விஜயராவணனின் ஆரஞர் உற்றன கண் : தமிழில் எழுதப்பெற்ற உலகக்கதை


விஜயராவணனின் கதையில் இடம்பெற்றுள்ள இரண்டு பாத்திரங்களும் தமிழர்கள் அல்ல; தமிழ் நிலப்பரப்புகளோடு தொடர்புடையவர்களும் அல்ல.
ஜெர்மனியின் ‘ஸ்டட்கர்ட்’ நகரில் ஆண்டு நிறைவு நாளின் கொண்டாட்டக் காட்சிகளின் பின்னணியில் தற்செயலாகச் சந்தித்த புலம்பெயர்ந்த இளைஞனோடு நட்புக் கொண்டு, அவனோடு தன்னை இணைத்துக் கொண்ட ஹன்னா என்ற ஜெர்மானிய நங்கையின் காதல் கதை எனச் சுருக்கமாக நான் சொல்லிவிட முடியும்.
எந்தக் கதையையும் சாராம்சமாக வாசிக்கும் ஒருவருக்கு இது ஒரு காதல் கதை. ஆனால் அக்கதைக்குள் இருக்கும் உள்ளடுக்குகளையும் எழுப்பும் விவாதங்களையும் இணைத்து வாசிக்கும் ஒருவருக்கு இந்தக் கதை காதல் கதையாகத் தோன்றாது. மொழி மற்றும் இன மோதல்களால் சின்னச்சின்ன நாடுகளில் உருவாக்கப்படும் முடிவுறா போர்களினால் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்குள் குடியேறும் அகதிகளின் கதையாக வாசிக்கும்போது உலக அரசியலின் கதையாகத் தோன்றும். ஈரான் -ஈராக் யுத்தம்; அதற்குள் செயல்பட்ட அரபி -குர்தீஸ் இன வேறுபாட்டுச் சிக்கல, அப்போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அமெரிக்க வல்லரசின் ஆயுத விற்பனை நோக்கம், எண்ணெய்ப்பொருளாதாரப் பரிவர்த்தனைகள் என எல்லாமும் கதைக்குள் தகவல்களாகவும் உரையாடல்களாகவும் நகரும்போது அரீப்பின் குழந்தமைப்பருவ வாழ்க்கையும், அவனது பெற்றோர்களின் காதல் வாழ்வும் அற்புதமாக விரிகின்றன.
போர்க்களத்திற்குள் எளிய காவிய வாழ்க்கைக்குள்ளிருந்த அந்தக் குடும்பத்தைப் புரட்டிப்போட்ட குண்டுவீச்சின் தொடர்ச்சியில் தான் ஜெர்மன் வந்த சேர்ந்த கதையைச் சொல்வதற்கு முன்னால், தனது கண்கள் சந்தித்த விபத்தைச் சொல்லும் காட்சிப்படிமம்தான் கதையின் தொடக்கம். வானவில்லின் வண்ணங்கள் பிரிந்து பரவும் படிமத்தை விவரிக்கும் வர்ணனையை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற முரண்பாட்டில் உருவாகும் சந்திப்பின் நீட்சி கதையாக விரிகிறது. புலம்பெயர் சூழலின் பின்னால் எழுதப்பெற்ற ஈழத்தமிழ்ப் புலம்பெயர் எழுத்தாளர்களின் பல கதைகளை வாசித்திருக்கிறேன். அகதியாக வாழ நேர்வதின் நேரடி அனுபவங்களின் பிழிவாகவும் இடுக்கண்களாகவும் விரிக்கப்பட்ட அக்கதைகள் உருவாக்கிய அழுத்தங்களை விடப் பன்மடங்கு அழுத்தத்தத்தை இந்தக் கதை உருவாக்கியுள்ளது. அகதி என்ற சொல்லின் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் உருவாகும் வெறுப்புக்கும் வன்மத்திற்கும் பின்னால் உள்ள நியாயங்களை அதனளவில் ஏற்றுப் பேசும் நிதானம் கதையில் உரையாடலாக ஆக்கப்பட்டிருக்கிறது.
வண்ணமிழந்த பார்வைக்குறைபாடுள்ள ஓர் இளைஞன் மீது ஹன்னாவுக்கு உண்டான பச்சாதாபம், அவளை அவனுடையவளாக மாற்றுவதின் பின்னால் ஓவிய மாணவியான அவளுக்குப் புத்தகங்கள் மீதும், கதைகள் மீதும், வரலாறு மீதும் அவன் உருவாக்கும் அறிவார்ந்த நிதானங்கள் வினைபுரிகின்றன. ஒவ்வொரு சந்திப்பின் உரையாடல்களும் வெளிகளும் எழுதப் பெற்றுள்ள முறை ஆச்சரியமூட்டுபவையாக இருக்கின்றன. இளம் எழுத்தாளர் ஒருவரின் எழுத்து பக்குவத்தின் உச்சத்தை அடைந்திருக்கிறது.
காமன்வெல்த் சிறுகதைப் போட்டியில் குறும்பட்டியலில் இடம்பிடித்துப் பரிசுக்குரியதாகத் தேர்வுபெறவில்லை என்ற குறிப்போடு எனக்குக் கிடைத்த இந்தக் கதையை, அக்குறிப்பில்லாமலேகூட வாசித்திருப்பேன். ஏனென்றால் அவரது பல கதைகளை நடு, அகழ் போன்ற இணைய இதழ்களில் வாசித்திருக்கிறேன். எழுதவும் செய்துள்ளேன். அவரது முதல் தொகுப்பின் பல கதைகள் ஏற்கெனவே வாசிக்கப்பட்ட கதைகள்.
ஆரஞர் உற்றன கண் என்ற திருக்குறளின் சொற்களைத் தலைப்பாக்கி எழுதப்பெற்ற இந்தக் கதை இப்போது பதிவேற்றம் பெற்றுள்ள தமிழினி இணைய இதழில் உள்ளது. அதனைத் தமிழில் எழுதப்பட்டுள்ள உலகத்துச்சிறுகதை என்றே முன்வைக்கிறேன். இக்கதையைப் போட்டிக்கு அனுப்பும் முன் நல்ல மொழிபெயர்ப்போடு சேர்த்து அனுப்பியிருந்தால் காமன்வெல்த் சிறுகதைப் போட்டியில் பரிசைப் பெற்றுத்தந்திருக்கும் என்ற எண்ணம்கூடத் தோன்றுகிறது.
வாசித்துக் கொண்டாட வேண்டிய கதையைத் தந்துள்ள விஜயராவணனுக்கு
வாழ்த்துகள்
.
*************************

