உலகமே வேறு; தர்மங்களும் வேறு: புதுமைப்பித்தனின் இரண்டு கதைகள்


நிகழ்காலத் தமிழ் வாழ்வில் கலை இலக்கியத்தின் இடம் என்ன?
பொதுவான இந்தக் கேள்வியைக் கூடத் தள்ளி வைத்து விடலாம்.

கல்லூரியில் படிக்கும் ஒரு மாணாக்கரிடம் கவிதையை நீங்கள் வாசித்தது உண்டா? அல்லது வாசிக்கக் கேட்டதுண்டா? என்று கேட்டுப் பாருங்கள். முதுகலை படிக்க வரும் மாணவிகளிடம் நான் கேட்டுப் பார்த்திருக்கிறேன்.(கலைப் பிரிவுகள் மாணவிகளுக்குரிய பாடங்களாகி விட்டன) திரைப்படப் பாடல்களைக் கேட்டதையே மாணாக்கர்கள் விடையாகத் தருகிறார்கள். ஒவ்வொரு பெரு நகரங்களிலும் விடாது ஒலித்துக் கொண்டிருக்கும் எப். எம். வானொலிகளில் தொலை பேசியில் அழைத்துப் பேசிப் பாட்டுக் கேட்கும் நேயர்கள் நிரம்பிய இந்தக் காலகட்டத்தில் அவற்றில் ஒலிக்கும் பாடல்களே கவிதைகளாகக் கருதப் படுகின்றன. அந்தப் பாடல்களை எழுதிய பாடலாசிரியர்களே தமிழின் ஆகச் சிறந்த கவிகளாகக் கருதப் படுகின்றனர்.

இதே கேள்வியை நாடகத்தை நீங்கள் பார்த்ததுண்டா? என்று கேட்டுப் பார்த்தால் தமிழ்ச் சமூகத்தின் பெரும்பாலோர் தொலைக்காட்சித் தொடர்களையே நாடகங்கள் என்று குறிப்பிடுகிறார்கள். நாடகம் என்பது அடிப்படையில் மேடையில் நடக்கும் ஒரு கலை. நடிகனும் பார்வையாளனும் நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கும் ஓர் உயிருள்ள வடிவம். முதல் நாள் மேடையேற்றியதிலிருந்து அடுத்த நாள் மேடையேற்றம் மாறிவிடக்கூடிய சிறப்புடைய வடிவம் என்ற வேறுபாடுகள் எல்லாம் தெரியாமல் போய்க்கொண்டிருக்கின்றன. அநேகமாக நாடகக் கலையின் வீழ்ச்சி தொலைக்காட்சித் தொடர்களின் பரவலில் காணாமல் போய்விட்டன என்றே சொல்ல வேண்டும்.

கேட்பதற்கும் பார்ப்பதற்கும் உரிய கவிதைக்கும் நாடகத்திற்கும் இந்தக் கதி என்றால் ஒருவர் சொல்லப் பலர் கேட்பதாக இருந்த கதை வடிவத்தின் நிலையைச் சொல்லவே வேண்டிய தில்லை. ஒவ்வொரு ஊரிலும் இருந்த பொதுச் சாவடிகளில்- மந்தை வெளியில்- மண்டுக் கல்களில் உட்கார்ந்து ஒரு சின்னக் கதையைப் பல மணி நேரம் நீட்டி நீட்டிச் சொல்லிய கதை சொல்லிகள் காணாமல் போய் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் ஆகி விட்டன.

வடமாவட்டத்து கூத்துக்கலை நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு பாரதக் கதையைப் பாராயணம் செய்த பின்பே தொடங்கினார்கள். அல்லியரசாணி கதை, புலந்திரன் களவு, அபிமன்னன் சண்டை போன்ற பெரிய எழுத்துக் கதைகள் பாராயணம் செய்யப் பட்டதை நான் கேட்டிருக்கிறேன். மழை வேண்டுமென்றால் பாரதக் கதையின் விராட பர்வம் வாசிக்கப் பட வேண்டும் என நம்பிய கிராம சமுதாயம் கதையோடு இருந்த தொடர்பை அறுத்துக் கொண்டு விட்டது.முதல் ஆட்டம் சினிமாப் பார்க்கப் பக்கத்துச் சிறு நகரத்திற்கு இளைஞர்களாகிய நாங்கள் கிளம்பிப் போகும் போது ஆரம்பித்த கதையைப் படம் முடிந்து திரும்பி வரும்போதும் சொல்லிக் கொண்டிருந்த கதை சொல்லிகள் எங்கள் ஊரில் இருந்தார்கள். 1960 கள் வரை இருந்த கதை சொல்லிகள், கதை சொல்லிகள் மட்டும் அல்ல; கிராமத்தின் காவலாளிகளும் கூட.

கிராமங்களில் கதை சொல்லிகள் எண்ணிக்கைகள் குறைவதும் அச்சு ஊடகங்களான இதழ்களிலும் புத்தகங்களிலும் வாசிப்பதற்கான கதைகளை எழுதிய கதாசிரியர்களின் உருவாக்கமும் சமகால நிகழ்வுகள். கதை சொல்லிகளின் இடத்தைக் கைப்பற்றிய கதை எழுத்தாளர்கள் கதையின் சொல் வடிவத்தை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் எழுத்துக்கலை வடிவம் என்னும் புதிய வடிவத்தைத் தேர்ந்து கொண்டு புதிய கதைகளைச் சின்னச் சின்ன வடிவத்திலும் நீண்ட வடிவத்திலும் எழுதிக் காட்டினார்கள்.

சில கதாபாத்திரங்கள் மட்டுமே இடம் பெற, ஒன்றிரண்டு நிகழ்வுகளை ஒரு மைய விவாதம் சார்ந்து தொடர்பு படுத்திக் காட்டுவதன் மூலம் நிகழ்கால வாழ்வின் மீதான கேள்வியை- சிந்தனையை உண்டாக்கும் நோக்கம் கொண்டதாகச் சிறுகதை வடிவம் படிப்படியாக மாறியது என்றால், அதன் மறுதலையான நாவலின் வடிவம். வாழ்க்கையை விஸ்தாரமான இடப் பின்னணியில், நீண்ட காலகட்டத்தை உள்ளடக்கியதாக, பலவிதமான கதாபாத்திரங்கள் உலவும் ஒன்றின் கலவையாக உருக்கொண்டு முழுமையடைந்ததைச் சொல்லும் இக்கால இலக்கிய வரலாற்று நூல்கள் இல்லை. அளவு கருதி சிறுகதை, நாவல் என இரு வேறு வடிவங்களில் அழைத்தாலும் இரண்டுமே புனைவுத் தன்மை என்னும் பொதுநிலைப் பட்டன என்பதைத் திரும்பவும் விளக்கிச் சொல்ல வேண்டியுள்ளது.

