நாடகங்களின் ஊடாகப் பிரபஞ்சனின் படைப்புத்தளம்


படைப்பு- படைப்பாளர் உறவு

கதாபாத்திரம் ஒன்றின், அல்லது நிகழ்வு ஒன்றின், அல்லது இருப்பு ஒன்றின், அல்லது இருப்பின்மை ஒன்றின் – இப்படி எல்லாவிதமான ஒன்றுகளின் மீது கருத்தை, எண்ணத்தை, புன்சிரிப்பை, ஏளனத்தை, ஏக்கத்தை, மனநிறைவைப் பதிவு செய்து விட வேண்டும் என்று தோன்றும்பொழுது படைப்புச் செயல் தொடங்குகிறது. படைப்பாளி அவற்றின் கால நீட்டிப்பையும், வெளியின் விரிவையும் தடுத்து நிறுத்தி, தனது குறிப்பை அதன் மீது ஏற்றிவிட்டு ஒதுங்கிக் கொள்கிறான். படைப்புச் செயல் நிறைவடைகிறது.அதன் பின்பு எழுதுபவர் பாடு அவர்களுக்கு; எழுதப்பட்டவைகளின் பாடு எழுதப்பட்டவைகளுக்கு. நிகழ்வுகளின் மாற்றம் செய்யவோ, இருப்பை இல்லாமல் ஆக்கவோ, இருப்பின்மையைப் போக்கிவிடவோ எழுதுபவர்களால் முடிவதில்லை. முயலுகின்றவர்களும் கூட முழுவெற்றி பெறுவதில்லை. இவ்வுறவு படைப்பாளருக்கும் படைப்புக்குமான உறவு மட்டுமல்ல; படைப்பாளிக்கும் வாசகர்களுக்குமான உறவும்கூடத்தான். படைப்பாளியின் மீதான தனது கருத்துக்களை, எண்ணத்தை, புன்சிரிப்பை, ஆரவாரத்தைப் பதிவுசெய்ய வாசகன் தன்னைத் தயார்படுத்திக்கொண்டே இருக்கிறான். ஏதாவது ஒரு காரணமாகப் படைப்பாளியைத் தனது வெளிக்குள் இழுத்து, அவனது கால ஓட்டத்தைத் தடுத்து, தட்டிக்கொடுத்தோ, நெட்டி முறித்தோ, கட்டிப்பிடித்தோ காட்டிவிடுகிறான். அதன் பின்பு அவரவர் பாடுகள் அவரவர்க்கு.

பிரபஞ்சனின் காலத்தைக் கையில் பிடிக்க ஒரு வாய்ப்பு இந்த சாகித்ய அகாதெமி விருது. தன் படைப்பு வெளியை விட்டு விலகி, பாராட்டு வெளிக்குள்ளும், பரிசீலனை வெளிக்குள்ளும் பிரபஞ்சனைத் தள்ளிவிட்டிருக்கிறது விருதும் தொகையும். அவரே அவரது முந்திய செயல்பாடுகளை எடைபோட்டுக்கொள்ளவும், சிசிபஸ் பயணமாய்த் தொடர்வதா? கீழேயே நின்றுவிடுவதா? விலகி வேறுபாதையில் செல்வதா? என எண்ணமிடச் செய்துள்ளது. தடுத்து நிறுத்தப்பட்ட வெளியில் சிலர் பாராட்டலாம்; சிலர் ‘இதற்காகத்தானா?’ என்று கேட்கலாம். எதுவும் சொல்லாமல், சிலர் ஒதுங்கிக்கொள்ளலாம். அப்புறம் அவரவர் பாடுகள் அவரவர்க்கு. பிரபஞ்சன் தன்வெளியை விரித்து வியாபிக்கக் கூடும். வாசகர் வாசிப்பதைவிட்டுவிட்டு ஒதுங்கிவிடவும் கூடும். புதிய வாசகர்கள் வந்து சேர்தலும் ஆகும். இவையெல்லாம் என்ன..? இயங்கியலின் கவனமின்மைகள்.

