நல்லனவும் அல்லனவும் ஓரிடத்தென்பதிவ் வுலகு







அண்மையில் மறைந்த எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு இந்து தமிழ் திசையில் தான் எழுதிய அஞ்சலிக்கட்டுரையின் நகலைக் கவி. சுகுமாரன் இணைத்திருந்தார். வாழ்ந்த வாழ்க்கையையும் வாழ்க்கைக்கான நிலவெளியில் சந்தித்த மனிதர்களையும் அவரவர் இருப்பின் வழியாகவே கவனித்து இலக்கியப்பனுவல்களாக மாற்றிய ஆ.மாதவன், புனைகதைப்பரப்பில் குறிப்பிட த்தக்க ஆளுமையாக உருவான பின்னணியையும் அவரது மன அமைப்பை மாற்றிய சமூக, அரசியல் இயக்கங்களின் தாக்கங்களையும் குறிப்பிட்டுக் கவனப்படுத்திய அக்கட்டுரையின் பயணம் நேர்கோடாக இல்லாமல் புனைவின் பயணம்போல முன்னும் பின்னுமாகவும், அங்குமிங்குமாகவும் நகர்ந்து வாசிப்புக் கவனத்தை ஈர்க்கவல்லதாக இருந்தது.

சமகால மனிதர்களை எழுதும் நேரடித்தன்மை கொண்ட ஆ.மாதவனின் எழுத்தைக் கட்டமைத்ததில் தமிழ்நாட்டில் செல்வாக்குச் செலுத்திய திராவிட இயக்க அரசியலோடு, இடதுசாரிக் கலையியல் பார்வைக்கும் பங்குண்டு என்பதைக் குறிப்பான ஆதாரங்களோடு முன்வைத்துவிட்டு, அவரது எழுத்துகளின் நிலவெளியான திருவனந்தபுரத்தை, மரபும் புதுமையும் கொண்ட வெளியாக எழுதினார் என்று சுட்டும்போது, அவரோடு இணை வைத்துப் பேசவேண்டியவர் நீலபத்மநாபன் என்று உள்ளடக்கிப் பேசியுள்ள சுகுமாறன், இவர்களிருவரையும் போல அந்த நகரத்தை மலையாள எழுத்தாளர்கள் கூட எழுதிக் காட்டவில்லை என்கிறார். ஒற்றைக் கதைவெளியில் இயங்கிய ஆ.மாதவனோடு ஒத்துப் பேசத்தக்க மலையாள எழுத்தாளர் பொற்றேகாட் எனச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார். இந்த நினைவாஞ்சலிக்கட்டுரையை வாசிக்கும்போது மறைந்த ஆ.மாதவனுக்குரிய சிறந்த அஞ்சலிக்கட்டுரை என்பதாக மட்டுமல்லாமல், அஞ்சலிக் கட்டுரை எழுத நினைப்பவர்களுக்கு முன்மாதிரிக் கட்டுரையாகவும் நிற்கிறது எனத்தோன்றியது.

கலை இலக்கியம் சார்ந்த ஆளுமைகளின் மரணத்தின்போது எழுதப்படும் அஞ்சலிக் கட்டுரையைத் தர நினைக்கும் இந்துதமிழ் செய்தி பலநேரங்களில் இதுபோன்ற அஞ்சலி அல்லது சிறப்புக்கட்டுரைகளை அந்தந்தத் துறைசார்ந்த ஆளுமைகளிடம் கேட்டுப் பெற்று வெளியிடுகின்றது. சில நேரங்களில் இதழின் ஆசிரியர் குழுவில் இருக்கும் ஒருவரே அஞ்சலிக்கட்டுரைகளை/சிறப்புக் கட்டுரைகளை எழுதிவிடுகின்றனர். அப்படி எழுதி வெளியிடுவதே தவறு எனச் சொல்லமுடியாது. ஆனால் அப்படி வெளியிடும்போது செய்திக்கட்டுரைகளில் இடம்பெறச்செய்யும் பரபரப்புத் தன்மையைக் கொண்டுவர நினைக்காமல் இருக்கவேண்டும் என்பது முக்கியம். பரபரப்புத் தன்மையைப் பலவழிகளில் உருவாக்கலாம். எழுதும் மொழிநடை வழியாக உருவாக்கலாம்; தலைப்பு வைப்பதின் மூலம் உருவாக்கலாம்; முடிக்கும்போது எழுப்பும் கேள்விக்குறி, ஆச்சரியக்குறி போன்றவற்றின் மூலமும் உருவாக்கலாம்; சிலவேளைகளில் சொல்ல நினைத்ததைச் சொல்லாமல் மறைப்பதின் வழியாகவும் உருவாக்கலாம். சொல்ல நினைப்பதற்கான ஆதாரங்கள் இல்லாமல் போகும்போது – குழூஉக்குறிகளையும், மறைபொருள் கொண்டகுறியீட்டுச் சொற்களைப் புகுத்தி எழுதுவதின் மூலமும் அதனைச் செய்யலாம். அப்படியான செய்கையால் பரபரப்பை உண்டாக்கலாம். அதனால் உண்மையைப் பேசமுடியாமல் போகும் வாய்ப்புகளே அதிகம்.

