எழுதுவதும் பேசுவதுமாய்- ரவிக்குமாரின் இரண்டு நூல்களை முன்வைத்து

கண்காணிப்பின் அரசியல்

உரையாடல் தொடர்கிறது

இரண்டு நூல்களும் 1995 இல் விளிம்பு ட்ரஸ்ட்/ விடியல் வெளியீடுகளாக வந்தன. முன்னது ரவிக்குமார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. பின்னது அவர் மொழிபெயர்ப்பு செய்த பேட்டிகளும் எழுத்துகளும் அடங்கிய மொழிபெயர்ப்பு நூல்.

இரண்டு நூல்களின் உள்ளடக்கங்களும் 1995 –க்கு முந்திய ஐந்து ஆண்டுகளில் ரவிக்குமார் ஆசிரியர் குழுவில் இருக்கும் நிறப்பிரிகையிலும் தினமணி, ஊடகம் முன்றில், களம்புதிது, கோடாங்கி போன்ற இதழ்களிலும் அச்சிடப்பெற்றவை. அச்சிடப்பெற்று வாசிக்கப்பட்ட காலங்களிலேயே எதிர்வினைகளையும் விவாதங்களையும் உண்டாக்கிய கட்டுரைகள். உருவான சர்ச்சைகளும் எதிர்வினைகளும் அவரது எழுத்து சார்ந்தன மட்டும் என்று குறுக்கிவிட முடியாதவை. அக்கட்டுரைகள் எழுதிய காலத்திலும் அதற்குப் பின்னரும் ரவிக்குமார் தன்னுடைய அடையாளங்களாக முன்னிறுத்திய எழுத்துசாராத செயல்பாடுகள் சார்ந்தவை.

 எந்தவொரு இயக்கமும் அமைப்பும் சிந்தனைத்தளம், செயல்பாட்டுத்தளம் என்ற இரண்டு தளங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். இவ்விரண்டில் எது முக்கியமானது என்ற கேள்விக்கு அனைவரும் நம்பும் பதில் என்று எதுவும் கிடையாது. ஓர் அமைப்பு அல்லது இயக்கம் தனது செயல்பாட்டு அணியைத் தனியாகவும் சிந்தனைக்குழுவைத் தனியாகவும் நிறுத்தி வைக்கும்பொழுது அவற்றின் வளர்ச்சி திசை திருப்பப்படவும் தேங்கிவிடவும் வாய்ப்புகளுண்டு. தமிழகச்சூழலில் பல்வேறு காலகட்டத்து அனுபவங்களும் கூட.

ரவிக்குமாரின் எழுத்துகள் வெளிவந்த அந்தக் காலகட்டத்திலிருந்தே அவர் தன்னையொரு தனித்த ‘செயலாளி’யாக முன்னிறுத்திக்கொண்டவர்; கொண்டுவருபவர். இடதுசாரிச் செயலாளியாகத் தொடங்கி, அதன் தொடர்ச்சியாக மக்கள் குடியுரிமைகளில் கவனம் செலுத்தியவர். அவற்றின் நீட்சியாகத் தலித் இயக்கச் செயல்பாடுகளிலும் தன்னை மையப்படுத்தி முன்னிறுத்தாமல் செயல்பட வேண்டுமென –அணிகளின் பின்னணியில் ஒருவித கிரியா ஊக்கியாக மட்டுமே செயல்பட வேண்டுமென நிலைபாட்டுடன் வெளிப்பட்டவர்.இத்தகைய நிலைபாடு மேற்கொள்ளுதலில் பொறுப்பேற்றுக்கொள்ளும் அவசியம் குறைவு என்று கூறலாம். அதுவும் ஒரு காரணம் என்ற போதிலும் அவருக்குள் இருக்கின்ற இன்னொரு பரிமாணமான சிந்தனைத்தளமே அவரை அத்தகையதொரு நிர்ப்பந்தத்திற்குள்ளாக்குகிறது என்று கூறலாம்.

ரவிக்குமாரின் இவ்விரு பரிமாணங்களையும் புரிந்துகொள்வது என்பது அவரது இரண்டு நூல்களின் உள்ளடக்கங்களை விளங்கிக் கொள்வதற்கான முதல்படி. தொடர்ச்சிகளற்ற கட்டுரைகளின் தொகுப்பாக முதல்வாசிப்பில் தெரியவரும் ‘கண்காணிப்பின் அரசியல்’ வெறும் வாசகனுக்கு அயர்ச்சியையும், தொடர்ந்த வாசிப்பின் மீது தடைகளையும் உண்டாக்கிவிடக்கூடிய இயல்புகொண்ட து. ஊடகங்கள், அறிவுப்பரவல், தேர்தல் முறை, சோசலிசக்கட்டுமானங்கள் பனுவல்களை வாசித்தல் என விரியும் அவரது களன்களில் பருண்மையான தொடர்ச்சியை அல்லது ஒருங்கிணைப்பைத் தேடுவது வியர்த்தமான முயற்சியே. செயலாளியான ரவிக்குமாரிடம், இடதுசாரி இயக்க ஈடுபாடு, மக்கள் உரிமைகளின்பால் கவனம், தலித் அமைப்புகளின் செயல்பாடுகளின் பின்னணியில் பங்கெடுப்பது என்ற தாவல்களில் தொடர்பறாத நிலை இருப்பதுபோல இக்கட்டுரைகளின் இடையேயும் நுண்மையான ஒரு தொடர்ச்சியை வாசகன் புரிந்துகொள்ளமுடியும். அத்தொடர்ச்சியை உண்டாக்குவதாக ‘அதிகாரத்தின் கண்காணிப்பு’ இருக்கிறது.

