சுரேஷ்குமார் இந்திரஜித்தின் நுண்கதைகள்


சிறுகதை வடிவத்திலிருந்து நுண்கதை வடிவத்தின் முதன்மையான வேறுபாடு, வெளியையை எழுதுவதில் இருப்பதாகத் தோன்றுகிறது. கதாபாத்திரங்கள் உலவும் புனைவு வெளியை விரிவாக எழுதுவதற்கு நுண்கதை வடிவத்தில் வாய்ப்பில்லை. ஒன்று அல்லது இரண்டு பாத்திரங்களைக் கதைக்குள் உலவிவிட்டு, அவர்களிடையே ஏற்படும் முரணுக்குப்பின்னால் எழும் மனப்போராட்டங்களையும் உளவியல் சிக்கலையும் எழுதுவதற்கு ஏற்ற வடிவமாக நுண்கதைகள் இருப்பதைத் தொடர்ந்த வாசிப்பில் உணரமுடிகிறது.
எல்லாச் சிறுகதை எழுத்தாளர்களாலும் நுண்கதைகள் எழுதிவிடமுடியாது. சுரேஷ்குமாரின் சிறுகதைகளே வெளியை எழுதுவதையும் காலத்தை எழுதுவதையும் தவிர்க்கும் கதைகள் தான். எப்போதும் குறிப்பான ஒரு தருணத்தில் சந்தித்துக்கொள்ளும் மனிதர்களின் அலைபாயம் மனிதர்களையே அவர் தொடர்ச்சியாகச் சிறுகதைகளாக எழுதி வந்தவர் என்பதால், இப்போது நுண்கதைகள் என்ற வடிவம் அவருக்குரிய வடிவமாக மாறியிருக்கிறது. உயிர்மை அச்சிதழிலும், அதன் இணைய இதழான உயிர்மை.காமில் தொடர்ச்சியாக நுண்கதைகளை எழுதும் சுரேஷ்குமார் இந்திரஜித்தின் கதைகளை வாசிக்கும்போது இந்தக் கருத்து தோன்றுகிறது. இந்தமாத உயிர்மையில் வந்துள்ள காரணம், மனிதமனம், காதல் புனிதமானது என்ற மூன்று கதைகளிலுமே உருவாக்கப்படும் பாத்திரங்களின் சந்திப்புக்குப் பின் நடக்கும் உரையாடல் ஒவ்வொன்றும் உளவியல் ரீதியான உள்ளோட்டங்களாகவே இருக்கின்றன. உயிர்மையில் மட்டுமல்லாமல் காலச்சுவடு வெளியிட்ட நுண்கதைச் சிறப்பிதழில் வாசித்த கதைகளிலும் இந்தக் கூறுதான் முதன்மையாக இருந்தது. அவரது சிறுகதைகளே நுண்கதைத் தன்மைகொண்டது என்பதால், இந்த வடிவத்திற்காகப் பெரிய மாற்றம் எதுவும் அவருக்குத் தேவைப்படவில்லை. பெருந்தேவி அதிகம் சிறுகதைகள் எழுதாமல் நேரடியாக நுண்கதைகளில் இறங்கியவராக இருப்பதால் வேறுபாடுகள் எதனையும் சொல்லத்தோன்றவில்லை. ஆனால் எஸ்.ராம கிருஷ்ணன், போகன் சங்கர் போன்றவர்களின் நுண்கதைகள், அவர்களின் சிறுகதைகளிலிருந்து வேறுபட்டனவாகத் தோன்றுகின்றன. குறிப்பாக கதைவெளியை எழுதுவதில் கடைப்பிடிக்கும் சிக்கனமே அந்த வேறுபாட்டை உருவாக்குகின்றன.
நடுகல் இதழ் ஒன்றில் சுஜித் லெனின்.ப. என்பவரின் 31 நுண்கதைகளை வெளியிட்டிருந்தார் அதன் ஆசிரியர் வா.மு.கோமு. அவை, ஒரு வினை அல்லது கார்யம் (ACTION); அதற்கான காரணம் (REASON) , அதற்குப்பின்னால் இருக்கும் புரிதல் அல்லது தெளிவை முன்வைத்தல் ( QUEST ON LIFE OR UNDERSTANDING OF THE EVENT )என அந்தக் கதைகளின் கட்டமைப்பை விளக்கிவிடலாம். நடப்பு வாழ்க்கையைப் பற்றிய நினைவுபடுத்தும் பாத்திரங்களும், கடந்தகால மனிதர்களின் நிலைப்பாடுகளும் என விரிக்கப்பட்டுள்ள அக்கதைகள், வரலாறு, அறிவியல், நினைப்புகளின் புதிர்த்தன்மை என ஒவ்வொரு கதையிலும் கேள்விகளை எழுப்புவனவாக இருந்தன. அக்கேள்விகள் நவீனத்தைக் கடந்த கேள்விகளாக இருக்கின்றன என்பது கவனக்க வேண்டியன.
