இணக்க அரசியல் -இரண்டு குறிப்புகள்


இணக்க அரசியல் என்பதை விட்டுக்கொடுத்தல் எனப்புரிந்துகொள்ள வாய்ப்புண்டு. ஆனால் எதிரில் இருப்பவர்கள் யார் என்பதுதான் ஒரு நிலைப்பாட்டின் வரையறையை உருவாக்குகிறது. 

1.ஜோதிபாசுவும் ஸ்டாலினும்

உள்ளாட்சி அமைப்புகளில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக் கட்சிகள் உள்வாங்கும் அரசியலைப் புரிந்துகொண்டு செயல்பட்டுள்ளன. 21 மாநகராட்சிகள் 20 மேயர்கள் திமுகவின் வசம். ஒன்று மட்டும் காங்கிரசுக்கு. துணைமேயர் பதவிகளுக்கும் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள் தெரிவு செய்யும் படியாகப் பங்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 2, இந்தியப் பொதுவுடமைக் கட்சி, இந்தியப் பொதுவுடமைக் கட்சி ( மார்க்சிஸ்ட்) விசிக, மதிமுக முதலான கட்சிகளுக்குத் தலா ஒரு துணைமேயர் பதவி தரப்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளிலும் அந்தந்தக் கட்சிகளுக்குச் செல்வாக்குள்ள பகுதிகளில் பொறுப்புகள் கிடைக்கும்படியாக பிரித்தளிக்கப் பட்டுள்ளது. இந்தப் பங்கீட்டில் எந்தக் கட்சிக்கும் பெரிய வருத்தம் இருக்க வாய்ப்பில்லை. தங்களுக்கு வாய்ப்பிருந்தும் கூட்டணிக்கட்சிகளிடம் பதவிகளும் பொறுப்புகளும் போகிறதே என்று கூட்டணியின் தலைமைக்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு வருத்தங்கள் இருக்கலாம். இந்த வருத்தங்களின் விளைவாகக் கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல்களும் போட்டிகளும் உருவாகக் கூடும்; உருவாகியிருக்கிறது. அவற்றைக் களைந்து சரிசெய்ய வேண்டிய தேவை உள்ளது என்பதை மறுக்க முடியாது.
இந்தப் பங்களிப்பும் இணக்கமும் அடுத்துவரும் நாடாளு மன்றத்தேர்தலில் கூட்டணியாகச் செயல்பட உறுதியான நிலைபாட்டை வழங்கும். மதவாத அரசியலின் அச்சுறுத்தலையும் ஒற்றை ஆதிக்க சக்திகளின் நுழைவையும் தடுத்து நிறுத்திப் புறமொதுக்க இந்த இணக்க அரசியல் பயன்படும். பங்கீடுகளைத் தொடர்ந்து உள்ளாட்சியில் பொறுப்பேற்றுக் கொள்ளப் போகின்றவர்கள் இந்த இணக்கநிலையையும் உள்வாங்கும் தன்மையையும் புரிந்துகொண்டு செயல்படவேண்டும்.
*********
இந்தப் பங்கீடுகளை அறிவித்தவுடன் பெண்கள், தலித்துகள், மதச் சிறுபான்மையினருக்கான அடையாள அரசியல் ஆதரவாளர்களாகக் காட்டிக்கொள்ளும் உதிரிகள் தலித்துகளுக்கும் சிறுபான்மையினருக்கும் உரிய பங்கு கிடைக்கவில்லை என்பதுபோலப் பேசுகின்றனர்; எழுதுகின்றனர். அவர்களின் புகார்களின் எந்த நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை. தேர்தல் ஆணைய விதிப்படியே பெண்களுக்கு 50 சத இடங்கள் கிடைத்துள்ளது. மேயர் பொறுப்பில் கூடுதலாக பெண்களுக்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அதேபோல் தலித்துகளுக்கும் இசுலாமியர்களுக்கும் உரிய பங்களிப்பு இட ஒதுக்கீடு அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அப்பகிர்வில் விசிக.