பயணங்களும் பயணிகளும்


இரண்டு மணிநேரப் பயணம் தான். இடைநில்லாப் பேருந்தில் ஏறினால் பயண நேரத்தில் முக்கால் மணி நேரம் குறையலாம். சில நிறுத்தப் பேருந்துகள் என்றால் இரண்டிற்கும் இடையில் ஒன்றரை மணி நேரம் பயணம் செய்ய வேண்டியதிருக்கும். நாகர் கோவிலுக்கும் திருநெல்வேலிக்கும் இடையில் உள்ள தூரத்தைக் கடக்க எந்த வகைப் பேருந்தைத் தேர்வு செய்வது என்ற குழப்பம் எல்லாம் இப்போது இல்லை. விரைந்து செல்லும் வாகனத்தில் ஏறி அமர்ந்து விட்டேன்.நாகர்கோவிலிலிருந்து சென்னை செல்லும் அந்தப் பேருந்தில் பயணம் செய்யக் காலையில் தந்ததை விடப் பத்து ரூபாய் கூடத் தர வேண்டியிருந்தது. வந்த வேலை முடிந்து விட்டது. செய்த வேலையில் ஏற்பட்ட அலுப்பில் உடல் ஓய்வை விரும்பியது. ஒரே மூச்சில் ஓடிப் போய் வீடடைந்து முடங்கி விட வேண்டும். இதுதான் இப்போதைய இலக்கு. ஆம். இலக்குகள் தான் நம்முடைய தேர்வுகளை முடிவு செய்கின்றன.

காலையில் திருநெல்வேலியிலிருந்து கிளம்பும் போது இப்படியொரு அவசரம் எனக்கு இல்லை. பன்னிரண்டு மணிக்கு நாகர்கோவிலில் இருந்தால் போதும். வீட்டை விட்டுக் கிளம்பிய போது காலை ஆறு. காலை நேரப் பயணத்தின் மீது கொண்ட விருப்பம் தான் அப்படிக் கிளம்ப வைத்தது. சூரியனின் கதிர்கள் நேரடியாகத் தாக்காத இடத்தில் உட்கார்ந்து கொண்டு பின்னோடி மறையும் மரங்களையும் மனிதர்களையும் பார்த்துக் கொண்டே செல்லும் சின்னச் சின்னப் பயணங்கள் இனிமையான பயணங்கள். சின்னச் சின்னப் பயணங்களின் போது எப்பொழுதும் எனக்குச் சவால் விடுபவைகளாக இருக்கின்றன பறவைகள். நான் செல்லும் பேருந்தைக் கடந்து முன்னோடிப் போய் ஒரு மரத்தில் உட்கார்ந்து என்னைப் பார்த்துக் கெக்கொலி கொட்டிச் சிரிக்கும் போது உன்னிடம் இறக்கைகள் இல்லை என்று அவை சொல்வதாக நினைத்துக் கொள்வேன். பறப்பதற்குச் சிறகிருக்கின்றன என்பதில் பறவைகள் கொள்ளும் பெருமை கொஞ்சம் அதிகம் தான்.

போன அந்தப் பயணம் கல்விப்புலப்பயணம் தான். நாகர்கோவில் தாண்டித் திரும்பவும் ஒரு சிறு பயணம் செய்யவேண்டும். அந்தக் கல்லூரியில் தமிழ் எம்.பில் படிப்பில் ஏற்கெனவே பதினைந்து பேருக்கு அனுமதி இருந்தது. இன்னும் கூடுதலாகப் பத்துப்பேரை அனுமதிக்க வேண்டும் எனக்கேட்டார்கள். கல்லூரியில் இருக்கும் ஒரு பாடத்தில் கூடுதலாக மாணவர்களைச் சேர்க்க அனுமதிக்கலாமா? அனுமதிப்பதென்றால் எத்தனை பேர்வரை அனுமதிக்கலாம். அதற்கான உள்கட்டுமானங்களும் ஆசிரியர் விருப்பங்களும் இருக்கின்றதா? என்பதைக் கவனித்துப் பல்கலைக் கழகத்திற்குப் பரிந்துரை செய்யப் பல்கலைக்கழகம் ஆய்வுக்குழுவை அனுப்பும். ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் வெவ்வேறு கல்லூரிகளுக்கு யாராவது ஒரு ஆட்சிமன்றக்குழுவின் தலைவர் தலைமையில் அப்படியொரு குழு போகும். அப்படிப் போகும் பயணங்களுக்கு மொத்தமாக ஒன்றோ இரண்டோ வாகனங்களைப் பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்பாடு செய்து அனுப்பிவைக்கும். அதிலேறிப் போய்விட்டு மொத்தமாகத் திரும்பி வந்துவிடுவோம். ஆனால் ஏதாவது ஒரு பாடத்திற்கு மட்டும் - அதுவும் எம்.பில் போன்ற ஒரேயொரு பாடத்திற்கு மட்டுமென்றால் குழுவுக்குப் பதிலாக ஒருநபர் குழுவாகப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களை அனுப்பிவைத்துப் பரிந்துரையைப் பெற்றுக்கொள்ளும். ஒரு நபர் குழுவிற்கு வாகனங்களைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்யாது. பேருந்தில் சென்றுவிட்டுப் பயணப்படியைப் பெற்றுக்கொள்ளலாம்.

