சுஜாதாவை வாசித்தல்: இரண்டு சிறுகதைகளை முன்வைத்து
கலை இலக்கியங்களின் வெளிப்பாட்டுக்கு நோக்கமொன்று இருக்கவேண்டும் எனச் சொன்னால், கலை கலைக்காக என்பதை நம்புகிறவர்கள் மறுப்பார்கள். கலைக்கு எந்தவிதமான நோக்கமும் தேவையில்லை; கலை எதையும் செய்யாது; மாற்றங்களை நிகழ்த்தாது எனக் கூறி, "எழுத்துக்கோ, கலைக்கோ நோக்கமே தேவையில்லை" எனச் சொல்வதோடு, நோக்கம் வேண்டுமெனச் சொல்பவர்களைக் கலையின் விரோதிகள் என முத்திரை குத்துவதும் உண்டு. ஒரு கலைப்படைப்பு, அது கலையாக - எழுத்தாக இருந்தால் போதும் என்று வாதம் செய்வார்கள். ஆனால் நோக்கமில்லாமல் எந்தக் கலையும், எழுத்தும் இல்லை. ஒரு கலைப்படைப்பை அல்லது எழுத்தை இன்னவகையான எழுத்து எனச் சுட்டிக்காட்டி விவாதிப்பதற்கு உதவுவதோ கலைஞர் அல்லது எழுத்தாளர் தனது உருவாக்கப் படைப்பில் காட்டும் ஆதரவும் மறுப்பும் என்பதான நிலைப்பாடுதான் உதவுகிறது.
எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துகள் எல்லா வடிவத்திலும் ஒருவித விமரிசனப் பார்வையைக் கொண்ட வெளிப்பாட்டுத் தன்மையோடு இருப்பதை வாசித்திருக்கக்கூடும். அந்த விமரிசனப் பார்வை படர்க்கை நிலையில் கதை சொல்லியை - எடுத்துரைக்கும் பாத்திரத்தை நிறுத்தி எழுதிக்காட்டும் விமரிசன நடப்பியல் என்பதுபோலத் தோன்றலாம். ஆனால் அதனை அப்படிச் சொல்லிவிட முடியாது. சுஜாதாவின் புனைகதைகள் பெரும்பாலும் பத்திரிகைகளின் தேவைக்காக எழுதப்பெற்ற தொடர்கதைகளாகவும் சிறுகதைகளாகவுமே இருந்தன. இவ்வகை எழுத்துகள் எழுதுபவரைப் புனைவுக்குள் ஒரு பாத்திரமாகத் தோன்றாமல் தூரமாக இருந்து எடுத்துச் சொல்லும் ஒன்றாக ஆக்கிக் கொள்ளும் எடுத்துரைப்பு முறையிலானது. அதே நேரம் முன்னிலைப் பாத்திரத்தை மட்டுமே சுட்டிக்காட்டு நிகழ்வுகளை நகர்த்தும் தன்மையும் கொண்டவை.
கதையின் மையப்பாத்திரத்தை பொதுவான வெளியில் நிறுத்தாமல் ஒரு நிகழ்வொன்றின் பகுதியாக மாறும் நிகழ்வு வெளிக்குள் நிறுத்திக்காட்டும் புனைவுத் தன்மையை அழகியலாகக் கொண்டது. அப்படி நிறுத்தும்போது நிகழ்வின் மீது ஆதரவு மனநிலையையும் பங்கேற்கும் பாத்திரத்தின் மீது எதிர்நிலை மனப்பான்மையையும் வெளிப்படுத்தும் கூற்றுமுறையாக அது அமையும். இல்லையென்றால் இதன் மறுதலையாகப் பாத்திரத்தின் மீது கரிசனமும் ஆதரவும் வெளிப்பட, நடக்கப்போகும் நிகழ்வின் மீது எதிர்மனநிலையைக் காட்டும் தன்மையில் இருக்கும். ஆனால் விமரிசன நடப்பியல் எதன் மீதும் ஆதரவும் காட்டாது; எதிர்ப்பும் காட்டாது. சுஜாதா அவ்வகை விமரிசனத்தைக் கைக்கொள்ளாமல், முன்னிலைக் கதைசொல்லலை மறுத்து முன்னிறுத்தும் ஒன்றின் மீது எதிர்ப்போ ஆதரவோ காட்டும் தன்மையிலான விமரிசனப் பார்வைக் கைக்கொள்பவராக பெரும்பாலும் வெளிப்பட்டுள்ளார். அதனால் அவரது எழுத்துகளுக்குக் குறிப்பான ஆதரவு அல்லது எதிர்ப்பு என்பது நோக்கமாக இருந்தது எனச் சுட்டிக் காட்டிவிட முடியும்.
