வல்லுநராக ஏற்றுக்கொண்ட துறை

இணைப்பேராசிரியர் ஆகி நெல்லைக்கு வந்தபோது திருவனந்தபுரம் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தான் என்னை ஏற்றுக் கொண்ட தமிழ்த்துறை. அதற்குச் சில காரணங்கள் இருந்தது. திருவனந்தபுரத்திற்கும் திருநெல்வேலிக்குமிடையே உள்ள தூரம். திருவனந்தபுரம் தமிழ்த் துறைக்கு ஒரு வல்லுநரை அழைக்க வேண்டுமென்றால் மதுரை அல்லது கோவையிலிருந்துதான் அழைக்க வேண்டும். ஆனால் காலையில் கிளம்பிப் பல்கலைக்கழக வேலை நேரத்திற்குள் வரக்கூடிய தூரத்தில் இருந்தது நெல்லை.

பொதுவாக நாடகத்துறை வல்லுநர்களைத் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையினர் அதிகமும் ஏற்பதில்லை. அவர்களை இன்னொரு துறையினராகக் கருதி விலக்கி வைப்பார்கள்.அதற்கு மாறாக நாடகத் துறை வல்லுநராக என்னை அறிந்தவர்கள் கேரளப்பல்கலைக்கழகத் தமிழ் துறையிலும் பல்கலைக்கழகக் கல்லூரியிலும்  இருந்தார்கள் என்பது இன்னொரு காரணம். 1997  பிப்பிரவரியில் நெல்லையில் பணிக்குச் சேர்ந்த என்னை அதே ஆண்டு ஏப்பிரலில் முதல் அழைப்பாக சுந்தரனார் அறக்கட்டளையின் சொற்பொழிவுக்காக அழைக்கப்பட்டேன். அழைத்தவர் அப்போதைய துறைத்தலைவர் சி.சுப்பிரமணிய பிள்ளை. பல்கலைக்கழக வளாகத்தில் இல்லாமல், நகரில் இருந்த சைவ சபையில், சுந்தரனார் நினைவுக்கூடத்தில் நடந்தது. அக்கருத்தரங்கம்.

காலை அமர்வில் பேரா. வ.அய்.சுப்பிரமணியம் தலைமையில் தொடக்க விழாவிற்குப் பின் மதியம் முதல் உரை என்னுடையது. முடித்துவிட்டுப் பேருந்தில் அமர்ந்திருந்தபோது வ.அய். சுப்பிரமணியம் அதே பேருந்தில் ஏறினார். ஏறியவருக்கு உட்கார எனது இடத்தைத் தந்து எழுந்தபோது மறுத்துவிட்டார். நீங்கள் முதலில் வந்தீர்கள்; நீங்கள் அமர்ந்து வருவதே சரியானது என்று சொல்லிவிட்டு, எனக்குப் பின்னால் நின்றபடியே மார்த்தாண்டம் வரை பயணம் செய்தார். அதற்குப் பின் காரியாவட்டம் இருக்கும் கேரளப்பல்கலைக்கழக வளாகத்திற்கும், பல்கலைக்கழக க்கல்லூரி இருக்கும் நகர் மையத்திற்கும் பல தடவை போயிருக்கிறேன். வாய்மொழித்தேர்வுகள் நடத்த, புத்தொளிப்பயிற்சி வகுப்புகளில் பாடம் நட த்த, மாணாக்கர்களுக்குச் சிறப்புப் பாடங்கள் கற்பிக்க என ஒவ்வொரு துறைத்தலைவரும் அழைத்துக்கொண்டே இருந்தார்கள். முனைவர் சி.சுப்பிரமணியபிள்ளை, முனைவர் கி.நாச்சிமுத்து, முனைவர் காஞ்சனா, முனைவர் ஜெயகிருஷ்ணன், முனைவர் விஜயலெட்சுமி,முனைவர் ஹெப்ஸிபா என ஒவ்வொருவர் காலத்திலும் போய்வந்துகொண்டே இருந்தேன். அநேகமாக அதிகம் சென்று வந்த பிற பல்கலைக்கழகத்துறை அதுவாகத்தான் இருக்கும். கேரளப் பல்கலைக் கழகத்துப் பாளையம் வளாகமும் காரியவட்ட வளாகமும் கூப்பிடும் தூரமல்ல. இலக்கணம் குறித்துக் காத்திறமான ஆய்வுகளைச் செய்த பேராசிரியர்கள் படித்த - பணியாற்றிய இடங்கள்; துறைகள்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேலையாகப் பல தடவை கேரளத்திற்குள் திரிந்துள்ளேன். ஒருமுறை பாலக்காடு வழியாக ஆலப்புழையில் நுழைந்து பத்தனாம்திட்டையின் உச்சிமலையொன்றிலிருந்த கல்லூரி ஒன்றிற்குப் போனேன். தொலைதூரக்கல்விமுறைத் தேர்வைப் பார்த்து அறிக்கை அளிக்க வேண்டும். எட்டு மணிநேரப் பயணத்திற்குப் பின் தேர்வறைக்குள் நுழைந்தால் ஐந்து பேர்தான் வந்திருந்தார்கள். இன்னொருமுறை செங்கோட்டை வழியாகக் கொல்லம் போய் கண்ணனூரில் இறங்கியபோது கொட்டிய மழையில் மாணவர்களுக்கான அறிவியல் நாடகவிழா தள்ளிப்போடப்பட்டது. அதனை நடத்தியது பெங்களூரில் செயல்படும் ஸ்ரீ சர்வேஸ்வரய்யா அறிவியல் கழகம். இலக்குகள் சோர்வினை ஏற்படுத்தினாலும் வெளிகளும் காட்சிகளும் சோர்வுக்குப் பதிலாக உற்சாகத்தையே உண்டாக்கும். 