இவற்றை வாசிப்பதற்கு முன்பு இலங்கை எழுத்தாளர் அகமது பைசலின் நுண்கதைகளின் தொகுப்பிற்கு முன்னுரையொன்றும் எழுதினேன். அம்முன்னுரை முதல் பின்னூட்டத்தில் உள்ளது.

மேற்கை எதிர்கொள்ளல்
மேற்குலகம் - என்பது கருத்தாகவும், சிந்தனையாகவும், வாழ்க்கைமுறையாகவும் அதிகாரத்துவ அமைப்பாகவும், பொருளியல் நடவடிக்கைகளின் பரப்பாகவும் இந்தியத் தன்னிலைகளுக்குள் நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக அலைந்துகொண்டிருக்கிறது. அவ்வலைதலை கவிகளும் புனைகதையாளர்களும் விடுதலைப் போராட்ட காலத்திலும், விடுதலைக்குப் பின்னரும் எழுதிய விதங்களும் எதிர்கொண்ட முறைகளுக்குள்ளும் வேறுபாடுகள் உண்டு.
பின் காலனிய இந்தியத்தன்னிலையை உருவாக்கிய ’மேற்கு’ என்னும் கருத்தியலில் ஐரோப்பாவை இடம் பெயரச் செய்து அந்த இடத்தில் அமெரிக்காவின் பரப்பைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது உலகமயம். உலகமயத்தின் வரவோடு, இந்திய எழுத்துப்பரப்பில் ‘ இந்தியத்தனம்’ என்பதும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.
இந்தியத்தனம் - உலகமயம் - மேற்குலகம் என்ற கருத்தியல் சொல்லாடல்களின் பின்னணியில் வாசிக்கவேண்டிய ஒரு கதையை இந்திரா பார்த்தசாரதி இந்த மாத உயிர்மையில் எழுதியிருக்கிறார். கதையின் தலைப்பு : சார்லியின் தருணங்கள். இ.பா.வின் இந்தக் கதையை விவாதிப்பதோடு சேர்த்து விவாதிக்கத் தக்க கதைகள் அவ்வப்போது வாசிக்கக் கிடைக்கின்றன.
இந்திய மனிதர்கள் மேற்குலக மனிதர்களோடு முரண்படும்/ உடன்படும் சங்கதிகள் நிறைய உண்டு. கிழக்கும் மேற்கும் சந்தித்துக் கொண்டு உடன்பட்டும் முரண்பட்டும் விவாதிக்கும் தொன்மம் நவீன இந்தியத் தொன்மங்களில் ஒன்று. காலனியக் காலத்தில் உருக்கொண்ட இந்நவீனத்தொன்மம் பல எழுத்தாளர்களிடம் பலவிதமாக நகர்ந்துள்ளது. இத்தொன்மத்தைக் கொண்டு எழுதப்பெற்ற கதையொன்றைக் காலச்சுவடில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். கதையின் தலைப்பு: ‘லீலாவதி ஆவேன்’ . அமெரிக்கன் ஒருவனும் இந்தியனும் சந்தித்துக் கொள்வதில் வளரும் கதை. கரோனா இடைவெளிக்குப் பின் வந்த உயிர்மையின் முதல் இதழில் அம்பை எழுதிய ‘இரு பைகளில் ஒரு வாழ்க்கை’யும் அப்படிப்பட்ட கதைதான்
இந்தத் தொன்மத்தில் நான் வாசித்த முக்கியமான கதையாக நினைப்பது புதுமைப்பித்தனின் சிற்பியின் நரகம். அதேபோல ஜெயகாந்தனின் கிழக்கும் மேற்கும்; ஜெயமோகன் பல கதைகளை எழுதியிருக்கிறார்.
நவீனத்துவத்தை எதிர்கொண்ட தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்கள் பலரும் இந்தத் தொன்மத்தை எழுதிப்பார்த்திருக்கிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்