காலத்தின் எழுத்தாளன்

இமையத்தின் பெத்தவன் கதை அண்மையில் தெலுங்கு மொழியில் மொழி பெயர்க்கப்பெற்றுள்ளது . தெலுங்கு- தமிழ்ச் சிறுகதைகள் அடங்கிய ஒரு தொகுப்பில் பெத்தவன் கதை முப்பது பக்கங்களில் (464-493) மொழிபெயர்த்துத் தரப்பட்டுள்ளது. மொழி பெயர்த்துள்ளவர் புருஷோத்தம தாஸ். 20 கதைகள் அடங்கிய அந்தத் தொகுப்பில் பெத்தவன் கதை இடம் பெற்றுள்ளதும், திருப்பதி பல்கலைக்கழகம் பாடத்திட்டத்திற்கு ஏற்றுக் கொண்டுள்ளதும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்று. தமிழ் நாட்டில் இதுபோல ஒரு பல்கலைக் கழகத்தில்  உடனடியாகப் பாடமாக ஆகும் சாத்தியமில்லை என்பது எனக்குத் தெரியும்.
இமையத்தின் பெரும்பாலான சிறுகதைகளுக்கு முதல் வாசகனாக இருந்திருக்கிறேன். பத்திரிகையில் வருவதற்கு முன்பே இந்த மாதம் அல்லது இந்த வாரம் இந்தக் கதை வருகிறது எனத் தொலைபேசியில் சொன்னவுடன் வாங்கிப் படித்துவிட்டு இமையத்தோடு பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவன். வார்சாவில் இருந்தபோதும் அவருடன் தொலைபேசியில் பேசுவேன் என்றாலும் கதைகளை உடனடியாக வாசிக்க முடிந்ததில்லை. அச்சிட்ட இதழ்கள் அங்கு வந்து சேர்வதில் இருந்த தாமதம் காரணமாக அவரது அண்மைக் கதைகளை உடனடியாக வாசிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் பெத்தவன் கதை மட்டும் விதிவிலக்கு.
தமிழின் முக்கியமான இதழ்கள் அதன் அளவு கருதி அச்சுக்கு அனுப்பாமல் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்த நேரத்தில் என்னோடு தொலைபேசியில் பேசிய இமையம் அந்தக் கதையைப் பற்றிச் சொன்னார். அதனால் இணையம் வழியாகப் பெற்று அச்சுக்கு வருவதற்கு முன்பே அந்தக் கதையை படித்து விட்டு உயிர்மை ஆசிரியர் மனுஷ்யபுத்திரனோடு அந்தக் கதையைப் பற்றி உரையாடினேன். தமிழின் மிக முக்கியமான கதையாக இருக்கப் போகிறது என்று நான் சொன்னதற்காக அவர் அச்சிட்டார் என்று சொல்ல முடியாது. நல்ல கதைகளைக் கண்டறிந்து வெளியிடுவதில் அவருக்கு இருக்கும் தேர்ச்சி விளக்கிச் சொல்ல முடியாதது. ஒரேயொரு கதைக்காகக் கூட ஓர் உயிர்மையை ஒதுக்கித் தரும் தைரியமும் எழுத்து மற்றும் எழுத்தாளன் மீது அக்கறையும் கொண்டவர் மனுஷ்யபுத்திரன். நான் உரையாடிய அடுத்த மாதம் உயிர்மையில் அந்த நெடுங்கதை அச்சாகியது
 