கேரள மாநிலத்திற்குள் நுழையப் பலவாசல்கள் உண்டு. எந்தவாசல் வழியாக நுழைந்தாலும் பச்சைப்பசேலெனத் தலையாட்டும் வகைவகையான மரங்களையும் சலசலத்து ஓடும் ஓடைகளையும் புழைகளையும் உள்ளோடித் திரும்பும் கடல் நீரையும், தூரத்தில் மிதக்கும் படகையும் பார்த்துவிட முடியும். கொஞ்சம் நடந்துபோனால் விரிந்தலையும் கூந்தலோடு கடந்து போகும் பெண்ணொருத்தியின் வாசத்தை நுகரும் நாசி நகரமுடியாமல் தவிக்கும், ஆரவாரமில்லாமல் ஒலிக்கும் ஸ்தோத்திரப் பாடலின் திசையில் செவிகொடுத்தால் உயர்ந்து நிற்கும் கொடிக்கம்புகளுக்குப் பின்னே ஒரு கோயில் சுவற்றின் வரிக்கோடுகள் அசையும். இதையெல்லாம் வைத்துக்கொண்டு மலையாள தேசத்தைக் கடவுளின் ஆசீர்வாதம் பெற்ற பூமியென்று சொல்லித் திரிந்தவர்களுக்குப் புதிய அடையாளம் ஒன்றை உருவாக்கி இந்தத் தேசம் “சகாவுகளின் தேசம்” என்று சொல்லிக் கொடுத்தவர்கள் தோழர்கள்.

சகாவுகளின் தேசமாக மாறிவிட்ட கடவுளின் தேசத்திற்குள் நுழைந்தால் ஒரே நாளில் திரும்புவதை மனம் எப்போதும் ஒப்புவதில்லை. இரவுகள் முடிந்து காலையில் காட்டுப் பாதையொன்றில் நடந்துவிட்டுக் கிளம்பும் வாய்ப்பையும் தவறவிடுவதில்லை. கேரளத்திற்குள் நுழையும் வாய்ப்புடைய எந்தப் பயணத்தையும் எப்போதும் தள்ளிவைத்ததில்லை; மறுப்பதுமில்லை. பல்கலைக்கழகத்தின் தொலை நெறிக்கல்விப் பணிக்காக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்குள் செல்லவேண்டுமெனக் கேட்கும்போதெல்லாம் நான் கேரளத்தையே தேர்வு செய்வேன். அங்கிருந்த படிப்பு மையத்திற்கும்/ தேர்வுமையத்திற்குமெனப் பத்தனம்திட்டை, பாலக்காடு, கண்ணூர், ஆலப்புழை, எர்ணாகுளம், கொல்லம், திருவனந்தபுரம் என நகரங்களுக்குத்தான் செல்லவேண்டுமென்றாலும் செல்லும் பாதையெங்கும் விரியும் பச்சையம் போர்த்திய நிலக்காட்சிகளுக்காகவும் இடையிடையே விரியும் நீர்க்காட்சிகளுக்காகவும் திரும்பத் திரும்பப் போய்க்கொண்டே இருப்பேன். 

