சந்தேகத்தின் பலனை... -சல்மாவின் மறுபக்கம் கதை மீதொரு விவாதம்

ஒரு புனைகதையை விளக்கிச் சொல்வதற்கும் விவாதிப்பதற்கும் விமரிசனம் செய்வதற்குமான முறைமையை அல்லது திறனாய்வுச் சொற்களை உருவாக்கித் தரும் கதை, தீவிர வாசிப்பை விரும்பும் வாசகருக்கு அல்லது விமரிசகருக்கு உற்சாகம் எழுத்தாகத் தோன்றும். இம்மாதக் (மே, 2025) காலச்சுவடுவில் வந்துள்ள சல்மாவின் ‘மறுபக்கம்’ அப்படியொரு உற்சாகத்தைக் கடத்தும் சிறுகதையாக இருக்கிறது. கதையின் முடிவில் கதைசொல்லியின் கூற்றாக அமைந்துள்ள, “ அந்தப் பையனைப் பார்க்க வேண்டும்போலத் தோன்றியது” என்ற சொற்றொடர் வாசிக்கத் தந்த கதை இன்னும் முடியவில்லை;அதன் மறுபக்கம் வேறுவிதமாக விரிக்கப்படக் கூடிய ஒன்று என்ற ஆர்வத்தைக் கடத்திவிட்டு நிற்கிறது. இந்த ஆர்வம் உண்டாகக் காரணம், கதைக்குள் இடம்பெறும் உரையாடல்களும் கதை சொல்லியின் விவரிப்பும் ஒரு விசாரணை மன்றத்தின் நிகழ்வுகளை வாசித்த மனநிலையை உருவாக்குவது என்று சொல்லலாம்.

கதையின் நேர்காட்சிகள் எல்லாம் கதைசொல்லி இருக்கும் ஊரில்/ இடத்தில் நடக்க, விசாரிக்கப்பட வேண்டிய பாத்திரங்கள் இன்னொரு இடத்தில் – சென்னையில் இருக்கிறார்கள். கதையை வாசகர்களுக்குச் சொல்லும் பாத்திரம் தன்னை நீதிபதியின் இடத்தில் நிறுத்திக்கொண்டு தன்னிடம் உதவிகேட்டு வந்த அம்மாவின் வழியாகவே சென்னையில் நடந்திருக்கக் கூடிய நிகழ்வுகளை விவரிக்கிறார். அந்த விவரிப்புச் சொல்முறை அம்மாவின் (கோவிலாம்மா) கோரிக்கைகளை ஒரு வழக்குரையாக முன்வைக்கிறது. வழக்குரையில் பாதிக்கப்பட்ட பாத்திரமாக வருவது கோவிலாம்மாவின் மகள் சரோஜா. சரோஜாவை கதைசொல்லி சந்திக்கவில்லை. அவரது தரப்பு முழுவதும் கைபேசி வழியாகவே நடக்கிறது. அம்மாவின் நேரடி வழக்குரையையும், மகளின் தொலைபேசி உரையாடலையும் வைத்து தீர்ப்பை வழங்குகிறார் கதைசொல்லி. வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பு உண்மையான நிகழ்வுகளின் – துல்லியமான வாதப்பிரதிவாதங்களின் அடிப்படையிலோ, சாட்சியங்களின் வழியாகவோ வழங்கப்பட்ட தீர்ப்பாகத் தோன்றவில்லை. பொதுப்புத்தி சார்ந்த சந்தேகத்தின் பெயரில் வழங்கப்பட்ட தீர்ப்பாகத் தோன்றுகிறது. அந்தப் பொதுப்புத்தி பெண்ணுரிமை, பெண்நிலைவாதச் சார்பு என்ற கருத்தியல் தோன்றிய பின் உருவான புதிய பொதுப்புத்தி. இந்தப் புதிய பொதுப்புத்தி” ஆண்கள் ஏமாற்றுபவர்கள்; பெண்களைக் கொடுமைப்படுத்தக் கூடியவர்கள்; அதனால் பெண்கள் காப்பாற்றப்பட வேண்டியவர்கள்” என்ற நம்பிக்கையின் பெயரில் உருவாகிவரும் ஒன்று. இந்த நம்பிக்கை விசாரிக்கப்பட வேண்டியது என்பதே கதை எழுப்பியுள்ள விவாதம்.