இதற்கான எடுத்துக்காட்டாக இரண்டு வாரங்களுக்கு முன்னால் செல்வ புவியரசன் அவர்கள் கருத்துப் பேழை பக்கத்தில் பேரா. தொ.பரமசிவனுக்கு எழுதிய கட்டுரை அமைந்திருந்தது. அரசியலைப் பேசும் ஆய்வாளர் என்று தலைப்பிட்டு எழுதிய அக்கட்டுரையில் அவர் எவ்வகையான அரசியலைப் பேசினார் என்பதை நோக்கி நகராமல், அவரது செயல்பாடுகளையும் எழுத்துகளையும் மறைபொருள் சொற்களால் விதந்து பேசி நகர்த்தியிருந்தார் கட்டுரையாளர். அவரது எழுத்துகள் மீதும் ஆய்வுகளின் மீதும் வைக்கப்பட்ட விமரிசனங்களைத் தொ.ப.வின் எழுத்துகள், குறிப்பான தகவல்கள் மூலமாக விவாதிக்காமல்/ விளக்காமல் பொதுவான சொற்களால் நிரப்பியிருந்தார். அதன் உச்சநிலையாகக் கடைசிப்பத்தி எழுதியதை எடுத்துக்காட்டலாம்:

ஒரு ஆய்வாளர் தான் சார்ந்திருக்கும் கல்வி நிறுவனத்துக்குள்ளேயே எவ்வளவு போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதற்கும் தொ.ப.வின் பணிக்காலமே ஓர் உதாரணம். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் பதவியைத் துறந்து, விருப்ப ஓய்வு என்னும் முடிவை நோக்கி அவரைத் தள்ளிய அவரது சகாக்களும், அதற்குத் துணை நின்றவர்களும்கூட இன்று பெயர்பெற்ற ஆய்வாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.

இந்தப் பத்தியில் செல்வ புவியரசன் குறிப்பிடுபவர்களின் நானும் ஒருவன். பெயர் பெற்ற ஆய்வாளனா? என்பதை எனது எழுத்துகளை வாசிப்பவர்களே தீர்மானிப்பார்கள். ஆனால் பேராசிரியர் துறைத்தலைவராக இருந்து விருப்ப ஓய்வு பெறும்போது அவரது சகாக்களில் ஒருவனாக நானும் இருந்தேன் என்பதைச் சொல்ல முடியும்.