பிரபஞ்சனின் எழுத்துத்தளங்கள்

வைத்திலிங்கம், தன்னிருப்பையும் தன்னைச்சுற்றிய இருப்பின்மையையும் கேள்விகளாகவும் விசாரணையாகவும் ஆக்கிக்கொண்டு பிரபஞ்சகவியாக மாறியதும் தன்னைச் சுற்றிய தனிமனிதர்களின் அன்பும் சச்சரவுகளும் நேசமும் கட்டற்ற கணங்களில் செய்த முடிவுகளும், குழுவாகச் சேர்ந்து இயங்கும் சமூக நடைமுறைகளோடு உண்டாக்கிய முரண்பாடுகளின் ஊடாகப் பிரபஞ்சகவி பிரபஞ்சனாக மாறியதும் நடந்தேறியது. பிரபஞ்சனாக மாறிய பின்னரே சிறுகதைகளுக்குள் தன்னை நிறுவினார்.மனிதாபிமானத்தின் எல்லைகள் தடை செய்யப்பட்டதாக, அதிகாரம் அத்துமீறுவதாக, நிறுவனங்கள் நெருக்குவதாக,நிலையற்ற தன்மைகள் நிலவுவதாக நினைத்தபோது பேச்சாளப் பிரஞ்சனும் கட்டுரையாளர் பிரபஞ்சனும் நமக்கு அறிமுகம். நினைவுகளை நிறுத்திப் போடுதல், அங்கீகாரத்தைக் கண்டடைதல், அடையாளங்களை உருவாக்குதல் எனத் தயாரானபோது மகாநதிகள் உற்பத்தியாயின. மானுடம் வென்றது; வானம் வசப்பட்டது; விருதும் வசமானது. இவையெல்லாம் கூட இயங்கியலின் கவனமின்மைகள் தானா..?

இல்லை.. இல்லை.. இவையெல்லாம் கவனத்தோடு செய்யப்பட்டவை; இன்னவையெல்லாம் கவனமின்மையால் நேர்ந்தவை என்று நான் பட்டியலிட முடியும். இத்தனை கவிதைகள் தேருமென்று; இத்தனை சிறுகதைகள் அற்புதமானவை; இவையெல்லாம் தேறாதவை என்று; இந்தத் தொடர்கதைகளின் தேவையென்னவென்று: அந்தக் கட்டுரைகள் எளிமையானவை; நேரடியானவை என்று: இந்தச் சரித்திரத்தொடர்கள் இவ்வளவு விரிவானவை என்று பட்டியலோடு காரணங்களையெல்லாம் நான் கூறமுடியும். நீங்களும் கூடச் சொல்லலாம்தான். ஆனால் இயங்கியலின் கவனமின்மைகள் அவருக்குத்தான் சரியாகத்தெரியும். ‘பக்குவமற்ற மனநிலையில், புரிதலற்ற கோணத்தில்’ எழுதப்பெற்ற வரிகள் எங்குள்ளன என்று. இப்பரிசும் பாராட்டும் அவற்றை அடையாளங்கண்டுகொள்ளத் தோதாக அமையலாம்.