ரவிக்குமாரின் எழுத்துகள் நம்கால ஜனநாயக அமைப்பை, இந்திய சமுதாயத்தின் பிடிமானமான சாதி அமைப்பின் நீட்சியாகக் கருதுகின்றன. சமகால இந்தியாவின் அதிகார மையங்கள் அரசு சார்ந்தும், மதம் சார்ந்தும், கல்வி நிலையங்கள் சார்ந்தும், ஊடக வலைப்பின்னல்கள் சார்ந்தும், தனித்தனியான புள்ளிகளைக் கொண்டிருந்தாலும் அவை உச்சரிக்கும் ஒரு வார்த்தை ஜனநாயகம் என்பதாக இருக்கிறது. இந்த ஜனநாயகம், வாக்களிக்கும் உரிமை மூலமாக மக்களின் கண்காணிப்புகள் இருப்பதாக நம்பப்படும் ஒரு அமைப்பு. ஆனால் ‘ஜனநாயகம்’ தனது அதிகார மையங்களைப் பிரித்து வைத்துள்ளதன் மூலம், கண்காணிப்பின் கண்ணிகளை விரிவாக்கியுள்ளது என்பதை ரவிக்குமாரிகள் கட்டுரைகள் பலவும் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்தியாவின் சாதீயமுறையின் படிநிலைகளில் தங்கியிருந்த கண்காணிப்பின் நீட்சியே இவை என்றுகூடச் சொல்லலாம். மனுவும் அவனது உரையாசிரியர்களும் விளக்கவுரையாளர்களும் சாதிய முறையை- அதன் அடையாளங்களை நிராகரிக்க முடியாத ஒன்றாக ஆக்கி வைத்துள்ளனர். சில நேரங்களில்  சில சாதிகள் ஒன்றிணைந்து பெரிய சாதியாகக் காட்டுவதும், சில நேரங்களில் நுட்பமான வேறுபாடுகளைக் காட்டிச் சிறிய குழுவாக அடையாளப்படுத்திக் கொள்வதும்கூட அரசியல் கண்காணிப்பின் இறுக்கத்தின் விளைவுகளே. படிநிலைகளை உண்டாக்கியதன்  மூலம் கண்காணிக்கப்படும் சமூகமாக மாறிய, இந்திய சமூகம், இன்று ஜனநாயக அரசியல் மூலம் – அதிகாரப்பரவல் மூலம் கண்காணிக்கப்படுகிறது. சாதி அமைப்பில் நிலவிய வன்முறையின் வடிவங்கள் வேறுவிதங்களில் இன்றும் தொடர்கின்றன.

ரவிக்குமாரின் கட்டுரைகளில் சில கண்காணிக்கப்படும் முறையை விவாதிக்கின்றன . வீடு,தெரு, நகரம், வதந்திகளைப் பரப்புவோர், தேர்தல் விவாதத்துக்கான குறிப்புகள் போன்றன அத்தகையன. இன்னும் சில கட்டுரைகள் கண்காணிப்பையும் வன்முறையையும் எதிர்கொள்ளும் குழுக்களின்/ தனிநபர்களின் நிலைமையை – அவர்களுக்குள் ஏற்படும் முரண்பாடுகளின் தன்மையைப் பற்றிப் பேசுகின்றன. அதிமனிதர்களும் குப்பைக்கூளங்களும், போலீசும் தலித்துகளும், ரஜினியின் காட்சி அரசியல், பெரியார் –தலித் மக்களுக்குச் செய்தது என்ன? கறுப்பர் நாடகங்களும் தலித் நாடகங்களும் முதலான கட்டுரைகள் அத்தகையன. இன்னும் சில கட்டுரைகள் இவற்றைப் புரிந்துகொண்ட நிலையில் அவற்றை ஒருவித எள்ளலோடு பார்த்து ரசிக்கின்றன. அரசும் தொடர்பு சாதனங்களும், நாக் –அவுட், நோரா கிரகத்து ஆண்களும் பூவுலகத்து அடிமைப்பெண்களும் முதலான கட்டுரைகள் அத்தகையன. இப்படியெல்லாம் வகைப்படுத்திக் கொள்ளாமலேயே கூட அவற்றின் அடிநாதமாக அதிகாரத்தின் கண்காணிப்பு பற்றிய பிரக்ஞை வெளிப்படுவதை நாம் உணரமுடியும்.