இதுபோன்ற ஒரு நபர் குழுவாகப் போகும் பயணத்தை நான் விரும்புவேன். நமது விருப்பப்படி கிளம்பலாம். போன வேலை முடிந்தபின் நமது விருப்பம்போல அங்கு யாரையாவது பார்க்க விரும்பினால் பார்த்துவிட்டு வரலாம். தனியான பயணங்களில் காலைச் சிற்றுண்டிக்கே நாகர்கோவில் அய்யர் மெஸ்களில் இட்லி, வடை, சாம்பார் தேடிச் சாப்பிடலாம். அப்படிப் போன பல சமயங்களில் கே.பி.சாலையில் இருக்கும் காலச்சுவடு அலுவலகத்திற்குச் சென்று வருவதுண்டு. சுந்தரராமசாமியைப் பார்த்துப் பேசிவிட்டு வரலாம். நாகர்கோவிலில் கிடைக்கும் முந்திரிப்பருப்பு, நேந்திரக்காய் சிப்ஸ் போன்றவை எந்தக் கடையில் நல்லதாக இருக்கும் எனப் பார்த்து வாங்கலாம். நாகர்கோவில் போகும்போது வாடிக்கையாக நடப்பன இவையெல்லாம்.

எம்.பில் வகுப்பில் கூடுதலாகப் பத்துப் பேர் சேர்க்கவேண்டுமென்றால் கூடுதலாகப் பத்துப்பேர் உட்காரத்தக்க ஓரிடத்தைக் காட்டுவார்கள். இருக்கைகளும் இருக்கும். ஆனால் அதில்தான் பின்னர் வகுப்பு நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதனை உறுதிசெய்ய முடியாது என்பது ஆய்வுக்குழுவாகச் செல்லும் ஒவ்வொருவருக்கும் தெரியும். எனக்கும் அதில் பெரிய கேள்விகள் இருப்பதில்லை. ஆனால் நான் போகும்போது எம்.பில். பட்டம் ஒருவிதத்தில் ஆய்வுப்பட்டம். அதற்கு உங்கள் துறைக்கென ஒரு சிறப்புப் பாடத்தை அல்லது ஆய்வுப் போக்கைக் கண்டறிந்து வழிகாட்டுங்கள். அதற்கேற்ப நெறியாளர்களை தயார்ப்படுத்துங்கள் என்று சொல்வேன். முடிந்தவரை துறையின் மூத்த பேராசிரியர்கள் இதில் அக்கறை காட்ட வேண்டும் என்பேன். ஆனால் அவர்கள் அதற்குத் தயாராக இருக்க மாட்டார்கள்.