புனைவு என்பது எப்படி விளக்குவது? சரியாகச் சொல்வதனால் புனைவு என்பது பல உண்மைகளை ஒன்றாக்கிப் பொய்ம்மையெனக் காட்டும் மாயம்; அதே நேரத்தில் கதைக்குள் இருக்கும் எல்லாமும் பொய்யல்ல; கதை நிகழும் வெளி கதையில் சொல்லப்படும் அந்த இடமாக இருக்காது. பொய்யான ஒரு வெளியாக அமையும். நடந்ததாகச் சொல்லப்படும் காலத்தில் அந்நிகழ்வு நடந்ததாக இல்லாமல் இருக்கலாம். பாத்திரங்களின் பெயர்களும் மாற்றம் பெற்றிருக்கலாம். எல்லாவற்றையும் மாற்றம் செய்து விடும் வேலையைத் திறம்படச் செய்யும் ஆசிரியன் புனைவில் தேர்ச்சி பெற்றவனாகிறான்.

எல்லாவற்றையும் மாற்றம் செய்த போதும் நடந்த கதை என்பதை நம்பச் செய்வதில் புனைகதை ஆசிரியனின் வெற்றி இருக்கிறது. இப்படி நம்பச் செய்வதில் தான் நவீனப் புனைகதை, பழைய புராணக் கதைகளான- பாரதம் மற்றும் ராமாயணக் கதைகளின் மையக் கதையிலிருந்தும் கிளைக்கதையிலிருந்தும் மாறித் தோன்றுகின்றன. கிராமத்து மேடையில் உட்கார்ந்து சொல்லப் பட்ட தொல்கதையிலிருந்தும் நவீன கதை தன்னைப் புதுப்பித்துக் கொண்டது இந்த நம்பகத்தன்மையை உருவாக்கியதில் இருக்கிறது என்பதை நமது தலைமுறையின் மைய நீரோட்ட வாசகக் கும்பல் உணராமல் வழி தவறிக் கொண்டிருக்கிறது. வழி தவறிப் போகும் ஆடுகளை மேய்க்கக் கூடிய மேய்ப்பர்களும் கூட வழி தவறத்தான் செய்கின்றனர்.

கதை மண்டுகளில் சொல்லப்பட்ட தொல்கதைகளான பட்டி விக்கிரமாதித்தன் கதை, தெனாலி ராமன் கதை, ஏழு கன்னிமார் கதை, குலமரபுக் கதைகள், குலதெய்வக் கதைகள் எல்லாம் ஒருவித அமானுஷ்யத்தோடு இருந்தன. அவற்றை நீங்கள் கேட்கலாம். கேட்டுத் தெரிந்து கொண்டு அடுத்த தலைமுறைக்கு நீங்கள் சொல்லலாம். கதையை நீங்கள் நம்ப வேண்டும் என்பது இல்லை; முன்னொரு காலத்தில் அவர்கள் அப்படி வாழ்ந்திருக்கலாம். அவர்களின் வாழ்க்கையிலிருந்து உங்களுக்குத் தேவையானவை ஏதாவது இருந்தால் எடுத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் கதையைக் கேட்ட சந்தோசத்தோடு களைந்து போகலாம். ஆம் சொல்வதற்கான தொல் கதைகள் தான் அவை. ஆனால் நம் காலத்தில் எழுதப்பட்ட நவீனப் புனைகதைகள் சொல்லப் படுவதற்கான கதைகள் அல்ல. வாசிக்கப்படுவதற்கான கதைகள்.

நவீனப் புனைகதைகளை வாசிக்கும் போது நிகழ்கால வாழ்வின் மீதான விவாதங்களை – அதன் இருப்பின் முரண்பாடுகளை- தனிமனிதர்கள் எடுக்கும் முடிவுகளின் ஆச்சரியங்களை- அப்பாவித்தனத்தை-எடுத்த முடிவால் சந்திக்கும் திகைப்பை- திகைத்து நிற்கும்போது கிடைக்கும் மனிதாய உறவுகளை- உறவுகளின் கறுப்பு X வெளுப்பான பக்கங்களை – எதிர்பாராத புதிர்களின் முடிச்சுகளை – முடிச்சுகளின் அவிழ்ப்பு தரும் சுகத்தை- சோகத்தை என அவை முன் வைக்கும் எல்லாம் நம் நிகழ்காலம் சார்ந்தவை. அந்த நிகழ்காலத் தன்மை தான் அவற்றைக் கதை அல்ல, நிஜம் என நம்ப வைக்கின்றன.

நிஜம் என நம்ப வைப்பதில் காலத்திற்கும், பாத்திரங்களுக்கும் புனைவுத் தன்மையை ஊட்டும் கதாசிரியன் வெளியை யதார்த்தமாகக் காட்டிடவே விரும்புகின்றனர். அந்த வகையில் கதையின் முக்கிய கூறுகளான காலம், இடம், பாத்திரம் என்ற மூன்றில் இடம் எனப்படும் வெளியே முதன்மையானது எனச் சொல்லலாம். தமிழில் எழுதப் பட்ட கதைகள் – அவற்றை எழுதிய ஆசிரியர்கள் - குறிப்பான வெளிகளை உருவாக்கித் தருவதில் அதிகக் கவனம் செலுத்திடவே செய்துள்ளனர். நவீனக் கதைகளாக இருப்பதன் காரணங்களாக மற்றவர்கள் எதனை நினைக்கிறார்களோ தெரியவில்லை. எனக்கு நவீன கதை என்பது வெளி மற்றும் பாத்திரங்களை விவரித்துக் காட்டும் எழுத்து முறையில் தான் இருக்கிறது என்பதாகவே தோன்றுகிறது.

நவீனத் தமிழ்ச் சிறுகதையின் மூலவர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் புதுமைப்பித்தனின் இரண்டு கதைகளை இங்கே நினைவுக்குக் கொண்டு வருவோம். ஒன்று சங்குத் தேவன் தர்மம் (காந்தி, 1934,ஏப்ரல், 25) ; இன்னொன்று பொன்னகரம் (மணிக்கொடி. 1934,மே,13 ). இவ்விரண்டு கதைகளையும் அவரது இரண்டாவது, மூன்றாவது கதைகளாகப் புதுமைப்பித்தன் கதைகளின் செம்பதிப்பு ஆசிரியர் ஆ.ரா.வேங்கடாசலபதி வரிசைப்படுத்தியுள்ளார்.

