கோவையில் ஒரு கலைக்கூடம்
தன்னிடம் ஒரு கலையுணர்வு இருக்கிறது; அதனைப் பொதுவில் வைக்கும்போது முழுமையடைகிறது என்ற நம்பிக்கை இந்திய மனிதர்களிடம் இல்லை. கோ இல்கள் தான் கலை வெளிப்பாட்டுக்களங்களாக இருந்திருக்கின்றன. பண்டைக்காலத்தில் புரவலனை நாடித்தான் புலவர்கள் போய்ப் பாடிப்பரிசில் பெற்றிருக்கிறார்கள். கூத்தரும் பொருநரும் விறலியரும் பாடினிகளும் ஆற்றுப் படுத்தப்பட்ட விதங்களைத் தமிழிலக்கியங்கள் சாட்சிப்படுத்துகின்றன. புரவலன் இல்லையென்றால் இறைவன். இறைவன் இருப்பதாக நம்பும் இடத்தில் நின்று நெக்குருகிப் பாடியிருக்கிறார்கள். ஒரு பொது இடத்தில் நின்று இலக்கற்ற பார்வையாளர்களை நோக்கிக் கவிதை பாடிய கவிஞனை நமது பாரம்பரியத்தில் காணவில்லை. தனது சொல்லாடல்களை முன்வைத்த தத்துவவாதிகளை வரலாறு அடையாளப்படுத்தவில்லை. பாங்கறிந்தேறிய பட்டிமண்டபங்கள் நடந்த இடங்களெல்லாம் ஏற்பாடு செய்யப்பட்ட இடங்கள் அமைப்புக்குள்ளிருந்து செயல்படும் பாணிகளே இந்திய/ தமிழகப் பாணிகள். இதற்கு மாறானது ஐரோப்பிய அறிவுவாத மனம். பேச்சு, எழுத்து, ஆடல், பாடல், ஓவியம் என ஒவ்வொன்றையும் மக்களை நோக்கி இலக்கற்ற நிலையில் வெளிப்படுத்துவதை இப்போதும் பார்க்கிறேன்.
ஐரோப்பியப் பெருநகரங்கள் பலவற்றிலும் இதுபோன்ற கலைஞர்களைப் பொது இடங்களில் பார்த்திருக்கிறேன். இசைக்கலைஞர்கள், உடலியக்கக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், ஓவியக்கலைஞர்கள் என ஒவ்வொருவரும் தங்களை வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள். நீண்ட நாட்கள் தங்கிய போலந்தின் க்ராக்கோ கலைக்கூடங்களும் அருங்காட்சியகங்களும் நிரம்பிய நகரம். வார்சாவில் போர் நினைவுச்சின்னங்களும் போரழிவுச் சின்னங்களும் காட்சிகளாக இருக்கின்றன. அடுக்குமாடிக் கூடங்களில் கலைக்கூடங்களின் வகைப்பாடுகள் நிரம்பியுள்ளன. கனடாவின் பெருநகரங்கள் ஒவ்வொன்றிலும் தொல்லியல் காட்சிக்கூடங்களும் நவீனக்கலைக்கூடங்களும் நிரம்பியிருக்கின்றன. அமெரிக்கப் பெருநகரங்களில் சந்தைகளே காட்சிக் கூடங்களாக ஆக்கப்பட்டுள்ளன.
வார்சாவின் அருகில் இருக்கும் அரண்மனையொன்றில் அரண்மனைக்குள் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்கள், அதற்கு வெளியே அழகிய இயற்கையான தோட்டக்காட்சிகள், படகு மிதக்கும் நீரோடைகள், பெரும்பூங்கா என விரிந்துகிடக்கிறது விலானொவ். அவற்றின் அருகில் நவீன ஓவியங்களின் காட்சிக்கூடம் ஒன்றும் இருக்கிறது. அங்கே ஓவியர்களும் கலைஞர்களும் வேலைசெய்துகொண்டிருப்பார்கள். இவற்றையெல்லாம் பார்ப்பதற்கு இலவசமாகத் தருவதில்லை. நான்கைந்து காட்சிக்கூடங்களில் ஏதாவதொன்றுக்கு இரண்டுக்கோ கட்டணம் இருக்கும். கட்டணம் வைப்பது அவ்வப்போது மாற்றப்படும். அதன் மூலம் கிடைக்கும் வருமானம் அவ்விடத்துப் பரிமாரிப்புக்குப் போகும். கலைஞர்களின் பொருட்கள் அங்கே விற்பனைக்கும் கிடைக்கும். இதுபோன்ற பல்நிலை - பல்நோக்குக்கூடங்கள் இந்தியாவில் நான் கண்டதில்லை.
கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை என்றொரு அறக்கட்டளை இருக்கிறது என்பதை 30 ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருக்கிறேன். இந்திரா பார்த்தசாரதியின் நாவலொன்றுக்குக் கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை, திருமதி ரங்கம்மாள் விருது அளித்தது. அவ்விருது கிடைத்த ஆண்டு 1992 அல்லது 93 ஆக இருக்கலாம். அதற்கு முன் அந்தப் பெயர் அறிமுகம் இல்லை. அவர்களின் சிறிய பத்திரிகை விளம்பரம் வழியாகப் பெறப்படும் நாவல் பனுவல்களுக்கு மதிப்புமிக்கப் பணப்பரிசை வழங்குவதைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.எழுத்தாளருக்கு மட்டுமல்லாமல் நூலைப் பதிப்பித்த பதிப்பகத்திற்கும் விருதுத்தொகையில் ஒருபங்கு கிடைக்கும். பதிப்பகங்கள் அதன் இணையப்பக்கத்திற்குச் சென்று அறிவிப்பைப் பார்த்து அனுப்பிவைக்கலாம்.
அதிகமும் வெளியே அறியப்படாத புதிய எழுத்தாளர்களுக்கெல்லாம் திருமதி ரெங்கம்மாள் விருது கிடைத்துள்ளது என்பது எனக்குத் தெரியும். தனது இளமைக்கால மன அழுத்தங்களையும் கிராமிய வாழ்வில் சாதியப் பிளவுகள் உருவாக்கும் வன்முறைக் காட்சிகளையும் பதிவுசெய்து நாவல்கள் -பரணி, சங்கவை - எழுதிய ஜெயசாந்திக்கு 2013 இல் விருது கிடைத்தது. அப்போதுதான் அந்த அறக்கட்டளையையும் அவர்களின் தொழில் மற்றும் கலையார்வம் பற்றியும் தெரிந்துகொண்டேன். கலைக்கூடம் பற்றியும் கேள்விப்பட்டுப் பார்க்கும் ஆசை இருந்தது.
அவ்வப்போது கோவைக்கு வந்துபோன காலங்களில் பார்க்க நினைத்த ஆசை ஆசையாகவே கழிந்தன. அதன் இணையதளப்பக்கங்களுக்குள் சென்று ஓவியங்களைப் பார்த்திருந்த போதிலும் நேர்நிலையாகப் பார்க்கவேண்டும் என்ற விருப்பம் கூடியது. இப்போது கோவையிலே தங்கும் வாய்ப்பு ஏற்பட்டு நான்கு மாதங்கள் ஆனபின்பும் அந்த ஆசையை நிறைவேற்றும் நாட்கள் தள்ளிப்போய்க் கொண்டிருந்ததில் ஒரு தவிப்பும் சேர்ந்துகொண்டது. கோவையில் இருக்கும் ஜீவாநந்தன், சின்னராஜ் போன்ற ஓவிய நண்பர்களு்ம் அக்கலைக்கூடம் பற்றிச் சொல்லியிருந்தார்கள்.கடைசியாக நேற்று அந்த ஆசை நிறைவேறிவிட்டது. நான் போனதோடு மாணாக்கர்களையும் அழைத்துக் கொண்டு போகும் வாய்ப்பும் ஏற்பட்டது.
அந்த வாய்ப்பை உருவாக்கியதின் பின்னணியில் குமரகுரு கல்வி நிறுவனங்களில் செயல்படும் ஒரு புதிய கல்வி முறை இருக்கிறது. வழக்கமான பல்கலைக் கழகத் தாள்களுக்கிடையே சிறிய படிப்பாக - ஒருவாரப் படிப்பாக வழங்கப்படும் தாள்கள் இங்குண்டு. ஆசிரியர் தனி விருப்பங்கள் பாடங்களாக மாற்றப்படும். படமெடுத்தல், கிரிக்கெட் விளையாட்டில் ஒரு பயிற்சி( பவுலிங்) யோகா, மனித உரிமை, ஆங்கிலத்தில், தமிழில் மேடைப்பேச்சுக்கலை, வணிகவியல், மேலாண்மையியல் சார்ந்து தணிக்கை, பங்குகளில் முதலீடு, புள்ளிவிவரப்படிப்பில் செயற்கை உணர்வு நிலை, உளவியலில் தனிநபர் நடத்தைகள் என்பதுபோன்றவற்றில் உருவாக்கப்படும் சிறிய பயிற்சி வகுப்புகளை ஒரு வாரம் முழுவதும் ஓராசிரியரிடம் கற்றுக்கொள்ளலாம். அப்படியான பயிற்சி வகுப்பாக ”அரங்கக்கலையும் அழகியலும்” என்பதைக் கற்பிக்கும் வாய்ப்பை உருவாக்கினேன். வேறுவேறு துறைகளில் இருக்கும் மாணாக்கர்களிலிருந்து கலப்பாக உருவாக்குவதே இந்தப் பாடங்களின் நோக்கம்.