இங்கே வாசித்துக் காட்ட எடுத்துக்கொண்ட இரண்டு கதைகளில் ஒன்று பெண்ணை மையப்படுத்திய கதை. அதன் தலைப்பு ஒரு மாதிரிப்பெண்கள். பெண்ணை மையப்படுத்துதல் என்பதைப் பெண்ணியம் பேசும் பெண்ணை மையப்படுத்திய கதையாக மாற்றுவது அந்தக் கதையின் நிகழ்வுகளோடு தொடர்புடைய காலம். அது மார்ச். 8. அதன் மூலம் கதையில் இடம்பெறும் பெண் பெண்ணியம் பேசுகிற பெண்ணாக மாறிக் கொள்கிறாள்.
இன்னொரு கதை ஒரு லட்சம் புத்தகங்கள். இலங்கையில் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட நிகழ்வோடு தொடர்புடைய கதை. அந்தக் கதையில் ஈழ ஆதரவு பேசும் பாத்திரங்கள் இடம்பெறுகின்றன. ஆனால் நேர்நிலைப்பார்வையில் அல்ல என்பதை அந்தப் பாத்திரத்திற்கு இட்டுள்ள பெயரும், நடவடிக்கைகளும் காட்டுகின்றன. இவ்விரண்டிலும் கதைசொல்லியின் சார்பும் எதிர்நிலைப்பாடும் வெளிப்படையாக இருக்கின்றன என்பதை விரிவாக வாசித்துக் காட்டலாம்.
பெண்ணைப் பேசுவதும் பெண்ணியத்தை மறுத்தலும்
பெண்களை மொழிந்தனவும் மொழிவனவும் பற்றிக் கவனிக்க வேண்டுமெனச் சொன்னவர்களின் வேலை 1975 இல் தொடங்கியதில்லை. அதற்கும் அரைநூற்றாண்டுக்கும் முன்பே தொடங்கி, தன்னைப்பற்றியும் தான் பேசப்பட்ட விதம்பற்றியும் பேசிப்பேசி உலகப்பரப்பில் தன் இருப்பு எவ்வாறிருக்கிறது என்பதை உலகத்திற்கு உணர்த்திய நாள் மார்ச் 8, 1975. இந்த நாளைப் பற்றியும் மொழிந்தார்கள்; அந்த நாளுக்குப் பின்னரும் மொழியப்படுகிறாள் பெண்.
பெண்ணை மொழியாத இலக்கியம் ஏது? பாதாதிகேசமாகப் பெண்ணை மொழிந்த கவிதைப் பாரம்பரியம் நம்முடையது. செம்பாதிக்கும் அதிகமாகவே அவளை மொழிந்திருக்கிறது. அவளை உடலாக மட்டுமே தமிழ்க் கவிதை மொழிந்தது என்று சொல்லிவிட முடியாதது. கனன்று எரியும் நெருப்புத் துண்டமாக்கித் தன்முலையைத் திருகியெரிந்த கண்ணகியையும், பசித்துயிர்போக்க அமுதத்தட்டோடு அலைந்த மணிமேகலையையும் மொழிந்த மொழி நமது தமிழ். அத்தமிழில் உலகத்து ஞானமெல்லாம் வந்தபின் உருவான இலக்கிய வடிவம் சிறுகதை. தமிழின் முதல் சிறுகதையான மங்கையர்க்கரசியின் காதல் தொடங்கித் தன்னுணர்வோடு பெண்ணை முன்மொழியும் இலக்கியவடிவாமாக இருக்கிறது சிறுகதை. தமிழ்ச் சிறுகதைகள் பெண்ணை - பெண்ணெனும் உடலை, பெண்ணெனும் கருத்தை, பெண்ணின் மனதை, பெண் வெளியை, பெண்ணின் நினைவை, பெண்ணின் இருப்பை, பெண்ணின் நினைப்பை எவ்வாறெல்லாம் மொழிந்தன எனப்பேசலாம்.