அகாலம்: புதுவகை அரசியல் எழுத்து


அரசியல் கதையின் தொடக்கத்திற்கான எந்த அறிகுறியும் இல்லாத ஒரு விவரிப்புடன் தொடங்குகிறது அகாலம் ( அகழ் / செப்-அக்.,2021) என்னும் தலைப்பிட்டுள்ள அந்தக்கதை.

நிறங்கள் வற்றிப்போன அந்தப் பழைய புகைப் படத்தில் வட்டமுகப் பெண் தன் இடுப்பிலிருக்கும் சிறுவனை நெஞ்சோடு அணைத்திருக்கிறாள். இருவர் முகத்திலும் உயிர்ப்பில்லை. அவளது காக்கிநிற மார்க்கச்சையை அழுத்தமாய்ப் பற்றியிருக்கும் சிறுவனின் கண்களில் அந்த இறுக்கத்தைத் தொலைத்துவிடக் கூடாது என்ற பரிதவிப்பு. இப்படித் தொடங்கி புகைப்படம், வீட்டின் உட்புறம், அபார்ட்மெண்ட், தெரு கதையின் விவரிப்புகள் என நகர்ந்து, எட்டுப் பத்திகளைத் தாண்டிய பின்னும் அந்தச் சிறுவனின் யாருமற்றதான வாழ்நிலையை எழுதிக் காட்டப்போகும் ஒரு துன்பியல் கதையை வாசிக்கப்போகிறோம் என்ற நினைவே நீள்கிறது. ஆனால் சட்டென்று வந்து விழும்,