பல்கலைக்கழக நடைமுறைப்படி -சுழற்சி முறைத் தலைமை நடைமுறைப்படி அவருக்கடுத்து நான் தமிழியல் துறையின் தலைவராகப் பொறுப்பேற்றேன். நான் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முதல் நாள் அவரது விருப்ப ஓய்வு நாளை முடிவுசெய்துகொண்டார். அவரது விருப்ப ஓய்வுக்கு நானோ அல்லது அந்த நேரத்தில் துறையில் அவரோடு பணியாற்றிய முனைவர் ஞா.ஸ்டீபனோ, முனைவர் பே.நடராசனோ காரணமல்ல என்பதைப் பல்கலைக்கழக வளாகத்தில் எவர் ஒருவரிடம் விசாரித்தாலும் சொல்வார்கள். துறையின் தலைவராக இருப்பவர் தரும் நெருக்கடிகளைக் கீழே இருப்பவர்கள் அனுபவிப்பதைத் தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் செல்வ புவியரசன் அப்படியே தலைகீழாக எழுதுகிறார். இப்படியான தகவலை 12 ஆண்டுகளுக்குப் பின்னால் அவர் எங்கிருந்து பெற்றார் என்பது தெரியவில்லை. அதைவிடவும் தவறான ஒன்று நிர்வாகம் நெருக்கடி தந்தது என்பது. இக்குறிப்பில் உண்மை இருக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால் அந்த நேரத்தில் துணைவேந்தராக இருந்த பேரா. சிந்தியா பாண்டியன் தொ.பரமசிவனோடு மிகுந்த நட்பாகவும் மரியாதையோடும் இருந்தவர். பல்கலைக் கழகத்தில் பின்பற்றப்படும் மூத்தோர் வரிசையைக் கடைப்பிடிக்காது ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியைப் பேரா. தொ.ப.வுக்கு வழங்கி அழகு பார்த்தவர். அவரது விருப்ப ஓய்வு விண்ணப்பத்தை உடனடியாக ஏற்காமல் தமிழியல் துறையின் தலைவராகவும் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் தொடருங்கள்; விருப்ப ஓய்வை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார் என்பதைத் துறையின் சகாக்கள் ஒவ்வொருவரும் அறிவர்; பல்கலைக்கழக வளாகத்தின் கல்விப்புலங்களும் நிர்வாகப் பிரிவுகளும் அறியும். இதனைச் சுட்டிக்காட்டித் துறைக்குப் பல தடவை சொற்பொழிவுகளுக்காகவும் ஆய்வுக்கட்டுரைகளுக்காகவும் வந்துள்ளன திறனாய்வாளர் ந.முருகேசபாண்டியன் அவர்களின் குறிப்பை இங்கே தரவிரும்புகிறேன்:

தொ.ப. துறைத்தலைவராக இருந்தபோது, புதிதாக அறிமுகமான விதியின்படி, சுழற்சி முறையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அடுத்த நிலையில் இருக்கிற பேராசிரியர், துறைத்தலைவராகப் பணியாற்ற வேண்டும். அந்த விதி, தொ. ப.விற்குப் பிடிக்கவில்லை. அவரைவிட ஜூனியரான அ.ராமசாமி துறைத்தலைவராகச் செயல்படும்போது, பணியாற்ற விரும்பாமல்தான் தொ.ப. விருப்ப ஓய்வு பெற்றார். இதுதான் நடந்தது

அப்புறம் ஒரு விஷயம். தொ. பரமசிவம் அவர்கள் பல்கலைக்கழக அதிகார வர்க்க நடைமுறைக்கு எதிரானவர். அவர், முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு நெறியாளராக இருப்பதில்கூட ஆர்வமற்றவர். எவ்விதமான முன்மாதிரியையும் பின்பற்றாமல் சுயம்புவாகத் தமிழாய்வில் ஈடுபட்ட நண்பர் தொ. ப. பற்றித் தரப்பட்டுள்ள தகவல், உண்மைக்கு மாறானது.

பேரா. தொ.ப.வின் விருப்ப ஓய்வுக்குப் பின்னால் நெருக்கடிகள் இருந்ததா? இல்லையா? என்பதனை உறுதிசெய்ய வேண்டும் என்றால் தொ.ப.வின் அபிமானிகள் என்று சொல்லிக்கொண்டு பல்கலைக்கழகத்திற்கு வெளியே இருக்கும் நபர்களிடம் மட்டும் கேட்கக் கூடாது. பல்கலைக்கழகத்தில் அவரோடு பணியாற்றியவர்களையே தொடர்பு கொண்டிருக்கவேண்டும். ‘என்னைக் கேட்டிருக்க வேண்டும்’ என்று சொல்ல வரவில்லை. எனக்கும் அவருக்கும் இலக்கியம், ஆய்வு, துறையின் தலைமைப் பொறுப்பைக் கையாளுதல் என்பதில் மாறுபட்ட கருத்தோட்டங்கள் உண்டு. பேரா. “தொ.ப.வின் பேச்சுமரபு சார்ந்த ஆய்வுப்போக்குக்கு மாறான எழுத்துமரபுப் பிடிமானம் என்னுடையது”என்பதை அவரிடமே சொல்லியிருக்கிறேன். உடன் பணியாற்றிய முனைவர் ஞா.ஸ்டீபனிடம் சொல்லியிருக்கிறேன். எழுதவும் செய்திருக்கிறேன்.

