உலகக்கவிதை நாள் -2022
உலகக் கவிதை நாளுக்காக ஒவ்வொரு வருடமும் நான் வாசித்த/ பிடித்த/ அறிமுகம் செய்ய நினைக்கும் கவிதைகளை முகநூலில் பகிர்வதுண்டு. இந்த ஆண்டும் மார்ச் 15 கவிதைகளுக்கான நாளில் 15 பேருடைய கவிதைகளைப் பகிர்ந்தேன். இந்தப் பதினைந்துக்குள் சம அளவில் பெண்களின் கவிதைகள் இடம்பெற வேண்டும் என நினைத்தேன். அதேபோல் இன்றைய தமிழ்க்கவிதைகள் என்பன வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் வெளிக்குள் மட்டும் எழுதப்படுவன அல்ல. உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களால் எழுதப்படுபவை. இப்பதினைந்து கவிதைக்குள் அந்தப் பரப்பும் கவனத்தில் கொள்ளப்பட்டன. தனித்தனியாக வாசித்த இந்தக் கவிதைகளை மொத்தமாக வாசிக்கலாம். அப்படி வாசிக்கும்போது வெவ்வேறு போக்குகள் தமிழ்க் கவிதைக்குள் இருப்பதை உணரமுடியும்.
1] வீடு
நேற்று இரவு நல்ல போதையில்
என் வீட்டைத் தொலைத்து விட்டேன்
இத்தனைக்கும் ஏதும் ஆகக்கூடாதென்று
மேல் ஜோப்பில்தான் வைத்திருந்தேன் பத்திரமாக
லேசான மழை பெய்து கொண்டிருந்த இருளில்
தடுமாறியபடி வந்து கொண்டிருந்த வழியில்தான்
தொலைந்திருக்கவேண்டும்
ஒருவன் வீட்டைத் தொலைப்பதென்பது
மிகச்சிறந்ததும் மிக மோசமானதும் ஆகும்
வனங்களில் இருளை கடப்பவர்கள்
வீட்டை வீட்டிலேயே விட்டுச் செல்லுங்கள்
வீட்டுக்கும் வீதிக்கும் இடையில்
தொங்கும்
கயிற்றில் நடப்பவர்கள்
வீட்டை அழிப்பது போலவே வீதியையும் அழிக்கிறார்கள்
-------------------------- இளங்கோ கிருஷ்ணன்/வியனுலகு வதியும் பெருமலர்/134
2 ] அரசனும் அரசியும்
வரலாற்றில் மாபெரும் பிழையைச் செய்துவிட்டீர்
எல்லோராலும் பாடப்பட்ட எளிய கவிதையைத் தடை செய்தீர்
பேரரசியும் பேரரசனுமான நீங்கள்
ஓர் எளிய கவிஞனைக் கழுவிலேற்றினீர்
கரைபுரண்டோடும் இரண்டு ஆறுகளுக்கு
இடைப்பட்ட வளநாடு கொண்டீர்
இரண்டு ஆறுகளும் உங்கள் இருவரின் பெயர்களால்
அழைக்கப்பட வேண்டுமெனக் கட்டளையிட்டீர்
உங்கள் பெயர்களைத் தாங்கிய ஆறுகள்
படிப்படியாக நீர்ப்போக்கு அற்று
வெற்றுமணல் பரப்பாகத் தகித்துக்கிடக்கின்றன
நீள்மதில் சூழ் நெடுங்கோட்டுச் சிவத்தலம்
எழுந்தருளிய அன்னைக்கும் அய்யனுக்குமான
பெயர்களை மாற்றி
உங்களது பெயர்களைச் சூட்டினீர்கள்
கோயில் கொண்ட தெய்வங்கள்
சினம் கொண்டு காடு பாய்ந்தன
அரண்மனைக்கு வெளியே நெடிதுயர்ந்த சிலைகள் இரண்டு
உங்களை நீங்களே வடித்துக்கொண்டீர்
கடவுளர்களாக வழிபட குடிமக்களை நிர்ப்பந்தித்தீர்
வரலாற்றில் மாபெரும் பிழையைச் செய்துவிட்டீர்
எல்லோராலும் பாடப்பட்ட எளிய கவிதையைத் தடை செய்தீர்
பேரரசியும் பேரரசனுமான நீங்கள்
ஓர் எளிய கவிஞனைக் கழுவிலேற்றினீர்
ஆம். கழுவிலேற்றினீர்
---------------------------------- ரமேஷ் பிரேதன்/ நீலம் இதழ்.ப.63.பிப்ரவரி 2021
3 ]வாழ்தல் நிமித்தம்
பருவமழை பெய்யும்போது
பனையோலை வேய்ந்த
கூரையிலிருந்து வழியும் நீர்
நிறைந்து தளும்பும் முற்றத்தில்
வளர்ந்திருக்கிறது.