பிரபஞ்சனின் மொத்த எழுத்துக்களிலும் அச்சாக்க அவசரம் காரணமாக எழுதப்பெற்றவை; அச்சாகும் நினைவுகளின்றி எழுதப்பெற்றவை என்று இரண்டு பெரும்பிரிவுகள் உண்டு.சிறுகதை, கவிதை என்கிற வடிவங்கள் அச்சாக்க நினைவை ஒதுக்கிவிடக்கூடிய வடிவங்கள். எழுதி முடித்த நிலையில் அவை பிரசுரமாகலாம். ஆனால் தொடர்கதைகளிலும் கட்டுரைத் தொடரிலும் ‘ அச்சாக்க அவசரம்’ பதற்றத்தையும் நிதானமின்மையையும் கொண்டுவந்து சேர்த்துவிடும். அவரது நாவல்களில் ‘மகாநதி’யும் நாடகங்களும் ஏராளமான சிறுகதைகளும் அச்சாக்க அவசரம் நெருக்காத நிலையில் எழுதப்பெற்றவை. கவிதைகளும் இதில் அடங்கும். பிரபஞ்சனைப் பிரபலமான எழுத்தாளராக்கிய நக்கீரன் கட்டுரைகளும், தொடர்கதைகளும், வரலாற்றுத்தொடர்கதைகளும் பதற்றத்தோடு கூடிய எழுத்துகளே. இப்படிப்பிரித்துப் பேசுவதால் பதற்றத்தோடு கூடிய நிதானமில்லாத எழுத்துகள் ஒதுக்கப்பட வேண்டியவை என்று சொல்ல வரவில்லை. அவையே இயங்கியலின் கவனமின்மையை வெளிப்படுத்தக்கூடியன.

எழுத்தாளரை அதிமனிதனாக ஆக்கிவிடாமல், நெருக்கடிகளும் சோகங்களும் சந்தோசமும் சூழ இருக்கின்ற சாதாரண மனிதர்களில் ஒருவனாக வெளிக் காட்டக்கூடியவை. எழுத்தாளரது பலமும் பலவீனங்களும் முரண்களும் இயல்பும் அத்தகைய பதற்றத்தில் வந்துவிடும். நிதானமான எழுத்து போலியான மதிப்பீடுகளை முன்னிறுத்தும்; உள்மனத்தை ஒழித்துவிட்டு வெளிப்பூச்சை வண்ணங்களாக்கும். தன்னை மறைத்துக்கொள்ளும் தந்திரங்களை – ஆசிரியனை வெளிக்கொண்டுவராத உத்திகளைக் கைக்கொள்ளும். பிரபஞ்சனின் எழுத்துத்தளத்தில் இதுவுமுண்டு; அதுவுமுண்டு. அந்த வகையில் அவர் ஒரு அர்த்தநாரி. படைப்புகளின் வழியே தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவும் அவரால் முடிந்துள்ளது. மறைந்து ஒளிந்து கொள்ளுதலும் சாத்தியமாகியுள்ளது. எழுத்துக்கலையின் சாத்தியப்பாடுகள் முற்றிலும் கைவரப்பெற்ற எழுத்தாளரால்தான் ஒளிவதும் தெரிவதும் முடியும்.

நாடக எழுத்துகள்

அன்னம் வெளியீடாக அவரது இரண்டு நாடகங்களும் முட்டை என்ற தலைப்பில் நூல்வடிவம் பெற்றுள்ளன. ஒன்று முட்டை; இன்னொன்று அகல்யா. முட்டை சமகால நிறுவனம் ஒன்றின் – சமூக நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்காக இருக்கின்ற காவல் நிலையங்களின் ஒழுங்கின்மையை – அர்த்தமின்மையை – அர்த்தப்படுத்த முயலும் நாடகம். அகல்யா, மிகப்பழைய நிகழ்வு ஒன்றின் மீதான நிகழ்காலப்பார்வையைப் பதிவுசெய்யும் நோக்கம் கொண்டது. இவ்விரு நாடகப்பிரதிகளின் மீது வாசகன் என்ற அளவுக்கும் கூடுதலாக, அதன் மேடையேற்றங்களில் பங்கேற்றவன் என்ற பரிமாணமும் எனக்குண்டு. முட்டை நாடகத்தில் நடிகனாகவும், அகல்யாவை நெறியாள்கை செய்தவானாகவும் அப்பனுவல்களோடு எனக்குத் தொடபுகளுண்டு.