நான் மட்டுமல்ல; நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளில் திறமான புலமை கொண்ட ஸ்டீபனும் அவரது ஆய்வு முறைமைகளின் மீதான விமரிசனங்களையும் போதாமைகளையும் என் முன்னாலேயே சொல்லி யிருக்கிறார்; விவாதித்திருக்கிறார். விவாதங்களில் பங்கேற்காமல் பார்வையாளராக மட்டுமே இருந்துவிட்டுச் சிரிப்பவர் முனைவர் பே.நடராசன். நாங்கள் மூவரும் தான் அப்போதைய அவரது சகாக்கள். மூவரில் ஒருவரிடமோ, பல்கலைக்கழக வளாகத்தில் அப்போது உயர் பொறுப்பில் இருந்தவர்களிடமோ விசாரிக்காமல், ‘பல்கலைக்கழக நிர்வாகமும் அவரது சகாக்களும் தான்’ அவரது விருப்ப ஓய்வுக்குக் காரணம் என்பதுபோல (கிசுகிசு பாணியில்) எழுதியிருப்பது அபத்தத்தின் வெளிப்பாடு. பேரா.ஞா.ஸ்டீபன் மட்டுமல்ல, சேவியர் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறையின் பேராசிரியர்களும் அவரது ஆய்வுமுறையியல் மீதான விமரிசனங்களைச் சொல்லியிருக்கிறார்கள். அங்கு பணியாற்றிவிட்டு இப்போது மதுரைப் பல்கலைக்கழக நாட்டார் வழக்காற்றியல் துறையின் தலைவராக இருக்கும் பேரா. தர்மராஜ் அவர்களின் (25-12-2020) முகநூல் குறிப்பு:

தொ. ப. மறைந்தார்.

பாளையங்கோட்டையில் எனது அடுத்த தெருக்காரர். நாங்கள் கீழத்தெரு அவர் மேலத்தெரு. ஆய்வு முறையிலும் அப்படித்தான்.

அவரொரு உதிரித் தகவல்களின் களஞ்சியம். அறியப்படாத, வினோத, அற்புத, கவனம் பெறாத தகவல்களை நம்முன் விரிக்கும் நாடோடி குணத்தைக் கொண்ட பேச்சுக்காரர். உதிரித் தகவல்களுக்காக நா. வானமாமலையையும், பேச்சுக்குணத்திற்காக சி. சு. மணியையும் ஆதர்ஷமாகக் கொண்டவர். பட்டிமன்ற பேச்சு முறையையும் நாட்டுப்புறவியல் முறையியலையும் ஒரு சேரக் கலந்ததே தொ. பரமசிவத்தின் தனித்துவம்.

ஒருவரோடு கொள்ளும் மாறுப்பட்ட கருத்துநிலை, முன் முடிவுகளோடு கூடிய ஆய்வு முறைமையின் சிக்கல் அல்லது போதாமை போன்றவற்றைப் புலம் சார்ந்தவர்களிடம் மட்டுமே விளக்கமுடியும். அதற்கு மாறாக ஒருவரின் அரசியல் சார்புநிலைகளை மையமிட்டு கொண்டாடிக் கொண்டிருப்பவர்களிடம் சொல்லிப் புரிய வைக்க முடியாது. பேரா. தொ.பரமசிவன் அவர்கள், தமிழ்ப்பரப்பில் வெவ்வேறு காரணங்களுக்காக க் கொண்டாடப்படுபவர் என்பதை அவரது மரணத்திற்குப் பின்னான நினைவேந்தல்கள் காட்டுகின்றன. அதற்கான பங்களிப்புகளை அவர் செய்திருக்கிறார் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அதற்காக அவரோடு மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை அவரது தனிப்பட்ட எதிரியாகச் சித்திரிப்பது அறிவுசார்ந்த பார்வை கிடையாது. பல்கலைக்கழகங்கள் போன்ற அறிவுசார் வளாகங்களில் மாறுபட்ட கருத்துடையவர்கள் ஒரு துறையில் இருக்கவேண்டும். அப்படி இருக்கும்போது தான் அந்தத் துறையின் அடையாளம் பன்முகத்தன்மை கொண்டதாக விளங்கும்; வெளிப்படும். மாணவர்களும் ஆய்வாளர்களும் பயனடைவார்கள்

