திக்கு விஜயம்- பின்னணியால் அர்த்தங்கள் விரியும் ஒரு சிறுகதை
இந்தியக் குடும்பங்களின் மையவிசை ஆண்கள் என்று நம்பப் படுகிறது. குடும்பத்திற்கு அவனே தலை. அதனால் அவனே குடும்பத்தின் அன்றாடச் செலவுகளுக்கான வருமானத்திற்கு உழைக்க வேண்டியவன் என்பது அந்த நம்பிக்கையின் தொடர்ச்சி. பிள்ளைகளைப் பெற்றுத்தருவது பெண்களின் வேலையாக இருந்தாலும் அவர்களை வளர்த்துப் படிக்கவைத்து ஆளாக்கும் பொறுப்பும் ஆண்களுக்கே இருக்கிறது என்றும் நம்பப்படுகிறது.
ஆண் மையத்தலைமைத்துவக் குடும்பங்கள் பற்றிய நம்பிக்கைகள் சிதையத் தொடங்கிப் பத்தாண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. ஆண்களின் பொறுப்புகளாகச் சொல்லப்பட்ட அனைத்தையும் இப்போது பெண்களே எடுத்துச் செய்கின்றனர். திருமணம் ஆனபின்பு தனக்குக் கணவனாக வந்தவனின் கையாலாகத்தனதையும் பொறுப்பின்மையையும் கண்ட பெண்கள் அதற்காக மூலையில் உட்கார்ந்து அழுதுகொண்டிருப்பதோ, பிறந்து வீட்டுக்குத் திரும்பிப் போய் அழுது புழும்புவதோ, உச்சபட்சமாகத் தற்கொலை செய்துகொள்வதோ, இப்போது செய்தியாக இல்லை. இப்போது வருகின்ற செய்திகளில் அதிகமாக இருப்பது குடும்பத்தின் அன்றாடச் செலவுக்கான வருமானம், அதற்காகப் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து வேலைக்குப் போவது, பிள்ளை வளர்ப்பு, முடிந்தால் கணவனையும் பொறுப்பானவனாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுவது என அனைத்தையும் செய்பவர்களாகப் பெண்கள் இருக்கிறார்கள் என்பதுவே செய்திகளின் சாரம்.
இந்த மாற்றத்தின் பின்னணியில் இரண்டு காரணிகள் இருக்கின்றன. ஒன்று நேர்நிலைத்தன்மை கொண்டது; இன்னொன்று எதிர்நிலையிலானது. பெண்களுக்குக் கிடைத்துள்ள பரவலான கல்வி அறிவும் அதனால் உருவாகியிருக்கும் தன்னம்பிக்கையும் நேர்நிலைக்காரணி. எதிர்நிலைக் காரணியாக இருப்பன அரசே பொறுப்பேற்று நடத்தும் குடிபானக் கடைகளான டாஸ்மாக்கின் பெருக்கத்தால் உருவான குடிப்பழக்கம். நிலையான சொத்து பத்துகள் இல்லாது அன்றாடக் கூலிகளாகவும் உதிரித்தொழிலாளிகளாகவும் இருக்கும் தமிழ்நாட்டுக்குடும்பங்களில் இவ்விரண்டு காரணிகளால் எதிரும்புதிருமாக வினைகள் நிகழ்கின்றன என்பதைப் புள்ளிவிவர ஆய்வுகள் வழியாகத்தான் முன்வைக்கவேண்டும் என்பதில்லை.
