நல்ல சினிமாவாக ஆகத்தவறிய இரண்டு படங்கள்
சினிமாவை வழங்கும் இணையச் செயலிகள் வழியாகக் குற்றம், வழக்கு, துப்பறிதல், தண்டனை என வடிவமைக்கப்படும் மலையாளப் படங்கள் சலிப்பைத் தருகின்றன. அதனால் தமிழ்ப் படங்களின் பக்கம் போகத் தோன்றியது. அடுத்தடுத்து இரண்டு படங்களைப் பார்த்தேன். இதற்கான தூண்டுதலாக முகநூலில் நண்பர்கள் எழுதிய குறிப்புகள் இருந்தன. எழுதியவர்கள் ஏன் அந்தப் படங்களைப் பார்க்கவேண்டும் என்று சொல்லவில்லை என்றாலும் ‘பார்க்கலாம்’ என்று பரிந்துரைத்து ஒதுங்கினார்கள். அதனால் கொஞ்சம் ஆர்வம் தூண்டப்பட்டது. தூண்டப்பட்ட ஆர்வத்தில் முதலில் பார்த்த சினிமா 'பெரிசு' இரண்டாவதாகப் பார்த்தது "ஜெண்டில் வுமன்".
இவ்விரு படங்களும் மலையாளப்படங்கள் உருவாக்கித் தந்துள்ள குற்றம் - ரகசியம் - துப்பறிதல் - விடுவிப்பு என்ற வடிவங்கள் எல்லாக் கதைகளுக்கும் பொருத்தமானதல்ல. ஆனால் தங்களின் திரைக்கதை அமைப்பின் மூலம் மலையாளப்பட இயக்குநர்கள் பார்வையாளர்களைத் திருப்திப்படுத்துகிறார்கள். தமிழ்ப்பட இயக்குநர் அதனைத் தவற விடுகிறார்கள்.
பெரிசு - படம் கடைசி வரைக்கும் எதையும் உடைத்துப் பேசிவிடவே கூடாது; தொடர்ந்து பூடகமாகப் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் என்று தீர்மானித்து, வசனங்களாலேயே நகர்த்தப்பட்ட படம். அதனைச் சினிமா என்று சொல்வதைவிடச் சபா நாடகம் ஒன்றின் திரை வடிவம் என்றுதான் சொல்ல வேண்டும். 1980- களிலும் தொண்ணூறுகளிலும் சென்னையின் சபாக்களில் காத்தாடி ராமமூர்த்தி, எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரன், கிரேஸி மோகன் போன்றவர்களால் இவ்வகை நாடகங்கள் நடத்தப்பெற்றன. நாடகப்பனுவலுக்கான உள்ளொழுங்குகள் எதுவும் இல்லாமல் உரையாடல் வழியாகத் தூண்டப்படும் எள்ளல், அங்கதம், போலச்செய்தல் போன்றவற்றால் நிரப்பப்பட்ட தொகுப்புகள் அவை. ஒவ்வோராண்டும் மார்கழி மாதத்துக் கர்நாடக சங்கீதக்கச்சேரி, பரதநாட்டிய மேடையேற்றங்களோடு இவ்வகைத் துணுக்குத் தோரணங்களும் அப்போது பிரபலம். அவற்றைக் கடுமையாக எதிர்த்த கோமல் சுவாமிநாதன், பூர்ணம் விசுவநாதன் போன்றவர்கள் கதைப்பின்னல் கொண்ட நாடகங்களை மேடையேற்றினார்கள். பரீக்ஷா ஞாநி போன்றவர்கள் நவீன நாடகங்களை நோக்கி நகர்ந்தார்கள் என்பது கடந்த காலம். 30 ஆண்டுகளுக்கு முன்பு மேடையிலிருந்து காணாமல் போன அதே வடிவத்தை இப்போது சிலர் தொடர்களாகவும், சினிமாவாகவும் எடுக்க முயற்சி செய்கிறார்கள். அத்தகைய முயற்சிகளின் எடுத்துக்காட்டாக ‘ஆபீஸ்’ என்ற திரைத்தொடரையும் இந்தப் பெரிசு என்ற சினிமாவையும் சொல்லத் தோன்றுகிறது.