சல்மா எழுதியுள்ள மறுபக்கம், கதைக்குள் நிகழ்வுகளையும் உரையாடல்களையும் வாசகர்களுக்குச் சொல்லும் பாத்திரத்திற்குப் பெயர் இல்லை. கதையை எழுதிய சல்மாவே கதைசொல்லியாக இருந்து ஒவ்வொன்றையும் சொல்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளும் விதமாகச் சில அடையாளங்கள் கதைக்குள் இருக்கின்றன. தன்னிடம் உதவி கேட்டு வரும் பெண்ணுக்கு / குடும்பத்திற்கு உதவி செய்யும் இடத்தில் இருக்கும் - பொறுப்பான இடத்தில் இருக்கும் ஆளுமையின் அடையாளங்கள் அவை. பெண்களின் நலன் சார்ந்த வாரியம் ஒன்றில் பொறுப்பான பதவியில் இருந்தவர் என்ற அவரது தன்னடையாளத்தோடு பொருந்தக் கூடியன. இத்தகைய அடையாளங்களைத் தவிர்த்துவிட்டு எழுதவேண்டும் என எழுத்தாளர்கள் நினைப்பதுண்டு. அப்படி நினைப்பது கட்டாயமில்லை. அந்த அடையாளங்களைத் தவிர்த்துவிட்டு எழுதப்பட்டிருந்தாலும் கதைசொல்லியாக எழுத்தாளரின் சார்புநிலையும் எதிர்மனநிலையும் வெளிப்படவே செய்திருக்கும். அப்படியொரு இடத்தைக் கதையில் எழுதவும் செய்துள்ளார். தன்னிடம் உதவிகேட்டு வந்த அம்மாவின் (கோகிலாம்மா) சொற்களுக்கும், மறுமுனையிலிருந்து பேசும் அந்தம்மாவின் மகள் (சரோஜா) எதையோ மறைக்கின்றன என்ற சந்தேகத்தை கதையின் பாதியிலேயே தந்துவிடுகிறார். " வீட்டில் வைத்துப் பூட்டவில்லை, போனைப்பிடுங்கவில்லை. எனக்கு இது புதிதாக இருந்தது, புதிராகவும் இருந்தது". இந்த வரிகள் கதைசொல்லியின் கூற்றாக எழுதப்பட்டுள்ளது.

தன் மகளைக் காப்பாற்றிவிடும் வாய்ப்புகளைக் கொண்ட ஆளுமையிடம்/ கதை சொல்லியிடம் வழக்குரைப்பதுபோலக் கோகிலாம்மா சொல்லும் இந்தப் பகுதி முன் நிகழ்வைச் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறது.

“டீ ஆத்தி சம்பாதிச்சு காலேஜ் படிக்க வச்சேம்மா. நாலு மாசத்துக்கு முன்னாடி மெட்ராசுல வேலை கிடைச்சுபோன பிள்ளை திரும்பல. ரெண்டு மாசம் கழிஞ்சு ஆட்டோக்காரனைக் கட்டிக்கிட்டேன்னு போன் பண்ணுச்சு. நம்ம சாதி இல்ல, இனி இங்க வராதேனு சொல்லிட்டேன். இப்போ பாருங்க ரெண்டே மாசத்துல இப்டி கதறரா. பெத்த மனசு தாங்கல. அவள உயிரோட பாக்க முடியுமான்னு பயமா இருக்கும்மா.”

இந்தக் கூற்றின் வழியாகக் கோகிலாம்மாவின் மகள் பெற்றோர் சம்மதம் இல்லாமல் சென்னையில் ஒரு ஆட்டோ ஓட்டியைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டுவிட்டார். அந்த ஆண் சாதி அடிப்படையில் இவர்களை விடக் கீழ் நிலையில் இருப்பவர்கள். அதனால் பிள்ளையை ஒதுக்கிவைத்திருந்தார்கள். ஆனால் இப்போது காப்பாற்றி மீட்டெடுக்க விரும்புகிறார்கள். மீட்டெடுக்கும் முயற்சியில் அந்தப் பெற்றோர் ஒன்றை மறைத்து இன்னொன்றைச் சொல்கிறார்கள். அந்தப் பெற்றோர் சொல்வதுபோல மகள் மீது அவளின் கணவன் செலுத்தும் வன்முறையோ, அவனது அம்மா காட்டும் மாமியார் கொடுமையோ உண்மையான காரணம் இல்லை. தங்கள் சமூகத்தகுதிக்குப் பொருந்தாத வர்க்க -சாதிப் பின்னணியில் நடந்த மகளின் பொருந்தாத் திருமணமே உண்மையான காரணம். அவசரப்பட்டுக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்ட மகளைக் குறுகிய காலத்தில் – இரண்டு மாத காலத்தில் பேசிப்பேசித் தங்கள் வசமாக்கி இருக்கிறார்கள். அவனிடமிருந்து பிரிந்து வரவும் ஏற்பாடு செய்துவிட்டார்கள். அவளும் இப்போது மனம் மாறிக் காதல்த்துக் கல்யாணம் செய்துகொண்ட ஆட்டோ ஓட்டுநரிடமிருந்து பிரிந்து வரத்தயாராகிவிட்டால் என்பதுதான் அந்த உண்மை.