அரசியல் அறிவியல், உளவியல், வணிகவியல், காட்சித் தொடர்பியல், தமிழ் எனப் பலதுறைகளிலிருந்து வந்த 17 மாணாக்கர்கள் எனது அரங்கக்கலைப் படிப்பைத் தேர்வுசெய்தார்கள். அவர்களுக்கு வகுப்பறை விரிவுரை, செய்முறைப் பயிற்சி, காணொளி வகுப்பு போன்றவற்றோடு கலைக் கூடத்தைப் பார்வையிடல் என்பதையும் பாடத்திற்குள்ளாகவே இணைத்துக் கொண்டேன். அதனை நிறைவேற்றும் பொருட்டுக் காலை 10 மணிக்குக் கஸ்தூரி சீனிவாசன் கலைக்கூடத்தில் இயங்கும் ஓவியக்கூடங்கள், சிற்பக்கூடங்கள், ஜவுளிக்காட்சியகங்கள் என ஒவ்வொன்றாகப் பார்த்து முடித்தபோது இரண்டு மணிநேரம் கடந்திருந்தது.
கோவையின் முதன்மையான தொழில் அதிபர்களின் ஜவுளித்தொழில் பின்னணியில் இயங்கும் கலைக்கூடத்தில் ஓவியக்கலையின் பலதரப்புக் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்து இந்தியப்பரப்புகள் பயணங்கள் வழியாக வரையப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வெவ்வெறு பின்னணியில் மனிதப்பாத்திரங்களின் முகங்கள், அவர்களின் ஆடைகள், பண்டங்கள் என்பன வரையப்பெற்ற ஓவியங்கள் வழியாகக் கிடைக்கின்றன. இந்தியாவின் முதன்மையான ஓவியர்களின் மரபு ஓவியங்களும், நவீன ஓவியங்களும் அங்கே வரிசை கட்டி நிற்கின்றன. இந்திய ஓவியங்கள் மரபுநிலை, நவீன நிலை எனப்பிரிக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. அதேபோல் ஐரோப்பிய ஓவியங்களும் வரிசைப்படுத்தப் பட்டுள்ளன. ஒவ்வொரு காட்சி அரங்குகளிலும் சிற்பங்களும் வைக்கப்பட்டுள்ளன. தரைத்தளத்திலும் முதல் தளத்திலுமாக 17 அறைகளில் கவனமாக வரிசைப்படுத்தப்பட்டுப் போதிய வெளிச்ச அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. முன்பே தகவல் தெரிவித்து அனுமதிபெற்றுப் போனதால் மாணவர்களுக்கு விளக்கிச் சொல்ல ஏற்பாடும் செய்திருந்தார் அதன் பொறுப்பாளர்.
உள்ளே இருக்கும் படங்களைப் பதிவுசெய்ய அனுமதி இல்லை என்பதால் ஜவுளிக்காட்சி அகத்தைப் பார்ப்பதையும் கேட்பதையும் மட்டும் அனுமதி பெற்றுப் படமெடுத்துக்கொண்டோம். அரங்கின் வாசலில் அமர்ந்து எங்கள் வருகையைப் பதிவுசெய்து விட்டுத் திரும்பினோம். கோவை நகருக்கு நிதானமான பயணம் மேற்கொள்ளும் ஒருவர் பார்க்க வேண்டிய இடம் இந்தக் கலைக்கூடம். அவினாசி சாலையில் அரவிந்த் கண்மருத்துவமனைக்குப் பக்கத்தில் விமானநிலையம் போகும் சாலையில் இருக்கிறது. நமது பிள்ளைகளுக்குக் காட்டி விளக்கிச் சொல்ல அங்கே நிறைய இருக்கின்றன.
கருத்துகள்