வையம், அதற்குப் பிந்திய சலனங்களையும், அமைதி தவழ்ந்த தெருக்களையும், எதனையும் கண்டு கொள்ளாத மணிதா்களையும், நேரில் அருகிருந்து பார்த்தால் படத்தைப் பார்த்தே தீர வேண்டும் என்ற ஆசை அப்பொழுது இல்லை. ஆனால் அந்தப் படத்தின் இயக்குநா் சீனிவாசன் (காஞ்சனை) சொன்னதாக வந்திருந்த குறிப்பு படத்தைப் பாரத்து விடத் தூண்டியது.

“படத்திலிருக்கும் அரசியலுக்கும், எனக்கும் எந்தவிதச் சம்பந்தமுமில்லை“ என்றது அந்தக் குறிப்பு (குமுதம்; இருட்டு என்பது குறைந்த ஒளி என்னும் புகைப்படக் கண்காட்சியையொட்டிய பேட்டியில்). சீனிவாசன் இப்பொழுது நரிக்குறவா்களைப் பற்றி படம் எடுக்கிறார். சம்பந்தமில்லாமலேயேதான் அவா் படம் எடுத்துக் கொண்டிருப்பார். தான் ஈடுபடும் ஒன்றில் சம்பந்தமில்லாமலேயே ஒரு கலைஞன் ஈடுபட முடிகிறது என்பது நிகழ்கால யதார்த்தமாக உள்ளது. நதியின் மரணம் வீடியோ கேசட் ரகசியமாக உலவுகிறது. அங்கும்கூட உலவக்கூடும். ரகசியமாகத்தான் ஒரு நண்பா் அழைத்துப் போனார். படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. முடிந்தபோது கொஞ்சம் நகைப்பு தோன்றினாலும் இடையில் சில இடங்களில் உலுக்கிவிடத் தான் செய்கிறது.

நதியின் மரணம் மூன்று பாகங்களில் விவரணப்படமாகவும் அதன் முன்னொட்டும், பின்னொட்டும் சோந்து ஒரு புனைவுப்படமாகவும் இருக்கிறது. படத்தின் இயக்குநர் குமுதத்தில் சொன்னதற்குச் சான்று அந்த முன்னொட்டும், பின்னொட்டும்தான் அவைகளைப் பற்றி பின்னா் சொல்கிறேன்.

முன்னொட்டு கலைந்து அழியும்பொழுது திரண்டு வரும் ஊா்வலத்தின் குரல். மனித உடல்கள்…… வரிசை ஒழுங்கைக் குலைத்து நெருக்கியடிக்கும் கூட்டம். அதற்குள் ஒரு வேன். அதில் தலைவா்களின் உருவம். இதனை எதிர்கொள்ள காவல்துறையின் தலைகள்; கவசம் தாங்கிய தலைகள்; தன் உயரக் கம்புகளைப் பிடித்த கரங்கள்; முதுகில் பாதுகாப்புக் கவசங்கள். சிலரிடம் நவீன ரகத் துப்பாக்கிகள்; பலரிடம் பழைய பாணித் துப்பாக்கிகள். ஊா்வலத்தின் நெருக்கத்தை விடப் போலீஸ்காரா்கள் நெருக்கியடித்து நிற்கிறார்கள். உத்தரவுகள் தரப்பட்டனவா….? தாங்களாகவே இயங்கினரா…..? நிற்க வேண்டிய இடத்தில் ஊர்வலத்தினரைத் தடுத்து நிறுத்தாமல் ஆற்றங்கரைக்குச் செல்ல அனுமதித்தது எப்படி? என ஊகிக்க முடியாத கலவரம். தடியடிக்குப் பதிலாகக் கல்லெறி. இருபுறமிருந்தும் சிதறிக்கிடக்கும் செருப்புகள்…. நதியின் பரப்பெங்கும் மனிதத் தலைகள்…… விரட்டிச் செல்லும் போலீஸ்……… அடித்து உதைப்பவா்கள்; ஆடையை இழுந்தவா்கள்; மிதிப்பவா்கள்; நீரில் குதித்தவா்கள்; தள்ளுபவா்கள் எனக் கலவரம் தொடா்ச்சியின்றிப் பதிவாகியுள்ளது. ஒரிடத்திலிருந்து துப்பாக்கி, குண்டுகளை அனுப்புகிறது. அனுப்பிய குண்டுக்குப் பதில். கல்லெறிகள் தன் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாத காவலா்களை அதட்டும் அதிகாரி….. தலைவா்களைச் சுற்றிப் பாதுகாப்பு என அசையும் படங்களுக்கிடையே மனித உடல்கள் கிடப்பதாக, ஆற்றில் அமுக்குவதாகச் சில நிலைப்படங்கள் (Stills) அன்றையக் கலவரம் ஒரு வித வேகத்தில் பதிவாகியுள்ளது. பிறகு அதிகாரிகள் பார்வையிடுகிறார்கள். பிணங்காளக உடல்கள் தேடி எடுக்கப்படுகின்றன. அன்றும் அடுத்தடுத்த நாட்களும் தேடி எடுக்கப்பட்ட மனித உடல்கள். சிதைக்கப்பட்டு நீரில் கிடந்தவை எடுத்துச் செல்லப்படுகின்றன. தலையில் சில காயம் பட்டிருந்தன. கால்களில்….. நெஞ்சில்….. முதுகில்….. இடுப்பில்…….. தொண்டையில்………. குண்டுக்காயங்களும்……… பிரேதப் பரிசோதனைக் கூடத்தில் காமிரா நுழையும் பொழுது பார்ப்பவா்கள் உலுக்கப்படுகிறார்கள். சிதைக்கப்பட்ட உடல்களாகக் குழந்தைகள்….. பெண்கள்….. ஆண்கள்….