பல்வேறு கதைகளை ஒன்றாக்கித் தொகுத்த ஒரு தொகுப்பில் இந்த இரண்டு கதைகளையும் வாசித்தேன். தொகுப்பின் தலைப்பு: தில்லிச் சிறுகதைகள். (தொகுத்தவர்: முனைவர் ச.சீனிவாசன், 2014, காவ்யா) முதல் கதையினை எழுதியவர் பிரபலமான எழுத்தாளர் சுஜாதா, மனைவி பெயரில் எழுதிய ஆண் எழுத்தாளர். தலைப்பு: பெண்கள் வருஷம்; இரண்டாவது கதையின் தலைப்பு: அவள் ஒருமாதிரி. எழுதியவர்- லட்சுமி ரமணன், கணவர் பெயரைத் தன் பெயரோடு இணைத்துக் கொண்ட பெண் எழுத்தாளர்.
இந்தியத் தலைநகர் தில்லி மாநகரில் நிகழும் இவ்விரு கதைகளிலும் வரும் பெண்கள் இருவரும் தமிழச்சிகள் அல்ல; பஞ்சாபிகள். இருவரையும் உருவாக்கிமொழிந்த கதையாசிரியர்கள் அப்பெண்களைப் பஞ்சாபிகள் என்று சொன்னதற்குத் தனித்துவமான காரணமெதுவும் இருக்கும் என்று தோன்றவில்லை. பேசும் மொழியால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் இருவரும் பெண்கள்.
சுஜாதா உருவாக்கிய பெண்ணின் பெயர் ப்ரியா; திருமதியாகாதவள். லட்சுமிரமணன் முன்மொழியும் பெண்ணின் பெயர் நிஷா: திருமதி (மிஸஸ்) சோப்ரா. திருமதியாகாத பெண்; திருமதியான பெண் என்பதே மொழிதலின் அடையாளங்களைக் கட்டமைக்கும் முதல் கருவியாகிவிடுகின்றன. திருமதியின் இயங்குவெளி குடும்பம்; அதன் பருண்மையான வெளி வீடு. திருமதியாகாதவளின் இயங்குவெளி குடும்பத்திற்கு வெளியே. பருண்மையான வெளியாக ஒன்றுதான் இருக்கும் என்பதில்லை. மாணவியாக இருந்தால் வகுப்பறையாகவும் கல்விநிறுவன வளாகமாகவும் அவள் பயணம் செய்யும் வாகனங்களாகவும் இருக்கலாம். பணிக்குச் செல்பவளாக இருந்தால், வளாகச் சூழல் மாறும்; வாகனங்கள் கூட மாறலாம். இந்த வேறுபாடுகள் வழியாகப் பெண்ணின் சமூக அடையாளம் உருவாக்கப்படுகிறது.
திருமதி நிஷா சோப்ராவை உருவாக்கிய லட்சுமி ரமணன் அவளை ஒரு மனைவியாக உருவாக்கி முன்மொழிகிறார். முன்மொழியும்போதே முதல்வாக்கியமாக - தலைப்பாகச் சொல்வது ‘அவள் ஒருமாதிரி’ என்பது. ஒருமாதிரி என்ற தொடர்பிரயோகம் வழியாக உருவாக்கப்படும் எண்ண ஓட்டம் வாசகர்களின் மனத்திற்குள் இருக்கிறது. அவள் ஒருமாதிரி என்றவுடன் ஆணுக்கு அந்த ஒருமாதிரி உருவாக்கும் எண்ண ஓட்டம் போலவே தான், பெண்ணுக்கும் உருவாகும் என்பதில்லை. ‘ஒருமாதிரி’ என்பது ஆணிடம், இலகுவாகத் தனது இச்சைக்கு அணுகமுடியும் என்ற எண்ணத்தை உருவாக்கலாம். ஆனால் பெண்ணிடம் அதையும் தாண்டி அவளது பலவித குணங்களையும் பற்றிய எண்ணங்களை உருவாக்கலாம். அந்த எண்ண ஓட்டங்களை உருவாக்கித் தரும் லட்சுமி ரமணன், திருமதி நிஷாசோப்ராவின் நடவடிக்கைகளை ’கோபக்காரி’யாக முன்வைக்கிறார். தன் குடும்பத்து உறுப்பினர்களோடு மட்டுமல்லாமல், அண்டை வீட்டாரிடமும், குடியிருப்புவாசிகளிடமும் கூடச் சப்தமாகச் சண்டையிடும் பெண்ணாக இருக்கிறாள். இப்படியிருப்பதற்கு என்ன காரணம்? இதுதான் கதாசிரியர் எழுப்பும் அடிப்படைக்கேள்வி.