ஒரு கொன்றை மரம்
மஞ்சள் நிறத்தில்
மலர்கள் பூத்திருக்கும் அதில்
ஒரு கூடுண்டு
அலகு சிறுத்த குருவிகள்
எப்போதும்
பேசிக்கொண்டிருக்கும்
அதன் நிழலில் அமர்ந்து
மனிதர்களை
வாசித்துக் கொண்டிருப்பேன்
இப்போது
மழையும் இல்லை
மரமுமில்லை
குருவிகளின் இறகுகள்
உதிர்ந்திருக்கவில்லை
மனிதர்கள் எவரும்
நடமாடவில்லை
தொலைவிலிருந்து
உயிர் வலிக்கப்பார்க்கிறேன்
என் பனையோலை வீட்டைக்
குறுக்காகக் கடக்கிறது
ஒரு புறவழிச்சாலை
===================== சுகிர்தராணி
4]இரவைக் காப்பாற்றுதல்
இரவை மரம்போலக் கற்பனை செய்யப் பயமாக இருக்கிறது.
கற்பனை செய்தால்,
அதன் கிளைகளெங்கும் எனது குரல்
ஓலங்களாகவும், கூக்குரல்களாகவும்
அனாதரவாகத் தொங்கத் தொடங்குகின்றன.
சொற்கள், உதிர்வதற்காகவே பூக்களாகின்றன.
வாக்கியங்கள்
விழுதுகளாகித் தொங்கக்
கனிகள் அழுகி விழுகின்றன.
எந்தப் பறவைகளும்
வந்து அமருவதே இல்லை.
அவள் கற்பனை செய்த இரவிலிருந்து
காதல் அழைப்புக்கள் கேட்கின்றன.
என்னைக் கடந்து
ஆனந்தமாய் பறவைகள் பறக்கின்றன.
ஆகவே, நான் இரவை
இரவாகவே, இருக்க விட்டுவிடுகிறேன்
அப்போதுதான்
கதவைத் திறந்து
அவள் உள்ளே வருகிறாள்.
பின் அவளின் விளையாட்டு ஆரம்பிக்கின்றன
மரம்போல மாறும்போதெல்லாம்
மிகக் கவனமாக
அதை இரவாக வைத்திருக்கச்
சிரமப்படுகிறேன்.
---------------------- -------- ரியாஸ் குரானா/பில்லி சூனியம் செய்வினை /51
5]நான் வேண்டும் எனக்கு
வியர்வை கசியவும்
உதிரம் சிதறவும்
உழைத்துக் கொட்டுகிறேன்.
நிமிர அனுமதிக்காத
குடும்ப பாரங்களும்
வயிற்றுப்பாடுகளும் – என்
ஆசைகள் அனைத்தையும்
ஆணி அறைந்து
சாத்தி வைத்தன
யார் யாரோவின்
நிழல் வாசத்தில்.
வலியையும் கூடவே
சுயத்தின் தேவையையும்
உணர்ந்து
எதுவும் வேண்டாமென்று
முடிவெடுத்த பின்
அழுக்குகள் அனைத்தையும்
அள்ளி அள்ளி
கடலில் எறிகிறேன்.
கடலே!
எல்லாவற்றையும்
எடுத்துக்கொண்டு
என்னை மட்டும்
திருப்பிக் கொடு!
