வலி தந்த வலிமை : ஜெயகாந்தனுக்கு அஞ்சலி



08- 04 -2015 இரவு எட்டுமணிக்குத் தொடங்கிய ஐ. பி. எல். கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் முடிந்த கையோடு செய்தி அலைவரிசைகளுக்குத் தாவியபோது எழுத்தாளர் ஜெயகாந்தன் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி  வந்துவந்து போய்க்கொண்டிருந்தது. தூங்குவதற்காகக் கண்களை மூடினால் தூக்கம் வரவில்லை.
அவர் எழுதியதில் எனக்குப் பிடித்த நாவலான பாரிசுக்குப் போ- வையெடுத்து விருப்பமான பக்கங்களை வாசித்துக் கொண்டே இருந்தேன். குறிப்பாகச் சாரங்கனும் லலிதாவும் சந்தித்துக் கொள்ளும் தருணங்களை எழுதிய கைகள் இனியொரு எழுத்தையும் எழுதாது என நினைத்துக் கொண்டே இருந்தேன்.  எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. தூங்கிய பின்னும் கனவில் லலிதாவின் பிம்பம் ஓடிக்கொண்டே இருந்தது. லலிதாவின் பிம்பத்தை மறைத்துக் கோகிலா, தங்கம், கங்கா, பாப்பாத்தி, கௌரி, கீதா எனப் பெயர்களும் பிம்பங்களும் அடுக்கிக் கொண்டே இருந்தன. 

உழைக்க விரும்பும் மனிதர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரத் தொடங்கியுள்ள நவீன இந்திய சமூகத்தில் மனிதநேயம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்; தனிமனிதனின் சுயமரியாதை காப்பாற்றப்பட வேண்டும்; பெண்கள் மேன்மையுற வேண்டும்; அறிவார்ந்த உரையாடல்களை நடத்தும் சமூகமாக இந்திய சமூகம் மாற வேண்டும் என்பதைப் பாத்திரங்களின் செயல்பாடுகளாகவும் உரையாடல்களில் வெளிப்படும் உணர்வுகளாகவும் கருத்துகளாகவும் எழுதிக்காட்டிய அந்த மனிதனை இனிக்காண்பது முடியாது என்பதை நினைத்துக் கொண்டபோது அவரோடும் அவரது எழுத்துகளோடு கொண்ட உறவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. மொத்தமாக யோசிக்கும்போது இந்தியப் பெண்களின் வாழ்க்கையில் நடக்க வேண்டிய மாற்றங்களையும், அவர்கள் விட்டொழிக்க வேண்டிய கருத்துகளையும் கட்டுப்பாடுகளையும் அவரளவுக்கு விவாதப் பொருளாக்கிய இன்னொரு எழுத்தாளரை எனக்குச் சொல்லமுடியாது. 
பெண்களை நேசித்தும் காதலித்தும் கைபிடித்து அழைத்தும் வழிகாட்டிய அந்தக் கரங்கள் ஓய்வு கொண்டு ஏறத்தாழ  இரண்டு பத்தாண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. எழுதியெழுதி அச்சிட்டு வந்த எழுத்துகளை உடனுக்குடன் வாசித்த நான், அப்படிக் கடைசியாக வாசித்த தொகுப்பு ஜெயஜெய சங்கரா. மனவெளி மனிதர்கள் எனத் தொடங்கி நான்கு சிறுநூல்களாக வந்த ஜெயஜெயசங்கராவிற்குப் பிறகு அவரின் புது எழுத்துகளை வாசித்தே ஆகவேண்டும் என்ற ஆசையும் வேட்கையும் எழவில்லை. அந்த வேட்கையை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை இழந்த அவரது விரல்களும் எழுதுவதை  நிறுத்திக் கொண்டன. என்றாலும் நினைத்தால் எடுத்து வாசித்துக் கொள்ளத் தூண்டும் தொகைநூல்களாக அவை எப்போதும் கிடைத்துக் கொண்டே இருந்தன; இருக்கின்றன.  