நிஷாசோப்ராவின் அண்டைவீட்டுக்காரியான பிரேமா சங்கரனின் பார்வையில் சொல்லப்படும் கதை, குடியிருப்பை விட்டு இன்னொரு வெளிக்கு நகரும்போது காரணத்தைக் காட்டும் முடிச்சை அவிழ்க்கிறது. அந்த வெளி ஒரு சினிமா தியேட்டர். அங்கே நிஷாவின் கணவரின் தோள்மீது இன்னொரு பெண் சாய்ந்துகொண்டும் உரசிக்கொண்டும் இருக்கிறாள். அப்போது நிஷாவின் கதையைப் பார்த்துச் சொல்லும் பிரேமா- சங்கரன் தம்பதிகளின் உரையாடலாகக் கதை விவாதம் நகர்கிறது. அந்த உரையாடலின் மையம் இதோ:
சங்கரன் அவள் கையைக் கிள்ளி “பார்த்தாயா... கட்டினவள் ஒழுங்காக இல்லாமல் போனால், ஆணின் மனம் இப்படிப் பேதலித்துப் போகிறது” என்றான்.“ இவன் இப்படி அலைவதால் தான் அது நிஷாவின் மனதைப் பாதித்து அப்படி நடந்துகொள்ள வைக்கிறது என்கிறேன் நான். அவள் கோபத்தில் கத்துவது, பொருள்களை விட்டெறிவது, எல்லாமே தன் கணவன் தன்னுடையவனாக இல்லையே என்ற ஏக்கத்தினால்தான்” என்றாள் பிரேமா.எது சரி என்பது அவளுக்குப் புரியாத ஒன்றாக இருந்தது
அவள் ஒருமாதிரி என்ற எதிர்மறை மனநிலைத் தலைப்பை வைத்துக் கொண்டு குடும்ப அமைப்பிற்குள் வதைபடும் ஒரு பெண்ணின் மாதிரியைக் காட்டும் லட்சுமிரமணனுக்கு கதைத் தலைப்பை நேர்மறை மனநிலையோடு முடிக்கத் தோன்றியிருக்கிறது. அவள் ஒருமாதிரியாக இருக்க முழுமையான காரணம் அவள் மட்டுமல்ல என்பதை மறைமுகமாகச் சொல்கிறார் கதாசிரியர்.
இதற்கு மாறாக இருப்பது சுஜாதாவின் கதை. சுஜாதா, கதைத்தலைப்பு தொடங்கி கதை நிகழ்வுகளை அடுக்கும் கதைப்போக்கும் அமைந்திருக்கிறது. அக்கதைக்குள் உருவாக்கப்பட்டிருக்கும் ப்ரியா குடும்பவெளிக்கு வெளியே இருக்கும் ஒருபெண்ணின் வகைமாதிரி.ஆண்களின் வெளியாக நம்பப்படும் பணியிடத்தில் ஆணோடு போட்டிபோடும் ஒரு பெண்ணாகப் ப்ரியாவை முன்வைக்கிறார் சுஜாதா. பணிபுரியும் போட்டிக்களத்திற்கு ஏற்கெனவே வந்துவிட்ட பெண்கள் என்ன செய்கிறார்கள்? என்பதை விவரித்துக்காட்டிவிட்டு, இவர்களுக்கென்று -இவர்களின் உரிமைகளுக்கென்று ஒரு தினமும், கொண்டாட்டமும் தேவையா? என்ற கேள்வியை மறைமுகமாக எழுப்ப முனைகிறார்.