“இவர்களுக்காகவே அரசின் புதுச்சட்டத்தை மனதார பாராட்டுகிறேன்”

என்ற ஒற்றை வரியால் ஆன பத்திக்குப்பின்னால் கதையின் தளம் வேறொன்றுக்குள் இடம்பெயர்ந்து கொள்கிறது.

ஒரு கதைமாந்தரைக் குறிப்பான சூழலில் நிறுத்தி உருவாக்கப்படும் நிகழ்வுகளாக நகர்த்திப் போய் ஒன்றுக்கு மேற்பட்ட உணர்வுகளோடு கூடிய கதாமாந்தர்களோடு உரசல் ஏற்படுத்தி, உணர்வுகளை உருவாக்கி அதன் வழியாக ஒரு கதையைச் சொல்லி, வாசகர்களின் வாசிப்புக்கொரு செய்தியையோ, புரிதலையோ ஏற்படுத்துவது இந்தக் கதையின் நோக்கமல்ல என்பதாக அந்தச் சொற்றொடர் வாசகர் முன் வலிமையான சொல்லாட்சியாக முன் நிற்கிறது. அந்த வரிக்குப்பின் ஒவ்வொரு நகர்வும் தீவிரமான அரசியல் கதையின் நகர்வாக ஆகிவிடுகிறது.

இந்தியப் பரப்பில் அரசுகளைப் பின்னின்று இயக்கும் அமைப்புகளின் எண்ணப் போக்கையும் கருத்தியல் நிலைப்பாடுகளையும், அதன் பின்னுள்ள அதிகாரச்செயல்பாடுகளையும் ஒரு புனைகதை வழியாக விவாதப்பொருளாக்க முடியும் என்ற நம்பிக்கையோடு எழுதி முடித்துள்ளார் இளம் எழுத்தாளர் விஜய ராவணன். மொத்தக்கதையையும் வாசிக்கத் தந்தபின் கனவு எனச் சொல்லித் தன்னைக் கதையிலிருந்து விலக்கிக்கொள்ளப் பார்க்க விஜயராவணன் கதையின் வழியாக ஏற்படுத்தியுள்ள அதிர்வு, புதிதாக எழுத வந்துள்ளவர்களின் கதைகளில் வாசிக்கக் கிடைக்காத அதிர்வு. அந்த அதிர்வை உணரவிரும்புபவர்களுக்கு இந்தக் கதையைப் பரிந்துரை செய்கிறேன்.

கதையின் சொல்முறையே கவனமாகச் செய்யப்பட்ட சொல்முறையாக வடிவம் கொன்டுள்ளது. தனியொருவனின் அந்தரங்க எண்ணங்களையும் மனவோட்டங்களையும், பொதுவெளி நிகழ்வுகளின் விவரிப்புகளையும் விவாதங்களையும் இணையாக நகர்த்திக்கொண்டே போகும் இந்தச் சொல்முறை நடப்பியல் அல்லாத புனைவுஎழுத்துவகையின் சிறந்த மாதிரியெனச் சொல்ல முடியும்.

“வெறும் புகைப்படங்கள் என்பதைக் கடந்து ஒவ்வொன்னும் நினைவுப் பொக்கிஷம்… கடந்தகால நினைவுகள் மட்டும்தான் ஒருவனுக்கான கடைசி ஆறுதல். உனக்கு இதெல்லாம் புரியாது…” என்ற நண்பனின் பேச்சுத் தொனி சட்டென மாறியது.