அவரது விருப்ப ஓய்விற்காகத் துறையில் அவரது சகாக்களாக இருந்தவர்களைக் குற்றம் சொல்ல நினைத்த செல்வ புவியரசன் அதனை உறுதிப்படுத்திக் கொள்ள “பேரா. தொ.ப.வின் பேச்சைக் கேட்டு ரசிப்பதற்காக அவரது நாற்காலிக்கு முன்னால் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த பிற துறைசார்ந்த பேராசிரிய நண்பர்களைத் தொடர்புகொண்டு உறுதியாக எழுதியிருக்கலாம். அவர்களில் பலர் ஓய்வு பெற்றுவிட்டாலும், சிலர் இன்னும் பல்கலைக்கழகத்தில் இருக்கிறார்கள்.

பேரா. தொ.ப.வின் ஆய்வு முறைமை, அதன் வழியாக அவர் முன்வைத்த முடிவுகள், அதன் சமூகத்தாக்கம் பற்றிச் செல்வ புவியரசனுக்கு மரியாதையும் ஏற்பும் இருப்பதில் எனக்கு வருத்தமில்லை. ஆதாரங்கள் காட்டி விவாதிக்காத ஆய்வு முறைதான் மேலானது என்று சொல்லும் கருத்துரிமையும் அவருக்கு உண்டு. அதனை ஆய்வாளர்கள் ஏற்கிறார்களா? ஏற்று இன்னும் பல தொ.பரமசிவன்கள் உருவாகப்போகிறார்களா? என்பதைக் காலம் தான் சொல்லமுடியும். அதனோடு அவர் நிறுத்தியிருக்கவேண்டும். அதற்கும் மேலே போய் 12 ஆண்டுகளுக்கு முன்னால் பல்கலைக்கழகத்தைவிட்டு விருப்ப ஓய்வில் சென்றதற்கான காரணங்களை ஊகத்தின் மேல் எழுதுவதைத் தவிர்த்திருக்க வேண்டும். அல்லது அவரது விருப்ப ஓய்வின் பின்னணியில் நெருக்கடிகள் இருந்தன என்பதை ஆதாரங்களோடு சுட்டிக்காட்டி ஒரு செய்திக்கட்டுரையை இந்து தமிழ் செய்தியில் எழுதியிருக்கலாம்.

பின் குறிப்பு

ந.முருகேசபாண்டியன் இதனைச் சுட்டிக்காட்டித் தனது முகநூல் பக்கத்தில் எழுதியதை வாசித்ததால் இந்தக்குறிப்பை உடனடியாக எழுதவில்லை. இதுபோன்ற கட்டுரைகளை இந்து தமிழ் திசை தொடர்ந்து வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காக, இதழின் நடுப்பக்க ஆசிரியர் திரு. சமஸைத் தொடர்புகொண்டு பேச நினைத்தேன். தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை. பெயரிட்டுப் பதிவுசெய்யாத ஒருவரின் தொலைபேசியை எடுத்துப் பேசவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவுமில்லை. நடுப்பக்க ஆசிரியர் குழுவில் இருக்கும் திரு. ராஜன் வழியாகத் தொலைபேசியில் பேசியபின் பதில் ஏதாவது சொல்வார்கள் என்று காத்திருந்தேன்.காத்திருப்பு வீணானது. இனியும் இதுபோன்ற பரபரப்புத்தன்மை நடுப்பக்கக் கட்டுரைகளில் தவிர்க்கப்பட வேண்டும் எனக் கருதுவதால் இப்போது எழுதிவிட்டேன். தவிர்ப்பதும் தொடர்வதும் அவர்கள் விருப்பம்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்