இந்த உண்மையைச் சொன்னால், உதவும் நிலையில் இருக்கும் ஆளுமையிடமிருந்து உதவி கிடைக்காமல் போகலாம் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். சாதி/ வர்க்க வேறுபாட்டைக் காரணமாகச் சொன்னால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் ஆளுமை உதவ மாட்டார்; அதற்குப் பதிலாகக் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் என்றால் உதவி கிடைக்கும் என்பதைத் தந்திரமாகச் சொல்லி உதவி கேட்கிறார்கள். அறியாமல் செய்த பிழையால் கணவனின் குடும்பத்தினரின் கொடுமையை அனுபவிக்க நேரிடும் இது போன்ற பெண்களுக்கு உதவும் அரசின் சமூகநலத்துறையும் காவல் துறையும் சமூகப் படிநிலையைக் காரணமாக்கினால் பிரிந்துவிடுவதற்கு உதவாமல் சேர்ந்து வாழவே ஆலோசனை வழங்குவார்கள் என்பதையும் அறிந்து உண்மையை மறைக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவுதல் என்ற அடிப்படையில் அந்தப் பெண்ணைக் கணவனிடமிருந்து பிரித்துப் பெற்றோரிடம் சேர்ப்பதற்கு உதவிய ஆளுமையின் முடிவில் அல்லது கதையின் தீர்ப்பில் அவருக்கே சந்தேகம் வருகிறது. அந்தச் சந்தேகத்தை உறுதிசெய்து வெளிப்படுத்தும் பகுதியாகக் கதையின் கடைசிப்பகுதி அமைந்துள்ளது.

சரோஜாவின் கண்கள் சந்தோஷத்தில் பிரகாசித்தன. விடுதலை உணர்வில் நடை துள்ளலாக மாறிற்று. இருகைவீசிக் காற்றில் மிதந்து செல்வதுபோல நடக்க ஆரம்பித்தவளை யோசனையோடு பார்த்துக்கொண்டிருந்தேன். மனம் நேற்று இருந்ததைப் போல இல்லாமல் கனத்திருந்தது. என்ன செய்திருக்கிறோம் என்பது பற்றிக் குழப்பம் உண்டாகியிருந்தது.

அந்தப் பையனைப் பார்க்க வேண்டும்போலத் தோன்றியது.


இப்படி முடியும் அந்தக் கதையின் கடைசி வரிப்படி ‘அந்தப்பையனை’ பார்த்துப் பேசித்தான் உண்மையைத் தெரிந்துகொள்ள முடியும் என்பதில்லை. தனது கைபேசி அழைப்பை ஏற்று உதவி செய்த காவல் துறை அதிகாரியைக் கொண்டு, இரண்டு பக்கமும் விசாரித்திருந்தாலே உண்மை வெளிப்பட்டிருக்கும். அல்லது அவர்கள் மூலம் அந்தப் பையனின் கைபேசி எண்ணை வாங்கிப் பேசியிருந்தால் கூட அந்தப் பையனின் தரப்பு வாதம் என்ன என்பது புலனாகியிருக்கும். 

இப்படிச் செய்வது காவல் துறை விசாரணையில் நடக்கக்கூடிய ஒன்று. ஆனால் எழுத்தில் அப்படிச் செய்ய வேண்டியதில்லை.  புனைவில் உண்மையை விடவும், புனைவில் தொக்கி நிற்கும் உண்மையே முக்கியம். அதன் மூலம் அந்த உண்மை, தனி நிகழ்வின் உண்மையாக அமையாமல் இதுபோன்ற பல்வேறு நிகழ்வுகளில் மறைக்கப்படும் உண்மையாக இருக்க வாய்ப்புண்டு என்ற சந்தேகத்தைக் கடத்தும். இப்படிக்  கடத்துவதே புனைவின் இயல்பு. புனைவில் அதை எழுதிக்காட்டியதின் மூலம் சல்மா தனது எழுத்தாளர் தன்னிலையை முதன்மையாக்கி இருக்கிறார். கதையைத் தொடங்கும்போது சமூகநல ஆர்வலர் / பணியாளர் என்ற தன்னிலையாக வெளிப்பட்ட சல்மா, கதையின் முடிவில் எழுத்தாளர் என்னும் தன்னிலையை உறுதியாக்கியிருக்கிறார்.