“இப்படியே ஒவ்வொன்றாகத் தடை செய்துவந்தால் நினைவுகள் என எதுவும் மிஞ்சப் போவதில்லை!! அவர்களது நோக்கமும் அதுதான்… கொஞ்சம் கொஞ்சமாய் நமக்கும் கடந்த காலத்துக்குமான சரடை மெல்ல அறுப்பது. இந்தமுறை போட்டோக்கள் என்ற பெயரிலும் அதையே தான் செய்ய முயல்கிறார்கள். இப்படியே போனால் நாமெல்லாம் அவர்கள் கையில் வெறும் பொம்மைகள் தான்!”

கதையில் இடம் பெறும் சிறுவனின் அந்தரங்க நினைவோட்டமாக – நம்பிக்கையாக எழுதிக் காட்டும் ஒரு படிமக்காட்சிக்கு முன்பு நடக்கும் விவாதம் இது. கடந்த காலத்தைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் புகைப்படங்களை நேர்மறையாக அணுகும் இந்தச் சொல்லாடலைத் தொடர்ந்து ஒருவித நம்பிக்கையோடு கூடிய படிமக்காட்சியை எழுதியுள்ளார்:

“ஒருவேளை இந்தமுறை குறிதவறாவிட்டால், உதிர்ந்து விழும் புளியங்காயையும் பந்தையும் ஒருசேர மண்ணில் விழும்முன் பிடித்தாக வேண்டும். அப்போதுதான் குழந்தையிலேயே அவனை ஏனோ ஃபார்ம் ஹவுசில் விட்டுப்போன அம்மா திரும்பி வந்து கூட்டிப் போவாள். அப்படி நடக்கும் பட்சத்தில் இனி அவன் அங்கு வேலை பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. பெரிய மீசை தாடிகள் இரவில் தொந்தரவு செய்யாது. சத்தமில்லாமல் அழவேண்டாம். எல்லாரிடமும் தைரியமாகப் பேசலாம். யாரும் அவன் இனத்தின் கசப்பான வரலாறைக் காரணங்காட்டி ஒதுக்கமாட்டார்கள்… இதேபோல் தனியாகப் பந்தை மேலே தூக்கி வீசவோ பூங்கா புல்வெளியில் விளையாடும் பிற சிறுவர்களைத் தூரத்திலிருந்து வேடிக்கை பார்க்கவோ தேவை இருக்காது”.

இந்தப் படிமக்காட்சிக்குப்பின் புகைப்படங்களை எதிர்மறையில் வைக்கும் ஒரு விவாதத்தை முன்வைக்கிறார்.

“புகைப்படங்களை இவ்வளவு புனிதப்படுத்தத் தேவையில்லை… பெரும்பாலும் அவை நாம் மறக்க முயற்சிக்கும் பொழுதுகளின் தடயங்கள் தான்… அவற்றைக் கிழித்தெறிய முடிந்தால் அதுவே பெரும் ஆசுவாசம்…”

புகைப்படங்களை மையமிட்டு நேர்மறைகளையும் எதிர்மறைகளையும் விவாதப்படுத்தும் விஜயராவணன், அதனை பல உரையாடல்களையும் படிமங்களையும் முன்னால் பரப்பிவிடும் வேலையை மட்டுமே செய்துள்ளார். அந்தப் பரப்பிலின் வழியாக எழுப்பப்படும் விவாதத்தின் முடிவு சரி/ தவறுகளை நோக்கி நகராமல் விவாதங்களாகவே அலையடிக்கின்றன.

அரசியல் அதிகாரத்தை அடையும் நோக்கத்தோடு பன்னெடுங்காலத்துக்கு முந்திய காட்சிகளையும் சடங்குசார்ந்த குறியீடுகளான பழையனவற்றைத் திரும்பக் கொண்டு வரப்போவதாகச் சொல்லிக்கொண்டே, இன்னொருவகையான வரலாற்றை - கடந்த கால நினைவுகளை அழிக்கும் முன்வைப்புகளையும் செய்யும் அரசதிகாரம் ஒன்றை இந்தியப் பரப்பு சந்தித்துக்கொண்டிருக்கிறது. இவ்விரு வினைகளையும் சொல்லாடல்களாக முன்வைக்கும் அவ்வரசதிகாரம் உண்மையில் நிகழ்காலத்தைத் தன்போக்கில் கட்டமைத்துக்கொள்ள விரும்பும் அரசதிகாரமாக இருக்கிறது.