கேரளத்திற்குள் நுழையும் வேலைகள் - சொந்த வேலைகளாகவும் பல்கலைக் கழக வேலைகளாகவும் பல தடவை கேரளத்திற்குள் நுழைந்திருக் கிறேன். அங்கிருக்கும் மனிதர்கள் வியர்க்கும் மூக்குகள் கொண்ட மனிதர்கள். தூரத்து வெயிலையும் வரப்போகும் மழையும் நுகர்ந்து பார்த்தே சொல்லிவிடுவார்கள். நிலவாசனையை உணர அதன்மீது வான்மழை பொழியவேண்டும். பெருமழைக்கு முன்னதாக விழும் தூறலை உள்வாங்கி நிலம் - மண் விடும் மூச்சுக்காற்றின் வாசத்தைக் கோடைமழையின் போது உணரமுடியும். ஆடிக்காற்றுக்குப் பின்வரும் மலையாள தேசத்துச் சாரல் நிலவாசத்தை விடவும் மலையின் வாசத்தையே சுமந்துவரும். 

செங்கொடிகள் பறக்கும் சாலையோரங்களைக் கடக்காமல் கேரளத்தின் எந்த வாசல் வழியாகவும் நுழைந்துவிட முடியாது. செவ்வரிசிச் சோறும் பொறிச்ச மீனும் சாப்பிட முடியுமென்றால் கேரளத்திற்குள் எத்தனை நாட்களும் திரியலாம். தென்னங்கள்ளும் கட்டன் சாயாவும் குடிக்க முடியுமென்றால் அலைந்து திரியும் அலுப்பெல்லாம் காணாமல் போய்விடும். இந்திய ஒன்றியத்தின் ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் அந்தந்த மாநில மக்களின் மொழியோடு பேசும் அளவுக்குக் கற்றுக்கொண்டு பயணம் செய்ய வேண்டுமென்ற ஆசையொன்று மாணவப்பருவத்தில் இருந்தது. அதற்காகக் கற்றுக் கொண்ட முதல்மொழி சேட்டன்களின் மலையாளம். கல்லூரிக் காலத்தில் நுழைந்த முதல் வாசல் தேனி வழியாக இடுக்கி மாவட்டம். நீர்த்தேக்கத்தைத் தாண்டி ஒற்றையடிப் பாதையில் நண்பர்களோடு போனபோது கண் சிமிட்டிக் கூப்பிட்ட பெதும்பையிடம் பேரம்பேச உதவியது மலையாளம்.

உசிலம்பட்டியிலிருந்து தென்மேற்காகப் போகும் சாலையில் எங்களூரைக் கடந்து போனால் சதுரகிரி மலைக்கும் வாசிமலையான் மலைக்கும் இடையில் ஒரு கணவாய் உண்டு. அந்தக் கணவாய் வழியாகப் போனால் கடமலைக்குண்டு தாண்டி மலையாள தேசத்திற்குள் போய்விடலாம் என்று சொல்வார்கள். போக ஆசைப்பட்டுப் போகாமல் இருக்கும் பயணத்திட்டங்களில் ஒன்று. அந்த மலைப்பகுதியில் ஒரு அணைகட்டும் திட்டம்கூட நீண்ட நாட்களாகவே இருக்கிறது. டேராபாறை அணைத்திட்டம் என்று பெயர். சேடபட்டித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க நான் முதன்முதலில் ஓட்டுப்போட்டபோது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது. இப்போது சேடபட்டித் தொகுதியும் இல்லை. டேராபாறை அணைத்திட்டமும் வரவில்லை.