பெத்தவன் கதை உயிர்மையில் அச்சாகி சரியாக ஓராண்டு (செப்டம்பர் 2012) ஆகி விட்டது. அச்சான உடனே ஒரு வாசகர் கடிதம் எழுதினேன். ஒரு சிறுகதைக்காக அதுவரை நான் வாசகர் கடிதம் எழுதியதில்லை. பெத்தவன் கதை தான் என்னை முதன் முதலில் எழுதத் தூண்டியது. கதையைப் பற்றிப் பேசுவதோடு அந்தக் கதையை அச்சிட்ட உயிர்மையின் ஆசிரியர் மனுஷ்ய புத்திரனைப் பாராட்ட வேண்டும் என்ற ஆசையும் அந்த வாசகர் கடிதத்தின் பின்னால் இருந்தது. கடிதத்திற்கு நான் தந்த தலைப்பு இமையம் : என் காலத்தின் எழுத்தாளன் என்பது.
 பெத்தவன் சிறுகதை அச்சாகி ஓராண்டுக்குள் பெற்றுள்ள கவனம் போல வேறொரு கதை பெற்றதில்லை என்று நிச்சயமாகச் சொல்வேன். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறுகதைகளை வாசித்துக் கொண்டிருப்பவன். இதுவரை சில ஆயிரம் கதைகளை வாசித்தவன் என்ற நிலையில் சொல்கிறேன். ஜெயகாந்தனின் கதைகள் நடுத்தர வர்க்கத்தின் நம்பிக்கைகளின் மீது உண்டாக்கிய சலனங்களைச் சில விமரிசனச் சொல்லாடல்களாக வாசித்தவன். அவரது அக்கினிப் பிரவேசம் கதையையொட்டி எழுந்த சர்ச்சைகளும் எதிர்வினைகளும் அலையெனப் பரவிய காலம் இப்போது நினைவுக்கு வருகிறது. எழுதப்பெற்ற பத்திரிகையிலோ, விமரிசனங்களை முன் வைக்கும் இதழ்களிலோ இமையத்தின் இக்கதையைப் பற்றி அதிகம் எழுதவில்லை என்பது ஏன் என்று தெரியவில்லை. அதேநேரத்தில் இந்தக் கதை வாசிக்கப்பட வேண்டிய கதை என்றும் விவாதிக்கப்பட வேண்டிய கதை என்றும் பலரும் பரிந்துரை செய்துள்ளதைப் பார்க்கிறேன். இணையத்தில் இந்தக் கதை இப்போது சுற்றிக் கொண்டிருக்கிறது.

எழுத்து சார்ந்த சர்ச்சைகளை எழுப்பவில்லை என்பதற்காகச் சலனம் அற்ற எழுத்து எனச் சொல்லி விட முடியாது. எழுத்து உலகத்தைத் தாண்டி ஒரு கதை செயல் தளத்தில் விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதற்கான உதாரணக் கதையாக மாறி இருக்கிறது பெத்தவன். இந்திய சமூகத்தில் தொடர்ந்து விவாதிக்கப்படும் சிக்கலாகவும் நிறுவனமாகவும் அழிவிலிருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையைப் போலத் திரும்பத் திரும்பப் பலத்தோடு எழும்பி நிற்கும் ஒன்றாக இருப்பது சாதி. சாதியின் இருப்பையும் இயக்கத்தையும் கட்டுரைகளாக எழுதி விவாதித்து விடுவது மிகச் சுலபமானது. அதைக் கதையாக - கலை நேர்த்தி கொண்ட கதையாக ஆக்கியுள்ள சிறப்பு இமையத்துக்கு கூடி வந்திருக்கிறது. சாதியின் இருப்பை அதன் உள்ளார்ந்த கவனத்துடன், சிறுகதை என்னும் இலக்கிய வடிவத்திற்கான அழகியல் கெடாமல், மிக எளிமையான மொழியில் பாத்திரங்களின் உயிரோட்டத்தைத் தக்க வைக்கும் உரையாடல்களால் நகர்த்திக் காட்டிய அற்புதம் அந்தக் கதைக்குள் இருக்கிறது.
 
ஒரு சிறுகதை அதன் வாசகருக்கு தரும் உணர்வுகளும் தாக்கமும் உடனடியாகக் கணிக்கக் கூடியன அல்ல. ஆனால் இந்தப் பெத்தவன் கதை முன்வைத்த கௌரவக் கொலைகள் என்னும் சமூக நிகழ்வின் பின்னணியில் செயல்படும் சாதி ஆதிக்கக் கருத்தியலும், நிகழ்கால அரசியலில் தட்டி எழுப்பப்படும் ஜனநாயக விரோத மனோபாவமும் பேசுபொருளாக மாற்றப்பட்ட விதம் மூலம் முக்கியமான கதையாக மாறிக் கொண்டது பெத்தவன் கதை. உயிர்மையில் அச்சான பின் தனிக்கதையாக அச்சிடப் பெற்று இந்த ஒரு வருடத்திற்குள் 25000 பிரதிகள் விற்றுத் தீர்ந்துள்ளன. அந்தக் கதையை வாசித்த பண்பாட்டு இயக்கங்கள் பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாகத் தனியே அச்சிட்டு விநியோகம் செய்ய வேண்டும் என நினைத்ததே அந்தக் கதையின் காத்திரத்தை உணர்த்தியுள்ளது. அத்தோடு கலை இலக்கியத் துறையில் செயல்படும் அமைப்புகளின் பொறுப்புணர்வையும் வெளிக்காட்டியுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர் சங்கம் முன்னெடுத்த அந்த நிகழ்வை அதன் சார்புப் பதிப்பகமான பாரதி புத்தகாலயம் தீவிரப்படுத்தியுள்ளது.
 