இதன் மறுதலையாகச் சமகாலம் தான் கவனிக்கப்பட வேண்டியவை என்று சொல்லிக் கொண்டே, கடந்தகாலைப் பெருமைகளைப் பேசும் இன்னொரு அரசதிகாரத்தைத் தமிழர்கள் கடந்த ஐம்பதாண்டுகளாகச் சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள். நிகழ்காலத்தில் இவ்விரண்டையும் ஒருசேரச் சந்திக்கும் பெரும் நெருக்கடியில் இருக்கிறது தமிழ்ச்சமூகம். அதனால் எந்தவிதமான முடிவுகளையும் எட்டமுடியாத தவிப்புடன் தமிழ்ப் பொதுமனம் அலைகிறது. இவ்விரு முரண்களையும் வெளிப்பாடுகளையும் விளங்கிக் கொள்ளமுடியாத மக்கள்திரளின் திகைப்பும் திளைப்பும் இலக்குகளற்றனவாய் மாறிவிடும். இதனைக் கதைக்குள் இடம்பெற்றுள்ள பல விவாத அடுக்குகள் திரும்பத்திரும்ப நினைவூட்டுகின்றன.

“இன்றிலிருந்து எல்லாவித ஆண்டு விழா கொண்டாட்டங்களையும் தடை செய்துள்ளார்களாம்! பிறந்த நாள்… நினைவுநாள்… திருமணநாள்… என சகலமும். தேவையற்ற செலவைத் தடுக்கவாம்… இதைவிடப் பெரிய அடாவடித்தனமே அகழ்வாராய்ச்சித் திட்டங்களையும் அரசு நிறுத்திக் கொண்டுள்ளது. அதே காரணம்! புதைந்துபோன இறந்த காலத்தைத் தோண்டி எடுத்து ஆராய்வதில் மக்களின் வரிப்பணம் தேவையில்லாமல் விரயமாகிறதாம்!

நண்பன் சொல்லிக் கொண்டிருப்பது டிவி சேனல்களில் தடித்த சிவப்பு எழுத்துகளில் ஓடிக்கொண்டிருந்தது.

“அவர்கள் தெளிவாகக் காய் நகர்த்துகிறார்கள்! சரித்திர அழிப்பு எவ்வளவு பெரிய துரோகம் தெரியுமா?? நம் வருங்கால சந்ததிக்கு கடந்தகாலத்துடன் எந்தத் தொடர்பும் இருக்கப்போவதில்லை… அவர்களைக் கைப்பாவையைப் போல் ஆட்டி வைப்பார்கள்…”

*******

“எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிரிச்சுக்கோ. திடீரென ஒரு நாள் சிரிப்பையும் தடைசெய்து விடுவார்கள்.. பைத்தியக்காரர்கள்!” என்றான் நண்பன்…

“பயந்தவன் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் பேய்தான்”