.jpg)
காமத்தைக் கைவிடாதவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றோ, அத்தகையவர்களின் இயல்புகளை ஒழுக்கம் சார்ந்த குற்றவியல் பார்வையில் பார்க்காமல் ஏற்று வாழப்பழக வேண்டுமென்றோ விவாதித்திருக்க முடியும். ஆனால் அதற்கான திரைக்கதையாக்கத்தை உருவாக்கத் தெரியாம, முழுக்கவும் நகைச்சுவை நோக்கத்தில் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மனைவி, துணைவி, வைப்பாட்டி எனப் பல உறவுகள் இருந்தாலும் நீலப்படங்கள் பார்த்துத் தனது ஆசையைத் தீர்த்துக்கொள்ளும் முதியவரின் - பெரிசின்- அடங்காத ஆசையோடு நின்றுபோகும் வாழ்க்கை முடிவு அல்லது மரணம் ஏற்படுத்தும் நடைமுறைச் சிக்கல்களைக் குரூரமான நகைச்சுவை உரையாடல்களால் வளர்த்திருக்கிறார்கள். படத்தில் குறிப்பிடத்தக்க காட்சிகளோ, உணர்வுத்தூண்டல்களோ, நடிப்பின் தீவிரமோ இல்லை. நடித்துள்ளவர்களின் நடிப்புப்பாணி, முற்றிலும் சபா நாடகங்களின் உரையாடல் மொழிதான். எவர் ஒருவரும் உடல்மொழி மூலமும் நடிக்கவேண்டும் என்று நினைக்கவில்லை. நிகழ்வுகளைக் காட்சிக் கோர்வையாகத் தருவது சினிமாவின் மொழி என்பதாக இயக்குநரும் புரிந்துகொள்ளவில்லை. உரையாடல்களில் வழியும் இரட்டை அர்த்தம், வார்த்தை விளையாட்டு, திருட்டுமுழி திகைப்பு போன்றவற்றைப் பார்த்து ரசிப்பவர்கள் ‘பெரிசு’ படத்தைப் பார்த்துப் பொழுதைப் போக்கிக் கொள்ளமுடியும். படம் முடியும்போது ஒரு சின்ன ஆறுதலாகப் பெரிசின் குடும்பத்தினர் அவரது காமவிருப்பங்களை ஒழுக்கம் சார்ந்து ஏற்றுக் கொள்ளத் தயங்கிக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தாமல், அவருக்கு மரணத்திற்குப் பின்பு செய்யவேண்டிய சடங்குகளை எல்லாம் செய்தார்கள் என்று காட்டியிருக்கிறார்கள். அந்தச் சடங்கில் அவரது மரணம் வரை அறியப்படாமல் இருந்த பெண்ணையும் உறவாக ஏற்றுக் கொண்டார்கள் என்று காட்டியிருப்பது கூடுதல் ஆறுதல்.
*****
திரைப்படமாக்களில் பெரிசு படத்திற்கு எதிரான நிலையில் இருப்பது ஜெண்டில் வுமன். நடிப்புக்கலைஞர்களின் ஈடுபாட்டோடு கூடிய நடிப்பு, காட்சி மொழி வழியாக நிகழ்வுகளை நகர்த்துதல், நிகழ்வுகளுக்குப் பொருத்தமான இடம் மற்றும் இசைப் பின்னணி எனத் தீவிரமான தயாரிப்புடன் கூடிய சினிமாவாக எடுக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்ப ரீதியில் பெரிய குறைகள் இல்லையென்று கூடச் சொல்லலாம். ஆனால் சினிமாவுக்கான திரைக்கதையாக்கமும், அதன் வழியாக விவாதிக்கும் கருத்தியல் மீது தெளிவான சிந்தனையும் இல்லாத இயக்குநரின் பிழைகளால் விவாதத்தை தூண்டாத படமாக மாறியிருக்கிறது. ‘ஆண்களை முழுமையாக நம்பலாமா? நம்பக்கூடாதா?’ என்ற ஒருவரி முரண்பாட்டை விவாதப் பொருளாக்க முயன்று தோற்றிருக்கிறார் இயக்குநர்.