அதனைத் தொடா்ந்து வரும் குரல்கள் காத்திரமான சாட்சியங்கள். நதிக்கரையில் மனிதர்கள் உயிர் வதைப்பட்டு உயிரிழந்தார்கள் என்பதை வதைப்பட்டு உயிர்தப்பிய மனிதா்கள் சாட்சியங்கள் சொல்கின்றன. ஒதுக்க முடியாத சாட்சியங்கள் அவை.

புனித நதி மரணமடைந்திருக்கலாம்

நாங்கள் சிந்திய குருதி

அதில் கரைந்தும் போயிருக்கலாம்

கைவிட்டிருக்கலாம்

ஆனால்

எங்கள் நினைவுகள் சாகவில்லை

பதிந்துள்ள முகங்கள் மறந்துவிடவில்லை

உண்மையும் கோபமும்

எங்களிடம் உண்டு

நதியின் புனிதம் வேறு

அா்த்தம் கொள்ளப் போகிறதென.

அவா்கள் சாட்சியமளிக்கிறார்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள்….. மானம்….. வெட்கம்…. உடல்…. உடை பற்றிய புனைவுகளையெல்லாம் தூக்கிக் கடாசிவிட்டு அந்தச் சாட்சியங்கள் நிற்கின்றன.

ஏன் நாங்கள் அடிக்கப்பட்டோம்

அவா்களைக் கொன்றதின் பின்னணியில்

இருப்பது என்ன?

போலீஸின் வெறியாட்டமா…..?

கைக் கூலிகளின் ஆணவமா……?

முதலாளிகளின் பணத்திமிரா……?

இல்லை…….. இல்லை…….

சாதி…… சாதி….. சாதி…….

என்று ஓங்கிச் சொல்கிறார்கள். பிணங்களைப் புதைக்கும் போலீஸை மறிக்கும் போது. சடங்குகள் செய்யும் காவலா்களை விரட்டும்போது. சாட்சியம் சரியாகவே பதிவாகியுள்ளது. உயிருள்ள சாட்சிகளுக்கூடாகச் சில அரசியல்வாதிகள், அரசியல் எண்ணிக்கையை அடுக்கு மொழியில் கூறவும் செய்கின்றனா்.