நான் வேண்டும் எனக்கு
நான் காண்பிக்க மறுக்கும்
நீர்த்துப் போன
என் விழிகளில்
கல்லுடைத்து
மண் சுமந்து
பீடி சுற்றி
பட்டாசு தயாரித்த…
இன்னும் இன்னும்
சவக்களையின்
மிச்சங்கள் மட்டுமே
பதிந்திருக்கின்றன.
ஆனாலும்
விரைப்பான
என் கைகளில்
கர்வமாகப் பிடித்திருக்கிறேன்
எனக்கான உரிமைகளை
கொஞ்சம்
கூடுதலான நம்பிக்கையோடு
====================== ஜெயராணி
6] பப்பாளியும் பாசிசமும்
நெருக்கடி முற்றும்போது
வேறு வழியில்லை
ராணுவத்தை இறக்கியாயிற்று
துணை ராணுவமாய்
சிலபல பீர்பாட்டில்கள்
போதுமான தளவாடங்களுடன்
யுத்தக்களம் தயார்
குவளைகள் உரசும் சங்கொலியில்
ஜலச்சமர் மூள்கிறது
பாசிசம் என்றால் என்ன
அவன்தான் மெள்ளத்துவங்குகிறான்
எழுதுபவனுக்கு
எல்லாம் தெரியுமென்ற
அந்த இளம் நம்பிக்கையை
நாம் கொல்லலாகுமோ
மூன்றாவது சுற்றில் அது
முடியவும் முடியாது
யுத்த தளவாடமாக
வீட்டு மரத்திலிருந்து
யாரோ கொண்டுவந்த
நாட்டுப்பப்பாளி
நடுநாயகமாய் மேசையில்
கத்தியை எடுத்து
சீவத் துவங்குகிறேன்
பாசிசம் என்றால் என்ன
விடுவதாயில்லை அவன்
ஒரே இழுப்புதான்
பப்பாளி பிளந்தது
உள்ளே அவ்வளவு விதைகள்
பாசிசம் பாசிசம்
பார்த்தாயா பார்த்தாயா
உச்சஸ்தாயில் நான்
அவன் கண்களில் மிரட்சி
மொத்த உலகையும்
பப்பாளியிலையால்
மூடத்துடிக்கும் பேராசை
அல்லது
ஏகாதிபத்தியமே
பப்பாளி விதைகள்
தலையை ஒருமாதிரி ஆட்டுகிறான்
ராணுவமோ வெகு ஆழத்தில்
போய்க்கொண்டிருக்கிறது
துணை ராணுவத்தில்
சிலர் இணைந்திருக்க
தளவாடப்பற்றாக்குறை
எல்லோரும் அவனைப் பார்க்க
எழுந்து வெளியே போகிறான்
கனத்த பப்பாளியொன்றை
ஏந்தியபடி திரும்பியவன்
என் கைகளில் தருகிறான்
பாசிசம் என்றால் ....
அவனும் முடிப்பதாயில்லை
வலது கையில் ஏந்தி
இடது கையால் ஒரே போடு
ரத்தச் சிவப்பாய்த்
திறந்துகொண்டது பப்பாளி
உள்ளே ஒரு விதையில்லை
பாசிசம் வீழ்ந்தது
பாசிசம் வீழ்ந்தது
உற்சாகத்தில் பாடுகிறேன்
நம்ம ராணுவமும் ஊத்திக்கிச்சு
என்று எசப்பாட்டு பாடுகிறது
ஏதோ ஒரு குடிகார நாய்
============== லிபி ஆரண்யா/ காலம் இதழ் 57&58/டிசெம்பர் 2021/129-130
7] இன்பாக்ஸ் இதயங்கள்
முகநூல் உள்பெட்டியில்
எத்தனையோ பேர் வணக்கம் சொல்கிறார்கள்
எத்தனையோ பேர் ஹாய் சொல்கிறார்கள்
எல்லோரும் எல்லோருக்கும் பதில் சொல்வதில்லை
எல்லோரும் எல்லோருக்கும் சொல்வதற்கெதுவுமில்லை
பெரும்பாணர்கள் பொதுவெளியில்
எவருக்கும் லைக் போடுவதேயில்லை
என்கிறாள் தோழி
எல்லா திசைகளையும்
திரும்பிப் பார்க்கிறார்கள்
எளியவர்களுக்கு எதுவுமே சொல்லாது
கடந்துபோகிறார்கள்
கை நிறைய பூக்களை அள்ளி
தடாகத்தில் வீசினாலும்
என் வீட்டுச் சிறுசெடியில்
ஒரு மலர்கூட மலர்வதில்லை
என்னுடைய
உள்பெட்டி முற்றத்தில் மட்டும் தனியாக வந்து
இதயங்களைப் பறக்கவிடுகிறார்கள்
மொட்டைத்தலை எமோஜிகள்
பாவனையாய்ச் சிரிக்கின்றன.