எங்கள் கிராமத்தின் அமைப்பு அப்போது வலசல் வலசலாக இருக்கும். குறிப்பிட்ட பங்காளிகள் ஒரு வட்டமான சுற்றுச்சுவரைக் கொண்ட பகுதிக்குள் இருப்பார்கள். வளசலல்லாத முறையில் தனியாக ஒருவீடு இருந்தது. அந்த வீட்டிற்குச் சொந்தக்காரரை மலைக்காரர் என்றே அழைப்பார்கள். அந்த மலை மூணாறு மலை. அவர்கள் வழியாகவே எனக்குக் கேரளம் அறிமுகம். தேயிலைத்தோட்டத்தில் வேலை செய்யப்போய் விட்டுத் திரும்பிய குடும்பம் அது. அந்தக் குடும்பத்தில் அனைவரும் திரும்பிவிடவில்லை. மலைக்காரரின் பெண்களைத் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்தவர்களுக்குக் கட்டிக்கொடுத்த வழியிலும் தன் மகன்களுக்குப் பெண் எடுத்த வகையிலும் கேரளத்தோடு மூணாறு மலையோடு தொடர்பில் இருந்தார்கள். அந்த மலைக்காரரின் கடைசி மகன் எனது சோட்டுக்காரர். அவரது திருமணம் அங்கே தான் நடந்தது. அந்தப் பெண்ணின் அப்பா மலைக்காரராகவே அங்கே இருந்தார். அந்தத் திருமணத்தையொட்டி மூணாறு மலைக்குப் போனதுதான் எனது முதல் கேரளப் பயணம். ஒரு சிற்றுந்து வடிவிலான வேனில் ஆண்டிபட்டி, தேக்கடி வழியாக ஏறி மூணாறு நகரம் வழியாக மாட்டுப்பட்டி என்ற அந்த எஸ்டேட்டில் இறங்கினேன். அதற்கு முன்பு தேக்கடிக்குக் கல்லூரிக்காலத்தில் ஒரு சுற்றுலாச் சென்று திரும்பினேன். அப்போது கம்பத்தில் தங்கிவிட்டு தேக்கடியில் படகுப்பயணத்தோடு திரும்பினேன்.

 தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டிய தொடங்கி வளைவுவளைவான பாதைகள். வழியெங்கும் பச்சையங்கள், மலைகள். நெடிதுயர்ந்து நிற்கும் மரங்கள் என அந்தக் கால கேரளக்காட்சிகள் தொடர்ச்சியாக அழைப்பு விடுத்துக்கொண்டே இருக்கின்றன. மாட்டுப்பட்டி எஸ்டேட்டில் தங்கியிருந்த ஒருவார காலமும் மழைதான். ஜூலை -ஆகஸ்டு மாதங்கள் (1982) கேரளத்தின் கடும் மழைக்காலம். காலையில் எழுந்து மழையில் நனைந்து கொண்டே தான் வேலைக்குப் போகிறார்கள். சூரியன் மலையுச்சியைத் தாண்டி வரும்போது மழை நின்றுவிடும். பசுந்தேயிலை இணுக்குகளைக் கிள்ளிப்போட்டுப் பொதிசுமக்கும் பெண்களின் வரிசைகள். அட்டைக்கடிக்காகப் பிளாஸ்டிக் தாள்களைக் கால்களில் சுற்றிருப்பார்கள். அங்கிருந்து முதுவர்கள், படுகர்கள் வீடுகள் இருக்கும் பகுதிக்கு நடந்து சென்று பேசமுயன்று தோற்ற நாட்கள் என முதல் கேரளப்பயணம் எப்போதும் நினைவில் இருக்கும் பயணம். அந்தப் பயணத்தின்போது கடவுளின் தேசமென்றோ, சகாவுகளின் தேசமென்றோ அறிமுகமில்லை. பச்சைப்படுத்தாக்களின் பூமியென்ற பதிவாகியது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சகாவுகளின் அழைப்பின் பேரில் கேரளாவுக்குள் நுழைந்தேன். அழைத்தவர்கள், சகாவுகளின் அரசப்பாசத்தைக் கேள்விக்குள்ளாக்கிய தீவிர சகாவுகள். மார்க்சிய -லெனினிய அமைப்புகளின் கூட்டமைப்பொன்று திரிச்சூரில் மாநாடு ஒன்றை நடத்தியது(1988) .அதனோடு தொடர்புடைய தோழர் பொன். சந்திரன் அப்போது மதுரையில் வங்கி ஊழியராக இருந்தார். அவர் வழியாக திரிச்சூர் மாநாட்டில் நாடகம் போடும் அழைப்பு வந்தது. சுந்தர ராமசாமியின் பல்லக்குத்தூக்கிகள் சிறுகதையிலிருந்து உந்துதல் பெற்றுத்தயாரித்த சுதேசிகள் நாடகக் குழு     திருச்சூர் கோயில் மைதானத்தில் நிகழ்த்திக் காட்டியது.    எங்கள் நாடகத்திற்குப் பின்னர் தான் மலையாளப் பெருங்கவி சச்சிதானந்தனின் கவியோடைப்பேச்சை முதன் முதலாகக் கேட்டோம். கேரளத்திலிருந்தும் வங்கத்திலிருந்தும் வந்திருந்த புரட்சிகர அமைப்புகளின் கலை இலக்கிய நிகழ்வுகளைக் கண்ட நாட்கள் அவை. புரட்சி வந்துவிடுமென்று காத்திருந்து கழிந்த நாட்கள் முடிந்த பின்பும் திருச்சூர் நாடகப்பள்ளியில் நாடகவிழாக்களுக்காகப் போனதுண்டு. பாண்டிச்சேரி நாடகத்துறைக்கும் திரிச்சூர் நாடகத்துறைக்கும் அதன் தொடக்க ஆண்டுகளில் நல்ல தொடர்பு இருந்தது. திரிச்சூரில் இளங்கலை மட்டுமே இருப்பதால் முதுகலைக்கு வேறு வாய்ப்பில்லை ஒவ்வொரு வருடமும் இரண்டு அல்லது மூன்று மாணாக்கர்கள் முதுகலை நாடகம் பயில்வதற்காக வருவார்கள். செயல்முறைத்தேர்வுகளின் ஆசிரியர்களாக அங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்கும் ஆசிரியர்கள் சென்று வருவதுண்டு. திரிச்சூர் நாடகப்பள்ளி நட த்திய நாடகவிழா மற்றும் கருத்தரங்கிற்கு ஒட்டுமொத்தமாகப் புதுவைப்பள்ளியிலிருந்து ஆசிரியர்களும் மாணாக்கர்களும் போய்த் தங்கியிருந்தோம். அதிகாலையில் நடந்துபோய் ஆமைக்கறியும் தென்னங்கள்ளும் குடித்து பிரெக்டையும் மேயர்ஹோல்டையும் திட்டித் தீர்த்தவர்களோடு சண்டை போட்டோம். அவையெல்லாம் கழிந்து போன சூர்யப்புஸ்பங்களின் காலம்.