கதையில் இடம் பெறுவது இரண்டே பாத்திரங்கள் தான். அனந்தராமன் -ப்ரியா எனப்பெயர் சூட்டப்பட்டுள்ள இருவரும் திருமணமாகாதவர்கள். தொழில்போட்டியில் இருக்கும் இரண்டு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியின் ஊழியர்கள். தனது முதலாளிகளின் வளர்ச்சிக்காக உழைத்துக் கூலி வாங்கிக் கொள்ளும் ஊழியர்கள். கூலிக்கான வேலையைச் செய்வது என்பதற்குள் மனத்தைத் தருவதுபற்றிய யோசனையில் இருப்பவர்கள். பணத்தின் தேவையைத் தொடர்ந்து உருவாக்கும் நிகழ்கால வாழ்க்கையில் மனம் பற்றிய விவாதத்திற்குள் நுழைகிறது கதை.
மனத்தைத் தன்னிருப்பாகத் தக்கவைப்பதா? அல்லது அதன் போக்கில் சூழல் நெருக்கடியில் விட்டுவிடுவதா? என்கிற கேள்வியில் இரண்டுபேரை - ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் நிறுத்துவதன் மூலம் பெண் பற்றிய கருத்துருவைக் கட்டமைக்கிறார் சுஜாதா. ஒரே மாதிரியான சூழலில் இருக்கும் நிலையில் ஆண் தனது மனச்சாட்சிக்குக் கட்டுப்படுகிறார் என்றும், பெண் தன்னைக் காட்டிக் கொள்ளும்பொருட்டு- தன் முனைப்புக்காகத் தனது மனத்தை மட்டுமல்ல, தனது உடலையும்கூடக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளாமல் இருக்கத் தொடங்கிவிடுகிறாள் என்று கதை நகர்கிறது .
தனது போட்டிக் கம்பெனி ஊழியரான அனந்தராமனிடமிருந்து அதன் ரகசியத்தை அறிந்துகொள்ள விரும்பும் ப்ரியா, அவனைத் தொடர்ந்து வீழ்த்த முனைவதே கதையின் நிகழ்வு அடுக்குகள். தனக்கான மனைவியைத் தேர்வுசெய்து குடும்பத்தை உருவாக்கவே அவனுக்குப் பணம் தேவைப்படுகிறது. அதை அறிந்துகொண்டு, பணம் தருவதை முதல்வேலையாக முன்வைக்கிறாள். தயங்கும்போது தனியாக அழைத்துக் கொண்டு போய்ப் பேரம் பேசுகிறாள். ஆயிரம் ரூபாயில் தொடங்கி 5000 வரை பேரம் உயர்கிறது. அதற்கும் அவன் இறங்கிவராதபோது தனியாகச் சந்திக்கலாம்; என் ப்ளாட்டுக்கு நீ வரலாம்; நான் தனியாகத்தான் இருக்கிறேன் என்றெல்லாம் பேசுவதாக அவளது பாத்திரம் வடிவமைக்கப்படுகிறது.
இப்படி வடிவமைத்துக் காட்டுவதின் மூலம் பெண்கள் வருஷத்தில் கதையில் வரும் ப்ரியாவை ‘ஒருமாதிரி’ எனக் கட்டமைத்துவிடுகிறார் சுஜாதா. அவளை ஒருமாதிரியெனக் கட்டமைப்பதன் மூலம் உரிமைகள் கோரும் பெண்கள் எல்லாருமே ’ஒருமாதிரிக்குள்’ அடங்கும் பொதுக்கருத்திற்குள் அடங்கிப்போவார்கள்; அவர்களுக்கென்று எதற்கு ஒரு வருஷம்; ஒரு தினம் என்ற கேள்வியை மௌனமாக முன் மொழிகிறார் சுஜாதா.
முன்மொழியப்படும் பெண்கள் எல்லாம் ஒருமாதிரிதான் என்றால், அது எந்தமாதிரி? அந்த மாதிரிகளை உருவாக்குவதில் ஆண்களுக்குப் பங்கில்லையா? கேள்விகள் மட்டும் இப்போது. பதில்களைத் தொடர்ந்து தேடலாம்.