பல்கலைக்கழக மானியக்குழு எம்.பில் படிப்புகளுக்குப் பாடம் நடத்துவதை பணிச்சுமைக் கணக்கில் சேர்த்துக் கொள்வதில்லை. அதனால் நாங்கள் வகுப்பும் எடுக்க மாட்டோம். ஆய்வுக்கு வழிகாட்டவும் மாட்டோம் என்று பிடிவாதம் செய்வார்கள். பணிச்சுமைக்காக வேலை செய்வதோடு தங்கள் முடிந்துவிடுகிறது என்றால், எதற்காகக் கூடுதலாக மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று கேட்டால், இப்போது சேர்ந்திருக்கும் தற்காலிக ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கச் சுயநிதி வகுப்புகள் தான் உதவுகின்றன. தமிழைப் பொருத்தவரையில் எம்.பில் படிப்பு சுயநிதிப்பிரிவில் இருப்பதால், அவர்களைப் பாதுகாக்கவே இந்தப் பாடமும், எண்ணிக்கை உயர்வும் வேண்டும் என்பார்கள். குறைந்தபட்சம் நெறிப்படுத்தும் வேலையையாவது மூத்த ஆசிரியர்கள் செய்ய வேண்டும் என்ற ஆலோசனையைச் சொல்லிவிட்டு வந்துவிடுவேன். அதன் பிறகு அங்கு என்ன நடக்கும் என்பதைக் கண்காணிக்க முடியாது. அரசுப்பணிகளில் இருக்கும் பொறுப்பின்மையில் இது ஒரு வகை என்றால், பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் காட்டும் தான் தோன்றித்தனங்கள் இன்னொரு வகை.


அந்தக் கல்லூரி ஆசிரியர்களோடு நடத்திய உரையாடலும் அவர்கள் காட்டிய விருப்பமின்மையும் எனது திரும்பும் பயணத்தில் வெளிப்பட்டது. ஒன்றரை மணி நேரத்தில் வீடு போய்ச் சேர வேண்டும் என்று உந்தித்தள்ளியது. ஆனால் இப்போது இப்படிச் சொல்லும் மனம் தான் காலையில் ஐந்து மணி நேரப் பயணத்தைத் தேர்வு செய்தது. நாங்குநேரியில் இறங்கித் தேநீர் குடித்துக் கொள்ளலாம் என்று நினைத்த உடனேயே நாகர்கோவில் செல்லும் பேருந்தை விட்டுவிட்டு நாங்குநேரி வரை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்து விட்டேன். அடுத்த இறக்கம் ஆரல்வாய் மொழியில். திரும்பவும் வேறு ஒரு பஸ் ஏறி நாகர்கோவில் போய் இறங்கிய போது மணி பதினொன்று இருக்கும். அப்படியும் ஒரு மணிநேரம் மிச்சமிருந்தது. சேர வேண்டிய இலக்குகளை மட்டுமே முன் நிறுத்திச் செய்யும் பயணங்கள் பற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை. மனம் முழுக்க அடைய வேண்டிய இடத்தையும், சந்திக்க வேண்டிய முகங்களையும், பேச வேண்டிய வார்த்தைகளையும் நிரப்பிக் கொண்டு செய்யும் பயணத்தில் பதித்து வைக்க என்ன கிடைத்து விடும்.? எதுவும் கிடைப்பதில்லை. ஆனால் இன்றைய காலைப் பயணம் அப்படி இருக்கவில்லை.


நாங்குநேரியிலிருந்து கிளம்பும்போதே பேருந்தின் இருக்கைகள் நிரம்பி விட்டன. அடுத்து வரும் ஒவ்வொரு ஊரிலும் ஏறுபவர்கள் நின்று தான் பயணம் செய்ய வேண்டும்.. கிராமங்களிலேயே தங்கிக் கொண்டு பக்கத்திலிருக்கும் நகரங்களில் சென்று கட்டட வேலைகள், கடைகள், ஹோட்டல்கள், பட்டறைகள் எனப் பலவற்றில் எடுபிடி வேலைகள், சில்லறை வேலைகள், சித்தாள் வேலைகள் எனப் பலவித வேலைகளைச் செய்யவும் , சிறு சிறு வியாபாரங்களை மேற்கொள்ளவும் எனக் கிராமத்து மனிதர்கள் நகரத்தை நோக்கி நகரும் காட்சிகளைக் காண விருப்பம் இருந்தால் நகர்ப் பேருந்துகளில் காலைப் பயணங்களை மேற்கொள்ளலாம். இருட்டுக் களைவதற்கு முன்பே உறுமிக் கொண்டு கிராமங்களுக்குள் நுழையும் நகர்ப் பேருந்துகளும் சிற்றுந்துகளும் அவர்களை அள்ளிப் போட்டுக் கொண்டு போய் பக்கத்தில் உள்ள சிறுநகரங்களிலும் நகரங்களிலும் இறக்கி விட்டு விடுகின்றன.