========== இன்பா/லயாங் லயாங்குருவிகளின் கீச்சொலிகள்/112
8] மூடிக் கிடந்த இரவு
கடவுள் இரவை மூடி பகலை திறக்கும் நேரம் அது
வீட்டுக் கதவை திறந்து பார்க்கின்றேன்
கும்மிருட்டாகவே வெளி தெரிந்தது
ஞாயிற்றுக் கிழமை என்பதால்
ஊருக்கு செல்லும் படலத்தை
மனசு ஒரு குதிரைப் போல்
சவாரி செய்யத் தொடங்கியிருந்தது
அதனால்,
மனசு சமநிலையில் இல்லை
மகளுக்காக வாங்கி வைத்திருந்த
நாய் பொம்மையை பார்க்கின்றேன்
மனசு வள் வள்ளென்று குரைப்பதைப் போல இருந்தது
ஆகவே
ஒரு முடிவைத் தெரிவை செய்து
காகம், கிளி, மைனா, குருவிகள் போன்று
கரையவும் கத்தவும் செய்தேன்
மூடிக்கிடந்த இரவு திறந்து கொண்டது
இப்போது
வெளியே வந்து சாலையில்
ஊருக்கு செல்லும் பேருந்துக்காக காத்திருக்கின்றேன்.
---------------- ஏ. நஸ்புள்ளாஹ்/ நான் உமர்கய்யாமின் வாசகன்/ 53
9] சுகமான சொறிதல்
சொரிந்துகொள்வது மாதிரி சுகம்
வேறொன்றுமில்லை
சொறியச் சொறிய
சொர்க்கத்துக்கே போகிற மாதிரி இருக்கும்
ரத்தம் வந்தாலும்
சொறிவதை மட்டும் நிறுத்தத் தோன்றாது
சொறிவதில் பலவகை உண்டு
சொறிவது தெரியாமல் சொறிவது
சொறிந்த இடத்திலேயே சொறிவது
வசதியிருந்தால் ஆள் வைத்துச் சொறிவது
நேரம், இடம், பொருள், வெட்கம்,
வேதனை பார்க்காமல் சொறிவது
சொறிவதைத் தடுக்க
நவீன களிம்புகள் சந்தையில் உள்ளன
விற்பனை படுமந்தம்
சொறி பற்றிச் சொலவடைத் திரட்டு
உங்களிடம் இருந்தால்
சொறிவதை விடுத்து அல்லது
சொறிந்துகொண்டே
மற்றவர்களுக்கும் பகிரும்படி
சொறிந்து கேட்டுக்கொள்கிறேன்
---------------------மா.காளிதாஸ்/ பெருஞ்சொல் குடல்/ 94
10]வாத்சாயினி
காலம்
நம் இருப்பைப் பதிவு கொண்டது
நீ எனது உன்னதம்
அன்பை ரசிக்க வைத்திருக்கிறாய்
வழக்கத்திற்கு மாறாக
அடையாளம் கொண்டிருக்கிறேன்
ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச்
சொல்லிச் செல்கிறார்கள்
சூத்திரக்காரரென
மேனிச் சுருக்கத்தில்
மூச்சிரைக்க வைத்திருக்கிறாய்
பருவச் சுமைகளை
கேங்கரில் கழட்டி மாட்டிய
உன் சந்தோஷ கூச்சலில்
வெறித்த ஞாபகக் கண்ணாடியை
அணிந்து கொண்டிருக்கிறேன்
நீ என் அருகாமை நதி
நீள் மௌனம்
அடங்கிய இந்திய நைல் நதி
கோலாகலமாய்ப் பெருக்கெடுத்த
உன் அன்பின் நீரை
வாரிக் குடிக்கிறேன்
காமம் செரிக்கத்தொடங்குகிறது
========================= அம்பிகா குமரன்/ காலம்/ 21
11] நம் நிலத்தைக் காப்பாற்றி விட்டோம்.