“ முருக்குப் பாட்டி முத்தாட்சியென்றால் சிறு குழந்தைகளுக்குத்தான் தெரியும். ” –இது சங்குத் தேவன் தர்மம் கதையின் தொடக்கம்.
“ பொன்னகரத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?”

இது பொன்னகரம் கதையின் தொடக்கம். இவ்விரு தொடக்கமுமே ஒரு சொல்கதையின் தொடக்கமாகத் தான் இருக்கின்றன. ஆனால் இவ்விரு கதைகளிலும் வெளியை விவரித்து எழுதும் புதுமைப்பித்தன் வரிகளை வாசித்துப் பாருங்கள்:


“ சாயங்காலம் ஐந்தரை மணியிருக்கும் முறுக்குப் பாட்டி தங்கவேலு ஆசாரியின் வீட்டுத் திண்ணையில், சுவரருகில் சாய்ந்து, காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறாள். செம்பாதி நரைத்த தலை. ஜீவியத்தில் பட்ட கஷ்டங்களைப் படம் போட்டுக் காட்டுவது போல் கோடுகள் நிறைந்த முகம்.’பாம்படமில்லாது புடலங்காய்த் துண்டுகள் மாதிரித் தொங்கும் காதுகள்” (சங்குத் தேவன் தர்மம்). முத்தாச்சியை அறிமுகப் படுத்தும் புதுமைப்பித்தன் அக்கதையின் மையக் கதாபாத்திரமான சங்குத்தேவனை இப்படி அறிமுகப் படுத்துகிறார். “ தலையில் பெருத்த முண்டாசு, நீண்ட கிருதா, வரிந்து கட்டின அரை வேஷ்டி, திடகாத்திரமான சரீரம், அக்குளில் ஒரு குறுந்தடி”
இவ்விரு பாத்திரங்களையும் சந்திக்கச் செய்து உருவாக்கிய சங்குத் தேவன் தர்மம் கதை ஒரு விதத்தில் வசதியானவர்களிடம் கொள்ளை அடித்துத் தேவையானவர்களுக்குக் கொடுக்கும் ராபின்குட் பாணி நிகழ்ச்சியைக் கொண்டதுதான். திருடன் எனப் பொதுமனம் சொல்லும் –பயப்படும் சங்குத்தேவனின் இன்னொரு முகத்தை – திருட்டுக்கான தர்மத்தை முன்வைக்கும் அந்தக் கதை எல்லா வெளியிலும் நடந்து விடக்கூடிய கதை அல்ல; அதன் வெளி நிச்சயம் திருநெல்வேலி மாவட்டத்துக்குரியதாகத் தான் இருக்க முடியும்.
தன்னுடன் நடந்து வரும் மனிதன் தான் சங்குத் தேவன் எனத் தெரியாமல் அவனை நினைத்துப் பயந்து கொண்டு அவனது துணையுடன் செல்லும் முத்தாட்சி பயப்படுவதே தன்னிடம் இருக்கும் பாம்படத்தை சங்குத்தேவன் திருடிக் கொண்டு போய்விடக் கூடாது என்பதற்காகத் தான். சங்குத் தேவன் பற்றிய பொது வெளி பிம்பங்களை மறைக்காமல் சொல்லிக் கொண்டே வரும் முத்தாச்சியிடம் ,

“ ஏ ஆச்சி! நில்லு ,ஒரு சமுசாரம், நீ ஏழெதானே? இன்னா. இதெ வச்சுக்க! முதல் பேரனுக்கு என் பேரிடு!”
“ நீங்க மவராசரா இருக்கணும். என்ன பேரு இட?” என்று சொல்லிக் கொண்டே , தனது எதிர்பாராத அதிர்ஷ்டத்தில் மதி மயங்கிக் கையை நீட்டினாள்.
“ சங்குத் தேவரின்னு”

தன்னுடன் தனக்குப் பாதுகாப்பாக வந்தவன் தான் சங்குத் தேவன் என அறியும் விதமாகக் கதையை முடித்துள்ள புதுமைப்பித்தன் இந்தக் கதையை நிச்சயம் வேறு வெளியில் நடைபெறுவதாக எழுதி இருக்க முடியாது. அந்தக் கதை வெறும் வெளி சார்ந்த அடையாளம் கொண்ட கதை மட்டுமல்ல; கதையில் இடம் பெற்றுள்ள பாத்திரங்களின் சமூக அடையாளத்தையும் குறிப்பாகக் கொண்ட கதை. அந்தப் பாத்திரங்களை வெளியோடு சேர்த்து வாசித்துக் கொள்ளும் போதுதான் அதன் தீவிரம் வாசகனுக்குப் போய்ச் சேரும்.
ஆனால் இன்னொரு கதையான பொன்னகரம் குறிப்பான வெளியில் பாத்திரங்களை நிறுத்தியிருந்தாலும் ரயில்வே ஸ்டேஷன்கள் இருக்கும் எல்லா நகரங்களிலும் நடக்கக் கூடிய கதை தான். பொன்னகரத்தில் வரும் அம்மாளுவும் முருகேசனும் நகரத்துச் சேரிகளின் வகை மாதிரிக் கதாபாத்திரங்கள் (Typed Characters)மட்டுமல்ல; கதையின் களனான அந்த இடப்பின்னணியே தமிழ் நாட்டு நகரங்களின் ரயில் நிலைய வகை மாதிரி(Typed) யாகவே தோன்றுகின்றது.

ரயில்வேத் தண்டவாளத்தின் பக்கமாக, சாராய டிப்போவுக்குப் போகிறதே ஒரு சந்து. அதுதான் அங்கு ‘மெயின்’ ரஸ்தா .கைகோர்த்த நான்கு பேர் வரிசை தாராளமாகப் போகலாம். எதிரே வண்டிகள் வராவிட்டால் இதற்குக் கிளையாக உள்வளைவுகள் உண்டு. முயல்வளைகள் போல – இந்த வர்ணனை இன்றும் பெருநகரங்களின் ரயில் சந்திப்புகளுக்குப் பொருந்தும் வர்ணனைதான்.