பெத்தவன் கதை இவ்வளவு கவனம் பெற்றதற்கு அந்தக் கதைக்குப் பின் நிகழ்ந்த நிகழ்வொன்றும் காரணம் என்பதை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும். கொலையா? தற்கொலையா? என்ற விவாதத்தை உண்டாக்கிய இளவரசனின் மரணத்தின் முன் நிகழ்ந்த நிகழ்வுகள் கடந்த ஆறு மாதத்தில் தமிழக ஊடகங்களின் கவனத்திற்குரியனவாக இருந்தன. இளவரசனைக் காதலித்த திவ்யா என்ற பெண்ணின் தந்தையின் தற்கொலை, அதனைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி முன் வைத்த நாடகக் காதல் என்னும் கருத்துரு. அதன் தொடர்ச்சியாகத் தர்மபுரி மாவட்டத்தின் மூன்று கிராமங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்புகள் தீக்கிரையாக்கப்பட்டது எனத் தொடர் நிகழ்வுகள் நடந்து முடிந்து விட்டன. இவை எல்லாம் நிகழ்வுகளாக நடப்பதற்கு முன்பே இமையத்தின் பெத்தவன் கதையில் எழுத்தாக மாறியிருந்தது என்பதுதான் ஆச்சரியம். இமையத்திடம் கேட்டால் இதில் ஆச்சரியப் படுவதற்கு எதுவுமே இல்லை. எல்லாம் தமிழ்நாட்டுக் கிராமங்களில்- குறிப்பாக வட தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருப்பவை தான் எனச் சொல்லுவார். இளவரசன் -திவ்யா காதலில் முதல் மரணம் திவ்யாவின் தந்தையின் தற்கொலை. பெண்பிள்ளையை பெத்தவன் அவர் தான்.

இமையத்தின் கதைகளைத் தொடர்ந்து வாசிப்பவர்கள் உணர்ந்திருக்கக் கூடும். அவரது எழுத்தின் பாணி. தன்னைச் சுற்றி நடப்பனவற்றை – அதன் சாரமான முரண்பாடுகளோடும் காரணங்களோடும் கதையாக மாற்றும் பாணி. மனிதர்களின் பேச்சு மொழியைப் பயன்படுத்துவதில் இருக்கும் லாவகமும் இயல்பும் அவரது கதைகளுக்கு நவீன பாணியை உருவாக்காமல் நம்பகத் தன்மையை ஊருவாக்கித் தருகிறது. அதற்காக நம் காலத்துக் கதைகளை எழுதாமல் கடந்த காலத்தின் மீது ஏக்கம் கொண்ட மனத்தோடு கதைகளை எழுதிக் கொண்டிருக்கும் மண்வாசனை எழுத்தாளர்களின் பட்டியலில் அவரைச் சேர்த்துவிட முடியாது. நவீனத்துவ வாழ்க்கை முறை, பாரம்பரியமான தமிழ் வாழ்வின் மீது செலுத்தும் காத்திரமான தாக்குதலை எளிய மொழியின் வழியாகச் சொல்லும் எழுத்தாளனாக இமையம் தொடர்ந்து வெற்றி பெற்றிக் கொண்டிருக்கிறார். அதைச் செய்ய முடியாமல் நவீனத்துவ எழுத்தாளர்கள் இருண்மையான மொழிக்குள் பதுங்கிக் கொண்டிருக் கிறார்கள். பாவனைகளை முன் வைக்கும் மொழியின் வழியாக வெற்றுப் பதிவுகளைச் செய்யும் இலக்கியப் போக்கிற்கு மாற்றாகக் காத்திரமான நம்பகத் தன்மையின் மேல் கட்டப்படும் கதைத் தளம் எப்போதும் வாசகர்களுக்கு அலுப்பூட்டுவதில்லை. அதைத் தான் இமையம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து எழுதுங்கள் இமையம்.
இந்தக் குறிப்போடு பெத்தவன் கதை அச்சானவுடன் உயிர்மைக்கு அனுப்பிய வாசகர் கடிதத்தையும் இங்கே தருகிறேன். அப்போது வாசிக்காதவர்கள் இப்போது வாசித்துப் பார்க்கலாம்.
 