இவ்விரண்டு நாடகப்பனுவல்களையும் வாசிக்க மரபான நாடகக் கட்டமைப்பின் எதிர்வுகளைத் தேடும் மனநிலை மட்டும் போதாது. தலைமைக்கதாபாத்திரம் (Protagonist ) எதிர்நிலைக்கதாபாத்திரம் (Antagonist) என்ற எதிர்வுகளின் ஊடாகத் தொடக்கம், சிக்கல், முரண்வளர்ச்சி,உச்சநிலை, வீழ்ச்சி, முடிவு என்ற மரபான கட்டமைப்பு பிரபஞ்சனின் இரண்டு நாடகங்களிலும் கிடையாது. அதற்கு மாறாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி இருபதாம் நூற்றாண்டில் நிலைநிறுத்திக் கொண்ட நவீனத்துவக் கட்டமைப்புகளை இந்நாடகங்களில் காணமுடியும். முட்டையில் அபத்த நாடகக் (Absurd)கூறுகளையும் அகல்யாவில் பிரெக்டின் காவியபாணி அரங்கின் (Epic theatre) கூறுகளையும் கொண்டுவர பிரபஞ்சன் முயன்றுள்ளார்.

மரபான – நற்றிற நாடகக் கட்டமைப்பிலிருந்து விலகிய நவீன நாடகங்கள் எல்லாம் பார்வையாளர்களை பிரக்ஞைபூர்வமான மனநிலையில் () வைத்திருக்கும் நோக்கம் கொண்டவை. பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருப்பது நாடகம் தான்; உண்மையல்ல என்பதை மேடை நிகழ்வில் கொண்டுவந்து, முன்னிறுத்துவதும், வசனங்களில் அர்த்தமின்மையை உண்டாக்குவதும் வேறுவகையான இடையீடுகளை நுழைப்பதுமான உத்திகள், பார்வையாளனைப் பிரக்ஞைபூர்வமான மனநிலையில் வைப்பதற்கான உத்திகள். இந்த உத்திகள் மூலம் நேர்கோட்டுத் தன்மையில் பார்வையாளனைக் கவனஞ்சிதறவிடாமல் அழைத்து வந்து நாடக ஆசிரியரின் முடிவைப் பார்வையாளர்களிடம் திணித்துவிட்டு அதை நம்பும்படி செய்யும் அம்சம் குறைகிறது. நாடகம் முன்வைக்கும் எல்லாவற்றையும் நம்பச்செய்வது பாசிசத்தன்மைக்கு இட்டுச் செல்லும் என்பதால் அதனைத் தவிர்த்தலே நவீனத்துவத்தின் வெளிப்பாடு. பிரபஞ்சனின் இரண்டு நாடகங்களிலும் வெவ்வேறு விதமாக இந்த நோக்கம் செயல்பட்டுள்ளது.

முட்டை – நேரடி நிகழ்வு ஒன்றையும், அந்நிகழ்வு வழியாக இன்னொரு கற்பனை நிகழ்வையும் மேடையில் இருவேறு தளங்களில் அரங்கேற்றவேண்டிய நாடகப்பிரதி. தேநீர்க் கடையில் செய்தித்தாள் படிப்பதும், அங்கு காவல் துறை அதிகாரி வருவதும், அவர்களிடையேயான உரையாடலும் நேரடியான நாடக நிகழ்வு. செய்தித்தாளில் உள்ள செய்தியின் காரணமாகக் கட்டியெழுப்பப்படும் முட்டைக்காரன், சைக்கிளில் வரும் இளைஞன், பூவாத்தாவின் மேலான பாலியல் வல்லுறவு, போலீஸின் மீதான விமரிசனங்கள் என்பன நாடகத்திற்குள் இன்னொரு நாடக நிகழ்வு. சைக்கிளில் வரும் இளைஞன் முட்டைக்காரன் மீது மோதிவிட, லஞ்சம் வாங்கும் போலீஸால் இழப்புத் தொகை கிடைக்காததோடு, முட்டைக்காரன் சிறையிலும் அடைக்கப்படுகிறான். அவனைப் பார்க்க வரும் அவன் மனைவி பூவாத்தா காவல் நிலையத்திலேயே பாலியல் வல்லுறவுக்குள்ளாகிறாள். இத்தொடர் நிகழ்வுகளுக்கெல்லாம் காரணம் முட்டை. முட்டை என்பது நாடகத்தின் பெயர் மட்டுமல்ல; அர்த்தமின்மையின் குறியீடும்கூட.

