பயிலரங்கு: பதிவுகளும் படங்களும்


தங்கள் பணிகளும் கருத்துகளும் தொடர்ந்து பேசப்பட வேண்டும் என நினைக்கும் பேராசிரியர்கள் தாங்கள் பணியாற்றிய பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் தங்கள் பெயரில் அறக்கட்டளைகளை நிறுவித் தருகிறார்கள். அப்படி நிறுவப்படும் அறக்கட்டளைகள் தொடர்செயல்பாடுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். சில இடங்களில் பொறுப்பான தலைமைகளும் ஆர்வமிக்க ஆசிரியர்களும் இருக்கும் நிலையில் தொடர்செயல்பாடுகள் உறுதிப்படும். பல பல்கலைக்கழகங்களில் அது சாத்தியப்படாமல் போயுள்ளன.

நவீனத்தமிழ்த் திறனாய்வாளராக விளங்கிய முனைவர் க.பூரணச்சந்திரன் தான் பணியாற்றிய பிஷப் ஹீபர் கல்லூரியில் நிறுவியுள்ள அறக்கட்டளையில் படைப்பிலக்கியச் செயல்பாடுகள் தொடர்பான அரங்குகள் நடைபெற வேண்டுமென ஏற்பாடு செய்துள்ளார். அக்கல்லூரியின் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களோடு பிற கல்லூரி மாணவர்களும் பங்கேற்கும் படைப்பாக்கப் பயிலரங்குகளை நடத்துகிறார்கள். இரண்டு ஆண்டுக் கோவிட் தடைக்காலத்திற்குப் பின் இந்த ஆண்டு விரிவான பயிலரங்காக நடந்தது.

செப்டம்பர் 29,30, அக்டோபர் 1 ஆகிய 3 நாட்கள் நடந்த பயிலரங்கில் முதல் நாள் திரைப்பட இயக்குநர், அம்ஷன்குமார் தான் இயக்கிய படங்களைக் காட்டித் திரைக்கதை ஆக்கம் குறித்து உரையாற்றிச் சென்றிந்தார். கடைசி நிகழ்வாக அரங்கியல் பயிற்சிகளை வழங்கினார் கோவை பூசாகோ கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை ஆசிரியர் ராமராஜ். 

இரண்டாம் நாளிலும் மூன்றாம் நாளிலும் எனது நான்கு நிகழ்வுகள் இருந்தன. நாவல், சிறுகதைகள், கவிதைகள் என ஒவ்வொன்றிலும் நிகழ்காலத்தில் எழுதப்படும் எழுத்துகளின் மீதான எனது பார்வைகளைப் பேசியதோடு இப்போது எழுத நினைக்கும் புதிய எழுத்தாளர்களின் உரிப்பொருள் தேர்வுகள், உத்திகள், சொல்முறைகள் என எடுத்துக்காட்டுக்களோடு கூடிய உரையாடல்களை முன்னெடுத்தேன். நான்காவதாக எனது திரைப்பட ஆய்வுகளின் நோக்கம், விமரிசன முறை, அதன் பயன்கள் என விரிவான சொற்பொழிவும் உரையாடலும் நடைபெற்றது. கவிதை எழுதுவதும், கதையாக்கத்திலும் மட்டுமல்லாது அரசியல் சார்ந்த கருத்தியல் விவாதங்களிலும் கூட மாணாக்கர்களின் பங்கேற்பும் சிறப்பாக இருந்தது. அவர்களது கவிதைகளை வாசித்து விவாதிக்க முடிந்தது. இதுபோன்ற பயிலரங்குகள் புதிய எழுத்தாளர்களை உருவாக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அப்படி உருவான எழுத்தாளர்களை எனக்குத் தெரியும். அவர்களில் சிலர் சொல்லுவார்கள்; பலர் சொல்லிக்கொள்வதில்லை.
==============================================================

மாணாக்கர்களின் பதிவுகள் சில..