பாரதி நூற்றாண்டை ஒட்டி ஆனந்த விகடன் அந்தத் தொடரை வெளியிட்டது. பாரதியின் வரிகளை மையப்படுத்திக் கதைகளை எழுதினார்கள் எழுத்தாளர்கள். மாலன் தொடங்கி வைத்த அந்த வரிசை பாலகுமாரன், ஸ்றீவேணுகோபாலன், வண்ணநிலவன், சுஜாதா, ராஜேஷ்குமார் வைரமுத்து என ஏழு பேருடைய கதைகளுடன் நின்று போனது. பாரதி நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக ஆண்டு முழுவதும் ஐம்பத்திரண்டு கதைகளை ஆனந்த விகடன் வெளியிடும் என எதிர்பார்த்தேன். நான் மட்டுமல்ல; என்னைப் போன்ற இலக்கிய மாணவர்களின் ஆசையும் அதுவாக இருந்தது. ஆனால் ஏழு கதைகளை வெளியிட்டதுடன் ஏன் நிறுத்தப் பட்டது என்று தெரியவில்லை. பின்னர் அந்த ஏழு கதைகளும் அதே ஆண்டிலேயே புத்தகப் பண்ணை வெளியீடாக பாரதிநிலையத்தால் வெளியீடப்பெற்றது. தொகுப்பின் தலைப்பு : பாரதி சிறுகதைகள்.
பத்திரிகையில் வந்தபோது வாசித்திருந்தாலும் புத்தகமாக வந்தபோதும் வாங்கி வைத்து அவ்வப்போது வாசித்துப் பார்த்துக் கொள்வேன். ஏழு கதைகளில் இரண்டு கதைகள் எப்போதும் மறக்காத கதைகள் எனச் சொல்வேன். இலங்கைத் தமிழரின் தனிநாட்டுத் தாகம் தீராததன் காரணமாகச் சுஜாதாவின் ஒரு லட்சம் புத்தகங்கள் மறக்காமல் இருக்கிறது என்றால் வண்ணநிலவனின் துன்பக்கேணி நினைவை விட்டு அகழாமல் இருக்கப் பல காரணங்கள் இருக்கின்றன. அக்கதை குறித்துப் பின்னர் எழுதலாம். இப்போது சுஜாதாவின் கதை.
’சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்’ என்ற வரியைத் தனது கதைக்கான அடிக்கருத்தாக சுஜாதா தெரிவு செய்திருந்தார். சுஜாதாவின் கதைப்பின்னணியாக யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட ஆகஸ்ட் கலவரத்தில் அரசின் ஆதரவுடன், அதன் போலீஸ்காரர்களால் நூலகம் சிதைக்கப்பட்டதும், தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரியதான அந்த நூலகத்தின் ஒரு லட்சம் புத்தகங்கள் எரிக்கப் பட்ட நிகழ்வும் இருந்தது. அதை வாசிக்கும் போது சிங்கள அரசின் தமிழ் விரோதம் பளிச்சென வெளிப்படாமல் போகாது. தமிழ் அடையாளத்தின் ஆன்மாவாக இருக்கும் நூலகத்தை எரிப்பது மூலமாக தமிழர்களின் தனி நாடு கோஷத்தை இல்லாமல் ஆக்கி விடலாம் என அந்நாட்டு அரசு கருதியதும் அக்கதைக்குள் விவாதிக்கப் பட்டிருந்தது. அக்கதையை முதலில் வாசிப்பவர்களுக்கு சிங்கள அரசின் தமிழ் விரோதமே முதலில் தோன்றும் என்றாலும், சுஜாதாவின் முதன்மையான நோக்கம் அதுவல்ல என்பதை இன்னொரு முறை வாசிக்கும் போது தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
கதை நடக்கும் வெளி ஒரு கருத்தரங்க மாநாட்டுக் கூடம். கருத்தரங்கத்தின் பிற்பகல் அமர்வு தொடங்குவதற்கு முன்பு கதை அந்த அமர்வு நடந்து கொண்டிருக்கும் போது கதை முடிந்து விடுகிறது. கதையில் பெயர் குறிப்பிடப் படாமல் பல பாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. அவை எதுவும் கதைக்கு முக்கியமில்லை. கதையில் பெயர் குறிப்பிட்டு இடம் பெறும் ஆறேழு பாத்திரங்களும் கூட முக்கியமில்லை. முக்கியமான இரண்டு பாத்திரங்கள் டாக்டர் நல்லுசாமியும் செல்வரத்னமும் மட்டும் தான்.