நவீனத் தமிழ் இலக்கியம் என்னும் பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காகப் பல பல்கலைக்கழகப் பாடத்திட்டக்குழுவில் இருந்த நான் ஒவ்வொரு இலக்கிய வகையிலும் அவரது எழுத்துகள் இடம் பெற்றாக வேண்டும் என்பதைச் சொல்லிப் பரிந்துரைப் பகுதிகளைச் செய்துகொண்டே இருந்துள்ளேன். உன்னைப்போல் ஒருவன், நடிகை நாடகம் பார்க்கிறாள்,  ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன, பாரிசுக்குப் போ, ஒருவீடு ஒரு மனிதன் என ஒவ்வொன்றையும் ஏன் நமது மாணவர்கள் படித்தாக வேண்டும் எனப் பாடத்திட்டக்குழுக்கூட்டத்தில் முன் வைத்த குறிப்புகளே மற்றவர்களின் ஏற்புக்குக் காரணங்களாக ஆகிவிடும்.
நாவல் இலக்கியம் என்றில்லாமல் குறைந்தது ஜெயகாந்தனின்  ஒரு சிறுகதைத் தொகுப்பாவது முதுகலை மாணவர்கள் படித்தாக வேண்டும் என்று வாதம் செய்தால் 10 கதைகள் வைக்கலாம் என்று சம்மதிப்பார்கள். வாழ்க்கை வரலாறு படிக்க வேண்டுமென்றால் அவரது கலையுலக அனுபவங்கள் அல்லது பத்திரிகை அனுபவங்களைப் பாடமாக்கலாம் எனப் பரிந்துரை செய்வேன். வலிமையான உரைநடைக்காக அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் என்பதிலிருந்து தேர்வு செய்து கட்டுரைகளை வழங்குவேன். இனியும் இனியும் இது தொடரும்.“ ஜெயகாந்தனை வாசிக்கிறேன் ” என்ற தன்னுணர்வுடன் வாசிக்கத் தொடங்கி 40 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஒவ்வொரு ஆண்டும் எத்தனை பக்கங்களாக எனக்குள் நுழைந்திருப்பார் என்று கணக்கு வைக்கவில்லை. செலவழிந்து போனால் அய்யாவின்  வங்கிக் கணக்கைத் திறந்து பணம் எடுத்துக் கொள்வதுபோல- அவரது புத்தகத் தாள்களைப் புரட்டித் தின்றுகொள்பவன் நான். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், அனுபவங்கள், பயணங்கள், திரைப்படங்கள் என அவர் சேர்த்து வைத்துவிட்டுத் தான் போகிறார். என்னிடம் கையளித்துள்ளதை என் சந்ததிக்கு எடுத்துக் கொடுக்கும் வேலையை நான் செய்ய வேண்டும். மகன் தந்தைக்காற்றும் உதவியாக நினைத்துக் கொண்டுபள்ளிப் பருவத்தில் அம்புலிமாமாவும் இரும்புக்கை மாயாவியும் வாசித்துக் கொண்டிருந்த நிலையிலிருந்து நேரடியாக ஜெயகாந்தனுக்குள் நுழைந்தவன். பின்வரிசையில் ஒவ்வொருவரிடமும் கடந்து கொண்டிருந்த காமிக்ஸ் புத்தகத்தைக் கைப்பற்றிய தமிழாசிரியர் அந்தோணியின் வசவுகளுக்குப் பின் அறிமுகமானார் ஜெயகாந்தன். திண்டுக்கல் நகரின் மையத்தில் நின்ற ஆகிருதியான தனது சிலைக்குப் பக்கத்திலேயே பெரியார் ஈ.வெ.ராமசாமியின் பேச்சைக் கேட்க வலியுறுத்திய அந்தோனி தான் ஜெயகாந்தனையும் அறிமுகப்படுத்தினார். பெரியாரின் கருத்துகளையும் செயல்பாடுகளையும் கடுமையாக விமரிசித்த ஜெயகாந்தனைப் பெரியாரின் பக்தரான அந்தோணிசார் தான் வாசிக்கச் சொன்னார் என்பது பின்னர் தெரியவந்த சுவையான நகைமுரண். அந்த அறிமுகத்துக்குப் பின் அவர் எழுதித் தினசரி ஒன்றில் தொடராக வந்த அந்தக் கதையை வாசிப்பதற்காகவே  தேநீர்க்கடையும் தேநீர்ப்பழக்கமும் வந்து சேர்ந்தன. அந்தக் கடையில் வாசித்த தொடர்கதை சினிமாவுக்குப் போன சித்தாளு.  அந்தத் தொடர்தான் மனத்தைத் தன்வசப்படுத்தியிருந்த எம் ஜி ராமச்சந்திரனைக் கொஞ்சங் கொஞ்சமாக இடம் பெயரச் செய்தது. ஜெயகாந்தன் என்னும்  பெயரும் எழுத்துகளும் எனக்குள்ளாக இருக்கத் தொடங்கின.