******
பரவலான செய்திகளாகவும் பொதுப்புத்தி சார்ந்த பேச்சுகளாகவும் அறியப்படுவனவற்றைப் புனைகதையாக்கும்போது இயல்பண்புவாத எழுத்துமுறை அதற்கான அழகியலாக மாறிவிடுவதைத் தவிர்க்க முடியாது. கார்த்திக் ராமச்சந்திரன் எழுதி, அகழ் இணைய இதழில் வந்துள்ள ' திக்குவிஜயம்' கதை அப்படியானதொரு கதையே. சாத்தூரிலிருந்து பாசஞ்சர் ரயிலில் ஏறிக் கிளம்பி வரும் முருகேசன் என்ற உதிரித் தொழிலாளி, தனது மனைவி மாலா சொன்னபடி ஒரு 'பாய்'(முஸ்லீம்) வீட்டு மாமியிடம் பத்தாயிரம் ரூபாயைக் கடனாகப் பெற்றுக்கொள்வதுதான் கதை. பெற்றுக்கொண்டு இன்னொரு ரயிலேறித் திரும்பிப்போய் மனைவி மாலாவிடம் வாங்கிய பத்தாயிரத்தையும் அப்படியே கொடுத்தான் என்று எழுதியிருந்தால் அது கதையாகாது. ஒருநாளில் நடந்த நிகழ்வு. அந்த நிகழ்வைக் கதையாக்கும் முடிச்சு கதையின் முடிவில் எழுதப்பட்ட திருப்பத்தில் இருக்கிறது. அந்தத் திருப்பம், முழுப்பணத்தையும் பெற்றுக் கொண்டு ரயிலேறாமல், ஏற்கெனவே அவனுக்கு அத்துபடியான ‘குடிகாரன் சந்து’ என அறியப்பட்ட மேலப்பெருமாள் மேஸ்திரி தெருவில் உள்ள ஒரு பாரில் உட்கார்ந்து ,
‘மாலா நா சாகப் போறே; நீ உனக்கு புடிச்சமாதிரி வாழு. உனக்கு நா பிரயோஜனமில்ல; இருந்து உன்னயக் கஷ்டப்படுத்துறதுக்கு நா போய்றேன்’ என அழுதவாறுப் பேசினான். ‘யேய் என்ன ஆச்சு. குடிச்சுகிட்டு இருக்கியா. என்ன புதுசா சாகப் போறேன்னுலாம் பேசுற’.
என்ற உரையாடலை எழுதியதில் இருக்கிறது. இதுவே ஒருநாள் நிகழ்வுக்கு இந்திய ஆண்களின் மனதில் எப்போதும் இருக்கும் கோணத்தை உருவாக்கிப் புனைகதைத் தன்மையை உண்டாக்கியுள்ளது.
மனைவி மாலாவின் உத்தரவை ஏற்று சாத்தூரிலிருந்து மதுரைக்கு வரும் முருகேசன் பயணத்தை விவரிக்கும் எழுத்தாளர், ரயிலில் இருக்கும் மக்கள் கூட்டத்தை விவரிக்கும்போதே இது வழக்கமான கூட்டமல்ல; மதுரையில் நடக்கும் சித்திரைத் திருவிழாவிற்குப் போகும் கூட்டம் எனக் குறிப்பால் உணர்த்துகின்றார். அந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்காரர்கள் மட்டுமல்லாமல் வடமாநிலங்களிலிருந்து வந்துள்ளவர்களும் இருப்பது அவனுக்கு எரிச்சலாகவும் இருக்கிறது. இவர்களின் வருகையால் உள்ளூர் மனிதர்களுக்கு வேலை கிடைப்பதில் – கூலி கிடைப்பதில் தொடர்ச்சியான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன; தான் வேலை பார்த்த இடங்களிலும் கூடச் சிக்கலைச் சந்தித்ததும் நினைவுக்கு வருகிறது.
அந்த விவரணைகளுக்கு ஊடாக முருகேசனின் பொறுப்பற்ற தனத்தையும் குடும்பச் செலவுகளைச் சமாளிக்க அவனது மனைவி மாலா எடுக்கும் நடவடிக்கைகளையும் விவரித்துக் கொண்டே வருகிறார். மதுரையில் இறங்கிக் கடன் தரப்போகும் பாயைத் தொடர்புகொள்ள வேண்டுமென்றால், மொபைலின் டிஸ்பிளே சரிசெய்யப்பட வேண்டும் என்பது நிபந்தனையாக மாறுகிறது.அதற்குக் காத்திருக்கும் நேரத்தில் அவனும் திருவிழா கூட்டத்தில் நுழைந்து தன்னை மறந்து திக்குவிஜயத்தைப் பார்க்கும் பக்தர்களில் ஒருவனாகவும் கூட்டத்தை வேடிக்கை பார்ப்பவர்களில் ஒருவனாகவும் மாறி அலைகின்றான் என விவரிப்பு மாறிமாறி நகர்கிறது. சித்திரைத் திருவிழாவின் திக்குவிஜய நாளில் மதுரையின் டவுன்ஹால் சாலை, மேலமாசி வீதி, திண்டுக்கல் சாலைக் காட்சிகளை விவரித்து எழுதுவதன் மூலம்,கதைக்கு இயற்பண்பியலின் (Naturalistic Aesthetics)அழகியலைக் கூட்டுகின்றார். ஒரு கட்டத்தில் வந்த வேலை நினைவுக்கு வர, ரிப்பேர் செய்யக் கொடுத்த மொபைலைப் பெற்று பாயைத் தொடர்புகொள்ளும்போது தனது வீட்டிற்குச் சென்று பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்கிறார். வீடு இருக்கும் இடத்திற்கான அடையாளங்களையும் சொல்கிறார்.