நான் ஓட்டுநரின் இருக்கையிலிருந்து மூன்று வரிசைகள் தள்ளிப் பின்னால் உட்கார்ந்திருந்தேன். அடுத்து அடுத்து என ஒவ்வொரு கிராமத்திலும் மனிதர்களை ஏற்றிக் கொண்டு நிதானமாகப் போய்க் கொண்டிருந்த வண்டியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் இறங்கினார். அவர் இறங்கிய இடத்தைப் பார்த்தால் வீடுகள் இருப்பதாகவோ, பஸ் நிறுத்தம் என்பதாகவோ தெரியவில்லை. அப்புறம் ஏன் நிறுத்த வேண்டும் என்ற கேள்வியுடன் கவனித்த போது அவரது பொறுப்புணர்வு என்னை ஆச்சரியப்பட வைத்தது.

தனது இருக்கையிலிருந்து இறங்கியவர் முன்புறம் சுற்றிச் சென்று படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வந்தவர்களை உள்ளே தள்ளிப் போகும்படி சொல்லி அனுப்பி விட்டு வந்து திரும்பவும் வண்டியெடுத்தார். அடுத்து இரண்டு நிறுத்தங்கள் தாண்டி வண்டி நின்ற போது நிறையப்பேர் இறங்கிக் கொண்டனர். நிறுத்தத்திலிருந்து பிரிந்து செல்லும் சாலை ஒரு தொழில் நிறுவனத்தை நோக்கிப் போனது. அந்த நிறுத்தத்தில் மூன்று சீருடை மாணவிகள் ஏறி எனது இருக்கைக்கு முன்னால் உள்ள இருக்கையில் அமர்ந்தனர். பயணிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு டிக்கெட் தந்தபடி முன்னும் பின்னும் நகர்ந்து கொண்டிருந்த நடத்துநர், அந்த மாணவிகள் நீட்டிய பஸ் பாஸை வாங்கிப் பார்க்காமல் பின்னால் போய்விட்டார். அடுத்த நிறுத்தம் வந்த போது ஏறிய பயணிகளில் பாதிப்பேர் பள்ளிக்கூடம் போகும் மாணவ, மாணவிகளாக இருந்தனர்.

திரும்பவும் தங்கள் அருகே வந்த நடத்துநரிடம் அந்த மாணவிகள் பாஸை நீட்டினர். இந்த முறையும் வாங்கிப் பார்த்துக் கொள்ளவில்லை;போய்விட்டார். அடுத்த நிறுத்தம் தூரத்தில் தெரிந்தது. அதிலும் பள்ளிச் சீருடை ளுடன் மாணாக்கர்கள் நின்று கொண்டிருந்தனர். வந்து நின்றவுடன் ஏறி இடம் பிடித்துவிட வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு இருந்திருக்கும். ஆனால் ஓட்டுநர் வண்டியை நிறுத்தத்திற்கு முன்பே நிறுத்தி விட்டார். நடத்துநர் பயணிகளை அங்கேயே இறங்கிக் கொள்ளும்படி சொல்லப் பலர் இறங்கிக் கொண்டனர். தாங்கள் ஏற வேண்டிய பேருந்து முன்னாலேயே நின்று விட்டதால் மாணாக்கர்கள் ஓடிவந்து ஏற முயன்றனர். ஏற முயன்ற மாணாக்கர்களை இடமில்லை என்று சொல்லி ஏற்றிக் கொள்ள மறுத்தார் நடத்துநர். அவர் தடுப்பதையும் தாண்டி நாலைந்து பேர் முன்புறம் ஏறப் பின்புறம் ஏழெட்டுப் பேர் ஏறிவிட்டனர். இன்னும் ஏறுவதற்கு மாணவர்கள் இருந்த போதும் ஓட்டுநர் வண்டியை நகர்த்தி வேகம் பிடித்து விட்டார்.