புதுவைப்பல்கலைக்கழகம் மையப்பல்கலைக்கழகம். அதன் பணியாளர்கள் நான்காண்டுகளுக்கு ஒருமுறை இந்தியப் பரப்பில் எங்கும் சென்றுவரப் பயணச்செலவில் எண்பது சதவீதத்தைத் தரும். இருபது சதவீதம் கைக்காசு செலவழிக்கவேண்டும். அந்தச் சுற்றுலாவும் கேரளத்திற்கானதாகவே இருந்தது. இருபது சதவீதம் செலவு செய்யும் வாய்ப்பைக் கருதி புதுவையிலிருந்து கேரளத்திற்குள் சென்றுவரும் அனைத்திந்தியச் சுற்றுலாவொன்றைக் குடும்பத்தோடு சென்று கோவளம் கடற்கரை மணலில் திரிந்ததும் நினைவில் இருக்கிறது.

கோவளத்தின் கடற்கரையில் அதிகாலையில் நடப்பதும் தலைச்சேரி மணற்பரப்பில் முன்னிரவில் நடப்பதும் ரம்மியமானது. இவ்விரண்டையும் தாண்டியது ஆலப்புழையில் படகொன்றை எடுத்துக் கொண்டு நீர்ப்பரப்பில் ஊஞ்சல் ஆடுவது. குடும்பத்தோடு அந்த அனுபவத்தை அனுபவைக்கலாம். இளைஞர்களாக இருந்தால் காதலிகளோடு சென்று தங்கலாம். மகளின் திருமணத்திற்குப் பின்னர் சென்ற ஆலப்புழை பயணத்தில் இரண்டு அறைகள் கொண்ட படகுவீட்டில் ஓரிரவைப் படகிலேயே கழித்தோம். முதல் நாள் காலையில் ஏறி நீர்ப்பரப்பில் சுற்றிக் காட்டிய படகோட்டி மாலை நேரம் வந்தவுடன் அவரது வீடிருக்கும் கிராமத்தின் மரமொன்றில் கட்டிவிட்டார். அங்கே இறங்கி அந்தக் கிராமத்திற்குள் சென்று வரலாம். அதொன்றும் பெரிய கிராமம் அல்ல.. நீருக்குள் வாளோடியாகப் போகும் ஒற்றைத்தெரு தான் கிராமம். கரையோரம் முழுவதும் தென்னை மரங்கள் வாய்க்கால் கரையில் மண்சாலை. மண்சாலையை விட்டு இறங்கினால் வயல்வெளி. தட்டோடுகளால் வேயப்பட்ட கூரை வீடுகள்.