பாரதி பற்றிய சிறப்புக் கருத்தரங்கில் தலைமை தாங்க வந்துள்ள டாக்டர் நல்லுசாமி. அறியப்பட்ட தமிழறிஞர். பாரதியின் கவிதைகளில் தோய்ந்த புலமையாளர். தமிழ் சார்ந்த மாநாடுகளில் கட்டுரைகள் வாசிப்பதற்காகப் பல நாடுகளுக்கும் சென்று வந்தவர். இந்தக் கருத்தரங்கின் முடிவில் சிறப்புரை ஆற்ற வரும் அமைச்சர் அவரது செயல்பாட்டைப் பார்த்து விட்டு அங்கேயே அவரைப் பாரதி பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தராக ஆக்க உள்ளதாகச் செய்தி அந்த அரங்கில் பரவி உள்ளது. கருத்தரங்கிற்கு வந்த பலரும் அதனை அறிந்து பாராட்டிக் கொண்டிருக் கிறார்கள். அந்த நேரத்தில் தான் அந்த இளைஞன் செல்வரத்னமும் வருகிறான்.
முதலில் அவருக்கு அவனை அடையாளம் தெரியவில்லை என்ற போதிலும், அவர் இலங்கை வந்த போது தனது வீட்டிற்கு வந்தது; விருந்துண்டது; இலங்கையில் இருக்கும் தமிழர்கள் இரண்டாம் தரக்குடிகளாகக் கருதப்படும் நிலை பற்றி உரையாடியது எனப் பழையனவற்றைச் சொன்னபின் நினைவுகள் திரும்பியவராய் அன்புடன் அளவளாவுகிறார். அவனது குடும்பம் பற்றியும்,வீட்டிற்குப் போன போது நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி என்ற பாரதியின் கவிதையைப் பாடலாகப் பாடிய அவனது தங்கச்சியையும் விசாரிக்கிறார். அங்கே நடந்த கலவரம் பற்றி அறியாமல் இருந்த அவருக்கு யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது; இளைஞர்கள் கொல்லப்பட்டது; இளம்பெண்கள் கற்பழிக்கப்பட்டது பற்றிச் சொன்ன அவன், அந்தக் கலவரத்தில் அவன் குடும்பத்தில் அவன் மட்டுமே மிச்சமிருப்பதாகவும், அவன் தங்கை நடுவீதியில் துகிலுரியப்பட்டதையும் ஆவேசத்துடன் சொல்கிறான்.
கேட்டவர் பரிதாபப்பட்டு உங்களுக்கு எந்த வகையிலாவது எனது உதவிகள் தேவையா? எனக் கேட்கிறார். அதற்கு எனது சொந்த சோகத்தை விடவும் தமிழ் மக்களின் துயரமே இங்கு சொல்லப்பட வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் அந்த நிகழ்வுகளைச் சொல்ல விரும்புகிறேன். தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் மீது கொண்டிருக்கும் பற்று உண்மை யானதல்ல; வெறும் பேச்சளவில் தான் அவர்களது பற்று உள்ளது. உண்மையில் தமிழகத் தமிழர்களின் ஈழப்பற்று என்பது சுயநலம் சார்ந்தது; எதிர்பார்ப்புகளுடன் கூடியது. இதையும் அவன் சொல்லப் போவதாகவும், சொல்லி முடித்தபின் தமிழ்நாட்டுத் தமிழர்கள் சொல்லையும் செயலையும் பிரித்து வைத்திருக்கும் விநோதத்தைச் சுட்டிக் காட்டி இந்தக் கருத்தரங்க மலரை தனது பேச்சின் முடிவில் எரிக்கப் போவதாகவும் கூறுகின்றான்.