இமையம்: என் காலத்தின் எழுத்தாளன்
 
இமையத்தின் பெத்தவன் கதையை செப்டம்பர் மாத உயிர்மையில் வெளியிட்டதற்காகப் பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். காலனிய ஆட்சிக்குப் பின் நாம் வரித்துக் கொண்ட ஜனநாயகமும், அதன் தத்துவப் பின்புலமாக இருக்கின்ற அறிவொளிக்கால மனநிலையும், அவற்றை இந்திய ஜன சமூகத்திற்குக் கற்றுத் தந்து பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி விடும் என நம்பப்பட்ட மேற்கத்திய கல்வி முறையும் தொடர்ந்து அடைந்து கொண்டிருக்கும் தோல்வியின் வெளிப்பாடாக இந்தக் கதையை நான் வாசித்தேன். நமது இளம் யுவதிகளுக்கும் இளைஞர்களுக்கும் தரப்படும் கல்வி, ஆண்- பெண் உறவு என்பதும், அதன் வழியாக உருவாக்கப்படும் குடும்ப வாழ்க்கை என்பதும் இரு மனங்கள் சார்ந்தது என்று சொல்லிக் கொடுக்கின்றன. ஆனால் நிகழ்காலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்/ இந்திய வாழ்க்கையோ குடும்பத்தை உருவாக்குவதில் சாதி சார்ந்த அகமண முறை மட்டுமே செல்லுபடியாகக் கூடியது என்பதை விடாப்பிடியாகவும் வன்முறையோடும் நிறுவிக் கொண்டே இருக்கிறது. சாதியின் பெயரால் தடுக்கப்பட்டுக் கொலை செய்யப்படும் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புச் சொல்லும் இடத்தில் இருப்பவர்கள் நமது ஜனநாயகத்தின் முக்கிய அமைப்புகளான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தான். வெளியில் ஜனநாயக வேசம் போட்டுக் கொண்டுக் கிராமங்களில் ”ரத்த உறவுகள், சொந்த பந்தங்கள்” எனச் சொல்லி சாதி அரசியல் செய்கிறார்கள். இவர்களால்- இவர்களின் பிரதிநிதிகளால்-அளிக்கப்படும் தண்டனைகளின் பேரில் தான் சாதிமீறிய இளையவர்கள் கொல்லப்படுகிறார்கள். அந்தக் கொலைகளுக்கு நமது ஊடகங்கள் கௌரவக் கொலைகள் என்று பெயர் தந்து கௌரவம் செய்கின்றன.
 
இந்தக் கொலைகளிலும் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களைத் தங்கள் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் ஆதிக்க சாதி ஆண்கள், தங்கள் சாதியைச் சேர்ந்த ஒரு பெண் ஒடுக்கப்பட்ட சாதி ஆணை விரும்பி விட்டால் கொதித்துப் போய் விடுகிறார்கள். அந்தப் பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்குத் தரும் நெருக்கடியின் வழியாகச் சாதி தர்மம் காக்கப் பஞ்சாயத்து எனும் வேள்விக்குண்டங்களில் இறக்கித் தீக்குளிக்கச் செய்கிறார்கள். தொடர்ந்து தமிழ்ச் சமூகம் சாதியச் சமூகமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது; அதை மீற நினைப்பவர்களுக்கு அதன் கட்டமைப்பு வழங்கும் தண்டனை மிகக் குரூரமானது. வெளிப்படையாக நான் விளக்கிச் சொல்லும் நிகழ்காலத் தமிழ்ச் சமூக நடைமுறையை இமையத்தின் கை இந்தக் கதை மூலம் சிறுகதைக் கலையின் நுட்பங்களோடு வாசிக்கத் தந்திருக்கிறது.
 
தன் பார்வைக்குள் படும் வடதமிழ் நாட்டுக் கிராமங்களின் வாழ்க்கையின் பகுதியாகவே தன் கதை வெளிகளையும் பாத்திரங்களையும் தெரிவு செய்யும் இமையம் அந்தக் கதைகள் எழுப்பும் பிரச்சினைகளை அந்தப் பகுதிகளுக்கு உரியதாக மட்டும் வைத்திருப்பதில்லை என்பது மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று. இந்தக் காரணங்களுக்காகவே இமையத்தின் கதைகள் வட்டார மொழியில் எழுதப்பட்ட போதும் வட்டார எழுத்து என்ற அடையாளத்தைத் தகர்த்து இந்திய எழுத்தாகவும் உலக எழுத்தாகவும் கவனம் பெற வேண்டியனவாக இருக்கின்றன. நிலவும் வேறுபாடுகள் சார்ந்து ஒடுக்கப் படுகிறவர்களின் துயரத்தை எழுதும் படைப்பாளிகள் கவனம் கொள்ள வேண்டிய அம்சம் இது. பொதுவாகப் புனைகதைகள் நிகழ்காலத்தின் இருப்பை உரசிச் செல்வனவாக இருக்க வேண்டும். அதிலும் நாவலை விடச் சிறுகதைகள் அவை எழுதப்படும் காலத்தின் தத்தளிப்பைத் தடவிப் பார்க்காமல் சென்று விட்டால் அவை நம் காலத்து இலக்கியம் என்ற அர்த்தத்தை இழந்து விடும். இந்த அளவுகோலோடு வாசிக்கும் போது நம் காலத்தில் எழுதிக் கொண்டிருக்கும் பலரது கதைகள் சமகாலத் தன்மையைத் தவறவிட்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்ட முடியும். நாவலில் கூட அதன் கால விரிவு கருதி பழைய காலத்திற்குள் பயணிக்கச் சாத்தியங்கள் உண்டு. ஆனால் சிறுகதைகள் அப்படி இருக்க முடியாது என நினைக்கிறேன். வரலாறு மற்றும் புராண காலப் பாத்திரங்கள் வழியாகக் கூட நம் காலத்தின் மனநிலையை உரசும்போதுதான் அவை சமகால இலக்கியமாக ஆக முடியும்.

