ஏற்பின் விளைவுகள்

 எனது திறனாய்வுப்பார்வை எழுத்தின் அடிப்படைக்கட்டுமானங்கள் - காலமும் இடமும் கருப்பொருளும் உரிப்பொருளுமான - மூன்றின் இயைபுப் பொருத்தம் குறித்து முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்பது தொல்காப்பிய இலக்கியவியல் கற்றுத்தந்துள்ள பாடம். இந்த இயைபுப் பொருத்தத்தையே காலம், இடம், பாத்திரங்களின் வினை ஆகியவற்றின் ஓர்மை (Unity of Time, Space and Action)யென அரிஸ்டாடிலும் சொல்கிறது என்பதும் நான் கற்றுத்தேர்ந்த திறனாய்வு அறிவே.

அடிப்படைக் கட்டுமானங்களின் இயைபுப்பொருத்தம் சரியாக இல்லையென்றால் சுட்டிக்காட்டவேண்டும்; சுட்டிக்காட்டவே செய்வேன். காலமும் வெளியும் இணைந்த முதற்பொருளையும், மனிதர்கள், இயற்கைக்காட்சிகள், வினைகள், வினைகளின் விளைவுகளென கருப்பொருட்களின் இயைபையும் பார்க்கவேண்டியது திறனாய்வுப் பார்வையின் கடமை. இவ்விரண்டும் இயைபான நிலையிலேயே எழுத்துப் பரப்பில் உருவாக்கப்படும் மனிதப்பாத்திரங்களின் உணர்ச்சி வெளிப்பாடும், சமூக உறவுகளும், உளவியல் சிக்கல்களும் சரியாக அமையும். உரிப்பொருள் எனத் தொல்காப்பியம் பேசும் இந்த அடிப்படையை இப்போதைய திறனாய்வு உள்ளடக்கம் எனச் சொல்கிறது.
செய்முறைத் திறனாய்வாக(Practical Criticism) எழுதப்படும் எனது பார்வையைத் தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் பலரும் ஏற்பதில்லை. அவர்களுக்குத் தேவை பாராட்டுரைகள் மட்டுமே. குறிப்பாக உள்ளடக்கம் சார்ந்து அவர்களின் பார்வையை விவாதிப்படுத்திப் பாராட்டுவதையே விரும்புகிறார்கள். இலக்கியவியலின் முப்பரிமாணங்களையும் விவாதித்துப் பேசும் திறனாய்வுப்பார்வையை விரும்பாதவர்கள் விலகிச் செல்கிறார்கள். திறனாய்வாளர்கள் அதுகுறித்துக் கவலைப்பட எதுவுமில்லை. புதிய மாதவியைப் போன்று தொடர்ந்து இயங்குபவர்கள் இதனை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதுவே மகிழ்ச்சிதான். தொடர்ந்து எழுதுங்கள்; தொடர்ந்து வாசிக்கலாம்.


 விமர்சனங்கள் சரியாக வைக்கப்படுமானால் அவை

சரியாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. எதோ ஒருவகையில்
அடுத்த படைப்பில் அது கூர்மையடைகிறது. காரணம்
விமர்சனம் சொல்லப்பட்டவிதமும் அதை உணர்ந்த தருணமும்.
என் முதல் நாவல் பச்சைக்குதிரை ஊடறு ZOOM வழியாக
அறிமுகப்படுத்தப்பட்டபோது பேராசிரியர் அ. ராமசாமி அவர்கள்
நாவலின் காலம் பற்றிய கேள்வியை முன்வைத்தார். அவர் கேள்வி
வரும்வரை என் ஓர்மையில் அது இல்லை என்பதை ஒத்துக்கொள்வதில்
எனக்கொன்றும் தயக்கமில்லை. அப்போது அப்புதினத்தில் எம்ஜி ஆரின்
ரிக்ஷாகாரன் படம் வெளியானது பேசப்படுகிறது. அடுத்து நாவலின்
இறுதியில் மும்பை பங்குசந்தை கட்டிடத்தில் குண்டுவெடித்த சம்பவம்
கண்மணி வாழ்க்கையில் பிரச்சனையானது கதையாகிறது. இடையில் வரதாபாயின் மாதுங்கா கண்பதி விழா வருகிறது. எனவே காலம் என்பது 1971
ரிக்ஷகாரன், 80களில் வரதாபாய், 93ல் குண்டுவெடிப்பு என்று 25 ஆண்டுகால காலத்தின் கதையாக விரிந்திருக்கிறது. கதையின் நிகழ்வுகளும் காலமும் பொருந்திப்போகின்றன என்றாலும் கதையில் காலம் வெளிப்படையாக இல்லை. கதைக்கு களமும் காலமும் முதற்பொருள். எனக்குள் அது மிகச்சரியாக வினையாற்றி இருக்கிறது என்பதை நான் என் இரண்டாவது நாவல் எழுதி அதை எடிட் செய்யும்போது புரிந்து கொண்டேன்.
இரண்டாவது நாவல் “சிறகொடிந்த வலசை’ கொரொனா காலத்து கதை.
எல்லோரும் லைட் அடிச்சி கொரொனாவை விரட்டுங்கள் என்ற அந்தநாளில் ஆரம்பித்து கதை ஹெலிகாப்டரில் பூத்தூவுகிறது வரை..
காலண்டரை வைத்துக்கொண்டு நிகழ்வுகளில் காலம் சரியாக அமைந்திருக்கிறதா என்று இன்னொரு முறை சரிபார்த்துக்கொண்டேன்.!
ஒருவகையில் அ.ராமசாமி சாரின் அன்றைய விமர்சனமும் அதை
அணுகிய என் உள்ளுணர்வும்…
ஒருமுறை இதை இன்னொரு புகழ்பெற்ற விமர்சகரிடம் சொல்லியபோது
இதை எல்லாம் எந்த ஒரு படைப்பாளரும் வெளியில் சொல்லிக்கொள்ள
மாட்டார்கள், லூசுத்தனமா வெளியில் சொல்லாதீர்கள் !!! என்று எனக்கு அறிவுரை வழங்கினார். எனக்கு லூசுத்தனம் பிடிக்கும்.
------------------------------------------
Once again thanks to Prof. அ.ராமசாமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்