மின்கம்ப அடையாளத்தைக் கொண்டு வீட்டைக் கண்டு உள்ளே சென்றதும் நடுவயது பெண் ஒருவர் அரைமுக்காட்டுடன் வரவேற்றார். ‘சாத்தூர்காரங்களா?’ என்றாள். முருகேசன், ‘வணக்கம் மாமி’ என்றான். ‘வீட்டுக்காரரு வேலையா போய்ருக்காரு, உங்களுக்குத் தரச்சொல்லிக் காசு வைச்சுட்டுப் போய்ருக்காரு’ என கையில் ஐநூறு ரூபாய் தாள்களை மடக்கிக் கொடுத்தாள். எண்ணிப் பார்த்துவிட்டு ‘பத்தாயிரத்தி ஐநூறு இருக்கு’ என்றான். ‘தெரியலயே, அவரு வச்சுட்டுப் போனத அப்படியேக் குடுக்கச் சொன்னாரு’ என்றாள். ‘நீங்க மாலா கூட ஒன்னா படிச்சீங்களா’ எனக் கேட்டான். ‘நா படிச்சது மதுரையில. எங்க வீட்டுக்காரருதான் சாத்தூரு ஸ்சூல்ல படிச்சாரு’ என்றாள். இவன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. வீட்டிலிருந்துக் கிளம்பினான்.
இந்தப் பத்தியில் கதைக்கான முடிச்சை வெளிப்படையாக எழுதாமல் குறிப்பாகச் சொல்வதன் மூலம் இந்திய ஆண்களின் மனத்திற்குள் அலையும் சந்தேகத்தின் கனல்கள் எழுந்ததைக் காட்டிவிடுகிறார். பத்தாயிரம் கடன் கேட்டவளுக்குப் பத்தாயிரத்தி ஐந்நூறு தந்ததுக்குக் காரணம் என்னவாக இருக்கும்? என்ற கேள்வியோடு, நாற்றிசையும் வெற்றிகொண்ட மீனாட்சி தனது மூன்றாவது முலையை மறைப்பது போல ‘மாலா’ தனது முந்திய காதலை – தன்னோடு படித்த பாயுடன் இருந்த காதலை மறைத்துவிட்டாளே என்று சந்தேகத்தீயில் குமைகின்றான். அதன் தொடர்ச்சி தான் அவனைக் குடிகாரச் சந்து என அழைக்கப்படும் தெருவுக்குள் நுழையச் செய்கிறது. நுழைந்து குடித்துக் கொண்டே மனைவி மாலாவை அழைத்து 'நான் சாகப் போகிறேன்; வீடு திரும்ப மாட்டேன்' என்று சொல்லி அழச்செய்கிறது.
இப்படியெல்லாம் அழக்கூடியவன் இல்லையே எனச் சமாதானம் செய்யும் மாலா, பணம் தொலைந்துவிட்டதா? எனக் கேட்டபோது, அதெல்லாம் இல்லை என்றவன், அவனது சந்தேகத்தையும் தன்னிடம் அவளது காதலை மறைத்து விட்டதையும் வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறேன். அதனைக் கேட்டு மாலா அழுதுகொண்டே, “ பாய் தன்னோடு படித்தவர் இல்லை; அவரது தம்பி தான் என்னோடு படித்தவர். இவர் எனக்கு அண்ணன் மாதிரி என உண்மையைச் சொல்லி அழுகிறாள். அவளது அழுகையை விரும்பியவனாக “முருகேசனுக்கு வெற்றிப் பெற்ற மகிழ்ச்சி. முருகேசனுக்கு இப்போதைக்கு இது போதும் எனப் பட்டது.” என்பதாகக் கதை முடிகிறது.
