உக்ரைன்: போர்களும் போர்களின் நிமித்தங்களும்

எது முந்தியது....கோழியா, முட்டையா?  கதைதான். நடப்பது  உக்ரைன் - ரஷ்யப் போரா? ரஷ்யா - உக்ரைன் போரா? ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை முன்வைத்து மாற்றிச் சொல்லலாம்.

நேட்டோ நாடுகள் என்றொரு அமைப்பை உருவாக்கி அணிதிரட்டிய அமெரிக்கா பின்னால் இருக்கிறது. அது ரஷ்யாவை எதிரியாக நினைக்கிறது. தனது எதிரியை உலகத்தின் எதிரியாகக் காட்டுவதில் வல்லமை கொண்டது அமெரிக்கா. அதற்கு ராணுவத்தைப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் அச்சு, காட்சி ஊடகங்களையும் பயன்படுத்தும். அதன் நட்பு நாடுகளின் கருத்துருவாக்குகளையும் ஒன்றிணைக்கும். இதெல்லாம் புதிய கதை அல்ல; பழைய கதை.
  
விளாதிமீர் புதின் - விளாதிமீர் ஜெலன்ஸ்கி இருவரும் ஒருவிதத்தில் ஒருகுடிப்பிறப்பாளர் போல் தான். சோவியத் சோசலிசக் குடியரசில் இணைந்திருந்த உக்ரைனும் ரஷ்யாவும் பங்காளிகள் தான். ஆனால் ரஷ்யா கொஞ்சம் பெரிய ஆள். பெரிய ஆள் சொல்வதை நடைமுறையில் சிறிய ஆள் ஏன் கேட்கவேண்டும் என்ற கேள்வி எழுந்துகொண்டே தான் இருக்கும்.  சோவியத்திலிருந்து பிரிந்தபின் உக்ரைன் தனிநாடு.அதன் தலைவரைத் தேர்வுசெய்ய அந்நாட்டு மக்களுக்கு உரிமையுண்டு ;  அதன் கூட்டாளிகளைத் தீர்மானிக்க அதற்கு உரிமையுண்டு என்ற வாதங்கள் எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறதைக் கேட்க முடிகிறது. ஆனால் இப்போது திரும்பத் திரும்பச் சொல்லப்படும் நிலவியல் அரசியலில் ஒவ்வொரு நாடும் அண்டை நாட்டை அனுசரித்தும் அண்டியும் தான் நகரவேண்டியிருக்கிறது. அதனை உணராமல் ஒரு நாட்டின் மக்களைப் போர்ச்சூழலுக்குள் நகர்த்துவதால் யாருக்கு லாபம்? யாருக்கு நட்டம்? என்பதற்கான பதில் போரின் முடிவுக்குப் பின் தான் கிடைக்கும்.   போர் செய்யும் இரண்டு விளாதிமீர்களுக்கும் சொல்ல நினைக்கும் ஒரு செய்தி உண்டு. அதனைக் கோவூர்கிழார் இரண்டு கிள்ளிகளையும் பார்த்துச் சொல்லியிருக்கிறார். இப்போதைய நிலையின்படி விளாதிமீர் புதின் நலங்கிள்ளி; ஜெலன்ஸ்கி நெடுங்கிள்ளி. முற்றுகை செய்த நலங்கிள்ளியைப்போல புதின் உக்ரைனை முற்றுகை இட்டிருக்கிறார்; ஜெலன்ஸ்கி முற்றுகை இடப்பட்ட நெடுங்கிள்ளியாக இருக்கிறார்.  இறுதிப் போரில் தோற்கப்போவது முந்தைய சோவியத்துக் குடியரசுகளில் ஒன்றுதான்.
*******
அந்தப் புறநானூற்றுக்காட்சி இது தான்

தமிழ்நாட்டுப் பெருங்கவி கோவூர்கிழார் ஒரு புறநானூற்றில் கவிதை எழுதியிருக்கிறார். வஞ்சித்திணையில் துணைவஞ்சித்துறையில் அமைந்த அந்தப் பாடல், வழக்கமாக யாராவது ஒரு அரசனை நோக்கிப் பாடும் முறையில் அல்லாமல் இரண்டு பேரை நோக்கிப் பேசும் தொனியில் அமைந்த கவிதை.  போர்க்களத்தில் இரண்டுபேர் போரை ஆரம்பிக்கத்தயாராக இருக்கின்றனர். அந்த நேரத்தில் அங்கு வந்த கோவூர் கிழார் நடுவில் நின்று, உன்னுடைய எதிரியாக நிற்கும் இந்தப் படை பனம்பூ மாலையணிந்த சேரனின் படைகள் அல்ல. வேப்பம்பூ மாலை அணிந்த பாண்டியனின் படைகளும் அல்ல. நீ அணிந்திருக்கும் அத்திப்பூ மாலையையே, 
உன்னை எதிர்க்க நினைத்து முன்னால் நிற்கும் அரசனும் அணிந்திருக்கிறான்.எந்தப் போரிலும் சண்டையிடும் இரண்டுதரப்பும் வெற்றிபெறவும் முடியாது.  ஒரு தரப்பு தோற்கவே வேண்டும். இரண்டு பேரில் யார் தோற்றாலும்  தோற்கப்போவது வேறு குடியல்ல; உனது குடிதான். உனது குடிப்பெருமை காக்கவேண்டும் என்றால் போரைக் கைவிடுவதே சரியானது. கைவிடாமல் தொடர்ந்தால் இந்த உலகம் எப்போது உங்களைப் பழித்துப் பேசத்தான் போகிறது என்று எச்சரிக்கிறார். இனி அவரது சொற்கள்:

இரும்பனை வெண் தோடு மலைந்தோன் அல்லன்;
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்!
நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னோடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே;
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்,
குடிப்பொருள் அன்று, நும்செய்தி; கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும், இவ் இகலே

24/2/22 உக்ரைன்-ருஷ்யா :தூரத்துக் காட்சிகள்

================================
ரஷ்யாவும் உக்ரைனும் மோதிக் கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. வலுத்தவன் பக்கம் நிற்காமல் இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் உலகம் உக்ரைன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்புச் செய்ய நினைப்பதாகவே காட்டிக்கொள்ளும். ரஷ்யாவைக் கண்டிக்கும் சொற்களையே உருவாக்கிக் கொள்ளத்துடிப்போம். ஆனால் எனது கணக்குப்படி வலுத்த அணி ரஷ்யா அல்ல. உக்ரைனின் பின்னாலிருந்து போரை நடத்திடத் திட்டமிடுபவர்கள் அமெரிக்காவும் அதனோடு கரம்கோர்க்கும் நேட்டோ நாடுகளும் தான். அமெரிக்கா, நேட்டோ x ரஷ்யா என்ற எதிர்வில் வலுத்த அணி நேட்டோவும் அமெரிக்காவும் தான்.
போலந்திலிருந்த காலத்தில் எல்லையோரக்கிராமம் ஒன்றிலிருந்து பார்த்துவிட முடிந்த நாடுகளே ரஷ்யாவும் உக்ரைனும். எனது மாணவி மக்தாவின் தாத்தா கிராமம் மூன்று நாடுகள் சந்தித்துக்கொள்ளும் எல்லையோரக்கிராமமாக இருந்தது.
25/2/22
ரஷ்யா- கிழக்கு ஐரோப்பிய நாடுகள்: உறவும் முரணும்
===========================================
வார்சா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இரண்டு நாட்கள் கழித்து தனது மேசைக்கு முன்னால் உட்காரவைத்துப் பேசிய துறையின் தலைவர் பேரா. தேனுதா ஸ்டாய்சிக் சொன்ன அறிவுரைகள் இரண்டு.
1] உங்கள் வகுப்புகளில் அரசியல் பேசலாம். நீங்கள் கம்யூனிசம் சார்பானவராக இருப்பது சிக்கல் இல்லை. ஆனால் அதுதான் ஆகச்சிறந்த அரசியல் சிந்தாந்தம்; நடைமுறைக் கொள்கை என்று நிறுவ முயலவேண்டாம்.
1991-க்குப் பிறகு போலந்து மாணவர்களும் கல்வியுலகமும் இதனை ஏற்கவில்லை; நம்பவில்லை; விரைந்து விலகிக் கொண்டிருக்கிறார்கள். முதலாளிய நடைமுறைக்குப் பழக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதைவிட ரஷ்ய மொழி மீது கோபமாக இருக்கிறார்கள்; ஆங்கிலம் கற்கவேண்டும்; பேசவேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார்கள்; அமெரிக்கா போவது அவர்களின் புதுக்கனவு
2] குடும்ப உறவுகள் பற்றிப் பேசும்போது கவனமாகப் பேசவேண்டும். இந்தியக் குடும்ப உறவுகளை நினைத்துக்கொண்டு பேசிவிடவேண்டாம். குறிப்பாகத் தந்தை பெயரையோ, தாய் பெயரையோ சொல்ல விரும்பாத மாணவர்களிடம் திரும்ப வலியுறுத்திக் கேட்கவேண்டாம். அதனை அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்றார்.
ரஷ்ய வெறுப்பு : நேரில் பார்த்த இரண்டு நிகழ்வுகள்
-------------------------------------------------------------------------
