மதுரைப் புத்தகக் காட்சிச் சந்திப்புகள்

 பெயர் மறந்த நண்பர்

-----------------------------
நேற்று மதுரைப் புத்தகக் கண்காட்சியில் இவரைச் சந்தித்தேன். நான் எழுதிய இரண்டு மூன்று கட்டுரைகளில் இவரின் பெயரைக் குறிப்பிட நினைத்தேன். அப்போதெல்லாம் நினைவுக்கு வரவே இல்லை. ஆனால் அவரது அப்பா பெயர் நினைவில் இருந்ததால் நெல்லை வேலாயுதத்தின் மகன் என்று குறிப்பிட்டேன். நேற்றுச் சந்தித்தவுடன் அதை உடனடியாகச் சொல்லிவிட்டேன். உடனே தனது பெயரை - ராஜன் என்று சொல்லி நினைவுபடுத்தினார்.
ராஜன் - மீராவின் அன்னம் புத்தக நிலையம் மதுரையில் தொடங்கப்பட்ட போது அதன் மேலாளர்/ விற்பனையாளர்/ இலக்கியச் சந்திப்புகளுக்கான பொறுப்பாளர் எனப் பல முகங்கள் காட்டியவர். மதுரை அன்னம் தொடங்கப்பட்ட ஆண்டு ஆண்டு 1983 என்பதாக நினைவு. தொடங்கப்பட்ட இடம் திறனாய்வாளர் கோ.கேசவனுக்கு உறவுடைய ஒருவரின் இடம் என்பதும் நினைவில் இருக்கிறது. அங்குதான் மதுரை நண்பர்கள் என்ற புதிய இளைஞர் வட்டம் உருவானது. இருபதுகளில் இருந்த அவ்வட்டத்து உறுப்பினர்களே கி.ரா. 60 / மணிவிழாவைப் பொறுப்பேற்று நடத்தினார்கள். அதன் அச்சாணியாக இருந்தவர் ராஜன்.
ராஜன் அமெரிக்கன் கல்லூரியில் எனக்கு இளவல். படித்தது வணிகவியல் என்றாலும் இலக்கிய ஆர்வத்தால் அறிமுகம். தமிழின் முதன்மை வரிசை எழுத்தாளர்களில் ஒருவரான. யுவன் சந்திரசேகர் இவரது வகுப்புத்தோழர். இவர்களையெல்லாம் இணைக்கும் புள்ளியாக இருந்தவர் சுந்தரன் என அப்போது அழைக்கப்பட்ட சுந்தர்.காளி. நீண்ட இடைவெளிக்குப் பின் சந்தித்துப் பெயரைப் புதுப்பித்துக்கொண்ட நாள் நினைவில் இருக்கப் போகிறது. புத்தகங்கள் மட்டுமே நினைவலைகளை உருவாக்குவதில்லை; புத்தகச் சந்தையில் சந்திக்கும் நண்பர்களும் கூட நினைவலைகளை உருவாக்கி விடுகிறார்கள்.
ராஜனைப் போலவே நீண்ட இடைவெளிக்குப் பின் சந்தித்த இன்னொருவர் சேக் அப்துல்லா. எனது மாணவர். அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை படித்து விட்டு என்னிடம் ஆய்வு செய்யவேண்டுமென்ற விருப்பத்தில் நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகத்தமிழ்த்துறைக்கு வந்தவர். கவிஞர் அபியின் கவிதைகளைத் தனது எம்பில் பட்டத்திற்காக வாசித்து ஆய்வு செய்தவர். கவி அபியின் கவிதைகள் சுழன்றுசுழன்று நகர்கின்றன என்றொரு சொல்லைக்கண்டுபிடித்தார். அதன் தொடர்ச்சியில் நானும் திரும்பவும் அபியின் கவிதைகளை அந்தக்கோணத்தில் வாசித்தேன். வாசித்தபின் அவரது கவிதை வடிவம் வட்டப்பாதையில் சுழலும் புதிர்களால் ஆனது மட்டுமல்ல; சிலந்தி வலையின் ஊடும்பாவுமான கோடுகள் வழியாகவும் பயணம் செய்யப் பழக்கும் சொல்முறை வடிவம் கொண்டது என்று கண்டுபிடித்தோம். முதன்மையாக அவரது கவிதை வடிவத்தை எம்பில் பட்ட ஆய்வேட்டில் எழுதலாம். மற்ற கூறுகளையும் உரிப்பொருள் தேர்வுகளையும் அவற்றுக்குள் இருக்கும் இசுலாமிய ஆன்மீகப்பார்வை குறித்தும் முனைவர் பட்டத்தின் இயல்களை அமைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தோம். ஆனால் எனது வார்சா நகர்வால் எம்பில் பட்டத்தோடு என்னிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார். வெவ்வேறு சுயநிதிக் கல்லூரிகளில் பணியாற்றிவிட்டு இப்போது இளையான்குடி கல்லூரியில் பணியாற்றுகிறார். சேக்கின் சந்திப்பும் மகிழ்ச்சி அளித்த ஒன்று.

பத்திநாதன்
-----------------
இந்தியாவில்/தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதிகளின் குரலாக- வெக்கையின் தவிப்பாக இருந்தவர் பத்திநாதன். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் புலம் திரும்பினார். இப்போது பயணியாகத்திரும்பியுள்ளார்.
2019 டிசம்பர்,மன்னாரில் சந்தித்தபின் இப்போது மதுரை புத்தகம் சந்தையில் பார்க்கும் வாய்ப்பு. பேசிக்கொண்டிருந்தபோது புதிய ஆசையொன்றைக் கிளறிவிட்டார்.' நீங்கள் ஏன் ஒரு நாவல் எழுதக் கூடாது'- படிகள் இல்லாத வட்டக் கிணற்றின் ஆழத்தில் உறங்கும் ஆசை அது. நினைவூற்றால் நிரம்பித் தளும்ப வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேடிப்படித்த நூல்கள் அல்லது பழைய புத்தகக் கடையில் கிடைத்த நூல்கள்

அயல் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள்

இலக்கியவியலும் தொல்காப்பியப் பொருள் கூறலும்