முட்டை நாடகத்தை எழுதிய பதினைந்து ஆண்டுகளுக்குப் பின், சிதம்பரம், அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் “பத்மினி” என்றொரு பெண் பூவாத்தாவைப் போலவே வல்லுறவுக்கு ஆளாவாள் என்று பிரபஞ்சனும் நினைத்திருக்க மாட்டார். அதனை மேடையேற்றிய நாங்களும் நினைத்ததில்லை. அண்ணாமலை நகர் பத்மினியின் கதறலைப் பயன்படுத்தி நான் ‘வார்த்தை மிருகம்’ (ரவிக்குமார் எழுதியது) என்ற நாடகப்பனுவலை மேடையேற்றியபோது ‘ முட்டை’ நாடகத்தின் அபத்தத்தை நிகழ்வுகளாக மாற்றி, இரண்டு எழுத்தாளர் களுக்கிடையேயான உரையாடலில் சமகால சமூகத்தின் கவனமற்ற மனநிலையைக் கொண்டுவந்தோம். இன்றைய சூழலில் -காவல் நிலையங்கள் பாலியல் வல்லுறவுகளின் களன்களாக மாறிக் கொண்டுவரும் நிலையில் –முட்டை அபத்தநாடகமாக உணரப்படாமல் நடப்பியல் நாடகமாகவே புரிந்துகொள்ளப்பட வாய்ப்புகளுண்டு.

இரண்டாவது நாடகம் ‘அகல்யா’ புராணங்கள் சார்ந்த அகல்யாவின் மனநிலையை நம் காலத்திற்குள் இழுத்து வருவது. கௌதமனின் சாபத்தால் கல்லான அகல்யா ராமனின் கால் பெருவிரல்பட்டு உயிர்பெறுகிறாள். உயிர் பெற்ற அகல்யாவை ராமனுடன் வந்த விசுவாமித்திரன் வாழ்த்துகிறான். அதற்கு அகல்யா தரும் பதிலில் வெளிப்படும் வார்த்தைகள் அவளை நம் காலத்துப் பெண்ணாக மாற்றிவிடுகிறது. அந்தப் பகுதியைப் பிரபஞ்சன் எழுதியபடியே தருகிறேன்:

ராமர்: நான் கௌதமரைப் பார்க்கிறேன். அகல்யா, நீயே வாதியாகவும்,நீயே பிரதிவாதியாகவும் இருந்து வழக்குரைத்திருக்கிறாய். கௌதமர் உங்கள் பிரச்சினையை நான் தீர்ப்பவன் என்று நம்பி இருக்கிறார்.

                    அகல்யா: என் பிரச்சினையை நீ தீர்த்துவிட்டதாக நம்புகிறாயா?

                    ராமர்: இல்லை. யார் பிரச்சினையையும் தீர்த்துவிட முடியாது என்றே                     இந்த க்ஷ்ணத்தில் எனக்குத் தோன்றுகிறது

                    அகல்யா: இறுதியாக எனக்கு என்ன தான் உபதேசிக்கிறாய்..?

ராமர்: யார் யாருக்கு உபதேசிப்பது பெண்ணே! உனக்கு உவப்பாய் இருக்கும் வழியில் நட. எது செய்தபின் மனம் குறுகுறுக்கிறதோ அதைச்செய்யாமல் இருப்பதே அறம். எது செய்தபின் மனம் ஸந்தோஷிக்கிறதோ அதுவே அறம். உனக்கு உன் வாழ்வே தர்மம்..