போர் முடிந்து பலகாலம் கழிந்த பின்னரே
இங்கு வருகிறேன்
எதிரி நாட்டினர் புகுவதற்கு முன்
நாமே தூர்ந்து போட்ட
குளமொன்றின் கரையோரம் அமர்ந்திருக்கிறேன்
நாம் தாகம் தீர பருகிய குளம் அது
மழைக்கு பழுதான கோட்டைச்சுவர்கள் கட்டியெழுப்பி
போருக்கு தயார் படுத்திய நாட்களும்
பயன்படுத்தாமல் துரு ஏறியிருந்த ஆயுதங்களை
பயிற்சிக்கு உட்படுத்தியதும்
புதிய ஆயுதங்களை செய்து குவித்ததும்
குதிரைகளை யானைகளை போர்வீரர்களை
ரத்தம் பார்க்க உருவேற்றியதும்
போர்க்காலத்தின் உணவுத் தேவைக்கு
தானியக் கிடங்கை நிரப்பி வைத்ததும்
என
எல்லாம் நினைவிலாடுகின்றன
வாளை மீன்கள் துள்ளி விளையாடிய
நீர் நிலையருகே
நீலநிறத்தில் கொத்தாய்
பூத்துக் குலுங்கிய காஞ்சிப்பூக்களை
மாலையாக்கிச் சூட்டி
கோட்டையையும் மக்களையும் காக்கவேண்டி
என்னை அனுப்பிய
அந்த நாட்களையும் நினைக்கிறேன்
வலிமையான எருதுகள் பூட்டி
உழவு செய்த வயல் வெளிகளில்
கழுதையைக் கொண்டு உழுது
வெள்ளெருக்குச் செடிகளின்
விதைகளைத் தூவிச் சென்றிருக்கிறது
நாம் கடந்து முடித்திருக்கும்
இந்தப் போர்க்காலம்
நிலத்தை
நீர்நிலைகளைப் பாழ் படுத்தி
நின்று கொண்டிருக்கிறோம்
தகப்பனை
தாயை
உறவுகளை இழந்து
தனித்திருக்கும் குழந்தைகள்
பசித்து அலைகின்றனர்
வெளியெங்கும்
ஆண்கள் அற்றுப்போய்
ஒப்பாரி இட்டபடி இருக்கும்
மனம் பிறழ்ந்த பெண்களின்
குரல் ஒலித்துத் தெறிக்கிறது
காலத்தின் வீதியில்
துர்கனவுகளை சுமந்து திரிபவர்கள்
மீதமிருக்கும் வாழ்வை எப்படிக்
கடந்து முடிப்பார்களோ
நம் நிலத்தைக் காப்பாற்றி விட்டோம்தான் .
=========== சக்திஜோதி
12]ஆம் இல்லை
நலன் கருதி
இடம் மாறுகின்றன
அவ்வார்த்தைகள்
இடையிடையே
முரண் துருக்கள்
மலையளவு குவிகின்றன
என்னிடம் நானே
வினவுகின்றேன்
எதற்கு
இவ்வளவு மேடுகள்
முந்தைய புயல்களை
பொசிந்துபோன வடுக்களை
மறந்துவிடுகின்றேன்
ஆற்றிய காலத்தின்
இடைவெளியை மறந்துவிடுகின்றேன்
தாமதித்திருக்கலாம்
பெருமூச்சுடன்
வெகுநேரம் சிந்தித்திருக்கலாம்
சட்டெனப் பளிச்சிடும்
மின்னல் கீற்று
ஆம்
இல்லை
இவற்றில் ஏதேனுமொன்று
தீர்க்கமான முடிவுகளின் பின்
சொட்டும் துளிகளில்
வார்த்தைகளின் நக்கீறல்
தவிர்க்க முடிவதில்லை.