1] 2012 இல் ஐரோப்பியக் கோப்பைக்கான கால்பந்துப் போட்டிகள் வார்சாவில் நடந்தன. அந்தப் போட்டிகள் நடக்கும் பெரும் மைதான் பல்கலைக்கழகத்திற்குப் பின்னால் விஸ்துலா ஆறைத் தாண்டி இருந்தது. தொடக்கவிழா ஊர்வலம் பல்கலைக்கழக வாசலிலிருந்துதான் தொடங்கின. எல்லா அணிகளும் அங்கிருந்து கிளம்பின; ஒரேயொரு அணியைத்தவிர. ரஷ்யாவின் கால்பந்து அணி மைதான வாசலில் ஊர்வலத்தில் இணைந்துகொண்டால் போதும் என்று சொல்லிவிட்டார்கள். ஊர்வலம் போகும்போது ரஷ்ய அணியின் மீது தாக்குதல் எதுவும் நடந்து விடலாம். ரஷ்யாவின் மீதுள்ள கோபத்தைக் காட்டும் வாய்ப்பு உண்டு. ஆம் ரஷ்யா மீது போலந்துக்காரர்களுக்குக் கோபம் உண்டு. சோசலிசக் கூட்டாளி நாடுகளுக்கும் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த நாடுகளுக்கும் அதன் மீது கோபம் உண்டு.
2] 2013 குடியரசுதின விழாவிற்கு முன்னால் நடந்த நாடாளுமன்றக்கூட்டத்தில் ஸ்டாலின் கட்டித்தந்த பல ஆயிரம் கோடி மதிப்புடைய பண்பாட்டு மாளிகையை (படம்)இடித்துவிட வேண்டும் எனத் தீர்மானம் கொண்டுவந்தது ஆளுங்கூட்டணியிலிருந்த ஒரு கட்சி; ஆனால் அது நிறைவேறவில்லை.
********
அதே நேரம் கிராமப்புற கம்யூன் வீடுகளில் இருப்பவர்களும் நகர்ப்புறத்தில் வாழும் முதியவர்களும் தங்களுக்குக் கிடைத்த மருத்துவ வசதி, முதியோர் பாதுகாப்பு எல்லாம் இனிக் கிடைக்காதோ என்ற அச்சத்தில் தான் இருந்தார்கள். போலந்து அர்சாங்கம் ஓரளவு சமூக நல அரசாகவே இப்போதும் இருப்பதால் முழுவதும் முதலாளிய நடைமுறைக்குள் போய்விடவில்லை என்பதுதான் ஆறுதலான ஒன்று.
[ வாசிக்க விரும்புபவர்களுக்காக இரண்டு கட்டுரைகள் பின்னூட்டத்தில் இணைப்பாக உள்ளன”
2/3/22 வினை- எதிர்வினை
---------------- ---------------------------------
இப்போது நடக்கும் போர் உக்ரைன் x ரஷ்யா என இரண்டு நாடுகள் தொடர்பானது மட்டும் எனப்பார்ப்பது காதலைக் காதலாக மட்டும் பார்த்துப் புரிந்துகொள்வது போன்றது. அப்படிப் பார்ப்பவர்களுக்குக் காதல் திருமணத்தில் முடியவேண்டும் என்பது முக்கியம் இல்லை. காதல் புனிதமானது; காதலும் காதலிக்கப்படுதலும் உன்னதம்; அது மட்டுமே முக்கியம்.
இதற்கு மாறான பார்வை திருமணத்தையும் உள்ளடக்கிய பார்வை. அப்பார்வை காதலைத் திருமணத்தோடு இணைத்துப் பார்க்கிறது. அதனால் 'இரண்டு நபர்களோடு மட்டும் முடிவதல்ல காதல்; இரண்டு குடும்பங்கள்; இரண்டு குழுமங்கள் தொடர்புடைய சமூக நிகழ்வாக இருக்கிறது காதல்' என்கின்றது. இதனால் ஆதிக்கம், விட்டுக் கொடுத்தல் போன்றனவும் காதலோடு விவாதிக்கப்பட வேண்டும் என விரிவான நகர்வுகளை முன் வைக்கும்.இதை அப்படியே போர்களுக்கு நகர்த்திப் பார்க்கலாம்
நம் காலத்துப் போர்கள் எல்லாம் தொடங்கப்படும்போது இரு நாடுகள் தொடர்புடைய அண்டைநாட்டுச் சிக்கல்சார்ந்த போராகவோ, மதப்பிளவுகள், இனவேறுபாடுகள் மொழிச் சிறுபான்மையால் பாதிப்பு போன்ற உள்நாட்டுப் போர்களாகவோ தோன்றும். அப்படித் தோன்றுவது தோற்ற மயக்கம் மட்டுமே. உலக வல்லாதிக்க நாடுகள் பின்னணியில் இருந்து இயக்காத போர்களே இல்லை என்னும் அளவுக்கு அவற்றின் தலையீடுகள் உள்ளன. அந்நாடுகளின் நலனே போரின் காரணிகளாக இருக்கின்றன. இரண்டாம் உலகப்போருக்குப் பின் அமெரிக்கத் தொடர்பு இல்லாமல் ஒன்றையாவது சுட்டிக்காட்டிவிட முடியுமா? அமெரிக்கா தலையிட்டால் நாங்கள் தலையிட நேரும் என்பதே பழைய சோசலிச நாடுகளின் நிலைபாடு.
அணி சேர்த்தல் எனும் வினைக்கு எதிர்வினை அணி உடைப்பதானே?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சம்ஸ்க்ருதம் : செவ்வியல் மொழியாகவும் ஆதிக்கமொழியாகவும்

தங்கலான்: விடுதலை அரசியலின் கருவி

காவல்கோட்டம்: இந்தத் தேர்வு சரியென்றால் இதைத் தொடர என்ன செய்யப் போகிறோம்?