“ பொன்னகரத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?” என்று தொடங்கி, “என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே ! இதுதான் ஐயா, பொன்னகரம்! ” 
என்று முடிகிறது. வினாக்குறியில் கதையைத் தொடங்கி ஆச்சரியக் குறியில் முடிக்கும் புதுமைப்பித்தனின் இந்தக் கதை மிகச்சிறிய கதை. மொத்தம் இரண்டே பக்கங்கள். இரண்டு பக்கங்களில் எழுதப் பட்ட பொன்னகரம் எழுப்பும் கேள்வியோ இன்னும் இரண்டு நூற்றாண்டுகள் கழிந்தாலும் உறுதியாக விடை சொல்லி விட முடியாத கேள்வி ஆகும்.

பாலினம் சார்ந்து ஆண் X பெண் எனப் பிரித்துப் பேதம் காட்டும் மனித குலம், பெண்ணை இரண்டாம் பாலாக ஆக்கிக் காட்ட அவளுக்கு வழங்கிய அற்புத தோன்றா அணிகலனான கற்பு என்பதை விவாதப் பொருளாக்கிய கதை அது. கற்புக் கடம்பூண்டு ஒழுகுதல் பத்தினிப் பெண்களின் ஒழுக்கம் தான். ஆனால் ஒரு பெண் பத்தினியாக இருக்க வேண்டும் என்றால் அவளது கணவன் உயிரோடு இருக்க வேண்டும் அல்லவா? உயிரோடு மட்டுமல்ல; உரத்தோடும் இருக்க வேண்டுமன்றோ? அந்தக் கேள்வியை எழுப்புவதற்காக ஒரு தம்பதியின் வாழ்க்கையின் ஒரு சிறு துண்டை வெட்டி எடுத்து நம்முன் நிறுத்துகிறார் புதுமைப்பித்தன். சேரியில் வாழும் அம்மாளு- முருகேசன் தம்பதியினரின் வாழ்க்கையில் ஒரே நாள் தான் நமக்குக் காட்டப்படுகிறது .

குஷி மூடில் இருந்த முருகேசனும் அவனது ஜட்கா வண்டிக்கான குதிரையும் சேர்ந்து தண்ணி போட்டதால் குதிரைக்குப் பலமான காயம்; முருகேசனுக்கு ஊமைக்காயம். காயம் பட்டுக் கிடக்கும் முருகேசனுக்குத் தேவை பால்கஞ்சி. அம்மாளிடமோ கையில் காசில்லை. இன்னும் இரண்டு நாள் போனால் அவள் வேலை பார்க்கும் இடத்திலிருந்து கூலி கிடைக்கலாம். ஆனால் காயம் பட்ட கணவனுக்குப் பால் கஞ்சி தருவதை இரண்டு நாள் தள்ளிப் போட முடியுமா?.

அம்மாளு தண்ணீர் எடுக்கப் போனாள். போகும் போது அவனைப் பார்த்தால். அவன் நீண்ட நாட்களாக அம்மாளு மீது ‘கண் ’ வைத்திருந்தவன். தண்ணீர் பிடித்தாள். திரும்பி வந்தாள். கும்மிருட்டு. இருவரும் இருளில் மறைகிறார்கள். அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்து விட்டாள். ஆம். புருஷனுக்குப் பால் கஞ்சி வார்க்கத்தான்.

கணவனின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு தனது உடலை இன்னொருவனுக்குத் தந்த அம்மாளுவை ஒழுக்கம் சார்ந்த சமூக மனம் கெட்டுப் போனவள் என்று சொல்லக்கூடும். ஆனால் அதே சமூகம் தான் புருசனைத் தாசி வீட்டுக்குத் தூக்கிச் சென்ற தமயந்தி என்னும் புராணக் கதாபாத்திரத்தையும், கோவலனின் மோக ஆசையை நிறைவேற்றுவதற்காகத் தன்னிடம் இருந்த சிலம்பையும் கழற்றித் தரத் தயாரான கண்ணகி என்னும் காப்பியப் பாத்திரத்தையும் பத்தினிகள் என்று பாராட்டுகின்றன.

அம்மாளுவும் முருகேசனும் வாழும் பொன்னகரம் என்பது ஒரு விதமான உலகம், அதன் தர்மங்களும் வேறு எனச் சொல்ல வந்த புதுமைப்பித்தன் எல்லாக் காலத்திற்கும், எல்லா இடத்திற்கும், எல்லாச் சமூகக் குழுக்களுக்கும் பொருத்தமான வாழ்க்கைக் கோட்பாடுகளும் கருத்தியல்களும் பின்பற்றுதல்களும் இருக்க முடியாது என்பதைச் சொல்லாமல் சொல்லி விடுகிறார்.

ஆம் . ஒரு நவீன கதையைப் படிப்பது என்பது வெறும் பொழுது போக்கல்ல; வாழ்தலின் புரிதல்.

கதைகளை வாசிக்க

1.சங்குத்தேவனின் தர்மம்.


முறுக்குப் பாட்டி முத்தாச்சியென்றால் சிறு குழந்தைகளுக்குத்தான் தெரியும். அவள் நாவல் உலகில் காணப்படும் மனித உருவங்கள்போல் முறுக்கு விற்ற பணத்தினாலோ, ரங்கூனிலிருந்து திடீரெனத் தோன்றும் தமையனின் ஐசுவரியத்தினாலோ கோடீசுவரியாகி விடவில்லை. வறுமையில் குசேலரின் தமக்கை. சமயக் குரவர்கள் இயற்றும் அற்புதங்கள் என்ற செப்பிடு வித்தைகள் நடவாத இந்தக் காலத்தில் அவள் தினந்தினம் காலந் தள்ளுவதுமல்லாமல், தனது ஒரே குமாரத்திக்கு விவாகம் செய்யவும் ஆரம்பித்ததுதான் அற்புதத்திலும் அற்புதம்.

