கூட்டம் - ஒற்றை
கூட்டம்- ஒற்றை . இவ்விரண்டில் எது முந்தியது என்று கேட்டால் ஒற்றையென்னும் தனிமையே முந்தியது எனச் சொல்பவரும் உண்டு. கூட்டமாக இருந்தவர்களே தனியர்களாக மாறினார்கள் என்பவர்களும் உண்டு. ஒன்றுக்குப் பின் உருவானதே இரண்டு, மூன்று, பத்து, நூறு, ஆயிரம், லட்சம், கோடி என்னும் எண்ணுப்பெயர்கள்.
கூட்டத்தின் பகுதியாக இருக்கும்போதே தனியராக
நினைத்துக்கொள்ளவும் விரும்புகிறது மனம். தனிமனிதருக்குள் சமூக மனிதரும், சமூக மனிதராக
இயங்குபவருக்குள் தனிமனிதரும் இருக்கிறார்கள். இது அறிந்த உண்மை. அவரவரளவில் அறிந்த
உண்மை. கவிதை எழுதும் கவிகளும் இந்த உண்மையை அறிந்தவர்களே. அறிந்த உண்மையைச் சொல்லுவது
கவிதையாகுமா? ஆகலாம்; ஆகாமலும் போகலாம். கவிதையாக்க நினைக்கும் கவி, அதனை நேரடியாகச்
சொல்லாமல் இன்னும் சில சங்கதிகளைச் சேர்த்துச் சொல்லும்போது கவிதையாக்கம் நடக்கிறது.
இனி அந்தக் கவிதை:
கூட்டமாய்
இருந்தவர்கள் பிரிந்தார்கள்.
ஒரு
கோடியில் இருக்கும் ஒருவன் உணவை உண்டான் இன்னொருவன்
இன்னொரு
கோடியில் இருக்கும் ஒருவனின் இடத்தைப் பிடித்தான் இன்னொருவன்
சின்னக்கூட்டங்கள்
உண்டாகின
‘ஒற்றையாக
– ஒற்றையாக’ என்றொருவன் குரல் கொடுத்தான்
“
இங்கே சேருங்கள்- இப்படிச் சேருங்கள்” என்றும் ஒருவன் குரல் கொடுத்தான்
குழப்பமின்றிச்
செயல்பட்டார்கள்.
கூட்டமாய்
இருந்தவர்கள் பிரிந்தார்கள் கூட்டமாக ஒற்றையாக
புதுப்புதுக்
குரல்கள் கிளம்ப ஆரம்பித்தன
ஒற்றையாக
இருக்கத் துவங்கியவர் கூட்டமாக இருந்தார்கள் –
கூட்டமாக
இருக்கத்துவங்கியவர் ஒற்றையாக இருந்தார்கள்
எஸ்.வைத்தியநாதன்,
விருட்சம் கவிதைகள், ப.45
இந்தக் கவிதைக்கு
கவி வைத்தியநாதன் வைத்த தலைப்பு: கூட்டமாக
– ஒற்றையாக.
கூட்டம் –ஒருவன் என்ற எதிர்வுகளை முன்னிறுத்தும்
இக்கவிதைக்குள் மூன்று பகுதிகள் உள்ளன. கவி பார்த்தது; கவி கேட்டது; பார்த்ததும் கேட்டதுமான
இருப்பின் மேல் கவியின் எண்ணம் அல்லது கருத்து. அம்மூன்று பகுதிகளை வரிசைப்படுத்திவிடலாம்.
பார்த்தது ஒரு கூட்டம். கேட்டது ஒற்றை- ஒற்றையாக; இங்கே சேருங்கள் – இப்படிச் சேருங்கள்.
கவி பார்த்த கூட்டத்தில் பத்துப்பேர்.. இல்லை
ஐம்பது பேர்.. நூறு, ஆயிரம், லட்சம்.. இருக்கலாம். அதிகமாகவும் இருக்கலாம். குறைவாகவும்
இருக்கலாம். ஆனால் பார்த்தது கூட்டம். கும்பல்.. கும்பலுக்கென்று ஒரு மனோபாவம் உண்டு.