======================= மின்ஹா /கடல் காற்று கங்குல் / 38-39
13
பழகிய காடுதான் என்றாலும்
இரையை உறுதிசெய்ய முடியாது
காத்திருப்பதும் தேடுவதும் ஓடுவதும் காட்டின் பொதுப்பண்பு
உருமாறிப் பொழுது உதிர்ந்தாலும்
ஆயிரம் மைல்கள் தூரம் ஓடி ஓய்ந்தாலும்
முள்ளையும் கல்லையும் நுகர்ந்தாலும் கூட
இரையைக் கண்ணில் காட்டாமல் காடு தண்ணி காட்டும்
வேட்டையில் இரை சிக்கிக்கொண்டால்
எலும்பைக்கூட மிச்சம் வைக்காமல்
மென்று துப்புகிறோமே ஏனென்று புரிகிறதா?
வயிற்றில் மட்டுமன்றி, ஒவ்வொரு மயிர்க் கால்களுக்கும்
புசிக்க வேண்டும் என்பது காடதிகாரம்
ஏலே பங்காளி
குடலில் போட்டு உருட்டவும் புரட்டவும் இரையை அறிய
குளம்படித் தடத்தைப் பின்தொடர்ந்து செல்வோம்
கிடைக்கும் விலங்கின் ஈரல் தேனைப்போல் இனிக்கும்.
------------------------------- மௌனன் யாத்ரிகா/ வேட்டுவம் நூறு/ 110
14
ரியா..
நீரூற்றுக்குள் மெல்லமெல்ல நடக்கிறாய்..
உன் மேத்லீன் கேட்கிறாள்
’கடல் மீது நடப்பாயா?’
மூன்று சுழியில்
நிலத்தின் மேற்புறத்தில்
மந்தை வெளியில்
யாருமற்ற தனிமையில்
ஆட்டுக்குட்டியின் கைபிடித்து நடந்துவருபவனின் வருகையை நோக்கி...
அவன் கையில் தவறவிட்ட
மற்றொரு ஆட்டுக்குட்டி
நீ ரியா..
நான் அவன் மடியில் தாளமிடும் வீணையின் சுரம்
அங்கிகளை உனக்களித்து
சிலுவையை எனக்களித்தான்
ரியா
ஆணிகள் கைகளில் இறங்கியிருக்கிறது
வெள்ளைப் புறாக்களின் சிறகில்
உனையமர்த்திப் பறக்க விடுகிறான்
நீ அமைதி கொள்!!!....
-------------------------- விஜி பழனிச்சாமி/ முகநூலில் / 24.02.2022
15]துயரத்தின் நறு நாற்றம்
நேற்று இறந்தவனின்
துயர மூட்டை மிதந்துவரும் நதியில்
அவனே தன்னை வீசிக்கொள்கிறான்
நெரிக்க வரும் கரத்திடமிருந்து தப்பி
தலைமயிரைக் கொத்தாய் இழுத்துக்
கரையில் தள்ளும் துயரத்திடம்
மண்டியிட்டுக் கதறுகையில்
மீன் தலை தூக்கிப் பார்க்கிறது.
குற்றவுணர்வின் நிழல் படர
யாரும் பார்க்காதவாறு
கசியும் இமைகளைத்
துடைத்துக்கொள்ளும் துயரம்
இயலாமையில் கைவிரித்து
மொட்டாய்க் கூப்பிய கரத்தினுள்
கனத்த இதயத்துடன்
இன்னுமொரு துயரத்தை மலர்த்துகிறது
புதுச்சட்டையில் வரும் அதே நறுமணம்
புதுத்துயரத்திடமும் இருக்கத்தான் செய்யும்
================= ஸ்டாலின் சரவணன்/ ரொட்டிகளை விளைவிப்பவன்/43
கருத்துகள்