நமது இந்து சமயத்தின் பழைய உலர்ந்துபோன கட்டுப்பாடுகளின் கைதிகளாக ஏழைகள்தாம் தற்போது இருந்து வருகிறார்கள். ஏழ்மை நிலைமையிலிருக்கும் பெண்கள் கொஞ்சக் காலமாவது கன்னிகையாக இருந்து காலந்தள்ள ஹிந்து சமூகம் இடந்தராது. இவ்விஷயத்தில் கைம்பெண்களின் நிலைமையைவிட கன்னியர்கள் நிலை பரிதாபகரமானது. மிஞ்சினால் விதவையை அவமதிப்பார்கள். ஆனால் ஒரு கன்னிகையோவெனின் அவதூறு, உலகத்தின் நிஷ்டூரம் என்ற சிலுவையில் அறையப்படுவாள். பணக்காரர்களான பூலோகத் தெய்வங்களின் மீது சமுதாயக் கட்டுப்பாட்டின் ஜம்பம் பலிக்காது. இவ்வளவும் முத்தாச்சிக்குத் தெரியாது. ஆனால் எப்படியோ வின்டில் (ஜ்ண்ய்க்ப்ங்) துரை பங்களாவில் பங்கா இழுக்கும் மாடசாமி பிள்ளைக்குத் தன் மகளைக் கொடுக்க நிச்சயித்துவிட்டாள். நாளை காலையில் கலியாணம்.

சாயங்காலம் ஐந்தரை மணியிருக்கும். முறுக்குப் பாட்டி தங்கவேலு ஆசாரியின் வீட்டுத் திண்ணையில், சுவரருகில் சாய்ந்து, காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறாள். செம்பாதி நரைத்த தலை, ஜீவியத்தில் பட்ட கஷ்டங்களைப் படம் (ஞ்ழ்ஹல்ட்) போட்டுக்காட்டுவதுபோல கோடுகள் நிறைந்த முகம், பாம்படமில்லாது புடலங்காய்த் துண்டுகள் மாதிரி தொங்கும் காதுகள், “இந்திரன் கலையாய் என் மருங்கிருந்தான்’ எனக் காணப்படும் சம்பிரதாயமாய்ப் புடவை என்ற இரண்டு வெள்ளைத் துண்டுகள் (ஒரு காலத்தில் வெள்ளையாய் இருந்தவை) இவள் பணக்காரியல்லள் என்பதை இடித்துக் கூறின. கையிலிருந்த உலர்ந்த வெற்றிலையை வாயில் போட்டுக்கொண்டு, அதற்குத் துணையாக ஒரு நீளத்துண்டு கருப்பட்டிப் புகையிலையையும் உள்ளே செலுத்தி, கைகளைத் திண்ணையில் துடைத்துவிட்டு, “ஆசாரியாரே! என்ன? வேலையெ சுருக்கா முடியும். மோசம் பண்ணிப்பிடாதீரும்” என்றாள்.

“ஆச்சி! பயப்படாதே, பொழுது சாயிரத்துக்கு மின்னே ஒன் வேலெ முடிஞ்சிடும்!” என்று, தன் கையிலிருந்த பாம்படத்திற்கு மெருகிட்டுக் கொண்டே தேற்றினான் தங்கவேலு ஆசாரி. போன மூன்று மாதகாலமாக மாதாந்தரம் நடந்து, அன்று விடியற்காலை முதல் உண்ணாவிரதமிருந்த முறுக்குப் பாட்டிக்கு இது ஆறுதலளித்ததோ என்னவோ? ஒரு பெருமூச்சுத்தான் வந்தது.

பிறகு சில நிமிஷங் கழித்து, புன்னகையுடன், “நான் கைலாசவரத்துக்குப் போகணும். வழி காட்டுப்பாதை, இன்னம் நான் போய்த்தான் மேலெ வேலையைப் பாக்கணும். எல்லாம் அப்படி அப்படியே கெடக்கு” என்று பின்னும் துரிதப்படுத்தினாள்.

“ஒன் வேலெ அன்னைக்கே முடிஞ்சிடும். அந்தச் சிறுகுளம் சுப்பையர் வேலை வராட்டா. அவர்தான் விடேன் தொடேனுன்னு அலஞ்சு சாமானை நேத்துத்தான் வாங்கிட்டுப் போனார். இல்லாட்டா ஒரு நொடிலெ; இதென்ன பெரிய காரியமா? அது சரிதான், இருக்கட்டும் ஆச்சி. ஒன் வீட்டிலே இதுதானெ முதல் கலியாணம். செலவு என்ன ஆகும்” என்று பேச்சையிழுத்தார் ஆசாரி.

“என்னமோ, ஏளெக்கு ஏத்தாப்பிலே, எல்லாம் சேந்து ரெண்டு நூறு ஆகும்”என்றாள்.

“நகை எம்பிட்டு?”என்று மீண்டும் பேச்சைப் பெருக்கினார் ஆசாரி.

“எல்லாமென்ன, அந்த எங்க வீட்டுக்காரர் போனாரே அவர் போட்டதுதான், என்ன ரெண்டு மோருதம், இப்பொ நீர் அழிச்சுப் பண்ணற ஒரு சோடு பாம்படம், வேறு செலவு என்ன, ஒரு அம்பது, அது கெடக்கட்டும், வேலே என்ன இப்பொ முடியுமா?”என்று மீண்டும் ஒரு முறை கேட்டாள்.

“இதோ! நீதான் பாத்துக் கொண்டிருக்கயே! ஏங் கைக்கிச் செறகா கட்டியிருக்குது? வேலையெ ஒட்டத்தான் செய்யிறேன். அவரசப்படாதே…நீ இந்தச் சமுசாரத்தைக் கேட்டியா? ஊருலெ களவுங்கிளவுமாயிருக்கே? அன்னைக்கி நம்ப மேலப் பண்ணை வீட்டிலெ 2000-த்துக்குக் களவாம்! காசுக்கெட செட்டியாரு பத்தமடைக்கிப் போயிட்டு, வட்டிப் பணத்தை மடிலே முடிஞ்சுகிட்டு வந்தாராம்; மேலப் பரம்பு கிட்ட வாரப்போ, பொளுது பல பலன்னு விடியாப்பிலே, வந்து தட்டிப் பறிச்சுக்கிட்டுப் போயிட்டான்; செட்டியாரு வயித்திலே அடிச்சுக்கிட்டு வந்தாரு. காலங் கெட்டுப்போச்சு! இதெல்லாம் நம்ம கட்டப்ப ராசா காலத்துலெ நடக்குமா?”என்றான் ஆசாரி.

“இம்பிட்டுஞ் சேசுபிட்டுப் போனானே அவனாரு”என்றாள் கிழவி.

“அவன்தான் நம்ம சங்குத்தேவன். எல்லாம் இந்தக் கும்பினியான் வந்த பிறவுதான்! ஊர்க்காவலா எளவா? எல்லாம் தொலைந்து போயுட்டதே!”

“சவத்தெ தள்ளும். எம் பாவத்துலெ வந்து விழாமெ இந்த மூங்கிலடியானும் பேராச்சித் தாயுந்தான் காப்பாத்தணும்…என்ன ஆச்சா?”