திரும்பவும் அடுத்த பேருந்து நிறுத்தம். இந்த நிறுத்தத்தில் வண்டி நிறுத்தத்தைத் தாண்டி வந்து நின்றது. பள்ளிக் கூடப் பைகளுடன் சிறுவர்களும் சிறுமிகளும் ஓடி வந்து ஏறும் போது நடத்துநரின் தடைகள் தொடர்ந்தன. உள்ளே டிக்கட் கேட்டு வாங்கும்படி கூறும் போது இரண்டு வித உணர்வுகளை அவர் வெளிப் படுத்துவது தெளிவாகத் தெரிந்தது.பணம் தரும் பயணிகளிடம் அதை வாங்கிப் போட்டுக் கொண்டு டிக்கெட் தரும் போது அவரது முகத்தில் தளர்வும், பாஸ் நீட்டும் மாணாக்கர்களிடம் ஓர் இறுக்கத்தையும் முகம் வெளிப்படுத்தியது. பஸ்பாஸைக் காட்டி பள்ளிக் கூடங்களுக்குச் செல்லும் அவர்களை மனதிற்குள் திட்டியபடியே நகர்ந்து கொண்டிருந்தார் நடத்துநர். சில நேரங்களில் கோபமான வார்த்தைகளும் கை ஓங்கல்களும் கூட வெளிப்பட்டது.

அந்த இறுக்கமும் முணுமுணுப்பும் தன்னிடம் பிச்சை கேட்கும் ஒருவனிடம் காட்டும் உணர்வாக எனக்குத் தோன்றியது. மாணவர்களுக்காக ஒட்டு மொத்தமாகப் பணத்தைச் செலுத்தி அரசாங்கம் டிக்கெட் வாங்கித் தருகிறது என்பதுதானே இலவசப் பஸ் பாஸ் திட்டத்தின் அர்த்தம். அந்த அரசாங்கத்திற்குச் செலுத்தப்படும் வரிப்பணத்தில் இந்தப் பிள்ளைகளின் பெற்றோர்கள் செலுத்தும் வரியும் ஒரு துளிதானே, அவர்கள் பணியாற்றும் நிறுவனத்தின் முதலாளிகள் கட்டும் வரியில் அவர்களின் பங்கும் இருக்கத் தானே செய்கிறது, அவர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட் களுக்குச் செலுத்தப்படும் உற்பத்தி வரி, சேவை வரி, விற்பனை வரி என எல்லாவற்றிலிருந்தும் எடுத்துத் தானே அரசாங்கம் மானியமாகக் கொடுக்கிறது. அந்தப் பயணம் ஒன்றும் பிச்சைப் பாத்திரம் ஏந்தும் செயலா..?

இதை இந்த அரசுத்துறை சார்ந்த போக்குவரத்து ஊழியர்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு போக்குவரத்தில் லாபம் வரவில்லையென்றாலும் வேறு போக்குவரத்தில் வந்த லாபத்தில் போனஸ் மற்றும் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைப்பதில் நியாயம் இருக்கிறது என்பதைச் சொல்லும் தொழிற்சங்கங்கள், தனது உறுப்பினர்களுக்கு மனித உறவுகள் சார்ந்த நியாயங்களைச் சொல்லாமல் விட்டு விடுவது எப்படி?

அரசாங்க மானியத்தில் வழங்கப்படும் திட்டங்களோடு ‘இலவசம்’ என்ற பெயர் சேர்க்கப் படுவதனாலேயே அத்தகைய திட்டங்களில் பயன் பெறுபவர்களைப் பிச்சைக்காரர்களாகப் பார்க்க வேண்டியதில்லை என்பதை ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அல்லது புரிய வைக்கும்படியான பாடத்திட்டத்தை நடத்துவது தொழிற்சங்கங்களின் வேலையாகக் கொள்ள வேண்டும் என்று கூறத் தோன்றுகிறது. அதன் பாடத் திட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களையும், அதன் சொத்துக்களையும் தங்கள் நிறுவனமாகவும், தங்களின் சொத்துக்களாகவும் கருதிப் பாதுக்காக்க வேண்டும் என்பதும், அவற்றின் நுகர்வோர் ஒவ்வொருவரும் தனது கவனத்துக்குரிய மனிதர்கள் எனக் கருதிச் செயல்பட வேண்டும் என்பதும் சொல்லித் தரப்பட வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்