வுக்கு வழங்கப்பட்ட இடங்களை மட்டும் கணக்கில் கொண்டு போதாமை நிலவுவதாகக் குறை கூறுகின்றனர். இசுலாமியக் கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தச் சுட்டிக்காட்டுதல்கள் அடையாள அரசியல் உருவானதைச் சரியாகப் புரிந்துகொள்ளாதவர்களின் குற்றச்சாட்டு.
மைய நீரோட்ட அரசியலை முன்னெடுக்கும் பெரிய கட்சி அதன் அதிகாரம் மிக்க பொறுப்புகளிலும் தேர்தல் பங்கேற்பிலும் பாலினம், சாதி, மதம் சார்ந்த விளிம்பு மனிதர்களுக்கு வாய்ப்புகள் தராமல் ஏமாற்றுகிறது என்ற எண்ணம் தோன்றும்போதுதான் அக்கட்சியில் செயல்பட்ட ஆளுமைகள் அடையாள அரசியலை முன்வைத்தனர்; தீவிரமாக அதனை நோக்கி நகர்ந்தனர். இணக்கமான ஓரரசியலில் மைய நீரோட்ட அர்சியல் கட்சியே அதற்குள் தொடர்ந்து இயங்கும் விளிம்புநிலை மனிதர்களுக்கு - பெண்கள், தலித்துகள், இசுலாமியர்கள்- போதிய இடங்களை வழங்கிடும் நிலையில் திரும்பத்திரும்ப அடையாள அரசியலை மட்டுமே முன்வைப்பது பொருத்தமற்றது. தொடர்ந்து விசிகவுக்கும் இசுலாமிய அமைப்புகளுக்கும் இவர்கள் தரும் நெருக்கடி, எதிர்விளைவுகளையே உருவாக்கும். அதனைப் புரிந்துகொள்ளும் பக்குவம் கொண்ட தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதே இப்போதைக்கு ஆறுதல்.
எல்லா அடையாள அரசியலும் தேர்தல் அரசியலுக்குள் பங்கேற்பதே ஒருவிதத்தில் மையநீரோட்ட அரசியலை ஏற்றுக்கொள்ளும் நடைமுறைதான். அடுத்ததாக இணைக்கமான கூட்டணி அரசியலுக்குள் பொருந்திக் கொள்வது அதன் அடுத்த கட்டம். தமிழ்நாட்டில் நடந்த நாடாளுமன்றம் (2017) சட்டமன்றம் (2019) உள்ளாட்சித்தேர்தல் (2022) ஆகிய மூன்றும் இணக்க அரசியலின் வெற்றியை வெளிச்சம் போட்டுள்ளன. இந்திய சமூகத்தின் வளர்ச்சிப்போக்கைப் பற்றிப் பேசிய பி.ஆர். அம்பேத்கர் உள்வாங்குதலும் வெளித்தள்ளலும் ( Inclusive and Exclusive ) பற்றி விவாதித்துள்ளார். அதனை அரசியல் தளத்தில் வெற்றிகரமாகச் செயல் படுத்துகிறார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின். இந்தக் காட்சிகள் தனியொரு கட்சியாக இந்தியப் பொதுவுடமைக்கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையில்- அப்போதைய முதல்வர் ஜோதிபாசு செயல்படுத்திய இணக்க அரசியலை நினைவூட்டுகிறது. கடந்த நூற்றாண்டின் கடைசிக் கால் நூற்றாண்டில்(1977 -2000) இருந்த ஜோதிபாசுவின் பக்குவமும் நீண்டகால அரசியல் பார்வையும் கொண்ட திரு.மு.க.ஸ்டாலின் இந்திய நாட்டின் மைய நீரோட்ட அரசியலில் வலுவான தலைவராக வருவது காலத்தின் தேவை.