முன்னரே பதிவுசெய்துவிட்ட நிலையில் இரவு உணவுக்கான பொருட்களோடு வரும் படகோட்டியின் வீட்டில் சமையல். அல்லது சுற்றுலாவாக வருபவர்களுக்காகச் சமைத்து வீட்டுச் சமையல்போலப் பாத்திரங்களில் போட்டுத்தருகிறார்கள். படகிலேயே சாப்பிட்டுவிட்டு, நீரிலாடும் படகூஞ்சலில் ஆடியபடி இரவைக்கழிக்கலாம். மூங்கில் கம்புகளால் பின்னப்பட்ட அறைக்குள் காற்றுப் புகாதவண்ணம் மரக்கூழ் தட்டிகளால் ஆன அறையில் இதமான குளிர் இருக்கும். ஓரிரவு தங்குவதற்கு நட்சத்திர விடுதியின் வாடகையைவிடக் கூடுதலாக வசூலிப்பார்கள்.  முதல் நாள் கிளம்பிய நேரத்திற்கு ஆலப்புழைத் துறையில் வந்து இறக்கிவிடுவார்கள். நாங்கள் எடுத்தது நடுவாந்திர வாடகைகொண்ட படகு. கப்பல் போன்ற பெரும் படகுகளில் நட்சத்திரவிடுதியின் வசதிகளோடு கூடிய அறைகளும் கிடைக்கும். உங்கள் பணத்திற்கேற்ப வசதிகளும் செய்து தரப்படும். எந்தக் காலத்திலும் படகுவீடுகளில் வாழ்ந்து பார்க்க அந்நிய தேசத்துச் சுற்றுலாவினர் வந்துகொண்டே இருப்பதே அதன் பொருளாதாரம்,     குருவாயூரப்பனும் அனந்தபுரத்துக் கண்ணனும் ஆத்துக்கால் பகவதியும் சபரிமலை ஐயப்பனும் இந்திய மனிதர்களின் தேடல் என்றால், அந்நிய தேசத்தவர்களுக்கு ஆலப்புழைப் படகுவீடுகளும் உடல்பிடித்துவிடும் ஆயுர்வேத மருத்துவமும் எண்ணெய்க்குளியல்களும் இஷ்டமானவை. கேரளத்துத் தெய்வங்கள்  கோயிலில் மட்டுமே இருப்புக் கொள்வதில்லை. கேரளமெங்கும் அலைந்து திரிவார்கள். ஐயப்பனோ எல்லை தாண்டித் தமிழ்நாட்டிற்குள் தான் அதிகம் திரிகிறான்.  

கடைசியாக ஓய்வுக்கு முந்திய மார்ச் மாதத்தில் வித்தியாசமான நிகழ்வொன்றிற்குப் போய்வந்த து நினைவில் இருக்கிறது. அத்துறையின் ஆசிரியை த. விஜயலெட்சுமி கருத்தரங்க வடிவத்தை மாற்றி, விவாத அரங்கொன்றை மூன்று நாட்கள் நட த்தினார்.தொல்காப்பியக் கவிதையியலை நவீனக் கவிதை வாசிப்புக்கும் நகர்த்த முடியும் எனச் சொல்லாடல்களைச் செய்துவரும் கல்விப்புலத்திறனாய்வாளர்களையும் ஆய்வாளர்களையும் ஒருங்கிணைத்து உரையாட வைத்தார். என்னோடு, தமிழவன், மாதையன், தி.கு.ரவிச்சந்திரன், ஜவஹர், மேலும் சிவசு ஆகியோர் முதன்மையான உரையாடல் முன்னெடுப்பாளர்களாக இருந்தார்கள். ஒருநாள் முன்னதாகவே போய்விட்டேன்.   மழையும் கூடவே வந்திருந்தது. பல்கலைக்கழக வாசலில் இந்திய மாணவர்கள் சங்கத்தின் அகில இந்திய சம்மேளத்திற்கான பதாகை நின்றது. எப்போதும் சிவப்பு வண்ணத்தில் மிளிரும் பதாகை இந்தமுறை நீலவண்ணத்திற்கு மாறியிருக்கிறது. சிவப்பும் நீலமும் கலக்கவேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதைச் சகாவுகளின் தேசம் முன்னுணர்த்தியது.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்