வருகிறேன். எனக்கு விடை அறிவிப்பாயாக.

அகல்யா: நல்லது போய்வா.. உனக்கு மங்களம் உண்டாகட்டும் (ராமனும் லட்சுமணனும் போகிறார்கள்)

விசுவாமித்திரன்: அகல்யா நானும் விடை பெறுகிறேன். உன் வாக்கு பலிக்கட்டும். ராமனுக்கு மங்களம் தேடவே நான் அவனை வழிநடத்திக்கொண்டு செல்கிறேன்.

அகல்யா: (வணங்குகிறாள்)

விசுவாமித்ரன்: (கையுயர்த்தி) தீர்க்க சுமங்கலி பவ…

அகல்யா: (தீர்க்கமாக விசுவாமித்திரரைப் பார்த்து) யாரோடு இந்திரனோடா? கௌதமரோடா?

(விசுவாமித்திரர் சிரித்துவிட்டுச் செல்கிறார்)

‘தீர்க்க சுமங்கலி பவ’ என்ற வாழ்த்துதலுக்குப் ‘பிழை பொறுத்ததற்கு நன்றி’ என்றோ ‘உங்கள் வாழ்த்துக்கு நன்றி’ சொல்லியிருந்தால் அவளது காலம் பழைய காலம் தான். “யாரோடு.. இந்திரனோடா? கௌதமரோடா?” என்று கேட்கும் அகலிகை நம் காலத்துப் பெண்; நம் காலத்திலும் தன் அகத்தின் வழிச் செல்ல முடிவு செய்த புதிய பெண்




மனம் ஒருவனிடத்தில் தங்கிவிட, உடல் இன்னொருவனால் ஆட்கொள்ளப்படும் வேதனையே வெறுக்கத்தக்கது. அதுவும் கௌதமனோ உடலை ஆளவும் தயாரில்லாத முனிவன்; அந்நிலையில் மனத்தின் வழி உடல் செல்வதை யாரால் தடுக்க முடியும்? நுட்பமான இந்தக் கேள்வியை ‘அகல்யா’ நாடகம் எழுப்புகிறது.

அகல்யா அச்சேற்றப்பட்ட வடிவத்தில் பிரெக்டின் ஓர் உத்தியான புகைப்பட நகலை (Still Photography)முன்னிறுத்தும் உத்தியில் எழுதப்பெற்றிருந்தது. ராமன், லக்குவன், விசுவாமித்திரன் ஆகியோர் உலவும் பாத்திரங்களாகவும் அவர்களுக்குச் சொல்லப்படும் ‘சாக்ராயனரின் கதையும்’ சந்திப்பும் புகைப்பட நகலின் முன் உரையாடல் நிகழ்வது என்ற உத்தியில் எழுதப்பெற்றிருந்தது. ராமன் கால்பட்ட அகல்யா உயிர்பெறும்போது பெண்ணுருவம் வருவதாக அமைக்கப்பட்டிருந்தது.

இந்நாடகக் கட்டமைப்பைச் சிதைக்காமல், ‘ புகைப்பட நகலின் முன் உரையாடல்’ என்பதை முன் நிகழ்வுகளின் திருப்புக்காட்சியாக (Flashback) மாற்றிப் புதுச்சேரி கம்பன் கலையரங்கில் 1991 இல் , கம்பன் விழா மேடையில் அரங்கேற்றினோம். அப்போது அதன் செயலர் புலவர் அருணகிரி சொன்ன வார்த்தைகள்: “கம்பன் கழகம் புதுமைக்கும் இடமளிக்கும்” என்பது. மேடையில் சொல்லிவிட்டு, கீழே வந்து பேசிய பணத்தையும் தந்துவிட்டு, ‘அடுத்த தடவையும் நீங்க நாடகம் போடணும்; அந்நாடகத்தின் தலைப்பு “சூர்ப்பனகை”. அதில் சூர்ப்பனகையை ராமனுக்குக் கட்டி வச்சிடுங்க’ என்றார். அப்பொழுதுதான் அவரது கோபமும் நக்கலும் எனக்குப் புரிந்தது. பிரபஞ்சனின் உரையாடல் உண்டாக்கிய தாக்கமும் மரபைக்கேள்விக்குள்ளாக்கிய அவரது நாடகப்பனுவலின் வலிமையும் கூடுதலாகப் புரிந்தது.