இமையத்தின் எழுத்துகளைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பவன் என்ற வகையில் பெத்தவன் என்ற இந்தக் கதையை இமையத்தின் மிக முக்கியமான சமகாலக் கதையாக நினைக்கிறேன். நமது காலத்தின் –சமூகத்தின்- பெருநெருப்பு ஒன்றின் ஜ்வாலையைத் திறந்து காட்டிய இந்தக் கதையைப் போலவே நம் காலத்தின் முக்கியமான இரண்டு பிரச்சினைகளை அவரது அண்மைக் காலக் கதைகளில்    வாசித்திருக்கிறேன் உலகமயப் பொருளாதாரத்தின் வரவுக்குப் பின்னால் நமது கிராமங்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று நிலமிழப்பு. கைவிரல் எண்ணிக்கைக் கணக்கில் ஒன்றிரண்டு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் சிறுவிவசாயிகள் தங்கள் நிலங்களை விவசாயமல்லாத வேறு காரியங்களுக்கு விற்றுவிட்டு இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். கிராமத்திலிருந்து வந்தவன் என்ற வகையில் எனது நேரடி அனுபவம் இது. ஆனால் வேதனையையும் வலியையும் மறைத்துக் கொண்டு விடாப்பிடியாக நிலத்தை விற்க மறுக்கும் இரண்டு மனிதர்களை தனது வெவ்வேறு கதைகளில் எழுதிக் காட்டியிருக்கிறார் இமையம்.

அந்த இருவருமே வயதானவர்கள். தங்களின் தேவை அன்றாட உணவு மட்டுமே என நினைக்கும் பழைய மதிப்பீட்டு மனிதர்கள். பணம் முக்கியமில்லை; எனக்குத் தேவையான வரகுச் சோறைத் தரும் இந்த நிலம் தான் எனக்கு முக்கியம் என நினைக்கும் தங்கம்மாளைத் தனது சோறுபணம் கதையில் சந்திக்க வைத்தார். அவளை ஒத்து இன்னொரு வயதானவரை உயிர்நாடி கதையில் எழுதிக் காட்டியிருந்தார் (இந்தக் கதை சுஜாதா 2008 தொகுத்த டைம்ஸ் இன்று தொகுப்பில் இடம் பெற்றதாக நினைவு). உலக மயத்தின் வரவால் ஊதிப் பருத்துக் கொண்டிருக்கும் ரியல் எஸ்டே தொழிலைப் போலவே நகரங்களில் மானாங்கண்ணியாக வலைய வரும் ஒரு வர்க்கமாக இருப்பவர்கள் தகவல் தொழில் நுட்பக் கூலிகள் (ஐ.டி). முகமறியாத மனிதர்களால் முகம் பார்க்காமலேயே தேர்வு செய்யப்படும் கூலிகளாக மாறும் இளையவர்கள் எதைப் பெறுகிறார்கள்; எதை இழக்கிறார்கள் என்பதைச் சொல்லும் இரண்டு கதைகளை –வேலை, ஃபேமிலி – எழுதி வாசகர்களுக்குத் தந்துள்ள இமையம் என் காலத்தின் எழுத்தாளராக ஆகிக் கொண்டிருக்கிறார் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அந்தக் கதைகளை எழுதிய இமையத்தின் கைகள் இன்னும் இதுபோன்றே என் கால – அவர் கால- கதைகளையே எழுத வேண்டும் என ஆசைப் படுகிறேன்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எழுத்தாளர்களின் உளவியலும் தன்னிலையும் : இமையம் - தி.ஜானகிராமன்- ஜெயகாந்தன்

பிக்பாஸ் -8. ஐம்பது நாட்களுக்குப் பின் ஒரு குறிப்பு

புதிய உரையாசிரியர்கள்