இன்னொரு நூலான ‘உரையாடல் தொடர்கிறது’ என்பதுவுங்கூட கண்காணிப்பு அரசியலின் இன்னொரு நீட்சியே. அமைப்பு, அமைப்பின் வலிமை, அமைப்பின் தேவை ஆகியனவற்றை வலியுறுத்தி வந்த மேற்கத்திய நவீனத்துவ சிந்தனை, அமைப்புகளின் மீதான விசாரணைகளைத் தொடுக்கும் அடுத்த கட்டத்திற்குள் நுழைந்துவிட்டது. பின் –நவீனத்துவம், பின் – அமைப்பியல் சார்ந்த மேற்கத்திய நவீனத்துவச் சிந்தனை, அமைப்புகளின் மீதான விசாரணைகளைத் தொடுக்கும் அடுத்த அடுத்த கட்டத்திற்குள் நுழைந்துவிட்டது. பின் நவீனத்துவம், பின் அமைப்பியல் சார்ந்த மேற்கத்தியச் சிந்தனையாளர்கள் அமைப்பை விளங்கிக் கொள்ள முயல்கிறார்கள் என்றாலும், நவீனத்துவ சிந்தனையாளர்களின் முயற்சிகளைப் போன்றது அல்ல அவை. குறைகளற்ற பிறிதொரு அமைப்பை உருவாக்கவேண்டும் என்ற நோக்கமோ நம்பிக்கையோ பின் நவீனத்துவச் சிந்தனையாளர்களிடம் இல்லை.

இந்தியாவின் சாதி அமைப்பையும் ஜனநாயக அமைப்பையும் ஒரு சேர விமரிசனத்திற்குள்ளாக்கி, நிராகரிக்க விரும்பும் ரவிக்குமாரின் மனம் அவரது எழுத்துகளின் ஊடாக வெளிப்படும் ஒன்று. அவருக்கு, நடைமுறையிலிருக்கும் நீதிமன்ற வடிவத்தைக் கேள்விக்குள்ளாக்கிய மிஷேல் பூக்கோவும், அரங்கியல் செயல்பாடுகளில் உடைப்பை ஏற்படுத்திய அகஸ்டோ போவலும் நெருக்கமானவர்களாகத் தோன்றுவது வியப்பான ஒன்றல்ல. கீழைத்தேயச் சிந்தனையை, மேற்கத்திய சிந்தனையின் நேர்முரணாக நிறுத்தாமல், கீழைச்சமூகங்களைப் பற்றிய அறிதலுக்கான ஒன்றாக முன்மொழியும் எட்வர்ட் செய்தும் இலக்கியப்பிரதிகளில் பின் நவீனத்துவப் போக்கை உண்டாக்கி வருகிற உம்பர்டோ எக்கோவும், காப்ரியேல் கார்ஸியா மார்க்கெயஸும்கூட நெருக்கமானவர்களாக அறியப்பட வேண்டியவர்கள்.

தலித் சிந்தனைகளை வளப்படுத்துவது, மாற்று வேலைத்திட்டங்களை முன்னிறுத்துவது எனச் செயல்படும் ரவிக்குமார், அவற்றைப் பின் நவீனத்துவச் சிந்தனைகளின் பின்புலத்தோடு ஒருங்கிணைக்க முயல்கிறார் என்பதை அவரது இவ்விரு நூல்களின் பின்னணியிலேயே புரிந்துகொள்ள முடியும். பொதுவாகப் பிறநாட்டுச் சிந்தனைகளை மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகள், நூல்களின் மூலம் விளங்கிக் கொள்வதைவிடவும் பேட்டிகளின் மூலம் விளங்கிக் கொள்வது எளிது. பேட்டி என்கிற வடிவம் அடிப்படையில் எழுத்து சார்ந்தது என்பதாக இல்லாமல் பேச்சு சார்ந்ததாக இருக்கிறது. பேச்சு, முன்னிற்கும் நபரை – கேட்பவரைப் பற்றிய பிரக்ஞையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் வடிவம். அதன் எளிமை கருதியே ரவிக்குமார் தனது மொழிபெயர்ப்புக்கு பேட்டிகளைத் தேர்வுசெய்கிறார் என்று கூறத்தோன்றுகிறது.

இவ்விரண்டு நூல்களையும் வாசிக்கின்ற ஒருவர் அவற்றைப் பேட்டிகளாகவும், எழுத்தாகவும், பேச்சாகவும் நிகழ்வுகளாகவும் கூட வாசித்துக்கொள்ளலாம்.

கண்காணிப்பின் அரசியல் – விளிம்பு டிரஸ்ட், 1 தேவேந்திரகுல வீதி, உப்பிலிப்பாளையம், கோயமுத்தூர், 641015 விலை 48/

உரையாடல் தொடர்கிறது – விடியல் பதிப்பகம், 3, மாரியம்மன் கோவில் வீதி, உப்பிலிப்பாளையம், கோயமுத்தூர், 641015 விலை 30/

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்