*****

இந்தக் கதையை வாசித்துக்கொண்டிருக்கும்போது இன்னொரு விவாதம் நினைவுக்கு வந்தது. இமையத்தின் சாகித்ய அகாதெமி விருதுபெற்ற ‘செல்லாத பணம்’ நாவலை எழுத்தாளரும் பத்திரிகையாளருமான வாசந்தி திரும்பவும் வாசித்ததாகச் சொல்லித் தனது முகநூல் பக்கத்தில் இந்தக் கேள்விகளை எழுப்பினார். கணினிப் பொறியியல் பட்டம் பெற்ற அந்த நாவலின் மையப்பாத்திரத்தைக் (ரேவதி) குறிப்பிட்டு , "ஒரு பெண் ஒரு சோதா பயலை, ஒரு ஆட்டோ ஓட்டுபவனை , குடிகாரன் , ரவுடி என்று பெயர் வாங்கினவனை பிடிவாதம் பிடித்து திருமணம் செய்து கொள்வாளா ? பிறகு அடி உதை வாங்கிக் கொண்டு தீ மூட்டி இறந்து போவாளா ?அது கல்வியின் குற்றமா அல்லது வளர்ப்பின் குற்றமா ?" எனப் பல கேள்விகளை எழுப்பியிருந்தார். என்றாலும் தனது மனதை உலுக்கிவிட்டது என்றும் சொல்லியிருந்தார். இதற்குப் பின்னூட்டமிட்ட சிலர், காதலுக்குக் கண்ணில்லை என்றும், சிலவகையான முடிவுகளுக்கு எந்தக் காரணமும் இருப்பதில்லை என்பதுபோலச் சொல்லியிருந்தார்கள். 

பொதுவாகக் காதலிக்கும்போது ஆண் – பெண் இருபாலாருக்குமே அவரவர்களின் குடும்பப்பின்னணி, தகுதி, சமூகத்தடைகள் போன்றன நினைவில் இருப்பதில்லை. காதல் மட்டுமே; காதலிப்பவர்களின் மனதும் உடலும் மட்டுமே முன் நின்று இயக்குகிறது என்பது உண்மை. அத்தகைய காதல்கள் திருமணத்தில் முடிந்துவிடும் நிலையில், திருமண உறவை மீறக்கூடாது என்ற மரபான சிந்தனை வழிநடத்தக் குடும்பத்தின் எல்லைக்குள்ளேயே நிற்கின்றார்கள். ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு எல்லாத் துயரங்களையும் பகிர்ந்துகொள்கிறார்கள்; அல்லது ஏற்றுத் துயரத்தோடு காலம் தள்ளுகிறார்கள். இதனை இந்தியக் குடும்ப அமைப்பின் வலிமை என்றும் சொல்லலாம்; அல்லது வன்முறை என்றும் விவாதப்படுத்தலாம்.

இந்தப் போக்கு அண்மைக்காலத்தில் மாறிக் கொண்டிருக்கிறது.ஏதோவொரு அவசரத்தில் – தன்முனைப்பில் ஏற்றுக்கொண்ட திருமண பந்தத்தைத் தொடரவேண்டியதில்லை; வாய்ப்புக் கிடைத்தால் பிரிந்து வந்து புது வாழ்க்கையைத் தொடங்கலாம் என்ற மனநிலை உருவாகியிருக்கிறது. அதன் பின்னணியிலும் பெண் நிலைவாதம் முன்வைத்த மணவிலக்கம் போன்ற சொல்லாடல்கள் இருக்கவே செய்கின்றன. இந்திய சமூகத்தில் நடக்கும் மணவிலக்கத்தின் பின்னாலும் மறைக்கப்படும் உண்மைகள் இருக்கவே செய்யும். இதனையும் சல்மாவின் இந்தக் கதை – மறுபக்கம் – நினைவூட்டவே செய்கிறது. காதல், திருமணம், விலகல், விவாகரத்து போன்ற புதிய சொல்லாடல்களின் பின்னால் இருக்கும் புதிய பொதுப்புத்தியை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்பதைச் சொன்ன வகையில் இந்தக் கதை நமது காலத்தை விசாரித்த கதையாக மாறியிருக்கிறது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆசிரியரும் மாணவர்களும்

• இந்திரா பார்த்தசாரதியோடு ஒரு நேர்காணல்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்