“இரு, இரு ஒரு நொடி. இதெ மாத்ரம் ராவித் தாரேன்”என்று சொல்லி, ராவப்பட்ட பாம்படத்தையும், தங்கப் பொடியையும் இரண்டு சிவப்புக் காகிதங்களில் மடித்து மரியாதையாகக் கொடுத்தான். முத்தாச்சியும் மடியிலிருந்த முடிப்பையவிழ்த்து ஒரு கும்பினி ரூபாயை வைக்க,”என்ன! ஒனக்காக இன்னக்கி முச்சோடும் கஞ்சிகூடக் குடியாமெ பண்ணித்தர, நல்ல வேலெ செஞ்சை”என்றான்.

“என்னெத்தான் தெரியுமே, ஏழெக்கி…”

“அப்படின்னா தொள்ளாளிக்கிக் கூலி குடாம முடியுமா?”என, அவனுடன் வாதாட நேரமில்லையென்று கருதிக் கேட்டதைக் கொடுத்துவிட்டு, நகையைப் பத்திரமாக முடிந்து இடுப்பில் சொருகிக் கொண்டு வெகு வேகமாய்க் காலாழ்வானைத் தட்டிவிட்டாள் கிழவி.

எவ்வளவு வேகமாக நடந்தாலும், மனித உடல் என்ன மோட்டார் வண்டியா? அதிலும் ஒரு கிழவி! கவிஞர் வெகு உற்சாகமாக வருணிக்கும் “அந்தி மாலை’போய், இரவு துரிதமாக வந்தது. கிழவி போகும் பாதை ராஜ பாதையானாலும், அக்காலத்தில் ஜனநாட்டமேயில்லாமல் மரங்கள் அடர்ந்து நெருங்கிய காட்டுப்பாதை. இருள் பரவ ஆரம்பித்தது என்றால், வெகுவாக அர்த்த புஷ்டியுடைய வார்த்தைகள் அல்ல-கிழவி கூறிய மாதிரி “தன் கை தெரியாத கும்மிருட்டு’

கிழவி இதுவரை பேய்க்கும் பயப்பட்டவள் அல்லள், திருடருக்கும் பயப்பட்டவள் அல்லள். ஆனால் இன்று, ஒவ்வொரு மரத்தடியிலும் ஒவ்வொரு சங்குத் தேவன்! மரக்கிளைகள் மீது குதிக்கும் தருவாயில் பதுங்கியிருக்கும் சங்குத்தேவன்! இவ்வாறு ஒவ்வொரு மரத்தைத் தாண்டுவதும் ஒரு வெற்றியாக, தனது மனவுலகில் தோன்றும் சங்குத் தேவர்களிடம் தப்பித்துக் கொண்டே செல்கிறாள்.

இப்படி அவள் தவித்துத் தவித்துச் செல்லும்பொழுது, தனக்கு முன் சிறிது தூரத்தில் ஓர் இருண்ட கரிய உருவம் தோன்றலாயிற்று. கிழவியின் வாய் அவளையறியாமலே, “சங்குத்தேவன்!” என்று குழறிற்று. கால் கைகள் வெடவெடவென்று நடுங்கின. முன் அடியெடுத்துக் வைக்க முடியவில்லை. மடியை இன்னொரு முறை இறுக்கிச் சொருகிக் கொண்டு, “ஏ, மூங்கிலடியான்! நீதான் என்னைக் காப்பாத்தணும்!”என்று ஏங்கினாள். அந்தக் கரிய உருவம் தான் போகும் திசையில் இருளில் மறைவதைக் கண்டவுடன், அதுவும் தன்னைப் போன்ற பாதசாரியாக இருக்கலாம் என்று நினைத்தாள். மூங்கிலடியான் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, “அதாரது! ஐயா! ஐயா!”என்று கூவிக்கொண்டே நடக்கலானாள்.

“யாரங்கே கூப்பாடு போடுவது?” என்ற கனத்த ஆண் குரல் இருளோடு வந்தது.

“சித்த பொறுத்துக்கும், இதோ வந்தேன்!”என்று நெருங்கினாள்.

தலையில் பெருத்த முண்டாசு, நீண்ட கிருதா, வரிந்து கட்டின அரை வேஷ்டி, திடகாத்திரமான சரீரம், அக்குளிள் ஒரு குறுந்தடி-இவ்வளவும் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியவாரம்பித்தன. சரீர ஆகிருதியைப் பார்த்ததும் கிழவிக்குப் பெரிய ஆறுதல். இனிக் கவலையில்லாமல் வீடு போய்ச் சேரலாம் என்ற நம்பிக்கையினால்.

“ஏ கெழவி! இந்தக் கும்மிருட்டிலே நீ எங்கே கெடந்து வாரே?”என்றான் அந்த அந்நியன்.

“நான் இங்கென இருந்துதான். எம்பிட்டுப் பறந்து பறந்து வந்தாலும் கெழவிதானே! பொளுது சாஞ்சு எத்தினி நாளியிருக்கும்? நான் போயித்தானே கொறெ வேலெயும் முடியணும். நாழி ரொம்ப ஆயிருக்குமா?”என்று கேட்டுக்கொண்டே பின் தொடர்ந்தாள்.

“பொழுதா? நேரம் ஒண்ணுமாகல்லே! நீ எங்கே போறே?”என்றான் துணைக்கு நடந்த பாதசாரி.

“நான் எங்கே போனா என்ன? ஒரு ஆளப் பாக்கணும் அதுதான்!”

“நீ என்ன சாதி?”

“நாங்க வெள்ளாம் புள்ளெக (வேளாளர்கள்) நீரு?”

“நான் தேவமாரு”

“தேவமாரா! என்ன அய்யா, இப்படியும் உண்டா? சங்குத்தேவன் ஊரெல்லாம் இப்பிடி கொள்ளெ போடுறப்ப, நீங்க பெரிய மனிசரெல்லாம் சும்மா இருக்கலாமா? அந்த அநியாயத்தெ நீங்க பாத்துச் சும்மா இருக்கலாமா? கலிகாலமா?”என்றாள்.

“கிழவிக்கு வாய்த்துடுக்கெப் பாரு!” என்று கோபித்தவன், கலகலவென்று சிரித்துவிட்டு பிறகு, “நீ என்னமோ தெரியாமே பேசுறயே. அவன் வேற கிளை, நான் வேறே. அந்தப்பய கொண்டயங்கோட்டையான், நான் வீரம் முடிதாங்கி…ஆமாம் கிழவி, ஏன் பதறிப் பதறிச் சாகிற?”