நீங்களும் நானும்கூடக் கும்பல்களை – கூட்டங்களைத்
தினந்தோறும் பார்க்கிறோம்; சந்திக்கிறோம். பேருந்தைப் பிடிக்க அலைமோதுபவர்களாக .. ஆலைச்சங்கொலி
கேட்டு உள்ளே நுழைபவர்களாக ; வெளியேறுபவர்களாக .திரையரங்கில் மௌனம் காப்பவர்களாக ;
விசிலடித்துக் களியாட்டம் செய்பவர்களாக… திருவிழாவில், ஊர்வலத்தில், பேரணியில் ஜபக்கூட்டங்களில்,
காவியுடையுடன், மஞ்சளாடைகளுடன், கருஞ்சட்டையுடன், செஞ்சட்டையுடன், வெள்ளை அங்கிகளுடன்…
மாணாக்கர்களாக.. யுவதிகளாக.. தாய்க்குலமாக
, உடன் பிறப்புகளாக, ரத்தத்தின் ரத்தங்களாக .. ரசிகர் மன்றச் செயல்வீரர்களாக.. தலைவிகளின்/
தலைவர்களின் வருகைக்குத் தவம் இருப்பவர்களாக, பேருரைக்கு ஆரவாரம் செய்பவர்களாக, பிள்ளையார்
சிலைகளுக்குப் பாலூட்டுபவர்களாக, அல்லாஹூ அக்பருக்குத்
தலை கவிழ்பவர்களாக, கட் அவுட்டுகளுக்குக் கற்பூர ஆரத்தி எடுப்பவர்களாக.. ஓட்டுப்பெட்டியில்
வாக்களிக்கின்றவர்களாக..
கும்பல்களுக்குத் தான் எத்தனை எத்தனை அடையாளங்கள்.
ஓரடத்தில் ஓரடையாளம்; இன்னொரு இடத்தில் இன்னொரு அடையாளம்; மற்றொரு இடத்தில் வேறொரு
அடையாளம். மாறக்கூடிய –மாற்றிக்கொள்ளக்கூடிய அடையாளங்கள். கூட்டம் தன்னிச்சையாக – ஒற்றை
ஒற்றையாகக் கூடுவதும் உண்டு. இங்கே சேருங்கள்; இப்படிச் சேருங்கள் என்று அழைக்கப்பட்டுக்
கூட்டப்படுவதும் உண்டு.
உணவு, உறையுள் இரண்டும் ஒவ்வொரு தனிமனிதருக்கும்
தேவையான அடிப்படைகள். தனிமனிதர்கள் தங்களுக்கான உணவைத் தேடுவதாகச் சொல்லி அடுத்தவர்களின்
உணவை எடுத்துக்கொள்கிறார்கள். அடுத்தவர்களின் உணவை எடுத்துத் தனது கூட்டத்திற்கு வழங்குவதன்
மூலம் தலைவர்களாகிறார்கள். இன்னொருவனின் இடத்தைப் பிடுங்கி, தங்கள் வீடுகளாக, ஊர்களாக,
நாடுகளாக மாற்றிக்கொள்கிறார்கள். கூட்டம் சேர்க்கவும், சேர்த்த கூட்டத்தைப் பிரித்துப்
போடவும்தான் எத்தனை முயற்சிகள். எத்தனையெத்தனைப் புதுப்புதுக் கோஷங்கள்; கூச்சல்கள்;
கொள்கைகள். தேசியத்தின் பெயரால், மாநிலத்தின் பெயரால், மதத்தின் பெயரால், இனத்தின்
பெயரால், வர்க்கம், சாதி, பாலெனப் பலப்பலவாய்க் கோஷங்கள். ஆனால் நடப்பது என்ன..? சேர்வதும் பிரிவதுமாய்.. கூட்டமாய்.. தனியராய்..
ஒற்றையாய்.. கூட்டமாய்..
தான் பார்த்த கூட்டத்தைப் பற்றிப் பேசிய கவி,
தான் கேட்ட கோஷங்களை, உள்ளே நுழைத்ததின் மூலம் கவிதையின் தளத்தை விரிவுபடுத்துகிறார்.
ஊர், நாடு,தேசம் என எல்லை கடந்து நடக்கும் சமூக நிகழ்வைப் பேசும் கவிதை அதற்குள் செயல்படும்
அதிகாரப்போட்டியை உள்ளுறையாக்கித் தரும்படி அமைத்துக்கொள்கிறது. அதனை நேர்கூற்றுச்
சொல் மூலம் –
ஒற்றையாக
இருக்கத்துவங்கியவர்கள் கூட்டமாக இருந்தார்கள்
கூட்டமாக இருக்கத்துவங்கியவர்கள்
ஒற்றையாக இருந்தார்கள்
மனிதனின் அகத்திற்குள்ளான வினாக்களாகச் சுருக்கிக்
கொள்கிறது. புறச்சூழலை முன்வைத்து அகத்தை விசாரிக்கும்போது கவிதை உள்ளே உள்ளே பயணிக்கும்
தொனியை உருவாக்கிக் கொள்கிறது.
கருத்துகள்