 அவசரநிலையை எதிர்க்கும் மனநிலை  உருவான எனது  பதின்மப்பருவ வயதில் கோபம் கொண்டு சக்கரங்களை நிறுத்தமுடியாது என்று மூர்க்கத்தோடு மோதியது அவரது குரல். தலைமுறை இடைவெளியால் தகப்பனோடு முரண்பட்டாலும் விலகிப் போகமுடியுமா? அதன்பிறகே எனது தேடலுக்குள் ஜெயகாந்தனின் எழுத்துக்கள் திரும்பத்திரும்ப வந்தன.  அப்போது மதுரைக்கு அவரும் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருந்தார். அவரது நூல்களை வெளியிட்ட மீனாட்சி புத்தக நிலையம் அங்கே இருந்தது முக்கியக்காரணம். ரீகல் திரையரங்காக இரவில் வெளிநாட்டுப் படங்கள் காட்டும்  விக்டோரியா எட்வர்ட் ஹால், பகலில் இலக்கியக் கூட்டங்கள் நடக்கும் அரங்காக மாறிவிடும். ஒரு நாள் அந்த அரங்கில் ஜெயகாந்தனே மூன்று வேடமிட்டு நடித்தது போன்றதொரு நாடகத்தைப் பார்த்தேன். அவரது நண்பர்களான அறிஞர் எஸ்.ராமகிருஷ்ணன், திரைப்பட வரலாற்று ஆசிரியர் அறந்தை நாராயணன் ஆகிய இருவரும் அவரைப் போலவே பேசி அமர்ந்தபின் அவர் பேச வந்தார். மூன்றாவது முகம்தான் மூலமுகம்; முன்னிரண்டும் நகல்கள் என்பது அப்போது புரிந்தது. அந்த நகலின் நீட்சியைப் பிரபஞ்சன், தனுஷ்கோடி ராமசாமி போன்ற அவரது பின்னோடிகளின் பேச்சிலும் எழுத்திலும் கூடப் பார்த்திருக்கிறேன். அவரது தாக்கம் பெற்ற எழுத்தாளர் தலைமுறை ஒன்று தமிழில் இருக்கிறது. மதுரைக் கலை இலக்கியப் பெருமன்றத்தின் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பேராசிரியர் தி.சு. நடராசன் எனது ஆய்வின் நெறியாளராக இருந்ததும் ஜெயகாந்தனை நேரில் சந்திக்கும் வாய்ப்புகளை உருவாக்கித் தந்தது.
தன் உடல் மீது கவிழ்ந்த ஆண் வாடையை நீக்க அக்கினிப் பிரவேசம் தான் ஒரேவழியென்றால் விடலைப்பருவத்துச் சின்னப்பெண் என்ன ஆவாள்? என்று இந்தச் சமூகம் யோசிப்பதில்லை எனக் கோபத்தோடு கேட்டுக் காலில் ஒட்டிய மலத்தைக் கழுவுவதுபோலக் கழுவிவிடலாம் என ஒரு அறிவார்ந்த அன்னையைப் பேசச் சொன்னவர் அவர். அப்படிச் செய்யாமல் விட்டால் பல நேரங்களில் பல மனிதர்களால் பலாத்காரமாக்கப்பட்டுப் புனித கங்கைக் கழிவுநீரோடையாகும் வாய்ப்பே உண்டு என எச்சரித்த எழுத்து அவருடையது எழுத்து.  அப்படிச் செய்யாமல் சமூகத்தின் பெரும்போக்குக்காது கொடுத்தால் கங்கா எங்கே போவாள்? என்று கேட்டுப்பார்த்து யோசிக்கச் சொன்னார். கட்டுப்பெட்டியான வாழ்க்கையை வாழ நேரும் வீடுகளில் நாற்காலிகள் ஆடிக் கொண்டிருக்கலாம்; மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்களா? என்றும்  கோகிலா என்ன செய்துவிட்டாள் என்றும் அவர் கேட்ட கேள்விகள் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.  பார்வையாளர்கள் பார்த்த நாடகத்தைத் திருப்பிப் போட்டு நடிகை பார்த்த நாடகக் காட்சிகளாக்கி, ஆறாறு மாதங்களுக்குப் பின் போய் புரட்டிக் காட்டிய திரைச்சீலை விலக்கம் இன்னும் திறந்து மூடிக்கொண்டே இருக்கிறது.