குடும்பத்தினர் ஏற்பாடு செய்து மணந்து கொள்ளும் ஒரு ஆணின் குடும்பப்பின்னணி, கடவுள் நம்பிக்கை, வாங்கும் சம்பளம், வீட்டிலிருக்கும்போது நடந்துகொள்ளும் நெருக்கம், அண்மையில் இருக்கும்போது பேசும் சொற்கள் ஆகியவற்றை முழுமையாக நம்பும் மனைவிக்கு,தற்செயலாக ஏற்பட்ட நிகழ்வொன்றின் வழியாகச் சந்தேகம் ஏற்படுகிறது. தனது பாதுகாப்பில் வந்து நேர்காணலில் கலந்து கொள்ள வந்த ஊர்க்காரப்பெண்ணிடம் தவறாக நடக்க நினைத்தது தற்செயல் நிகழ்வல்ல ; கணவனின் திட்டமிட்ட நடவடிக்கை என்பதை அறிந்துகொண்ட நிலையில் மயக்கமாகிக் கிடக்கும் கணவனைக் கொலை செய்து விடுகின்றாள் மனைவி. கொலையை மறைக்கவும் அதிலிருந்து விடுபட்ட வாழவும் நினைக்கும் கிராமத்துப் பெண்ணின் தீர்க்கமான முடிவுகளைப் படம் வரிசைப் படுத்துகிறது. தனக்கு மட்டுமே கணவன் உடைமையாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் மரபான பெண்ணின் மனம் கொலையையும் செய்யும். நம்பி மோசம் போனதின் வெளிப்பாடு அந்தக் கொலை. (கொலையும் செய்வாள் பத்தினி)
மனைவியிடம் பொய்க்காரணம் சொல்லிவிட்டுக் காதலியோடு கோவா போக நினைத்தவன் மனைவியால் கொலை செய்யப்படுகிறான் என்பது படத்தில் உருவாக்கப்பட்டுள்ள முடிச்சு.அந்த முடிச்சுக்குக் கணவனின் தொலைபேசிப் படங்களும் தகவல் பரிமாற்றங்களும் கூடுதல் திருப்பங் ளைத் தருகின்றன.
கணவனின் கைபேசியில் இருக்கும் படங்களின் அடுக்குகளுக்குள் போகும்போது ஏற்கெனவே தொடர்பில் இருக்கும் இன்னொரு பெண்ணின் - காதலின் தொடர்புகள் அறியக்கிடக்கின்றன. அவளோடு நடத்திய தகவல் பரிமாற்றங்களை வாசித்தபின் கணவனைக் கொன்றதன் பேரில் இருந்த குற்றவுணர்வு முழுமையாக நீங்குகிறது.
கொலையை மறைத்துவிட்டு இயல்பாக இருந்துவிட முடியும் என நினைத்து எல்லாவற்றையும் மறைக்கத் தயாராகிறாள். ஆனால் அவனோடு ஏற்கெனவே தொடர்பில் இருந்த இன்னொரு பெண்ணோ இவளுக்கு நேர் எதிரானவள். தன்னைக் காதலித்தவன் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டாளும் தன் மீது அன்பு கொண்டவன். அந்த அன்புக்காகவே அவனது நட்பைத் தொடர விரும்புபவள். தன்னைச் சந்திக்க வருவதாகச் சொன்னவன் குறிப்பிட்ட நாளில் வரவில்லை. அதனால் அவனது மனைவியிடமே வந்து விசாரிக்கிறாள். அவளைத் தெரிந்துகொள்கிறாள். அவளுக்குப் பெண்ணியம் தெரியும்; பிரீடா காலெயைத் தெரியும். அவரது ஓவியங்களால் தனது வீட்டை நிரப்பி வைத்திருப்பவள். இப்படியொரு கிளையைப் படம் உருவாக்கும்போது தீவிரமான விவாதங்களை – பெண்ணியச் சொல்லாடல்களைத் தொட்டுக் காட்சிகளை அமைக்கும்போது ஜெண்டில்வுமன் நவீன சினிமாவாக வடிவம் கொள்ளப்போகிறது என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. ஆனால் அதைச் செய்யாமல் திசை விலகியிருக்கிறது. அந்தத் திசை விலகலைச் செய்வது குற்றம் -மர்மம் – விசாரணை என்ற வடிவத்தினால் உண்டாகிறது.
திருமணம் செய்துகொள்ளாமலேயே காதலுடன் சேர்ந்து வாழ விரும்பும் பெண் – பிரீடா காலேயின் பெண்ணியப் பார்வையை உள்வாங்கிய நவீனப் பெண் தனது பாலியல் ஆசைக்கு உடன்படுவாள் எனத் தப்பான முடிவுடன் செயல்படும் காவல் துறை அதிகாரியைக் கொலை செய்யும்போது முழுமையாகக் குற்றப்புலனாய்வு விடுவிப்பு வகைப் படமாக மாறிவிடுகிறது. கணவனைக் கொலைசெய்த மனைவியும், தனது விருப்பம் இல்லாமல் தனது உடலைப் பாலியல் ஆசைக்குப் பயன்படுத்திவிட முடியும் என நினைத்த காவல் அதிகாரியைக் கொண்ட காதலியும் ஒன்றாக இணைந்து ஆண்களின் துரோகத்தை எதிர்கொள்கிறவர்களாக மாறினார்கள் என முடிகிறது படம்.