அவருக்கு அது உவப்பானதாகப் படவில்லை. காரணம் அவரது பேச்சு மட்டுமே அன்று சிறப்பானதாகக் கவனிக்கப்பட வேண்டும் எனக் கருதுகிறார். இடையில் இவன் இப்படிப் பேசி எதையாவது செய்வதால், கருத்தரங்கம் திசை மாறி அமைச்சர் கோபம் கொள்ளக் கூடும். அதனால் தனக்குக் கிடைக்க இருக்கும் துணைவேந்தர் பதவி கூடக் கிடைக்காமல் போகும் வாய்ப் பிருக்கிறது எனக் கருதுகிறார். தனது மென்மையான பேச்சின் வழியாக அதைத் தடுக்கும் விதமாகப் பேசிப் பார்க்கிறார். நடப்பது பாரதிபற்றிய கருத்தரங்கம்; அதனால் அவனைப்பற்றிய கருத்துக்களைப் பேசுவதே சரியாக இருக்கும். இந்த மேடையை உங்கள் ஆவேசத்திற்குரியதாக மாற்றி விட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறார். ஆனால் அவன் பாரதியின் மனிதநேயக் கருத்துக்களை- பிஜித் தீவு மக்களுக்கும், பெல்ஜியத்திற்கும் புதிய ருஷியாவிற்கும் வரவேற்பு சொன்ன சர்வதேசக் கவிஞன். அவன் இருந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்காகக் கதறவே செய்திருப்பான். ஒரு லட்சம் புத்தகங்கள் எரிந்து விட்டது.நாடற்றவர்களாக நிற்கும் ஆறு லட்சம் மனிதர்கள் எங்கே போவார்கள். எனவே இங்கே சொல்வதே சரியானது என உறுதியாகச் சொல்லி விட்டுச் செல்கிறான்.
டாக்டர் இப்போது அதைத் தடுத்தாக வேண்டும் என நினைக்கிறார். மறைமுகமாக அதைத் தடுக்கும் முயற்சியில் இறங்கி வெற்றி அடைகிறார். அவரது மனைவிக்குத் தொலைபேசியில் பேசி, அவளது அண்ணனை வைத்துப் போலீசுக்குப் பேசி,செல்வரத்னம் அவனது உரையை நிகழ்த்தாத வாறு தடுத்து விடுகிறார். அடுத்த நாள் செய்தித்தாளில் டாக்டர் நல்லசாமியை பாரதி விழாக் கூட்டத்தில் துணைவேந்தராக அறிவித்த செய்தி வந்திருக்கிறது. ஆனால் செல்வரத்னத்தின் விசா ரத்து செய்யப்பட்டு உடனடியாகத் திருப்பி அனுப்பப் பட்ட செய்தி வரவில்லை என்பதாகக் கதையை முடித்துள்ளார்.
இந்தக் கதை எழுதப் பட்ட 1982-க்குப் பிறகு ஈழப் போராட்டம் பலவிதமான பரிமாணங்களைத் தாண்டி விட்டது. ஒரு லட்சம் புத்தகங்கள் எரிக்கப் பட்ட இடத்தில் ஒரு லட்சம் மனிதர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். அதற்கும் மேலான எண்ணிக்கையில் நாடற்றவர்களாக - அகதிகளாகத் தமிழர்கள் புலம் பெயர்ந்து அலைந்து கொண்டிருக்கிறார்கள். வழி நடத்திய தலைவர்கள் சோரம் போனார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள். இறுதியாக இரண்டு லட்சம் பேர் கம்பி வேலிக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். என்றாலும் ஈழ ஆதரவுக் கோஷங்கள் இன்னும் வெற்றுக் கோஷங்களாகவே இருக்கின்றன. இலங்கை அரசை எதிர்த்து இங்கே உண்ணாவிரதப் போராட்டங்களும் கண்டனப் பேரணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தீர்மானமான நிலைபாடுகளைச் சொல்லாமல் ஈழத் தமிழர்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளும் பற்றாளர்களும் திரும்பத் திரும்பச் செய்யும் மோசடிகளை இன்னும் இலங்கைத் தமிழர்கள் உணராமல் இருக்கிறார்கள்.முன்னணிப் படையாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் ஈழ ஆதரவாளர்களின் தமிழ்ப் பற்றும், ஈழப் பற்றும் எப்போதும் சுயநலம் சார்ந்ததாகவே இருக்கிறது என்பதை மறைமுகமாகச் சொல்லும் இந்தக் கதை எப்போதும் அதற்குச் சாட்சியாக இருக்கப் போகிறது.
கருத்துகள்