நீண்ட காலம் காலனிய ஆட்சியில் இருந்த இந்தியாவின் சிக்கல்களைப் பேசும் - மேற்கும் கிழக்கும் சந்தித்துச் சிடுக்குகளை விலக்கப்பார்த்த எத்தனை ஆண்கள், எத்தனை பெண்கள் என் முன் வந்து போகிறார்கள்? ஹென்றி, பிரபு, சாரங்கன் என புதியதலைமுறையையும் அவர்களோடு முரண்பட்ட பழைய தலைமுறையையும் சந்தித்துக்கொள்ள விரும்பினால் அடுக்கில் இருக்கும் புத்தகங்கள் கையில் வந்துவிடும். யுகசந்தியின் கௌரிப்பாட்டியை ஒவ்வொருமுறையும் கடலூர் வழியாகப் பாண்டிச்சேரிக்குப் போகும்போது, பேருந்து நிலையத்தில் தேடிப் பார்த்திருக்கிறேன். உன்னைப் போல் ஒருவன் எனவும் , யாருக்காக அழுதான் எனவும் ஆண் மையத் தலைப்பு வைத்தாலும் மையமாக எழுதப்பட்டவர்கள் பெண்கள். அவர் ஆட்டிவிட்ட நாற்காலிகள் எனக்குள்ளும் தமிழ்ச் சமூகத்திற்குள்ளும் ஆடிக்கொண்டே இருக்கின்றன. அவைகளை நாடகங்களாக மேடையேற்ற வேண்டும் என்ற ஆசை ஆசையாகவே நின்றுபோய்விட்டது. தன்னம்பிக்கையூட்ட நினைத்தால்  சமூகம் என்பது நாலுபேர் என்று சொல்லிக் கைபிடித்து அழைத்துப் பெருந்திரளோடு பேசும்போது எல்லாம் நானே என்பார். நீயும் நானே! நானும் நானே! அவளும் நானே! அவரும் நானே! அவனும் நானே! என அத்வைதப் பேரொளி போலப் பேசிய அந்த எழுத்தொளிக்கு மரணம் இல்லை. சமூகத்தின் பரப்பில் உள்ளே இருந்தவர்களையும் வெளியே இருந்தவர்களையும் அடையாளம் காட்டிய அவர் எழுத்து காட்டிய அளவுக்கு வாழ்க்கை எனக்குக் காட்டவில்லை.
இரண்டு ஆண்டுகள் நான் வார்சாவில் இருந்தபோதும்கூட ஜெயகாந்தனின் பெயர் திரும்பத் திரும்ப நினைவுக்கு வரும் பிம்பமாக அவர் அங்கும் அலைந்து கொண்டிருந்தார். அங்கு முதுகலைத் தமிழ் பயிலும் மாணாக்கர் ஒவ்வொருவரும் ஜெயகாந்தனின் குறைந்தது 5 கதைகளையாவது படித்தாக வேண்டும். இந்திய மனிதர்கள் ஐரோப்பிய நவீனத்துவ வாழ்க்கையை எதிர்கொள்ளும் கதைகளான கிழக்கும் மேற்கும், அந்தரங்கம் புனிதமானது, லவ் பண்ணுங்கோ சார், புதுச்செருப்பு போன்ற கதைகளை நவீனத் தமிழ்மொழியின் பயன்பாட்டுத் தன்மையை அறிவதற்காகவும், இந்திய சமூகத்தின் மாற்றங்களைப் புரிந்துகொள்வதற்காகவும் அந்த மாணவர்கள் வாசிப்பார்கள். வாசித்த கதையின் சுருக்கத்தை ஆங்கிலத்தில் எழுதிக்காட்டுவார்கள். பிறகு ஏதாவது ஒரு கதையைப் போல்ஸ்கி மொழியில் மொழிபெயர்ப்பு செய்வார்கள். இவையனைத்தும் அவர்களின் பாடத்திட்டத்தின் பகுதி. அப்படியானதற்குக் காரணம் அங்கு நிரந்தரத் தமிழ் விரிவுரையாளராக இருக்கும் யாசெக் வாஸ்னியாக்.  போலந்து நாட்டுக்காரரான வாஸ்னியாக்கின்  முனைவர் பட்டத்தலைப்பு  ஜெயகாந்தனின் சிறுகதைகள். அவரது முனைவர் பட்டத்தை மதிப்பீடு செய்த ருஷ்யநாட்டு மாஸ்கோப் பல்கலைக்கழகப் பேராசிரியர் துப்யான்ஸ்கியும் செக் நாட்டுப் பேராசிரியர் வாசெக்கும் ஜெயகாந்தனை வாசித்தவர்கள். ஐரோப்பியப் பல்கலைக்கழகங்கள் பலவற்றின் இந்தியவியல் துறைகளில் ஜெயகாந்தனை வாசித்தவர்களும் மொழிபெயர்த்தவர்களும் இருக்கிறார்கள்.