திருமணம் செய்துகொள்ளாமலேயே காதலுடன் சேர்ந்து வாழ விரும்பும் பெண் – பிரீடா காலேயின் பெண்ணியப் பார்வையை உள்வாங்கிய நவீனப் பெண் தனது பாலியல் ஆசைக்கு உடன்படுவாள் எனத் தப்பான முடிவுடன் செயல்படும் காவல் துறை அதிகாரியைக் கொலை செய்யும்போது முழுமையாகக் குற்றப்புலனாய்வு விடுவிப்பு வகைப் படமாக மாறிவிடுகிறது. கணவனைக் கொலைசெய்த மனைவியும், தனது விருப்பம் இல்லாமல் தனது உடலைப் பாலியல் ஆசைக்குப் பயன்படுத்திவிட முடியும் என நினைத்த காவல் அதிகாரியைக் கொண்ட காதலியும் ஒன்றாக இணைந்து ஆண்களின் துரோகத்தை எதிர்கொள்கிறவர்களாக மாறினார்கள் என முடிகிறது படம்.
இந்தப் படத்தில் உருவாக்கப்பட்டுள்ள காதலி (லாஸ்லியா ) பாத்திரத்திற்கு பிரீடா காலெவெக் குறியீடுபோலக் காட்டுவது எந்தவிதத்தில் ஏற்கத்தக்கதல்ல. மெக்ஸிகோவின் புரட்சிகர அரசியலோடும் உலகப் பெண்ணியச் சிந்தனைத் தளத்தில் தன்னையே வரைந்து மாதிரியாக்கித் தாக்கம் செலுத்திய பிரீடா காலேவைச் சரியான அர்த்தத்தில் படம் முன்வைக்கவில்லை. அவரது ஓவியக்கலை ஈடுபாடு, அரசியல் தெளிவு, பெண்ணிலைவாதச் சிந்தனைகளை அறிந்த எவரும் இந்தப் படத்தில் பிரீடாவின் படங்கள் இடம் பெற்றிருப்பதின் பொருத்தப்பாட்டை மறுக்கவே செய்வார்கள். ஒருவிதத்தில் அந்தக் காட்சிகள் எல்லாம் ஒருவித இடமாறு தோற்றப்பிழைகள்.
கணவனைக் கொலைசெய்யும்(பூர்ணிமா) பாத்திரத்தில் மலையாள சினிமாவின் தேர்ந்த நடிகையான லிஜோமோள் நடித்துள்ளார். தனக்கு வழங்கப்படும் பாத்திரங்களில் முழு ஈடுபாடு காட்டி நடிக்கும் அவரது திறனைப் பல படங்களில் பார்த்திருக்கிறேன். பெண்ணியச் சிந்தனையும் ஈடுபாடும் கொண்ட பாத்திரத்தில் பிக்பாஸ் வழியாக அறிமுகமான ஈழத்தமிழ்ப் பெண்ணான லாஸ்லியா நடித்துள்ளார். இந்தப் பாத்திரத்திற்கு அவரது உடலும் பாவங்களும் இயல்பாகவே பொருந்துவதாக இருக்கின்றன. பாத்திரத்தை உள்வாங்கி வெளிப்படுத்தவும் முயன்றுள்ளார். இவர்கள் இருவரையும் ஏமாற்றும் கணவன் -காதலன் பாத்திரத்தில் நடித்திருப்பவர் பா.இரஞ்சித்தின் படங்களில் நடித்துள்ள நடிகர் (ஹரிகிருஷ்ணன்) அழுத்தமான வேறுபாடுகள் காட்டவேண்டிய நடிப்பை அவர் தரவில்லை.
இந்திய சமூகத்தில் பரவலான விவாதமாக இருக்கும் ஏற்பாட்டுத் திருமணத்தின் மீது விசாரணையைச் செய்துள்ள படம், ஆண் – பெண் உறவில் புதிய சொல்லாடல்களாக மாறிக் கொண்டிருக்கும் காதலித்த ஆணை/ பெண்ணை மறக்க முடியாதிருக்கும் மனநிலை, திருமணத்திற்குப் பின்னும் தொடரும் காதல்கள், தனியாக இருந்து தனது விருப்பம் போல -சுதந்திரமான வாழ்க்கையை அமைக்க நினைக்கும் பெண்கள் போன்றனவற்றைத் தொட்டுக்காட்டியிருக்கிறது ஜெண்டில் வுமன். ஆனால் இவை எல்லாவற்றிலும் போதாமையோடு காட்சிகளையும் உரையாடல்களையும் கொண்டிருக்கிறது. அதற்கு முழுப்பொறுப்பு இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் மட்டுமே. இது அவரது முதல் படம் எனத் தெரிகிறது. எதிர்காலத்தில் இந்தவிதமான குறைபாடுகளைக் களைந்து தீவிரமான சோதனை முயற்சிகளைச் சரியான முறையில் எடுக்கக் கூடும். அதற்கான எத்தணிப்புகள் படத்தில் உள்ளன.
கருத்துகள்