இரண்டு படங்கள்- ஒரு நினைவு
ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு மதுரையில் ஒருவாரம் நடந்தது (1981 ஜனவரி, 4-10) அப்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில் முதுகலை படித்துக்கொண்டிருந்தேன். ஆய்வுக்கட்டுரைகள் வழங்கும் அமர்வுகள் எல்லாம் பெரும்பாலும் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மு.வ.அரங்கிலும் துறைகளின் கருத்தரங்க அறைகளிலும் நடந்தன. கலை நிகழ்ச்சிகள் எல்லாம் மதுரைக் கல்லூரி மைதானத்தில் நடந்தன. அவற்றில் எல்லாம் பங்கேற்கும் வாய்ப்புகள் இளம் மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் மாநாட்டிற்கு வரும் திரளான மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சிதான்.
ஆண்டு தோறும் சித்திரைத் திருவிழாவிற்கு மாபெரும் பொருட்காட்சி நடக்கும் தமுக்கம் மைதானத்தில் மாநாட்டிற்காகக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் முக்கிய பொறுப்பில் துறையின் பேராசிரியர் முனைவர் கோ.விஜய வேணுகோபால் இருந்தார். இலக்கணம், மொழியியல் துறைகளில் வல்லவரான கோ.வி. கட்டடக்கலை, கல்வெட்டுத் துறைகளிலும் ஆர்வம் கொண்டவர். அவர் வடிவமைத்த மாதிரிதான் இப்போது மதுரைப் பல்கலைக்கழக நுழைவு வாயிலாக உள்ளது. பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு துறையும் கண்காட்சிகள் அமைத்தன. தமிழியல் துறை, தமிழர்களின் கலை, வரலாறு, பண்பாடு சார்ந்த பொருட்களைக் காட்சிப்படுத்தியது.
கண்காட்சி தொடங்குவதற்கு முன்னால் பத்திரிகையாளர்கள், பல்கலைக்கழக அதிகாரிகள் அடங்கிய குழுவினருக்கு விளக்கிச் சொல்லும் பொறுப்பைப் பேராசிரியர் கோ.வி. அவர்களே செய்தார். இரண்டாவது படத்தில் வலது ஓரத்தில் இருப்பவர். அதே படத்தில் இடது ஓரம் இருப்பவர் அப்போது பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் ராஜன். தன்னார்வப் பணி செய்யத் தயாராக மாணவர்களாகிய நாங்கள் அதற்கான அடையாள அட்டைகளோடு நிற்கிறோம்.
மாநாடு தொடங்கியபிறகு தமிழியல் துறை அரங்கின் காட்சிகளை அனைவருக்கும் விவரித்துச் சொல்லும் பொறுப்பு மாணவர்களுடையது என்று சொல்லிவிட்டார். ஒரு பொறுப்பு கொடுத்தால் கூடுதல் ஈடுபாட்டுடன் செய்யும் ஆர்வம் இருந்ததால் காட்சிப்பொருட்கள் ஒவ்வொன்றைப்பற்றியும் அதிகப்படியான தகவல்களைத் திரட்டி நேரடி வர்ணனையாகவும் ஒலிபெருக்கி வழியாகப் பெருந்திரளுக்குச் சொல்லும் விதமாக இரண்டாவது நாள் செய்து காட்டினேன். அதன் பலனாக மற்ற இடங்களுக்குப் போகாமல் அந்தக் கண்காட்சியிலேயே இருக்கும்படி ஆகிவிட்டது.
மதுரைக்கல்லூரி மைதானத்தில் நடந்த ஜெ.ஜெயலலிதாவின் நாட்டிய நாடகத்தைப் பார்க்க விரும்பிக் கேட்ட அனுமதிகூடக் கிடைக்கவில்லை. அந்நாடகத்தைப் பார்த்துவிட்டு தமுக்கம் மைதானம் வந்த அப்போதைய நல்வாழ்வுத்துறை அமைச்சர் எச்.வி. ஹண்டே அவர்களுக்கு விளக்கிச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த நினைவைத் தக்கவைத்துள்ளது இந்த படம்.
கருத்துகள்