2.அரசியல் : லட்சியவாதமும் நடைமுறையும்

நேற்று - 27/02/2022- விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரான ரவிக்குமாரின் எழுத்துகளை மையப் படுத்திய கலந்துரையாடல் ஒன்று ஏழுமணி நேர நிகழ்வாக நடந்தது. விழுப்புரம் -செஞ்சி சாலையில் கஞ்சனூர் கிராமத்திலிருந்த மாந்தோப்பு ஒன்றில் நடந்த விழாவில் நான் கலந்து கொண்டேன். என்னோடு சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் இமையம், பேரா. கல்யாணி, கவி. பழமலய், கவி. அறிவுமதி, எழுத்தாளர். பிரதிபா ஜெயச்சந்திரன், கவி. கண்டராதித்தன் போன்றோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டோம்.
விழுப்புரம் பகுதித் தமிழ் அமைப்புகள் ஏற்பாட்டில் நடந்த அந்த விழாவில் நாங்களெல்லாம் ரவிக்குமாரின் இலக்கியம், மொழிபெயர்ப்பு, திறனாய்வுப்பங்களிப்பு, அரசியல் எழுத்துகள் எனப் பேசியபோது கவி. பழமலையின் பேச்சு விலகிய ஒரு பேச்சாக இருந்தது. ரவிக்குமாரின் மாணவப்பருவம் தொடங்கி, நாடாளுமன்ற உறுப்பினர் வரையிலான அரசியல் பயணத்தை உடனின்றும் விலகியும் பார்த்த ஒருவரின் பேச்சு அது. வடமாவட்டங்களில் முரணோடு நகர்ந்து கொண்டிருக்கும் விசிக x பா.ம..க. வின் அரசியலை - பறையர் x வன்னியர் கிராமங்களின் இருப்பை உணர்ந்த பழமலய்யின் அந்தப் பேச்சை ரவிக்குமாரின் அரசியலோடு உடன்பட்டும் மாறுபட்டும் நிற்கும் முன்னாள் தோழமையின் பேச்சு என்றுகூடச் சொல்லலாம்.
”சாதி ஒழிப்பு பற்றிப்பேசுகிறோம்; முன்னெடுக்கிறோம்; ஆனால் சாதிய வேறுபாடுகள் இருக்கின்றன. ஆகவே இட ஒதுக்கீடையும் வலியுறுத்துகிறோம்; ஒதுக்கீட்டுக்குள் உள் ஒதுக்கீடு வேண்டுமெனப் பேசுகிறோம் எனத்தொடங்கி, விசிக.வின் உறுதிச் சொற்களான “ எதிர்க்கிறோம்; அதனால் இருக்கிறோம் ” என்பது தொடங்கி ‘ அடங்கமறு; அத்துமீறு’ போன்றவற்றின் பின்னணியில் உருவாகும் கலவரங்கள் போன்றவற்றைச் சுட்டிக்காட்டி விவாதங்களை முன்வைத்தார். இவ்விரு இயக்கங்களும் கடந்த நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளில் முன்னெடுத்த இணக்க அரசியலை நினைவூட்டினார். தலைமைகளும் கருத்தியல்வாதிகளும் திரும்பவும் சந்தித்துப் பேசவேண்டும் என்பதையும் சொன்னார். கவி. பழமலய்யின் பேச்சு உரிய நேரத்தில் தேவையான பேச்சு என்றே தோன்றியது. ஆனால் அவர் பேசிய மேடை சார்ந்து சில ஐயங்கள் எனக்குள் எழுந்தன என்பதையும் சொல்ல வேண்டியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாரின் 60 ஆம் ஆண்டு நிறைவையொட்டி நடந்த அந்தக் கூட்டம் பொதுவான கூட்டம் என்றாலும் ஒருவிதத்தில் விசிகவின் ஆதரவு சக்திகள் ஏற்பாடு செய்த கூட்டமே. அந்த மேடையில் அவரது விமரிசனங்களையும் கருத்துகளையும் விரிவாக முன்வைத்த பழமலய்யின் நோக்கம் காலப்பொருத்தம் கூடிய ஒன்று. ஆனால் விசிகவும் அதன் பொறுப்பிலிருக்கும் ரவிக்குமாரும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய அந்தப் பேச்சை- இங்கு வைத்த அதே தொனியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்களும் கருத்தியலாளர்களும் நிரம்பிய அவையிலும் அவர் முன்வைத்துப் பேச வேண்டும். அப்படிப் பேசும் நிலையில்தான் அவரது பேச்சு நடப்பு அரசியலை முன்வைத்து இணக்கம் காண விழையும் அறிவுஜீவியின் பேச்சாக இருக்கும். அதற்கு மாறாக அந்த அங்கு போய் அந்த மேடைக்கேற்பப் பேசிவிட்டால் பயனற்றதாக மாறிவிடும். இதற்கு முன்பு அவரது சில பேச்சுகளும் எழுப்பிய வினாக்களும் அத்தகையனவாக இருந்துள்ளன.
சாதியவாத அரசியலை உள்வாங்கித் தனது காலாட்படைப் பிரிவாக அதனைப் பயன்படுத்த நினைக்கும் மதவாத அரசியல் சூழல் தமிழ்நாட்டில் நிலவுகிறது என்பது அனைவரும் உணரவேண்டிய ஒன்று. மதவாத அரசியலோடு இணக்கம் காண நினைப்பவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு கவி.பழமலய் போன்றவர்களுக்கு உண்டு. தடுத்து நிறுத்துவதோடு, யாரோடு இணக்கம் காண வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தி நடப்பு அரசியலைக் கவி. பழமலய் முன்னெடுக்க வேண்டும். அந்த முன்னெடுப்பு வெற்றிபெறும்போது ‘ சனங்களின் கதை’யைக் கவிதையாக்கிய அவரது ஆளுமை நிலைபேறு பெற்றதாக மாறிவிடும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்