படம் எழுப்பும் உணா்வுகள் என்ன என்பதாகச் சிலரின் கருத்துரைகள் அடுத்து இடம் பெற்றுள்ளன. பத்திரிகையாளா் ஞாநி, அரசியல் செயலாளி டி. எஸ். எஸ். மணி, ஓவியா் சந்ரு, டாக்டா் எஸ். கிருஷ்ணசாமி ஆகியோரின் கருத்துரைகள் இப்படத்தின் தேவை பற்றிக் கூறுகின்றனா். படத்தைப் பல இடங்களிலும் போட்டு காட்டி விழிப்புணா்வு உண்டாக்க வேண்டும் எனக் கூறுகின்றனா். படத்தைப் பார்வையாளா்கள் இவா்களின் கோணத்தில் வைத்துப் பார்க்கச் செய்து விடும் விபத்து இதில் உள்ளது. பலதளப் பார்வையைத் தவிர்த்து அரசைக் குற்றம் சாட்டும் ஒற்றைத் தொனி ஓங்கி ஒலிக்கும் அந்தக் குரல்களும், காட்சிகளும் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

இப்பொழுது முதல் மற்றும் கடைசிக் காட்சிக்கு வருகிறேன். படம் தொடங்கும்பொழுது ஒரு இளைஞன் இடுப்பளவு நீரில் நிற்கிறான். நதி சுழிப்புகளின்றி அமைதியாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இளைஞனின் சிவந்த உடலில் ஆங்காங்கே திருநீற்றுப் பட்டைகள் பூணூல் இல்லாத சிவப்புடல் இளைஞன். நதியின் போக்கை – ரகசியத்தை – புதிர்களை – புனிதத்தை – அறிந்து கொண்டவனாக நிற்கின்றான். பின்னணிக் குரல் தாமிரபரணியின் பழைமையையும், அது தமிழ்ச்சமூகத்தில் – திருநெல்வேலியின் வாழ்க்கையில் எழுப்பியிருக்கும் கற்பனைகளையும் சொல்லிச் சென்று தேய்கிறது. காட்சி ரூபங்களும் அலைவுற்று மாறிவிடுகின்றன.

கடைசியாகப் படம் முடியும்பொழுது திரும்பவும் நதி சுழிப்பின்றி ஓட அதே இளைஞன் அசையாது நிற்கிறான். கைகளை மார்பில் சோ்த்துக் கட்டியபடி…. பெருமூச்சு விடும்போது உடல் ஏறி இறங்குகிறது. பின்னணிக்குரல், அந்நதியோடு கலந்திருந்த கற்பனைப் புனைவுகளும் குதூகலக் கதைகளும் காணாமல் போய் பிணங்களின் ரத்தம் நதிக்கரையில் படிந்துவிட்டது என ஆதங்கப்படுகிறது. குரலில் கழிவிரக்கம்….

23, ஜுலை, 1999 அன்று நடந்த நிகழ்வுகளை நதியில் கைகட்டி நிற்கும் இளைஞனின் நினைவாகக் கட்டமைக்கும் – வடிவம் கொண்டிருக்கும் படம் விடும் பெருமூச்சு, 17 உடல்களின் மரணத்திற்காக எழுப்பிய ஆவேசமாக இல்லாமல் நதியின் புனைவுகள் மரித்துப் போனதற்கான அமைதிப் பார்வையாக வெளியேறுகிறது எழுத்தில்.

மக்கள் இத்தகைய அதிகார வெறிகளுக்குப் பாடம் நடத்தியதில் பங்கெடுக்காத – லயித்துவிடத் தயாரில்லாத எனக்கு அந்தப் படம் எழுப்பிய உணா்வுகள் இவ்வாறிருக்க.

இந்த வெளியிலிருந்து வெகுதூரம் விலகியிருக்கும் பாண்டிச்சேரி வாசிகளுக்கு – உங்களுக்கு – வேறுவிதமாகத் தோன்றக்கூடும். தூரத்தில் நடந்த ஒன்றை அனுதாபத்தோடு பார்க்கும் நிலைக்குப் பார்வையாளன் தள்ளப்படக்கூடும். யோசித்துப் பாரத்தால் வீடியோ, அழித்துவிட முடியாத சாட்சியங்களோடு அதிகார மையத்தைக் குற்றம்சுமத்த சரியான ஊடகம்தான் என்று தோன்றுகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்….. மக்கள் பாடம் கற்பிப்பார்கள் என்ற நம்பிக்கைகள் இல்லாதபோதும்……



தங்களின்

28.03.2000 அ. ராமசாமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்