கதையில் எழுதப்படும் நாளுக்குக் குறிப்பான காலப்பின்னணியைத் தருவதின் மூலம் கதையை வாசிப்பவர்களுக்குக் கூடுதல் அர்த்தங்களையும் விசாரணைகளையும் தர முயன்றுள்ளார். அவர் உருவாக்கியுள்ள குறிப்பான காலப்பின்னணி மதுரை சித்திரை திருவிழாவின் ‘திக்குவிஜய’ நாள். அதுவே கதையின் தலைப்பாகவும் இருக்கிறது. திக்குவிஜய நாளில் நாளில் நடப்பது மீனாட்சி தனது மூன்றாவது முலையை மறைக்கும் நிகழ்வு. அதைக் கதையில் இப்படி எழுதுகிறார்:
கதையில் எழுதப்படும் நாளுக்குக் குறிப்பான காலப்பின்னணியைத் தருவதின் மூலம் கதையை வாசிப்பவர்களுக்குக் கூடுதல் அர்த்தங்களையும் விசாரணைகளையும் தர முயன்றுள்ளார். அவர் உருவாக்கியுள்ள குறிப்பான காலப்பின்னணி மதுரை சித்திரை திருவிழாவின் ‘திக்குவிஜய’ நாள். அதுவே கதையின் தலைப்பாகவும் இருக்கிறது. திக்குவிஜய நாளில் நாளில் நடப்பது மீனாட்சி தனது மூன்றாவது முலையை மறைக்கும் நிகழ்வு. அதைக் கதையில் இப்படி எழுதுகிறார்:
மீனாட்சிக்கு தனி வாகனம். சொக்கனுக்கு தனி வாகனம். இரண்டிலும் ஒரு சிறுமி மீனாட்சியாகவும் ஒரு சிறுவன் சொக்கராகவும் அமர்த்தப்பட்டிருந்தார்கள். மீனாட்சிக்கும் சொக்கனுக்கும் இடையிலான திருவிளையாடல் நிகழ்த்திக் காட்டப்படுகின்றது. மீனாட்சி நாற்திசைகளையும் வெற்றிகொண்ட பின், சொக்கனைக் கண்டவுடன் தன் மூன்றாம் மார்பு மறைந்து அவனைக் காதலால் வீழ்த்துவது மதுரை வீதிகளில் நிகழ்த்தப்படுகிறது.
******
கதை நிகழும் நாளாகச் சித்திரைத் திருவிழாவின் ‘திக்குவிஜயம்’ நாளைத் தெரிவு செய்ததின் மூலம், கதையின் இயற்பண்பியல் அழகியலை விரிவாக எழுதும் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறார். அத்தோடு மீனாட்சி – சொக்கநாதன் திருவிளையாடல் பின்னணியைத் தந்ததின் மூலம், முருகேசன், மாலாமீது கொண்ட சந்தேகத்திற்கு ஒரு தொன்மத் தொடர்ச்சியையும் உண்டாக்கியிருக்கிறார்.
பின் குறிப்பு: 1
கார்த்திக் ராமச்சந்திரனின் புனைவல்லாத கட்டுரை எழுத்துகள் சிலவற்றை முன்பே வாசித்திருக்கிறேன். அநேகமான அவரது முதல் புனைவு எழுத்தாக இந்தக் கதைதான் இருக்கும் என நினைக்கிறேன். வடிவத்திலும் விவரிப்பிலும் சிறப்பாக வந்துள்ள கதையில் ஏராளமான எழுத்துப்பிழைகளும் சொற்றொடர் பிழைகளும் உள்ளன.
பின் குறிப்பு -2
அகழ் இணைய இதழ் மற்றைய இணைய இதழ்களைப் போலக் குறிப்பிட்ட தேதியில் வெளியிடாமல், எழுத்தாளர்களிடமிருந்து கதையோ, கட்டுரையோ, கவிதையோ கிடைத்ததும் அவ்வப்போது பதிவேற்றும் முறையைப் பின்பற்றுகிறது. அதனால் ஆசிரியர் குழுவுக்கு ஒரு சுதந்திரம் இருக்கிறது. ஆனால் அந்தச் சுதந்திரம் தாங்களி பதிவேற்றம் செய்யும் எழுத்துகளில் இருக்கும் பிழைகளைச் சரிசெய்து வெளியிடும் பொறுப்பையும் தட்டிக்கழிக்கும் சுதந்திரமாக இருக்கக் கூடாது.
கருத்துகள்