மனித நினைவு அடுக்குகளின் இயல்பையும் அதன் வழியாகத் தனி மனிதர்களாகவும் திரளாகவும் சந்திக்கும் சிக்கல்களையும் விவாதப்பொருளாக்கியுள்ள இந்தக் கதைக்குள் புளியமரத்தில் பந்தெறியும் படிமம்போல வேறு சில படிமங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. புறாவும் அதன் இறகும் அதன் வழியாக அடையாளப்படுத்தப்படும் கறுப்பு அட்டைப் புத்தகம் என்றொரு படிம மும், புறாவை ருசித்துவிட எத்தணிக்கும் பூனை என்ற உருவாகமும் கதையின் வாசிப்பத்தளத்தில் புதிய குறியீடுகளை உருவாக்குகின்றன. படிமங்களும் விவாத த்தன்மை கொண்ட உரையாடல்களுமாக நகரும் கதை வாசிப்பவர்களுக்குள் அலையடிக்கும் எண்ணங்களையும் நிதானமான அமைதியையும் அடுத்தடுத்து உருவாக்குகின்றன. சில நேரங்களில் தெறித்துச் சிதறும் சில வரிகள் வாசிப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி நிலைதடுமாறச் செய்யக் கூடியனவாகவும் உள்ளன. இதன் வழியாக நவீனத்துவ மனநிலையைக் கடக்கும் பின் – நவீனத்துவ மனநிலையை நோக்கி வாசிப்பு மனம் நகர வேண்டிய தேவையை உண்டாக்குகிறது

‘கடந்தகாலத்தை விடாமல் இறுகப்பற்றி சிலாகிப்பவர்கள் பலவீனமானவர்கள். எதிர்கால குறிகோளற்றவர்கள். முன்னேறத் துடிக்கும் சமுதாயத்தின் கரையான்கள்…’

“இங்கு எல்லாம் மாறிவிட்டது… எல்லாரும் மாறிவிட்டார்கள்… அந்தக் காலம் திரும்பப் போவதில்லை… இனி புலம்புவதைத் தவிர செய்வதற்கு ஒண்ணுமில்லை…” என்றான்.

*****

“இப்போதெல்லாம் ரேடியோவில் பழைய பாடல்கள் ஒலிபரப்புவதில்லை. லைவ் கான்செட் மட்டும்தான். அன்றைய பாடல் அந்தந்த தேதிக்கு மட்டுமே சொந்தம்” என்றவன் தன் முகம் மறைக்கும் பெரிய மீசையை நீவிக் கொண்டான்.

பக்கத்துக் குடியிருப்பில் சிவப்பு ஸ்வட்டர் அணிந்த முதியவர் ஜன்னல் கம்பிகளினூடே வீதியை வெறித்துக் கொண்டிருந்தார். யாருடனும் பேசுவதற்கும் பகிர்வதற்கும் எதுவும் மிச்சமில்லாததைப் போன்றதொரு சூனியப்பார்வை.

இவ்வரிகள் எல்லாம் ஆங்காங்கே சொல்லப்படும் அறவுரை மேற்கோள்கள் போல் அல்லாமல் கதையின் போக்கிற்குள்ளேயே இடம்பெறுவனவாக எழுதப்பட்டுள்ளன.

மனிதர்கள், அவர்களால் உருவாகும் நிகழ்வுகள், அவற்றிற்கிடையே ஒரு தொடர்ச்சி, அதன் வழியாக ஒரு விசாரணை, அதன் பின்னணியில் நிகழ்கால அரசியலின் இயங்கியல் என வழக்கமாக அமையும் அரசியல் எழுத்தைக் கவனமாகக் கைவிட்டுவிட்டு வாசகர்களை வேறுவிதமாக வாசிக்கத் தூண்டியுள்ளார் விஜய ராவணன். கதை எழுதப்பட்டுள்ள காலத்தின் நிகழ்வுகள் எதனையும் நினைவூட்டாமல், நம் காலத்துப் பின் நவீனத்துவ அரசுகளின் நகர்வுகளை – வெகுமக்களிடையே உருவாக்க நினைக்கும் மந்தைத் தன மனநிலையை- அதற்கேற்ப உருவாக்கப்படப் போகும் சட்ட முன்வரவுகளைச் சொல்லாடல்களாக விவாதிக்கிறது அவரது கதை. அண்மையில் வாசித்த கதைகளில் நீண்ட காலம் நினைவில் இருக்கப்போகும் கதையாக இந்தக் கதை இருக்கப்போகிறது.

------------------------------------------------

கதைக்கான இணைப்பு https://akazhonline.com/?p=3584

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்