என்று கேலியாகக் கேட்டான் அந்தத் தேவன்.

“ஆமாம்! எங்கிட்டெ லெச்ச லெச்சமா இருக்கு, நான் பதறரேன்”என்று ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

“பொய் சொல்லாதே. மடிலே கனமிருந்தா, வழிலே பயம்”என்று சிரித்தான் அந்த அந்நியன்.

“ஒம்ம கிட்ட உண்மையெச் சொன்னா என்ன? என் மகளுக்குக் கலியாணம். நான் போயித்தான் நாலு வேலெ பாக்கணும். ஒரு சோடு பாம்படம் வாங்கிக்கிட்டுப் போரேன். ஏதோ பகட்டா செய்தாத்தானே நாலு பேரு மதிப்பான்”என்றாள் கிழவி.

“பாம்படமாவதிருக்கே!”என்று கேட்டுவிட்டு அவளைக் கூர்ந்து நோக்கினான். பிறகு, “எத்தினி மக்கள் உனக்கு? மகள் என்ன மூத்ததா?”என்று கேட்டான். அவன் கண்களும் மனமும் கிழவியைத் துருவிக்கொண்டிருந்தன.

“எல்லாம் ஒத்தைக்கொண்ணுதான்”

“சரி”

பிறகு இருவரும் பேசாமல் நடந்தனர். அந்த மறவன் கிழவியை நோக்குவதும், பிறகு குனிந்து யோசிப்பதுமாக நடந்தான்.

சற்று நேரத்தில் கிழவி,”அதோ கோயில் தெரியுது. நான் இனிமெ போயிக்கிடுவேன்”என்றாள்.

“ஏ ஆச்சி! நில்லு, ஒரு சமுசாரம். நீ ஏழெதானெ? இன்னா இதெ வச்சுக்க! முதல் பேரனுக்கு என் பேரிடு!”

“நீங்க மகராசரா இருக்கணும். என்ன பேரு இட?”

என்று சொல்லிக் கொண்டே, தனது எதிர்பாராத அதிர்ஷ்டத்தில் மதி மயங்கிக் கையை நீட்டினாள்.

“சங்குத்தேவரின்னு!”

கையில் வாங்கிய பணப்பை பொத்தென்று விழுந்தது. “வேண்டாம். வேண்டாம்! என்னெ விட்டிருங்க. நான் ஓடிப்போறேன்!”என்று பதறினாள்.

“இல்லெ ஆச்சி, எடுத்துக்கொ! ஒன்னெ கண்ணாணை ஒண்ணுஞ் செய்யலே!”என்று கையில் கொடுத்து அனுப்பினான். கிழவியும் திரும்பிப் பார்த்தபடியே இருட்டில் மறைந்தாள்.

சங்குத் தேவன் அங்கிருந்த கல்லில் சற்று உட்கார்ந்தான். குழம்பிய மூளை சரியானது போல் தெரிந்தது.”ஆமாம், கிழவி திடுக்கிட்டுப் போயிட்டா. ஒண்ணா ரெண்டா, நூறு! இதுவும் ஒருவேடிக்கெதான்! சங்குத்தேவனெக் கெழவி…”என்று முனகிக்கொண்டே எழுந்து ஓர் ஒற்றையடியப் பாதையில் நடந்தான்.

– காந்தி, 25-04-1934,


2.பொன்னகரம் - 


பொன்னகரத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறீர்களா? நமது பௌராணிகர்களின் கனவைப் போல் அங்கு ஒன்றுமில்லை. பூர்வ புண்ணியம் என்று சொல்லுகிறார்களே, அந்தத் தத்துவத்தைக் கொண்டு, நியாயம் என்று சமாதனப்பட வேண்டிய விதிதான். ஒரு சில ‘மகாராஜர்களுக்காக’ இம்மையின் பயனைத் தேடிக்கொடுக்கக் கடமைப்பட்டு வசிக்கும் மனிதத் தேனீக்களுக்கு உண்மையில் ஒரு பொன் நகரந்தான் அது.

ரயில்வே தண்டவாளத்தின் பக்கமாக, சாராய டிப்போவுக்குப் போகிறதே ஒரு சந்து, அது தான் அங்கு ‘மெயின்’ ராஸ்தா. கைகோர்த்த நான்கு பேர் வரிசை தாராளமாகப் போகலாம். எதிரே வண்டிகள் வராவிட்டால், இதற்குக் கிளையாக உள் வளைவுகள் உண்டு. முயல் வளைகள் போல்.

இந்தத் திவ்வியப் பிரதேசத்தைத் தரிசிக்க வேண்டுமானால்… சிறு தூறலாக மழை சிணுசிணுத்துக் கொண்டிருக்கும் பொழுது சென்றால்தான் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். வழி நெடுகச் சேற்றுக் குழம்புகள். சாலையோரமாக ‘முனிசிபல் கங்கை’ – அல்ல, யமுனைதானே கறுப்பாக இருக்கும்? – அதுதான். பிறகு ஓர் இரும்பு வேலி, அதற்குச் சற்று உயரத் தள்ளி அந்த ரயில்வே தண்டவாளம்.

மறுபக்கம், வரிசையாக மனிதக் கூடுகள் – ஆமாம், வசிப்பதற்குத்தான்!

தண்ணீர்க் குழாய்கள்? இருக்கின்றன. மின்சார விளக்கு? ஞாபகமில்லை – சாதாரண எண்ணெய் விளக்கு, அதாவது சந்திரன் இல்லாத காலங்களில் (கிருஷ்ண பட்சத்தில்) ஏற்றி வைத்தால் போதாதா?

பொன்னகரத்துக் குழந்தைகளுக்கு ‘மீன் பிடித்து’ விளையாடுவதில் வெகு பிரியம். அந்த முனிசிபல் தீர்த்தத்தில், மீன் ஏது? எங்கிருந்த பணக்கார வீடுகளிலிருந்தோ, சில சமயம் அழுகிய பழம், ஊசிய வடை, இத்யாதி உருண்டு வரும். அது அந்த ஊர்க் குழந்தைகளின் ரகசியம்.