பேராசிரியர் ஐயா அ.ராமசாமி அவர்களின் உரை ஒவ்வொன்றும் இக்கால படைப்பு உலகத்துக்கு ஏற்ற வகையில் அமைந்திருந்தது. 1. சமகாலத்தை ஆவணப்படுத்தும் தமிழ் நாவல் என்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்ட வகுப்பில் மாணவர்களுக்கு புரியும் வகையில் நாவல்களின் போக்குகளை சமகாலத்தோடு ஒப்பிட்டு காட்டியது எளிமையாக இருந்தது 2. தமிழ் சிறுகதைகளில் புதிய வெளி களுக்காக மனிதன் அலையும் விதத்தை சிறப்பாக எடுத்துக்காட்டினார். தொல்காப்பியர் காலத்திலேயே நாவல்களுக்கான சிந்தனைகள் முதற்பொருள்,கருப்பொருள் உரிப்பொருள் என்று பாகுபடுத்திக் காட்டியது சிறப்பாக இருந்தது 3. திரைப்பட விமர்சனப் போக்குகள் பற்றி விவாதிக்கும் போது திரைப்படத்தை பார்ப்பதோடு மட்டும் இல்லாமல் அதற்குள் கூறப்பட்டுள்ள செய்திகளை எவ்வாறு விமர்சிக்க வேண்டும் என்பதை சில படங்களை கூறி, அதற்கான விமர்சனப் போக்குகளை செம்மையான முறையில் மாணவர்களோடு கலந்துரையாடி விளக்கினார். மாணவர்கள் ஒவ்வொருவரின் கருத்துக்களையும் தன்னிச்சையாக கேட்டு அதற்கான சரியான பதில்களையும் மாற்று கருத்துக்களையும் அளித்தார். எங்களுக்கு இப்படி ஒரு நல்ல வாய்ப்பை வழங்கிய பிஷப் ஹீபர் கல்லூரியின் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி.

செ.காவியா தமிழாய்வுத்துறை உருமு தனலெட்சுமி கல்லூரி காட்டூர்

************************************
 வணக்கம். பேராசிரியர்களோடு இணைந்து மாணவர்களை விவாதம் செய்ய அனுமதித்த விதம் புதுமையாக இருந்தது. மாணவர்களுடன் நட்புறவுடன் விவாதித்த விதம் அருமை. கவிதை எழுத தெரியாத மாணவர்களையும் கவிதை எழுத வைத்த விதம். திரைப்படம் குறித்த நாங்கள் அறிந்திராத சில கருத்துக்களையும் எளிமையாக ஆர்வமுடன் பங்கேற்க செய்த விதம் நன்றாக அமைந்திருந்தது. நன்றி

மெ பேபிநிஷாந்தினி :தமிழாய்வுத்துறை உருமு தனலட்சுமி கல்லூரி
********

அ.ராமசாமி ஐயா அவர்களுக்கு வணக்கம்.. ஐயா உங்கள் பல்நோக்கு பார்வையை விமர்சன பார்வையை எங்களுக்கும் கற்று கொடுத்தீர்கள். சிறுகதை, நாவல், திரைப்படம் போன்ற பல துறைகள் பற்றியும் தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தீர்கள். இன்றைக்கு தேவையான எழுத்து பற்றியும் நாங்கள் எப்படி எழுத வேண்டும் என்பதையும் கற்று கொண்டோம். திரைப்படத்திற்கு பின்னால் உள்ள செய்திகளையும் அறிந்து கொண்டோம். உங்களிடம் கற்று கொள்ள மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும். நன்றி ஐயா 

இரா.சத்தியா, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்சி.


****************************

 ஐயா அவர்களின் அமர்வுகள் எளிய முறையில் புரியும் வண்ணம் இருந்தது . மற்ற அமர்வுகளை விட எங்கள் அனைவரின் ஈடுபாடும் ஐயா அவர்களின் அமர்வில் அதிகம் இருந்ததாக நான் உணர்ந்தேன் . ஏனெனில் ஐயா அனைவரின் கருத்தையும் எங்களில் ஒருவராகவே உரையாடிக் கேட்டறிந்தார் . நாவல் பற்றிய புரிதலும் , சினிமாவை வேறு எந்த கோணத்தில் எல்லாம் பார்க்கலாம் என்ற புரிதலும் கிடைத்தது . எங்களுக்கு பயிற்சி அளித்த ஐயாவுக்கும் வாய்ப்பளித்த தமிழாய்வு துறைக்கும் மனம் நிறைந்த நன்றி 
ப அல்மாஸ் பானு


**************************************


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்