நிறைவாக அந்த நிகழ்ச்சியைச் சொல்லி எனது அஞ்சலியை நிறைவு செய்கிறேன். 1983- ஜெயகாந்தன் வாரத்தைக் கொண்டாடியது மதுரை அமெரிக்கன் கல்லூரி. மதுரையின் முக்கியக் கல்லூரிகளான டோக் பெருமாட்டிக்கல்லூரி, பாத்திமா கல்லூரியின் மாணவிகளும் ஒவ்வொருநாளும் வந்து கலந்து கொண்டார்கள். நாவல்களைப் பற்றித் தனித்தனிக் கட்டுரைகள், சிறுகதைகளைப் பற்றிச் சில கட்டுரைகள், கட்டுரைகளைப் பற்றிப் பேசச் சில ஆய்வாளர்கள் எனத் தொடர்ந்து பேசினார்கள். நான் அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவன். அப்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக இருந்தேன். எனக்கும் ஒரு வாய்ப்புத் தரப்பட்டது. நான் எழுதிய முதல் கட்டுரை அவரைப் பற்றித்தான். நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற நாவல் பற்றி எழுதி வாசித்தேன். இருந்து கேட்டுக் கடைசி நாள் சிங்கமாகக் கர்ஜித்தார். முதலாளித்துவத்திற்கெதிராகப் பேசி வந்த அவர் அமெரிக்காவையும் கவனிக்க வேண்டுமென அன்று சொன்னார். கீழே வந்தபோது அருகில் இருந்த என்னை என் ஆசிரியர் சாமுவேல் சுதானந்தா அவரிடம் அறிமுகப்படுத்தினார். ஓங்கித் தட்டினார் என் முதுகில். அந்த வலி இன்னும் இருக்கிறது.  வலிதான் முதுகெலும்புக்கு வலிமை தந்தது. என் முதுகெலும்பு நிற்கும்வரை அந்த வலி இருக்க வேண்டும் என நினைத்துக் கொள்கிறேன்.
நிகழ்கால - உலக/ இந்தியக் கவிதையின் போக்குகளைப் புரிந்துகொண்டவராக வெளிப்பட்டவரில்லை. சமகாலத் தமிழ்க் கவிதையின் எந்தப் போக்கின் பிரதிநிதியோ, முன்னோடியுமோ அல்ல.நவீனத் தமிழ்க் கவிகளைப் பற்றி விமரிசனமாகக்கூட எதனையும் எழுதியதுமில்லை; பேசியதுமில்லை.
வாசகர்களோடு - பார்வையாளர்களோடு உரையாடல் சாத்தியமற்ற புனைவுமொழியிலேயும், பிம்ப உருவத்தோடும் அலைந்தகொண்டிருப்பவர். திரைப்படங்களில் இடம்பெறும் - நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம்,வெகுளி, உவகை என்பதான எண்வகை மெய்ப்பாட்டு நிலைகளுக்குமான காட்சிகளில் புனைவான மொழியில் (Romantic) பாடல்கள் புனைந்து தந்த அவர் எழுதிய புனைகதைகளும் சமகாலத் தமிழ்ப் புனைகதைகளுக்கான மொழியில் இல்லை. அக்கதைகளின் உள்ளடக்கமும் நிகழ்காலத் தமிழ்ச் சமூகத்தின் அடிப்படை முரண்பாடுகளை, அரசியல் சமூகப்பொருளாதார, தத்துவப் பின்புலத்தின் சொல்லாடலாகவோ விவாதிக்க முயன்றதுமில்லை. அத்தகைய கதைகளைத் தமிழின் - நவீன எழுத்தின்- முன்னோடியும் முதன்மையானவனும் எழுத்தாளன் பாராட்டிப் பத்திரம் எழுதித்தந்தான் எனச் சொல்வது நம்பும்படியாக இல்லை. மரணத்திற்குப் பின்னும் அந்தச் சிங்கம் உயிர்பெற்று வரவேண்டும்போலும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்