ரயில்வே தண்டவாளத்தின் பக்கத்தில் விளையாடுவதில் என்ன ஆனந்தமோ? வேலி இருக்கத்தான் செய்கிறது. போகக் கூடாது என்ற சட்டம் குழந்தைகளுக்குத் தெரியுமா? ‘போனால்’ பெற்றோருக்குத் தான் கொஞ்சம் பாரம் ஒழிந்ததே! குழந்தைகள் தான் என்ன, ‘கிளாக்ஸோ’ ‘மெல்லின்ஸ் பூட்’ குழந்தைகளா, கம்பி இடையில் போக முடியாமலிருக்க? புகைந்தோடும் அந்த இரும்பு நாகரிகத்திற்கு, வரிசையாக நின்று “குட்மார்னிங் சார்!” என்று கத்துவதில் ரொம்ப ஆனந்தம் அவர்களுக்கு. அதுதான் அவர்களுக்குக் கிடைக்கும் ஆரம்ப ஆங்கிலக் கல்வி.

ஐந்து மணிக்கு அப்புறந்தான் ஊர் கலகலவென்று உயிர் பெற்று இருக்கும். அப்பொழுதிருந்து தான் அவ்வூர்ப் பெண்கள் தங்கள் வேலையைச் செய்வார்கள். சாராய வண்டிகள், தண்ணீர் எடுக்கவரும் பெண்கள்! அங்கு தண்ணீர் எடுப்பது என்றால் ஒரு பாரதப் போர்.

இள வயதில் நரைத்தது போல் பஞ்சு படிந்த தலை, மாசடைந்த கண்கள் – விடிய விடிய மின்சார ‘ஸ்பின்டிலை’ப் (கதிர்) பார்த்துக் கொண்டு இருந்தால், பிறகு கண் என்னமாக இருக்கும்? கண்கள்தாம் என்ன இரும்பா? உழைப்பின் ஆரோக்கியத்தால் ஏற்பட்ட கட்டமைந்த அழகு. ஆரோக்கியமா? அது எங்கிருந்து வந்தது? பாக்டீரியா, விஷக் கிருமிகள், காலரா இத்யாதி அங்கிருந்துதானே உற்பத்தி செய்யப் படுகின்றன! எப்படியாவது உயிர் வாழ வேண்டும் என்று ஆசையிருந்தால் எல்லாம் நடக்கும். பழைய கற்காலத்து மனிதன், புலி சிங்கங்களுடன் குகையில் வாழ்ந்து வந்தான்; அவைகளும் அவனைக் கொன்றன; அவனும் அவைகளைக் கொன்றான். அதற்காக வலிமையற்று, வம்சத்தை விருத்திசெய்யாமல் செத்தொழிந்தா போனான்? வாழ்க்கையே ஒரு பெரிய வேட்டை, அதற்கென்ன?

கழுத்தில் ஒரு கருப்புக் கயிறு – வாழ்க்கைத் தொழுவின் அறிகுறி. அதைப் பற்றி அங்கு அதிகக் கவலையில்லை. அது வேறு உலகம் ஐயா, அதன் தர்மங்களும் வேறு.

அம்மாளு ஒரு மில் கூலி. வயது இருபது அல்லது இருபத்திரண்டிற்கு மேல் போகாது. புருஷன் ‘ஜட்கா’ வைத்திருக்கிறான்; சொந்த வண்டிதான். அம்மாளு, முருகேசன் (அவள் புருஷன்), அவன் தாயார், தம்பி, முருகேசன் குதிரை – ஆக நபர் ஐந்து சேர்ந்தது அவர்கள் குடும்பம். இருவருடைய வரும்படியில்தான், இவர்கள் சாப்பாடு – (குதிரை உள்பட), வீட்டு வாடகை, போலீஸ் ‘மாமூல்’, முருகேசன் தம்பி திருட்டுத் தனமாகக் கஞ்சா அடிக்கக் காசு – எல்லாம் இதற்குள் தான். எல்லாரும் ஏகதேசக் குடியர்கள் தான். ‘டல் ஸீஸ’னில் பசியை மறக்க வேறு வழி? பசி, ஐயா, பசி! ‘பத்தும் பசி வந்திடப் பறந்துபோம்’ என்று வெகு ஒய்யாரமாக, உடம்பில் பிடிக்காமல் பாடுகிறீரே, அங்கு நீர் ஒரு நாள் இருந்தால் உமக்கு அடிவயிற்றிலிருந்து வரும் அதன் அர்த்தம்!

அன்றைக்கு முருகேசனுக்குக் குஷி, அவனும், அவன் குதிரையும் ‘தண்ணி போட்டு’ விட்டு ரேஸ் விட்டார்கள். வண்டி ‘டோ க்கர்’ அடித்தது. ஏர்க்கால் ஒடிந்தது. குதிரைக்கு பலமான காயம். முருகேசனுக்கு ஊமையடி. வீட்டில் கொண்டுவந்து போடும்பொழுது பேச்சு மூச்சில்லை. நல்ல காலம் குடித்திருந்தான், இந்த மாதிரி வலி தெரியாமலாவது கிடக்க. வீக்கத்திற்கு என்னத்தையோ அரைத்துப் பூசினாள் அம்மாளு. அப்பொழுதுதான் சற்று பேசினான். அவனுக்குப் பால் கஞ்சி வேண்டுமாம்! அம்மாளுவுக்குக் கூலிபோட இன்னும் இரண்டு நாள் இருக்கிறது. வீட்டில் காசேது?

அம்மாளு தண்ணீர் எடுக்க வருகிறாள்.

‘கும்’மிருட்டு பஞ்சாங்கத்தின்படி இன்றைக்குச் சந்திரன் வரவேண்டும். ஆனால் அது மேகத்தில் மறைந்து கொண்டால் முனிசிபாலிடி என்ன செய்ய முடியும்?

எப்பொழுதும்போல் இரைச்சல்தான். ஒருவாறு தண்ணீர் பிடித்தாய்விட்டது. திரும்பி வருகிறாள்.

சந்தின் பக்கத்தில் ஒருவன் – அம்மாளுவின் மேல் ரொம்ப நாளாகக் ‘கண்’ வைத்திருந்தவன்.

இருவரும் இருளில் மறைகிறார்கள். அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்து விட்டாள். ஆம், புருஷனுக்குப் பால் கஞ்சி வார்க்கத்தான்!

என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா, பொன்னகரம்!

– மணிக்கொடி, 6-5-1934


நன்றி- சிறுகதைகள்.காம் / sirukathaigal.com

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

சிவகாமியின் பழையன கழிதலும்… : தலைமுறை இடைவெளியின் இன்னொரு பரிமாணம்

சி சு.செல்லப்பாவைச் சந்தித்த வேளைகள்