இப்படி, நேரடியாக மரபின் மீதான தாக்குதலைத் தொடுத்த அதிகார அமைப்புகளைக் கேலி செய்கின்ற சிறுகதைகளையோ, தொடர்கதைகளையோ, நாவல்களையோ அவரேகூட எழுதிவிட முடியாது ஏனென்றால் அந்த வடிவங்கள் அதற்கு ஏற்ற வடிவங்கள் அல்ல. நாடகம் மட்டும் தான் அமைப்புகளையும் நம்பிக்கைகளையும் நிறுவனங்களையும் கேலி செய்யும் –கேள்விக்குள்ளாக்கும் வடிவம். ஒரே நேரத்தில் வெகுமக்கள் பலர் பார்க்கிறார்கள் என்பதைவிடவும், பாதுகாக்க இருக்கிறார்கள் என்ற தைரியமே அவ்வடிவத்திற்குப் பின்னுள்ள ஒரு பலம்தான்.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முந்திய சென்னை வாழ்க்கையும், வீதி, பரீக்‌ஷா போன்ற நவீன நாடகக்குழுக்களின் தொடர்புகளும் வங்க நாடகக்காரர் பாதல் சர்க்காரின் பயிற்சிப்பட்டறையும் பிரபஞ்சன் என்னும் நாடக ஆசிரியரின் பின்னிருந்த உந்து சக்திகள். அத்தகைய உந்துசக்திகளை விட்டு அவர் விலகியதும், அவை விலகிக்கொண்டதுமான இயங்கியலின் கவனமின்மை நாடக ஆசிரியரான பிரபஞ்சனைத் தின்று தீர்த்துவிட்டது. இன்று அவருக்குள்ள உந்துசக்தியும் இயங்குவெளியும் பத்திரிகைகள். பத்திரிகைகள்.. பத்திரிகைகள்.. இப்பத்திரிகைகளின் வெளியில் இன்பக்கேணிகளில் மட்டும் குளிப்பாரா…? ’துன்பக்கேணி’யின் பக்கம் வருவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஏனென்றால் இன்பக்கேணி என்ற தலைப்பு பாரதி, புதுமைப்பித்தன் ஆகியோரின் துன்பக்கேணி என்ற தலைப்பின் எதிர்வாக நிற்கிறது. தலைப்பில் மட்டுமே இந்த எதிர்நிலை எடுத்துள்ளாரா? எழுத்துநிலையிலும் அத்தகைய எதிர்நிலையை எடுத்துக்கொள்வாரா என்பது தான் நம்முன் உள்ள பிரச்சினை


தகவல்கள்:

புதுச்சேரியில் கம்பன் விழா ஆண்டுதோறும் மூன்று நாட்கள் நடைபெறும். நடைபெறும் இடம்: கம்பன் கலையரங்கம்

‘இன்பக்கேணி’ – விருது அறிவிப்புக்குப் பின் எழுதி குமுதம் இதழில் வெளிவந்த தொடர்கதையின் தலைப்பு.

---------------------------------------------------------------------------------------------------------------------------- 19-02-1996 அன்று புதுவைப்பல்கலைக்கழகம் சுப்பிரமணிய பாரதி தமிழ் மொழி இலக்கிய உயராய்வு நிறுவனம் நடத்திய “பிரபஞ்சன் படைப்பாய்வு விழா” வில் வாசித்த கட்டுரை

============================================


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்